←← 48. பல்கலைக் கழகத்தில் பேச்சு
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்49. நான் மாணவனாகச் சேர்ந்தது
50. வேறு நூற்பதிப்புகள் →→
440036தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 49. நான் மாணவனாகச் சேர்ந்ததுகி. வா. ஜகந்நாதன்
நான் மாணவனாகச் சேர்ந்தது
1927-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு டாக்டர் அன்சாரி தலைமையில் சென்னையில் நடந்தது. அப்போது சேந்தமங்கலம் ஐராவத உடையார் என்னையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தார். தியாகராச விலாசம் சென்று ஆசிரியரைப் பார்த்தேன். அவரிடமே தங்கிப் பாடம் கேட்கும் விருப்பத்தைச் சொன்னேன். ஆசிரியப் பெருமான் என்னை ஏற்றுக்கொண்டார். உடல் நலம் இல்லாமையினால் அப்போது ஆசிரியர் எந்தப் பதிப்பு வேலையையும் செய்ய வில்லை. நான் நாள்தோறும் 300, 400 பாடல்கள் பாடம் கேட்டேன். முதலில் திருவிளையாடல் புராணத்தைப் பாடம் கேட்டேன். பாடம் சொல்லும்போது பல நுட்பமான நயங்களை எடுத்துக்காட்டுவார். அரிய செய்திகளை எடுத்துச் சொல்வார். பிள்ளையவர்களைப் பற்றி மனம் நெகிழ எடுத்துரைப்பார். பிள்ளையவர்கள் விரைவில் கவிதை பாடியதைப்பற்றிச் சொல்லும்போது எனக்கு வியப்பு உண்டாயிற்று. சங்க நூல்களை எல்லாம் பதிப்பித்து, தமிழில் ஒரு புதிய மறுமலர்ச்சியை உண்டாக்கிய ஆசிரியப் பெருமான் அவர்கள், அந்த நூல்களைப்பற்றி எதுவுமே தெரிந்திராத தம் ஆசிரியரைப் பற்றி, தம்முடைய முதுமைப் பிராயத்திலும் மிகவும் பக்தியோடு எண்ணிப் பேசுவதை அறிந்து நான் மிகவும் மன நெகிழ்ச்சி அடைந்தேன். ஞானாசிரியரிடம்கூட ஒரு மாணாக்கருக்கு இவ்வளவு பக்தி இருப்பதில்லை. ஆசிரியப் பெருமானுக்குப் பிள்ளையவர்களிட மிருந்த பக்திக்கு வேறு உவமை எதுவும் சொல்ல முடியாது.
அந்தாதிகள், கோவைகள், உலாக்கள் முதலிய பிரபந்தங்களை எல்லாம் நான் இவரிடம் வரிசையாகப் பாடம் கேட்டேன்.