←← 25. ஐங்குறுநூறு வெளிவரல்
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்26. சென்னையை அடைதல்
27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம் →→
440013தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 26. சென்னையை அடைதல்கி. வா. ஜகந்நாதன்
சென்னையை அடைதல்
1903-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த சீனிவாசாசாரியார் ஓய்வு பெற்றார்.
அப்போது ஆசிரியப் பெருமான் பதிற்றுப்பத்தை ஆராய்ச்சி செய்து வந்தார். ஒரு நாள் கல்லூரி முதல்வராக இருந்த ஜே. எம். ஹென்ஸ்மென் என்பவர் ஆசிரியரின் இல்லத்திற்கு வந்தார். கல்வித்துறைத் தலைவர் ஆசிரியரைச் சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றி இருப்பதாகத் தெரிவித்து, ஆசிரியரின் இடத்தில் கும்பகோணத்தில் யாரை நியமிக்கலாம் என்று தம்மிடம் கேட்டுக் கடிதம் வந்திருப்பதாகச் சொன்னார்.
இறைவன் திருவருள் இவ்வாறு கூட்டுவிக்கிறது என்ற எண்ணத்தால் ஆசிரியருக்குச் சற்று உவகை உண்டாயிற்று. என்றாலும் 23 ஆண்டுகளாக தாம் வசித்த நகரத்தையும், நகரப் பெரு மக்களையும் விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அடிக்கடி திருவாவடுதுறை ஆதீன கர்த்தருடன் சல்லாபம் செய்துவரச் சென்னை சென்றால் சந்தர்ப்பம் இல்லாது போகுமே என்கிற நினைவு வருத்தியது. சென்னைக்குச் சென்றால் பதிப்பு வேலைகளுக்குப் பல உதவிகள் கிடைக்கும். அடிக்கடி இந்த ஊரிலிருந்து சென்னை சென்று புத்தகங்கள் பதிப்பிப்பதைவிட அங்கிருந்தே நன்றாகப் பதிப்பு வேலைகளைக் கவனிக்கலாம்' எனக் கல்லூரி முதல்வர் ஹென்ஸ்மெனும் வற்புறுத்தினார்.
திருவாவடுதுறையில் அப்போது ஸ்ரீ அம்பலவாண தேசிகர் ஆதீனத் தலைவராக இருந்தார். அவரைப் போய்ப் பார்த்துவரச் சென்றபோது அவரும், "நீங்கள் சென்னைக்குப் போவதனால் பல நன்மைகள் உண்டாகும். நம்முடைய ஆதீனப் பெருமையும் அங்கே பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே நீங்கள் சென்னைக்குப் போவதே எல்லா வகையிலும் நல்லது" என்று தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
ஆசிரியப் பெருமான் ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் திருவேட்டீசுவரன் பேட்டையில் வசித்து வந்த இவருடைய சிறிய தகப்பனார் வீட்டில் தங்கிக் கொண்டு மாநிலக் கல்லூரிக்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டார்.
கும்பகோணம் கல்லூரியில் தமிழ் வகுப்பில் உயர்த்த மேடை, நல்ல மேசை, நாற்காலி ஆகியவை இருந்தன. ஆனால் சென்னை மாநிலக் கல்லூரியில் மற்ற ஆங்கில வகுப்புகளுக்கு இருந்தது போன்ற அமைப்பு இல்லை. ஏதோ ஒரு பழைய மேசை மட்டும் தரைமட்டத்தில் இருந்தது. இதை ஆசிரியர் மிகவும் நயமாக
3 அப்போது மாநிலக் கல்லூரி முதல்வராக இருந்த பில்டர்பெக் துரையிடம் எடுத்துச் சொன்னார். அவர் உடனே மாநிலக் கல்லூரியிலும் தமிழ் வகுப்புக்கு உயர்ந்த மேடை நல்ல மேசை, நாற்காலி, பீரோ ஆகியவற்றை அமைக்க ஏற்பாடு செய்தார்.
1904-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவேட்டீசுவரன் பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் மாதம் 20 ரூபாய் வாடகைக்கு ஒரு வீட்டிற்குக் குடி வந்தார். அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிற்றுப்பத்து வெளியிடப்பெற்றது.
1905-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆசிரியப் பெருமானுடைய அன்னையார் சரஸ்வதி அம்மாள் காலமானார்கள். திரு சீனிவாச ஐயங்கார் ஆசிரியருடைய வீட்டிற்குத் துக்கம் கேட்க வந்தார். அச்சமயம் பேச்சோடு பேச்சாக, மணிமேகலைக் கதைச் சுருக்கத்தை எப்.ஏ. வகுப்புக்குப் பாடமாக வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகச் சொன்னார். "இதனால் வருகிற பணம் மாதா கைங்கர்யத்திற்கு இருக்கட்டும்" என்று சொன்னார்.
ஆசிரியப் பெருமானின் வகுப்பிலிருந்த மாணவர்களைச் சில பொறாமைக்காரர்கள் தூண்டிவிட்டு, ஆசிரியர் பாடம் சொல்லும் போது சில இடையூறுகளை ஏற்படுத்தச் செய்தார்கள். ஒரு சமயம் ஒரு துண்டுப் பத்திரிகை வெளியிடப்பெற்றது. அதில், நச்சினார்க்கினியர் தவறு செய்தார்; சங்கராச்சாரியார் தவறு செய்தார்; உ. வே. சாமிநாதையரும் பிழைகளைச் செய்திருக்கிறார் என அச்சிடப் பெற்றிருந்தது. ஒரு மாணவன் மிகவும் வருத்தத்தோடு ஆசிரியரிடம் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்து காட்டினான். அதைப் பார்த்து ஆசிரியப் பெருமானுக்குக் கோபம் வரவில்லை; வருத்தம் ஏற்படவில்லை; புன்னகை பூத்த முகத்துடன், "இந்த எளியேனை அவ்வளவு உயரத்திற்கா ஏற்றிவிட்டார்கள்? சங்கராசாரியாருடனும் நச்சினார்க்கினியருடனும் சமமாக என்னை வைத்தல்லவா சொல்லியிருக்கிறார்?" என்றவுடன் மிகவும் வருத்தத்துடன் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்த மாணவனே வருத்தம் மாறிச் சிரித்துவிட்டான்.