←அத்தியாயம் 62: ஈட்டி பாய்ந்தது!
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: பினாகபாணியின் வஞ்சம்
அத்தியாயம் 64: "உண்மையைச் சொல்!"→
585பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: பினாகபாணியின் வஞ்சம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
தியாக சிகரம் - அத்தியாயம் 63[தொகு]
பினாகபாணியின் வஞ்சம்
பொன்னியின் செல்வரும், குந்தவைதேவி முதலானோரும் பாதாளச் சிறைக்குச் சென்று பார்த்தபோது அங்கே அவர்கள் வந்தியத்தேவனைக் காணவில்லை. அவனுக்குப் பதிலாக வைத்தியர் மகன் பினாகபாணியைக் கண்டார்கள். பினாகபாணி சுவரில் இருந்த இரும்பு வளையங்களில் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தான்.
"ஐயையோ! கொலைகாரன் தப்பி ஓடிவிட்டான்! பைத்தியக்காரன் தப்பி ஓடிவிட்டான்" என்று கூச்சலிட்டுக் கொண்டுமிருந்தான். அவனைக் குந்தவை தேவிக்கும் வானதிக்கும் நன்கு நினைவிருந்தது. முதன் முதலில் வந்தியத்தேவனுக்குத் துணையாக அவனையும் கோடிக்கரைக்கு அவர்கள் அனுப்பினார்கள் அல்லவா? பினாகபாணியை விடுதலை செய்யப் பண்ணி விசாரித்தபோது அவன் சற்றுமுன் அங்கு நடந்த நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகத் தெரியப்படுத்தினான். தப்பி ஓடிப்போனவர்களை விரைவாகத் தொடர்ந்து பிடிக்க வேண்டுமென்றும் ஆத்திரப்பட்டான்.
ஆனால், அவனுடைய வரலாற்றைக் கேட்டவர்கள் அது விஷயத்தில் அவ்வளவு ஆத்திரம் கொள்ளவில்லை. வந்தியத்தேவனுடைய சாமர்த்தியத்தைப் பற்றி மனத்திற்குள் அவர்கள் மெச்சிக் கொண்டதுடன், அச்சமயம் அவன் தப்பி ஓடிப் போனதே ஒருவிதத்தில் நல்லது என்று எண்ணிக் கொண்டார்கள். மணிமேகலை தனது எண்ணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியபோது குந்தவை, அவளைத் தடுத்து, "தங்காய்! பேசாமலிரு! இது பெரிய இராஜாங்க விஷயம். பெண் பிள்ளைகளாகிய நமக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? உன் மனதில் இருப்பதை என்னிடம் தனியாகச் சொல்லு!" என்றாள்.
எல்லாரும் பாதாளச் சிறையின் வாசலில் வந்தபோது அங்கே சேனாதிபதி பெரிய வேளாரும் வந்து சேர்ந்தார். சிறையில் ஏதோ தவறு நடந்துவிட்டது என்ற செய்தி அவர் காதுக்கு அதற்குள் எட்டியிருந்தது. நடந்தவற்றை அறிந்தபோது சேனாதிபதியும் தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதில் அவ்வளவாகப் பரபரப்புக் காட்டவில்லை. உண்மையில் அவருடைய மனத்திற்குள்ளேயும் வந்தியத்தேவன் மீது சாட்டப்பட்டிருந்த குற்றத்தைப் பற்றிச் சிறிதும் நம்பிக்கை உண்டாகியிருக்கவில்லை. அருள்மொழிவர்மர், குந்தவைதேவி முதலியோர் வந்தியத்தேவனிடம் கொண்டிருந்த அபிமானத்தையும் அறிந்திருந்தார். ஆகையால், கோபம் கொள்வதற்குப் பதிலாக வந்தியத்தேவனுடைய கெட்டிக்காரத்தனத்தைக் குறிப்பிட்டு சிரித்தார்.
"அந்த வாணர்குல வாலிபன் ரொம்ப சாமர்த்தியசாலி! இலங்கை, மாதோட்டச் சிறையிலிருந்தும் அவன் இப்படித்தான் ஒரு தடவை தந்திரமாகத் தப்பிச் சென்றான்!" என்றார்.
வைத்தியர் மகன் குறுக்கிட்டு, "ஐயா! தப்பி ஓடியவர்களைத் தேடிப் பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டாமா?" என்றான்.
"ஆ! அவர்கள் எங்கே தப்பிச் சென்றுவிடப் போகிறார்கள்? இந்தக் கோட்டைக்குள்ளேதான் இருக்க வேண்டும்? பார்த்துக் கொள்ளலாம்!" என்றார் சேனாதிபதி பெரிய வேளார்.
பினாகபாணி ஆத்திரத்துடன் "இல்லை, இல்லை! அந்தக் கொலைக்காரனுக்குச் சுரங்கப்பாதை தெரியும். அதன் வழியாக அவன் வெளியேறிப் போய்விடுவான்!" என்று அலறினான்.
சேனாதிபதி இதனால் கோபம் அடைந்து, "முட்டாளே! நீ எனக்குப் புத்தி சொல்ல முன் வந்துவிட்டாயா? அவர்கள் தப்பிச் செல்வதற்கு நீதானே காரணம்? வேண்டுமென்றே அவர்களுடன் சேர்ந்து நீயே இந்தச் சூழ்ச்சி செய்தாயோ, என்னமோ? இவனைப் பிடித்து மறுபடியும் பாதாளச் சிறையிலே போடுங்கள்!" என்று பக்கத்தில் நின்ற வீரர்களைப் பார்த்துக் கூறினார்.
பினாகபாணி நடுநடுங்கிப் போனான். "இல்லை, ஐயா! சத்தியமாக நான் அவர்களுடைய சூழ்ச்சியில் சேர்ந்தவன் அல்ல. முதன்மந்திரி அனுப்பி நான் வந்தேன்!" என்று முறையிட்டான்.
பொன்னியின் செல்வர் குறுகிட்டு, "ஆமாம்; இவன் முதல்மந்திரியின் ஆள் அல்லவா? தக்க காவலுடன் அவரிடம் அனுப்பிச் சேர்த்துவிடலாம். முதன்மந்திரியே இவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கட்டும்!" என்றார்.
அவ்வாறே சேனாதிபதி வைத்தியர் மகனை முதன்மந்திரி அநிருத்தரிடம் கொண்டுபோய் ஒப்புவித்துவிடும்படி தம்முடைய வீரர்கள் நால்வருக்குக் கட்டளை பிறப்பித்தார்.
முதன்மந்திரி அநிருத்தர் பினாகபாணியிடம் சிறையில் நடந்தவற்றைக் கேட்டு அறிந்தபோது அவரும் அவ்வளவாகப் பரபரப்புக் காட்டவில்லை. அநிருத்தர் எந்த முக்கியமான காரியத்துக்கும் ஒரு ஆளை மட்டும் நம்பி அனுப்புவதில்லை. எங்கேயாவது ஒற்றனை அனுப்பினால், அவனைக் கவனித்துக் கொள்ளப் பின்னால் இன்னொருவனையும் அனுப்பி வைப்பது அவர் வழக்கம். அவ்வாறே இப்போதும் ஆழ்வார்க்கடியானை அனுப்பியிருந்தபடியால் அவர் கவலைப்படவில்லை. ஓடிப்போனவர்களை அவன் பிடித்துக் கொண்டு வருவான் அல்லது அவர்களைப் பற்றிய செய்தியாவது கொண்டு வருவான் என்று நம்பினார். ஓடிப்போனவர்கள் இருவரும் ஒரு வழியாக அகப்படாமலே ஓடிப்போய்விட்டால் பல தொல்லைகள் தீர வகை ஏற்படும் என்ற எண்ணமும் அவர் மனதில் இருந்தது.
எனவே, பினாகபாணி பாதாளச் சிறையில் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, "ஐயா! என்னுடன் நாலு ஆள்களை அனுப்பி வைத்தால் நானே அவர்களைத் திரும்பவும் கைப்பற்றி வருகிறேன்" என்று சொன்னபோது, அநிருத்தரும் அவன் பேரில் எரிந்து விழுந்தார்.
"முட்டாளே! காரியத்தை அடியோடு கெடுத்துவிட்டாய்! அந்தப் பைத்தியக்காரனைப் பற்றி வெளியில் யாருக்குமே தெரியக்கூடாது என்று அல்லவா உன்னை அனுப்பினேன். இல்லாவிடில் நானே போய் அவனை அழைத்து வந்திருக்கமாட்டேனா? இப்போது அரண்மனையைச் சேர்ந்த பலருக்கும் அவனைப் பற்றித் தெரிந்து போய்விட்டது. அது போதாது என்று நீ வேறு மறுபடியும் விளம்பரப்படுத்தப் பார்க்கிறாயா? போதும் உன்னுடைய சேவை! நீ ஒற்றன் வேலைக்குச் சிறிதும் தகுதி அற்றவன் போ! இனி என் முகத்தில் விழிக்காதே! இன்று நடந்தவற்றை யாரிடமும் சொல்லாதே! சொன்னதாகத் தெரிந்தால் உன்னைக் கழுவில் ஏற்றக் கட்டளையிடுவேன்!" என்றார் அநிருத்தர்.
பினாகபாணி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு முதன்மந்திரி வீட்டிலிருந்து வெளியேறினான். அவனுடைய உள்ளத்தில் ஆசாபங்கத்தினால் ஏற்பட்ட குரோதம் கொழுந்து விட்டெரிந்தது. அந்தக் குரோதமெல்லாம் வந்தியத்தேவன் மீது திரும்பியது. அவனாலேதான் தனக்கு எடுத்த காரியத்தில் தோல்வியும், அபகீர்த்தியும் உண்டாயின. சேனாதிபதியும் முதன்மந்திரியும் தன்னைக் கடிந்து கொள்ளவும் நேர்ந்தது. இவர்கள் எல்லோரும் அலட்சியமாயிருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். வந்தியத்தேவனைக் கண்டுபிடித்துப் பழிவாங்கும் கடமை தன்னுடையது. பைத்தியக்காரன் தப்பி ஓடிப் போனாலும் போகட்டும். வந்தியத்தேவன் மட்டும் விடக் கூடாது. கோடிக்கரைக்குப் பிரயாணம் சென்ற நாளிலிருந்து தன்னுடைய விரோதி அவன். கடைசியாக இந்தப் பெரிய தீங்கைத் தனக்குச் செய்திருக்கிறான். அவனைக் கண்டுபிடித்துப் பழிவாங்கியே தீரவேண்டும்!...
இவ்வாறு பினாகபாணி தீர்மானித்துக் கொண்டு தஞ்சைக் கோட்டையைவிட்டு வெளியேறினான். வந்தியத்தேவன் கோட்டைக்குள் இருக்கமாட்டான் என்றும், இரகசியச் சுரங்கப்பாதை வழியாகப் போயிருப்பான் என்றும் அவன் உண்மையிலேயே நம்பினான். ஆனால் சுரங்கபாதை எங்கே இருக்கிறதென்றாவது, அதன் வெளி வாசல் எங்கே திறக்கிறதென்றாவது, அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கோட்டைச் சுவரில் எங்கேயோ ஓரிடத்தில் அந்த இரகசியச் சுரங்கப் பாதையின் வெளி வாசற்படி இருக்கத்தான் வேண்டும். சுவர் ஓரமாகப் போய்ச் சுற்றிப் பார்த்தால் ஒருவேளை கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்கலாம். ஏன்? வந்தியத்தேவனும், பைத்தியக்காரனும் வெளியில் வரும்போது கையும் மெய்யுமாக அவர்களைப் பிடித்தாலும் பிடித்து விடலாம்...
இத்தகைய எண்ணத்தினால் பினாகபாணி தஞ்சைக் கோட்டையின் வெளிப்புறத்தில் மதிளை ஒட்டி வடவாற்றின் அக்கரை வழியாகப் போய்க்கொண்டிருந்தான். மதிள் சுவரைக் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டே போனான். கொடும்பாளூர் வீரர்கள் சிலர் கையில் தீவர்த்தியுடன் அவ்வப்போது மதிளைச் சுற்றிப் போய்க் கொண்டிருந்தார்கள். வைத்தியர் மகனிடம் இன்னமும் அவன் முதன்மந்திரியின் ஆள் என்பதற்கு அடையாளமான இலச்சினை இருந்தது. ஆகையால், வீரர்கள் எதிர்ப்பட்டால் அவன் அவர்களிடமிருந்து சமாளித்துக் கொண்டு செல்ல முடியும். ஆயினும், அவன் எடுத்த காரியம் அதனால் தாமதம் ஆகும். ஆகையால் தீவர்த்தியுடன் காவல் வீரர்கள் எதிரே வந்தபோதெல்லாம் பாதை ஓரத்தில் மரங்கள் புதர்களில் மறைந்து நின்று அவர்கள் அப்பால் போனதும் வெளி வந்தான். இப்படி அவன் ஒரு தடவை புதர்களில் மறைந்து கொண்டிருந்தபோது அவனுக்குச் சற்றுத் தூரத்தில் இன்னும் இருவர் ஒளிந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான். அவர்களில் ஒருவன் கையில் வாள் இருந்தது. தீவர்த்தி வெளிச்சம் புதர்களின் வழியாக வந்து இரண்டொரு கிரணங்கள் அந்த வாளின் மீது பட்ட போது அது ஒளி வீசியது. ஆனால் ஒளிந்திருந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.
காவலர்கள் அப்பால் போனதும் அந்த இரு மனிதர்களும் நதிக் கரைக்கு வந்து பினாகபாணி சென்ற திசைக்கு எதிர் பக்கமாக நடந்து சென்றார்கள். பினாகபாணி தன் வழியே சிறிது தூரம் சென்றான். சட்டென்று அவன் மனத்தில் ஓர் ஐயம் உதித்தது. அவர்கள் இருவரும் தப்பி ஓடிய வந்தியத்தேவனும் பைத்தியக்காரனுந்தானோ என்னமோ? ஏன் இருக்கக்கூடாது? கோட்டை வாசலை நோக்கி அவர்கள் சென்றபடியால் அவனுக்கு முதலில் அச்சந்தேகம் உதிக்கவில்லை. ஆனால் வந்தியத்தேவன் மிக்க தந்திரசாலி. துணிச்சலும் உள்ளவன் ஆகையால் என்ன உத்தேசத்துடன் போகிறானோ, என்னமோ?...
எனவே பினாகபாணியும் திரும்பி அவர்களைச் சற்றுத் தூரத்தில் பின்தொடர்ந்து போனான். ஒருவனுடைய கையிலே வாள் இருந்தபடியால் ஓடிப்போய் அவர்களை எதிர்ப்படவும் விரும்பவில்லை. அநாவசியமாக அன்னியன் ஒருவனுடன் சண்டை போடும் சமயம் அதுவல்ல. அவர்கள் தப்பி ஓடியவர்கள்தான் என்று நிச்சயம் தெரிந்துகொண்ட பிறகுதான் எதுவும் செய்ய வேண்டும். அவனுடைய கையில் குத்தீட்டி ஒன்று இருக்கவே இருந்தது. அதைத் திடீரென்று உபயோகித்து அவனுடைய ஜன்ம விரோதியைத் தீர்த்துக் கட்டுவதே நல்லது. அதோ வடக்குக் கோட்டை வாசல் தெரிகிறது! அடேடே! அங்கே என்ன இவ்வளவு கூட்டமும் ஆர்ப்பாட்டமும்? பல்லக்குகள், தீவர்த்திகள், முன்னும் பின்னும் அரண்மனைச் சேவகர்கள்! யாரோ முக்கியமானவர்கள் வெளியில் போகிறார்களோ, திரும்பி வருகிறார்களோ தெரியவில்லை!
கடவுளே! இவர்கள் எங்கே? சட்டென்று மாயமாய் மறைந்து விட்டார்களே? குறுக்கு வழியில் புகுந்துவிட்டார்கள் போலும்! எங்கே போயிருப்பார்கள்? இராஜபாட்டைக்குப் போய் விட்டார்களா, என்ன? தப்பி ஓடிய கைதிகள் அவ்வளவு தைரியமாக இராஜபாட்டைக்குச் சென்றிருக்க முடியுமா? இல்லாவிடில் எங்கே போயிருக்க முடியும்?... சேந்தன் அமுதனுடைய நந்தவனக் குடிசை அங்கே சமீபத்தில் இருப்பது பினாகபாணிக்கு நினைவு வந்தது. முன்னொரு முறை வந்தியத்தேவன் அங்கே ஒளிந்திருந்தான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது! ஆமாம்! ஆமாம்! அவர்கள் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனுந்தான். சேந்தன் அமுதன் வீட்டுக்குத்தான் போகிறார்கள் போலும்! அல்லது அந்தத் தந்திரசாலியான வந்தியத்தேவன் வேறு என்ன உத்தேசம் வைத்திருக்கிறானோ தெரியவில்லை.
சேந்தன் அமுதனுடைய நந்தவனம் இருந்த திசையை நோக்கிப் பினாகபாணி சென்றான். இருட்டில் வழி கண்டுபிடித்துச் செல்வது அவ்வளவு சுலபமாயில்லை. தட்டுத்தடுமாறி நந்தவனத்தை அடைந்தபோது அங்கே சிவிகைகளும் காவலர்களும் இருப்பதைக் கண்டு வியந்தான். என்ன செய்தவதென்று தெரியாமல் அவன் தயங்கி நின்றபோது, சிவிகைகள் புறப்பட்டு விட்டன. காவலர்களும், பின்தொடர்ந்து சென்றார்கள்.
பினாகபாணி அந்த நந்தவனத்தில் நாலாபுறமும் உற்றுப் பார்த்தான். ஒரு வேலியின் ஓரமாக இரண்டு குதிரைகளின் தலைகள் தெரிந்தன. வைத்தியர் மகனின் ஆர்வம் அதிகமாயிற்று. மெள்ள மெள்ள நடந்து குடிசையை அணுகினான். ஒரு மரத்தினடியில் இருவர் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவர்கள் தான் தேடி வந்த ஆசாமிகளாகத்தான் இருக்கவேண்டும். குதிரைகள் இரண்டு ஆயத்தமாக நிற்கின்றனவே, அது எப்படி? அவர்கள் தப்பி ஓடுவதற்கு வேறு யாராவது, பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள், இரகசியமாக உதவி புரிகிறார்களா, என்ன? அவர்களைத் தப்பவைக்கும் சூழ்ச்சியில் இராஜ குடும்பத்தினரே சம்பந்தப்பட்டிருப்பார்களோ? அந்தப் பைத்தியக்காரன் தனக்கு ஏதோ இரகசியங்கள் தெரியும் என்பதாக அலறிக் கொண்டிருந்தானே, அந்த ரகசியங்கள் வெளிப்படக் கூடாது என்பதற்காக ஒருவேளை இதெல்லாம் நடைபெறுகிறதோ?..
மரத்தின் பின்னால் மறைந்து நின்று பேசுகிறவர்கள் யார் என்று உற்றுப் பார்த்தான். அவர்களில் ஒருவன் பைத்தியக்காரன்தான்; சந்தேகமில்லை. அவனுடைய கம்மல் குரலை நன்றாக அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. அப்படியானால், இன்னொருவன் வந்தியத்தேவனாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால் அவன் மாதிரி தோன்றவில்லையே? இது என்ன அதிசயம்? இளவரசர் மதுராந்தகரைப் போல் அல்லவா தோன்றுகிறது? தலையிலே இளவரசுக் கிரீடம்! தோளில் பீதாம்பரம்! கழுத்தில் முத்து மாலைகள்! கைகளிலும் ஆபரணங்கள்!... மதுராந்தகருக்கும் இந்தப் பைத்தியக்காரனுக்கும் இடையில் என்ன அந்தரங்கப் பேச்சு இருக்க முடியும்?
அது ஏதாவது இருந்துவிட்டு போகட்டும். தன்னுடைய ஜன்ம விரோதியான வந்தியத்தேவன் எங்கே? பக்கத்திலேதான் எங்கேயாவது இருக்க வேண்டும் சந்தேகமில்லை. கையிலே வாளுடன் நடந்தவன் அவனேதான்! ஒருவேளை, வேலி ஓரத்தில் குதிரைகளைப் பார்த்தோமே? அவற்றில் ஒன்றின் மீது ஓடுவதற்கு ஆயத்தமாக உட்கார்ந்திருக்கிறானோ? பைத்தியக்காரன் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறானோ?...ஆகா! அப்படித்தான் இருக்கவேண்டும். அவர்கள் தப்பிச் செல்வதற்குக் காரணமானவர் மதுராந்தகர்தான் போலும்! மதுராந்தகருடைய தூண்டுதலினால்தான் வந்தியத்தேவன் கரிகாலரைக் கொன்றான் போலும்! இப்போது அவர்கள் தப்பித்துக் கொண்டு புறப்படுவதற்கு முன்னால், பைத்தியக்காரனிடம் மதுராந்தகர் ஏதோ செய்தி சொல்லி அனுப்புகிறார் போலும்! கடவுளே! இவையெல்லாம் மட்டும் உண்மையாக இருந்து, தன்னால் அவற்றை உண்மை என்று நிரூபிக்கவும் முடியுமானால்...?
இப்படியெல்லாம் பினாகபாணியின் கோணல் மூளை வேலை செய்தது. எல்லாவற்றுக்கும் குதிரைகளின் அருகில் போய்ப் பார்ப்பது நல்லது. அங்கே ஒருவேளை வந்தியத்தேவன் தனியாக இருந்தால், தன் கையிலிருந்த குத்தீட்டியினால் ஒரு கை பார்க்கலாம். பிற்பாடு, இந்தப் பைத்தியக்காரனைப் பிடித்துப் பயமுறுத்தி உண்மையை அறியலாம். மதுராந்தகரும் பைத்தியக்காரனும் பேசிக்கொண்டு நின்ற மரத்திற்கு நேர் எதிரே வேலிக்கு அப்பால் குதிரைகள் நின்றன. அவர்களைத் தாண்டிக்கொண்டு அங்கே போக முடியாது. வழியில் தாமரைக் குளம் வேறு இருந்தது. ஆகையால் குடிசைக்குப் பின்புறத்தை அடைந்து அங்கே வேலியைத் தாண்டிப் போய்க் குதிரைகள் நின்ற இடத்தைச் சேர்வதுதான் நல்லது.
பினாகபாணி அவ்வாறே சென்று குடிசையின் பின்புறத்தை அடைந்தபோது, அவனுடைய காதில் சேந்தன் அமுதன் குரலும், பூங்குழலியின் குரலும் வீழ்ந்தன. பூங்குழலியின் மீது கோடிக்கரையில் முதன்முதலாக அவளைச் சந்தித்தபோதே பினாகபாணி மோகம் கொண்டிருந்தான். அவள் காரணமாகவே வந்தியத்தேவன் மீது அவனுடைய குரோதம் அதிகமாயிற்று. பிற்பாடு, அவன் மந்தாகினியைக் கைப்பற்றிக் கொண்டு வரப்போனபோது சேந்தன் அமுதனுக்கும் பூங்குழலிக்கும் ஏற்பட்டிருந்த நட்புரிமையைத் தெரிந்து கொண்டு மனம் புழுங்கினான். சேந்தன் அமுதன் மீதும் அவனுக்குக் குரோதம் உண்டாகியிருந்தது.
இப்போது சேந்தன் அமுதனும், பூங்குழலியும் மகிழ்ச்சி ததும்பிய மலர்ந்த முகங்களுடன் சல்லாபமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பினாகபாணி குடிசையின் சிறு பலகணி வழியாகப் பார்த்தான். சேந்தன் அமுதன் மீது அவன் குரோதம் கொழுந்து விட்டு எரிந்தது. இன்னும் சிறிது அருகில் சென்று அவர்களுடைய பேச்சைக் காது கொடுத்துக் கேட்டான். கலியாணம் செய்து கொண்டு கோடிக்கரை செல்லுவது பற்றிய அவர்கள் பேச்சு அவன் காதில் விழுந்தது. கலகலவென்று அவர்கள் இருவரும் சேர்ந்து சிரித்த ஒலி, அவனுடைய குரோதக் கனலைப் பொங்கி எழச் செய்தது! சீச்சீ! கடைசியில் இந்த ஊமைப் பூக்காரியின் மகனா பூங்குழலியை அடையப் போகிறான்? அந்த எண்ணத்தைப் பினாகபாணியினால் சகிக்கவே முடியவில்லை. வந்தியத்தேவனையும், பைத்தியக்காரனையும் அவர்களைப் பிடிக்கும் உத்தேசத்தையும் அச்சமயம் அடியோடு மறந்துவிட்டான். முதலில், இந்தத் தேவாரம் பாடும் சேந்தன் அமுதனை இந்த மண்ணுலகத்திலிருந்து அனுப்பிவிட வேண்டும். மற்றக் காரியங்களையெல்லாம் பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம்.
இவ்விதம் முடிவு செய்து பலகணிக்கு வெளியே சற்று ஓரமாக நின்று குத்தீட்டியைச் சேந்தன் அமுதன் மேல் எறியக் குறி பார்த்தான். தற்செயலாக அந்த ஈட்டியையும் அதை ஏந்திய கையையும் மட்டும் பார்த்துவிட்ட பூங்குழலி 'வீல்' என்று கூச்சலிட்டாள். உடனே சேந்தன் அமுதனும் பலகணிப் பக்கம் திரும்பிப் பார்த்தான்! ஆகா! அவன் மார்பின் பேரில் ஈட்டியை எறியச் சரியான சந்தர்ப்பம்!
பினாகபாணியின் கை ஈட்டியை எறிய ஓங்கிய போது பின்னால் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது ஓர் ஆள் வெகு சமீபத்தில் வந்து விட்டான். இருளில் அவன் யார் என்று தெரியவில்லை. யாராயிருந்தாலும் சரி, தன்னுடைய உத்தேசத்தைத் தெரிந்து கொண்டு தன்னைப் பிடிப்பதற்கே ஓடி வருகிறான். சேந்தன அமுதன் மீது எறிவதற்கு ஓங்கிய ஈட்டியை ஓடி வந்தவன் மீது செலுத்தினான். வந்தவன் கீழே விழுந்தான்.
அதே சமயத்தில் இரண்டு குதிரைகள் புறப்பட்ட சத்தம் கேட்டது. அவர்கள் வந்தியத்தேவனும், பைத்தியக்காரனாகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் இருட்டில் தன்னைத் தடுக்க வந்து தன் ஈட்டிக்கு இலக்கானது இளவரசர் மதுராந்தகராயிருக்கக்கூடும்!.. இந்த எண்ணங்கள் மின்னல் வேகத்தில் பினாகபாணியின் உள்ளத்தில் தோன்றி அவனுக்குப் பயங்கரத்தை உண்டாக்கின.
குடிசைக்கு உள்ளேயிருந்து 'ஆகா' 'ஐயோ!' என்ற குரல்கள் எழுந்தன. கதவைத் திறந்து கொண்டு வெளியில் யாரோ வரும் சத்தமும் கேட்டது.
பினாகபாணி ஓட்டம் பிடித்தான். அங்கிருந்து தப்பி ஓடுவதுதான் அப்போது முதன்மையாக அவன் செய்ய வேண்டிய காரியம். குதிரைகள் மீது ஓடியவர்களைத் தொடர்ந்து போய்ப் பிடிப்பது இரண்டாவது காரியம். தலைகால் தெரியாமல் பினாகபாணி விழுந்து அடித்து ஓடினான்.
சில கண நேரத்துக்கெல்லாம் பூங்குழலியும் சேந்தன் அமுதனும் விளக்குடன் வெளியில் வந்தார்கள். வந்தியத்தேவன் ஈட்டியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள். அவர்கள் அடைந்த பயங்கரத்தையும், துயரத்தையும் சொல்லி முடியாது. மிக்க பரிவுடன் அவனை இருவரும் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய்க் குடிசைக்குள் சேர்த்தார்கள். அவன் இறந்துவிடவில்லை என்று அறிந்து சிறிது ஆறுதல் பெற்றார்கள்.
வாணி அம்மை முன்னொரு தடவை கந்தமாறனுக்குச் செய்த பச்சிலை வைத்தியத்தை இன்று காயம் பட்ட வந்தியத்தேவனுக்குச் செய்யும்படி நேர்ந்தது.