←← 4. பெயர் மாற்றம்
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்5. திருவாவடுதுறைக் காட்சி
6. பட்டீச்சுரத்தில் →→
439993தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 5. திருவாவடுதுறைக் காட்சிகி. வா. ஜகந்நாதன்
திருவாவடுதுறைக் காட்சி
முதல் முறையாக இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடன் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்றார். அப்போது ஆதீனகர்த்தராக மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் இருந்தார். அவர் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்தவர். அங்கே பிள்ளைக்கு அளிக்கப்பெற்ற வரவேற்பையும், அவரவர்களுக்கு ஏற்றபடி அவர் இனிமையாகப் பேசிய தன்மையையும் இவர் கவனித்தார். இதுகாறும் காணாத காட்சியை ஆசிரியப் பெருமான் அங்கே கண்டார். மகா வித்துவானிடம் ஆதீன கர்த்தருக்கு இருந்த சிறந்த அன்பை அப்போது ஆசிரியரால் உணர முடிந்தது. திருவாவடுதுறையில் இருந்து எல்லோருக்கும் பாடம் சொல்ல வேண்டுமென்றும், தம்பிரான்கள் பலர் பாடம் கேட்கவேண்டுமென்ற ஆவலோடு இருப்பதாகவும் தேசிகர் தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த இவரைப் பார்த்து, “இவர் யார்?” என்று கேட்க, தம்மிடம் இருந்து சில காலமாகப் பாடம் கேட்டு வருவதாகப் பிள்ளை சொன்னார்.
பிறகு தேசிகர் ஆசிரியப் பெருமானிடம் ஏதாவதொரு பாடலைச் சொல்லச் சொன்னார். இசையுடன் இவர் பாடினார்; பொருள் விளங்கும்படியாகச் சொற்களைப் பிரித்துப் பாடினார். தேசிகர் அதைக் கேட்டு மிகவும் உவகை அடைந்தார்.
சுப்பிரமணிய தேசிகர் திரிகூடராசப்பக் கவிராயர் பரம்பரையில் வந்தவர். திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றால யமக அந்தாதியில் உள்ள ஒரு பாட்டைத்தான் இவர் சொன்னார். தம் முன்னோர் பாடிய பாடலானதாலும், அதை இசையுடன்சொன்னதாலும் தேசிகருக்கு இன்பம் உண்டாயிற்று; இவரைப் பற்றிய செய்திகளை எல்லாம் பிள்ளையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
திருவாவடுதுறைக் காட்சிகள் ஆசிரியருடைய உள்ளத்தில் பதிந்தன. அங்கேயிருந்த தம்பிரான்கள் நீண்ட சடைகளுடன் காவி உடுத்திருந்தார்கள். அவர்கள் ஆறுகட்டி, சுந்தரவேடத்துடன் இருப்பது கண்டு வியந்து நின்றார். அங்கங்கே உள்ளவர்களின் தவக் கோலத்தைப் பார்த்து அதைச் சிவராஜதானி என்று உணர்ந்தார்.
தேசிகர் பிள்ளையவர்களைப் பார்த்து, “இனிமேல் நீங்கள் இங்கே தங்கியிருந்து எல்லோருக்கும் பாடம் சொல்லித் தரவேண்டும். அது தான் நமக்கும் திருப்தியாக இருக்கும்" என்று சொன்னார். அப்போது பட்டீச்சுரத்திலிருந்து வந்திருந்த ஆறுமுகத்தா பிள்ளை என்பவர் சந்நிதானத்திடம், "பிள்ளையவர்களைப் பட்டீச்சுரம் அனுப்பிவைக்க, உத்தரவாக வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். தேசிகரும் அவ்வாறே போய்வர அனுமதித்தார்.