←அத்தியாயம் 21: உயிர் ஊசலாடியது!

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: மகிழ்ச்சியும், துயரமும்

அத்தியாயம் 23: படைகள் வந்தன!→

 

 

 

 

 


520பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: மகிழ்ச்சியும், துயரமும்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 22[தொகு]
மகிழ்ச்சியும், துயரமும்


வானதியின் சிரிப்பொலியுடன் கலந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, இளவரசரும் சிரித்துக்கொண்டே யானையின் மேலிருந்து கீழிறங்கினார். 
"ஆகா! யானை ஏற்றம் என்பது மிகவும் கடினமான காரியம். இராஜ்ய சிம்மாசனத்தில் ஏறுவது போலத்தான். யானை மேல் ஏறுவதும் கஷ்டம்; அதன்மேல் உட்கார்ந்திருப்பதும் கஷ்டம்! யானை மேலிருந்து இறங்குவது எல்லாவற்றையும் விடக் கஷ்டம். ஆயினும், அந்தக் கஷ்டங்களையும் சில சமயம் ஒருவன் அநுபவிக்க வேண்டியிருக்கிறது!" என்றார் பொன்னியின் செல்வர். 
"சிலர் அந்தக் கஷ்டத்தை மிக அற்பமான காரணங்களுக்காகக்கூட அநுபவிக்கிறார்கள். பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக யானை மேல் ஏறிக்கொண்டு ஓடி வருகிறவர்களும் உண்டு!" என்றாள் வானதி. 
"அந்தச் சம்பவம் உனக்கு இன்னும் நினைவு இருக்கிறதா, வானதி! நீ அதைப்பற்றி இன்று வரை பேச்சே எடுக்காததினால் மறந்துவிட்டாயோ என்று எண்ணினேன்!" என்றார் இளவரசர். 
"உலகமெல்லாம் சுற்றி அலைந்து அநேக வீரச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மறந்துவிடுவார்கள். அரண்மனையிலேயே இருக்கும் பேதைப் பெண்ணுக்கு அதை ஞாபகம் வைத்துக்கொள்வதைவிட வேறு என்ன வேலை? தாங்கள் அன்றைக்கு யானை மேல் ஏறிக்கொண்டு வந்ததும் நினைவிலிருக்கிறது; நான் கொடும்பாளூர்ப் பெண் என்று சொன்னதும் தாங்கள் முகத்தைச் சுருக்கிக்கொண்டு திரும்பிப் போனதும் நினைவில் இருக்கிறது!" 
"அதற்கு அப்போது காரணம் இருந்தது, வானதி!" 
"அந்தக் காரணம் இப்போதும் இருக்கிறது, ஐயா! தாங்கள் உலகமாளும் சக்கரவர்த்தியின் புதல்வர்; சோழவளநாட்டின் கண்ணின் மணி போன்ற பொன்னியின் செல்வர். நானோ பொட்டைக் காட்டுப் பிராந்தியத்தில் பிறந்து வளர்ந்தவள். சிற்றரசர் குலமகள்; அதிலும், போரில் இறந்து போனவருடைய அநாதை மகள்!..." 
"வானதி! நீ எனக்கு அநீதி செய்கிறாய்! நியாயம் அற்ற வார்த்தை கூறுகிறாய்! போனால் போகட்டும்! நான் தஞ்சைக்கு அவசரமாகப் போகவேண்டும்! சீக்கிரம் சொல்! நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்? தனியாக ஏன் வந்தாய்? ஓட்டுக் கூரை மேல் மிதந்து வந்தாயாமே? இந்தப் பெண் இங்கே எதற்காக வந்தாள்? எப்படி இத்தகைய பிராணாபத்தில் சிக்கிக்கொண்டாள்?..." 
"நான் ஒருத்தி இங்கே நின்று கொண்டிருப்பது தங்களுக்கு ஞாபகம் வந்ததுபற்றிச் சந்தோஷம். ஒரு நிமிஷம் தனியாகப் பேச அவகாசம் கொடுத்தால், நான் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டுப் போயே போய்விடுவேன்!" என்றாள் பூங்குழலி. 
அந்த இரண்டு பெண்களும் அச்சமயம் இளவரசரின் முன்னால் நேருக்கு நேர் நின்றபோது, எப்படியோ அவர்களுக்கு அசாதாரண தைரியமும், வாசாலகமும் ஏற்பட்டிருந்தன. 
"சமுத்திரகுமாரி! உன்னை மறந்துவிட்டேன் என்றா நினைத்தாய்? அது எப்படி முடியும்? நீதான் நான் கூப்பிடக் கூப்பிட, நின்றுகூடப் பதில் சொல்லாமல் படகைச் செலுத்திக் கொண்டு வந்தாய்! அப்படி அவசரமாக வந்தவள் மரக்கிளைக்கும், முதலையின் திறந்த வாய்க்கும் நடுவில் நின்று ஊஞ்சலாடிக்கொண்டிருந்ததை என் ஆயுள் உள்ளளவும் மறக்க முடியாது!" என்று சொல்லிவிட்டு இளவரசர் சிரித்தார். 
"உன்னைத் தூக்கமுடியாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டு வானதி பட்டுக்கொண்டிருந்த அவஸ்தையையும் நான் மறக்க முடியாது. ஆனால் நீங்கள் இருவரும் இங்கே எப்படி வந்து சேர்ந்தீர்கள்? எதற்காக? யாராவது ஒருவர் சீக்கிரம் சொல்லுங்கள்!" 
"பொன்னியின் செல்வ! தானும் தங்கள் திருத்தமக்கை யாரும் தங்களை வழியில் கண்டு நிறுத்தித் தஞ்சாவூருக்குப் போவதைத் தடை செய்வதற்காக வந்தோம். தாங்கள் தற்சமயம் தஞ்சாவூர் வந்தால், அங்கே பெரிய யுத்தம் மூளும் என்று இளையபிராட்டி அஞ்சுகிறார். அதற்கு முன்னால் சந்தித்துப் பேச விரும்புகிறார்..." 
"இளையபிராட்டி இப்போது எங்கே?" 
"குடந்தையில் இருக்கிறார்..." 
"நீ மட்டும் எப்படி இங்கே வந்தாய்?" 
"வழியில் குடந்தை ஜோதிடர் வீட்டில் நானும் இளைய பிராட்டியும் சிறிது நேரம் தங்கினோம். அந்தச் சமயத்தில் காவேரி கரையை உடைத்துக்கொண்டு வந்து, ஜோதிடர் வீட்டையே அடித்துக்கொண்டு வந்து விட்டது. இளவரசே! காவேரித் தாய் தங்களைக் குழந்தைப் பிராயத்தில் காப்பாற்றியதாகச் சொல்கிறார்கள். தங்களுக்கு இந்தப் பொன்னி நதியின் பேரில் எவ்வளவோ ஆசை உண்டு என்பதையும் அறிவேன். ஆனால் இன்று இந்த நதியினால் நாடு நகரங்களும், மக்கள் மிருகங்களும் பட்ட கஷ்டத்தை நினைப்பதற்கே பயங்கரமாயிருக்கிறது. காவேரித் தாய் மிகக் கொடுமையானவள் என்று சொல்லத் தோன்றுகிறது..." 
"வானதி! காவேரி அன்னையின் பேரில் அப்படிப் பழி சொல்லாதே! இந்த மாதரசிக்கு எங்கள் சோழ நாட்டின்பேரில் அவ்வளவு ஆசை. அந்த ஆசை வரம்பு மீறிப் போகும்போது கரையை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறாள். இதை அறியாதவர்கள் அன்னையின் பேரில் வீண்பழி சொல்லுகிறார்கள்! ஏன்! கரையை மீறிக்கொண்டு வருவதற்காக சமுத்திரராஜன் பேரில்கூடச் சிலர் குறை சொல்கிறார்கள். ஆனால் பூங்குழலி அப்படிக் கடலரசன் பேரில் குறை சொல்ல மாட்டாள்!" என்றார் இளவரசர். 
"மன்னியுங்கள்! நானும் இனிக் காவேரி அன்னையின் பேரில் குற்றம் சொல்லவில்லை. நானும், தங்கள் தமக்கையும் குடந்தை ஜோதிடர் வீட்டில் இருந்தபோது திடீரென்று காவேரியின் ஆசை பொங்கிப் பெருகிவிட்டது. தங்கள் தமக்கை முதலியவர்கள் ஓடிப்போய்க் கோவில் மண்டபத்தின் பேரில் ஏறிக்கொண்டார்கள். நான் என் அசட்டுத் தனத்தினால் மண்டபத்தின் பேரில் ஏறத் தவறிவிட்டேன். ஜோதிடர் வீட்டு ஓட்டுக் கூரையைப் பிடித்துக்கொண்டு மிதந்து வந்தேன்..." 
"உன்னைக் காப்பாற்றுவதற்காகப் பூங்குழலி படகில் ஏறிக்கொண்டு வந்தாளாக்கும். அழகாய்த்தானிருக்கிறது! உங்கள் இருவரையும் சேர்த்து இந்தக் கஜேந்திரன் காப்பாற்ற வேண்டியதாயிற்று. இந்த யானையின் அறிவே அறிவு! உங்கள் இருவரையும் அதன் துதிக்கையால் பூமாலையை எடுப்பதுபோல் அசங்காமல் கசங்காமல் எடுத்துச் சற்றுமுன் கரையில் விட்டது! இன்று காலையில் இதே யானை கையில் அங்குசத்துடன் நேரங்கழித்து ஓடிவந்த யானைப்பாகனைத் தூக்கிச் சுழற்றி வெகுதூரத்தில் போய் விழும்படி எறிந்தது! அவன் உயிர் பிழைத்திருப்பதே துர்லபம்!" 
"ஐயோ! அது என்ன? நானே தங்களிடத்தில் அதைப் பற்றிக் கேட்கவேண்டும் என்றிருந்தேன்..." 
"என்னை நீ என்ன கேட்கவேண்டுமென்றிருந்தாய்?" 
"யானைப்பாகனாலும், அங்குசத்தினாலும் தங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்ததோ என்று கேட்க விரும்பினேன்." 
"தீங்கு நேர இருந்தது என்பது உண்மைதான்; அது உனக்கு எப்படித் தெரிந்தது? ஜோதிடர் சொன்னாரா, என்ன? அந்தப் பித்து இளையபிராட்டிக்கு இன்னும் போக வில்லையா?" 
"ஜோதிடர் சொல்லவில்லை! சொன்னாலும் நாங்கள் நம்பியிருக்க மாட்டோ ம், பெரிய பழுவேட்டரையர் சொன்னார்!" 
"என்ன? என்ன? யார் சொன்னார்?" 
"ஆம், இளவரசே! தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர் தான் சொன்னார். நாங்கள் ஜோதிடர் வீட்டில் இருந்தபோது திடும்பிரவேசமாக அவர் உள்ளே நுழைந்து வந்தார். தங்களுக்கு வரக்கூடிய ஆபத்தைப்பற்றிச் சொன்னார். விஷந்தடவிய அங்குசத்தைப் பற்றியும் சொன்னார்...!" 
"ஆகா! இது பெரிய அதிசயந்தான்! அவருக்கு எவ்விதம் தெரிந்தது? அவரும் ஜோதிடர் ஆகிவிட்டாரா? அல்லது ஒருவேளை.... எல்லாரும் சொல்லுவதுபோல் அவரே இந்த ஏற்பாடு செய்தாரா?" 
"இல்லை இளவரசே! அவர் செய்த ஏற்பாடல்ல. பாண்டிய நாட்டுச் சதிகாரர்கள் இரகசியமாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்டதினால் அறிந்து கொண்டாராம்...!" 
"ஓகோ! இன்னும் ஏதாவது அவர் சொன்னாரா?" 
"நினைப்பதற்கும் சொல்வதற்கும் பயங்கரமாயிருக்கிறது. தங்களையும், தங்கள் தந்தையையும், மூத்த இளவரசரான ஆதித்த கரிகாலரையும் ஒரே நாளில் யமனுலகம் அனுப்ப அந்தச் சதிகாரர்கள் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். அவர் ஆதித்த கரிகாலரைக் காப்பாற்றுவதற்காகக் கடம்பூருக்கும் விரைந்து போய்விட்டார். தங்களுக்கும் சக்கரவர்த்திக்கும் இளையபிராட்டி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதாகச் சொல்லிவிட்டுப் போனார்..." 
"ஆகா! அவருடைய எச்சரிக்கை என் ஒருவன் விஷயத்தில் உண்மையாயிருந்தபடியால் மற்றவர்கள் விஷயத்திலும் உண்மையாகத் தானிருக்கவேண்டும்! சமுத்திரகுமாரி! நீ ஏதோ சொல்லவேண்டும் என்றாயே?" 
"ஆம், இளவரசே! ஈழத்து ஊமைராணி தங்களை உடனே தஞ்சைக்கு அழைத்து வரும்படி என்னை அனுப்பி வைத்தார்..." 
"ஆகா! அதைப்பற்றி உன்னிடம் கேட்க மறந்தே போனேன். ஈழத்து ராணிக்காகவே நான் இவ்வளவு அவசரமாகப் புறப்பட்டு வந்தேன். அவரைத் தஞ்சாவூருக்கு யாரோ பலவந்தமாகக் கட்டி இழுந்து வந்தார்களாமே? அது உண்மையா?" 
"உண்மைதான், ஐயா! ஆனால் முதன் மந்திரி அநிருத்தர் நல்ல நோக்கத்துடனேதான் அவ்விதம் செய்தார்..." 
"ஓகோ! அநிருத்தர் வேலையா? என் தந்தையிடம் சேர்ப்பிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்க வேண்டும். பூங்குழலி! முதன் மந்திரியின் நோக்கம் வெற்றி பெற்றதா? அவர்கள் - சக்கரவர்த்தியும் ஈழத்து ராணியும்... சந்தித்தார்களா?" 
"ஆம், சந்தித்தார்கள்!" 
"என் வாழ்க்கை மனோரதம் நிறைவேறிவிட்டது. இதைக் காட்டிலும் சந்தோஷமான செய்தி எனக்கு வேறு எதும் இல்லை. என் பெரியன்னை அருகில் இருக்கும் வரையில் என் தந்தையின் உயிருக்கு அபாயமும் இல்லை. அந்த மாதரசிக்கு அபூர்வமான வருங்கால திருஷ்டி உண்டு என்பது உனக்குத் தெரியுமே, பூங்குழலி!" 
"ஆம், எனக்கு அது தெரியும்! ஈழத்து ராணி இருக்கும் வரையில் சக்கரவர்த்திக்கு அபாயம் இல்லை. ஆனால்...!" 
"ஆனால் என்ன? ஏன் தயங்கி நிற்கிறாய் சமுத்திரகுமாரி!" 
"சொல்லத் தயக்கமாகவேயிருக்கிறது, நா எழவில்லை. ஈழத்து ராணி தம்முடைய இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாக எண்ணுகிறார். கடைசியாகக் கண் மூடுவதற்கு முன்னால் தங்களை ஒருமுறை பார்க்க விரும்புகிறார்!" என்றாள். 
"தெய்வமே! இது என்ன சொல்லுகிறாய்? சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிட்டு, உடனே இந்தப் பேரிடி போன்ற செய்தியையும் சொல்லுகிறாயே! இனி நான் ஒரு கணமும் தாமதிப்பதற்கில்லை, வானதி! இளையபிராட்டியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்லு!" என்றார் இளவரசர் அருள்மொழிவர்மர்.

 

 

 

Comments
அனித்தா முத்துகுமார்

very easy to read and use the app.

Please join our telegram group for more such stories and updates.telegram channel

Books related to பொன்னியின் செல்வன்


संत तुकाराम अभंग - संग्रह २
चंद्रकांता
रामचरितमानस
भारताचा शोध
वाचनस्तु
The Voyages and Adventures of Captain Hatteras
श्रीनारदपुराण - पूर्वभाग