←← 21. கிராமதானத்தை மறுத்தது
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்22. ஹாவ்லக் பிரபு விஜயம்
23. சென்னைக்குப் போவதை மறுத்தது →→
440009தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 22. ஹாவ்லக் பிரபு விஜயம்கி. வா. ஜகந்நாதன்
ஹால்லக் பிரபு விஜயம்
1898-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கல்லூரிக்கு ஆளுநர் ஹாவ்லக் பிரபு விஜயம் செய்தார். அக்காலத்தில் ஆங்கிலத்திற்கு மதிப்பு அதிகம். ஆங்கிலத்தில் வரவேற்றுப் பேசுவதே நாகரிகம் என்று பலரும் நினைத்த காலம். ஆனால் ஆசிரியப் பெருமானை நன்கு உணர்ந்த கல்லூரி முதல்வர் நாகோஜிராவ் தமிழிலும் ஒரு வரவேற்பு எழுதி வாசித்தளிக்க ஆசிரியருக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நினைத்தார். கவர்னர் கல்லூரிக்கு விஜயம் செய்தபோது பல பெருமக்கள் வந்திருந்தார்கள். ஆசிரியப் பெருமான் தாம் இயற்றிய வரவேற்புத் தமிழ்ச் செய்யுளை அளித்தார். ஆளுநரின் பெருமைக்கேற்றபடி அது அமைந்திருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள். ஆசிரியரைத் தம்முடன் வைத்துக்கொண்டு ஆளுநர் ஒரு படம் எடுத்துக் கொண்டார்.
ஆசிரியப் பெருமான் ஏட்டுச்சுவடிகளைத் தேடிச் சேகரித்துப் பதிப்பித்ததை அறிந்த பலர் தம்மிடம் இன்ன இன்ன சுவடிகள் இருக்கின்றன என்று எழுதுவார்கள்; பணம் அனுப்பினால் அவற்றை அனுப்பிவைப்பதாகவும் தெரிவிப்பார்கள். ஆசிரியரும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்புவார். பல சமயங்களில் அனுப்பிய பணத்திற்கு ஒரு பயனும் கிடைத்ததில்லை.
ஒரு சமயம் சாப புராணம் தம்மிடம் இருப்பதாக ஒரு புலவர் எழுதியிருந்தார். ஆசிரியரும் சிறிது பணம் அனுப்பி, அந்த நூலை அனுப்பிவைத்தால் தாம் பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பி வைப்பதாக அவருக்கு எழுதினார். அந்த நூல் வந்தது. அது எந்தச் சாபத்தையும் பற்றிய புராணம் அன்று; அது சரப புராணம்; சிவபெருமான் சரப மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாவித்த வரலாறு. அது சாப புராணமாக இல்லாவிட்டாலும் சரப புராணமாக இருந்ததனால் ஆசிரியர் ஒருவாறு திருப்தி அடைந்தார்.
மதுரையில் 1901-ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்ச் சங்கம் தொடங்கியது. அதுமுதல் ஒவ்வோர் ஆண்டும் அதன் ஆண்டு விழா நடக்கும். பாண்டித்துரைத் தேவரின் அழைப்புக்கிணங்க ஆசிரியப் பெருமானும் ஒவ்வோர் ஆண்டும் அங்குச் சென்று அதனைச் சிறப்பிப்பார். விழாவின் இரண்டாம் நாள் நடக்கும் புலவர் பேரவைக்குத் தலைமை தாங்கி ஆசிரியர் நடத்திக் கொடுப்பார். இவ்வாறு பல ஆண்டுகள் நடந்து வந்தது.
1900-ஆம் ஆண்டு சென்னையில் பல அன்பர்கள் கூடி, ‘திராவிட பாஷா சங்கம்' என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கள். கல்வித் துறையில் பணியாற்றிய சேஷாத்திரி ஆச்சார் என்பவரும், ஜே. லாரஸ் என்ற பாதிரியாரும் அந்தச் சங்கத்தின் செயலாளர்களாக இருந்தார்கள். ஆசிரியப் பெருமான் அதன் கெளரவ அங்கத்தினராக இருந்தார்.