←அத்தியாயம் 13: குந்தவை கேட்ட வரம்
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: வானதியின் சபதம்
அத்தியாயம் 15: கூரை மிதந்தது!→
512பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: வானதியின் சபதம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
தியாக சிகரம் - அத்தியாயம் 14[தொகு]
வானதியின் சபதம்
திடும் பிரவேசமாக உள்ளே புகுந்த ஆழ்வார்க்கடியானைப் பார்த்துக் குந்தவை, "திருமலை, நீ எப்படி இங்கே வந்து முளைத்தாய்? எதற்காக வந்தாய்?" என்று கேட்டாள்.
"அம்மணி! எல்லாம் இந்த ஜோசியருடைய மோசடி வார்த்தையினால்தான்! இன்று காலையில் இவரிடம் 'நான் போகும் காரியம் வெற்றிகரமாக முடியுமா?' என்று கேட்டேன். 'முடியும்' என்று சொன்னார். ஆனால் இந்த இடத்தை விட்டுச் சிறிது தூரம் போகக் கூட முடியவில்லை. காரியம் வெற்றி பெறுவது எப்படி? ஆகையினால்தான் சற்று முன் பழுவேட்டரையர் கூறியதை நான் ஆமோதிக்கிறேன். இவருடைய ஜோதிட சாஸ்திரமே ஏமாற்றா அல்லது இவர்தான் வேண்டுமென்று ஏமாற்றினாரா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு போக வந்தேன். பழுவேட்டரையரின் குரலை இங்கே கேட்டதும், இவர் பேரிலேயே எனக்கு சந்தேகம் ஊர்ஜிதப்பட்டது. ஆனால் தங்களை இங்கு நான் எதிர் பார்க்கவேயில்லை" என்றான்.
"என்னை நீ எதிர்பார்த்திருக்க முடியாதுதான். நீ எதற்காக வந்தாய்? என்ன காரியம் வெற்றி அடையுமா என்று ஜோதிடரைக் கேட்டாய்? இரகசியம் ஒன்றுமில்லையே" என்றாள் இளவரசி.
"தங்களுக்குத் தெரிய முடியாத இரகசியம் இருக்க முடியும்? சக்கரவர்த்தியின் கட்டளைப்படி நேற்றிரவே முதன் மந்திரி என்னை நாகப்பட்டினத்துக்குப் போகும்படி ஏவினார் இளவரசரைக் கையோடு அழைத்து வருவதற்காகத்தான். வழியில் செம்பியன் மாதேவியைப் பார்த்து அவரிடமும் ஓர் ஓலையைக் கொடுத்துப் போகும்படி ஏவினார்.... தாங்கள் எப்போது தஞ்சையிலிருந்து கிளம்பினீர்கள், தேவி?"
"பொழுது விடிந்து சிறிது நேரத்துக்குப் பிறகு கிளம்பினோம். இதை ஏன் கேட்கிறாய், திருமலை?"
"கொடும்பாளூர்ப் படைகள் தஞ்சைக் கோட்டையைச் சூழ்ந்து கொண்டு விட்டனவா என்று தெரிந்து கொள்வதற்காகக் கேட்டேன்."
"என்ன? என்ன?"
"ஆம், தேவி! தங்களுக்குத் தெரியாதா, என்ன? நேற்றிரவு சக்கரவர்த்தியைப் பார்த்து விட்டு முதன் மந்திரி அவருடைய மாளிகைக்குத் திரும்பி வந்தபோது இரண்டு செய்திகள் காத்திருந்தன. ஒன்றுதான், நாகைப்பட்டினத்திலிருந்து இளவரசர் புறப்பட்டு வருகிறார்; பெரும் ஜனக்கூட்டம் புடைசூழ வந்து கொண்டிருக்கிறார் என்பது..."
"அதை நானும் இன்று காலை அறிந்தேன். என் தம்பியை இங்கே தடுத்து நிறுத்திக் கொள்வதற்காகவே புறப்பட்டு வந்தேன். இன்னொரு செய்தி என்றாயே, அது என்ன?"
ஆழ்வார்க்கடியான் வானதியைச் சுட்டிக்காட்டி, "அம்மா! இந்தக் கொடும்பாளூர் இளவரசியை எதற்காக அழைத்து வந்தீர்கள்?" என்று கேட்டான்.
"அவள் எப்போதும் வருவது போல் இப்போதும் வந்தாள்; அழைத்து வந்தேன், எதற்காகக் கேட்டாய்?"
"இரண்டாவது செய்தியை இந்த இளவரசி இருக்கும்போது சொல்லத் தயக்கமாய் இருக்கிறது."
"சொல், திருமலை! இவள் எனக்கு எவ்வளவு அந்தரங்கமானவள் என்பது உனக்குத் தெரியாதா? எனக்குத் தெரியக் கூடியது எதுவும் இவளுக்கும் தெரியலாம்..."
"ஆனாலும் இந்த இளவரசிக்குச் சம்மந்தப்பட்ட காரியம் அது. தென்திசைச் சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி ஒரு மாபெரும் சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு தஞ்சைக் கோட்டையை நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்று நேற்றிரவு முதன் மந்திரிக்குச் செய்தி வந்தது. சேனாதிபதியிடமிருந்து ஓர் ஓலையும் முதன் மந்திரிக்கு வந்தது. சக்கரவர்த்தியைத் தஞ்சைக் கோட்டையிலும், சின்ன இளவரசரை ஏதோ ஓர் இரகசிய இடத்திலும் பழுவேட்டரையர்கள் சிறைப்படுத்தி வைத்திருப்பதாக அதில் குற்றம் சாட்டியிருந்தது. பழுவேட்டரையர்கள், தனாதிகாரி பொறுப்பையும், தஞ்சைக் காவல் பொறுப்பையும், உடனே விட்டு நீங்க வேண்டும் என்றும், இளவரசரைக் கொண்டு வந்து ஒப்புவிக்க வேண்டும் என்று எழுதியிருந்தது. இல்லாவிட்டால் இன்று மாலைக்குள் தஞ்சைக் கோட்டையைச் சுற்றி முற்றுகை ஆரம்பமாகி விடும் என்று எழுதியிருந்தது. அம்மணி! தஞ்சைக்குத் தெற்குத் திசையிலும், மேற்குத் திசையிலும் ஏற்கனவே கொடும்பாளூர் படைகள் நெருங்கி வந்து விட்டனவே? தங்களுக்குத் தெரியாதா?"
"தெரியாது, முதன் மந்திரி இதைப்பற்றி ஒரு வார்த்தையும் என்னிடம் சொல்லவில்லையே?"
"சொல்லியிருந்தால், நீங்கள் ஒருவேளை தஞ்சைக் கோட்டையை விட்டுப் புறப்பட்டிருக்க மாட்டீர்கள். முக்கியமாக, கொடும்பாளூர் இளவரசியை உடனே வெளியேற்றிவிட முதன் மந்திரி விரும்பியிருக்கலாம்..."
"அது ஏன்? இவள் அங்கு இருந்தால் என்ன நேர்ந்து விடும்?"
"இந்த இளவரசியைச் சின்னப் பழுவேட்டரையர் ஒருவேளை சிறைப்படுத்தினாலும் படுத்தி விடுவார்..."
"அவ்வளவு துணிச்சல் அவருக்கு வந்து விடுமா? மெய்யாகவே இதை நீ சொல்லுகிறாய்?"
"ஆம், தேவி! மேலும் தென்திசைச் சேனாதிபதி சொல்லி அனுப்பிய செய்தியைக் கேட்டால், தாங்களே அறிந்து கொள்வீர்கள்..."
"என்ன? மேலும் என்ன?"
"இளவரசர் அருள்மொழிவர்மருக்கும், கொடும்பாளூர் இளவரசி வானதி தேவிக்கும் உடனே திருமணம் நடத்தியாக வேண்டும். ஆதித்த கரிகாலர் தமக்கு இராஜ்யம் வேண்டாம் என்று சொல்வதால் அருள்மொழிச் சோழரையே அடுத்த பட்டத்துக்கு உரியவராக யுவராஜ பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். இதற்கெல்லாம் சம்மதிக்காவிட்டால் தஞ்சைக் கோட்டையை மூன்றே நாளைக்குள் தரை மட்டமாக்கி விடுவேன் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். சோழநாட்டு மக்கள் தம்மை ஆதரிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்..."
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வானதி. "அக்கா! என் பெரியப்பாவுக்குத் திடீரென்று பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன?" என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.
"ஏன் வானதி அப்படிச் சொல்கிறாய்? வெகு காலமாகப் பலர் மனத்தில் இருந்த விஷயத்தையே உன் பெரியப்பா இப்போது பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். பழுவேட்டரையர்கள் 'மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட வேண்டும்' என்ற முயற்சி தொடங்கியிருப்பதினால் கொடும்பாளூர் மன்னரும் திருக்கோவலூர் மலையமானும் இவ்விதம் வெளிப்படையாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்..."
"ஆம், தாயே! திருக்கோவலூர் மலையமான் கூட இதற்குள் ஒரு பெரிய சைன்யத்துடன் கடம்பூர் கோட்டைக்குச் சமீபம் வந்திருப்பார். என்னிடம் அவர் பேசியதிலிருந்தே அவ்வாறு தான் ஊகித்தேன். முதன் மந்திரிக்கும் தகவல் கிடைத்திருக்கிறது..."
"ஆனால் இப்போது நான் அறிந்திருக்கும் செய்திகள் அவர்கள் இருவருக்கும் தெரியாது. அவர்கள் இரண்டு பேருடனும் நான் பேசி உள்நாட்டுச் சண்டை நேராமல் தடுத்தாக வேண்டும். எப்படிச் செய்யப் போகிறேனோ, தெரியவில்லை..."
"தாயே ! நிலைமை இப்போது மிகவும் முற்றிப் போய் விட்டது. இனிமேல் ஒரு பெரிய பாரத யுத்தம் நடந்தே தீரும் போலிருக்கிறது..."
"இதைப் பாரத யுத்தம் என்று கூறியது ரொம்ப சரி, திருமலை! இப்போது யுத்தம் மூண்டால் அது ஒரு சகோதரச் சண்டையாகத்தான் இருக்கும். உற்றார் உறவினருக்குள்ளே நிகழும் சர்வ நாச யுத்தமாக இருக்கும். வானதி! இதைக் கேள்! என் பாட்டனாரின் தகப்பனார் புகழ்பெற்ற பராந்தக சக்கரவர்த்தி, பழுவேட்டரையர் குலத்தில் பெண் கொண்டார். அவருடைய மகள், - என் சிறிய பாட்டி, - கொடும்பாளூரின் அரசரை மணந்து கொண்டார். என் பாட்டனார் அரிஞ்சயர் கொடும்பாளூர்ப் பெண்ணை மணந்து கொண்டார். என் தந்தையோ திருக்கோவலூர் மலையமான் மகளை மணந்திருக்கிறார். இப்படி இந்த மூன்று குல மன்னர்களும் எங்கள் குலத்துடன் நெருங்கிய உறவு பூண்டவர்கள். ஒன்றுக்குள் ஒன்றாகக் கலந்து போனவர்கள். ஆயினும் அவர்கள் இப்போது கச்சை கட்டிக் கொண்டு சண்டைக்கு ஆயத்தமாகி வருகிறார்கள்! இந்த விதியை என்னவென்று சொல்கிறது - இவர்களுடைய சண்டையினால் சோழ ராஜ்யமே அழிந்துவிடும் போலிருக்கிறது!"
"அக்கா! எனக்குப் அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. எப்படியாவது சண்டை போட்டுக் கொண்டு சாகட்டும். ஆனால் இதில் என் பெயரை என் பெரிய தகப்பனார் எதற்காக இழுக்க வேண்டும்? உடனே திரும்பிப்போய் என் பெரியப்பாவைப் பார்த்து சண்டை பிடிக்கவேண்டும் என்று தோன்றுகிறது..."
"அதனால் என்ன பயன், கண்ணே? நீ சொல்வதை உன் பெரிய தகப்பனார் கேட்க மாட்டார். நீயும் நானும் சேர்ந்து மன்றாடினாலும் பயன்படாது. சிறு வயதுப் பெண்களாகிய நாம் சொல்வதை உன் பெரியப்பாவைப் போன்ற கிழவர்கள் கேட்க மாட்டார்கள். என் தம்பி அருள்மொழிவர்மன் மூலமாகத்தான் இந்தச் சண்டை நேராமல் தடுக்கமுடியும். திருமலை! நீ போனவன் ஏன் திரும்பி வந்தாய்? அருள்மொழி இப்போது எங்கே இருக்கிறானாம்?"
"திருவாரூரிலிருந்து நேற்றிரவே புறப்பட எண்ணியதாகக் கேள்வி. ஆனால் வழியெல்லாம் ஒரே வெள்ளக்காடாக இருப்பதால் வர முடியவில்லையாம். நானும் பழையாறைக்கு அப்பால் போகப் பார்த்து முடியாமல் திரும்பி வந்தேன். குடமுருட்டி உடைப்பெடுத்து ஒரே சமுத்திரமாகச் செய்திருக்கிறது..."
"எப்படியும் வெள்ளம் வடியும். அதற்குப் பிறகு அருள்மொழி இந்த வழியாக வந்துதானே ஆகவேண்டும்? அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். அதற்குள் தஞ்சையில் ஏதேனும் விபரீதம் நேர்ந்து விடப்போகிறதே என்று கவலையாயிருக்கிறது. திருமலை! நீ உடனே தஞ்சாவூர் திரும்பிப் போய்க் கொடும்பாளூர் மன்னரைக் கண்டு நான் சொல்லும் செய்தியைச் சொல்ல முடியுமா? அருள்மொழி வரும் வரையில் தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட வேண்டாம் என்று தெரிவிப்பாயா?"
"அக்கா! நானும் இவருடன் தஞ்சைக்குப் போகட்டுமா?"
"நீ இந்த மனிதருடன் போய் என்ன செய்வாய், என் கண்ணே?"
"போய் என் பெரிய தகப்பனாருடன் சண்டை பிடிப்பேன்."
"என்னவென்று சண்டை பிடிப்பாய்? உன் பேச்சை அவர் கேட்டுச் சண்டையை நிறுத்தி விடுவாரா?"
"சண்டையை நிறுத்தினால் நிறுத்தட்டும்; நிறுத்தாவிட்டால் எப்படியாவது நாசமாகப் போகட்டும். என் பெயரை இதில் இழுக்க வேண்டாம் என்று வற்புறுத்துவேன்."
"உன் பெயரை இழுக்கிறார்களா? அது எதற்காக?"
"சற்று முன் இந்த வீர வைஷ்ணவர் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா, அக்கா?" என்று வானதி கூறி வெட்கத்தினால் தலை குனிந்தாள்.
"உன்னைப் பற்றி யார் என்ன சொன்னார்கள்? திருமலை! நீ இந்தப் பெண்ணைப்பற்றி என்ன சொன்னாய்?"
"இவரைப் பொன்னியின் செல்வருக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று சேனாதிபதி வற்புறுத்துவதைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? அதைக் குறிப்பிடுகிறார் போலிருக்கிறது!"
"வானதி! அதில் என்ன உனக்கு ஆட்சேபம்? பொன்னியின் செல்வனை மணந்து கொள்வதற்கு உனக்குப் பிரியம் இல்லையா?"
"பிரியம் இருக்கிறதோ, இல்லையோ. அதைப்பற்றி இப்போது என்ன பேச்சு? கல்யாணத்தையும், பட்டங்கட்டுவதையும் என் பேரில் தந்தை சேர்த்துப் பிரஸ்தாபிப்பதைத்தான், நான் ஆட்சேபிக்கிறேன். என்னைச் சோழ சிம்மாசனத்தில் ஏற்றுவிப்பதற்காகவே என் பெரிய தந்தை இந்தச் சண்டையை ஆரம்பிக்கிறார் என்றல்லவா ஏற்படுகிறது?..."
இச்சமயத்தில் ஒரு பெண்ணின் குரல், "கொடும்பாளூர் இளவரசிக்குச் சிம்மாசனம் ஏறுவது என்றாலே ரொம்ப வெறுப்புப் போலிருக்கிறது!" என்று கூறியதைக் கேட்டு எல்லாரும் அக்குரல் வந்த இடத்தைப் பார்த்தார்கள். அங்கே ஓடக்காரப் பெண் பூங்குழலி நின்று கொண்டிருந்தாள்.
குந்தவை அவளை வியப்புடன் பார்த்து, "பெண்ணே! நீ எப்படி இங்கே வந்தாய்? இன்று காலை உன்னையும், ஈழத்து ராணியையும் காணாமல் நாங்கள் தேடி அலைந்தோமே? உன் அத்தை எங்கே?" என்று கேட்டாள்.
"தேவி! மன்னிக்க வேண்டும்! என் அத்தை என்னைப் பலவந்தமாகப் பழுவூர் அரண்மனையின் சுரங்க வழியாகப் பிடித்து இழுத்துக் கொண்டுவந்து கோட்டைக்கு வெளியே அனுப்பி விட்டாள். நான் தஞ்சை அரண்மனையில் ஒருநாள் இருப்பது கூட என் அத்தைக்குப் பிடிக்கவில்லை! எனக்கும் அரண்மனை வாழ்வு பிடிக்கவில்லைதான்! கொடும்பாளூர் இளவரசிக்குச் சிம்மாசனமே வெறுத்துப் போயிருக்கும்போது, என்னைப் போன்றவர்களுக்கு அரண்மனையில் வசிக்க எப்படிப் பிடிக்கும்?" என்றாள் பூங்குழலி.
"பெண்ணே! எதையோ கேட்டால், எதையோ சொல்லுகிறாயே? உன் சித்தம் சரியான நிலையில் இல்லை போலிருக்கிறதே?" என்றாள் குந்தவை.
"அக்கா! அவள் சித்தம் சரியாகத்தான் இருக்கிறது. என்னைக் கேவலப்படுத்துவதற்காக வேண்டுமென்று இப்படிப் பேசுகிறாள். நான் சோழநாட்டின் சிம்மாதனம் ஏறி மகாராணி ஆகவேண்டும் என்ற ஆசை கொண்டிருக்கிறேனாம்! அதற்காகத் தான் தங்கள் தம்பியை - பொன்னியின் செல்வரை - மணக்க விரும்புகிறேனாம்! இவளுடைய மனசு எனக்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது" என்றாள் வானதி.
"பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழி பொய்யாகப் போகுமா?" என்றாள் பூங்குழலி.
"பெண்களே! நிறுத்துங்கள்! எந்தச் சமயத்தில் என்ன பேசுவது என்றே உங்களுக்குத் தெரியவில்லை. பூங்குழலி! உன் அத்தை இப்போது எங்கே இருக்கிறாள்?" என்று குந்தவை கேட்டாள்.
"பழுவூர் மாளிகையைச் சேர்ந்த பொக்கிஷ நிலவறையில் இருக்கிறாள்..."
"எதற்காக?"
"அங்கே ஒரு கொலைகாரன் கையில் வேலுடன் ஒளிந்து கொண்டிருக்கிறான். ஆகா! அவனை நாங்கள் இருவரும் இன்று அதிகாலையில் படுத்தி வைத்த பாட்டை நினைத்தால்! எங்கள் இருவரையும் இரண்டு பெண் பேய்கள் என்று நினைத்துக் கொண்டு அவன் மிரண்டு போய் அங்குமிங்கும் ஓடியதை எண்ணினால்...!" என்று கூறிவிட்டுப் பூங்குழலி கலகலவென்று சிரித்தாள்.
இந்தப் பெண்ணுக்குச் சித்தப் பிரமைதான் என்று குந்தவை மனதில் எண்ணிக்கொண்டு, "அப்புறம் சொல்! அவன் யார்? எதற்காக ஒளிந்திருக்கிறான்? உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது, தேவி! என் அத்தைக்கு வாய் பேச முடியவிட்டாலும் காது கேளாவிட்டாலும், நமக்கெல்லாம் தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் அதிசயமான சக்தி உண்டு. அரண்மனையில் உள்ள யாரோ ஒருவரைக் கொல்லுவதற்காக அவன் அங்கே காத்திருக்கிறான் என்று எப்படியோ அறிந்து கொண்டாள். தேவி! பத்துத் தலை இராவணேசுவரனுடைய கைகளை உடைப்பதற்கு என் அத்தைப் பிரயத்தனப்பட்டாளே? அது எதற்கு என்று தெரியுமா?"
"தெரியாது; உனக்குத் தெரிந்தால் உடனே சொல்லு!"
"என் அத்தை இராவணன் கரங்களைத் தகர்க்க முயன்றதைப் பார்த்தபோது நீங்கள் எல்லாரும் அவளைப் பிச்சி - பைத்தியக்காரி என்று நினைத்தீர்கள். ஆனால் என் அத்தை பிச்சி அல்ல. அந்த இராவணன் கைகளுக்கு மத்தியிலேதான் பழுவேட்டரையரின் நிலவறைப் பொக்கிஷத்துக்குப் போகும் சுரங்கப்பாதை இருக்கிறது."
"ஆகா! அப்படியா?" என்று குந்தவை அதிசயித்தாள்.
"ஈழத்து ஊமை ராணி சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு எப்படி வந்தாள் என்பதும் தெரிகிறது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"இத்தனை நாளும் அரண்மனையிலிருந்த நமக்கு அப்படி ஒரு சுரங்க வழி இருப்பது தெரியாமற் போயிற்றே? இருக்கட்டும், நீ ஏன் உடனே அரண்மனைக்கு வந்து எங்களிடம் இதையெல்லாம் சொல்லவில்லை? உன் அத்தையைத் தனியாக விட்டுவிட்டு ஏன் வந்துவிட்டாய்?" என்றாள் இளையபிராட்டி.
"அத்தையின் பிடிவாதந்தான் காரணம். அங்கே ஒளிந்திருப்பவனைத் தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி என்னை வெளியே அனுப்பிவிட்டாள்!"
"ஏன்? ஏன்? அதைவிட முக்கியமான காரியம். எதற்காகவாவது உன்னை அனுப்பினாளா?"
"ஆம், அம்மணி!"
"அது என்ன பெண்ணே?"
"பொன்னியின் செல்வருக்கும் ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று என்னுடைய அத்தை தன் அதிசய சக்தியினால் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் இருக்குமிடத்துக்குப் போகும்படி என்னை அனுப்பினாள்!"
"ஆகா! பொன்னியின் செல்வன் இருக்குமிடத்தை தேடித் தான் நீ போய்க்கொண்டிருந்தாயா? அப்படியானால் ஏன் நின்று விட்டாய்?"
"இல்லை, தேவி! உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அரண்மனைக் காரியங்களில் இனிமேல் தலையிடுவதில்லையென்று தீர்மானித்து விட்டேன். கோடிக்கரைக்குப் போய்க் கொண்டிருந்தேன்; வழியில் இந்த வீர வைஷ்ணவன் என்னைச் சந்தித்து இங்கே அழைத்துக் கொண்டு வந்தான்!... நீங்கள் இருப்பது தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்!"
"பெண்ணே! அரண்மனை உனக்கு ஏன் அவ்வளவு வெறுத்துப் போய்விட்டது? எங்களை ஏன் பிடிக்காமல் போய் விட்டது? உன்னை யார் என்ன செய்துவிட்டார்கள்?" என்று இளையபிராட்டி குந்தவை கேட்டாள்.
"என்னை யாரும் எதுவும் செய்துவிடவில்லை. யார் பேரிலும் எனக்குக் குறையும் இல்லை. சில பேருக்குச் சிம்மாதனம் பிடிக்காமலிருப்பதுபோல் எனக்கும் அரண்மனை வாழ்வு பிடிக்கவில்லை, அவ்வளவுதான்!" என்று பூங்குழலி கூறிவிட்டு, வானதியைக் கடைக் கண்ணால் பார்த்து நகைத்தாள்.
அதைக் கவனித்து வானதி ஆவேசம் வந்தவள் போல் ஓர் அடி முன்னால் வந்து கூறினாள்:- "அக்கா! இவள் மறுபடியும் என்னைத் தான் ஏசிக் காட்டுகிறாள். நான் சொல்கிறேன்; கேளுங்கள், தங்கள் திருப்பாதங்களின்மீது ஆணையாகச் சொல்கிறேன். ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாகச் சபதம் செய்கிறேன். பொன்னியின் செல்வர் இந்தக் கண்டத்திலும் தப்பிப் பிழைத்தாரானால், அவர் மனமுவந்து என்னைக் கரம் பிடித்து மணந்து கொண்டாரானால், அத்தகைய பெரும் பேறு எனக்குக் கிடைத்ததானால், தஞ்சை அரண்மனைச் சிம்மாதனத்தில் நான் ஒருநாளும் உட்காரவே மாட்டேன் இது சத்தியம்! சத்தியம்!"