←அத்தியாயம் 46: மக்களின் முணுமுணுப்பு

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திபுது வெள்ளம்: ஈசான சிவபட்டர்

அத்தியாயம் 48: நீர்ச் சுழலும் விழிச் சுழலும்→

 

 

 

 

 


249பொன்னியின் செல்வன் — புது வெள்ளம்: ஈசான சிவபட்டர்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

புது வெள்ளம் - அத்தியாயம் 47[தொகு]
ஈசான சிவபட்டர்


ஆழ்வார்க்கடியான் அரசிளங்குமரியைப் பார்த்துவிட்டு அவனுடைய தமையனார் ஈசான சிவ பட்டரின் வீட்டுக்குச் சென்றான். அவருடைய வீடு வடமேற்றளி சிவன் கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. அரண்மனையிலிருந்து அரைக் காத தூரம் இருக்கும். சோழ மாளிகையிலிருந்து வடமேற்றளி ஆலயத்துக்குப் போனால், பழையாறை நகரின் விஸ்தீரணத்தையும் அதன் மற்றச் சிறப்புக்களையும் ஒருவாறு அறியலாம்.
கிருஷ்ண ஜயந்திக் கொண்டாட்டங்கள் எல்லாம் ஒருவாறு அடங்கி விட்டன என்பதை ஆழ்வார்க்கடியான் பார்த்துக் கொண்டு போனான். வீட்டுப் பகுதிகளின் வழியாகச் சென்றபோது ஸ்திரீகள் அங்கங்கே வீட்டு ஓரங்களில் கூடி நின்று கோபமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டு போனான். அந்த ஸ்திரீகள் அனைவரும் தத்தம் கணவர்கள் அல்லது புதல்வர்களின் கழுத்தில் வஞ்சிப் பூமாலை அணிவித்து உற்சாகமாக ஈழத்துப் போர் முனைக்கு அனுப்பியவர்கள். நாலு திசைகளிலும் சோழ சைன்யங்கள் நடத்திய வீரப் போர்களில் யாராவது ஒரு வீரன் அந்த ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சென்று வீர சொர்க்கம் அடையாமலிருந்தது கிடையாது. அப்படிப்பட்ட பெண்கள் இப்போது அதிருப்தியுடன் முணுமுணுத்துப் பேசிக் கொண்டிருந்ததைத் திருமலையப்பன் பார்த்தான். இதெல்லாம் என்ன விபரீதத்தில் போய் முடிகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டே சென்றான்.
வடமேற்றளி கோயிலை அவன் அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. அப்பர் பெருமானால் பாடப் பெற்ற கோயில் இதுதான். அந்த மகானுடைய காலத்தில் இக்கோயிலைச் சுற்றிச் சமணர்கள் செயற்கைக் குன்றுகளை எடுத்து, அந்தக் குன்றுகளில் முழைகளை அமைத்திருந்தார்கள். அப்படி ஏற்பட்ட செயற்கை மலைக் குகைகளில் திகம்பர சமணர்கள் உட்கார்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்கள். இதை நமக்கு ஞாபகப்படுத்துவதற்காக இன்றைக்கும் பழையாறைக்கு அருகில் முழையூர் என்று ஓர் ஊர் இருக்கிறது.
அப்பர் பெருமான் பழையாறை ஸ்தல மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தபோது சமணர்களின் முழைகள் சிவன் கோயிலை அடியோடு மறைத்திருந்தன. இதை ஆத்ம ஞானத்தினால் அறிந்த அப்பர் மனம் வருந்தினார். பல்லவர்களின் பிரதிநிதியாக அச்சமயம் சோழ நாட்டைப் பரிபாலித்து வந்த சிற்றரசனிடம் முறையிட்டார். அரசன் அந்தச் செயற்கை முழைகளில் ஒரு பகுதியை இடித்து அப்புறப்படுத்தினான்.உள்ளே சிறிய சிவன் கோயில் இருப்பது தெரிந்தது. அப்பர் பரவசமடைந்து பாடினார்.
அந்தக் கோயில் பிற்பாடு சோழ மன்னர்களால் சிறப்படைந்து கற்றளியாகக் கட்டப்பட்டது. ஆனால் இன்னமும் கோயிலைச் சுற்றிலும் முழைகள் சூழ்ந்து பிராகாரச் சுவர் போல் அமைந்திருந்தன. கோயிலுக்குள் பிரவேசிப்பதற்கு கோபுர வாசல் ஒன்றுதான் இருந்தது; வேறு வாசலே கிடையாது. கோபுர வாசல் வழியாகக் கோயில் பிராகாரத்துக்குள் சென்று, ஈசான சிவபட்டரின் வீட்டைச் சுலபமாக அடையலாம். இல்லாவிட்டால் சுற்றி வளைத்துக் கொண்டு போக வேண்டும்.
இப்படித் தன் தமையனாரின் வீட்டைக் குறுக்கு வழியில் அடைவதற்காகத் திருமலை கோபுர வாசலுக்குள் நுழைந்தான். உள்ளே சுவாமி சந்நிதியில் சில அடியார்கள் நிற்பது தெரிந்தது. அவர்கள் கிருஷ்ணனைப் போலவும் பலராமரைப் போலவும் வேஷந்தரித்து வந்த கோஷ்டியார் என்று தோன்றியது. "ஆகா! இவர்கள் எங்கே இங்கு வந்து சேர்ந்தார்கள்!" என்று அவன் எண்ணமிடுவதற்குள், ஈசான சிவபட்டர் கோயிலுக்குள்ளேயிருந்து அவசரமாக வெளியேறி வந்தார். அப்போதுதான் கோபுர வாசலுக்குள் நுழைந்திருந்த திருமலையின் கையைப் பிடித்துப் பரபரவென்று வெளியில் இழுத்துச் சென்றார்.
"அண்ணா! இது என்ன?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
"சொல்லுகிறேன், திருமலை! இனிமேல் நம்முடைய உறவெல்லாம் கோவிலுக்கு வெளியே இருக்கட்டும். நீ பதிதன்; சிவ நிந்தனை செய்யும் சமயப் பிரஷ்டன்; இந்தச் சிவாலயத்துக்குள் நீ அடியெடுத்து வையாதே! தெரிகிறதா? நானும் எத்தனையோ பொறுத்திருந்தேன். இன்றைக்குப் பெரிய மகாராணியின் முன்னால் நீ பேசியதை என்னால் சகிக்க முடியவில்லை. வீட்டுக்கு வேண்டுமானால் வந்து உன் பெரிய வயிற்றை நிரப்பிக் கொண்டு போ! ஆனால் கோவிலுக்குள் அடியெடுத்து வைக்காதே! அடி வைத்தால் நான் சண்டேசுவர நாயனார் ஆகி விடுவேன்!"
இவ்வாறு சொல்லி ஈசான சிவபட்டர் திருமலையின் கழுத்தைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளி விட்டு, கோயில் கதவைப் படார் என்று சாத்தினார். "அண்ணா! அண்ணா!....." என்று திருமலை ஏதோ சொல்ல ஆரம்பித்ததை ஒருகணமும் காது கொடுத்துக் கேட்காமல் கோவில் கதவை உட்புறம் தாளிட்டுக் கொண்டு போய் விட்டார்.
"ஓகோ! அப்படியா சமாசாரம்?" என்று ஆழ்வார்க்கடியான் முணுமுணுத்துக் கொண்டான். சற்று நேரம் அங்கேயே நின்றான். பிறகு, அச்சிவனார் கோவிலை, சமணர் முழைகள் உட்பட, இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தான். வலப்புறமாய்ச் சென்றால் பிரதட்சிணம் செய்ததாகி விடும் என்று வேண்டுமென்றே இடதுபுறமாகச் சுற்றி வந்தான். வட்ட வடிவமாக அமைந்திருந்த செய்குன்றுகளில் சமணர் முழை வாசல்கள் எல்லாம் நன்கு அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தான். பின்னர், ஈசான சிவபட்டரின் வீடு சென்றான். வேடிக்கை வேடிக்கையாகப் பேசும் திருமலையிடம் பட்டரின் மனையாளுக்கு மிக்க பிரியம். அந்த அம்மாளிடம் வழக்கத்தை விட வேடிக்கையாகப் பேசி, வயிறு நிறையச் சிவன் கோயில் பிரசாதத்தைச் சாப்பிட்டு விட்டு, வாசல் திண்ணையில் வந்து படுத்தான்.
முதலாவது நாள் குடமுருட்டி நதிக்கரையோடு வந்தபோது அவன் கண்ட காட்சி ஒன்று நினைவு வந்தது. அவனுக்கு எதிர்த் திசையில் சில குதிரைகள் வேகமாக வரும் சப்தம் கேட்டுப் பக்கத்தில் அடர்த்தியாக இருந்த மூங்கில் புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டு நின்றான்.
முதலில் வந்த குதிரை தறிகெட்டு ஓடிவருவது போல் ஓடி வந்தது. அது சொட்டச் சொட்ட நனைந்திருந்தது; வியர்வையினாலா, நதி வெள்ளத்தில் முழுகி வந்ததினாலா என்று தெரியவில்லை. அக்குதிரையின் பேரில் ஒரு சிறு பிள்ளை உட்கார்ந்திருந்தான்.அவனைக் குதிரையோடு சேர்த்துக் கட்டியிருந்தது. அந்தப் பிள்ளையின் முகத்தில் பீதியும், அத்துடன் ஓர் உறுதியும் சேர்ந்து காணப்பட்டன. சற்றுப் பின்னால் இன்னும் நாலைந்து குதிரைகள் வந்தன. அவற்றின் மீது வேல் பிடித்த வீரர்கள் வந்தார்கள். சீக்கிரத்தில் பிடித்து விடுவார்கள் என்று தோன்றியது. அவர்களில் ஒருவன் தன்னுடைய வேலாயுதத்தைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்து முன்னால் வந்த குதிரை மேல் எறிவதற்குக் குறி பார்த்தான். இன்னொருவன் அதைத் தடுத்தான்.
அச்சமயத்தில் அந்தப் பிள்ளை அடர்ந்த மூங்கில் புதர்களுக்குக் கீழே போக வேண்டியிருந்தது. சற்று வளைந்து தாழ்ந்திருந்த மூங்கில் மரக்கிளை ஒன்று அவனுடைய தலை மயிரில் சிக்கிக் கொண்டது. குதிரை முன்னால் இழுக்கவும் அந்தப் பிள்ளையின் கதி என்ன ஆகுமோ என்று இருந்த நிலையில் பின்னால் வந்தவர்கள் அக்குதிரையை வந்து பிடித்துக் கொண்டார்கள்.
குதிரை மீது வைத்துக் கட்டியிருந்த பிள்ளையைப் பார்த்து வியப்பும் திகைப்பும் கோபமும் அடைந்தார்கள். ஏதோ அவனைக் கேட்டார்கள். அவன் தட்டுத் தடுமாறி மறுமொழி சொன்னான். விவரமாக ஆழ்வார்க்கடியான் காதில் விழவில்லை. "அவன் எங்கே?" "அவன் எங்கே?" என்று அடிக்கடி பலமுறை கேட்ட கேள்வி காதில் விழுந்தது. அந்த இளம்பிள்ளை "ஆற்றோடு போய் விட்டான்!" "வெள்ளத்தில் விழுந்து விட்டான்!" என்று விம்மி அழுது கொண்டே சொன்னதும் காதில் விழுந்தது. பிறகு அவ்வீரர்கள் அந்தப் பையனையும் குதிரையையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையோடு போய் விட்டார்கள்.
இந்தச் சம்பவத்தின் பொருள் என்னவென்பது திருமலையப்பனுக்கு அச்சமயம் விளங்கவில்லை. இப்போது கொஞ்சம் விளங்குவது போல் தோன்றியது.
இதற்கிடையில், அந்த வீதி நாடக கோஷ்டியின் நினைவும் அவனுக்கு வந்தது. முக்கியமாக, கம்ஸன் வேஷம் தரித்து, மரப் பொம்மை முகத்தினால் சொந்த முகத்தை மறைத்துக் கொண்டிருந்தவனின் நடை உடை பாவனைகளும், குரலும் நினைவு வந்தன. முன்னம் கேட்டது போல் தொனித்த அக்குரல் யாருடைய குரல் என்பது பற்றியும் விளக்கம் ஏற்படத் தொடங்கியது.
இரவு அர்த்த ஜாம பூஜையை முடித்துக் கொண்டு ஈசான சிவபட்டர் தம் இல்லத்துக்கு வந்தார். வாசல் திண்ணையில் ஆழ்வார்க்கடியான் படுத்திருப்பதைப் பார்த்தார்.
"திருமலை! திருமலை!" என்று கோபக் குரலில் கூப்பிட்டார்.
திருமலை நல்ல தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகப் பாசாங்கு செய்தான்.
வீட்டுக் கதவைப் படார் என்று சாத்திக் கொண்டு பட்டர் உள்ளே போனார். தமது மனைவியாருடன் அவர் சண்டை பிடிக்கிற தோரணையில் பேசியது அரைகுறையாகத் திருமலையின் காதில் விழுந்தது. தன்னைப் பற்றித்தான் சண்டை என்பதைத் திருமலை தெரிந்து கொண்டான்.
காலையில் எழுந்ததும் ஈசான சிவபட்டர் திருமலையிடம் வந்து, "மறுபடி நாடு சுற்ற எப்போது புறப்படுகிறாய்?" என்று கேட்டார்.
"தங்கள் கோபம் தணிந்த பிறகு புறப்படுவேன் அண்ணா!" என்றான்.
"இனி என்னை 'அண்ணா' என்று கூப்பிடாதே. இன்று முதலாவது நான் உன் தமையனும் அல்ல; நீ என் தம்பியும் அல்ல. நீ சிவத்துவேஷி; நீசன்; சண்டாளன்..."
பட்டரின் மனைவி திருமலைக்காகப் பரிந்து, "எதற்காக இப்படியெல்லாம் அவனைச் சபிக்கிறீர்கள்! இத்தனை நாளும் சொல்லாததை அவன் இப்போது என்ன புதிதாகச் சொல்லி விட்டான்! உங்களுக்குத்தான் சிவபக்தி ரொம்ப அதிகமாக முற்றி விட்டது!" என்றாள்.
"உனக்கு ஒன்றும் தெரியாது! அவன் நேற்று பெரிய மகாராணியின் முன்னிலையில் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா? 'சுடுகாட்டில் சாம்பரைப் பூசிக் கொண்டு திரியும் பரமசிவனுக்குக் கோவில் என்னத்திற்கு!' என்று கேட்டான். என் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது. மகாராணி இராத்திரியெல்லாம் தூங்கவேயில்லையாம்!"
"இனிமேல் அப்படியெல்லாம் பேச மாட்டான். நான் புத்தி சொல்லித் திருத்தி விடுகிறேன். அவனிடம் நல்ல வார்த்தையாகச் சொன்னால் கேட்கிறான்!" என்றாள்.
"நல்ல வார்த்தையும் ஆயிற்று; பொல்லாத வார்த்தையும் ஆயிற்று. அவன் இராமேசுவரத்துக்கு உடனே போகட்டும். இராமர், பூஜை செய்து பாவத்தைப் போக்கிக் கொண்ட சிவலிங்கத்தை இவனும் பூஜை செய்து விட்டு வரட்டும். அதுதான் இவனுக்குப் பிராயச்சித்தம். அப்படிச் செய்யும் வரையில் நான் இவன் முகத்திலேயே விழிக்க மாட்டேன்!" என்றார்.
திருமலையின் உதடுகள் துடித்தன. வட்டியுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுப்பதற்குத்தான். ஆனால் பேசினால் காரியம் கெட்டுவிடும் என்று பொறுமையைக் கடைப்பிடித்தான்.
பட்டரின் பத்தினி இச்சமயத்தில் மறுபடியும் தலையிட்டு, "அதற்கு என்ன? இராமேசுவரத்துக்குப் போகச் சொன்னால் போகிறான். அவனுடன் நாமும் போகலாம். இத்தனை நாள் ஆகியும் நமக்குந்தான் குழந்தை பிறக்கவில்லை. பூர்வ ஜன்மத்தில் என்ன பாவம் செய்தோமோ, என்னமோ...? திருமலை! எல்லாருமாக இராமேசுவரத்துக்குப் போகலாமா?" என்று கேட்டாள்.
அவர்கள் இரண்டு பேரையும் சிவபட்டர் முறைத்துக் கோபமாகப் பார்த்து விட்டுப் போய்விட்டார்.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஈசான பட்டர் திரும்பி வந்து திருமலையிடம் சாந்தமாகப் பேசினார்.
"தம்பி! 'கோபம் பாபம் சண்டாளம்' என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் கோபத்துக்கு இடம் கொடுத்து விட்டேன். உனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே?" என்றார்.
"இல்லவே இல்லை!" என்று சொன்னான் ஆழ்வார்க்கடியான்.
"அப்படியானால் நீ இங்கேயே இரு! உச்சிகால பூஜையை முடித்துக் கொண்டு நான் வந்து விடுகிறேன். உன்னிடம் சில முக்கியமான விஷயங்களைப் பற்றிச் சொல்லி யோசனை கேட்க வேண்டும்.இங்கேயே இருக்கிறாய் அல்லவா? எங்கும் போய் விட மாட்டாயே?" என்றார்.
"எங்கும் போகவில்லை, அண்ணா! தங்களை விட்டு எங்கும் போவதாக உத்தேசமில்லை!" என்றான்.
பட்டர் போய் விட்டார். ஆழ்வார்க்கடியான் தனக்குத்தானே, "அப்படியா சமாசாரம்!" என்று சிலமுறை சொல்லிக் கொண்டான். பிறகு அண்ணியிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டான். செய்குன்றுகள் சூழ்ந்த வடமேற்றளிக் கோயிலை இரண்டு மூன்று தடவை சுற்றி வந்தான். அவ்வப்போது ஏதேனும் சத்தம் கேட்டால் உடனே மறைந்து நின்று கொண்டான்.
அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சமணர் முழைகளில் ஒன்றின் வாசல் மெதுவாகத் திறந்தது. முதலில் ஈசான சிவபட்டர் மூன்று பக்கமும் பார்த்துவிட்டு வெளியே வந்தார். பின்னால் இன்னொரு மனிதன் வெளிப்புறப்பட்டு வந்தான். ஆகா! இவன் யார்? முகம் தெரியவில்லையே? உடல் அமைப்பைப் பார்த்தால் கம்ஸன் வேடம் பூண்டிருந்தவன் மாதிரி இருக்கிறது! யாராயிருக்கும்? இதைக் கண்டுபிடிக்காமல் விடுவதில்லை. ஓஹோ! இதற்குத்தானா, இவ்வளவு கோபதாபம் மூடுமந்திரம் எல்லாம்!
முழையிலிருந்து வெளிப்பட்ட இருவரும் முன்னால் சென்றார்கள். ஆழ்வார்க்கடியான் ஒதுங்கிப் பதுங்கி மறைந்து பின்தொடர்ந்தான்.
சிறிது நேரம் நடந்ததும் ஓடைக் கரையை அடைந்தார்கள். சோழ மாளிகைக்குப் பின்புறத்தில் கடலைப் போல பரவி அலைமோதிக் கொண்டிருந்த ஓடையைத்தான். ஆனால் மாளிகைக்கு வெகு தூரம் மேற்கில் இருந்தது அத்துறை.
ஓடைக்கரையில் அடர்ந்த மரங்கள் பல இருந்தன. அவற்றில் ஒன்றின் பின்னால் ஆழ்வார்க்கடியான் நின்று இரண்டு கிளைகளுக்கு நடுவில் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
படகு ஒன்று அலையில் அலைப்புரண்டு மிதந்தது. அரண்மனைப் படகு மாதிரி தோன்றியது. படகுக்காரன் கரையில் நின்று கொண்டிருந்தான்.
பட்டரையும் அவருடன் வந்தவனையும் பார்த்ததும் அவன் படகைக் கரையோரமாக இழுத்து நிறுத்தினான்.
இருவரும் படகில் ஏறிக் கொண்டார்கள். படகு நீரில் போக ஆரம்பித்ததும் பட்டருடன் வந்த மனிதன் கரைப் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
அவன் முகம் பளிச்சென்று நன்றாய்த் தெரிந்தது.
ஆழ்வார்க்கடியானுக்கு வியப்பு ஒன்றும் உண்டாகவில்லை. அவன் எதிபார்த்த மனிதன் தான் அவன்.
வீரநாராயணபுரத்திலும் கொள்ளிடத்துப் படகிலும் சந்தித்த அந்த வீர வாலிபன்தான்!
கம்ஸன் வேடம் பூண்டிருந்தவனும் அவனே என்பதில் சந்தேகமில்லை.
அவர்கள் படகில் ஏறி எங்கே போகிறார்கள்? -- அதையும் கண்டுபிடித்து விட வேண்டியதுதான்! அதாவது தன்னுடைய ஊகம் சரிதானா என்று பார்த்து விட வேண்டும்.
சோழ மாளிகைகள் பல வானளாவி நின்ற வீதியில் கடைசி மாளிகை ஒன்று பூட்டப்பட்டுக் கிடந்தது. அது சுந்தர சோழரின் முதன் மந்திரியான அநிருத்த பிரும்மராயரின் மாளிகை. முதன் மந்திரி அநிருத்தர் பாண்டிய நாட்டின் இராஜரீக நிர்வாகத்தைச் செப்பனிட்டு அமைப்பதற்காக மதுரை சென்றிருந்தார். அவருடைய குடும்பத்தார் தஞ்சாவூரில் இருந்தார்கள். ஆகையால் அவருடைய பழையாறை மாளிகை பூட்டப்பட்டுக் கிடந்தது.
ஆழ்வார்க்கடியான் இந்த மாளிகைக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் மாளிகைக் காவலர்கள் பயபக்தியுடன் வந்து நின்றார்கள். மாளிகையின் கதவைத் திறக்கும்படிப் பணித்தான். காவலர்கள் கதவைத் திறந்தார்கள். பிறகு அவன் கட்டளைப்படி வெளிப்பக்கம் சாத்திப் பூட்டினார்கள். மாளிகையின் மூன்று கட்டுக்களையும் கடந்து பின்புறத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தான். அத்தோட்டத்திலிருந்து நெருக்கமான மரஞ்செடிகளைப் பிளந்து கொண்டு கொடி வழி ஒன்று சென்றது. திருமலை அதில் புகுந்து சென்று சிறிது நேரத்தில் குந்தவை தேவியின் மாளிகைத் தோட்டத்தை அடைந்தான். கொடி வீடு ஒன்றில் மறைவான இடத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். இவ்வளவு சிரமம் அவன் எடுத்துக் கொண்டது வீண் போகவில்லை.
காளிதாஸன் முதலிய மகா கவிகள் வர்ணிக்க வேண்டிய நாடக நிகழ்ச்சி ஒன்று அங்கே நடந்தது.
நீரோடைக் கரையில் படகு வந்து நின்றது. அதிலிருந்து ஈசான பட்டரும் வந்தியத்தேவனும் இறங்கினார்கள். பிறகு நீர்த்துறையின் படிக்கட்டுகளின் வழியாக ஏறி வந்தார்கள்.
படிக்கட்டுகளுக்குச் சற்றுத் தூரத்தில் தோட்டத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் இளையபிராட்டி குந்தவை அமர்ந்திருந்தாள்.
படகில் வந்தவர்கள் நீர்த்துறையில் படிக்கட்டுகளில் ஏறி மேற்படிக்கு வந்ததும் இளையபிராட்டி குந்தவை தேவி எழுந்து நின்றாள்.
வந்தியத்தேவன் அப்போதுதான் அப்பெண்ணரசியின் திருமுகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
பார்த்தது பார்த்தபடியே நின்றான்.
அவனுக்கும் இளையபிராட்டி குந்தவைக்கும் மத்தியில் ஒரு பூங்கொடி தன் இளந்தளிர்க்கரத்தை நீட்டி இடைமறித்து நின்றது.
அந்தக் கொடியில் ஓர் அழகிய பட்டுப் பூச்சி - பல வர்ண இறகுகள் படைத்த பட்டுப் பூச்சி - வந்து உட்கார்ந்தது. குந்தவை தன் பொன் முகத்தைச் சிறிது குனிந்து அந்தப் பட்டுப் பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வந்தியத்தேவனோ குந்தவையின் முக மலரையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான்.
ஓடையில் அலைகள் ஓய்ந்து அடங்கின.
பட்சி ஜாலங்கள் பாடுவதை நிறுத்தின. அண்ட பகிரண்டங்கள் அசையாது நின்றன.
பல யுகங்கள் சென்றன.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel