←← 6. பட்டீச்சுரத்தில்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்7. திருவாவடுதுறைக் குருபூஜை

8. பிள்ளையவர்களின் அன்பு →→

 

 

 

 

 


439995தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 7. திருவாவடுதுறைக் குருபூஜைகி. வா. ஜகந்நாதன்

 

 


திருவாவடுதுறைக் குருபூஜை


தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தியின் குருபூஜை நடைபெறும். அன்று காலை ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறையை அடைந்தார். திருவாவடுதுறையில் குருபூஜை பெரிய விழாவாக நடக்கும். பலவகையான மக்கள் வந்து சேருவார்கள். எங்கும் சைவத் திருக்கோலம் விளங்கும், ஒரு பக்கம் இசைக் கச்சேரி நடைபெறும். மறுபக்கம் புலவர்கள் ஒன்றுகூடித் தமக்குள் உரையாடிக் கொண்டிருப்பார்கள். வடமொழிப் புலவர்கள் எல்லாம் தம் ஆராய்ச்சியில் கண்ட நுட்பங்களைத் தமக்குள் உரையாடி இன்புறுவார்கள். மிகச் சிறப்பாக அன்னதானம் நடக்கும். ஆசிரியர் திருவாவடுதுறையில் பிள்ளையவர்களைச் சந்தித்தார். இவரைச் சந்தித்தவுடன் பிள்ளைக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. "குருபூஜை ஆனவுடன் நான் மாயூரத்திற்குப் போவேன். போனவுடன் தொடர்ந்து நீர் பாடம் கேட்கலாம் அல்லவா?" என்று கேட்டார். மாணாக்கருக்குப் பாடம் கேட்கவேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. பாடம் சொல்லவேண்டுமென்ற அவா தம் ஆசிரியரிடம் மிகுதியாக இருப்பது கண்டு இவர் வியந்தார்.
குருபூஜை அன்று பிள்ளையவர்களோடு ஆசிரியர் தங்கியிருந்தார். அப்போது ஒரு புலவர் வந்து சுப்பிரமணிய  தேசிகரைப்பற்றிப் புகழ்ந்து தமக்கு ஒரு பாட்டு எழுதித் தரும்படி பிள்ளையிடம் கேட்டார். பிள்ளையவர்கள் எழுதித் தந்தார். பின்னர் அதுபோலப் பலர் ஒருவர் பின் ஒருவராக வர, ஒவ்வொருவருக்கும் ஒரு பாட்டு எழுதிக் கொடுத்தார். அவர்கள் அந்தப் பாடல்களைத் தாமே எழுதியதாகத் தேசிகரிடம் போய்ச் சொல்லிப் பரிசு பெற்றார்கள். மறு நாள் தேசிகரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை சந்திக்கும்போது, "இரவு எல்லாம் பிள்ளையவர்களுக்கு மிகவும் வேலை வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது" என்று தேசிகர் குறிப்பாகச் சொன்னார்.
பிள்ளையவர்கள் மாயூரம் போய்ச் சேர்ந்தபின் ஆசிரியரும் அங்கே சென்றார். அங்கிருந்து மறுபடியும் பிள்ளை திருவாவடுதுறைக்குப் புறப்பட்டபோது ஆசிரியரும் உடன் சென்றார். திருவாவடுதுறைக்கு வண்டியில் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். போகும்போது பிள்ளை அம்பர்ப்புராணத்தை பாட ஆரம்பித்தார். வண்டியின் ஓட்டத்திலேயே கவிதையின் ஓட்டமும் தொடர்ந்து வந்தது. வண்டி போய்க்கொண்டிருக்கையில் ஏட்டுச் சுவடியில் அந்தப் பாடல்களை என் ஆசிரியர் எழுதிக்கொண்டே போனார், அம்பர்ப்புராணத்தில் "நந்தன் வழிபடு படலம்" என்பதில் முன்பு 53 பாடல்களே பாடப்பெற்றிருந்தன, நந்தன் பயணத்தைப் பற்றிய செய்திகளே, இவர்களது வண்டிப்பயணத்தில் பாடப்பெற்று ஆசிரியரால் எழுதப்பெற்றன.
திருவாவடுதுறையில் இரண்டு வகையான பாடங்களை ஆரம்பிக்க ஏற்பாடாயிற்று. முதியவர்களுக்குச் சில நூல்களையும், இளையவர்களுக்குச் சில நூல்களையும் பாடம் சொல்வது எனத் திட்டம் செய்தார்கள். ஆசிரியரை எந்தக் கட்சியில் சேர்ப்பது என்ற எண்ணம் வந்தது. இவரைக் கேட்டபோது இரண்டு வகையான பாடமும் கேட்பதாக இவர் சொன்னார். அவ்வாறே இரண்டு வகுப்புக்கும் என்ன என்ன பாடங்கள் நடந்தனவோ அவற்றையெல்லாம் இவரும் கேட்டு வந்தார். பாடம் நடக்கும்போது பாடல்களை இசையுடன் படிக்கின்ற வேலையை இவர் செய்து வந்தார்.
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel