←அத்தியாயம் 67: "மண்ணரசு நான் வேண்டேன்"

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: "ஒரு நாள் இளவரசர்!"

அத்தியாயம் 69: "வாளுக்கு வாள்!"→

 

 

 

 

 


590பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: "ஒரு நாள் இளவரசர்!"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 68[தொகு]
"ஒரு நாள் இளவரசர்!"


சேந்தன் அமுதனின் கட்டிலுக்கு அடியிலிருந்து வந்த முனகல் சத்தத்தைக் கேட்டதும், ஆழ்வார்க்கடியான், "ஆகா! அப்படியா சமாசாரம்? சிவ பக்த சிகாமணிகளே! பழைய பரமசிவனைப் போல் மோசம் செய்ய ஆரம்பித்து விட்டீர்களா?" என்று சொல்லிக் கொண்டே மேலே போகத் தொடங்கினான். 
பூங்குழலி தன் இடையில் செருகியிருந்த கத்தியைச் சட்டென்று எடுத்துக்காட்டி, "வைஷ்ணவனே! சிவபெருமானைப் பழித்த பாதகனாகிய நீ இந்த உலகில் இனி ஒரு கணமும் இருக்கலாகாது. மேலே ஒரு அடி எடுத்து வைத்தாயானால், உடனே வைகுண்டம் போய்ச் சேருவாய்!" என்றாள். 
"தாயே! மகா சக்தி! உன்னுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா? வைகுண்ட பதவி கிடைப்பது எளிதன்று. உன் கையால் என்னை அங்கே அனுப்பிவிட்டாயானால், அதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு என்ன கிடைக்கக் கூடும்?" என்றான் ஆழ்வார்க்கடியான். 
இச்சமயத்தில் சேந்தன் அமுதன் கட்டிலிலிருந்து எழுந்து வந்து, "பூங்குழலி! வேண்டாம்! கத்தியை இடுப்பில் செருகிக் கொள்! இந்த வைஷ்ணவன் சிவனைத் தூஷித்ததினால் சிவபெருமானுக்குக் குறைவு ஒன்றும் வந்துவிடாது. தீய வழியினாலும் நல்லது ஏற்படாது. பொய்மையினாலும் மோசத்தினாலும் நன்மை எதுவும் கிட்டாது. இந்த வைஷ்ணவனிடம் உண்மையைச் சொல்லி உதவி கேட்போம். இவனும் வந்தியதேவனுக்குச் சிநேகிதன்தானே!" என்றான். 
"அப்படி வாருங்கள் வழிக்கு! கபட நாடக சூத்திரதாரியான கிருஷ்ண பரமாத்மாவின் அடியார்க்கு அடியேனைக் கேவலம் சிவபக்தர்களால் ஏமாற்ற முடியுமா? கருணாமூர்த்தியான ஸ்ரீமந் நாராயணனைச் சரணாகதி என்று அடைந்தால், அவர் அவசியம் காப்பாற்றி அருளுவார். ஆதிமூலமே என்று கதறிய கஜேந்திரனை முதலை வாயிலிருந்து காப்பாற்றிய பெருமான் அல்லவோ எங்கள் திருமால்!..." 
"ஆமாம்; ஆமாம்! உங்கள் திருமால் வைகுண்டத்திலிருந்து வந்து சேருவதற்குள் உங்கள் சிநேகிதர் இந்த மண்ணுலகிலிருந்தே போய்விடுவார்!" என்று பூங்குழலி சொல்லிவிட்டுக் கட்டிலை நோக்கி விரைந்து சென்றாள். 
மற்றவர்களும் அவளைப் பின்பற்றிச் சென்றார்கள். கட்டிலின் கீழே துணிக் குவியலினால் மறைக்கப்பட்டுக் கிடந்த வந்தியத்தேவனைத் தூக்கிக் கட்டிலின் மேலே கிடத்தினார்கள். 
வந்தியத்தேவன் நினைவற்ற நிலையில் இருந்தான். எனினும் அவ்வப்போது வேதனைக் குரலில் முனகிக் கொண்டிருந்தான். அதனாலேயே அவன் உடலில் உயிர் இருக்கிறது என்று அறிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது. 
