இராமன் கோசலை உரையாடல்
குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்றவெண் குடையும் இன்றி

இழைக்கின்ற விதிமுன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக

மழைக்குன்றம் அனையாள் மௌலி கவித்தனன் வருமென்று என்று

தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான். 1


'புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்

நனைந்திலன்; என்கொல்?' என்னும் ஐயத்தால் நளினம் பாதம்

வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி

'நினைந்தது என்? இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கு?' என்றாள். 2


மங்கை அம்மொழி கூறலும், மானவன்

செங்கை கூப்பி , 'நின் காதல் திரு மகன்,

பங்கம் இல் குணத்து எம்பி, பரதனே,

துங்க மா முடி சூடுகின்றான்' என்றான். 3


'முறைமை அன்று என்பது ஒன்று உண்டு; மும்மையின்

நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால்;

குறைவு இலன்' எனக் கூறினாள் - நால்வர்க்கும்

மறு இல் அன்பினில், வேற்றுமை மாற்றினாள். 4


என்று, பின்னரும், 'மன்னன் ஏவியது

அன்று எனாமை, மகனே! உனக்கு அறன்

நன்று, நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து

ஒன்றி வாழுதி, ஊழி பல' என்றாள். 5


தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற

தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்,

'நாயகன், எனை நல் நெறி உய்ப்பதற்கு

ஏயது உண்டு, ஓர் பணி' என்று இயம்பினான். 6


"ஈண்டு உரைத்த பணி என்னை?" என்றவட்கு,

'"ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ், அகல் கானிடை

மாண்ட மாதவத் தோருடன் வைகிப்பின்,

மீண்டு நீ வரல் வேண்டும்" என்றான்' என்றான். 7

இராமன் காட்டிற்கு செல்லவேண்டும் எனக் கேட்ட கோசலையின் துயரம்
ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை

தூங்கு தன் செவியில் தொடராமுனம்,

ஏங்கினாள்; இளைத்தாள்; திகைத்தாள்; மனம்

வீங்கினாள்; விம்மினாள்; விழுந்தாள் அரோ. 8


'வஞ்சமோ, மகனே! உனை, "மா நிலம்

தஞ்சம் ஆக நீ தாங்கு" என்ற வாசகம்?

நஞ்சமோ! இனி, நான் உயிர் வாழ்வெனோ?

அஞ்சும்; அஞ்சும்; என் ஆர் உயிர் அஞ்சுமால்!' 9


கையைக் கையின் நெரிக்கும்; தன் காதலன்

வைகும் ஆல் இலை அன்ன வயிற்றினைப்

பெய் வளைத் தளிரால் பிசையும்; புகை

வெய்து உயிர்க்கும்; விழுங்கும், புழுங்குமால். 10


'நன்று மன்னன் கருணை' எனா நகும்;

நின்ற மைந்தனை நோக்கி, 'நெடுஞ் சுரத்து

என்று போவது?' எனா எழும்; இன் உயிர்

பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே. 11


'அன்பு இழைத்த மனத்து அரசற்கு, நீ

என் பிழைத்தனை?' என்று, நின்று ஏங்குமால்முன்பு

இழைத்த வறுமையின் முற்றினோர்,

பொன் பிழைக்கப் புலம்பினர் போலவே. 12


'அறம் எனக்கு இலையோ?' என்னும்; 'ஆவிநைந்து

இற அடுத்தது என், தெய்வதங் காள்?' என்னும்

பிற உரைப்பது என்? கன்று பிரிந்துழிக்

கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள். 13


துயருற்ற கோசலையை இராமன் தேற்றி ஆறுதல் கூறுதல்
இத் திறத்தின் இடர் உறு வாள்தனைக்

கைத்தலத்தின் எடுத்து, "அருங் கற்பினோய்!

பொய்த் திறத்தினன் ஆக்குதியோ? புகல் -

மெய்த்திறத்து நம் வேந்தனை, நீ" என்றான். 14


பொற்பு உறுத்தன, மெய்ம்மை பொதிந்தன!

சொற்பு உறுத்தற்கு உரியன, சொல்லினான்-

கற்பு உறுத்திய கற்புடை யாள் தனை

வற்புறுத்தி, மனங்கொளத் தேற்றுவான். 15


சிறந்த தம்பி திருவுற எந்தையை

மறந்தும் பொய்யிலன் ஆக்கி, வனத்திடை

உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின்,

பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? 16


'விண்ணும் மண்ணும், இவ் வேலையும், மற்றும் வேறு

எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும்,

அண்ணல் ஏவல் மறுக்க, அடியனேற்கு

ஒண்ணுமோ? இதற்கு உள் அழியேல்' என்றான். 17


தன்னையும் உடன் காட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோசலை வேண்டுதல்
'ஆகின், ஐய! அரசன் தன் ஆணையால்

ஏகல் என்பது யானும் உரைக்கிலென்;

சாகலா உயிர் தாங்க வல்லேனையும்,

போகின், நின்னொடும் கொண்டனை போகு' என்றாள். 18


கோசலையின் வேண்டுதலை இராமன் மறுத்து உரைத்தல்
'என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்

மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்

துன்னும் கானம் தொடரத் துணிவதோ?

அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்' என்றான். 19


'வரிவில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு

உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன்

திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன்,

அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே! 20


'சித்தம் நீ திகைக்கின்றது என்? தேவரும்

ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே?

எத்தனைக்கு உள ஆண்டுகள்? ஈண்டு, அவை

பத்தும் நாலும் பகல் அலவோ?' என்றான். 21


'முன்னர் கோசிகன் என்னும் முனிவரன்

தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும்

பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ?

இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே. 22


'மாதவர்க்கு வழிபாடு இழைத்து, அரும்

போதம் முற்றி, பொரு அரு விஞ்சைகள்

ஏதம் அற்றன தாங்கி, இமையவர்

காதல் பெற்று, இந் நகர் வரக் காண்டியால். 23


'மகர வேலைமண் தொட்ட, வண்டு ஆடுதார்ச்

சகரர்; தாதை பணிதலை நின்று, தம்

புகரில்யாக் கையின் இன்னுயிர் போக்கிய

நிகரில் மாப்புகழ் நின்றது அன்றோ?' எனா. 24


'மான் மறிக் கரத்தான் மழு ஏந்துவான்,

தான் மறுத்திலன் தாதைசொல்; தாயையே,

ஊன் அறக்குறைத்தான்; உரவோன் அருள்

யான் மறுப்பது என்று எண்ணுவதோ?' என்றான். 25


இராமன் காடு செல்வதை தடுக்க எண்ணி கோசலை தயரதனிடம் செல்லுதல்
இத் திறத்த எனைப் பல வாசகம்

உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா,

'எத் திறத்தும் இறக்கும் இந் நாடு' எனா,

மெய்த் திறத்து விளங்கிழை உன்னுவாள். 26


'அவனி காவல் பரதனது ஆகுக;

இவன் இஞ் ஞாலம் இறந்து, இருங் கானிடைத்

தவன் நிலாவகைக் காப்பென், தகைவினால்,

புவனி நாதன் தொழுது' என்று போயினாள். 27


இராமன் சுமித்திரையின் மாளிகைக்குச் செல்லுதல்
போகின்றாளைத் தொழுது, 'புரவலன்

ஆகம் மற்று அவள் தன்னையும் ஆற்றி, இச்

சோகம் தீர்ப்பவள்' என்று, சுமித்திரை

மேகம் தோய் தனிக் கோயிலை மேயினான். 28


கைகேயின் மாளிகையில் தயரதன் நிலை கண்டு கோசலை மயங்கி விழுதல்
நடந்த கோசலை, கேகய நாட்டு இறை

மடந்தை கோயிலை எய்தினள்; மன்னவன்

கிடந்த பார்மிசை வீழ்ந்தனள் - கெட்டு உயிர்

உடைந்த போழ்தின் உடல் விழுந்தென்னவே. 29


கோசலையின் புலம்பல்
'பிறியார் பிரிவு ஏது?' என்னும்; 'பெரியோய் தகவோ!' என்னும்;

'நெறியோ, அடியேன் நிலை? நீ நினையா நினைவு ஏது?' என்னும்;

'வறியோர் தனமே!' என்னும்; 'தமியேன் வலியே!' என்னும்;

'அறிவோ; வினையோ?' என்னும்; 'அரசே! அரசே!' என்னும். 30


'இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி

உருளைத் தனி உய்த்து, ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்

பொருள் அற்றிட முற்றுறும் அப் பகலில் புகுதற்கு என்றோ,

அருளக் கருதிற்று இதுவோ? அரசர்க்கு அரசே!' என்னும். 31


'திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே! திருவின் திருவே!

நிரை ஆர் கலையின் கடலே! நெறி ஆர் மறையின் நிலையே!

கரையா அயர்வேன்; எனை, நீ, கருணாலயனே! "என்?" என்று

உரையா இதுதான் அழகோ? உலகு ஏழ் உடையாய்!' என்னும். 32


'மின் நின்றனைய மேனி, வெறிதாய் விட நின்றது போல்

உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்;

என் என்று உரையான்; என்னே? இதுதான் யாது என்று அறியேன்;

மன்னன் தகைமை காண வாராய்; மகனே!' என்னும். 33


கோசலை புலம்பலை பிறர் சொல்லக் கேட்ட வசிட்டனின் வருகை
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையாமுன்னம்,

'ஒவ்வாது, ஒவ்வாது' என்னா, ஒளிவாள் நிருபர், முனிவர்,

'அவ் ஆறு அறிவாய்' என்ன, வந்தான் முனிவன்; அவனும்,

வெவ் வாள் அரசன் நிலை கண்டு. 'என் ஆம் விளைவு?' என்று உன்னா. 34


நிலைமையைக் கண்ட வசிட்டனின் மனக் கருத்து
'இறந்தான் அல்லன் அரசன்; இறவாது ஒழிவான் அல்லன்;

மறந்தான் உணர்வு' என்று உன்னா, 'வன் கேகயர்கோன் மங்கை

துறந்தாள் துயரம் தன்னை; துறவாது ஒழிவாள் இவளே;

பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ?'. 35


வசிட்டனிடம் கைகேயி நிகழ்ந்தவற்றை கூறுதல்
என்னா உன்னா, முனிவன், 'இடரால் அழிவாள் துயரம்

சொன்னாள் ஆகாள்' என்முன் தொழுகே கயர்கோன் மகளை,

'அன்னாய்! உரையாய்; அரசன் அயர்வான் நிலை என்?' என்ன,

தன்னால் நிகழ்ந்த தன்மை தானே தெரியச் சொன்னாள். 36


வசிட்டன் தயரதனை தெளிவித்தல்
சொற்றாள், சொல்லாமுன்னம், சுடர்வாள் அரசர்க்கு அரசை,

பொன் - தாமரை போல் கையால், பொடி சூழ் படிநின்று எழுவி,

'கற்றாய், அயரேல்; அவளே தரும், நின் காதற்கு அரசை;

எற்றே செயல் இன்று ஒழி நீ' என்று என்று இரவா நின்றான். 37


சீதப் பனி நீர் அளவி, திண் கால் உக்கம் மென் கால்

போதத்து அளவே தவழ்வித்து, இன்சொல் புகலாநின்றான்;

ஓதக் கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய,

காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான். 38


வசிட்டனின் தேறுதல் வார்த்தைகள்
காணா, 'ஐயா! இனி, நீ ஒழிவாய் கழி பேர் அவலம்;

ஆண் நாயகனே, இனி, நாடு ஆள்வான்; இடையூறு உளதோ?

மாணா உரையாள், தானே தரும்; மா மழையே அனையான்

பூணாது ஒழிவான் எனின், யாம் உளமோ? பொன்றேல்' என்றான். 39


வசிட்டனிடம் தயரதன் வேண்டுகோள்
என்ற அம் முனிவன் தன்னை, 'நினையா வினையேன், இனி, யான்

பொன்றும் அளவில் அவனைப் புனை மா மகுடம் புனைவித்து,

ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து, என் உரையும்,

குன்றும் பழி பூணாமல், காவாய்; கோவே!' என்றான். 40


வசிட்டனின் அறிவுரையும் கைகேயின் மறுப்பும்
முனியும், முனியும் செய்கைக் கொடியாள் முகமே முன்னி,

'இனி, உன் புதல்வற்கு அரசும், ஏனையோர்க்கு இன் உயிரும்

மனுவின் வழிநின் கணவற்கு உயிரும் உதவி, வசைதீர்

புனிதம் மருவும் புகழே புனைவாய்; பொன்னே! என்றான். 41


மொய்ம் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியாமுன்னம்

விம்மா அழுவாள், 'அரசன் மெய்யின் திரிவான் என்னில்,

இம் மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன்; என்சொல்

பொய்ம் மாணாமற்கு, இன்றே, பொன்றாது ஒழியேன்' என்றாள். 42


வசிட்டன் கைகேயியை கடிந்துரைத்தல்
'கொழுநன் துஞ்சும் எனவும், கொள்ளாது உலகம் எனவும்,

பழி நின்று உயரும் எனவும், பாவம் உளது ஆம் எனவும்,

ஒழிகின்றிலை; அன்றியும், ஒன்று உணர்கின்றிலை; யான் இனிமேல்

மொழிகின்றன என்?' என்னா, முனியும், 'முறை அன்று' என்பான். 43


'கண்ணோடாதே, கணவன் உயிர் ஓடு இடர் காணாதே,

"புண்ணூடு ஓடும் கனலோ? விடமோ?" என்னப் புகல்வாய்;

பெண்ணோ? தீயோ? மாயாப் பேயோ? கொடியாய்! நீ; இம்

மண்ணோடு உன்னோடு என் ஆம்? வசையோ வலிதே!' என்றான். 44


'வாயால், மன்னன், மகனை, "வனம் ஏகு" என்னா முன்னம்,

நீயோ சொன்னாய்; அவனோ, நிமிர் கானிடை வெந் நெறியில்

போயோ புகலோ தவிரான்; புகழோடு உயிரைச் சுடு வெந்

தீயோய்! நின்போல் தீயார் உளரோ? செயல் என்?' என்றான். 45


தயரதன் வருத்தத்துடன் கைகேயியை பழித்துக் கூறுதல்
தா இல் முனிவன் புகல, தளராநின்ற மன்னன்,

நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி,

'பாவி! நீயே, "வெங் கான் படர்வாய்" என்று, என் உயிரை

ஏவினாயோ? அவனும் ஏகினானோ?' என்றான். 46


'கண்டேன் நெஞ்சம்; கனிவாய்க் கனிவாய் விடம், நான் நெடுநாள்

உண்டேன்; அதனால், நீ என் உயிரை முதலோடு உண்டாய்;

பண்டே, எரிமுன், உன்னை, பாவி! தேவி ஆகக்

கொண்டேன் அல்லேன்; வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன். 47


'விழிக்கும் கண்வேறு இல்லா, வெங்கான், என் கான்முளையைச்

சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய்; என்னைப் போழ்வாய்;

பழிக்கும் நாணாய்; மாணாப் பாவி! இனி, என் பல? உன்

கழுத்தின் நாண், உன் மகற்குக் காப்பின் நாண் ஆம்' என்றான். 48


கைகேயி, பரதன் இருவரையும் தயரதன் துறத்தல்
இன்னே பலவும் பகர்வான்; இரங்கா தாளை நோக்கி,

'சொன்னேன் இன்றே; இவள் என் தாரம் அல்லள்; துறந்தேன்;

மன்னே ஆவான் வரும் அப் பரதன் தனையும் மகனென்று

உன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு' என்றான். 49


தயரதன் நிலை கண்ட கோசலையின் துயர்நிலை
'என்னைக் கண்டும் ஏகாவண்ணம் இடையூறு உடையான்

உன்னைக் கண்டும் இலனோ?' என்றான், உயர் கோசலையை;

பின்னைக் கண்தான் அனையான் பிரியக் கண்ட துயரம்,

தன்னைக் கண்டே தவிர்வாள்; தளர்வான் நிலையில் தளர்வாள். 50


மாற்றாள் செயல் ஆம் என்றும், கணவன் வரம் ஈந்து உள்ளம்

ஆற்றாது அயர்ந்தான் என்றும், அறிந்தாள்; அவளும், அவனைத்

தேற்றா நின்றாள்; மகனைத் திரிவான் என்றாள்; 'அரசன்

தோற்றான் மெய்' என்று, உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள். 51


தயரதனை கோசலை தேற்றுதல்
'தள்ளா நிலைசால் மெய்ம்மை தழுவா வழுவா வகைநின்று

எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால், உரவோய்!

விள்ளா நிலைசேர் அன்பால் மகன்மேல் மெலியின், உலகம்

கொள்ளா தன்றோ?' என்றான், கணவன் குறையக் குறைவாள். 52


கோசலையின் பெருந்துயர்
'போவாது ஒழியான்' என்றாள், புதல்வன் தன்னைக் கணவன்

சாவாது ஒழியான் என்று என்று, உள்ளம் தள்ளுற்று அயர்வாள்;

'காவாய்' என்னாள் மகனைக் கணவன் புகழுக்கு அழிவாள்;

ஆ! ஆ! உயர்கோ சலையாம் அன்னம் என்னுற் றனளே! 53


இராமன் காட்டிற்கு செல்வது நினைத்து தயரதன் புலம்புதல்
உணர்வான், அனையாள் உரையால், 'உயர்ந்தான் உரைசால் குமரன்

புணரான் நிலமே, வனமே போவானே ஆம்' என்னா; -

இணரார் தருதார் அரசன் இடரால் அயர்வான்; 'வினையேன்

துணைவா! துணைவா' என்றான்; 'தோன்றால், தோன்றாய்!' என்றான். 54


'கண்ணும் நீராய், உயிரும் ஒழுக, கழியாநின்றேன்;

எண்ணும் நீர் நான்மறையோர், எரிமுன் நின்மேல் சொரிய,

மண்ணும் நீராய் வந்த புனலை, மகனே! வினையேற்கு

உண்ணும் நீராய் உதவி, உயர் கான் அடைவாய்!' என்றான். 55


'படைமாண் அரசைப் பல கால் பழுவாய் மழுவால் எறிவான்,

மிடை மா வலி தான் அனையான், வில்லால் அடுமா வல்லாய்!

"உடைமா மகுடம் புனை" என்று உரையா, உடனே கொடியேன்

சடை மா மகுடம் புனையத் தந்தேன்; அந்தோ!' என்றான். 56


'கறுத்தாய் உருவம்; மனமும் கண்ணும் கையும் செய்யாய்;

பொறுத்தாய் பொறையே; இறைவன் புரம்மூன்று எரித்த போர்வில்

இறுத்தாய், 'தமியேன்' என்னாது, என்னை இம்மூப்பு இடையே

வெறுத்தாய்; இனி நான் வாழ்நாள் வேண்டேன்! வேண்டேன்!' என்றான். 57


'பொன்னின் முன்னம் ஒளிரும் பொன்னே! புகழின் புகழே!

மின்னின் மின்னும் வரிவில் குமரா! மெய்யின் மெய்யே!

என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு, எளியேன் அல்லேன்;

உன்னின் முன்னம் புகுவேன், உயர்வானகம்யான்' என்றான். 58


'நெகுதற்கு ஒத்த நெஞ்சும் நேயத்தாலே ஆவி

உகுதற்கு ஒத்த உடலும், உடையேன்; உன்போல் அல்லேன்;

தகுதற்கு ஒத்த சனகன் தையல் கையைப் பற்றிப்

புகுதக் கண்ட கண்ணால், போகக் காணேன்' என்றான். 59


'எற்றே பகர்வேன், இனி, யான்? என்னே! உன்னின் பிரிய

வற்றே உலகம் எனினும், வானே வருந்தாது எனினும்,

பொன்-தேர் அரசே! தமியேன் புகழே! உயிரே உன்னைப்

பெற்றேன்; அருமை அறிவேன்; பிழையேன்! பிழையேன்!' என்றான். 60


'அள்ளற் பள்ளம் புனல்சூழ் அகல்மா நிலமும், அரசும்,

கொள்ளக் குறையா நிதியின் குவையும், முதலாம் எவையும்

கள்ளக் கைகேசிக்கே உதவி, புகழ் கைக்கொண்ட

வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும்! மாய்க்கும்!' என்றான். 61


'ஒலியார் கடல்சூழ் உலகத்து, உயர்வான் இடை, நா கரினும்

பொலியா நின்றார் உன்னைப் போல்வார் உளரோ? பொன்னே!

வலியார் உடையார்? என்றான்; 'மழுவாள் உடையான் வரவும்,

சலியா நிலையாய் என்றால், தடுப்பார் உளரோ?" என்றான். 62


'கேட்டே இருந்தேன் எனினும், கிளர் வான் இன்றே அடைய

மாட்டேன் ஆகில் அன்றோ, வன்கண் என்கண்? மைந்தா!

காட்டே உறைவாய் நீ! இக் கைகேசியையும் கண்டு, இந்

நாட்டே உறைவேன் என்றால், நன்று என் நன்மை!' என்றான். 63


"மெய் ஆர் தவமே செய்து, உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற

செய்யாள் என்னும் பொன்னும், நிலமாது என்னும் திருவும்,

உய்யார்! உய்யார்! கெடுவேன்; உன்னைப் பிரியின், வினையேன்,

ஐயா! கைகேசியை நேராகேனோ நான்?' என்றான். 64


'பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,

சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,

மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்

காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? 65


புலம்பும் தயரதனை வசிட்டன் தேற்றுதல்
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து, அரசன், 'உயிரும்

சென்றான் இன்றோடு' என்னும் தன்மை எய்தித் தேய்த்தான்,

மென் தோல் மார்பின் முனிவன், 'வேந்தே! அயரேல்; அவனை,

இன்று ஏகாத வண்ணம் தகைவென் உலகோடு' என்னா. 66


வசிட்டன் மொழி கேட்டு தயரதன் சிறிது தெளிதல்
முனிவன் சொல்லும் அளவில், 'முடியும்கொல்?' என்று, அரசன்

தனி நின்று உழல் தன் உயிரைச் சிறிதே தகைவான்; 'இந்தப்

புனிதன் போனால், இவனால் போகாது ஒழிவான்' என்னா,

மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான். 67


தயரதன் நிலை கண்டு கோசலை வருந்துதல்
'மறந்தான் நினைவும் உயிரும், மன்னன்' என்னா மறுகா,

'இறந்தான் கொல்லோ அரசன்?' என்னை இடருற்று அழிவாள்,

'துறந்தான் மகன் முன் எனையும்; துறந்தாய் நீயும்; துணைவா!

அறம் தான் இதுவோ? ஐயா! அரசர்க்கு அரசே!' என்றாள். 68


தயரதனை கோசலை தேற்றுதல்
'மெய்யின் மெய்யே! உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே!

உய்யும் வகைநின் உயிரை ஒம்பாது இங்ஙன் தேம்பின்,

வையம் முழுதும் துயரால் மறுகும்; முனிவன் உடன்நம்

ஐயன் வரினும் வருமால்; அயரேல்; அரசே!' என்றாள். 69


இராமன் வருவானா எனத் தயரதன் கோசலையிடம் கேட்டு வருந்துதல்
என்று என்று, அரசன் மெய்யும், இரு தாள் இணையும், முகனும்,

தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை,

ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன், மெள்ள,

'வன் திண் சிலை நம் குரிசில் வருமே? வருமே?' என்றான். 70


தயரதன் கைகேயின் கொடுமையைக் கூறி வருந்துதல்
'வன் மாயக் கைகேசி வரத்தால், என்றன் உயிரை

முன்மாய் விப்பத் துணிந்தாளேனும் கூனி மொழியால்,

தன்மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி

என்மா மகனைக் "கான் ஏகு" என்றாள்; என்றாள்; என்றான். 71


தயரதன் தான் சாபம் பெற்ற வரலாற்றை கோசலையிடம் கூறுதல்
'பொன் ஆர் வலயத் தோளான், கானோ புகுதல் தவிரான்;

என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது; இது, கோசலை கேள்;

முன் நாள், ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது' என்று,

அந் நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான். 72


'வெய்ய கானத் திடையே, வேட்டை வேட்கை மிகவே,

ஐய, சென்று கரியோடு அரிகள் துருவித் திரிவேன்,

கையும் சிலையும் கணையும் கொடு, கார் மிருகம் வரும் ஓர்

செய்ய நதியின் கரைவாய்ச் சென்றே மறைய நின்றேன். 73


'ஒரு மா முனிவன் மனையோடு, ஒளியன்று இலவாய் நயனம்

திருமா மகனே துணையாய்த் தவமே புரிபோழ் தினின்வாய்,

அருமா மகனே, புனல் கொண்டு அகல்வான் வருமாறு, அறியேன்,

பொரு மா கணை விட்டிடலும், புவிமீது அலறிப் புரள. 74


'புக்குப் பெருநீர் நுகரும் பொரு போதகம் என்று, ஒலிமேல்

கைக்கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்,

அக் கைக் கரியின் குரலே அன்று ஈது' என்ன வெருவா,

'மக்கள்-குரல்' என்று அயர்வென், மனம் நொந்து, அவண் வந்தனெனால். 75


கையும் கடனும் நெகிழக் கணையோடு உருள்வோன் காணா,

மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிடமேல் வீழா,

"ஐய! நீதான் யாவன்? அந்தோ! அருள்க" என்று அயரப்

பொய்யன்று அறியா மைந்தன், "கேள் நீ" என்னப் புகல்வான். 76


'"இருகண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு, அவர்கள்

பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன்; பழுது ஆயினதால்;-

இரு குன்று அனைய புயத்தாய்!- இபம் என்று, உணராது எய்தாய்;

உருகும் துயரம் தவிர், நீ; ஊழின் செயல் ஈது!" என்றே. 77


'"உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு, ஒரு நீ,

தண்ணீர் கொடு போய் அளித்து, என் சாவும் உரைத்து, உம் புதல்வன்

விண்மீது அடைவான் தொழுதான்' எனவும், அவர்பால் விளம்பு" என்று,

எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட, ஏகினனால். 78


'மைந்தன் வரவே நோக்கும்; வளர்மா தவர்பால், மகவோடு

அந்தண் புனல்கொண்டு அணுக, "ஐயா, இதுபோது அளவு ஆய்

வந்திங்கு அணுகாது என்னோ வந்தது? என்றே நொந்தோம்;

சந்தம் கமழும் தோளாய் தழுவிக் கொளவா" எனவே. 79


'"ஐயா! யான் ஓர் அரசன்; அயோத்தி நகரத்து உள்ளேன்;

மை ஆர் களபம் துருவி, மறைந்தே வதிந்தேன், இருள்வாய்;

பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்,

கை ஆர் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன். 80


'"வீட்டுண்டு அலறும் குரலால், வேழக் குரல் அன்று எனவே

ஓட்டந்து எதிரா, 'நீ யார்?' என, உற்ற எலாம் உரையா,

வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய், நின்றான் வணங்கா, வானோர்

ஈட்டம் எதிர் வந்திடவே, இறந்து ஏகினன் விண்ணிடையே. 81


'"அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா!

கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்,

மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால்;

பொறுத்தே அருள்வாய்!" என்னா, இரு தாள் சென்னி புனைந்தேன். 82


'வீழ்ந்தார்; அயர்ந்தார்; புரண்டார்; "விழி போயிற்று, இன்று" என்றார்;

ஆழ்ந்தார் துன்பக் கடலுள்; "ஐயா! ஐயா!" என்றார்;

"போழ்ந்தாய் நெஞ்சை" என்றார்; "பொன்நாடு அதனில் போய், நீ

வாழ்ந்தே இருப்பத் தரியேம்; வந்தேம்! வந்தேம்! இனியே." 83


'என்று என்று அயரும் தவரை, இருதாள் வணங்கி, "யானே

இன்று உம் புதல்வன்; இனி நீர் ஏவும் பணிசெய்திடுவேன்;

ஒன்றும் தளர்வுற்று அயரீர்; ஒழிமின் இடர்" என்று இடலும்,

"வண் திண் சீலையாய்! கேண்மோ" எனவே, ஒரு சொல் வகுத்தான். 84


'"கண்ணுள் மணிபோல் மகவை இழந்தும் உயிர் காதலியா,

உண்ண எண்ணி இருந்தால், உலகோர் என் என்று உரையார்?

விண்ணின் தலை சேருதும்; யாம் எம் போல் விடலை பிரிய

பண்ணும் பரிமா உடையாய்! அடைவாய், படர்வாள்" என்னா. 85


'"தாவாது ஒளிரும் குடையாய்! 'தவறு இங்கு இது, நின் சரணம்,

காவாய்' என்றாய்; அதனால் கடிய சாபம் கருதேம்;

ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடருற்றனை நீ

போவாய், அகல்வான்" என்னா, பொன் நாட்டிடைப் போயினரால். 86


'சிந்தை தளர்வுற்று, அயர்தல் சிறிதும் இலெனாய், "இன் சொல்

மைந்தன் உளன்' என்றதனால், மகிழ்வோடு இவண் வந்தனெனால்;

அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும்,

எம் தம் உயிர் வீகுதலும், இறையும் தவறா' என்றான். 87


வசிட்டன் அரசவை சேர்தல்
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல்,

புரைசை மத களிற்றான் பொற் கோயில் முன்னர்,

முரைசம் முழங்க, முடி சூட்ட மொய்த்து, ஆண்டு

அரைசர் இனிது இருந்த நல் அவையின் ஆயினான். 88


செய்தியை தெரிவிக்குமாறு அரசர்கள் வசிட்டனை வேண்டுதல்

வந்த முனியை முகம் நோக்கி வாள்வேந்தர்,

'எந்தை! புகுந்த இடையூறு உண்டாயதோ?

அந்தமில் சோகத்து அழுத குரல் தான் என்ன?

சிந்தை தெளிந்தோய்! தெரி எமக்கு ஈது' என்று உரைத்தார். 89


முடிசூட்டு விழா தடைபட்டதை வசிட்டன் உரைத்தல்

'கொண்டாள் வரம் இரண்டு, கேகயர்கோன் கொம்பு; அவட்கு

தண்டாத செங்கோல் தயரதனும் தானளித்தான்;

'ஒண்தார் முகிலை வனம்போகு' என்று ஒருப்படுத்தாள்;

எண்தானும் வேறில்லை; ஈது அடுத்தவாறு' என்றான். 90


'வேந்தன் பணியினால், கைகேசி மெய்ப் புதல்வன்,

பாந்தள்மிசைக் கிடந்த பார் அளிப்பான் ஆயினான்;

ஏந்து தடந் தோள் இராமன், திரு மடந்தை

காந்தன், ஒரு முறை போய்க் காடு உறைவான் ஆயினான்'. 91


இராமன் காடு செல்வது பற்றி கேட்டோரின் துன்ப நிலை
வாரார் முலையாரும், மற்றுள்ள மாந்தர்களும்,

ஆறாத காதல் அரசர்களும், அந்தணரும்,

பேராத வாய்மைப் பெரியோன் உரைசெவியில்

சாராத முன்னம், தயரதனைப் போல் வீழ்ந்தார். 92


புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப,

மண் உற்று அயர்ந்து மறுகிற்று, உடம்பு எல்லாம்,

கண் உற்ற வாரி கடல் உற்றது; அந் நிலையே,

விண் உற்றது, எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை. 93


மாதர் அருங் கலமும் மங்கலமும் சிந்தித் தம்

கோதை புடைபெயர, கூற்று அனைய கண் சிவப்ப,

பாத மலர் சிவப்ப, தாம் பதைத்துப் பார் சேர்ந்தார் -

ஊதை எறிய ஒசி பூங் கொடி ஒப்பார். 94


'ஆ! ஆ! அரசன் அருள் இலனே ஆம்' என்பார்;

'காவா, அறத்தை இனிக் கைவிடுவோம் யாம் என்பார்;

தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார்;

மா வாதம் சாய்த்த மராமரம் போல்கின்றார். 95


கிள்ளையடு பூவை அழுத; கிளர்மாடத்து

உள்ளுறையும் பூசை அழுத; உருவறியாப்

பிள்ளை அழுத; பெரியோரை என்சொல்ல?-

'வள்ளல் வனம்புகுவான்' என்றுரைத்த மாற்றத்தால். 96


சேதாம்பல் போது அனைய செங் கனி வாய் வெண் தளவப்

போது ஆம் பல் தோன்ற, புணர் முலைமேல் பூந் தரளம்

மா தாம்பு அற்றென்ன மழைக் கண்ணீர் ஆலி உக,

நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார். 97


ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த

பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும்

காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர்

மாவும் அழுத;-அம் மன்னவனை மானவே. 98


'ஞானீயும் உய்கலான்' என்னாதே, நாயகனைக்

'கானீயும்' என்றுரைத்த கைகேசியுங், கொடிய

கூனீயும் அல்லால், கொடியார் பிறருளரோ?

மேனீயும் இன்றி வெறுநீரே ஆயினார். 99


ஊர் மக்களின் துயரம்
தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார்? தேர் ஓட

நீறு ஆகி, சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம்,

ஆறு ஆகி ஓடின கண்ணீர்; அரு நெஞ்சம்

கூறு ஆகி ஓடாத இத்துணையே குற்றமே. 100


நகரத்தவரின் வருத்தம்
'மண் செய்த பாவம் உளது' என்பார்; 'மா மலர்மேல்

பெண் செய்த பாவம் அதனின் பெரிது' என்பார்;

'புண் செய்த நெஞ்சை, விதி' என்பார்; 'பூதலத்தோர்

கண் செய்த பாவம் கடலின் பெரிது' என்பார். 101


'ஆளான் பரதன் அரசு' என்பார்; 'ஐயன், இனி

மீளான்; நமக்கு விதிகொடிதே காண்' என்பார்;

'கோள் ஆகி வந்தவா, கொற்ற முடிதான்' என்பார்;

'மாளாத நம்மின் மனம் வலியார் ஆர்?' என்பார். 102


'ஆதி அரசன் அருங்கே கயன்மகள்மேல்

காதல் முதிர, கருத்து அழிந்தான் ஆம்' என்பார்;

'சீதை மணவாளன் தன்னோடும் தீக் கானம்

போதும்; அது அன்றேல், புகுதும் எரி' என்பார். 103


கையால் நிலம் தடவி, கண்ணீர் மெழுகுவார்

'உய்யாள் போல் கோசலை' என்று, ஓவாது வெய்து உயிர்ப்பார்;

'ஐயா! இளங் கோவே! ஆற்றுதியோ நீ' என்பார்;

நெய் ஆர் அழல் உற்றது உற்றார், அந் நீள் நகரார். 104


'தள்ளூறு வேறு இல்லை; தன் மகற்குப் பார் கொள்வான்,

எள்ளூறு தீக் கருமம் நேர்ந்தாள் இவள்' என்னா,

கள் ஊறு செவ் வாய்க் கணிகையரும், 'கைகேசி,

உள் ஊறு காதல் இலள்போல்' என்று, உள் அழிந்தார். 105


'நின்று தவம் இயற்றித் தான் தீர நேர்ந்ததோ?

அன்றி, உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரைக்

கொன்று களையக் குறித்த பொருள் அதுவோ?

நன்று! வரம் கொடுத்த நாயகற்கு, நன்று!' என்பார். 106


'பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம்

முற்றுடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி,

உற்று உறைதும்; யாரும் உறையவே, சில் நாளில்

புற்றுடைய காடெல்லாம் நாடாகிப் போம்' என்பார். 107


'என்னே நிருபன் இயற்கை இருந்தவா!

தன் நேர் இலாத தலைமகற்குத் தாரணியை

முன்னே கொடுத்து, முறை திறம்பத் தம்பிக்குப்

பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய்?' என்பார். 108


கோதை வரி வில் குமரன் கொடுத்த நில

மாதை ஒருவர் புணர்வராம்? வஞ்சித்த

பேதை சிறுவனைப் பின் பார்த்து நிற்குமே,

சீதை பிரியினும் தீராத் திரு?' என்பார். 109


உந்தாது, நெய் வார்த்து உதவாது, கால் எறிய

நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்,

'செந்தாமரைத் தடங் கண் செவ்வி அருள் நோக்கம்

அந்தோ! பிரிதுமோ? ஆ! விதியே! ஓ!' என்பார். 110


இலக்குவனின் கோபம்
கேட்டான் இளையோன்; கிளர் ஞாலம் வரத்தினாலே

மீட்டாள்; அளித்தாள் வனம் தம் முனை, வெம்மை முற்றித்

தீட்டாத வேல் கண் சிறுதாய்' என யாவராலும்

மூட்டாத காலக் கடைத்தீயென மூண்டு எழுந்தான். 111


கண்ணின் கடைத் தீயுக, நெற்றியில் கற்றை நாற,

விண்ணிற் சுடரும் சுடர் தோன்ற, மெய்ந்நீர் விரிப்ப,

உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க, நின்ற

அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான். 112


சினங்கொண்ட இலக்குவன் கைகேயியை இகழ்ந்துரைத்தல்

'சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின்

வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!

நங்கைக்கு அறிவின் திறம்! நன்று, இது! நன்று, இது!' என்னா,

கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான். 113


இலக்குவன் போர்க் கோலம் மேற்கொளல்

சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து,

வில் தாங்கி, வாளிப் பெரும் புட்டில் புறத்து வீக்கி,

பற்று ஆர்ந்த செம் பொன் கவசம், பனி மேரு ஆங்கு ஓர்

புற்று ஆம் என ஓங்கிய தோளடு, மார்பு போர்க்க. 114


அடியில் சுடர்பொன்கழல் ஆர்கலி நாண ஆர்ப்பப்

பொடியில் தடவும் சிலைநாண் பெரும்பூசல் ஓசை,

இடியின் தொடரக் கடலேழும் மடுத்து, ஞாலம்

முடிவில் குமிறும் மழை மும்மையின் மேல் முழங்க. 115


வானும் நிலனும் முதல் ஈறு இல் வரம்பு இல் பூதம்

மேல் நின்று கீழ்காறும் விரிந்தன வீழ்வபோல,

தானும், தன தம்முனும் அல்லது, மும்மை ஞாலத்து

ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க. 116


இலக்குவனின் ஆவேச உரை
'புவிப்பாவை பரம் கெடப் போரில் வந்தோரை எல்லாம்

அவிப்பானும், அவித்தவர் ஆக்கையை அண்ட முற்றக்

குவிப்பானும், இன்றே என கோவினைக் கொற்ற மௌலி

கவிப்பானும், நின்றேன் இதுகாக்குநர் காமின்' என்றான். 117


விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும்

எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி,

மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும்,

பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேர் உலகத்துள்' என்னா. 118


அயோத்தி மாநகரில் இலக்குவன் கோபத்தோடு அலைதல்
காலைக் கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி,

ஞாலத்தவர் கோ மகன், அந் நகரத்து நாப்பண்,

மாலைச் சிகரத் தனி மந்தர மேரு முந்தை

வேலைத் திரிகின்றதுபோல், திரிகின்ற வேலை,- 119


இலக்குவனின் நாணொலி கேட்டு இராமன் தேடி வருதல்
வேற்றுக் கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மித்

தேற்றத் தெளியாது அயர்சிற்றவை பால் இருந்தான்,

ஆற்றல் துணைத்தம்பிதன் வில்-புயல் அண்ட கோளம்

கீற்றுஒத்து உடைய, படும் நாண் உரும் ஏறு கேளா. 120


வீறாக்கிய பொற்கலன் வில்லிட, ஆரம், மின்ன,

மாறாத் தனிச்சொல் துளிமாரி வழங்கி வந்தான்;

கால்தாக்க நிமிர்ந்து, புகைந்து, கனன்று, பொங்கும்

ஆறாக் கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன; 121


இலக்குவனிடம் போர்க்கோலம் பூண்டதற்கான காரணத்தை இராமன் வினவுதல்
மின்னொத்த சீற்றக் கனல்விட்டு விளங்க நின்ற,

பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கை யானை,

'என்னத்த! என், நீ இறையோரை முனிந்திலாதாய்,

சன்னத்தன் ஆகித் தனுஏந்துதற்கு ஏது?' என்றான். 122


இலக்குவனின் பதில் உரை
'மெய்யைச் சிதைவித்து, நின் மேல் முறை நீத்த நெஞ்சம்

மையில் கரியாள் எதிர், நின்னை அம் மௌலி சூட்டல்

செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவர் ஏனும்;

துய்யைச் சுடுவெங்கனலின் சுடுவான் துணிந்தேன்; 123


'வலக்கார் முகம் என் கையது ஆக, அவ்வானுளோரும்

விலக்கார்; அவர்வந்து விலக்கினும் என்கை வாளிக்கு

இலக்கா எரிவித்து உலகுஏழினொடு ஏழும், மன்னர்

குலக்கா வலும், இன்று உனக்கு யான் தரக் கோடி' என்றான். 124


இலக்குவனிடம் கோபம் வரக் காரணத்தை இராமன் கேட்டல்

இளையான் இதுகூற, இராமன், 'இயைந்த நீதி

வளையாவரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே?

உளையா அறம் வற்றிட, ஊழ் வழுவுற்ற சீற்றம்,

விளையாத நிலத்து, உனக்கு எங்ஙன் விளைந்தது?' என்றான். 125


இப்போது சினம் கொள்ளாது எப்போது சினம் கொள்வது என இலக்குவன் கூறல்
நீண்டான் அது உரைத்தலும், நித்திலம் தோன்ற நக்கு,

'"சேண்தான் தொடர் மாநிலம் நின்னது" என்று, உந்தை செப்பப்

பூண்டாய்; "பகையால் இழந்தே, வனம் போதி" என்றால்,

யாண்டோ, அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது?' என்றான். 126


'நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க,

புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ-

என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, "இல்லை" என்ற

வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்?' என்றான். 127


இராமன் சினம் கூடாது என்பதற்கு ஏற்ற காரணம் இயம்புதல்
'"பின், குற்றம் மன்னும் பயக்கும் அரசு" என்றல், பேணேன்;

முன், கொற்ற மன்னன், "முடி கொள்க" எனக் கொள்ள மூண்டது

என் குற்றம் அன்றோ? இகல் மன்னவன் குற்றம் யாதோ?-

மின்குற்று ஒளிரும் வெயில் தீக்கொடு அமைந்த வேலோய்! 128


'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே

பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!

விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான். 129


இலக்குவன் சினந்து பதில் கூறுதல்
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க,

'கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென்? கோள் இழைத்தாள்

மதிக்கும் மதி ஆய், முதல் வானவர்க்கும் வலீஇது ஆம்,

விதிக்கும் விதி ஆகும், என் வில் - தொழில் காண்டி' என்றான். 130


இராமன் இலக்குவனின் கோபம் தணித்தல்
ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்

வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?

நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற

தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?' 131


இலக்குவனின் பிடிவாதம்
'நல் தாதையும் நீ; தனி நாயகன் நீ; வயிற்றில்

பெற்றாயும் நீயே; பிறரில்லை; பிறர்க்கு நல்கக்

கற்றாய்! இது காணுதி இன்று' எனக் கைம் மறித்தான்;

முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான். 132


இராமன் மீண்டும் இலக்குவனுக்கு அறிவுரை கூறுதல்
வரதன் பகர்வான்: 'வரம் பெற்றவள்தான் இவ் வையம்

சரதம் உடையான்; அவள், என் தனித் தாதை, செப்பப்

பரதன் பெறுவான்; இனி, யான் படைக்கின்ற செல்வம்

விரதம்; இதின் நல்லது வேறு இனி யாவது?' என்றான். 133


ஆன்றான் பகர்வான் பினும்; 'ஐய! இவ் வைய மையல்

தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ?

சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ?

ஈன்றாளை வென்றோ, இனி, இக் கதம் தீர்வது?' என்றான். 134


இராமன் அறிவுரை கேட்டு இலக்குவன் சினம் அடங்கல்
செல்லும் சொல் வல்லானெதிர், தம்பியும் 'தெவ்வர் சொல்லும்

சொல்லும் சுமந்தேன்; இருதோளெனச் சோம்பி ஓங்கும்

கல்லும் சுமந்தேன்; கணைப்புட்டிலும் கட்டு அமைந்த

வில்லும், சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டு என்னை?' என்றான். 135


இராமனின் சமாதான உரை
'நன் சொற்கள் தந்து ஆண்டு, எனை நாளும் வளர்ந்த தாதை

தன் சொல் கடந்து, எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்;

என் சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஈனம்?' என்றான் -

தென்சொல் கடந்தான், வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான். 136


இராமன் உரையால் இலக்குவன் சீற்றம் தணிதல்
சீற்றம் துறந்தான்; எதிர்நின்று தெரிந்து செப்பும்

மாற்றம் துறந்தான்; மறை நான்கு என வாங்கல் செல்லா

நால் தெண் திரை வேலையின், நம்பி தன் ஆணையாலே,

ஏற்றம் தொடங்காக் கடலின், தணிவு எய்தி நின்றான். 137


இராம இலக்குவனர் சுமித்திரை அரண்மனை அடைதல்
அன்னான் தனை, ஐயனும் ஆதியடு அந்தம் என்று

தன்னாலும் அளப்பருந் தானும், தன் பாங்கர் நின்ற

பொன் மான் உரியானும் தழீஇ எனப் புல்லி, பின்னை,

சொல் மாண்புடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான். 138


வனம் செல்லும் தன் மக்களைக் கண்ட சுமித்திரையின் வருத்தம்
கண்டாள், மகனும் மகனும் தன கண்கள் போல்வார்,

தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள் தம்மை;

புண்தாங்கு நெஞ்சத்தனளாய்ப் படிமேல் புரண்டாள்;

உண்டாய துன்பக் கடற்கு எல்லை உணர்ந்திலாதாள். 139


இராமன் சுமித்திரையின் துயரை போக்குதல்
சோர்வாளை, ஓடித் தொழுது ஏந்தினன்; துன்பம் என்னும்

ஈர் வாளை வாங்கி, மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்;

'போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன்;

கார்வான்நெடுங் கான் இறை கண்டு, இவன் மீள்வென்' என்றான். 140


'கான் புக்கிடினும், கடல் புக்கிடினும், கலிப்பேர்

வான் புக்கிடினும், எனக்கு அன்னவை மாண் அயோத்தி

யான் புக்கது ஒக்கும்; எனை யார் நலிகிற்கும் ஈட்டார்?

ஊன் புக்கு, உயிர் புக்கு, உணர் புக்கு, உலையற்க!' என்றான். 141


கைகேயி தோழியர் மூலம் மரவுரி அனுப்புதல்
தாய், ஆற்றுகில்லாள்தனை ஆற்றுகின்றார்கள் தம்பால்

தீ ஆற்று கிலார், தனி சிந்தையின் நின்று செற்ற,

நோய் ஆற்று கில்லா உயிர் போல நுடங்கு இடையார்

மாயாப் பழியாள்தர, வற்கலை ஏந்தி வந்தார். 142


கார்வானம் ஒப்பான் தனைக்காண் தொறும்காண் தொறும்போய்

நீராய் உகக் கண்ணினும் நெஞ் சழிகின்ற நீரார்,

பேரா இடர்ப்பட்டு அயலார் உறுபீழை கண்டும்

தீரா மனத் தாள்தர, 'வந்தன சீரம்' என்றார். 143


மரவுரியைக் காட்டுமாறு இலக்குவன் கூறுதல்
வாள் நித்தில வெண் நகையார் தர, வள்ளல் தம்பி,

'யாணர்த் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம்

பூணப் பிறந்தானும் நின்றான்; அவை போர் விலோடும்

காணப் பிறந்தேனும் நின்றேன்; அவை காட்டும்' என்றான். 144


இலக்குவன் வனம் செல்ல தாயிடம் விடைபெறுதல்
அன்னான், அவர் தந்தன, ஆதரத்தோடும் ஏந்தி,

இன்னா இடர் தீர்ந்து, "உடன் ஏகு" என, எம்பிராட்டி

சொன்னால், அதுவே துணை ஆம்' என, தூய நங்கை

பொன் ஆர் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்: 145


இலக்குவனுக்கு சுமித்திரையின் அறிவுரை
'ஆகாதது அன்றால் உனக்கு; அவ் வனம் இவ் அயோத்தி;

மா காதல் இராமன் நம் மன்னவன்; வையம் ஈந்தும்

போகா உயிர்த் தாயர் நம் பூங் குழல் சீதை-என்றே

ஏகாய்; இனி, இவ் வயின் நிற்றலும் ஏதம்' என்றாள். 146


பின்னும் பகர்வாள், 'மகனே! இவன் பின் செல்; தம்பி

என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி;

மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா; அது அன்றேல்

முன்னம் முடி' என்றனள், வார் விழி சோர நின்றாள். 147


இராம இலக்குவனர் சுமித்திரையிடம் விடைபெற்று மரவுரி தரித்து செல்லுதல்
இருவரும் தொழுதனர்; இரண்டு கன்று ஒரீஇ

வெருவரும் ஆவினின் தாயும் விம்மினாள்;

பொரு அருங் குமரரும் போயினார் - புறம்

திரு அரைத் துகில் ஒரீஇ, சீரை சாத்தியே. 148


மரவுரி தரித்த இலக்குவனை பெற்றோருடம் இருக்க இராமன் கூறுதல்
தான் புனை சீரையைத் தம்பி சாத்திட,

தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்;

'வான் புனை இசையினாய்! மறுக்கிலாது, நீ

யான் புகல் இனையது ஓர் உறுதி கேள்' எனா. 149


'அன்னையர் அனைவரும், ஆழி வேந்தனும்

முன்னையர் அல்லர்; வெந் துயரின் மூழ்கினார்;

என்னையும் பிரிந்தனர்; இடர் உறாவகை,

உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்' என்றான். 150


இலக்குவனின் மறுமொழி
ஆண்தகை அம்மொழி பகர, அன்பனும்,

தூண் தகு திரள் புயம் துளங்க, துண்ணெனா,

மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான்,

'ஈண்டு, உனக்கு அடியனேன் பிழைத்தது யாது?' என்றான். 151


'நீர் உளஎனின் உள, மீனும் நீலமும்;

பார் உளஎனின் உள, யாவும்; பார்ப்புறின்,

நார் உள தனு உளாய்! நானும் சீதையும்

ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்!' என்றான். 152


'பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு, பார்மகள்

நைந்து உயிர் நடுங்கவும், "நடத்தி கான்" எனா,

உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன்

மைந்தன் என்று, இனைய சொல் வழங்கினாய்?' எனா. 153


'"மாறு இனி என்னை? நீ வனம் கொள்வாய்" என

ஏறின வெகுளியை, யாதும் முற்றுற

ஆறினை, தவிர்க' என, 'ஐய! ஆணையின்

கூறிய மொழியினும் கொடியது ஆம்' என்றான். 154


'செய்துடைச் செல்வமோ, யாதும் தீர்ந்து, எமை,

கை துடைத்து ஏகவும் கடவையோ?-ஐயா!

நெய் துடைத்து, அடையலர் நேய மாதர் கண்

மை துடைத்து, உறை புகும் வயம் கொள் வேலினாய்!' 155


இராமன் உள்ளம் நெகிழ்தல்
உரைத்தபின், இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன்;

வரைத் தடந் தோளினான் வதனம் நோக்கினான்;

விரைத் தடந் தாமரைக் கண்ணை மிக்க நீர்

நிரைத்து இடை இடை விழ, நெடிது நிற்கின்றான். 156


வசிட்ட முனிவனின் வருகை
அவ்வயின், அரசவை நின்றும், அன்பினன்

எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான்;

செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்;

கவ்வையம் பெருங்கடல் முனியும் கால்வைத்தான். 157


வசிட்ட முனிவன் வருத்தம்
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்;

பொன் அரைச் சீரையின் பொலிவு நோக்கினான்;

என் இனி உணர்த்துவது? எடுத்த துன்பத்தால்,

தன்னையும் உணர்ந்திலன், உணரும் தன்மையான். 158


இராமன் வனவாசம் குறித்து வசிட்ட முனிவன் சிந்தனை
'வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்,

தாழ் வினை அது வர, சீரை சாத்தினான்;

சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும்,

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற்பாலதோ! 159


'வெவ்வினை யவள்தர விளைந்த தேயும் அன்று;

இவ்வினை இவன்வயின் எய்தற் பாற்றும் அன்று;

எவ்வினை நிகழ்ந்ததோ? ஏவர் எண்ணமோ?

செவ்விதின் ஒருமுறை தெரியும் பின்' என்றான். 160


இராமன் காட்டிற்கு செல்வதை வசிட்டன் தடுத்தல்
வில் தடந் தாமரைச் செங் கண் வீரனை

உற்று அடைந்து, 'ஐய! நீ ஒருவி, ஓங்கிய

கல் தடம் காணுதி என்னின், கண் அகல்

மல் தடந் தானையான் வாழ்கிலான்' என்றான். 161


வசிட்ட முனிவனுக்கு இராமனின் மறுமொழி
'அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல்

என்னது கடன்; அவன் இடரை நீக்குதல்

நின்னது கடன்; இது நெறியும்' என்றனன் -

பன்னகப் பாயலின் பள்ளி நீங்கினான். 162


கானகம் செல்ல கூறுதல் மன்னன் பணி அன்று என வசிட்டன் கூறுதல்
'"வெவ் வரம்பை இல் சுரம் விரவு" என்றான் அலன்;

தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு,

அவ் அரம் பொருத வேல் அரசன், ஆய்கிலாது,

"இவ் வரம் தருவென்" என்று ஏன்றது உண்டு' என்றான். 163


இராமனின் விளக்க உரை
'ஏன்றனன் எந்தை இவ் வரங்கள்; ஏவினாள்

ஈன்றவள்; யான் அது சென்னி ஏந்தினேன்;

சான்று என நின்ற நீ தடுத்தியோ?' என்றான் -

தோன்றிய நல்லறம் நிறுத்தத் தோன்றினான். 164


வசிட்டனை வணங்கி இராமன் மன்னன் மாளிகை வாயில் அடைதல்
என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்;

நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக;

குன்றன தோளவன் தொழுது, கொற்றவன்

பொன் திணி நெடு மதில் வாயில் போயினான். 165


மக்களின் துயரம்
சுற்றிய சீரையன், தொடரும் தம்பியன்,

முற்றிய உவகையன், முளரிப் போதினும்

குற்றம் இல் முகத்தினன், கொள்கை கண்டவர்

உற்றதை ஒருவகை உணர்த்துவாம் அரோ. 166


ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள் தாம்,

மொய் இளந் தளிர்களால் முளரி மேல் விழும்

மையலின் மதுகரம் கடியும் ஆறு எனக்

கைகளின் மதர்நெடுங் கண்கள் எற்றினார். 167


தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால்

அம்மையின் இருவினை அகற்றவோ அன்றேல்,

விம்மிய பேருயிர் மீண்டி லாமைகொல்?

செம்மல் தன் தாதையிற் சிலவர் முந்தினார். 168


விழுந்தனர் சிலர்; சிலர் விம்மி விம்மிமேல்

எழுந்தனர்; சிலர்முகத்து இழிகண் ணீரிடை

அழுந்தினர்; சிலர்பதைத்து, அளக வல்லியின்

கொழுந்து எரி உற்றுஎனத் துயரம் கூர்கின்றார். 169


கரும்பு அன மொழியினர், கண் பனிக்கிலர்,-

வரம்பு அறு துயரினால் மயங்கியேகொலாம்,

இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்!-

பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார். 170


நெக்கன உடல்; உயிர் நிலையில் நின்றில;

'இக் கணம்! இக் கணம்!' என்னும் தன்மையும்

புக்கன; புறத்தன; புண்ணின் கண் மலர்

உக்கன, நீர் வறந்து, உதிர வாரியே! 171


இரு கையின் கரி நிகர் எண் இறந்தவர்,

பெருகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணலர்,

ஒரு கையில் கொண்டனர், உருட்டுகின்றனர்;

சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார். 172


சிந்தின அணிமணி சிதறி வீழ்ந்தன;
பைந்துணர் மாலையின் பரிந்த, மேகலை;

நந்தினர், நகையளி விளக்கம்; நங்கைமார்

சுந்தர வதனமும், மதிக்குத் தோற்றவே. 173


தயரதனின் அரசியர் அடைந்த துயரம்
அறுபதினாயிரர் அரசன் தேவியர்,

மறு அறு கற்பினர், மழைக் கண்ணீரினர்,

சிறுவனைத் தொடர்ந்தனர்; திறந்த வாயினர்;

எறி திரைக் கடல் என இரங்கி ஏங்கினார். 174


கன்னி நல் மயில்களும், குயில் கணங்களும்,

அன்னமும், சிறை இழந்து அவனி சேர்ந்தன

என்ன, வீழ்ந்து உழந்தனர் - இராமன் அல்லது,

மன் உயிர்ப் புதல்வரை மற்றும் பெற்றிலார். 175


கிளையினும், நரம்பினும், நிரம்பும் கேழன,

அளவு இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்,

தொளைபடு குழலினோடு, யாழ்க்குத் தோற்றன

இனையவர் அமுதினும் இனிய சொற்களே. 176


'புகல் இடம், கொடுவனம் போலும்' என்று, தம்

மகன்வயின் இரங்குறும் மகளிர் வாய்களால்,

அகல்மதில் நெடுமனை, அரத்த ஆம்பல்கள்

பகலிடை மலர்ந்ததொர் பழனம் போன்றதே. 177


திடர் உடைக் குங்குமச் சேறும், சாந்தமும்,

இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன;

மிடை முலைக் குவடுஒரீஇ, மேகலைத்தடம்

கடலிடைப் புகுந்த, கண் கலுழி ஆறு அரோ. 178


தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக்

கண்டனன் இரவியும், கமல வாள் முகம் -

விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும்,

உண்டு இடர் உற்ற போது என் உறாதன? 179


தாயரும், கிளைஞரும் சார்ந்துளார்களும்,

சேயரும், அணியரும், சிறந்த மாதரும்,

காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்;

வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர். 180


இராமன் தன் மாளிகைக்குச் செல்லுதல்
இரைத்தனர், இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும்,

திரைப்பெருங் கடலெனத் தொடர்ந்து பின்செல,

உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன்,

வரைப்புயத்து அண்ணல்தன் மனையை நோக்கினான். 181


இராமன் வீதியில் சென்ற காட்சி
நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப்

பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன்,

துன் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப்

பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான். 182


வீதியில் இராமனைக் கண்டோர் அடைந்த வருத்தம்
அந்தணர், அருந்தவர், அவனி காவலர்,

நந்தல் இல் நகருளார், நாட்டுளார்கள், தம்

சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும்

வெந்தனர், மேல் வரும் உறுதி வேண்டலர். 183


'அஞ்சன மேனி இவ் அழகற்கு எய்திய

வஞ்சனை கண்டபின், வகிர்ந்து நீங்கலா

நெஞ்சினும் வலிது உயிர்; நினைப்பது என் சில?

நஞ்சினும் வலிய, நம் நலம்' என்றார் - சிலர். 184


'"மண்கொடு வரும்" என, வழி இருந்த, யாம்,

எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ?

பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில்,

கண்கொடு பிறத்தலும் கடை' என்றார் - சிலர். 185


முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன்,

"உழுவை சேர் கானகத்து உறைவென் யான்" என

எழுவதே? எழுதல்கண்டு இருப்பதே? இருந்து

அழுவதே? அழகிது இவ் அன்பு!" என்றார் சிலர். 186


வலம் கடிந்து, ஏழையர் ஆய மன்னரை

'நலம் கடிந்து, அறம் கெட, நயக்கலீர்கள்; நும்

குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை,

நிலம் கடிந்தாளடு நிகர்' என்றார் - சிலர். 187


'திரு அரை சுற்றிய சீரை ஆடையன்,

பொருவருந் துயரினன், தொடர்ந்து போகின்றான்

இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை

ஒருவனோ, இவற்கு இவ்வூர் உறவு?' என்றார்-சிலர். 188


'முழுக்கலின் வலியநம் மூரி நெஞ்சினை,

மழுக்களின் பிளத்தும்' என்று ஓடு வார்; வழி

ஒழுக்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை

இழுக்கலில் வழுக்கிவீழ்ந்து, இடர் உற்றார்-சிலர். 189


பொன்னணி, மணியணி, மெய்யின் போக்கினர்,

மின்னென, மின்னென விளங்கும் மெய் விலைப்

பன்னிறத் துகிலினைப் பறித்து நீக்கினர்,

சின்னநுண் துகிலினைப் புனைகின்றார்-சிலர். 190


'நிறைமக உடையவர், நெறி செல் ஐம்பொறி

குறை மகக் குறையினும், கொடுப்பராம் உயிர்

முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற

இறைமகன் திருமனம் இரும்பு' என்றார்-சிலர். 191


வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்,

பூங்கொடி ஒதுங்குவபோல், ஒதுங்கினர்;

ஏங்கிய குரலினர்; இணைந்த காந்தளின்

தாங்கிய செங் கை தம் தலையின்மேல் உளார். 192


தலைக் குவட்டு அயல் மதி தவழும் மாளிகை

நிலைக் குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்,

முலைக் குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக,

மலைக் குவட்டு அகவுறு மயிலின் மாழ்கினார். 193


மஞ்சு என அகிற் புகை வழங்கும் மாளிகை

எஞ்சல் இல் சாளரத்து, இரங்கும் இன் சொலார்

அஞ்சனக் கண்ணின் நீர் அருவி சோர்தர,

பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார். 194


நல் நெடுங் கண்களின் நான்ற நீர்த் துளி-

தன் நெடுந் தாரைகள் தளத்தின் வீழ்தலால்,

மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி, மாடமும்

பொன் நெடுங் கண் குழித்து, அழுவ போன்றவே. 195


மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப்

புக்கிடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு

உக்கனர்; உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர்;

துக்கநின்று அறிவினைச் சூறை ஆடவே. 196


காமரங் கனிந்தெனக் கனிந்த மென்மொழி

மாமடந் தையர் எலாம் மறுகு சேர்தலால்,

தேமரு நறுங்குழல் திருவின் நீங்கிய

தாமரை ஒத்தன-தவள மாடமே. 197


மழைக்குலம் புரைகுழல் விரிந்து மண்ணுறக்

குழைக்குலம் முகத்தியர் குழாங்கொண்டு ஏகினர்

இழைக்குலம் சிதறிட, ஏவுண்டு ஓய்வுறும்

உழைக்குலம் உழைப்பன ஒத்து, ஓர் பால் எல்லாம். 198


அயோத்தி நகரில் பொழிவு அழிதல்
கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு

இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்;

படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால்,

பொடி அடங்கின, மதிற் புறத்து வீதியே. 199


அட்டிலும் இழந்தன புகை; அகிற் புகை

நெட்டிலும் இழந்தன; நிறைந்த பால், கிளி

வட்டிலும் இழந்தன; மகளிர்-கால் மணித்

தொட்டிலும் இழந்தன, மகவும்-சோரவே. 200


ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென;

துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த்

தளி துறந்தன பரி; தான யானையும்

களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே. 201


நிழல் பிரிந்தன குடை; நெடுங் கண் ஏழையர்

குழல் பிரிந்தன மலர்; குமரர் தாள் இணை

கழல் பிரிந்தன; சினக் காமன் வாளியும்

அழல் பிரிந்தன; துணை பிரிந்த, அன்றிலே. 202


தாரொலி நீத்தன, புரவி; தண்ணுமை

வாரொலி நீத்தன; மழையின் விம்முறும்

தேரொலி நீத்தன, தெருவுந் தெண்திரை

நீரொலி நீத்தன நீத்தம் போலுமே. 203


முழவு எழும் ஒலி இல; முறையின் யாழ் நரம்பு

எழ எழும் ஒலி இல; இமைப்பு இல் கண்ணினர்

விழவு எழும் ஒலி இல; வேறும் ஒன்று இல,

அழ எழும் ஒலி அலது - அரச வீதியே. 204


தெள் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன் மனை

நள் ஒலித்தில; நளிர் கலையும் அன்னவே;

புள் ஒலித்தில, புனல்; பொழிலும் அன்னவே;

கள் ஒலித்தில, மலர்; களிறும் அன்னவே. 205


செய்ம் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர்

கைம் மறந்தன, பசுங் குழவி; காந்து எரி

நெய்ம் மறந்தன; நெறி அறிஞர் யாவரும்

மெய்ம் மறந்தனர்; ஒலி மறந்த, வேதமே. 206


ஆடினர் அழுதனர்; அமுத ஏழ் இசை

பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர்,

ஊடினர் அழுதனர்; உயிரின் அன்பரைக்

கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே. 207


நீட்டில, களிறு கை நீரின்; வாய் புதல்

பூட்டில, புரவிகள்; புள்ளும், பார்ப்பினுக்கு

ஈட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும்

ஊட்டில, கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே. 208


மாந்தர்தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கையாம்

ஏந்துஇள நீர்களும் வறுமை எய்தின;

சாந்தம் அம் மகிழ்நர் தம் முடியில் தையலார்

கூந்தலின், வறுமைய மலரின் கூலமே. 209


ஓடை நல்லணி முனிந்தன, உயர்களிறு உச்சிச்

சூடை நல்லணி முனிந்தன, தொடர்மனை; கொடியின்

ஆடை நல்லணி முனிந்தன, அம்பொன் செய் இஞ்சி;

பேடை நல்லணி முனிந்தன, மென்னடைப் புறவம். 210


'திக்கு நோக்கிய தீவினைப் பயன்' எனச் சிந்தை

நெக்கு நோக்குவோர், 'நல்வினைப் பயன்' என நேர்வோர்,

பக்கம் நோக்கல் என்? பருவரல் இன்பம் என்று இரண்டும்

ஒக்க நோக்கிய யோகரும், அருந் துயர் உழந்தார். 211


ஓவுஇல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய,

மேவு தொல் அழகு எழில் கெட, விம்மல் நோய் விம்ம,

தாவு இல் ஐம்பொறி மறுகுற, தயரதன் என்ன

ஆவி நீக்கின்றது ஒத்தது - அவ் அயோத்தி மா நகரம். 212


இராமன் சீதை இருக்குமிடம் சேர்தல்
உயங்கி அந் நகர் உலைவுற, ஒருங்கு, உழைச்சுற்றம்

மயங்கி ஏங்கினர்; வயின்வயின் வரம்பு இலர் தொடர,

இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன்

தயங்கு பூண் முலைச் சானகி இருந்துழிச் சார்ந்தான். 213


இராமனின் கோலம் கண்டு சீதை திடுக்கிடுதல்

அழுது, தாயரோடு அருந்தவர், அந்தணர், அரசர்,

புழுதி ஆடிய மெய்யினர், புடை வந்து பொரும,

பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா,

எழுது பாவை அன்னாள், மனத் துணுக்கமொடு எழுந்தாள். 214


மாமியார் இருவரும் சீதையைத் தழுவி நிற்க, சீதை இராமனை காரணம் வினாவுதல்
எழுந்த நங்கையை, மாமியர் தழுவினர்; ஏங்கிப்

பொழிந்த உண் கண் நீர்ப் புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,

அழிந்த சிந்தையள் அன்னம், 'ஈது இன்னது' என்று அறியாள்;

வழிந்த நீர் நெடுங் கண்ணினள், வள்ளலை நோக்கி. 215


'பொன்னை உற்ற பொலங் கழலோய்! புகழ்மன்

னை உற்றது உண்டோ, மற்று இவ் வன் துயர்

என்னை உற்றது? இயம்பு' என்று இயம்பினாள்ம

¢ன்னை உற்ற நடுக்கத்து மேனியாள். 216


இராமன் நடந்தது இயம்புதல்
'பொரு இல் எம்பி புவிபுரப் பான்; புகழ்

இருவர் ஆணையும் ஏந்தினென்; இன்று போய்க்

கருவி மாமழைக் கல்-கடம் கண்டு, நான்

வருவென் ஈண்டு; 'வருந்தலை நீ' என்றான். 217


இராமன் சொல் கேட்ட சீதையின் துயர்
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,

மேய மண் இழந்தான் என்றும், விம்மலன்;

'நீ வருந்தலை; நீங்குவென் யான்' என்ற

தீய வெஞ் சொல் செவி சுடத் தேம்புவாள். 218


'துறந்து போம்' எனச் சொற்ற சொல் தேறுமோ-

உறைந்த பாற்கடற் சேக்கை உடன் ஒரீஇ,

அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில்

பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்? 219


அன்ன தன்மையள், 'ஐயனும், அன்னையும்,

சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;

என்னை, என்னை, "இருத்தி" என்றான்?' எனா,

உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள். 220


இராமன் தன் கூற்றுக்கான காரணத்தை இயம்புதல்
'வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,

அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்

கல் அரக்கும் கடுமைய அல்ல-நின்

சில் அரக்குண்ட சேவடிப் போது' என்றான். 221

சீதை தன் மன உறுதியை இராமனுக்கு உரைத்தல்
'பரிவு இகந்த மனத்தொடு பற்றிலாது

ஒருவு கின்றனை; ஊழி அருக்கனும்

எரியும் என்பது யாண்டையது? ஈண்டுநின்

பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?' என்றாள். 222


சீதையின் மன உறுதியை அறிந்து இராமன் சிந்தனை வயப்படுதல்
அண்ணல், அன்னசொல் கேட்டனன்; அன்றியும்,

உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்;

கண்ணில் நீர்க்கடல் கைவிட நேர்கிலன்,

எண்ணு கின்றனன், 'என்செயல் பாற்று?' எனா. 223


சீதை மரவுரி தரித்து இராமன் அருகில் வந்து நிற்றல்
அனைய வேலை, அகல்மனை எய்தினள்;

புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;

நினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,

பனையின் நீள்கரம் பற்றிய கையினாள். 224


சீதையைக் கண்டோர் கொண்ட துயரம்
ஏழை தன் செயல் கண்டவர் யாவரும்,

வீழும் மண்ணிடை வீழ்ந்தனர்; வீந்திலர்;

வாழும் நாள் உள என்றபின் மாள்வரோ?-

ஊழி பேரினும் உய்குநர் உய்வரே! 225


தாயர், தவ்வையர், தன் துணைச் சேடியர்,

ஆய மன்னிய அன்பினர், என்றிவர்

தீயில் மூழ்கினர் ஒத்தனர்; செங்கணான்

தூய தையலை நோக்கினன், சொல்லுவான். 226


இராமன் சீதை உரையாடல்
'முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்,

வெல்லும் வெண்ணகை யாய்! விளைவு உன்னுவாய்

அல்லை; போத அமைந்தனை ஆதலின்

எல்லை அற்ற இடர்தரு வாய்' என்றான். 227


கொற்றவன் அது கூறலும், கோகிலம்

செற்றது அன்ன குதலையள் சீறுவாள்,

'உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே?

என் துறந்த பின், இன்பம் கொலாம்?' என்றாள். 228


சீதையை அழைத்துக் கொண்டு இராமன் புறப்படுதல்
பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்;

மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்

செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் -

நெறி பெறாமை அரிதினின் நீங்குவான். 229


இராமன், சீதை மற்றும் இலக்குவனுடன் செல்லுதல்
சீரை சுற்றித் திருமகள் பின்செல,

மூரி விற்கை இளையவன் முன்செல,

காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்

ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ? 230


மக்கள் யாவரும் இராமனைத் தொடர்ந்து செல்லுதல்
ஆரும் பின்னர் அழுது அவலித்திலர்;

சோரும் சிந்தையர், யாவரும் சூழ்ந்தனர்;

'வீரன் முன் வனம் மேவுதும் யாம்' எனா,

போரென்று ஒல்லொலி கைம்மிகப் போயினார். 231

இராமன் தாயரை வணங்கி மன்னன் தயரதனுக்கு ஆறுதல் கூறுமாறு கூறுதல்
தாதை வாயில் குறுகினன் சார்தலும்,

கோதை வில்லவன் தாயரைக் கும்பிடா,

'ஆதி மன்னனை ஆற்றுமின் நீர்' என்றான்;

மாதராரும் விழுந்து மயங்கினார். 232


தாய்மார்கள் மூவரையும் வாழ்த்துதல்
ஏத்தினார், தம் மகனை, மருகியை;

வாழ்த்தினார், இளையோனை; வழுத்தினார்,

'காத்து நல்குமின், தெய்வதங்காள்!' என்றார்-

நாத் தழும்ப அரற்றி நடுங்குவார். 233


வசிட்டனை வணங்கி பின் மூவரும் தேர் ஏறிச் செல்லுதல்
அன்ன தாயர் அரிதின் பிரிந்தபின்,

முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா,

தன்னது ஆர் உயிர்த் தம்பியும், தாமரைப்

பொன்னும், தானும், ஒர் தேர்மிசைப் போயினான். 234


மிகைப் பாடல்கள்
விழுந்து பார்மிசை, வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து,

எழுந்து, 'என் நாயகனே! துயர் ஏது எனாத்

தெளிந்திலேன்; இது செப்புதி நீ' எனா,

அழுந்தினாள்; பின்னர் அரற்றத் தொடங்கினாள். 29-1


அன்னாள் இன்ன பன்னி அழியத் துயரால், மன்னர்

மன்னானவனும் இடரின் மயங்கி, 'மைந்தா! மைந்தா!

முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ? முதல்வா! முறையோ?

என்னே, யான் செய் குறைதான்?' என்றே இரங்கி மொழிவான்: 53-1


உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள்

புணரான் நிலம்; மா வனமே போவானேயாம்; என்னில்,

இணரே பொலி தார் நிருபா; இடரால் அயர்வாய்; இதுவும்

துணையோ?- துணைவா!' என்றாள்; 'துயரேல்! துயரேல்!' என்றான். 53-2


'சேலா கியமா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்-

மேலா கியநான் முகனால், வேதங் களின் மா முறையின்ப

¡லா கியயோனிகளின் பலவாம் வருணம் தருவான்,

நாலா கியதாம் வருணன் தனின், முன் எமை நல்கினனால். 76-1


'"அந்நான் மறையோன் வழியில் அருள் காசிபன் நல் மைந்தன்

மின்னார் புரிநூல் மார்பன் விருத்தே சனன்மெய்ப் புதல்வன்,

நன்னான் மறைநூல் தெரியும் நாவான் சலபோ சன் எனச்

சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான்" என்றான். 76-2


'தாவாத அருந்தவர் சொல் தவறாததனால், தமியேன்

சாவாதவரும் உளரோ? தண்டா மகவு உண்டு' என்றே

ஓவாதார் முன் நின்றே; ஒரு சொல் உடையாது அவரும்,

பூவார் அனலுள் பொன்றி, பொன் - நாடு அதனில் புக்கார். 86-1


இம்மா மொழிதந்து அரசன் இடருற்றிடும் போழ்தினில், அச்

செம்மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய்,

மெய்ம்மாண் நெறியும், விதியின் விளைவும், தளர்வின்றி உணரும்

அம்மா தவனும் விரைவோடு அவலம் தருநெஞ் சினனாய். 87-1


என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடாமுன்,

கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி

வன் திண் சிலைக் கைம் மனு என்னும் வயங்கு சீர்த்திக்

குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான்: 127-1


ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற

சேய் உந்து நிலை நோக்கினன், சேய் அரிக் கண்கள் தேம்ப,

வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப-

தாய், 'நிந்தை இன்றிப் பல ஊழி தழைத்தி!' என்றாள். 147-1


'வானமே அனையதோர் கருணை மாண்பு அலால்

ஊனம் வேறு இலானுடன், உலகம் யாவையும்,

கானமே புகும் எனில் காதல் மைந்தனும்

தானுமே ஆளும்கொல் தரை?' என்றார் சிலர். 191-1


போயினான் நகர் நீங்கி-பொலிதரு

தூய பேர் ஒளி ஆகி, துலங்கு அருள்

ஆய மூவரும் ஆகி, உயிர்த் தொகைக்கு

ஆயும் ஆகி, அளித்தருள் ஆதியான். 234-1

Please join our telegram group for more such stories and updates.telegram channel