←அத்தியாயம் 73: வானதியின் திருட்டுத்தனம்
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: "நானே முடி சூடுவேன்!"
அத்தியாயம் 75: விபரீத விளைவு→
596பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: "நானே முடி சூடுவேன்!"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
தியாக சிகரம் - அத்தியாயம் 74[தொகு]
"நானே முடி சூடுவேன்!"
வந்தியத்தேவன் கடைசியாகக் கூறினான்: "இளவரசே! ஒரே ஒரு மனிதர் மனசு வைத்தால் உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்லி என்னைக் குற்றமற்றவன் ஆக்கலாம். அந்த ஒருவர் பெரிய பழுவேட்டரையர்தான். கடம்பூர் மாளிகையில் யாழ்க் களஞ்சியத்தில் ஒளிந்திருந்த என்னைத் திடீரென்று கழுத்தைப் பிடித்து இறுக்கிக் கீழே தள்ளி மூர்ச்சை அடைந்து விழச் செய்தவர் அந்த வீரப் பெருமகனாராகவே இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். வேறு யாரும் அங்கு அச்சமயம் வந்திருக்க முடியாது. நந்தினிதேவி பேரில் சந்தேகங்கொண்ட அந்தக் கிழவர்தான் அவ்வாறு காளாமுகச் சைவராக உருக்கொண்டு மறைவிடத்திலிருந்து அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக வந்திருக்க வேண்டும். காளாமுகச் சைவக்கூட்டத்தைச் சேர்ந்த இடும்பன்காரி அவருக்கு இரகசிய வழியில் வருவதற்கு உதவி செய்திருப்பான். ஆனால் அந்த மாபெரும் வீரருக்கு என்னை முதன் முதல் பார்த்தபோதே என்மீது வெறுப்பு உண்டாகிவிட்டது. அந்த வெறுப்பு பிறகு நாளுக்குநாள் அதிகமாகியே வந்தது. அவர் என் உயிரைக் காப்பாற்றுவதற்காக முன் வந்து அங்கு உண்மையில் நடந்ததைச் சொல்லப் போவதில்லை. நான் இந்தப் பயங்கரமான பழி பூண்டு இறந்தால் அவருக்கு ஒருவேளை சந்தோஷமாகவே இருக்கும். ஆகையால், இளவரசே! எனக்குத் தப்பிச் செல்வதற்கு அனுமதி கொடுங்கள்! முடிந்தால் நான் ஈழ நாடு சென்று அங்கே பாண்டிய குலத்து மணிமுடியையும், இரத்தின ஹாரத்தையும், தேடிக் கண்டுபிடிப்பேன். அல்லது இங்கேயே உங்கள் கை வாளால் என்னைக் கொன்றுவிடுங்கள். என்னிடம் அளவிலாத அன்பு வைத்திருந்த தங்கள் தமையனாரைக் கொன்ற பழியைச் சுமந்து நாற்சந்தியில் கழுவில் ஏற்றப்படும் கதிக்கு என்னை ஆளாக்காதீர்கள்! அதைக் காட்டிலும் தங்கள் கை வாளினால் இறப்பது எனக்கு எவ்வளவோ ஆறுதல் அளிக்கும்! அல்லது இந்தக் கொடும்பாளூர்க் கோமகளின் கையினால் நஞ்சுண்டு இறந்தாலும் பாதகமில்லை. இவரும் தங்கள் திருத்தமக்கையுமே இந்த அனாதையின் பேரில் கருணை கொண்டு யமலோகத்தின் வாசற்படி வரைக்கும் சென்றிருந்தவனைத் திரும்பவும் இவ்வுலகத்துக்கு கொண்டு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இதற்காக இவர்களுக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை!"
இவ்வாறு வந்தியத்தேவன் கூறியபோது வானதி இளவரசரை நோக்கி, "கேளுங்கள் ஐயா! நீங்களே கேளுங்கள்! இந்தச் சுத்த வீரருக்குப் போர்க்களத்தில் எதிரிகளுக்கு முன்னால் நின்று போரிட்டு வீர சொர்க்கம் அடையும் விருப்பம் இல்லையாம்! பெண்களின் கையினால் விஷம் அருந்திச் சாவதற்குத் தவம் கிடக்கிறாராம்!" என்றாள்.
"இளவரசே! இவரும், தங்கள் திருத்தமக்கையும் என் மீது சொல்லும் நிந்தை மொழியினாலேயே என்னைக் கொன்று விடுவார்கள் போலிருக்கிறது. அதைவிட இவர்கள் கையினால் நஞ்சு அருந்தி இறப்பது விசேஷம் அல்லவா?" என்றான் வாணர் குல வீரன் வந்தியத்தேவன்.
அருள்மொழிவர்மர் இந்தப் பேச்சுக்களையெல்லாம் பாதி கவனத்துடனேதான் கேட்டுக் கொண்டிருந்தார். அவருடைய மனத்திற்குள் வேறு எதைப்பற்றியோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. சட்டென்று ஒரு குதி குதித்து எழுந்து நின்று, "ஆகா! நான் முடிவு செய்துவிட்டேன். நானே சோழ நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வேன். நாடு நகரமெல்லாம் மக்கள் "அருள்மொழிவர்மனே திருமுடி சூட்டவேண்டும்!" என்று கோஷம் செய்கிறார்கள். போர் வீரர்களின் விருப்பமும் அதுவே! அவர்கள் எல்லாருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுவேன். எதற்காகத் தெரியுமா? உன்னைக் குற்றம் அற்றவன் என்று விடுதலை செய்வதற்காகத்தான். அதனால் எனக்கு ஏதேனும் அபகீர்த்தி வருவதாக இருந்தால் வரட்டும்! அது என்னைப் பாதியாது! என் பேரில் விரோதப்பான்மை கொண்ட சிற்றரசர்கள் சிலர் ஒருவேளை அந்த அபகீர்த்தியைப் பரப்புவதற்கு முயலலாம். ஆனால் மக்கள் அதை நம்பமாட்டார்கள். சிற்றரசர்கள் என் பேரில் குற்றம் சுமத்தத் துணிந்தால், அது அவர்கள் பேரிலேயே திரும்பிப் போய்ச் சேரும்! கடம்பூர் மாளிகைக்குச் சிற்றரசர்கள் விருந்துக்கு அழைத்து அவரைக் கொன்று விட்டார்கள் என்று என்னால் திருப்பிச் சொல்ல முடியும். அத்தகைய நம்பிக்கைத் துரோகத்துக்காகவும் இராஜ குலத் துரோகத்துக்காகவும் அவர்கள் எல்லாரையும் தண்டிக்கவும் என்னால் முடியும். எது எப்படியானாலும் நானே முடிசூட்டிக் கொள்ளப் போகிறேன். என் தந்தை, தமக்கை இவர்களின் விருப்பத்துக்கு விரோதமாக நடந்தாலும் நடப்பேன். ஆனால் உனக்கு எந்தவிதத் தீங்கும் நேருவதை என்னால் பார்த்துக் கொண்டு பொறுத்திருக்க முடியாது!" என்றார்.
வானதி ஒரு குதூகலத்துடன், "தங்களுடைய இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு இளைய பிராட்டி இங்கே இல்லாமற் போனாரே! அவர் முன்னிலையிலும் ஒரு தடவை இந்த வார்த்தைகளைச் சொல்லுங்கள்!" என்றாள்.
"ஒரு தடவை என்ன? பல தடவை சொல்லுகிறேன்! காரியத்திலும் இதைச் செய்து காட்டுகிறேன்!" என்றார் பொன்னியின் செல்வர்.
வந்தியத்தேவன் தன் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, "ஐயா! ஏழையும் அனாதையுமான என் காரணமாகத் தாங்கள் தங்களுடைய மன உறுதியை மாற்றிக் கொண்டு முடிசூடுவதற்கு முன் வந்தால், அது சோழ நாடு செய்த பாக்கியமாகும். உண்மையைச் சொல்லுவதாக இருந்தால், மதுராந்தகத்தேவரை நான் அறிந்தவரையில் அவர் முடி சூடச் சிறிதும் தகுதியில்லாதவர். பெண்களைப் போல் மூடுபல்லக்கிலே பிரயாணம் செய்து இராஜ்யத்துக்காகச் சதி முயற்சிகளிலே ஈடுபடுகிறவர், ஒரு சாம்ராஜ்யத்தை ஆளத் தகுதியுடையவரா? விஜயாலய சோழரும், பராந்தக சோழரும் அலங்கரித்த சோழ சிங்காதனத்தில் இத்தகைய கோழைத்தனமே உருக்கொண்டவர் ஏறுவது நியாயமா? இதை இந்நாட்டு மக்கள் விரும்பாததில் வியப்பு ஒன்றுமில்லை!" என்று குரல் தழுதழுக்கக் கூறினான்.
"இதை உணர்ந்துதான் மதுராந்தகத் தேவரே மாயமாய் மறைந்து விட்டார் போலிருக்கிறது!" என்றாள் வானதி.
"ஆம்; ஆம்! அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் பிரயத்தனத்தை இனி விட்டுவிடப் போகிறேன். நானே முடிசூட்டிக் கொள்ளப் போகிறேன்!" என்றார் அருள்மொழிவர்மர்.
இதைக் கேட்டுக் கொண்டே அச்சமயம் அவ்வறையினுள் பிரவேசித்த குந்தவை, "தம்பி! அந்த ஆசையை அடியோடு விட்டுவிடு! உனக்குச் சிங்காதனமும் இல்லை. மணிமகுடமும் இல்லை. என் அருமைத் தோழி வானதி தஞ்சைச் சிங்காதனத்தில் ஏறுவதில்லை என்று சபதம் செய்திருப்பதை மறந்து விட்டாயா? அவள் இல்லாமல் வேறொரு பெண்ணை உன் அருகில் வைத்துக் கொண்டு நீ முடிசூட்டிக் கொள்வதை நான் ஒருநாளும் என் கண்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!" என்றாள்.
"அக்கா! அந்தச் சமயத்தில் மட்டும் தாங்கள் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டால் போகிறது. நான் வேண்டுமானாலும் தங்கள் கண்களை அச்சமயம் பொத்தி உதவுகிறேன்!" என்றாள் வானதி.
பொன்னியின் செல்வர் குந்தவையைப் பார்த்து, "சகோதரி, தங்கள் தோழியின் சபதத்துக்காகச் சோழ ராஜ்யம் அரசன் இல்லாமலே நடக்க முடியுமா? நம் தந்தையோ இராஜ்ய பாரத்தை இறக்கி வைத்து விட்டுக் காஞ்சிக்குப் போக வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறார். மதுராந்தகத் தேவரோ, மாயமாக மறைந்து விட்டார், வேறு வழிதான் என்ன? எப்படியும் நான் முடிசூட்டிக் கொள்ளாமல் தீராது போலிருக்கிறதே? இராஜ்ய உரிமை பற்றி நாடெங்கும் ஒரே கொந்தளிப்பாக இருப்பது தங்களுக்குத் தெரியாததல்லவே? இந்தக் கொந்தளிப்பை, எத்தனை காலம் விட்டு வைக்க முடியும்?" என்றார்.
"தம்பி! ஒரு சந்தோஷமான சமாசாரம். அதைத் தெரிவிப்பதற்குத் தான் நான் விரைந்து ஓடி வந்தேன். மறைந்திருந்த மதுராந்தகத் தேவர் வெளிப்பட்டு விட்டார். சோழ குலத்து முன்னோர்கள் செய்த தவம் வீண் போகவில்லை! இராஜ்யம் என்ன ஆகுமோ என்று நீ கவலைப்பட வேண்டியதில்லை. அவர் வேண்டாம் என்று சொன்னாலும் நாம் பிடிவாதம் பிடித்து அவருக்கு மகுடாபிஷேகம் செய்து வைக்கவேண்டும்!" என்றார் இளையபிராட்டி.
அவருடைய உற்சாகம் மற்ற மூவருக்கும் சிறிது வியப்பை அளித்தது. சில நாட்களாகவே குந்தவைப் பிராட்டி மதுராந்தகருக்கு முடிசூட்டுவதற்குச் சாதகமாயிருந்தது உண்மைதான். ஆனால் அதில் அவர் இவ்வளவு உற்சாகம் உடையவர் என்று இதுவரையில் காட்டிக்கொள்ளவில்லை.
பொன்னியின் செல்வர் அது சம்பந்தமான தம் வியப்பை அடக்கிக்கொண்டு, "தேவி! அவர் எங்கே மறைந்திருந்தார்? எதற்காக? எப்படி வெளிப்பட்டார்?" என்று கேட்டார்.
"நமக்கு அருகிலேயே அவர் இருந்து வந்தும் நம்மாலேதான் கண்டுகொள்ள முடியாமல் போயிற்று. தம்பி! செம்பியன்மாதேவியின் திருவயிற்றில் உதித்தவர்தான் சோழ சிங்காதனத்தில் ஏறத் தகுந்தவர். உன் சித்தப்பாவுக்குத்தான் இந்த ராஜ்யம் நியாயமாக உரியது. நீ மகுடம் புனையலாம் என்ற எண்ணத்தை அடியோடு விட்டுவிடு! ஓர் அதிசயத்தைக் கேள்! தம்பி! நாலு நாளைக்கு முன்னால் நம் சித்தப்பாவுக்கு ஒரு பெரிய கண்டம் வந்தது. கொலைகாரன் ஒருவன் அவர் மீது குத்தீட்டியை வீசி எறியக் குறி பார்த்தான். அதை அவன் எறிந்திருந்தால் மதுராந்தகத்தேவரின் உயிர் போயிருக்கும். சோழ குலத்தில் இன்னொரு அகால மரணம் ஏற்பட்டிருக்கும். அப்படி நேராமல் தடுத்த வீராதி வீரர் யார் தெரியுமா? தம் உயிரைக் கொடுக்கத் துணிந்து நம் சித்தப்பாவைக் காப்பாற்றியவர் யார் தெரியுமா?" என்று கூறிக் கொண்டே இளையபிராட்டி தம் விசாலமான கண்களை வந்தியத்தேவன் பேரில் திரும்பினார். அந்தக் கண்களில் ததும்பிய அன்பும் ஆர்வமும், நன்றியும் நன்மதிப்பும், ஆதரவும் அனுதாபமும் வந்தியத்தேவனது நெஞ்சின் அடிவாரம் வரையில் சென்று அவனைத் திக்குமுக்காடச் செய்தன.
பொன்னியின் செல்வரோ வியப்புக் கடலில் ஆழ்ந்தவராக, "இது என்ன அக்கா! எனக்குப் புரியவில்லையே? என் தோழனும் இதுபற்றி எனக்குச் சொல்லவில்லையே?" என்றார்.
"அவர் சொல்லியிருக்க மாட்டார் ஏனெனில் அவர் செய்த காரியத்தின் பெருமையை அவரே உணர்ந்திருக்க மாட்டார். சோழ குலம் அவருக்கு எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறது என்று அவருக்கே தெரியாது!"
"அக்கா! புதிர்போடுவது போல் பேசுகிறீர்கள்? எல்லாம் ஒரே மர்மமாயிருக்கிறதே? எங்களை வீண் திகைப்புக்கு உள்ளாக்காமல் விளக்கமாகச் சொன்னால் நல்லது! இந்த வாணர் குல வீரர் மதுராந்தகரை எப்படி, எங்கே, எந்தவித அபாயத்திலிருந்து காப்பாற்றினார்? மதுராந்தகத்தேவர் இப்போது எங்கே?" என்று இளவரசர் கேட்டார்.
"பொன்னியின் செல்வ! இதோ இன்னும் சில வினாடிப் பொழுதில் அவரே இங்கு வந்து விடுவார்! நீ இங்கே வந்திருக்கிறாய் என்பது தெரிந்து, இவ்விடம் அழைத்து வரச் சொல்லியிருக்கிறேன். அவர் வாய்மொழியாகவே கேட்டுத் தெரிந்து கொள். அல்லது எல்லாவற்றையும் கண்ணால் பார்த்த பூங்குழலியிடம் கேட்டுத் தெரிந்துகொள்... இதோ அவர்கள் வருகிறார்கள் போலிருக்கிறது. ஆம்; அச்சமயம் அறைக்கு வெளியில் காலடிச் சத்தம் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் நாலு பேர் உள்ளே வந்தார்கள். முதன்மந்திரி அநிருத்தர், ஆழ்வார்க்கடியான், பூங்குழலி, சேந்தன் அமுதன் ஆகியவர்கள் வந்தார்கள். சேந்தன் அமுதன் மட்டும் வழக்கத்துக்கு மாறாக விசித்திரமாக உடை அணிந்திருந்தான். தலையில் இளவரசுக் கிரீடம் அணிந்து, பட்டுப் பீதாம்பரமும், அரச குலத்துக்குரிய ஆபரணங்களும் புனைந்திருந்தான்.
அறைக்குள் வந்த கோஷ்டியினரை உள்ளே இருந்தவர்கள் சிறிது வியப்புடன் பார்த்தார்கள். "சகோதரி! மதுராந்தகர் வருவார் என்றல்லவோ சொன்னீர்கள்? அவரைக் காணோமே?" என்றார் அருள்மொழி.
"தம்பி! இதோ உன் முன்னால் இளவரசுக் கிரீடம் அணிந்து நிற்கிறாரே, இவர்தான் செம்பியன்மாதேவியின் திருவயிற்றில் உதித்த, சிவஞான கண்டராதித்தரின் புதல்வர். இவர்தான் நமக்கெல்லாம் சித்தப்பன் முறை பூண்ட சிவபக்திச் செல்வர். இத்தனை காலமும் சேந்தன் அமுதன் என்ற பெயருடன் அஞ்ஞாத வாசம் செய்து வந்தார். சோழர் குலம் செய்த பாக்கியத்தினால் இன்றைக்கு வெளிப்பட்டு வந்தார். இவரைத் தான் நாலு நாளைக்கு முன்னால் கொடியோன் ஒருவன் ஈட்டியினால் குத்திக் கொல்ல முயன்றான். அதைத் தடுத்து இந்த வாணர் குல வீரர் சோழ குலத்துக்கு இணையில்லாத உதவி புரிந்தார். நமது முதன்மந்திரியின் சீடரான இந்த வீர வைஷ்ணவர் இவர் சைவர் என்பதையும் பொருட்படுத்தாமல் இவரைக் கோட்டைக்குள் கொண்டு வந்து சேர்த்தார்!..."
இச்சமயத்தில் திருமலை குறுக்கிட்டு, "தேவி! இச்சைவருக்கு நான் எந்தவித உதவியும் செய்யவும் இல்லை. செய்ய விரும்பவும் இல்லை. வல்லத்து இளவரசரைப் பல்லக்கில் கொண்டு வருவது சாத்தியமாகும் பொருட்டு இவருக்கு மாறுவேடம் புனைந்து யானையில் ஏற்றி வந்தேன்" என்றான்.
குந்தவை, "ஆம், ஆம்! திருமலை நம்பி இரு வகையில் பேருதவி புரிந்திருக்கிறார். மதுராந்தகத் தேவருக்கு இளவரசுக் கிரீடம் அணிவித்து யானை மீது ஏற்றிக் கொண்டு வந்தபோது உண்மையிலேயே இந்த நாட்டின் சிங்காதனத்துக்குரியவரை அழைத்து வருகிறோம் என்று தெரிந்திராது. அல்லது தெரிந்து தான் செய்தாரோ, அதை நான் அறியேன்! எப்படியேனும் இருக்கட்டும்! தம்பி! இத்தனை காலமும் மதுராந்தகத்தேவர் என்று நாம் எல்லோரும் எண்ணியிருந்தவர் உண்மையில் மதுராந்தகத்தேவர் அல்ல. இவர்தான் சோழ குலத்தின் தவப்பயனாக மூத்த எம்பிராட்டியின் வயிற்றில் உதித்தவர். நாம் அறிய முடியாத இறைவன் திருவிளையாடல் இவரை இத்தனை காலமும் குடிசையில் வாழ்ந்திருக்கச் செய்தது. ஆயினும் சோழர் தொல்குடியில் பிறந்ததனால் வந்த குணாதிசயங்கள் இவரிடம் குடிகொண்டிருந்ததை நாம் எல்லோரும் ஒவ்வொரு சமயம் பார்த்து வியந்திருக்கிறோம். முன்னொரு சமயம் இவர் இந்த வாணர் குலத்து வீரரைத் தப்பவிக்கவும், உன்னை இவரும், பூங்குழலியும் கோடிக்கரையிலிருந்து நாகப்பட்டினம் வரையில் கொண்டு போய்ச் சேர்த்ததைத்தான் மறக்க முடியுமா? இவர்தான் உண்மையில் நம் சித்தப்பா என்பதை இன்று செம்பியன் மாதேவியின் வாய்மொழியாகவும் அறிந்தோம். இவரும் ஒப்புக்கொண்டார். தம்பி! இந்தப் புண்ணிய தினத்தில் இவரை நம் அரண்மனைக்கு வரவேற்கிறேன். இல்லை இல்லை! இவருடைய சொந்த அரண்மனைக்கு வரவேற்கிறேன். இத்தனை காலமும் நம்மைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தவரை இன்று நம் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்துவிடும்படி அழைக்கிறேன். இத்தனை நாளும் பிரிந்திருந்தவர் நம்மோடு வந்து சேர்ந்த வைபவத்தை எவ்வளவோ விமரிசையாகக் கொண்டாட வேண்டும். அதற்குத் தகுதியான காலம் இதுவன்று. இந்தச் செய்தியை எவ்வளவு தூரம் வெளியில் தெரியாமல் நமக்குள் வைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. ஆகையால் நமக்குள்ளேயே இந்த வைபவத்தை நடத்திக் கொள்ளலாம். சித்தப்பா! இப்படி வாருங்கள்! நெடு நாளைய பிரிவுக்குப் பின்னர் இன்று சோழர் குலத்தில் வந்து சேர்ந்ததற்காக எங்கள் மகிழ்ச்சியை வேறு விதத்தில் தெரிவித்துக் கொள்ள முடியவில்லை. என் அருமைச் சகோதரர்கள் வெளியூர்களுக்குப் போகும்போதும் சரி, திரும்பி வரும்போதும் சரி, அவர்கள் நெற்றியில் நான் திருநீறு பூசிக் குங்குமத் திலகம் இடுவது வழக்கம். அதுபோலவே இன்று திரும்பி வந்து சேர்ந்த தங்கள் நெற்றியில் திருநீறும் குங்குமமும் இடுகிறேன்!"
இவ்விதம் கூறிவிட்டு இளையபிராட்டி குந்தவை தேவி சேந்தன் அமுதன் என்று இத்தனை காலமும் பெயர் வழங்கிய மதுராந்தகன் நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டார்.
அப்போது முதன்மந்திரி அநிருத்தர் "சோழர் குலத் தோன்றல் இளங்கோ மதுராந்தகத்தேவர் நீடூழி வாழ்க!" என்று ஆசி கூறினார்.
"வாழ்க! வாழ்க!" என்று ஆழ்வார்க்கடியான் நம்பி எதிரொலி செய்தான்.
குந்தவை முதலில் பேச ஆரம்பித்தபோது அருள்மொழிவர்மர் உள்ளத்தில் வியப்புத்தான் அதிகமாக இருந்தது. அதில் சிறிது சந்தேகமும் கலந்திருந்தது. இதெல்லாம் தம் திருத்தமக்கையாரின் விளையாட்டோ , ஏதேனும் ஒரு முக்கிய காரணம் பற்றி இவ்விதம் பேசுகிறாரோ என்று கூட எண்ணினார். போகப் போக அவருடைய ஐயம் தீர்ந்துவிட்டது. குந்தவை தேவியின் வார்த்தைகள் இதய அந்தரங்கத்திலிருந்து வந்த அன்புணர்ச்சி ததும்பிய வார்த்தைகள் என்பதை அறிந்தார். அவர் பெரிதும் போற்றிய தமக்கையின் உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சி வெள்ளம் அவரையும் ஆட்கொண்டு விட்டது.
குந்தவை தேவி திலகமிட்டதும் அருள்மொழித்தேவர் சேந்தன் அமுதன் அருகில் சென்று "சித்தப்பா! முன்னமே தங்களிடம் நான் அன்பு கொண்டிருந்தேன். தாங்கள் என் சகோதரராயிருக்கக் கூடாதா என்று எண்ணியதுமுண்டு. நமக்குள் இருக்கும் இரத்தத் தொடர்புதான் அத்தகைய உணர்ச்சியை எனக்கு அளித்தது போலும்!" என்று கூறிச் சேந்தன் அமுதனை ஆலிங்கனம் செய்துகொண்டு கண்ணீர் பெருக்கினார்.
வந்தியத்தேவன், "ஆகா! நான் முன்னமே கொஞ்சம் சந்தேகித்தேன். சேந்தன் அமுதன் என்கிற சிவபக்தருக்குள்ளே பரம்பரையான வீர இராஜகுலம் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கத்தான் வேண்டும் என்று எண்ணினேன். இல்லாவிட்டால் ஊரும் பேரும் இல்லாதவனாக வந்த எனக்கு அடைக்கலம் தந்து ஆதரித்து ஊரை விட்டு ஓடவும் உதவி செய்திருப்பாரா? பேரரசர் மகனே, முன்னொரு தடவை எனக்குச் செய்த உதவியை எனக்கு மறுபடியும் செய்து அருள் புரியுங்கள். தங்களுடைய மகுடாபிக்ஷேக வைபவத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தமாய்த் தானிருக்கிறது. என்ன செய்யலாம்! ஒரு விஷயதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. சேந்தன் அமுதனாருக்குச் சோழ சாம்ராஜ்யம் சொந்தமாவதிலே கூட எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை. எனக்குக் கடல் கடக்க உதவி செய்த பூங்குழலி அம்மை மகாராணி ஆகப் போவதிலேதான் எனக்குப் பூரிப்பு! சமுத்திர குமாரியின் ஆசைக் கனவு இவ்வளவு விரைவில் நிறைவேறப் போகிறது என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார்!" என்றான்.
குந்தவை குறுக்கிட்டு, "ஐயா! தாங்கள் இன்னும் சில நாள் இவ்வளவு அதிகமாகப் பேசாமலிருந்தால் நல்லது. அப்போது உடம்பு குணப்பட்டுத் தப்பி ஓடுவதாயிருந்தாலும் விரைவாக ஓட முடியும்!" என்றாள்.
பின்னர், "தம்பி! அருள்மொழி! இத்தனை காலமும் நமது அருமைப் பாட்டியார் தமது திருமகனுக்கு மகுடம் சூட்டுவதை ஏன் ஆட்சேபித்தார் என்பதை இப்போது நாம் அறிந்து கொண்டோ ம். நமக்குக்கூட பழைய மதுராந்தகர் முடிசூடுவதில் அவ்வளவு திருப்தியில்லாமலிருந்தது. வீர சோழ குலத்தில் பிறந்தவர்களிடம் இருக்கவேண்டிய குணாதிசயங்கள் அவரிடம் இல்லை. நமது பாட்டியார் எவ்வளவோ முயன்று பார்த்தும், சிவபக்தி அவருடைய உள்ளத்தில் ஒட்டவில்லை. வீரம் என்பது அவரிடம் மருந்துக்குக்கூட இல்லை. அப்படியிருந்தும் ஒருவாறு நாம் அவருக்கே முடிசூட்டுவதற்கு மனத்தைச் சரிப்படுத்திக் கொண்டோ ம். இந்தப் புதிய மதுராந்தகருக்குப் பட்டம் கட்டுவதில் நமக்கெல்லாம் திருப்தி என்பது மட்டுமில்லை, குதூகலமும் பூரிப்பும் அடைகிறோம். உன்னையும் வல்லத்து இளவரசரையும் நடுக்கடலில் மூழ்காமல் கரையேற்றிக் காப்பாற்றிய பூங்குழலி சிங்காதனம் ஏறுவதைப் பார்க்கவும் எனக்கு ஆசையாக இருக்கிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நம் முதன்மந்திரி உடனே செய்ய வேண்டும்!" என்றாள்.
"தேவி! பெரிய பழுவேட்டரையர் மனசு வைத்துக் கடம்பூர் மாளிகையிலே என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டும். பழைய மதுராந்தகத்தேவர் என்ன ஆனார் என்பது தெரிய வேண்டும். இந்த இரண்டு காரியமும் ஆவதற்கு முன்னால் மகுடாபிஷேகத்துக்கு நாள் வைப்பது எப்படி?" என்றார் அநிருத்தர்.
"பெரிய பழுவேட்டரையரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். பழைய மதுராந்தகரைக் கண்டுபிடிப்பது உங்கள் பொறுப்பு!" என்றாள் குந்தவை.
அப்போது சேந்தன் அமுதன் என்று நாம் அதுவரையில் அழைத்து வந்த இளவரசர் மதுராந்தகத்தேவர் பொன்னியின் செல்வரைப் பார்த்துக் கூறினார்: "இளவரசே! தாங்கள் என்னைச் சித்தப்பா முறை வைத்து மரியாதையாக அழைத்தீர்கள். இவர்களும் என்னை 'இளவரசர்' என்று அழைக்கிறார்கள். ஆனால் தங்களை நான் 'மகனே' என்று அழைப்பது சாத்தியமில்லை. இருபத்திரண்டு ஆண்டு எளிய குடிசையில் காலம் கழித்தவன் திடீரென்று இன்றைக்கு என்னைப் பேரரசர் குலத்தில் பிறந்த இளங்கோவாகக் கருதிக்கொள்ளவும் முடியவில்லை. உங்கள் எல்லாருக்கும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்கிறேன். வந்தியத்தேவர் தப்பி ஓடக் காரணமாக இருந்ததற்காக என்னைச் சில நாள் பாதாளச் சிறையில் அடைத்திருந்தார்கள். அப்போது பக்கத்து அறையிலிருந்தவன் மூலம் இன்று வெளியான செய்தியை நான் அறிந்தேன். ஊமைத் தாயின் பிள்ளை அரண்மனையில் அரச குமாரனாக வளர்கிறான் என்றும், இராஜ குலத்துக் குழந்தை ஊமைத் தாயின் வீட்டில் வளர்ந்து வருகிறான் என்றும் அவன் கூறினான். அப்போதே எனக்கு உண்மை தெரிந்து விட்டது. உலகம் போற்றும் செம்பியன் மாதேவி என்னிடம் காட்டிய அன்பின் காரணத்தை ஊகித்துக் கொண்டேன். அவர் என்றாவது ஒருநாள் என்னை 'மகனே! என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை இன்று நிறைவேறி விட்டது இதற்கு மேல் நான் ஒன்றும் விரும்பவில்லை!..."
முதல்மந்திரி குறுக்கிட்டு, "இளங்கோவே! தாங்கள் விரும்புகிறீர்களா, இல்லையா என்பது கேள்வி அல்லவே! எது நியாயம், எது முறைமை என்றுதானே யோசிக்கவேண்டும்?" என்றார்.
"ஆகா! நன்றாக யோசியுங்கள், என்னைப் பற்றிய வரையில் யோசனை அவசியமே இல்லை. ஏற்கனவே தீர்க்கமாக யோசித்து முடிவு செய்துவிட்டேன். பூங்குழலி பலமுறை என்னிடம் 'அரசகுமாரனை மணந்து அரியாசனம் ஏறப்போகிறேன்' என்று கூறினாள். அதனாலேயே என் அந்தரங்கக் காதலை நிராகரிப்பதாகவும் சொன்னாள். அப்போதெல்லாம் 'பெண்ணே! உண்மையில் நான் அரசகுமாரன் தான்! நான் விரும்பினால் இந்தச் சோழ சாம்ராஜ்யம் என்னுடையதாகும்!' என்று கூற என் உள்ளமும் நாவும் துடிதுடித்தன. அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். நாடாளும் ஆசை என் உள்ளத்தில் என்றும் புகலாகாதென்று இறைவனை வேண்டிக்கொண்டேன். அந்த வைராக்கியத்தை நிறைவேற்றும் பொருட்டுப் பூங்குழலியைத் தியாகம் செய்யவும் உறுதி கொண்டிருந்தேன். நல்லவேளையாக, இந்தச் சமுத்திர குமாரி தனக்குத் தகுதியில்லாத ஆசையை விட்டுவிட்டு, இந்த ஏழைச் சிவாலயத் தொண்டனை மணந்து கொள்ள முன்வந்தாள்."
பூங்குழலி இங்கே குறுக்கிட்டு, "ஐயா! எனக்குத் தகுதியில்லாத ஆசை என்று எப்படிக் கூறினீர்கள்? மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தினி ஆவதற்கும் நான் தகுதி உடையவளே. அப்படியிருந்தும் தங்களை மணந்து பூமாலை கட்டிப் பிழைப்பதற்கும் ஓடம் தள்ளி வாழ்நாளைக் கழிப்பதற்கும் இசைந்தேன்!" என்றாள்.
"அப்படிச் சொல், பூங்குழலி! உன் தகுதியை நிலைநாட்ட இதுவே போதுமே! தகுதியும் தகுதியின்மையும் எப்படி ஏற்படுகின்றன?
'பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்'
என்று தெய்வப் புலவரின் தமிழ் மறை கூறுகிறதே! ஆகையால், உன்னுடைய பழைய மனோரதத்தை நீ இப்போது கை விட்டுவிட வேண்டாம். உன்னைக் கைப்பிடிக்கப் போகும் இந்தப் பேரரசன் மகனுக்கும் எங்களுடன் சேர்ந்து சொல்லு! சித்தப்பா! தாங்கள் தங்கள் பிறப்பின் உண்மையை அறிந்த பிறகும் இந்த ராஜ்யம் வேண்டாம் என்று வைராக்கியம் கொண்டிருந்தது நியாயந்தான். அது தங்கள் பிறவிக் குணத்தின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இப்போது நாங்கள் எல்லாரும் சொல்லுகிறோம், சக்கரவர்த்தி சொல்லுகிறார், முதன்மந்திரி சொல்லுகிறார், நானும் என் சகோதரனும் சொல்லுகிறோம். என் தோழி வானதி சொல்வதுடன் அவளுடைய பெரிய தகப்பனாருடைய மனத்தையும் மாற்றி விடுவதற்கு ஒப்புக்கொள்கிறாள். இப்போது ஏன் தாங்கள் மறுக்க வேண்டும்?" என்றாள் இளைய பிராட்டி குந்தவை தேவி.
"தேவி! நீங்கள் எல்லாரும் சொல்லுகிறீர்கள் ஆனால் இந்த ராஜ்யத்தில் குடிமக்கள் என்ன சொல்லுகிறார்கள்? அது உங்களுக்கு ஒருவேளை தெரிந்திராது. நாட்டு மக்களோடு பழகியுள்ள எனக்கு நன்றாகத் தெரியும். இந்தத் தஞ்சையிலும், பழையாறையிலும், குடந்தையிலும், கோடிக்கரையிலும், நாகைப்பட்டினத்திலும் ஜனங்களின் விருப்பம் என்ன என்று எனக்கு நன்றாய்த் தெரியும். பாண்டிய நாட்டிலும், பல்லவ நாட்டிலும், கொங்கு நாட்டிலும், ஈழ நாட்டிலும் உள்ள மக்களின் விருப்பத்தையும் நான் கேள்வியினால் அறிந்திருக்கிறேன். 'அருள்மொழிவர்மரே திருமுடி சூடவேண்டும்' என்பதுதான் ஏகோபித்த மக்களின் வாக்கு. இவ்வளவு பெரிய பிரளய வெள்ளத்தை எதிர்த்து என்னால் நீந்த முடியுமா? நான் ஆசைப்பட்டாலும் இந்தப் பெரிய சோழ சாம்ராஜ்யத்தை என்னால் ஆள முடியுமா? கடவுளே! நீங்கள் எல்லாரும் 'பழைய மதுராந்தகர்' என்று சொல்கிறவர் மீது ஜனங்கள் எவ்வளவு வெறுப்புக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அறிவேன். அந்த வெறுப்புக்கெல்லாம் என்னை உரிமையாளனாக்கி விடப் பார்க்கிறீர்களா? வேண்டாம்! வேண்டாம்! அவ்வளவு பெரிய தீங்கை எனக்குச் செய்ய வேண்டாம். நான் உங்களில் யாருக்கும் எந்த விதத் தீங்கும் செய்யவில்லையே?"
மற்றவர்களில் யாரும் இதற்கு மறுமொழி சொல்வதற்குள் பொன்னியின்செல்வர் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நின்று, "இந்தப் பேச்சு இத்துடன் நிற்கட்டும்! நீங்கள் இந்த அறைக்குள் வரும் சமயத்தில் நான் "சோழ ராஜ்யத்துக்கு முடிசூட்டிக் கொள்ளப் போகிறேன்" என்று வந்தியத்தேவனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அதை நிறைவேற்றியே தீருவேன். முதிய எம்பிராட்டியின் திருவயிற்றில் உதித்த இந்த உத்தமத் தோழரின் கருத்தையும் அறிந்து கொண்டேன். இராஜ்ய உரிமை பற்றி இனிப் பேச்சு எதுவும் வேண்டாம்!" என்றார்.