வாணி அம்மை மூலிகைகளை வேகவைத்து மஞ்சள் பொடி சேர்த்துக் காயத்தில் வைத்துக் கட்டுவதற்காகக் கொண்டு வந்தாள். ஆழ்வார்க்கடியானும், சேந்தன் அமுதனும் வந்தியத்தேவனுடைய கை கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். பூங்குழலியும், வாணி அம்மையும் அவனுடைய காயத்தில் வேகவைத்த மூலிகைகளைச் சுடச்சுட வைத்துத் துணியைப் போட்டுக் கட்டினார்கள். 
அப்போது ஏற்பட்ட வேதனையினால் வந்தியத்தேவன் கண் விழித்தான். எதிரில் ஆழ்வார்க்கடியானைப் பார்த்ததும் "வைஷ்ணவனே! இப்படி வஞ்சம் செய்துவிட்டாயே! இங்கே என்னை வரச்சொல்லிவிட்டு, பின்னோடு என்னைக் கொல்லுவதற்கு ஆள் அனுப்பி விட்டாயா?" என்று குழறிவிட்டு மறுபடியும் நினைவு இழந்தான். 
ஆழ்வார்க்கடியான் முகத்தில் மனச் சங்கடத்தின் அறிகுறி தென்பட்டது. அரை நினைவான நிலையில் வந்தியத்தேவன் கூறிய வார்த்தைகள் சேந்தன் அமுதன் - பூங்குழலி இவர்களுக்குத் தன்னைப்பற்றி மறுபடியும் ஐயத்தை உண்டாக்கி இருக்கும் என்று எண்ணி அவர்கள் முகத்தைப் பார்த்தான். 
பூங்குழலியின் முகத்தில் பூத்திருந்த புன்னகை அவனுக்குச் சிறிது தைரியத்தை உண்டாக்கியது. 
"வைஷ்ணவரே! வந்தியத்தேவரை நீர்தான் இங்கே அனுப்பி வைத்தீரா?" என்று கேட்டாள். 
"ஆம், தாயே! ஆனால் இவனைக் கொல்லுவதற்குப் பின்னோடு நான் யாரையும் அனுப்பி வைக்கவில்லை." 
"அது இருக்கட்டும்; இங்கு எதற்காக இவரை அனுப்பினீர்?" 
"தப்பி ஓடிச் செல்வதற்காக அனுப்பினேன். இந்த நந்தவனத்துக்குப் பக்கத்தில் அவனுக்காகவும், அவன் நண்பனுக்காவும் இரண்டு குதிரைகளும் தயாராய் வைத்திருந்தேன்..." 
"பின்னே, அவர் தப்பி ஓடவில்லை என்று எப்படித் தெரிந்தது? இக்குடிசையில் இருப்பதை எப்படி அறிந்தீர்?" 
"அவனுக்காக நான் விட்டிருந்த குதிரையில் வேறொருவர் ஏறிக்கொண்டு போவதைப் பார்த்தேன் அதனாலே தான் சந்தேகம் உண்டாயிற்று...." 
"திருமால் ஒன்று நினைக்கச் சிவன் வேறொன்று நினைத்து விட்டார்" 
"இது என்ன புதிர், தாயே? இவன் எப்படிக் காயம் அடைந்தான்?" 
"வைஷ்ணவரே! நீர் என்ன உத்தேசத்துடன் இவரை இங்கே அனுப்பினீரோ, தெரியாது. ஆனால் இவர் சரியான சமயத்துக்கு இங்கே வந்து நான் கலியாணம் செய்து கொள்வதற்குள், கைம்பெண் ஆகாமல், காப்பாற்றினார்!" 
இவ்வாறு பூங்குழலி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன் இருவரும் "என்ன? என்ன? என்ன?" என்று அதிசயத்துடன் கேட்டார்கள். 
பூங்குழலி அமுதன் பக்கம் திரும்பி, "ஆமாம், உங்களிடம் கூட நான் சொல்லவில்லை. வெளியே ஒருவன் நின்று ஈட்டியினால் தங்களைக் குத்துவதற்குத்தான் குறி பார்த்தான். அப்போது இவர் வந்து குறுக்கிட்டு ஈட்டியைத் தான் ஏற்றுக் கொண்டு தங்களைக் காப்பாற்றினார்!" என்றாள். 
சேந்தன் அமுதன் கண்களில் நீர் ததும்பியது. "ஐயோ! எனக்காகவா என் நண்பர் இந்த ஆபத்துக்கு உள்ளானார்?" என்றான். 
"அதனால் என்ன? தாங்கள் இவரைத் தப்புவிப்பதற்காக எவ்வளவு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறீர்கள்!" என்றாள் பூங்குழலி. 
"அம்மணி! இந்த உலகத்தில் ஒருவர் செய்த உதவிக்கு உடனே பதில் உதவி செய்வதென்பது மிக அபூர்வமானது. நல்லது செய்தவர்களுக்குக் கெடுதல் செய்யாமலிருந்தாலே பெரிய காரியம். வந்தியத்தேவன் இங்கு சரியான சமயத்துக்கு வந்து, சேந்தன் அமுதனைக் காப்பாற்றியது அதிசயமான காரியந்தான்! ஆனால், கலியாணத்தைப்பற்றி ஏதோ சொன்னீர்களே? அது என்ன? கைம்பெண் ஆகாமல் காப்பாற்றியதாகவும் சொன்னீர்கள்!" 
"ஆம் வைஷ்ணவரே! சிறிது நேரத்துக்கு முன்னாலே தான் நானும் இவரும் மணந்து கொள்வது என்று முடிவு செய்தோம். செம்பியன் மாதேவியின் ஆசியையும் பெற்றோம். பெரிய பிராட்டி திரும்பிச் சென்று கால் நாழிகைக்குள் இவர் மேலே ஈட்டி பாய்வதற்கு இருந்தது. என்னால் கூட அதைத் தடுத்திருக்க முடியாது. அதனால் இவர் உயிருக்கு ஆபத்து வந்திருந்தால், என் கதி என்ன? கலியாணம் ஆவதற்கு முன்பே கைம்பெண் ஆகிவிடுவேனல்லவா?" 
"கருணாமூர்த்தியான திருமாலின் அருளினால் அப்படி ஒன்றும் நேராது. செம்பியன் மாதேவியின் ஆசியும் வீண் போகாது. தாங்கள் இந்த உத்தம புருஷரை மணந்து நெடுங்காலம் இனிது வாழ்ந்திருப்பீர்கள். ஆனால் இந்தப் பரம சாதுவான பிள்ளையை ஈட்டியால் குத்திக் கொல்ல முயன்ற பாதகன் யாராயிருக்கும்? அவனைத் தாங்கள் பார்த்தீர்களா? அடையாளம் ஏதேனும் தெரிந்ததா?" 
"பார்க்காமல் என்ன? தெரியாமல் என்ன? அந்த வைத்தியர் மகனாகிய பினாகபாணி என்னும் சண்டாளன் தான்! என் அத்தை மந்தாகினியைக் கோடிக்கரையிலிருந்து அக்கிரமமாகப் பிடித்துக் கொண்டு வந்து கொலைகாரனுக்குப் பலியாகச் செய்தவன்தான்! சோழ ராஜ்ஜியத்தில் இப்படி எல்லாம் அக்கிரமங்கள் நடக்கின்றன..." 
"இது என்ன அக்கிரமத்தைக் கண்டு விட்டீர்கள்? இதைவிட ஆயிரம் மடங்கு நடக்கப் போகிறது. சோழ நாட்டில் இன்றிரவு அராஜகம் ஆரம்பமாகப் போகிறது. சிற்றரசர்களுக்குள் பெரிய சண்டை மூளப் போகிறது. நாடெங்கும் மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டு மடியப் போகிறார்கள்! ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் அருளினால் ஒரு பெரிய அற்புதம் நடந்தாலன்றி இந்த நாட்டுக்கு வரப்போகும் விபத்துக்களைத் தடுக்க முடியாது!" என்றான் ஆழ்வார்க்கடியான். 
"வைஷ்ணவரே! இது என்ன இப்படிச் சாபம் கொடுப்பது போலப் பேசுகிறீர்? சோழ நாடு செழிப்படைய ஆசி கூறலாகாதா?" என்றான் அமுதன். 
"நாடு எப்படியாவது போகட்டும்! நாங்கள் கோடிக்கரைக்குப் போய் விடுகிறோம்!" என்றாள் பூங்குழலி. 
"நாம் போய்விடலாம். என் உயிரைக் காப்பாற்றிய இந்த உத்தம நண்பனை என்ன செய்வது?" என்று சேந்தன் அமுதன் கேட்டான். 
"இவனை உங்களால் எப்படியும் காப்பாற்ற முடியாது. இங்கேயே நீங்கள் இருந்தாலும் பயனில்லை. சிறையிலிருந்து தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதற்கு இப்போதே நாலாபக்கமும் சேவகர்கள் தேடி அலைகிறார்கள். விரைவில் இங்கேயும் வருவார்கள். வாசலில் நிற்கும் காவலர்களுக்கு நானே என்ன சமாதானம் சொல்லி அழைத்துப் போகிறது என்று தெரியவில்லை!" என்றான் ஆழ்வார்க்கடியான். 
"ஐயா! வைஷ்ணவரே! நீர் எவ்வளவோ கெட்டிக்காரர். முதன்மந்திரி அநிருத்தருக்கே யோசனை சொல்லக் கூடியவர். கொலைகாரனால் படுகாயம் பட்டிருக்கும் இந்த வாணர் குல வீரரைக் காப்பாற்ற ஒரு யோசனை சொன்னால் உமக்குப் புண்ணியம் உண்டு. நாங்கள் இருவரும் என்றென்றைக்கும் உமக்கு நன்றிக் கடன்பட்டிருப்போம்!" 
"தேவி அது அவ்வளவு சுலபமன்று!" 
"ஐயா! நிமிஷத்துக்கு நிமிஷம் எனக்கு மரியாதை அதிகரித்துக் கொண்டு வருகிறதே! நேற்றுவரை என்னை, 'ஓடக்காரி' என்று அழைத்தீர். சற்று முன்னால் 'அம்மணி' என்றீர். இப்போது 'தேவி' என்று அழைக்கிறீர். சற்றுப் போனால் 'இளவரசி' என்றே அழைத்து விடுவீர் போலிருக்கிறதே!" 
"ஆம், இளவரசி! இதோ நினைவற்றுக் கிடக்கும் இந்த வீர வாலிபனைக் காப்பாற்ற வேண்டுமானால், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தங்களை மணந்து கொள்ளப் போகும் இந்தப் பாக்கியசாலி ஒரு நாளைக்கு இளவரசராக வேண்டும்! அவர் இளவரசர் என்றால், தாங்களும் இளவரசிதானே?" 
"வைஷ்ணவரே! இது என்ன பரிகாசம்? நானாவது, ஒரு நாள் இளவரசனாக இருப்பதாவது? எதற்காக?" என்று கேட்டான் அமுதன். 
"என் ஒருவனுக்கு மட்டும் தெரிந்த இரகசியத்தை இப்போது உங்கள் இருவருக்கும் சொல்லப் போகிறேன். கேளுங்கள். இல்லை, முதலில் இதைப் பாருங்கள்!" என்று கூறிவிட்டு ஆழ்வார்க்கடியான் தன்னுடன் கொண்டு வந்திருந்த மூட்டையை அவிழ்த்து அவர்களுக்குக் காட்டினான். 
மதுராந்தகர் அணிந்திருந்த கிரீடமும், முத்து மாலைகளும், வாகுவலயங்களும் ஜாஜ்வல்யமாய் ஜொலித்தன. "ஆகா! இவை இளவரசர் மதுராந்தகர் தரித்திருந்தவை அல்லவா? சற்று முன்பு இங்கேயே நாங்கள் பார்த்தோமே?" என்றான் அமுதன். 
"இவை எங்கிருந்து கிடைத்தன?" என்றாள் பூங்குழலி. 
"இந்த நந்தவனத்தின் வேலி ஓரத்தில் இருந்து கிடைத்தன. இன்னும், நான் சொல்ல வந்த இரகசியத்தையும் கேளுங்கள். வடவாற்றங்கரையோடு நான் வந்து கொண்டிருந்தபோது இரண்டு குதிரைகளின் மீது இரண்டு பேர் விரைவாகப் போய்க் கொண்டிருந்ததைக் கண்டேன். அவை நான் வந்தியத்தேவனுக்காகவும், இவனுடன் சிறையிலிருந்து தப்பிய பைத்தியக்காரனுக்காகவும் இங்கே விட்டுப்போன குதிரைகள். அந்தப் பைத்தியக்காரனைத் தங்களுக்குக்கூடத் தெரியுமே?" 
"ஆமாம்; தெரியும். பாண்டிய வம்சத்து மணிமகுடத்தையும், இரத்தின ஹாரத்தையும் பற்றி யாரைப் பார்த்தாலும் உளறிக் கொண்டிருந்தவன்." 
"அவனேதான்! வடவாற்றங்கரையோடு அதிவேகமாகச் சென்ற குதிரைகளில் ஒன்றின் மீது அந்தப் பைத்தியக்காரன் இருந்தான். இன்னொரு குதிரை மேலிருந்தவர் இளவரசர் மதுராந்தகர் போலத் தோன்றியது. இங்கு வந்த பிறகு அது நிச்சயமாயிற்று." 
"இது என்ன விந்தை? மதுராந்தகர் எதற்காகத் தமது ஆபரணங்களைக் கழற்றி எறிந்து விட்டு ஓட வேண்டும்?" 
"அதுதான் எனக்கும் தெரியவில்லை. முதன்மந்திரியிடம் சொல்லி ஓடியவர்களைத் தொடர்வதற்கு ஆள்கள் அனுப்பப் போகிறேன். ஆனால் அதற்குள்ளே இங்கு பெரிய விபரீதங்கள் நடந்துவிடும் என்று அஞ்சுகிறேன்." 
"என்ன விபரீதம் நடந்து விடும்?" 
"பழுவேட்டரையர்களும் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்த சிற்றரசர்களும் இதோ தஞ்சைக் கோட்டை வாசலை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். கொடும்பாளூர் வேளாரும், முதன்மந்திரியும், மலையமானும் அவர்களை வரவேற்கக் கோட்டை வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இராஜ்ய உரிமை பற்றிச் சமாதானமாகப் பேசி முடிவு செய்ய வேண்டுமென்பது சக்கரவர்த்தியின் விருப்பம்; கட்டளை. ஆனால் பழுவேட்டரையர்கள் சமாதானப் பேச்சுத் தொடங்குவதற்கு முன்பு 'மதுராந்தகர் எங்கே?' என்று கேட்பார்கள். அவரைக் காணோம் என்றதும், கொடும்பாளூர் வேளார் மீது பாய்வார்கள்! சேநாதிபதிதான் பொன்னியின் செல்வருக்குப் பட்டத்தை நிச்சயம் செய்து கொள்வதற்காக மதுராந்தகரைக் கொன்று விட்டார் என்பார்கள். பெரிய வேளார் அதற்கு மறுப்புச் சொன்னாலும், அவரால் நிரூபிக்க முடியாது. உடனே பயங்கரமான உள்நாட்டு யுத்தம் ஏற்படும். சோழ நாடு விரைவில் சீர்குலையும்." 
"அதற்குள்ளே நாம் இங்கிருந்து புறப்பட்டுப் போய்விடுவோம்!" 
"தேவி! அது முடியாத காரியம்!" 
"பின்னே, என்ன சொல்கிறீர்?" 
"இந்த கிரீடத்தையும் ஆபரணங்களையும் சற்று நேரம் சேந்தன் அமுதன் அணிந்து கொள்ளட்டும். பொன்னியின் செல்வரை ஏற்றிக் கொண்டு வந்த யானையை நான் அழைத்துக் கொண்டு வருகிறேன் அதில் இவர் ஏறிக் கொள்ளட்டும். என்னுடைய ஆட்களை 'மதுராந்தகர் வாழ்க!' என்று கோஷித்துக் கொண்டு யானைக்கு முன்னும் பின்னும் போகச் சொல்லுகிறேன். மதுராந்தகர் ஏறி வந்த பல்லக்கும் அருகில் இருக்கிறது. அதில் வந்தியத்தேவனைப் போட்டுத் திரையை விட்டு விடுவோம். தேவி! தாங்கள் பல்லக்கின் பக்கமாக நடந்து வாருங்கள். மற்றதையெல்லாம் என்னிடம் விட்டு விடுங்கள்!" என்றான் ஆழ்வார்க்கடியான். 
"இது என்ன பைத்தியக்கார யோசனை?" என்றான் சேந்தன் அமுதன். 
"இவர் கிரீடத்தை வைத்துக் கொண்டால் அடையாளம் தெரியாமல் போய்விடுமா?" என்றாள் பூங்குழலி. 
"இராத்திரி வேளையில் யானை மேல் உட்கார்ந்திருப்பவரை யார் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்? சந்தேகம் ஏற்பட்டால் அல்லவோ கூர்ந்து பார்க்கப் போகிறார்கள்! உங்களுடனேயே நானும் வரப்போகிறேன். உங்கள் எல்லாரையும் கோட்டைக்குள் முதன்மந்திரியின் வீட்டில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு. இந்த வாணர் குலத்து வீரனைக் காப்பாற்றுவதற்கு வேறு வழி ஒன்றுமில்லை!" 
இன்னும் சிறிது நேரம் விவாதம் செய்த பிறகு, சேந்தன் அமுதனும் பூங்குழலியும் ஆழ்வார்க்கடியானுடைய யோசனைக்கு இணங்கினார்கள்.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel