←அத்தியாயம் 8: பூதத் தீவு

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திசுழற்காற்று: "இது இலங்கை!"

அத்தியாயம் 10: அநிருத்தப் பிரமராயர்→

 

 

 

 

 


347பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: "இது இலங்கை!"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

சுழற்காற்று - அத்தியாயம் 9[தொகு]
"இது இலங்கை!"


மறுபடியும் வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி தங்கப் பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கியது. வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப் பிரதேசம் காணப்பட்டது. அது நாலு புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாபித்துள்ள பூமிப் பிரதேசமா என்று நன்றாகத் தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலுபுறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழுவித வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன. மொத்தத்தில் அந்தக் காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஓவியக் கலையில் தேர்ந்த அமர கலைஞன் ஒருவன், "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது. 
இந்தக் காட்சியைக் கண்டு மெய்ம்மறந்து நினைவிழந்திருந்த வந்தியத்தேவனுடைய செவியில், "இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை!" என்ற வார்த்தைகள் விழுந்து அவனை விழிப்படையச் செய்தன. 
"ஆம்! இது சொர்க்கமோ என்று நான் சந்தேகித்தது உண்மைதான்!" என்றான் வந்தியத்தேவன். 
"இது சொர்க்க பூமி அல்ல; ஆனால் சொர்க்கம் போன்று பூமி. இந்த சொர்க்கத்தை நரகமாக்குவதற்கு மனித உருக் கொண்ட அசுரர்கள் வெகு காலமாகப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள்" என்றாள் பூங்குழலி. 
"யாரை அசுரர்கள் என்று சொல்லுகிறாய்?" என்றான். 
"உன்னைப் போல் யுத்தமே தொழிலாகக் கொண்டவர்களைத்தான்." 
"பொன்னியின் செல்வர் கூடவா?" 
"அவரைப் பற்றி என்னை எதற்காகக் கேட்கிறாய்?" 
"இளவரசரைப் பற்றி விசாரித்துச் சொல்வதாகக் கூறினாயே?" 
"அவர் இருக்கக்கூடிய இடத்தை விசாரித்துச் சொல்வதாகச் கூறினேன். அவர் மனிதரா, அசுரரா, தேவரா என்று கண்டுபிடித்துச் கூறுவதாகச் சொல்லவில்லையே?" 
படகு தீவுகளை நெருங்கிக் கொண்டிருந்தது. கடல் நடுவே கேட்கும் ஓங்காரத் தொனிக்குப் பதிலாகக் கடல் அலைகள் கரையிலே மோதும்போது உண்டாகும் சலசலப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது. 
"என்ன சொல்கிறாய்? எதிரே தெரிகிறதே, அதுதான் பூதத்தீவு, வலப்புறத்தில் உள்ளது நாகத்தீவு. எங்கே போகட்டும் நாகத் தீவிலேயே உன்னைக் கொண்டுபோய் இறக்கி விட்டு விடட்டுமா? விசாரித்துக்கொண்டு போகிறாயா?" 
"இல்லை; பூதத் தீவுக்கே போகலாம். கொஞ்ச நேரம் தாமதமானாலும் இளவரசர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு போவதுதான் நல்லது." 
"அப்படியானால் சரி; நீ எனக்குக் கொடுத்த வாக்குறுதி ஞாபகம் இருக்கட்டும்!" 
சிறிய தீவின் கரையில் வந்து படகு நின்றது. படகைப் பார்த்துக்கொள்ளும்படி வந்தியத்தேவனிடம் சொல்லிவிட்டுப் பூங்குழலி அந்த மரகதத் தீவிற்குள்ளே சென்றாள். வந்தியத்தேவன் அவள் சென்ற திக்கைப் பார்த்தான். பச்சை மரங்களுக்கிடையில் அவள் விரைவில் மறைந்து விட்டாள். 
போதத் தீவு, மக்களின் வாக்கில் மருவிப் பூதத்தீவாக மாறியது பற்றி வந்தியத்தேவன் முதலில் சிந்தித்தான். பிறகு அத்தீவுக்குள்ளே இப்போது குடியிருக்கும் பூதம் எப்படிப்பட்ட பூதமாயிருக்கும் என்று எண்ணமிட்டான். பின்னர் இந்த அதிசயமான பெண்ணின் உள்ளத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்னவாயிருக்கும் என்று வியந்தான். 
பூங்குழலி கூறியபடி ஒரு நாழிகைக்குள் திரும்பி வந்தாள். படகில் ஏறிக்கொண்டு வந்தியத்தேவனையும் ஏறிக்கொள்ளச் சொன்னாள். நாகத்தீவை நோக்கிப் படகு சென்றது. 
"விசாரித்து விஷயத்தைத் தெரிந்துகொள்ள முடிந்ததா?" என்று வல்லவரையன் கேட்டான். 
"முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் பொன்னியின் செல்வரைப் பார்ப்பதற்காக மாதோட்டத்துக்கு வந்திருக்கிறாராம். நேற்றைக்கு இளவரசரும் மாதோட்டத்துக்கு வந்திருக்க வேண்டும். எத்தனை நாள் மாதோட்டத்தில் இருப்பார் என்று தெரியாது. நீ அங்கே போய்த் தெரிந்து கொள்ளலாம்" என்றாள் பூங்குழலி. 
"மாதோட்டம் இங்கிருந்து எத்தனை தூரம் இருக்கும்?" 
"ஐந்து, ஆறுகாத தூரம் இருக்கும். வழியெல்லாம் ஒரே காடு. கோடிக்கரைக் காடு மாதிரி இருக்கும் என்று நினைக்காதே. வானை எட்டும் மரங்கள் அடர்ந்த காடு. பட்டப்பகலில் சில இடங்களில் இருட்டாக இருக்கும். யானைக் கூட்டங்களும், வேறு துஷ்ட மிருகங்களும் உண்டு. நீ ஜாக்கிரதையாகப் போய்ச் சேரவேண்டும்." 
"காட்டில் வழி காட்டுவதற்கு உன்னைப்போல் ஒரு கெட்டிக்காரப் பெண்மட்டுமிருந்தால்...?" என்று வல்லவரையன் பெரு மூச்சு விட்டான். 
"அப்போது நீ ஒருவன் என்னத்திற்காக! ஓலையை என்னிடம் கொடுத்துவிடு! நானே கொண்டுபோய்க் கொடுக்கிறேன்... இல்லை முடியாது! ஏதோ பைத்தியக்காரியைப் போலப் பேசுகிறேன். என்னால் முடியவே முடியாது. இளைய பிராட்டியிடம் ஒப்புக் கொண்டு வந்தாயல்லவா? அதை நீதான் செய்து முடிக்கவேண்டும்!" என்றாள். 
"ஆகட்டும் பூங்குழலி! நான் செய்து முடிப்பேன். இன்னொருவர் கெஞ்சிக் கேட்டாலும் கொடுக்கமாட்டேன். நீ இவ்வளவு உதவி செய்தாயே? அதுவே போதும்!" 
படகு நாகத்வீபத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. பூங்குழலியின் கைகள் துடுப்பை வழக்கம்போல் வலித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவளுடைய உள்ளம் வேறு எங்கேயோ கனவுலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது என்பது முகத்திலிருந்து தெரிந்தது. 
"சமுத்திர குமாரி!" என்று வந்தியத்தேவன் அழைக்கவும், அவள் திடுக்கிட்டு இவ்வுலகத்துக்கு வந்தாள். 
"ஏன் கூப்பிட்டாய்?" என்று கேட்டாள். 
"ஏதோ என்னிடம் பிரதி உபகாரத்தை எதிர் பார்ப்பதாகச் சொன்னாயே? அதை இப்போது சொன்னால்தான் சொன்னது. இதோ கரை நெருங்கி வருகிறது." 
பூங்குழலி உடனே மறுதளிக்கவில்லை; சிந்திப்பதாகத் தோன்றியது. ஆகையால் வந்தியத்தேவன் தைரியம் கொண்டு மேலும் கூறினான். 
"நீ எனக்குச் செய்த உதவி மிகப்பெரியது. எனக்கு மட்டும் நீ உதவவில்லை; சோழ சாம்ராஜ்யத்துக்கே உதவி புரிந்திருக்கிறாய். சோழ சக்கரவர்த்தியின் குலத்துக்கு மாபெரும் உதவி புரிந்திருக்கிறாய். இதற்குப் பிரதியாக நான் ஏதாவது செய்யாவிட்டால் என் மனம் நிம்மதியடையாது" என்றான். 
"இதையெல்லாம் நீ உண்மையாகச் சொல்லுகிறாயா? அல்லது உலகத்திலுள்ள மற்ற ஆண் மக்களைப்போல் வஞ்சகம் பேசுகிறாயா?" 
"சமுத்திர ராஜன் அறியச் சத்தியமாகச் சொல்கிறேன்." 
"அதாவது தண்ணீரில் எழுதி வைக்கிறேன் என்கிறாயா?" 
"ஆகாச வாணியும், பூமாதேவியும், அஷ்ட திக்குப் பாலகர்களும், சூரிய சந்திரர்களும் அறிய ஆணையிட்டுச் சொல்லுகிறேன்." 
"உன்னுடைய சத்தியத்தையும் ஆணையையும் நம்பி நான் சொல்லவில்லை. பொய் சொல்லும் வஞ்சகர்கள் சத்தியத்துக்கும் ஆணைக்கும் மட்டும் பயந்து விடுவார்களா? உன்னை முதன்முதல் பார்த்தவுடனேயே நீ நல்லவன் என்று எனக்குத் தோன்றியது ஆகையினால் சொல்லுகிறேன்..." 
"முதலில் தோன்றிய எண்ணந்தான் எப்போதும் மேலானது. அதை நீ மாற்றிக்கொள்ள வேண்டாம்." 
"பொன்னியின் செல்வரைப் பார்த்து அவரிடம் ஓலையைக் கொடுத்த பிறகு, சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிப் பேச வேண்டியதையெல்லாம் பேசிய பிறகு, அவர் அவகாசத்துடன் இருக்கும்போது 'சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?' என்று கேள். 'ஞாபகம் இருக்கிறது' என்று அவர் சொன்னால், 'அவள்தான் எனக்குப் படகு வலித்துக்கொண்டு வந்து இலங்கையில் இறக்கி விட்டாள்' என்று கூறு!" 
'பூங்குழலி! அவ்வளவு உயரத்திலேயா நீ பறக்கப் பார்க்கிறாய்? சிட்டுக் குருவி ஒன்று ககன ராஜாவாகிய கருடன் பறக்குமிடத்துக்கு நானும் போவேன் என்று பறக்கத் தொடங்கலாமா? இது உனக்கு நல்லதல்லவே?' - இவ்வாறு வந்தியத்தேவன் மனத்தில் எண்ணிக் கொண்டான். வெளிப்படையாக, "இதைச் சொல்லத்தானா, இவ்வளவு தயங்கினாய்? என்னமோ பெரியதாகக் கேட்கப் போகிறாய் என்று நினைத்தேன். இளவரசரிடம் கட்டாயம் நான் சொல்லுகிறேன்! அவர் கேட்காமற் போனாலும் நானே சொல்லுகிறேன்!..." என்றான். 
"ஐயையோ! அவர் கேட்காவிட்டால் நீயாக ஒன்றும் சொல்லவேண்டாம்!" 
"அதெல்லாம் முடியாது; சொல்லித்தான் தீருவேன்." 
"என்ன சொல்லுவாய்?" நடந்தது நடந்தபடிதான் சொல்லுவேன். 'இளவரசே! பொன்னியின் செல்வரே! சமுத்திர குமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா? ஞாபகம் இல்லாவிட்டால், இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்! அவள்தான் என்னைப் பழுவேட்டரையரின் கொலைகார ஆட்களிடம் சிக்காமல் காப்பாற்றினாள். அவள்தான் தன்னந்தனியாகப் படகு தள்ளிக்கொண்டு வந்து என்னை இலங்கையில் சேர்த்தாள். கடலில் விழுந்து தத்தளித்த என்னை அவள்தான் காப்பாற்றிப் படகில் ஏற்றி விட்டாள். சமுத்திர குமாரியின் உதவியிராவிட்டால் நான் உயிருடன் வந்து உங்களைப் பார்த்திருக்க முடியாது. இந்த ஓலையும் உங்களுக்குக் கிடைத்திராது!' என்று சொல்லுவேன், சரிதானே?" 
"இதுவரை சொன்னது சரிதான் மேலும் ஏதாவது சேர்த்துக் கொண்டுவிடாதே! இதையெல்லாம் நான் அவரிடம் சொல்லச் சொன்னதாகச் சொல்லிவிடாதே!" 
"சேச்சே! என்னை முழுப் பைத்தியம் என்று நினைத்தாயா?" 
"இளவரசர் அதற்கு ஏதேனும் மறுமொழி சொன்னால், அதை உள்ளது உள்ளபடி என்னிடம் சொல்லவேண்டும். கூட்டியோ, குறைத்தோ சொல்லக் கூடாது." 
"உன்னைப் மறுபடி நான் எங்கே பார்ப்பது?" 
"என்னைப் பார்ப்பதில் என்ன கஷ்டம்? கோடிக்கரையிலோ இந்தப் பூதத் தீவிலோ, அல்லது இரண்டுக்கும் மத்தியில் படகிலோ இருப்பேன்." 
"ஊருக்குத் திரும்பும்போது இந்த வழியாக வந்தால் பூதத் தீவில் நீ இருக்கிறாயா என்று பார்க்கட்டுமா?" 
"தீவுக்குள்ளே எந்தக் காரணத்தைக் கொண்டும் நீ வரக்கூடாது; வந்தால் விபரீதமாகும். இந்தப் படகு கடலோரத்தில் இருக்கிறதா என்று பார்! இருந்தால், ஏதாவது ஓர் அடையாளம் வைத்துக் கொண்டு சத்தம் செய்! நான் நேற்றுக் குயில் மாதிரி கூவினேனே, அந்த மாதிரி நீ கூவ முடியுமா?..." 
"குயில் மாதிரி கூவ முடியாது? ஆனால் மயில் மாதிரி சத்தம் செய்வேன். இதைக்கேள்!" 
வந்தியத்தேவன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு மயில் கத்துவது போன்ற அகோரமான குரலில் கத்திக் காட்டினான். 
அதைக் கேட்டுப் பூங்குழலி கலகலவென்று சிரித்தாள். 
படகு நாகத் தீவின் கரையை அணுகியது. இருவரும் படகிலிருந்து இறங்கினார்கள். வந்தியத்தேவன் கரையில் ஏறி விடை பெற்றுக்கொண்டான். பூங்குழலி படகைத் திருப்பினாள். வந்தியத்தேவன் சபலத்துடன் திரும்பிப் பார்த்தான். "உன்னுடன் வருகிறேன்" என்று சொல்லி, அவளும் வரமாட்டாளா? என்ற ஆசை அவன் மனத்தில் இன்னமும் கொஞ்சம் இருந்தது. ஆனால் பூங்குழலி அவனைக் கவனிக்கவேயில்லை. அதற்குள் அவள் கனவுலோகத்தில் சஞ்சரிக்கப் போய்விட்டாள் என்பதை அவள் முகம் எடுத்துக் காட்டியது.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel