←அத்தியாயம் 23: ஊமையும் பேசுமோ?
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திமணிமகுடம்: இளவரசியின் அவசரம்
அத்தியாயம் 25: அநிருத்தரின் குற்றம்→
473பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: இளவரசியின் அவசரம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
மணிமகுடம் - அத்தியாயம் 24[தொகு]
இளவரசியின் அவசரம்
இளவரசிகளை உபசரித்து வரவேற்றுப் பீடங்களில் உட்காரச் செய்த பிறகு அநிருத்தர் தாமும் அமர்ந்தார்.
"தேவி, என்னைப் பார்க்க வேணுமென்று சொல்லி அனுப்பினால் நானே வந்திருக்கமாட்டேனா? இவ்வளவு அவசரமாக வந்த காரணம் என்ன? சக்கரவர்த்தி சௌக்கியமாயிருக்கிறார் அல்லவா?" என்று கேட்டார்.
"சக்கரவர்த்தியின் தேக சுகம் எப்போதும் போலிருக்கிறது, ஐயா! ஆனால் மனதுதான் கொஞ்சமும் சரியாக இல்லை. நேற்று இரவு அடித்த கடும் புயல் தந்தையின் மனத்தை ரொம்பவும் பாதித்திருக்கிறது. இராத்திரியெல்லாம் அவர் தூங்கவில்லை. குடிசைகளில் வாழும் ஏழை எளிய மக்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை எண்ணி அடிக்கடி புலம்பினார். பொழுது விடிந்தவுடன் தங்களைப் போய்ப் பார்க்கும்படி சொன்னார். புயலினால் கஷ்ட நஷ்டம் அடைந்தவர்களுக்கெல்லாம் உடனே உதவி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாம். அதைத் தங்களிடம் சொல்லுவதற்காகவே முக்கியமாக வந்தேன்!" என்றாள் இளையபிராட்டி குந்தவை.
"தேவி! இந்த எளியவனால் என்ன செய்ய முடியும்? முதன்மந்திரி என்ற பெயர்தான் எனக்கு என்பது தங்களுக்குத் தெரியாதா? பெரிய பழுவேட்டரையர் இந்தச் சமயம் ஊரை விட்டுப் போயிருக்கிறார். பொக்கிஷத்தை இறுக்கிப் பூட்டிக் கொண்டுதான் போயிருப்பார். அவருடைய சம்மதமின்றிக் காலாந்தககண்டரால் கூடப் பொக்கிஷ சாலையைத் திறக்க முடியாதே! கஷ்ட நஷ்டங்களை அடைந்தவர்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்? வாசலில் பலர் வந்து காத்திருப்பதைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்களைப் பார்ப்பதற்கே எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதனால்தான் வெளியில் செல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறேன்" என்று அநிருத்தப்பிரம்மராயர் பஞ்சப் பாட்டுப் பாடினார்.
"ஐயா! அதைப்பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம் என்னுடைய சொந்த உடைமைகள் அனைத்தையும் கொடுக்கிறேன். என் அன்னையும் அவ்விதமே கொடுக்கச் சித்தமாயிருக்கிறார்கள். சக்கரவர்த்தியின் அரண்மனையில் உள்ள எல்லாப் பொருள்களையும் தாங்கள் எடுத்துக் கொள்ளலாம். தந்தை அவ்விதம் சொல்லி அனுப்பினார்கள். ஏழைகளின் கஷ்டங்களுக்குத் தற்காலிக, சாந்தியாகவேனும் - ஏதேனும் ஏற்பாடு செய்யுங்கள்..."
"தங்களுடைய சொந்த உடைமைகள் யானைப் பசிக்குப் சோளப் பொரி கொடுத்ததாகவே இருக்கும். சோழ நாடு முழுவதும் நேற்றுப் புயல் அடித்திருக்கிறது. எங்கெங்கே என்னென்ன நேர்ந்திருக்கிறது என்ற செய்திகளே இன்னும் கிட்டவில்லை. இதோ நிற்கிறானே, என் பரமானந்த சீடன், இவன் பெரும் பயங்கரமான செய்தியைச் சொல்லுகிறான். கடல் பொங்கி எழுந்து கோடிக்கரை முதல் நாகைப்பட்டினம் வரையில் கடலோரமுள்ள ஊர்களையெல்லாம் மூழ்கடித்து விட்டதாம்...!"
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அங்கிருந்த மூன்று பெண்களின் முகங்களும் பீதிகரமான மாறுதலை அடைந்ததை அநிருத்தர் கவனித்தார்.
உடனே அவர் தொடர்ந்து ஆறுதலாகக் கூறினார்: "ஆனால் அதை நான் நம்பவில்லை இவன் கூறுவது வெறும் வதந்திதான். புயலைக் காட்டிலும் வேகமாக வதந்தி பரவியிருக்கிறது. கடற்கரைப் பகுதியிலிருந்து செய்தி வருவதற்கே இன்னும் நேரமாகவில்லை. குதிரை மீது தூதர்கள் வந்தாலும் இன்று மத்தியானத்துக்கு மேலேதான் இங்கு வந்து சேர முடியும். இதற்கிடையில் நம்மால் செய்யக் கூடிய உதவிகளையெல்லாம் செய்வதற்கு ஏற்பாடு செய்யலாம்."
இளையபிராட்டி குந்தவை தன் மனக் குழப்பத்தைச் சிறிது சமாளித்துக் கொண்டு, "ஐயா! நாகைப்பட்டினம் பற்றிய வதந்தி என் காதிலும் விழுந்தது. அதைப் பற்றியும் தங்களிடம் பேசலாம் என்று வந்தேன். இப்போதுதானே சூடாமணி விஹாரத்திற்கு நாம் நிவந்தங்கள் அளித்துவிட்டு வந்தோம்? விஹாரத்துக்கு விபத்து நேர்ந்தால் பாவம், அதில் உள்ள பிக்ஷுக்கள் என்ன செய்வார்கள்?" என்று கூறிவிட்டு, பூங்குழலி நின்ற இடத்தை நோக்கினாள்.
"ஐயா! இந்தப் பெண் இங்கே எப்படி வந்தாள்? கோடிக்கரைத் தியாவிடங்கரின் மகள் பூங்குழலி அல்லவா இவள்?" என்று வினவினாள்.
"ஆமாம்; தியாகவிடங்கரின் குமாரிதான் ஆனால் அவரைப் போல் சாதுவல்ல. ரொம்பப் பொல்லாத பெண் தனக்குச் சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுத் தொந்தரவு விளைவிப்பவள்!" என்றார் முதன்மந்திரி.
இளையபிராட்டிக்கு வேறு வித ஐயப்பாடு தோன்றியது. அருள்மொழியைப் பற்றி உளவு அறிவதற்காகத்தான் பூங்குழலியை இங்கே அநிருத்தர் தருவித்திருக்கிறாரோ? தந்திர வித்தைகளில் கைதேர்ந்த மந்திரியாயிற்றே? எப்படி இருந்தாலும் பூங்குழலியின் சார்பில் தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு, "அப்படியொன்றுமில்லையே? பூங்குழலி மிக நல்ல பெண் ஆயிற்றே! இங்கே வா, அம்மா! முதன்மந்திரி ஏன் உன் பேரில் கோபமாயிருக்கிறார்? அவருக்கு ஏதேனும் தொந்தரவு கொடுத்தாயா?" என்றாள்.
பூங்குழலி சற்று நெருங்கி வந்து, "தேவி! முதன்மந்திரியையே தாங்கள் கேளுங்கள்! நான் முதன்மந்திரிக்குத் தொந்தரவு கொடுத்தேனா அவர் எனக்குத் தொந்தரவு கொடுத்தாரா என்று கேளுங்கள்!" என்றாள்.
"ஓகோ! நீயும் கோபமாகத்தான் இருக்கிறாய்! இங்கே வா, பெண்ணே; என் அருகில் உட்கார்ந்துகொள்!" என்று கூறி இளையபிராட்டி பூங்குழலியைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.
"ஐயா! இந்தப் பெண்ணை எதற்காகத் தருவித்தீர்கள்? ஏதாவது முக்கியமான காரியமா?" என்று கேட்டாள்.
"அம்மணி! நான் இந்தப் பெண்ணைத் தருவிக்கவில்லை. இப்படி ஒரு பொல்லாத பெண் இருக்கிறாள் என்ற செய்தியே எனக்குத் தெரியாது இவளாகவேதான்.." என்று அநிருத்தர் தயங்கினார்.
"தேவி! முதன்மந்திரி ஏன் தயங்குகிறார்? மிச்சத்தையும் சொல்லச் சொல்லுங்கள்!" என்றாள் பூங்குழலி.
"இவளாகவேதான் இவளுடைய அத்தையைத் தேடிக் கொண்டு வந்தாள்."
"யார் இவளுடைய அத்தை? ஓகோ! சேந்தன் அமுதனின் அன்னையா? கோட்டைக்கு வெளியில் அல்லவா அவர்களுடைய வீடு இருக்கிறது?"
"இல்லை; அமுதனின் அன்னை இல்லை; இவளுக்கு இன்னொரு ஊமை அத்தை இருக்கிறாள். இளவரசி! தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய செய்திதான். ஈழநாட்டுக் காடுகளில் பித்துப்பிடித்தவள் போல் திரிந்து கொண்டிருந்த ஊமை ஸ்திரீ ஒருவர் உண்டு. அந்த மாதரசியை இங்கே ஒரு முக்கியமான காரியத்துக்காக அழைத்து வர விரும்பினேன். அதற்காகப் பெரு முயற்சி செய்தேன்; கடைசியில், வெற்றி கிட்டியது அந்தச் சமயத்தில்..."
குந்தவை தேவி சொல்லி முடியாத பரபரப்பை அடைந்து, "உண்மையாகவா? அந்தப் பெண்மணி இப்போது இங்கே இருக்கிறாளா? நான் உடனே பார்க்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பீடத்தை விட்டு எழுந்தாள்.
"மன்னிக்க வேண்டும் தேவி! வெற்றி கிட்டும் சமயத்தில் இந்தப் பெண் குறுகிட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டாள்!" என்றார் முதன்மந்திரி.
குந்தவை மிக்க ஏமாற்றத்துடன் திரும்பவும் உட்கார்ந்து "பூங்குழலி! இது உண்மைதானா? என்ன காரியம் செய்து விட்டாய்!" என்றாள்.
"தேவி! என் அத்தையை அழைத்து வருவதற்கு முதன்மந்திரி கையாண்ட முறையைக் கேளுங்கள். அப்போது என் பேரில் குற்றம் சொல்லமாட்டீர்கள்!" என்றாள் பூங்குழலி.
பிறகு, முதன்மந்திரி நடந்தவற்றைச் சுருக்கமாகக் கூறினார்.
கேட்டுக் கொண்டிருந்த இளையபிராட்டி, "அப்படியானால், இந்தக் கோட்டைக்குப் பக்கத்திலே தானே எங்கேனும் இருக்க வேணும்? தேடிப் பார்க்கலாமே?" என்றாள்.
"நல்ல வேளையாகத் தேடிப் பார்க்க வேண்டிய அவசியம் கூட இல்லை. சேந்தன் அமுதன் குடிசையில் இன்று காலையில் பார்த்ததாக என் சீடன் சொல்லுகிறான்" என்றார் முதன்மந்திரி.
"அப்படியானால் ஏன் வீண் கால தாமதம்? மற்றக் காரியங்கள் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். நாமே போய் அழைத்து வருவோம்; தாங்கள் வருவதற்கில்லாவிட்டால் நான் போய் வருகிறேன் வானதி! புறப்படு, போகலாம்!" என்றாள்.
ஆழ்வார்க்கடியான் அப்போது குறுக்கிட்டு, "தேவி! சற்று யோசித்துச் செய்ய வேண்டும். புதிய மனிதர்கள் கூட்டமாய் வருவதைக் கண்டால் அந்த அம்மாள் மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். பிறகு புயலைப் பிடித்தாலும் அந்த அம்மணியைப் பிடிக்க முடியாது!" என்று சொன்னான்.
"ஆம், திருமலை சொல்லுவது சரிதான் நம்மைப் பார்த்ததும் பூங்குழலியின் அத்தை மிரண்டு ஓடத் தொடங்கி விடலாம். நமது பிரயத்தனமெல்லாம் வீணாகிவிடும்! நீ என்ன யோசனை சொல்கிறாய், திருமலை?" என்று முதன்மந்திரி கேட்டார்.
"இந்தப் பெண்மணியையே போய் அழைத்து வரும்படி சொல்லுங்கள். இந்த உலகத்தில் அந்த மாதரசியைக் கட்டுக்குள் வைக்கக் கூடியவர்கள் இரண்டே பேர்தான்! அவர்களில் இந்தப் பெண் ஒருத்தி!"
"இன்னொருவர் யார்?" என்று முதன்மந்திரி கேட்டதற்கு, ஆழ்வார்க்கடியான் சிறிது தயங்கி "இன்னொருவர் கடலில் முழுகிவிட்டதாக ஊரெல்லாம் வதந்தியாயிருக்கிறது!" என்றான்.
குந்தவை தேவி அதைக் கவனியாதவள்போல், பூங்குழலியைப் பார்த்து, "கரையர் மகளே! உடனே போய், உன் அத்தையை இங்கே அழைத்து வா! அவளுக்கு இங்கே ஒரு கெடுதியும் நேராது. மிக முக்கியமான காரியமாக உன் அத்தையை உடனே நான் பார்க்க வேண்டியிருக்கிறது! எனக்காக இந்த உதவி செய்வாய் அல்லவா?" என்றாள்.
"ஆகட்டும், அம்மா, முயன்று பார்க்கிறேன் ஆனாலும் முதன்மந்திரி இப்படிப்பட்ட உபாயத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டியதில்லை. முன்னாலேயே எனக்குத் தெரிந்திருந்தால்.."
"ஆமாம்; விஷயங்களை மறைத்து வைப்பதில் இம்மாதிரி அசந்தர்ப்பங்கள் நேரத்தான் நேருகின்றன. அதை நானே உணர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் அத்தையை அழைத்துக் கொண்டு வா! அதற்குப் பிறகு இன்னொரு முக்கியமான வேலை உனக்கு இருக்கிறது!" என்றாள் இளையபிராட்டி.
"திருமலை! நீயும் இந்தப் பெண்ணோடு போய்விட்டு வா! கோட்டை வாசல் வழியாக நீங்கள் வருவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், நமது அரண்மனைக்கு வரும் இரகசிய வழியில் அழைத்துக் கொண்டு வா!" என்றார் அநிருத்தர்.
பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானும் போன பிறகு குந்தவை முதன்மந்திரியைப் பார்த்து, "ஐயா! வாசலில் வந்து காத்திருப்பவர்களுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி அனுப்பி விட்டு வாருங்கள். மிக முக்கியமான காரியங்களைப் பற்றித் தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கிறது!" என்றாள்.
"இதோ வந்துவிடுகிறேன், தாயே! எனக்கும் தங்களிடம் பேச வேண்டியதிருக்கிறது!" என்று சொல்லி விட்டு அநிருத்தர் சென்றார்.
இத்தனை நேரமும் மௌனமாக இருந்த வானதி, "அக்கா! பூங்குழலிக்கு இன்னொரு முக்கியமான காரியம் என்ன வைத்திருக்கிறீர்கள்? மறுபடியும் நாகைப்பட்டினத்துக்கு அனுப்பப் போகிறீர்களா?" என்று கேட்டாள்.
"ஆம் வானதி! நீ வீணாகக் கவலைப்படாதே! பொன்னியின் செல்வனுக்கு ஆபத்து ஒன்றும் நேர்ந்து விடாது."
"நானும் அவளுடன் நாகைப்பட்டினத்துக்குப் போகிறேனே அக்கா!"
"நீ போய் என்ன செய்வாய்? உன்னைக் காப்பாற்றுவதற்கு வேறு யாராவது வேண்டுமே?"
"அந்த ஓடக்காரிக்கு என்னைக் கண்டால் பிடிக்கவேயில்லை, அக்கா!"
"எப்படியடி அவள் மனதை நீ கண்டுபிடித்தாய்?"
"என்னுடன் அவள் பேசவே இல்லை!"
"நீயும் அவளோடு பேசவில்லை; அவளும் உன்னோடு பேசவில்லை."
"நான் அடிக்கடி அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை ஒரு தடவைகூடத் திரும்பிப் பார்க்கவில்லை; அவளுக்கு ஏதோ என் பேரில் கோபம்!"
"ஆமாமடி, வானதி! இந்த நாட்டில் உள்ள கலியாணமாகாத கன்னிப் பெண்களுக்கெல்லாம் உன் பேரில் கோபமாய்த்தானிருக்கும். அதற்காக நீ வருத்தப்படுவதில் பயனில்லை" என்று சொன்னாள் இளையபிராட்டி குந்தவைதேவி.