←அத்தியாயம் 90: பொன்மழை பொழிந்தது!

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: மலர் உதிர்ந்தது!

முடிவுரை→

 

 

 

 

 


613பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: மலர் உதிர்ந்தது!கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 91[தொகு]
மலர் உதிர்ந்தது!


வந்தியத்தேவன் ஓலையை வாங்கிக் கொண்டு வானதியைப் பார்த்து, "இளவரசி! என்னைத் தங்களுக்கு நினைவிருக்கிறதா? அடியோடு மறந்து விட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்?" என்றான். 
"ஐயா! தங்களை எவ்வாறு நான் மறக்க முடியும்? எனக்கும் என் கணவருக்கும் தாங்கள் செய்துள்ள உதவிகளைத் தான் எப்படி மறக்க முடியும்?" என்றாள் வானதி. 
"அதனாலேதான் நான் இல்லாத சமயம் பார்த்துத் தங்கள் திருமணத்தை நடத்திக் கொண்டீர்களாக்கும்!" என்றான். 
வானதி குறும்புப் புன்னகையுடன், "ஆமாம்; தாங்கள் இருந்திருந்தால் பொன்னியின் செல்வர் மகுடாபிஷேகத்தைப் போல் திருமணமும் நடந்திருக்கலாம் அல்லவா? தாங்கள் என்ன சூழ்ச்சி செய்திருப்பீர்களோ என்னமோ அதை யார் கண்டது?" என்றாள். 
"நானா பொன்னியின் செல்வருக்கு மகுடாபிஷேகம் நடக்காதபடி செய்தேன்? பூங்குழலியிடம் போட்டி போட்டுக் கொண்டு தாங்கள் 'சிங்காதனம் ஏறுவதில்லை' என்று செய்த சபதம் அல்லவா அதற்குக் காரணம்? படகுக்காரப் பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடித்தது! என் மீது குறைப்பட்டு என்ன பயன்?" என்றான் வந்தியத்தேவன். 
"அவளே அந்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்கட்டும்! அதற்காக அவள் பேரிலும் எனக்கு குறை இல்லை. தங்கள் பேரிலும் குறை இல்லை மகிழ்ச்சி தான். ஆனால் தங்களுடைய திருமணத்துக்கு நாள் குறிப்பிடும் போது மட்டும் நல்ல சோதிடராகப் பார்த்து நாள் குறிப்பிடச் செய்யுங்கள்!" என்றாள். 
"குடந்தை சோதிடரையே நாள் வைக்கச் சொன்னால் போகிறது! தங்களுக்கெல்லாம் அவரிடத்திலேதான் நம்பிக்கை!" என்று வானதியைப் பார்த்துச் சொன்னான் வந்தியத்தேவன். 
வானதி 'கலீர்' என்று சிரித்துவிட்டு இளைய பிராட்டியை நோக்கி, "அக்கா! இவர் குடந்தை சோதிடரைப் பற்றிச் சொன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது!" என்று சொல்லி விட்டு மறுபடியும் கலகலவென்று சிரித்தாள். 
"எதை நினைத்துக் கொண்டு சிரிக்கிறாய், வானதி! 'உன் வயிற்றிலே பிறக்கப்போகிற பிள்ளை மூன்று உலகத்தையும் ஆளப் போகிறான்' என்று அந்த ஜோசியர் உளறினாரே, அதை எண்ணிச் சிரிக்கிறாயா?" என்றாள் குந்தவை. 
"அதை ஏன் உளறல் என்கிறீர்கள், தேவி? அந்த ஜோசியம் பலிக்கப் போகிறது!" என்றான் வந்தியத்தேவன். 
வானதி தன்னை அறியாமல் ஏற்பட்ட கூச்சத்தில் சிரிப்பை அடக்கிக் கொண்டாள். பிறகு, "அக்கா! நான் ஒன்று சொல்ல வந்தால், தாங்கள் பேச்சை வேறு பக்கம் திருப்புகிறீர்களே? குடந்தை ஜோதிடரிடம் நான் "இளைய பிராட்டிக்குத் தகுந்த கணவர் எங்கிருந்து வரப் போகிறார்?" என்று கேட்டேன். 'இந்த நிமிஷமே ஆகாசத்திலிருந்து வந்து குதித்தாலும் குதிப்பார்!" என்றார் ஜோசியர். மறுநிமிடம் இவர் ஜோசியருடைய சீடனுடன் சண்டையிட்டுக் கொண்டே உள்ளே வந்து குதித்தார்! அந்தச் சம்பவத்தை நினைத்துச் சிரித்தேன்!" என்றாள். 
குந்தவை பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு கள்ளக் கோபத்துடன், "போதும் உன் விளையாட்டு! அவசரமாக வந்திருக்கும் ஓலையை இவர் படிக்கட்டும்!" என்றாள். 
வந்தியத்தேவன் ஓலையைப் படித்தபோது அவனுடைய முகத்தில் தோன்றிய கவலைக் குறியை இரண்டு பெண்மணிகளும் கவனித்தார்கள். 
"என்ன சேதி? கந்தமாறன் என்ன எழுதியிருக்கிறான்?" என்று இளையபிராட்டி ஆர்வத்துடன் கேட்டாள். 
"தாங்களே படித்துப் பாருங்கள்!" என்று வந்தியத்தேவன் ஓலையைக் குந்தவையிடம் கொடுத்தான். 
ஓலையில் பின்வருமாறு எழுதியிருந்தது. 
"என் அருமைத் தோழனாகிய வல்லவரையன் வந்தியத்தேவனுக்கு, நான் உனக்குச் செய்த குற்றங்களையும் இழைத்த அநீதிகளையும் மன்னித்துவிட்டு, என் சகோதரி மணிமேகலையைக் கடைசி முறை பார்ப்பதற்காக உடனே புறப்பட்டு வந்து சேரவும், இளஞ் சம்புவரையன் கந்தமாறன்." 
குந்தவை அதைப் படித்துவிட்டு, "ஒரு விதத்தில் இது நல்ல செய்திதான். மணிமேகலை அகப்பட்டு விட்டாள் என்று தெரிகிறது!" என்றாள். 
"அது என்ன? மணிமேகலை எங்கே போயிருந்தாள்?" என்று வந்தியத்தேவன் வியப்புடன் வினவினான். 
"மணிமேகலையைப் பற்றிய செய்தி ஒன்றுமே தங்களுக்குத் தெரியாதா?" 
"தெரியாது! தங்களைக் கேட்கவே எண்ணியிருந்தேன்." 
"நானும் சொல்ல விரும்பினேன்; ஆனால் இவ்வளவு கல்நெஞ்சுடன் அவளைப் பற்றி விசாரிக்காமலிருப்பவரிடம் எப்படி அவள் பேச்சை எடுப்பது என்று தயங்கினேன்." 
"தேவி! மணிமேகலை விஷயத்தில் நான் கல் நெஞ்சனாவது எப்படி? அவளைப் பொறுத்த வரையில் நான் இறந்தவனாகிவிட்டேன் அல்லவா?" 
"இல்லை; அவளுக்குத் தாங்கள் இறந்தவராகவில்லை இறவா வரம் பெற்ற அமரராகி விட்டீர்கள்!" 
"போகட்டும்; இப்போதாவது மணிமேகலையைப் பற்றிச் சொல்லுங்கள்." 
"சொல்லுவதற்கே வருத்தமாயிருக்கிறது செம்பியன் மாதேவி மணிமேகலை தம்முடன் இருக்கட்டும் என்று எவ்வளவோ சொன்னார். சம்புவரையர் அதற்கு இணங்கவில்லை. கந்தமாறன் எல்லைப் பாதுகாப்புக்குப் போய்விடுவான் என்றும், தன் புதல்வியாவது தம்முடன் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார். கடம்பூர் மாளிகை எரிந்து போய் விட்டபடியால் பாலாற்றின் வடகரையில் புதிய மாளிகை கட்டிக் கொள்ள சக்கரவர்த்தியின் அனுமதியும் பெற்றுக்கொண்டு புறப்பட்டார். வழியில் வீர நாராயணபுரத்துக்கு அருகில் இரவு நேரத்தைக் கழிப்பதற்காகக் கூடாரம் போட்டுக் கொண்டு தங்கினார். மறுநாள் பொழுது விடிந்து பார்த்தால் மணிமேகலையைக் காணவில்லையாம். ஒருவேளை இங்கே திரும்பி ஓடிவந்துவிட்டாளோ என்று பார்ப்பதற்காக ஆள் அனுப்பினார். இங்கே வரவில்லை என்று சொல்லி அனுப்பினோம். அது முதல் எங்களுக்கெல்லாம் ஒரே கவலையாக இருந்தது. ஒருவேளை வீர நாராயண ஏரியில் விழுந்து உயிரையே மாய்த்துக் கொண்டிருப்பாளோ என்று நினைத்து நினைத்து வருந்தினோம். நாலா திசைகளிலும் ஆள்கள் தேடிக் கொண்டிருப்பதாகச் செய்தி கிடைத்தது. கந்தமாறனுடைய ஓலையிலிருந்து மணிமேகலை இருக்குமிடம் தெரிந்து அவளைக் கண்டுபிடித்து விட்டார்கள் என்று தோன்றுகிறது." 
"அவளை நான் போய்ப் பார்ப்பதிலே தான் என்ன பயன்? என்னை அவள் தெரிந்து கொள்ளப் போவதில்லை!" என்றான் வந்தியத்தேவன். 
"இருந்தாலும் தாங்கள் அவசியம் போகவேண்டும். 'கடைசி முறையாக' என்று கந்தமாறன் எழுதியிருக்கிறான். அதன் பொருள் என்னவோ தெரியவில்லை" என்றாள் குந்தவை. 
"அக்கா! இவர் கொஞ்சமும் ஈவு இரக்கம் அற்றவர். மணிமேகலையின் அன்புக்குக் கொஞ்சமும் பாத்திரமில்லாதவர். ஒவ்வொருவர் அன்புக்காகப் பெரிய சாம்ராஜ்யத்தையே தியாகம் செய்கிறார்கள். இவரோ ஒரு பிரயாணம் செய்வதற்குக் கூடத் தயங்குகிறார்!" என்று வானதி ஒரு போடு போட்டாள். 
வந்தியத்தேவன், "இளவரசி! உலகத்தில் இராஜ்யங்கள் கொஞ்சமாகத்தான் இருக்கின்றன. ஆகையால் அன்புக்காக இராஜ்யத்தைத் தியாகம் செய்கிற காரியம் சிலராலேதான் முடியும். ஆனால் முதலில் தாங்கள் கூறியது உண்மையே. மணிமேகலையின் அன்புக்கு நான் சிறிதும் தகுதியில்லாதவன். தெய்வத்தினிடம் வைக்க வேண்டிய காதலை அவள் என்னிடம் வைத்து விட்டாள். நான் தேவனல்ல, குற்றம் குறைகள் உள்ள சாதாரண மனிதன். மணிமேகலையின் அன்பு கடவுளுக்கு அர்ப்பணமாக வேண்டியது!" என்றான். 
"இருந்தாலும் தாங்கள் ஒரு தடவை அவளைப் போய்ப் பார்த்து விட்டு வருவதில் தவறு ஒன்றுமில்லையே. கந்தமாறனும் 'கடைசித் தடவையாக' என்றுதானே எழுதியிருக்கிறான்!" என்றாள் இளைய பிராட்டி குந்தவை. 
"நான் போகமாட்டேன் என்று சொல்லவில்லையே? போவதில் பயன் உண்டா என்றுதான் சந்தேகிக்கிறேன். நான் அவளுக்கு இறந்து போனவன் ஆயிற்றே என்று தயங்குகிறேன். ஆயினும் 'கடைசித் தடவையாக' என்று கந்தமாறன் எழுதியிருப்பதின் பொருள் நன்றாக விளங்கவில்லை. அப்புறம் அவளை பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப் போகிறானா என்ன? அல்லது புத்த மதத்தாரின் கன்யாமாடத்தில் அவளைக் கொண்டு போய்ச் சேர்த்துவிடப் போகிறானா?" 
"தாங்கள் ஒரு நாள் பிரயாணம் செய்தால் எல்லாம் தெரிந்து விடுகிறது!" என்றாள் இளைய பிராட்டி குந்தவை. 
வந்தியத்தேவன் பழையாறையிலிருந்து வீர நாராயணபுரத்துக்கு ஒருநாள்தான் பிரயாணம் செய்தான். ஆனால் முன்முறைகளில் போலன்றி இந்தத் தடவை அந்த ஒருநாள் ஒரு யுகம் செல்வது போல் சென்றது. அவனுடைய உள்ளத்தில் அவ்வளவு நினைவுகளும், அனுபவங்களும் குமுறிக் கொண்டிருந்தன. முதன் முதலில் அவன் இந்த வழியாகத் தஞ்சை சென்றபோது எத்தனையோ இனிய காட்சிகளைக் கண்டான். எவ்வளவோ ஆகாசக் கோட்டைகள் கட்டினான். அவையெல்லாம் ஆகாசக் கோட்டைகளாகப் போய்விடவில்லை. நடக்க முடியாத பல காரியங்கள் நடந்தேறி விட்டன. சோழ நாட்டின் செல்வக்குமாரரை, தமிழகமெல்லாம் போற்றிக் கொண்டாடிய வீர இளவரசரை, தன் கையில் வந்த சாம்ராஜ்ய மகுடத்தை இன்னொருவர் சிரசில் சூட்டி அதனால் மேரு மலையைவிட உயர்ந்து தியாக சிகரமாக விளங்கும் பொன்னியின் செல்வரை அவன் உயிர் நண்பராகப் பெற்றான். அத்தகைய பொன்னியின் செல்வர் போற்றி வணங்கும் இளையபிராட்டியின் இதயத்தில் இடம் பெற்றான். ஈழ நாட்டிலுள்ள சோழ சைன்யத்தின் மாதண்ட நாயகன் பதவியை அடைந்தான். இவ்வளவும் தன் சாமர்த்தியத்தினால் என்று சொல்ல முடியுமா? ஒரு நாளுமில்லை. கடம்பூர் மாளிகைக்கு அன்றிரவு தான் தற்செயலாகப் போய்ச் சேர்ந்ததும், அங்கே சிற்றரசர்கள் செய்த சதியாலோசனையை அறிந்ததும் பின்னால் தொடர்ந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் காரணமாயின. இந்த எட்டு மாத காலத்துக்குள் எவ்வளவு எவ்வளவோ காரியங்கள் நடந்துவிட்டன. அவற்றில் சில முக்கியமானவை. வானத்தில் தோன்றிய தூமகேது தன்னுடைய விபரீதச் செயலைப் புரிந்துவிட்டு மறைந்தது. ஆதித்த கரிகாலர் மறைந்து விட்டார். வால் நட்சத்திரத்துக்கும் ஆதித்த கரிகாலருக்கும் சம்பந்தம் இருக்க முடியுமா? லட்சக்கணக்கான மக்கள் அத்தகைய நம்பிக்கை கொண்டிருப்பது பொய்யாகுமா? வானத்தில் ஊழி ஊழிகாலம் சஞ்சரிக்கும் கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும், இந்த மண்ணுலகில் இன்று தோன்றி நாளை மறையும் மனிதர் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ஆயினும், மனிதர்கள் அறிய முடியாத ஏதோ ஒரு அதீதமான சக்தி ஏதோ ஒரு மாற்றுதற்கரிய நியதி மனிதர் வாழ்வை நடத்தி வைக்கிறது என்பதில் சந்தேகமில்லை! இல்லாவிட்டால் சென்ற எட்டு மாதங்களில் தான் எத்தனையோ இடுக்கண்களில் அகப்பட்டுக்கொண்டு அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டிருக்க முடியும்? எத்தனை, எத்தனை பேர் அந்தந்த இடுக்கண்களிலிருந்து தப்பித்துக் கொள்ளத் தனக்கு உதவி செய்திருக்கிறார்கள்! அவர்களையெல்லாம் அந்தந்தச் சமயத்தில் தனக்கு உதவி புரிவதற்காகக் கொண்டு வந்து சேர்த்தது யார்? அந்த அதிசயமான சக்தியைத்தான் பெரியோர்கள் இறைவன் என்று போற்றி வணங்குகிறார்களா? சிவன், திருமால், மகாசக்தி என்றெல்லாம் பெயர் கொடுத்துப் பாடி பரவுகிறார்களா? 
மிக மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவனுக்கு எதிர்பாராதவிதமாகக் கிடைத்த உதவிகளை நினைத்த போது, வந்தியத்தேவனுக்கு ஒரே வியப்பாயிருந்தது. உதவி செய்தவர்களை நினைத்த போது உள்ளம் உருகியது. கந்தமாறன் பின்னால் தனக்கு எவ்வளவு தீங்கிழைத்த போதிலும், முதலில் அவன் செய்த உதவியை என்றும் மறக்க இயலாது. ஆழ்வார்க்கடியான் அவனுக்கு எவ்வளவோ சகாயம் புரிந்தான். மோகினி உருக்கொண்ட ராட்சஸி நந்தினியும் அவனுக்கு உதவினாள்! அவனிடம் இளைய பிராட்டி இன்னமும் கொண்டிருக்கும் உள்ளக் கனிவை நினைத்து நினைத்து அவன் வியந்தான். ஓடக்காரப் பெண் பூங்குழலி செய்திருக்கும் உதவியை ஈரேழு பிறவிகளிலும் மறக்க முடியாது. அவள் சோழ சாம்ராஜ்ய சிங்காதனத்தில் வீற்றிருக்கத் தகுதி வாய்ந்தவளே. 
சேந்தன் அமுதனாக முதலில் அவன் அறிந்த உத்தமச் சோழர் செய்த உதவியை என்னவென்று சொல்வது? அதற்கு ஈடு இணை உண்டா? அவரை வைத்தியர் மகனின் ஈட்டியிலிருந்து காப்பாற்றியதனால் தன் நன்றிக்கடனைச் செலுத்தி விட்டதாகுமா? ஒரு நாளுமில்லை. தன் உடலில் உயிர் உள்ளவரையில் சோழ குலத்துக்குத் தான் தொண்டு செய்வதின் மூலமாகத்தான் அந்தக் குலத்துக்குத் தான் பட்ட கடனைத் தீர்க்க முடியும். அப்புறம் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையர்! தமது நெடிய திருமேனியில் அறுபத்து நாலு போர்க் காயங்களைத் தாங்கிய அந்த மகா வீரரைப் பார்க்கக் கொடுத்து வைத்தால், அதுவே தான் செய்த பெரும் பாக்கியம் என்று அவன் நினைத்திருந்த காலம் உண்டு. அவரைப் பார்த்ததுமல்லாமல் அவருடைய அனாவசியமான கோபத்துக்கும், துவேஷத்துக்கும் அவன் உள்ளாக நேர்ந்தது. கடைசியாக, அவ்வளவுக்கும் அவர் பரிகாரம் செய்து விட்டார். தான் எறிந்த கத்தி குறி தவறி ஆதித்த கரிகாலரைக் கொன்று விட்டதாக ஒப்புக் கொண்டு, அவனை விபரீதமான பழியிலிருந்தும் கொடுந்தண்டனையிலிருந்தும் காப்பாற்றினார்! அவர் அல்லவோ மகான்? இனி அவருக்கு எந்த விதத்தில் அவனுடைய நன்றியைச் செலுத்த முடியும்? 
இவர்கள் எல்லாருமிருக்கட்டும். அந்தப் பேதைப் பெண் மணிமேகலை! அவள் எதற்காக இவனிடம் இத்தகைய தெய்வீகமான அன்பு வைக்க வேண்டும்? ஏன் இப்படிப் பைத்தியமாக வேண்டும்? இவனைக் காப்பாற்ற வேண்டிக் கொலைக் குற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள ஏன் முன் வரவேண்டும்? எல்லாம் அந்த மூடன் கந்தமாறனால் வந்த வினை! முதலில் கந்தமாறன் மணிமேகலையிடம் இவனைப்பற்றி இந்திரன், சந்திரன், அர்ச்சுனன், மன்மதன் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறான். அப்போதே அந்தப் பேதைப் பெண் அவளுடைய உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டாள் போலும்! அதெல்லாம் வந்தியத்தேவனுக்குத் தெரியாது. 
"என் தங்கையை நீ மறந்துவிடு! பெரிய இடத்தில் அவளைக் கொடுக்கப் போகிறோம்!" என்று கந்தமாறன் சொன்னதும், வந்தியத்தேவன் உண்மையாகவே அவளை மறந்து விட முயன்றான். இளையபிராட்டியைச் சந்தித்ததும் அதற்குத் துணையாயிருந்தது. ஆனால் மணிமேகலையோ தன் மனத்தை மாற்றிக் கொள்ளவில்லை; மாற்றி கொள்ள முயலவும் இல்லை. பலர் அறிய அவள் உள்ளத்தை வெளிப்படுத்தத் தயங்கவும் இல்லை. ஆகா! என்ன இனிய குணம் படைத்த பெண்! எவ்வளவு அடக்கம், அமரிக்கை! அவளுடைய மனந்தான் எத்தனை தூய்மையானது! பச்சைக் குழந்தையைப் போன்ற உள்ளம்! உண்மையிலேயே அவள் குழந்தைதான்! பால் போன்ற மனம்; அதில் பல குறும்புத்தனம். தன்னை இறந்து விட்டவனாக அவள் எண்ணிக் கொண்டிருப்பது மிக்க நல்லது. எப்போதுமே சித்தப்பிரமை கொண்டவளாக அவள் இருந்துவிட மாட்டாளே! சில காலம் போனால் உள்ளம் தெளிந்துவிடும். வேறொரு வீர வாலிபனை மணந்து அவள் ஆனந்த வாழ்க்கை நடத்துவாள்!.. உண்மையில் இப்படி நடக்குமா? அல்லது என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேனா? மணிமேகலையை இந்த நிலைக்கு உள்ளாக்குவதற்கு நான் பொறுப்பாளி யாவேனோ? 'கடைசி முறை பார்ப்பதற்கு வரவும்' என்று கந்தமாறன் எழுதி இருப்பதின் பொருள் என்ன? ஒருவேளை...ஒருவேளை..ஆகா! அந்த எண்ணமே எவ்வளவு வேதனை தருகிறது! 
வந்தியத்தேவனுடைய எண்ணங்களின் வேகத்தை ஒட்டி அவன் ஏறியிருந்த புரவியும் வேகமாகச் சென்றது. நல்ல வேளையாக கொள்ளிட நதியில் பெரு வெள்ளம் போகவில்லை. படகும் தேவையாக இல்லை. குதிரை மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. கரையோரமாகச் சென்று கொண்டிருந்த சிறிய பிரவாகத்தில் குதிரையை இறக்கி விட்டுக் கடந்து, பரந்து விரிந்திருந்த வெண் மணல் திட்டுக்களையும் கடந்து அக்கரையை அடைந்தான். கடம்பூர் மாளிகை தீயில் எரிந்து கரி ஏறிய சில தூண்களும் சுவர்களுமாக நின்ற கோரக் காட்சியைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு மேலே சென்றான். வீர நாராயணபுரத்துக்கு அருகிலேயே கந்தமாறனுடைய ஆட்கள் அவனுக்காகக் காத்திருந்தார்கள். "சின்ன எஜமானார் எங்கே?" என்று கேட்டதற்கு "ஏரிக்கரையில் படகுடன் காத்திருக்கிறார்கள்!" என்று பதில் வந்தது. 
ஏரிக் கரையில் எதற்காகக் காத்திருக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே வந்தியத்தேவன் வீர நாராயண ஏரியை அணுகினான். அந்த ஏரியின் நெடிதுயர்ந்த கரை ஒரு பெரும் கோட்டைச் சுவர் போல் அப்பாலிருந்த தண்ணீர்ப் பரப்பை மறைத்துக் கொண்டிருந்தது. முதல் தடவை அந்த ஏரிக்கரைக்கு அவன் வந்தபோது, பதினெட்டாம் பெருக்கு விழாவுக்காக அங்கே மக்கள் திரண்டு இருந்ததையும், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கோலாகலமாக ஆடிப்பாடி விளையாடி விருந்துண்டு மகிழ்ந்ததையும் நினைவு கூர்ந்தான். இப்போது அந்த ஏரிக்கரையில் அவ்வளவு அதிக ஜனங்களைக் காணவில்லை. அங்கொருவர் இங்கொருவர்தான் காணப்பட்டார்கள். ஏரியில் எல்லா மடைகளிலிருந்தும் அச்சமயம் தண்ணீர் குபுகுபுவென்று பாய்ந்து கொண்டிருந்தது. அவ்விதம் தண்ணீர் பாயும் ஓசை சந்தை இரைச்சல் போன்ற பேரொலியாகக் கேட்டது. இச்சமயம், ஒரு சில கணவாய்களிலிருந்து மட்டும் மெல்லிய சலசல ஒலியுடன் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஏதோ சோக கீதத்தைப் பாடிக் கொண்டு நடனம் ஆடும் நாட்டியப் பெண்ணின் சிலம்பின் புலம்பலைப் போல் அது தொனித்தது. 
செங்குத்தாக உயர்ந்த ஏரிக்கரையின் மேல் குதிரையை லாகவமாக வந்தியத்தேவன் ஏற்றி உச்சியை அடைந்தான். அங்கிருந்து அவன் கண் முன் தோன்றிய காட்சியும் மாறுதலாகவே இருந்தது. தண்ணீர், நிறைந்து ததும்பி ஏரிக்கரையை உடைக்க முயல்வது போல் அலைமோதிக் கொண்டிருக்கவில்லை. கரையின் அடிப் பகுதியிலிருந்துதான் தண்ணீர்ப் பரப்பு தொடங்கியது. தண்ணீரின் செங்காவி நிறம் அடியோடு மாறிப் பளிங்குபோல் தெளிந்திருந்தது. கரையோரமாக அல்லியும், செங்கழுநீரும், தாமரையும், நீலோத்பலமும் இளம் இலை, முற்றிய இலை, இளம் மொட்டு, பாதி விரிந்த மொட்டு, முழுதும் மலர்ந்த மலர் என்று இவ்வளவு பிரிவினையுடன் அடர்ந்து தழைத்திருந்தன. சிற்சில இடங்களில் தண்ணீரே அவற்றினால் மூடப்பட்டிருந்தது. 
ஏரியின் தென் கரை ஓரமாக வடவாற்றிலிருந்து நீரோட்டம் சுழிகளும் சுழல்களுமாக வந்து ஏரி நீரில் கலந்து கொண்டிருக்கவில்லை. அந்த ஆற்று நீரோட்டத்தின் வழியாக வெண் சிறகு விரிந்த அன்னப் பட்சிகளைப் போல் படகுகள் மிதந்து வந்து கொண்டிருக்கவுமில்லை. நதியின் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்த ஏரி ஓரப் பகுதிகளில் இப்போது மரங்களும் செடிகளும் நாணல் புதர்களுமாகக் காட்சி அளித்தன. அவற்றின் இடையிடையே வெள்ளைக் கொக்குகளும் நாரைகளும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்து கொண்டிருந்தன. 
இவற்றையெல்லாம் கவனிப்பதற்கு வந்தியத்தேவனுக்குச் சில வினாடிகளுக்கு மேல் ஆகவில்லை. அதற்குள் சற்றுத் தூரத்தில் ஏரிக் கரையோரமாக நின்ற படகு அவன் காட்சிக்கு வந்தது. அந்தப் படகில் இருப்பவர்களில் ஒருவன் கந்தமாறன் என்பதையும் தெரிந்து கொண்டான். உடனே அந்த இடத்தை நோக்கிக் குதிரையை விரைந்து செலுத்தினான். குதிரையின் மேலிருந்து தாவிக் குதித்துப் படகை அணுகினான். கந்தமாறன் ஒரு கையை நீட்டி வந்தியத்தேவன் கரத்தைப் பிடித்துப் படகில் ஏற்றிக் கொண்டான். படகுக்காரர்களுக்குப் படகை விடும்படி சமிக்ஞை செய்துவிட்டு வந்தியத்தேவனை கண்ணீர் ததும்பிய கண்களால் சோகமாகப் பார்த்தான். 
"நண்பா! சீக்கிரமாகவே வந்துவிட்டாய்! மிக்க வந்தனம்! இன்று வராமல் நாளைக்கு நீ வந்திருந்தால் ஒருவேளை மணிமேகலையை உயிருடன் பார்த்திருக்க முடியாது!" என்றான். 
வந்தியத்தேவன் கல் நெஞ்சு படைத்தவன் என்பது உண்மைதான்! நெஞ்சில் அவ்வளவு உறுதியில்லாவிட்டால், சென்ற எட்டு மாதத்தில் அவன் அத்தனை காரியங்களை அலட்சியமாகச் செய்திருக்க முடியுமா? தனக்கோ மற்றவர்களுக்கோ நேரக்கூடிய அபாயங்களைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் உயிரைத் திருணமாக மதித்துப் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டிருக்க முடியுமா? 
அத்தகைய நெஞ்சுறுதி படைத்தவன் கந்தமாறனின் வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிவிட்டான். 
'கடைசித் தடவை பார்ப்பதற்கு' என்று கந்தமாறன் எழுதியதன் பொருள் இப்போது ஐயமின்றி விளங்கிவிட்டது. அவனுடைய கண்களில் கண்ணீர் ததும்பிக் கலகலவென்று கன்னங்களில் வழிந்து ஓடியது. 
"கந்தமாறா! மணிமேகலையின் உயிருக்கே ஆபத்தா? அது எப்படி? அவள் சித்தந்தானே தவறிவிட்டது? அதுவும் உன்னையும் என்னையும் பற்றித்தானே!" என்று தத்தளிப்புடன் வினவினான் வந்தியத்தேவன். 
"நண்பா! இப்போது மணிமேகலையின் சித்தம் தெளிந்து விட்டது. ஆனால் இன்னும் எத்தனை நேரம் உயிரோடிருப்பாளோ தெரியாது. உன்னைப் பார்க்கும் வரையில் உயிரோடிருக்க வேண்டுமென்று தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்கிறேன்!" என்று சொன்னான் கந்தமாறன். 
பிறகு அவன் அறிந்தபடி நடந்த சம்பவங்களைப் பின் வருமாறு கூறினான்: 
காஞ்சியில் கந்தமாறன் சக்கரவர்த்தி வந்து தங்குவதற்காகப் பொன் மாளிகையைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தான். அப்போது சம்புவரையர் மணிமேகலையையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டதாக கேள்விப்பட்டான். அதைத் தொடர்ந்து, வீர நாராயண ஏரிக்கரையில் மணிமேகலை காணாமற் போய் விட்டாள் என்ற செய்தியும் கிடைத்தது. உடனே பார்த்திபேந்திரனிடம் விடைபெற்றுக் கொண்டு தங்கையின் கதியை அறிவதற்காகப் புறப்பட்டு ஓடி வந்தான். அவனுடைய தந்தை துயர மிகுதியினால் ஏறக்குறைய பித்துப் பிடிக்கும் நிலையிலிருந்தார். 'இரவில் கூடாரத்திலே படுத்தாள். பொழுது விடிந்தால் காணவில்லை' என்பதைத் தவிர அவரிடமிருந்து வேறு தகவல் எதுவும் கிடைக்கவில்லை. பழையாறைக்கு ஆள் விட்டிருப்பதாகக் கூறினார். எரிந்து பாழாய்க் கிடந்த கடம்பூர் மாளிகையிலும் சுற்றுப்புறங்களிலும் தேடிப் பார்த்தாகி விட்டதென்றும் சொன்னார். கந்தமாறன் தானும் தேட ஆரம்பித்தான். பழையாறைக்கு அவள் திரும்பிப் போயிருப்பாள் என்று கருதவில்லை. ஏரியில் விழுந்து முழுகி இருக்கலாம் என்று தேடிப் பார்த்து அவளுடைய உடலையாவது கண்டுபிடிக்க வேண்டுமென்றும் எண்ணினான். ஒருவேளை உயிருடனே ஏரியைச் சூழ்ந்திருந்த காடுகளில் அவள் சுற்றி அலைந்து கொண்டிருக்கலாம் என்ற ஆசையும் மனத்தில் இருந்தது. 
ஏரிக் கரையோடு சுற்றிச் சுற்றி அலைந்து தேடினான். ஏரியிலிருந்து கிளம்பிய கணவாய்களோடு சிறிது தூரம் சென்று தேடினான். ஏரியில் குறுக்கு நெடுக்காகவும் கரையோரமாகவும் படகு விட்டுக் கொண்டு போய்த் தேடினான். ஏரியைச் சூழ்ந்திருந்த காடுகளிலும் தேடினான். இம்மாதிரி சுமார் நாலு தினங்கள் பயனற்ற தேட்டத்தில் சென்ற பிறகு, ஏரியின் மேற்புறத்துத் தீவு ஒன்றில் அமைந்திருந்த நீராழி மண்டபத்தின் நினைவு கந்தமாறனுக்கு ஏற்பட்டது. வேட்டையாடப் போன கரிகாலனும் வந்தியத்தேவனும் நீர் விளையாடச் சென்ற நந்தினியும், மணிமேகலையும் அந்த நீராழி மண்டபத்தில் ஒரு நாள் சந்தித்துப் பொழுது போக்கியதும் நினைவு வந்தது. மணிமேகலை அந்த இடத்துக்குப் படகின் உதவியில்லாமல் தனியாகப் போய்ச் சேர்ந்திருப்பது அசாத்தியமான காரியம். கரடி, சிறுத்தை முதலிய வனவிலங்குகள் நிறைந்த மேற்குப் பகுதிக் காட்டின் வழியாக அவள் தன்னந்தனியாக அங்கே சென்றிருக்க முடியுமா? காட்டைக் கடந்திருந்தாலும் வழியில் சிறு கால்வாய்கள் பலவற்றைக் கடக்க வேண்டியிருந்திருக்குமே? இருந்தாலும், அதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணிக் கந்தமாறன் படகில் ஏறி அந்த நீராழி மண்டபத்தை அடைந்தான். மண்டபத்தை நெருங்கியதும் பழைய நினைவுகள் பல அவன் உள்ளத்தில் குமுறிக்கொண்டு தோன்றின. முதலில் மண்டபம் சூனியமாகவே காணப்பட்டது. யாரும் அங்கே இருப்பதாகத் தோன்றவில்லை. மண்டபப் படித்துறையில் இறங்கி நின்று தான் கட்டிய மனக்கோட்டைகள் எல்லாம் வீணாய்ப் போனதை எண்ணிப் பெருமூச்சு விட்டான். அவனுடைய பெருமூச்சின் எதிரொலியைப் போல் மற்றொரு பெருமூச்சின் ஒலி கேட்டுத் திடுக்கிட்டான். ஓடிப் போய்ப் பார்த்தான். நீராழி மண்டபத்தின் மறு பக்கத்துப் படிக்கட்டில் மணிமேகலை கிடந்தாள். ஒட்டி உலர்ந்து வாடி வதங்கிக் கிடந்தாள். அவள் சேலை பல இடங்களில் கிழிந்திருந்தது. அவள் மேனியில் பல இடங்களில் கீறல்கள் காணப்பட்டன. முதலில் அந்த உடம்பில் உயிர் இருப்பதாகவே தோன்றவில்லை. பல நாள் பட்டினி கிடந்து திக்குத் திசை தெரியாமல் காட்டில் அலைந்து, கடைசியில் களைத்து விழுந்து இறந்து போனவளின் உடலாகவே தோன்றியது. அந்தக் காட்சியைக் கண்ட கந்தமாறனுடைய உள்ளத்தில் ஆயிரம் வேல்கள் பாய்வது போன்ற வேதனை உண்டாயிற்று. மணிமேகலையை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு புலம்பினான். பெருமூச்சின் ஓசை நினைவுக்கு வரவே, ஒருவேளை உயிர் ஒட்டிக் கொண்டிருக்கலாம் என்ற ஆசை ஏற்பட்டது. நல்ல தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தான். வாயில் ஊற்றினான். சூடு பிறக்கும்படி உடம்பெல்லாம் தேய்த்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் மணிமேகலை கண் திறந்து மலர மலர அவனை நோக்கி விழித்தாள். "அண்ணா! நீ தானா? நான் நினைத்தது உண்மையாயிற்று. சொர்க்கத்துக்குப் போனால் உன்னையும் அவரையும் காணலாம் என்று எண்ணினேன். அவர் எங்கே?" என்று மிக மெல்லிய குரலில் கேட்டாள். கந்தமாறன் பொங்கி வந்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு, "வருவார், அம்மா, வருவார்!" என்றான். 
மணிமேகலை தான் சொர்க்கத்திலே இருப்பதாக எண்ணுகிறாள், கந்தமாறனையும் சொர்க்கத்தில் பார்ப்பதாகவே கருதுகிறாள். வந்தியத்தேவனைப் பற்றி விசாரிக்கிறாள் என்பதை எல்லாம் கந்தமாறன் அறிந்து கொண்டான். அவளுக்கு மன அதிர்ச்சி ஏற்படாதபடி அவளுடைய நம்பிக்கையையொட்டிப் பதில் கூறிச் சமாளித்தான். இதன் பிறகு, மணிமேகலையின் உடம்பில் மேலும் உயிர் தளிர்க்கச் செய்வதற்குத் தான் செய்த முயற்சிகளைப் பற்றியும், அவசரமாக ஓலை எழுதி வந்தியத்தேவனுக்கு அனுப்பி வைத்தது பற்றியும் இளஞ் சம்புவரையன் கந்தமாறன் கூறினான் கடைசியாக... 
"நண்பா! நீ என் ஓலையை மதித்து வந்ததற்காக என் மனத்தில் எழும் நன்றியைச் சொல்லி முடியாது. மணிமேகலை இனி அதிக காலம் ஜீவித்திருக்கமாட்டாள். அணையும் தறுவாயில் உள்ள தீபச் சுடரைத் தூண்டி விட்டால் சிறிது நேரம் எரியுமல்லவா? அது போலத்தான் அவள் உயிர்ச் சுடர் பிரகாசிக்கிறது. முக்கியமாக, உன்னைக் காணும் ஆசையே அவளை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது! நாம் எல்லாரும் சொர்க்கத்தில் இருப்பதாக அவள் நம்பியிருக்கிறாள். மாறாக நீ எதுவும் சொல்ல வேண்டாம்! அவளைப் பார்த்ததும் உனக்குத் துக்கம் உண்டாவது இயல்பே. அதையும் நீ கட்டுப்படுத்திக் கொண்டு முக மலர்ச்சியுடன் பேச வேண்டும்!" என்று வேண்டிக் கொண்டான். 
படகு நீராழி மண்டபத்தை நெருங்கி விட்டது. யாழிசையும் மெல்லிய குரலில் பாட்டிசையும் கலந்து கேட்டன. 
வந்தியத்தேவன் கந்தமாறனை நோக்கினான். "ஆம், நண்பா! மணிமேகலை தான் யாழிசையுடன் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கிறாள்!" என்றான். படகிலிருந்து அவர்கள் இறங்கினார்கள். மணிமேகலை பாடுவது என்ன பாடல் என்பதை வந்தியத்தேவன் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். முன்னொரு சமயம் அதே நீராழி மண்டபத்தில் அவள் யாழிசையுடன் பாடிய அதே பாடல்தான்.


"இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே 
கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம் 
கனவுதானோடி-சகியே நினைவுதானோடி 

புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே 
என்னைவரச் சொல்லி அவர் கன்னல் மொழி பகர்ந்ததெல்லாம் 
சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி! 

கட்டுக்காவல் தான் கடந்து கள்ளரைப்போல் மெள்ளவந்து 
மட்டில்லாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம் 
நிகழ்ந்ததுண்டோடி - நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி!"


பாடல் முடிகிற வரையில் வந்தியத்தேவன் படிக்கட்டிலேயே காத்துக் கொண்டிருந்தான். முடிந்தவுடன் படிகளில் ஏறி மண்டபத்தை அடைந்தான். 
மணிமேகலை அவனைப் பார்த்ததும் யாழைக் கீழே உருட்டி விட்டு எழுந்திருக்க முயன்றாள். உடலில் பலமில்லாமையால் கால்களை ஊன்றி நிற்க முடியாமல் தள்ளாடி விழப் பார்த்தாள். வந்தியத்தேவன் பாய்ந்து சென்று அவள் கீழே தரையில் விழாமல் தாங்கிக் கொண்டான். மெள்ள மெள்ள அவளை உட்கார வைத்துத் தானும் உட்கார்ந்து கொண்டான். மணிமேகலையைத் தன் மடியில் சாத்திக் கொண்டான். 
மணிமேகலை அடிக்கடி அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள். அவன் வந்தியத்தேவன்தானா, அவள் படுத்திருப்பது அவனுடைய மடியில்தானா என்பதைப் பலமுறை பார்த்து உறுதி செய்து கொண்டதாகத் தோன்றியது. 
"என் அண்ணன் என்னை ஏமாற்றவில்லை. சொர்க்கம் வெறும் சொப்பனமில்லை. இந்த அற்புதம் பொய்யில்லை!" என்று அவள் இதழ்கள் மெதுவாக முணுமுணுத்தன. 
"பொய்யில்லை, மணிமேகலை, பொய்யில்லை, இது நிச்சயமாக சொர்க்கந்தான்! நான் வந்திருப்பது உண்மைதான்!" என்றான் வந்தியத்தேவன். 
அவன் எவ்வளவு அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியாமல் கண்களில் நீர் ததும்பியது. மணிமேகலையின் முகத்தில் அவனுடைய கண்ணீர்த் துளிகள் முத்துப்போல் உருண்டு விழுந்தன. அவனையறியாமல் விம்மல் ஒலியும் எழுந்தது. 
மணிமேகலையின் முகம் சிறிது நேரம் தெய்வீகமான சோபையினால் ஜொலித்தது. அவளுடைய நீண்ட கண்களிலிருந்து வெண்ணிலவின் கிரணங்கள் வீசிப் பிரகாசித்தன. 
மாதுளை மொட்டை நிகர்த்த அவளுடைய இதழ்கள் விரிந்து ஏதேதோ மதுரமான சொற்களைப் பொழிந்தன. வந்தியத்தேவன் எவ்வளவோ கவனமாகக் கேட்டான். ஆனால் அவள் என்ன சொன்னாள் என்பதை மட்டும் அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. 
எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும்? அவள் கூறியவை என்ன வார்த்தைகளாயிருந்தால் என்ன? இதயமாகிய பொற் கலசம் திறந்து அன்பாகிய அமுதம் பொங்கி வரும்போது வெறும் சொற்களின் உபயோகம் என்ன? சிறிது நேரத்துக்கெல்லாம் மணிமேகலையின் கனி இதழ்கள் குவிந்தன. கண்ணிமைகள் மூடின. முகத்தில் தவழ்ந்த தெய்வீக சோபை குன்றியது. அமைதி குடிகொண்டது. நீராழி மண்டபத்தின் மேலே படர்ந்திருந்த மரக்கிளையின் மீது இளந்தென்றல் வீசியது. மரக்கிளையில் குலுங்கிய செந்நிற மலர்களில் சில உதிர்ந்தன. மணிமேகலையின் உயிரும் அவளுடைய உடலிலிருந்து உதிர்ந்தது. 
உடலைப் பிரிந்த உயிர் எங்கே சென்றது? எவ்வழியே சென்றது? மந்தமாருதத்துடன் கலந்து சென்றதா? இளங்காற்றில் எழுந்த சிற்றலைகளின் இனிய ஓசையில் ஏறிச் சென்றதா? இதய தாபம் தொனிக்கப் பாடிய பூங்குயில்களின் மதுரகீதத்துடன் ஒன்றாகி விண்ணில் பறந்து சென்றதா? எங்கே சென்றது? சகல புவனங்களையும் சகல ஜீவராசிகளையும் ஆக்கி அளித்து அழிக்கும் பரம்பொருளின் பாதார விந்தத்துக்குச் சென்றதா? அல்லது கண்ணீர் பெருக்கும் கற்சிலை போல் நினைவற்று உட்கார்ந்திருந்த வந்தியத்தேவனுடைய உள்ளத்திலேதான் கலந்து போய் விட்டதா? யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் சொல்ல முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம். வேடிக்கையும் விளையாட்டும், குறும்பும் குதூகலமும், துணிவும், துடுக்கும், துணிச்சலும் உருக்கொண்டவனாக இருந்த வந்தியத்தேவனை இனி நாம் காணப்போவதில்லை. கனிந்த உள்ளமும், கருணையும், விவேகமும் வந்தியத்தேவனை அந்தக் கணத்தில் வந்து அடைந்தன. மணிமேகலையாகிய தெய்வம் அவன் இதயக்கோவிலில் குடிகொண்டாள். இனி அவன் எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும் அந்தத் தெய்வம் அவனுக்குத் துணை புரியும்.
வல்லவரையன் வந்தியத்தேவன் நல்ல பணிகள் பல செய்ய வல்லவனாவான். அவனை அறிந்த அனைவராலும் வந்தனை செய்வதற்கு உரியவனாக விளங்குவான். 
வீரனே! உன்னிடமிருந்து தற்சமயம் விடைபெற்றுக் கொள்கிறோம். உன் துயரம் நிறைந்த சிந்தனைகளில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை. 
அருள்மொழிவர்மனின் அருமை நண்பனே! நீடூழி நீ வாழ்வாயாக! வீரத் தமிழரின் மரபில் உன் திருநாமம் என்றும் நிலைத்து விளங்குவதாக!

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel