←← 10. புராணப் பிரசங்கம்
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்11. பிள்ளையவர்கள் மறைவு
12. புதிய வீடு →→
439998தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 11. பிள்ளையவர்கள் மறைவுகி. வா. ஜகந்நாதன்
பிள்ளையவர்கள் மறைவு
1876-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆசிரியப் பெருமானுடைய ஆசிரியரும், பெரும்புலவர் பெருமானுமாகிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறைவன் திருவடியை அடைந்தார். கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் அந்தப் புலவர் பெருமானுக்குத் தமிழே நினைவாக இருந்தது. அந்தக் கடைசிக் காலத்தில் கூடத் திருவாசகத்தை வாசித்துக் கொண்டிருந்த இவருக்கு ஏற்பட்ட ஒரு சிறு ஐயத்தைத் தீர்த்து வைத்தார். பிள்ளையின் மறைவினால் ஆசிரியர் துன்பக் கடலில் ஆழ்ந்தார். சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்கும் போது விம்மி விம்மி அழுதார். பிரிவதற்கரிய பொருளை இழந்து விட்டோம். இனி நாம் என்ன செய்வோம்? உம்மிடத்தில் பிள்ளையவர்களுக்கு எத்தனையோ அன்பு இருந்தது. இனியும் நீர் இந்த மடத்துப் பிள்ளையாகவே நம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டு இங்கு இருந்து வரலாம்' என்று சுப்பிரமணிய தேசிகர் ஆறுதல் கூறினர்.
அவ்வாறே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் சில நூல்களை ஆசிரியப் பெருமான் பாடம் கேட்டார். கம்பராமாயணம், நன்னூல் முதலிய பாடங்கள் நிகழ்ந்தன. சித்தாந்த நூல்களைப் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. தாம் பாடம் கேட்டதோடல்லாமல் அங்கிருந்த தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லும்படியாகத் தேசிகர் இவரைப் பணித்தார். அந்தக் காலத்தில் காவடிச் சிந்தை இயற்றிய சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் திருவாவடுதுறைக்கு வந்தார். தமிழ் படிக்க வேண்டுமென்ற அவா அவருக்கு இருந்தது. ஆசிரியப் பெருமானிடம் சில நூல்களைப் பாடம் கேட்டார்.