←அத்தியாயம் 41: பாயுதே தீ!

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: மலையமான் துயரம்

அத்தியாயம் 43: மீண்டும் கொள்ளிடக்கரை→

 

 

 

 

 


541பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: மலையமான் துயரம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 42[தொகு]
மலையமான் துயரம்


சம்புவரையர் முன் கட்டுக்கு வந்ததும் கந்தமாறனைத் தனியாக அழைத்து, "மகனே! நம் குலத்துக்கு என்றும் நேராத ஆபத்து இன்று நேர்ந்திருக்கிறது. அதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால் நான் சொல்வதை உடனே நீ தடை செய்யாமல் நிறைவேற்ற வேண்டும்" என்று கூறினார். 
கரிகாலருடைய மரணம் கந்தமாறனைப் பெரிதும் கலங்கச் செய்திருந்தது. தான் வந்தியத்தேவனைக் கொல்ல நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். "தந்தையே! மூடனாகிய என்னாலேதான் நம் குலத்துக்கு இந்த ஆபத்து நேர்ந்திருக்கிறது. அதற்காக என்னை மன்னியுங்கள். தாங்கள் என்ன கட்டளையிட்டாலும் அதை நிறைவேற்றி வைக்கிறேன்" என்றான். 
"நீ உடனே ஒருவருக்கும் தெரியாமல் இந்த மாளிகையை விட்டு வெளியேற வேண்டும். நான் படுக்கும் அறையில் கட்டிலுக்கு அடியிலிருந்து சுரங்கப்பாதை ஒன்று போகிறது உனக்குத் தெரியும் அல்லவா? அது வேட்டை மண்டபத்திலிருந்து போகும் சுரங்கப்பாதையில் இம்மாளிகையின் மதில் சுவரண்டை போய்ச் சேருகிறது..." 
"தந்தையே! இந்த இக்கட்டான நிலைமையில் தங்களைத் தனியே விட்டுவிட்டு என்னைச் சுரங்க வழியில் தப்பித்துப் போகச் சொல்கிறீர்களா?" என்றான் கந்தமாறன். 
"பிள்ளாய்! அதற்குள் உன் வாக்குறுதியை மறந்து பேசுகிறாயே? ஆம்; நீ போகத்தான் வேண்டும். கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரியின் வம்சத்துக்கு இப்போது நீ ஒருவன்தான் இருக்கிறாய். அவசியமாயிருந்தால், நீ அந்த மலைக்கே போய் மறைந்து வாழவேண்டும். மதுராந்தகத் தேவருக்குப் பட்டங்கட்டுவது என்று நிச்சயமாகி, நான் உனக்குச் செய்தி அனுப்பிய பிறகுதான் திரும்பி வரவேண்டும்!" என்றார் சம்புவரையர். 
"மன்னிக்க வேண்டும், தந்தையே! மறைந்து வாழ்வது என்னால் இயலாத காரியம். வல்வில் ஓரியின் குலத்துக்கு அத்தகைய கோழையைப் பெற்ற அபகீர்த்தி வேறு வர வேண்டுமா? இந்தக் கணமே என்னுடைய இன்னுயிரைக் கொடுக்கச் சொன்னீர்களானால் கொடுக்கிறேன். ஆனால் ஒளிந்து வாழ ஒருப்படேன்!" என்றான் கந்தமாறன். 
சம்புவரையர் சிறிது யோசனை செய்துவிட்டு, "மகனே! உன்னைச் சோதனை செய்வதற்காகக் கூறினேன். ஓடித் தப்பித்துக் கொள்ளவும், மறைந்து வாழவும் நீ இஷ்டப்படவில்லை. நல்லது. உயிருக்கு ஆபத்து நேரக்கூடிய வீரச்செயலிலேதான் உன்னை நான் ஏவப்போகிறேன், சுரங்கப் பாதை வழியாக உடனே வெளியேறிச் செல்! ஆனால் கொல்லி மலைக்குப் போகவேண்டாம்! நேரே தஞ்சாவூருக்குப் போ! பெரிய பழுவேட்டரையர் அநேகமாக அங்கே இருக்கலாம். இருந்தால் அவரிடம் இங்கே நடந்ததைச் சொல்லு! அவர் இல்லாவிட்டால், சின்னப் பழுவேட்டரையரிடமும் மதுராந்தகத் தேவரிடமும் சொல்லு..." 
"ஐயா! இங்கே என்ன நடந்தது என்று அவர்களிடம் சொல்லட்டும்!" 
"இது என்ன கேள்வி? கரிகாலரின் மரணத்தைப் பற்றிச் சொல்லு! 'நாம் உத்தேசித்திருந்த காரியம் விதிவசத்தினால் வேறு விதமாக நடந்துவிட்டது; கரிகாலர் மாண்டு விட்டார்! மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட இதுதான் தக்க சமயம்' என்று அவர்களுக்குத் தெரியப்படுத்து! 'மலையமானும், கொடும்பாளூர் வேளானும் அதற்குக் குறுக்கே நிற்பார்கள். நமது பலத்தையெல்லாம் உடனே திரட்டி அந்த இரண்டு பேரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்' என்று கூறு!" என்றார் சம்புவரையர். 
"கரிகாலர் எப்படி மரணமடைந்தார் என்று அவர்கள் கேட்டால் என்ன சொல்லட்டும்?" என்றான் கந்தமாறன். 
"வேறு என்ன சொல்கிறது? வாணர் குலத்தைச் சேர்ந்த வந்தியத்தேவன் அவரைக் கொலை செய்துவிட்டான் என்று கூறு! இன்னும் ஒரு முக்கியமான விஷயம். இதை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்! வந்தியத்தேவன் ஈழ நாட்டுக்குப் போய்த் திரும்பி வந்திருக்கிறான். அங்கே அருள்மொழித் தேவனையும் பிறகு பழையாறையில் இளைய பிராட்டியையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறான். அருள்மொழித்தேவன் நாகைப்பட்டினத்தில் மறைந்திருந்து இப்போது வெளிப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அருள்மொழித்தேவன் சிங்காதனம் ஏறும் ஆசையினால் அண்ணனைக் கொல்லுவதற்கு வந்தியத்தேவனை அனுப்பி வைத்தான் என்ற வதந்தியைச் சோழ நாட்டில் பரப்ப வேண்டும். பழையாறை இளைய பிராட்டியும் இதற்கு உடந்தையென்ற சந்தேகத்தையும் உண்டு பண்ண வேண்டும். இதையெல்லாம் பழுவேட்டரையர்களிடமும் மதுராந்தகத் தேவரிடமும் சொல்லு!... 
"தந்தையே தாங்கள் சொல்வதே உண்மையாகவும் இருக்கலாம் அல்லவா? சிநேகத் துரோகியான வந்தியத்தேவன் அத்தகைய பயங்கரமான எண்ணத்துடனேயே இந்த மாளிகைக்கு வந்திருக்கலாம் அல்லவா?" 
"இருக்கலாம், மகனே! ஆனால் பழுவூர் இளைய ராணி திடீரென்று மாயமாய் மறைந்து போனதற்குக் காரணம் கண்டுபிடிக்கவேண்டுமே? அவள் பேரிலும், அவளுக்கு உடந்தையாயிருந்த பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளின் பேரிலும் வல்லவரையன் வந்தியத்தேவன் குற்றம் சாட்டுகிறானே!..." 
"குற்றம் செய்தவன் மற்றவர்கள் பேரில் அதைச் சுமத்தவே பார்ப்பான். இப்போது எனக்கு எல்லாம் விளங்குகிறது. தந்தையே! பழுவூர் இளைய ராணியைப் பழையாறைக் குந்தவை தேவிக்கு எப்போதும் பிடிப்பதேயில்லை. கரிகாலரைக் கொன்றுவிட்டு அதே சமயத்தில் பழுவூர் இளைய ராணியை அபகரித்துக்கொண்டு போவதற்கும் அவள்தான் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். முதன் மந்திரி அநிருத்தரும் இதற்கு உடந்தை போலிருக்கிறது. அதற்காகவே இந்த வந்தியத்தேவனை அவர்கள் அனுப்பியிருக்கிறார்கள்! ஐயோ! அவர்களுடைய சூழ்ச்சியை அறியாமல் மோசம் போய் விட்டோ மே?" 
"கந்தமாறா! போனதைப் பற்றி வருந்துவதில் பயனில்லை. இனி மேல் நடக்க வேண்டியதைப் பார்க்கவேண்டும். நீ உடனே புறப்பட்டுச் செல்! கரிகாலன் மரணச் செய்தி சுந்தர சோழருக்குப் போய்ச் சேர்வதற்கு முன்னால், தஞ்சையில் வேறு யாருக்கும் தெரிவதற்கு முன்னால் பழுவேட்டரையர்களுக்கும், மதுராந்தகருக்கும் தெரியவேண்டும். ஆகையால் நீ விரைந்து செல்! தஞ்சைக் கோட்டைக்குள் போவதற்கும் இரகசியச் சுரங்க வழி உண்டு என்பது உனக்குத் தெரியும் அல்லவா!..." 
"தெரியும், தெரியும்!" 
"அப்படியானால் உடனே புறப்படு!" 
"புறப்படுகிறேன், தந்தையே! என் தங்கை மணிமேகலை... அவளைப் பற்றித்தான் சிறிது கவலையாயிருக்கிறது." 
"வேண்டாம் உனக்கு அந்தக் கவலை! நம்மிடம் அவள் உளறியது போல் வேறு யாரிடமும் உளறுவதற்கு நான் விடமாட்டேன். அப்படி அவள் உளற முற்பட்டால், அவளை என் கையினாலேயே கொன்று விடுவேன்..." 
"ஐயோ அதற்காகத்தான் கவலைப்படுகிறேன். தங்கள் கோபத்தை எண்ணித்தான் பயப்படுகிறேன்..." 
"வேண்டாம்! அவளுடைய மனத்தை மாற்றும் வழி எனக்குத் தெரியும்! ஆகா! விதி விசித்திரமானதுதான்! முதலில் அவளை நாம் மதுராந்தகத் தேவருக்கு மணம் செய்து கொடுப்பது என்று எண்ணினோம். இடையில் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு கரிகாலருக்கு மணம் செய்து கொடுக்க உத்தேசித்தோம். கரிகாலர் இன்று பிணமாகக் கிடக்கிறார். நல்லவேளை, மணிமேகலையின் உள்ளம் அவரிடம் சொல்லவில்லை. நமது பழைய உத்தேசத்தையே நிறைவேற்ற வேண்டியதுதான்..." 
"ஆனால் தந்தையே! மணிமேகலையின் உள்ளம் இப்போது அந்தச் சண்டாளன் வந்தியத்தேவன் பேரில் அல்லவா போயிருப்பதாகத் தெரிகிறது." 
"அதெல்லாம் ஒன்றுமில்லை மகனே! மணிமேகலைக்குத் தன் மனத்தைத் தான் அறியும் பிராயமே இன்னும் வரவில்லை. அவளை நான் கவனித்துக்கொள்கிறேன். நீ இனி ஒரு கணமும் இங்கே தாமதிக்க வேண்டாம்!" 
அச்சமயம் மதில் சுவர்களுக்கு வெளியில் வெகு சமீபத்தில் எழுந்த ஆரவாரத்தைக் கேட்ட கந்தமாறன், "அப்பா! இது என்ன! மலையமான் படைகள் நெருங்கி வருவது போல் காண்கிறதே? மலையமானைத் தாங்கள் மாலையில் பார்த்தபோது அந்தக் கிழவன் என்ன சொன்னான்?" என்று கேட்டான். 
"நல்ல மங்களகரமான செய்தியைத்தான் சொன்னான். மணிமேகலையை ஆதித்த கரிகாலருக்கு மணம் செய்து கொடுக்கப் போகும் செய்தி அறிந்து அக்கிழவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தானாம். அதே மணப்பந்தலில் அவனுடைய மகள் வயிற்றுப் பேத்தி ஒருத்தியையும் மணஞ்செய்து கொடுக்கலாம் என்று அழைத்து வந்திருக்கிறானாம்! அழகாயிருக்கிறதல்லவா? மாளிகைக்கு வரும்படி நான் அழைத்ததற்கு, நாளைப் பொழுது விடிந்ததும் நல்ல முகூர்த்தத்தில் வருவதாகச் சொல்லியிருக்கிறான். அவனுடைய வீரர்கள் இப்போதே வரப் போகும் திருமணத்தைக் கொண்டாடுகிறார்கள் போலிருக்கிறது!" இவ்விதம் கூறிவிட்டுச் சம்புவரையர் சிரிக்கப் பார்த்தார். ஆனால் சிரிப்பு அரை குறையாக வந்துவிட்டது. 
"வா! வா! நானே உன்னைச் சுரங்கப் பாதையில் கொண்டு போய் விட்டு விட்டு வருகிறேன். வழியில் ஒரு விநாடிகூட நீ தாமதிக்கக் கூடாது. வழியில் எங்கேயாவது குதிரை சம்பாதித்துக் கொண்டு விரைந்து போக வேண்டும்!" என்றார். 
சம்புவரையர் கையில் ஒரு தீபத்தை எடுத்துக் கொண்டார். இருவரும் சுரங்கப் பாதையில் புகுந்தார்கள். விரைவாக நடந்தார்கள். மாளிகையின் மதில் சுவரைக் கந்தமாறன் கடந்த பிறகு, சம்புவரையர் அவனைக் கட்டித் தழுவி ஆசி கூறிவிட்டுத் திரும்பினார். "விளக்கு வேண்டுமா?" என்று கேட்டதற்குக் கந்தமாறன் "வேண்டாம், அப்பா! எனக்கு இந்த வழி நன்றாய்த் தெரிந்தது தானே? கண்ணைக் கட்டிவிட்டாலும் போய் விடுவேன்!" என்றான். 
அவன் சுரங்கப்பாதையில் கண்ணுக்கு மறைந்த பிறகு சம்புவரையர் திரும்பினார். வழியில் வேட்டை மண்டபத்துக்குள் புகுந்தார். அடுத்த அறையில் ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று காது கொடுத்துக் கேட்டார். ஒன்றும் கேட்கவில்லை. சிலகண நேரம் தயங்கி நின்றார். பிறகு, ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தவர்போல், பெருமூச்சுவிட்டார். விளக்கை நன்றாகத் தூண்டி, வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு விரைந்து திரும்பிச் சென்றார். 
திரும்பச் சம்புவரையர் முன்கட்டுக்குச் சென்றதும், அந்தப்புரத்துப் பெண்களையெல்லாம் ஒன்று சேர்த்தார். அவர்கள் எல்லோரும் ஏற்கனவே கலங்கிப் போயிருந்தார்கள். கண்ணீருங் கம்பலையுமாகக் கந்தமாறனால் அந்தப்புரத்தில் கொண்டுவந்து தள்ளப்பட்ட மணிமேகலையைக் கேட்டு அவர்கள் ஒருவாறு கரிகாலன் மரணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தார்கள். 
"பெண்களே! நம் குலத்துக்கு என்றுமில்லாத பெரும் விபத்து ஏற்பட்டுவிட்டது. எந்த நிமிஷத்திலும் நீங்கள் இந்த மாளிகையை விட்டுப் புறப்படச் சித்தமாயிருக்க வேண்டும். பல தினங்கள் காட்டிலும், மலையிலும் காலங் கழிக்கவும் துணிவு பெறவேண்டும். எல்லாரும் அவரவர்களுடைய ஆடை ஆபரணங்களை எடுத்துக் கொண்டு நிலா முற்றத்துக்கு வந்து சேருங்கள். அழுகைச் சத்தமோ, புலம்பல் சத்தமோ 'முணுக்' என்று கூடக் கேட்கக் கூடாது! தெரியுமா?" என்று எச்சரித்தார். 
"பின்னர் சம்புவரையர், மாளிகையின் முன்வாசற் பக்கம் வந்தார். முன்வாசல் கோபுரத்தின் மேல் ஏறி வெளியிலே என்ன அவ்வளவு ஆரவாரம் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். அதற்கு அவகாசம் கிடைக்கவில்லை. ஏனெனில், அவர் முன் வாசலை நெருங்கும்போதே வெளியிலிருந்து வீரர்கள் கோட்டை வாசற்கதவுகளை தகர்த்துத் தள்ளிவிட்டு உள்ளே தடதடவென்று புகுந்து கொண்டிருந்தார்கள். வாசற் காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்று முடியாமல் கீழே விழுந்து கொண்டிருந்தார்கள். 
இதுவல்லாமல், கோட்டையின் மதில்சுவர் மீது ஏறிக் குதித்தும் வீரர்கள் உள்ளே புகுந்து கொண்டிருந்தார்கள். 
சம்புவரையரின் உள்ளத்தில் பெரும் பீதியும், கலக்கமும் ஏற்பட்டன. கரிகாலன் கொலையுண்ட செய்தி ஒருவேளை மலையமானுக்கும் தெரிந்துவிட்டதா, என்ன? இதற்குள் எவ்விதம் தெரிந்திருக்கும்? - தெரிந்தால் தெரியட்டும். எப்படியும் தெரிந்து தானே தீரவேண்டும்? ஆனால் இன்னும் சிறிது நேரத்துக்கு இவர்களை இங்கேயே நிறுத்தித் தாமதப்படுத்தி வைக்கவேண்டும். அரை நாழிகை நேரம் தாமதித்தால் போதுமானது. அதற்குள் நாம் உத்தேசித்த காரியம் நிறைவேறிவிடும்... 
கோட்டை வாசலுக்கும், மாளிகை முகப்புக்கும் நடுவில் இருந்த நிலா முற்றத்தின் நடுவில் சென்று சம்புவரையர் கம்பீரமாக நின்றார். அவர் கையிலே கூரிய வாள் மின்னியது. அவருக்குப் பின்னால் ஏழெட்டு வீரர்கள் நெடிய வேல்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அவர்களில் சிலர் கையில் தீவர்த்தி வெளிச்சம் வைத்துக் கொண்டிருந்தார்கள். 
வாசற் கதவுகளை உடைத்துத் தகர்த்துக்கொண்டு முன்னால் வந்த வீரர்களைத் தொடர்ந்து திருக்கோவலூர் மலையமானும், பார்த்திபேந்திரனும் வந்தார்கள். 
நிலா முற்றத்தின் நடுவில் நின்ற சம்புவரையரைப் பார்த்து விட்டு பார்த்திபேந்திரன் மலையமானுக்கு அவரைச் சுட்டிக் காட்டினான். இருவரும் சம்புவரையரை நோக்கி வந்தார்கள். 
அருகில் வரும்போதே மலையமான், "சம்புவரையரே! இது என்ன நான் கேள்விப்படுவது? அத்தகைய பாதகத்தையும் செய்வீரா? ஓகோ? இது என்ன? கையில் வாளுடன் நிற்கிறீரே? உமது உத்தேசம் என்ன?" என்று கேட்டுக்கொண்டே வந்தார். 
"அந்தக் கேள்வியை உங்களிடம் கேட்கத்தான் நிற்கிறேன். உங்கள் உத்தேசந்தான் என்ன? வாசற் கதவைத் தகர்த்துக் கொண்டு வந்ததின் நோக்கம் என்ன? சற்று முன்னால் நான் வந்து தங்களை அழைத்தேன். நாளைக்கு நல்ல வேளை பார்த்துக்கொண்டு வருவதாகச் சொன்னீர்கள்..." 
"சம்புவரையரே! நல்லவேளை இப்போதே வந்துவிட்டது; அதனாலேதான் வந்தேன். ஆதித்த கரிகாலன் எங்கே? வீர பாண்டியன் தலைகொண்ட வீராதி வீரன் எங்கே? சேவூர்ப் போர்க்களத்தின் வெற்றி வீரன் எங்கே? என் பேரன் எங்கே?" என்று மலையமான் கேட்டார். 
"என்னைக் கேட்டால், எனக்கு என்ன தெரியும்? இளவரசருக்கு இஷ்டப்பட்ட இடத்தில் அவர் இருப்பார். அந்த முரட்டுப் பிள்ளையிடம் நான் எவ்விதப் பேச்சு வார்த்தையும் வைத்துக் கொள்வதில்லையென்றுதான் முன்னமே தங்களிடம் சொன்னேனே? பார்த்திபேந்திரனுக்கும் அது தெரிந்த செய்திதான்!" 
"அடே சம்புவரையா! இவ்வாறு வீண் சாக்குப் போக்குச் சொல்லி ஏமாற்றப் பார்க்காதே! ஆதித்த கரிகாலனை உடனே கொண்டுவந்து எங்களிடம் ஒப்படைத்துவிடு! இல்லாவிட்டால், உன்னுடைய இந்தக் கோட்டை கொத்தளம் மாளிகை எல்லாவற்றையும் இடித்துத் தகர்ந்து மண்ணோடு மண்ணாக்கி விடுவேன்!" என்று திருக்கோவலூர் மலையமான் கர்ஜித்தார். 
"பார்த்திபேந்திரா? இந்தக் கிழவன் என்ன பிதற்றுகிறான்? இவனுக்குத் திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டதா? இளவரசரைக் கொண்டுவந்து இவனிடம் ஒப்புவிப்பதற்கு நான் யார்? இவன்தான் யார்? இளவரசரை நான் சிறைப்படுத்தி வைத்திருக்கிறேனா? அல்லது இவன் இளவரசரைச் சிறைப்பிடித்துக்கொண்டு போகப் போகிறானா?" என்றார் சம்புவரையர். 
பார்த்திபேந்திரன் சிறிது சாந்தமான குரலில், "சம்புவரையரே! பதறவேண்டாம்! கிழவருக்குக் கோபம் வரக் காரணம் இருக்கிறது. இதோ இந்த ஓலையைப் பாருங்கள். தாங்களே தெரிந்து கொள்வீர்கள்!" என்று கூறிச் சம்புவரையர் கையில் கொடுத்தான். 
அவர் அதைப் பின்னால் பிடிக்கப்பட்ட தீவர்த்தியின் வெளிச்சத்தில் நன்றாக உற்றுப் பார்த்தார். 
"இளவரசர் ஆதித்த கரிகாலன் உயிருக்கு ஆபத்து. உடனே படைகளுடன் வந்து காப்பாற்றவும்" என்று அந்த ஓலையில் எழுதியிருந்தது.
அதைப் படிக்கும்போதே சம்புவரையர் முகமெல்லாம் வியர்த்தது. முன்னர், கரிகாலருடைய சடலத்தைக் கண்டதும் அவருடைய உடல் நடுங்கியது போல், இப்போதும் ஆடி நடுங்கியது. 
"இது என்ன சூழ்ச்சி! இது என்ன சதி? யார் இப்படி ஓலை எழுதியிருக்க முடியும்?" என்று தடுமாறினார். 
"ஓலை யார் எழுதினால் என்ன? ஆதித்த கரிகாலரை உடனே இவ்விடம் அழைத்து வா! அல்லது அவர் இருக்குமிடத்துக்கு எங்களை அழைத்துப் போ! இல்லாவிடில், என் வீரர்களை விட்டுத் தேடச் சொல்லட்டுமா?" என்று கேட்டார் மலையமான். 
"ஆகட்டும், ஐயா! கரிகாலர் இருக்குமிடத்துக்கு உங்களை அழைத்துப் போகிறேன். பார்த்திபேந்திரா! உனக்கு அந்த இடம் தெரியும். பழுவூர் இளைய ராணியின் அந்தப்புரத்துக்குப் போயிருக்கிறார் என்று சற்றுமுன் அறிந்தேன். அங்கே இவரை நீயே அழைத்துப் போ!" என்றார் சம்புவரையர். 
பார்த்திபேந்திரன், "ஆம், தாத்தா! வாருங்கள்! நானே உங்களை அழைத்துப் போகிறேன்!" என்றான். 
இப்படிச் சொல்லிவிட்டுப் பார்த்திபேந்திரன் பழுவூர் இளையராணி நந்தினி தங்கியிருந்த அந்தப்புரம் இருந்த திக்கை நோக்கினான். 
"ஐயோ! இது என்ன?" என்று அலறினான். ஏனெனில், அவன் பார்த்த திக்கில் அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தீயின் கொழுந்துகளுக்கு மேலே கரிய புகை மண்டலம் அடர்ந்திருந்தது. 
அவன் பார்த்த திசையை எல்லாரும் பார்த்தார்கள். "தீ! தீ!" என்ற பீதி நிறைந்த ஒலி எல்லாருடைய கண்டங்களிலிருந்தும் கிளம்பியது. 
பார்த்திபேந்திரன் சிறிது திகைப்பு நீங்கியவனாய், "சம்புவரையரே! முதலில் இந்த ஓலையை நான் நம்பவில்லை. இப்போது நம்புகிறேன். ஏதோ சூழ்ச்சியும், சதியும் நடந்திருக்கின்றன. பாட்டா! இந்த சதிகாரர்களை உடனே சிறைப்படுத்தச் சொல்லுங்கள்! நான் போய் இளவரசர் இருக்குமிடத்தைப் பார்த்துத் தேடி அழைத்து வருகிறேன்!" என்று சொன்னான். 
சம்புவரையர் மறுபடியும் பழைய தைரியமான குரலில் "ஆமாம், பார்த்திபேந்திரா! சூழ்ச்சியும் சதியும் நடந்திருக்கின்றன. ஆனால் செய்தவர்கள் நீங்கள். என் அரண்மனையின் கதவைத் தகர்த்துக்கொண்டு புகுந்தீர்கள். உங்கள் வீரர்களை ஏவி விட்டுத் தீ வைக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள். இளவரசருக்கு ஏதேனும் ஆபத்து என்றால், அதுவும் உங்களாலேதான் நேர்ந்திருக்க வேண்டும்! ஜாக்கிரதை! இதற்கெல்லாம் பழிக்குப் பழி வாங்கும் காலம் வரும்!" என்றார். 
பார்த்திபேந்திரன் அவருடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் ஓடினான். அதே சமயத்தில் சம்புவரையர் வீட்டுப் பெண்கள் கும்பலாக மாளிகைக்குள்ளேயிருந்து நிலா முற்றத்துக்கு வந்தார்கள். அவர்களுடைய மனக்கலக்கத்தை அவர்கள் முக பாவங்கள் வெளிப்படுத்தின. ஆனால் யாருடைய குரலிலிருந்தும் ஒரு சிறு முனகலாவது, விம்மலாவது கேட்கவில்லை. 
அவர்களில் சிலருடைய கவனம் மாளிகையின் பின்புறத்தில் வெளிச்சமாகத் தெரிந்த இடத்திற்குச் சென்றது. ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொழுந்து விட்டெரிந்த தீச்சுடரைக் காட்டினார்கள்; மணிமேகலையும் அதைப் பார்த்தாள். உடனே "ஐயோ! தீ! தீ! அவர் அங்கு இருக்கிறாரே!" என்று அலறிக் கொண்டு அந்தத் திக்கை நோக்கி ஓடத் தொடங்கினாள். சம்புவரையர் குறுக்கிட்டு அவளை நிறுத்தினார். அவளுடைய முகத்தில் பளார் என்று ஓர் அறை கொடுத்தார். பிறந்தது முதல் யாரும் தன்னை இப்படி நடத்தி அறியாதவளான மணிமேகலை, - சம்புவரையரின் கண்ணுக்குக் கண்ணான செல்லப் பெண் மணிமேகலை, - தந்தையை வெறித்து நோக்கிய வண்ணம் ஸ்தம்பித்து நின்றாள். 
சம்புவரையர் சிறிது இரங்கிய குரலில், "அசட்டுப் பெண்ணே! உனக்குத்தான் முன்னமே நான் எச்சரிக்கை செய்திருந்தேனே? ஏன் எனக்குத் கோபம் வரச் செய்கிறாய்?" என்று கூறிவிட்டு, "அதோ பார்! அலறி அடித்துக்கொண்டு ஓடவேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்!" என்றார். 
சம்புவரையர் சுட்டிக் காட்டிய திசையிலிருந்து வந்தியத்தேவன் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்துகொண்டிருந்தான். அவனுடைய தோளின் பேரில் ஆதித்த கரிகாலன் உயிரற்ற உடலைச் சாத்தி எடுத்துக் கொண்டு வந்தான். 
சம்புவரையருக்கும், அவருடைய மகளுக்கும் நடந்த விவாதத்தில் கவனம் செலுத்திய மலையமானும் இப்போது வந்தியத்தேவனை நோக்கினார். அவன் மெள்ள மெள்ளத் தள்ளாடி வருவதையும் அவனுடைய தோளில் யாரையோ தூக்கிக் கொண்டு வருவதையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார். ஏனோ அவருடைய முதுமைப் பிராயம் அடைந்த உடம்பு நடுங்கியது. உள்ளத்தில் ஒரு விதத் திகில் உண்டாயிற்று. கிட்ட நெருங்கி வந்தவனைப் பார்த்து ஏதோ கேட்க விரும்பினார். ஆனால் நா எழவில்லை. தொண்டை அடியோடு அடைத்துக் கொண்டு விட்டது. 
வந்தியத்தேவன் மலையமானைப் பார்த்துக்கொண்டே அவர் அருகில் வந்தான். 
"ஐயா! இதோ இளவரசர் கரிகாலர்! வீரபாண்டியன் தலை கொண்ட இந்த வீராதிவீரரை உயிரோடு தங்களிடம் கொண்டு சேர்க்க என்னால் இயலவில்லை. உடலை மட்டும் தீக்கிரையாகாமல் கொண்டு சேர்த்தேன். விதியினாலும் சதியினாலும் கொல்லப்பட்ட உங்கள் பேரப் பிள்ளையை இனி நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்!" என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இளவரசர் கரிகாலரின் சடலத்தை மெதுவாகத் கீழே இறக்கிப் படுக்க வைத்தான். 
உடனே தடால் என்று தானும் கீழே விழுந்து நினைவிழந்தான். 
கிழவர் மலையமான், இளவரசரின் உடலுக்கு அருகில் உட்கார்ந்தார். அவருடைய வீரத் திருமுகத்தைச் சற்று நேரம் உற்று நோக்கினார். திடீரென்று மலை குலுங்குவது போல் அவருடைய உடம்பெல்லாம் குலுங்கி அசைந்தது! அலைகடலின் பேராரவாரத்தைப் போல் அவருடைய தொண்டையிலிருந்து "ஐயோ!" என்ற சோகக் குரல் வந்தது. 
தம் இரும்பையொத்த முதிய கைகளினால் தலையிலும் மார்பிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார். 
"என் செல்வமே! உன்னை மணக்கோலத்தில் பார்க்க வந்தேனே! பிணக்கோலத்தில் பார்க்கிறேனே" என்று எட்டுத் திசையும் கிடுகிடுத்து நடுங்கும்படியாக அலறினார். 
பின்னர், அம்முதுபெருங் கிழவர் ஆதித்த கரிகாலன் பிறந்ததிலிருந்து நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாகக் கூறிப் புலம்பினார். அவன் பிறந்த நாளில் நடத்திய கொண்டாட்டங்களைக் குறிப்பிட்டார். அவன் குழந்தையாயிருந்த போது தமது மடியிலும், கரங்களிலும், தோள்களிலும் கொஞ்சி விளையாடியதைச் சொல்லி அழுதார். அவனுக்கு வேல் எறியவும், வாள் பிடித்துச் சண்டை செய்யவும் தாம் கற்றுக் கொடுத்ததையெல்லாம் சொன்னார். பதினாறாவது பிராயத்தில் சேவூர்ப் போர்க்களத்தில் அவன் நிகழ்த்திய அசகாய சூரத்தனமான வீர பராக்கிரமச் செயல்களை ஒவ்வொன்றாகக் கூறித் துக்கித்தார். 
"ஐயோ! பாண்டியனோடு நடத்திய அந்த வீரப் போர்களிலே நீ இறந்து வீர சொர்க்கம் அடைந்திருக்கக் கூடாதா? இந்தச் சண்டாளன் சம்புவரையனும், இவனுடன் சேர்ந்த சதிகாரர்களும் செய்த சூழ்ச்சிக்கு இரையாகியா மாண்டிருக்க வேண்டும்? அந்தோ, உன்னை நானே இவன் விருந்தாளியாகப் போகும்படி சொல்லி அனுப்பினேனே? எனக்கு வயதாகி விட்டது. உனக்கு இங்கே நண்பர்கள் வேண்டும் என்று எண்ணி, இவன் மகளை நீ மணந்துகொண்டால், உன் கட்சியில் இருப்பான் என்று நம்பி அனுப்பினேனே, சம்புவரையன் மாளிகைக்கு அனுப்புவதாக எண்ணிக் கொண்டு யமனுடைய மாளிகைக்கு விருந்தாளியாக அனுப்பிவிட்டேனே? நான் அல்லவோ பாதகன்? நான் அல்லவோ உன்னைக் கொன்றவன்?" என்று கூறி மீண்டும் மீண்டும் தம் தலையில் அடித்துக் கொண்டார். 
பின்னர் திடீரென்று சோகத்திலிருந்து விடுபட்டு ரௌத்திராகாரம் அடைந்து சுற்று முற்றும் பார்த்தார். "அடே சம்புவரையா, உண்மையைச் சொல்! இளவரசர் எப்படியடா மாண்டார்? என்ன சூழ்ச்சியடா செய்தாய்? தேவேந்திரனே வந்து எதிர்த்தாலும் நேருக்கு நேர் நின்று அவனை வென்றிருக்க முடியாதே? எத்தனை பேரை அவன் பேரில் ஏவி விட்டாய்? அவர்கள் எங்கே மறைந்திருந்து, எப்படியடா இந்த வீராதி வீரனைக் கொன்றார்கள்? உண்மையைச் சொல்லிவிடு!" என்று கர்ஜித்தார். 
சம்புவரையரும் கோபத்தோடு "கிழவா! உன் முதுமைப் பிராயத்தை முன்னிட்டு பொறுத்திருக்கிறேன். இளவரசர் எப்படி இறந்தார் என்று உனக்கு எவ்வளவு தெரியுமோ, அவ்வளவுதான் எனக்கும் தெரியும்! இளவரசர் சடலத்தைத் தூக்கிக் கொண்டு வந்தானே, அவனைக் கேட்டால் ஒருவேளை சொல்லுவான்! என்னைக் கேட்பதில் என்ன பயன்?" என்றார். 
"அடே! உன்னுடைய மாளிகையில் உன்னுடைய விருந்தாளியாக இருக்கும்போது இச்சம்பவம் நேர்ந்திருக்கிறது. நீ ஒன்றும் அறியாதவன் போலப் பேசுகிறாய். இதை யார் நம்புவார்கள்? நல்லது; உன்னைச் சுந்தரசோழ சக்கரவர்த்தி கேட்கும்போது இந்த மறுமொழியை அவரிடம் சொல்லு! வீரர்களே! இந்தச் சம்புவரையனைச் சிறைப்படுத்துங்கள். இவனுடைய மாளிகை, மதில் சுவர் எல்லாவற்றையும் இடித்துத் தரையோடு தரை ஆக்குங்கள்!" என்று கிழவர் இடிமுழக்கம் போன்ற குரலில் கட்டளையிட்டார். 
அப்போதுதான் திரும்பி வந்திருந்த பார்த்திபேந்திரன், மலையமானைப் பார்த்து, "ஐயா! இந்த மாளிகையை அழிக்கும் பொறுப்பு நமக்குக் கிடையாது. அக்னி பகவான் அந்த வேலையை மேற்கொண்டு விட்டார்! அதோ பாருங்கள்!" என்றான். 
மலையமான் பார்த்தார், அந்தப் பெரிய மாளிகையில் ஒரு மூலையில் சற்று முன் காணப்பட்ட தீ, வெகு சீக்கிரமாகப் பரவி வருவதைக் கண்டார். பிரம்மாண்டமாக வளர்ந்து வானளாவிக் கொழுந்து விட்டெறிந்த அப்பெருந்தீ மாட கூடங்களையும், மச்சு மெத்தைகளையும் கோபுர கலசங்களையும் விழுங்கிப் பஸ்மீகரம் செய்து கொண்டு மேலும் மேலும் இரை தேடி அதன் ஆயிரம் பதினாயிரம் செந்நாக்குகளை நீட்டிக் கொண்டு விரைந்து வருவதைக் கண்டார். அந்த கோர பயங்கரமான காட்சியைப் பார்த்த வண்ணமாகத் திருக்கோவலூர் வீரர்கள் பிரமித்து நிற்பதையும் கண்டார். 
"சரி!, சரி! அக்னி பகவான் நமது வேலையை ஏற்றுக் கொண்டு விட்டார். நல்லது, பார்த்திபேந்திரா! உடனே புறப்படுவோம். மூன்று உலகமாளும் சுந்தரசோழ சக்கரவர்த்தி தமது மூத்த மகனைப் பார்க்க வேண்டும் என்று மூன்று வருஷமாகச் சொல்லி அனுப்பிக் கொண்டிருந்தார். என் மகள் வானமாதேவி இளவரசனை அழைத்து வரும்படி எனக்குச் சிபாரிசு மேல் சிபாரிசு அனுப்பிக் கொண்டிருந்தாள். உயிரற்ற இளவரசனின் சடலத்தையாவது அவர்கள் கடைசி முறை பார்க்கட்டும். இந்த வீராதி வீரனுடைய உடலைச் சண்டாள சம்புவரையனுடைய மாளிகையை விழுங்கிய அக்கினிக்கு நாம் இரையாக்க வேண்டாம். தஞ்சாவூர்க்கு எடுத்துச் செல்வோம். சக்கரவர்த்தியின் சந்நிதானத்தில் கொண்டுபோய்ப் போடுவோம். உயிர்க் களை இழந்த திருமுகத்தையாவது பெற்ற தாயும் தகப்பனாரும் பார்த்துப் புலம்பட்டும். இளவரசனைக் கொன்ற சண்டாளப் பாதகர்களுக்குத் தக்க தண்டனை சக்கரவர்த்தியே விதிக்கட்டும்!" என்றார் மலையமான்.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel