←← 64. வாழ்க்கை நிறைவு
தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்65. உரைநடை
66. புத்தக விவரம் →→
440052தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 65. உரைநடைகி. வா. ஜகந்நாதன்
உரைநடை
இவர் பதிப்பித்த நூல் ஒவ்வொன்றிலும் விரிவான முகவுரை இருக்கும். அதில் நூலைப் பற்றிய குறிப்புக்களும் அதன் சிறப்பான இயல்பும் அதன் மூலப் பிரதிகள் கிடைத்த இடங்களும் பதிப்புக்கு உதவி செய்தவர்களின் பெயர்களும் இருக்கும். நூற்பிரதி கிடைக்க உதவி செய்தவர்களின் பெயர்களையும் நன்றியறிவோடு குறிப்பிட்டிருப்பார். ஐயரிடம் கண்ட பண்புகளில் மிகவும் முக்கியமானது நன்றியறிவு. தம்மிடம் பாடம் கேட்ட மாணாக்கர்கள் செய்த உதவியைக்கூட மறவாமல் குறிப்பிடுவார். நம்மிடம் பயின்றவர்தாமே? என்று புறக்கணிக்கமாட்டார்.
மூல நூல் பிரதிகள் எங்கே எங்கே கிடைத்தன என்ற விவரத்தையும் அந்த முகவுரையால் அறிந்துகொள்ளலாம். அதிலிருந்து, எவ்வளவு இடங்களுக்குச் சென்று சுவடிகளைத் தேடி அலைந்திருப்பார் என்று தெரிந்துகொள்ளலாம். சுவடிகளைத் தேடி ஏமாந்த இடங்களும் பல உண்டு. கொங்கு நாட்டில் ஒரு புலவர் வீட்டில் வளையாபதி இருக்கிறது என்று ஒரு பொறுப்புள்ள கனவான் சொன்னார். அந்தச் செய்தியைக் கேட்டவுடன் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது ஐயருக்கு. உடனே அவ்வூரை நோக்கிப் புறப்பட்டார். நானும் அப்போது உடன் சென்றேன்.
அந்தப் புலவர் காலமாகிவிட்டார். அவருடைய குமாரன் இருந்தான். ஐயர் தக்க பெரிய மனிதர்களையும் அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்குச் சென்றார். பெரிய மனிதர்கள் தன் வீட்டுக்கு வந்ததுபற்றி அந்தப் பையனுக்கு அளவற்ற மகிழ்ச்சி. “உன்னுடைய தகப்பனார் ஏட்டுச் சுவடிகள் வைத்திருந்தாராமே! அவற்றை எல்லாம் நீ வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார் ஒருவர். "இருக்கின்றன. இதோ கொண்டுவந்து காட்டுகிறேன்” என்று சொல்லி உள்ளே சென்று சுவடிகளையெல்லாம் கொண்டு வந்து போட்டான். அவற்றில் சிலவற்றைக் கறுப்புக் கயிற்றிலும் வேறு சிலவற்றை மஞ்சள் கயிற்றிலும் கட்டியிருந்தார்கள். இவ்வாறு வெவ்வேறு வகைக் கயிற்றினால் “ஏன் கட்டியிருக்கிறார்கள்?” என்று கேட்டபோது, “மஞ்சள் கயிறு கட்டியவையெல்லாம் இசைக் கவிகள், கறுப்புக் கயிறு கட்டியவை வசைக் கவிகள்” என்றான்!
“அந்தச் சுவடிகளில் வளையாபதி இருக்கிறதா?” என்று ஐயர் கேட்டார். “இதோ இருக்கிறதே!” என்று ஒரு சுவடியை எடுத்து நீட்டினான். ஐயர் ஆவலோடு அதைப் பிரித்துப் பார்த்தார். அது வளையாபதி அன்று, வைசிய புராணம் என்ற நூலில் உள்ள ‘வளையாபதிச் சருக்கம்’ என்ற பகுதி அது. அதற்கும் வளையாபதிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. "இதை ஒரு வழக்குக்குச் சாட்சியாகக் காட்ட என் தந்தையார் எங்கிருந்தோ கொண்டு வந்தார்" என்று அந்த இளைஞன் சொன்னான். அது அந்தப் பையனின் அறியாமைக்குச் சாட்சியாகத்தான் இருந்தது.
ஐயர் எழுதிய உரைநடை நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒருவகை வாழ்க்கை வரலாறுகள், மற்றொரு வகை, அவர் ஏடு தேடிய வரலாறுகள். தம்மோடு பழகிய பெரியவர்களை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. அவர்களைப் பற்றிய வரலாறுகளைத் தெரிந்தவரையில் சிறியதாகவும், பெரியதாகவும் எழுதியிருக்கிறார். அவற்றில் மிகவும் முக்கியமானது அவருடைய ஆசிரியராகிய மகாவித்துவான் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம். அதை இரண்டு பாகங்களாக எழுதினார். தாம் அவரிடம் தமிழ் பயிலப் போவதற்கு முந்திய நிகழ்ச்சிகளை முதற்பாகமாகவும் அவரிடம் சேர்ந்து தமிழ் பயின்ற காலத்தைப் பற்றி அப்புலவர் பெருமானுடைய இறுதிக் காலம் வரையிலும் இரண்டாம் பாகமாகவும் எழுதியிருக்கிறார். அவற்றைப் படிக்கும்போது ஐயருக்கு இருந்த குரு பக்தியை வியக்காமல் இருக்க முடியாது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை, இக்கவிஞர் பெருமான், இப்புலவர் பிரான், இத்தமிழ்க் கவிஞர் என்று குறிப்பிடுவாரேயொழியப் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. ஆனால் அவருடைய இளமைப் பருவத்தைக் குறிப்பிடும் ஓரிடத்தில் மட்டும் ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று எழுதியுள்ளார். அதுமட்டும் அன்று. உடனே அடிக்குறிப்பில், ‘இப்படி எழுத என் கை கூசுகிறது’ என்று எழுதியிருக்கிறார். ‘முதுமை காரணமாகக் கை நடுங்கியிருக்கலாம்’ என்று இக்காலப் பிள்ளைகள் நினைத்தல் கூடும்! உண்மையை உணர்பவர்களுக்கு இவருடைய குரு பக்தியின் ஆழம் நன்கு புலப்படும்.
பிள்ளையவர்கள் சரித்திரம் முதற்பாகம் எழுதி முடித்தவுடன் இரண்டாவது பாகத்தை எழுதி வந்தார். அப்போது கீழே விழுந்து பாதத்தில் வீக்கம் கண்டு எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டார். டாக்டர் ரங்காச்சாரியார் அறுவைச் சிகிச்சை செய்தார்.
பிள்ளையவர்கள் சரித்திரம் எழுதி முடிக்கவில்லையே என்ற தாபம் இவர் மனத்தில் இருந்தது. டாக்டர்களும் மற்றவர்களும் எழுதக்கூடாது, படிக்கக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள். ஆனாலும் இவருக்கு, ‘இதை முடிக்காமல் என் உயிர் போய் விட்டால் என்ன ஆவது?’ என்ற ஏக்கம் இருந்தது. ஒரு நாள் இவருடைய குமாரர் தம் அலுவலகம் சென்று விட்டார். பிற்பகல் நேரம், இவர் மெல்ல எழுந்து ஓர் அறையில் சென்று அமர்ந்தார். என்னிடம், "பிள்ளையவர்கள் சரித்திரத்தை எடுத்து வா" என்று கட்டளையிட்டார். நான் சற்றுத் தயக்கத்தோடே எடுத்துச் சென்றேன்.
உடனே இவர் பிள்ளையவர்களின் இறுதி நிலையைச் சொல்லத் தொடங்கினார். அந்தக் காட்சியை அவர் தம் மனக்கண்ணால் கண்டிருக்க வேண்டும். கண்ணீர் விட்டுக்கொண்டே அந்தப் பகுதியைச் சொன்னார். பிள்ளையவர்களின் பிரிவை அறிந்து புலவர்களும் பிறரும் வருந்தியதைச் சொல்லோவியமாக எடுத்துரைத்தார். அந்தப் பகுதியை இப்போது யார் படித்தாலும் கண்ணில் நீர் வரும். உண்மை உணர்ச்சியோடு எழுதியிருப்பதனால் தான் அவ்வாறு அமைந்திருக்கிறது.
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரத்தில் அவருடைய வரலாறு மட்டும் இருக்கிறது என்று சொல்ல முடியாது. அக்காலத்தில் இருந்த புலவர்களின் நிலை, தமிழ் ஆர்வம், பெரிய மனிதர்களின் இயல்பு முதலிய பல செய்திகளைக் காணலாம். எல்லா வகையான சுவைகளும் இருக்கும்.
தியாகராச செட்டியார் வரலாறு
ஐயருக்கு வேலை வாங்கித் தந்தவர் வித்துவான் தியாகராச செட்டியார், அவர் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். அவர் ஓய்வு பெறும்போது, "நீங்கள் தக்கவர் ஒருவரை உங்கள் இடத்தில் நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டார். 'இவரை நியமிக்கலாம்' என்று அவர் ஐயரைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். ஆனால் ஐயருடைய திறமையை யாவரும் அறியவேண்டும் என்று எண்ணினார். கல்லூரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு அவர் முன்னிலையில் ஐயரை அமரச் செய்து, அந்த ஆசிரியர்களைத் தமிழ் நூல்களின் சம்பந்தமாகத் தமக்கு விருப்பமான கேள்விகளைக் கேட்கச் சொன்னார். ஐயர் தக்கபடி விடை கூறி எல்லோரையும் மகிழ்வித்தார்.
அவருக்குத் தமிழாசிரியர் பணியை வாங்கிக் கொடுத்த தியாகராச செட்டியார் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர். செட்டியார் தமக்குச் செய்த நன்றியை மறவாமல் அவருடைய வரலாற்றை இவர் எழுதியிருக்கிறார். அதைப் படிக்கும்போது நமக்குத் தியாகராச செட்டியார் அதிகத் துணிவுள்ளவர் என்று தோன்றும். அந்தப் பகுதிகளையெல்லாம். ஐயர் செட்டியாரிடம் குற்றம் காணாதவாறு நயமாக எழுதியுள்ளார். தம் இல்லத்திற்குத் 'தியாகராச விலாசம்' என்ற பெயர் வைத்தார்.
ஐயரின் முன்னோர்களில் இசைப் புலவராகிய கனம் கிருஷ்ணையரிடம் ஐயருடைய தந்தையார் பயின்றவர். தம்முடைய குமாரரையும் இசைப் பெரும் புலவராக்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழ் நாட்டின் நல்லூழ் இவரைத் தமிழிலக்கியத்துக்கு இழுத்து வந்துவிட்டது. இல்லாவிட்டால் இன்று நாம் எளிதிலே பெற்றுப் படித்து இன்புறும் சங்க நூல்களும் பிற பழங்காப்பியங்களும் நமக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்.
இப்படி நான் சொல்லுவதற்குத் தக்க காரணம் உண்டு. அந்தக் காலத்தில் தமிழ்ப் பெரும் புலவர்கள் பலர் இருந்தார்கள். ஏட்டுச் சுவடிகளும் நிரம்ப இருந்தன. ஐயர் ஏடு தேடிய காலத்தில் சில சுவடிகள் கிடைக்காமல் போய்விட்டன. திருவாவடுதுறை ஆதீனத்தில் இளமையில் தாம் கண்ட வளையாபதி பிற்காலத்தில் தாம் பதிப்புத்துறையில் ஈடுபட்டபோது கிடையாமல் போயிற்று என்று ஆசிரியரே வருத்தத்துடன் எழுதியிருக்கிறார்.
அக்காலத்தில் பெரிய சங்கீத வித்துவானாக விளங்கியவர் மகா வைத்தியநாதையர். அவருடைய தமையனாராகிய இராமசாமி பாரதியார் பெரிய புராணக் கீர்த்தனையை இயற்றியிருக்கிறார். மகா வைத்தியநாதையர் அடிக்கடி திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வந்து சங்கீதக் கச்சேரி செய்வது வழக்கம். ஐயர் அவர் இசையை நன்றாக அநுபவித்துக் கேட்டவர். இசையில் ஞானம் இருந்தமையால் மகா வைத்தியநாதையருடைய இசை நுட்பத்தை நன்றாக அறிய முடிந்தது. அவரோடு பழகி அவருடைய அரும் பண்புகளை உணர்ந்தார். அதன் விளைவாக அவருடைய வரலாற்றை ஐயர் எழுதினார்.
பிள்ளையவர்களிடம் மாணாக்கர் ஆதல்
மாயூரத்தில் இருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தம் புதல்வரை ஒப்புவித்துத் தமிழ் பயிலச் செய்ய வேண்டுமென்று ஐயரின் தந்தையார் விரும்பினார். அவ்வப்போது சந்தித்த சில புலவர்களிடம் சில பாடல்களையும் சில சிறிய நூல்களையும் ஐயர் பாடம் கேட்டிருந்தார். ஆனால் அவருடைய தமிழ்ப் பெரும் பசிக்கு அது போதவில்லை. அப்போதுதான் மாயூரத்தில் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருக்கிறாரென்றும், அவர் எல்லாத் தமிழ் நூல்களையும் கற்றவரென்றும், பாடம் சொல்வதில் வல்லவரென்றும் தெரியவந்தது. அவரிடம் சென்று பாடம் கேட்டால்தான் தம் குமாரருடைய ஆவல் நிறைவேறும் என்று ஐயரின் தந்தையார் நினைத்தார். அவர் சந்தித்த புலவர்கள் யாவரும் அந்தக் கருத்தையே வற்புறுத்தினார்கள்.
அக்காலத்தில் நந்தனார் சரித்திரத்தை இயற்றிய கோபால கிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் வாழ்ந்து வந்தார். மாயூரத்திற்குச் சென்று மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படிப்பதோடு, ஒழிந்த வேளைகளில் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசையையும் பயின்று வரலாம் என்ற எண்ணம் ஐயரின் தந்தையாராகிய வேங்கடசுப்பையருக்கு உண்டாயிற்று. அப்படியே மாயூரத்துக்கு ஐயரை அழைத்துச் சென்றார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயில ஏற்பாடு செய்தார். அதோடு காலை வேளைகளில் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் இசை பயிலவும் ஏற்பாடு செய்தார். சில நாட்களில் ஐயர் பாரதியாரிடம் இசை பயில்வதை அறிந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவரிடம், “இசையில் மனம் சென்றால் வேறு எதிலும் மனம் செல்லாது” என்று குறிப்பிக்கவே, ஐயர் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை பயில்வதை நிறுத்திக் கொண்டார். ஆனாலும் அவர் பழக்கத்தை மட்டும் விடவில்லை.
அதனால் கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரத்தையும் பிற்காலத்தில் எழுதினார். நந்தனார் சரித்திரத்தைப் பாடிப் பழகியவர் ஐயர். அதை எழுதியவர் அழகுடையவராக இருப்பார் என்று எண்ணியிருந்தார். ஆனால் நேரில் பார்த்தபோது பாரதியாருடைய உருவம் வேறு விதமாக இருந்தது. இறுகிய கழுத்தும் சப்பைக் காலுமாகக் காட்சி அளித்தார். அவரைக் கண்டு முதலில் வியப்படைந்தாலும் பிறகு, கோணலான யாழிலிருந்துதானே நல்லிசை பிறக்கிறது? அதுபோல இந்தப் பெருமானிடமிருந்து இன்னிசை தோன்றுகிறது என்று எண்ணிக்கொண்டாராம்.
பலர் வரலாறுகள்
தனித்தனியே சிலருடைய வரலாறுகளை நூல் வடிவில் எழுதியதையன்றிக் கட்டுரை வடிவிலும் பலருடைய வரலாறுகளை எழுதியுள்ளார். புதுக்கோட்டையில் திவானாக இருந்த சேஷையா சாஸ்திரியார், பேராசிரியர் பூண்டி அரங்கநாத முதலியார், இசைப் புலவர் ஆனை ஐயா, சுப்பிரமணிய பாரதியார் முதலிய பலரைப் பற்றியும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
சுப்பிரமணிய பாரதியாருக்கும் ஐயருக்கும் நல்ல பழக்கம் உண்டு. பாரதியார் தாம் நடத்திய ‘இந்தியா' என்னும் பத்திரிகை யில் ஐயரைப்பற்றிச் சிறப்பித்து எழுதியிருக்கிறார். ஐயருக்கு மகாமகோபாத்தியாயப் பட்டம் கிடைத்தபோது சென்னை மாநிலக் கல்லூரியில் ஐயரைப் பாராட்டி ஒரு விழா நடைபெற்றது. அதற்குப் பாரதியாரும் சென்றிருந்தார். அப்பொழுதே அவர், ‘செம்பரிதி ஒளிபெற்றான்’ என்று தொடங்கும் பாடலுடன் மூன்று பாடல்களைப் பாடினார். பாரதியார் பாடல் தொகுதியில் 'மகாமகோபாத்தியாய வாழ்த்து’ என்ற தலைப்பில் அந்தப் பாடல்கள் உள்ளன. அவற்றை முதலில் பென்சிலில் எழுதிய தாளை நான் பார்த்திருக்கிறேன்.
சுப்பிரமணிய பாரதியாருடைய விழா ஒரு முறை சென்னைக் காங்கிரஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பாரதி “யாரைப்பற்றிப் பேசவேண்டுமென்று அமரர் ராஜாஜி ஐயரைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறே சென்று ஐயர் பேசினார். அதைக் கேட்ட பிறகு ராஜாஜி, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று விசுவாமித்திரர் சிறப்புப் பெற்றதுபோல ஐயரவர்கள் வாயால் பாரதியின் பெருமை அதிகமாயிற்று” என்று சொன்னார். அக்காலத்தில் சில புலவர்கள் பாரதியாரைப் பெருங் கவிஞராக மதிப்பதில்லை. அந்த எண்ணம் ராஜாஜியின் மனத்தில் இருந்திருக்க வேண்டும். ஐயர் பாரதியாரைப் புகழ்ந்து பேசியபோது ராஜாஜிக்குப் பேருவகை உண்டானது இயல்புதானே? அவருக்குப் பாரதியாரின் பெருமையும் தெரியும்; ஐயரின் பெருமையும் தெரியும். பாரதியார் தமிழ் மக்களுக்குப் புதிய அணிகலன்களைச் செய்து அணிந்தவர். ஐயரோ பழைய அணிகலன்களைக் கண்டெடுத்துத் துலக்கிப் புனைந்தவர். இந்த இருவருடைய தொண்டுகளையும் நன்கு உணர்ந்த ராஜாஜி, ஐயரின் வார்த்தைகளைக் கேட்டதும் பேரானந்தம் கொண்டார். ஐயர் சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றி எழுதிய கட்டுரை அவருடைய நூல் தொகுதி ஒன்றில் இருக்கிறது.
பூண்டி அரங்கநாத முதலியார் மாநிலக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக இருந்தவர், தமிழிலும் வல்லவர், தமிழ்க் கவிஞர். அவர் கச்சிக் கலம்பகம் என்ற நூலை இயற்றினர். அக்காலத்தில் ஐயர் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். பூண்டி அரங்கநாத முதலியார் தம் நூலைப் பல புலவரைக்கொண்டு அரங்கேற்றினர். அரங்கேற்றம் சில நாட்கள் நடந்தன. ஐயர் தம் பதிப்பு வேலையை முன்னிட்டுச் சென்னைக்கு வரும்போதெல்லாம் பூண்டி அரங்கநாத முதலியாரைச் சந்திப்பது வழக்கம். அந்தச் சமயங்களில் இவரும் கச்சிக் கலம்பக அரங்கேற்றத்தில் கலந்து கொண்டு பல பாடல்களுக்கு விளக்கம் கூறினார். பூண்டி அரங்கநாத முதலியாருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவருடைய வரலாற்றை ஐயர் எழுதியிருக்கிறார். அதில் இந்தச் செய்திகளெல்லாம் வருகின்றன.
ஐயரவர்களின் முன்னோர்களில் ஒருவர் முன் குறிப்பிட்ட கனம் கிருஷ்ணையர் என்ற இசைப் பெரும் புலவர். ஐயர் அவரைப் பார்த்திராவிட்டாலும் அவரைப்பற்றிய செய்திகளையெல்லாம் தம் தந்தையார் வாயிலாகக் கேட்டிருந்தார். அதனால் அவருடைய வரலாற்றையும் எழுதினார். மிகச் சிறிய விஷயத்தையும் சுவைபட எழுதும் ஆற்றல் மிக்கவர் ஐயர்.
கனம் கிருஷ்ணையர் நாள்தோறும் சிவபூஜை செய்பவர். ஒரு முறை பூஜை செய்ய அவருக்கு வில்வம் கிடைக்கவில்லை. அவர் அப்போது கிடைத்த கீரையைக்கொண்டே அர்ச்சனை செய்தாராம். வில்வம் இல்லை என்பதற்காகப் பூஜையை நிறுத்தக்கூடாது என்று எண்ணினார் அப்பெரியார். காளிதாஸன் வெற்றிலைக் காம்புகளைக் கொண்டே அம்பிகையைப் பூசித்த செய்தி இங்கே நினைவுக்கு வருகிறது.
நடை
ஐயர் எழுதிய கட்டுரைகளின் நடை தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடை. எந்தச் சொல்லுக்கும் அகராதியைத் தேட வேண்டிய அவசியம் இராது. ஆழமான நீர் நிலையில்தானே தெளிவு இருக்கும்? சிறிய சிறிய வாக்கியங்களாக அமைத்திருப்பார். மனிதனுடைய இதய ஆழத்தில் தோன்றும் உணர்ச்சியலைகளை விவரித்திருப்பார். புறத்தோற்றத்தையும் சிறப்பாக வருணித்திருப்பார். தம்முடைய ஆசிரியரைப்பற்றி இவர் கூறுவதைக் கேட்கலாம்.
‘காட்சிக்கு எளிமையும் பணிவும் சாந்தமும் இவர்பால் உள்ளன என்பதை இவரைக் கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும் இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும், அலைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும் ஆழ்ந்த கடலைப்போல் அறிவின் விசித்திர சக்தியெல்லாம், கண்டவுடன் அறிய முடியாவண்ணம் அடங்கியிருக்கும் தோற்றம் உடையவராக இவர் இருந்தார்.’
அவருடைய சிவபக்தியை மிக விரிவாக எழுதியிருக்கிறார். ஐயரும் பெரிய சிவபக்தர். ஆதலால் தம் ஆசிரியரின் சிவபக்தியைப் பற்றி அவர் எழுதுவது இயல்புதானே?
அவர் கவிதை இயற்றும் முறையைச் சொல்லுகிறார்:
"இவர் பெரும்பாலும் யோசித்துக்கொண்டேயிருக்கும் இயல் புடையவர். பாடவேண்டிய விஷயங்களை ஒரு வகையாக மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்டு பின்பு பாட ஆரம்பித்தால் ஒரே மூச்சில் நூற்றுக்கணக்காகப் பாடுவார். செய்யுட்களைச் சொல்லிக் கொண்டே வருகையில் மனப்பாடமான நூல்களில் உள்ள செய்யுட்களைக் கூறுகின்றாரென்று தோன்றுமே ஒழியப் புதிய செய்யுட்களை யோசித்துச் சொல்லி வருகிறார் என்று தோன்றாது. மிகவும் அரிய கற்பனைகளை மனத்திலே ஒழுங்கு பண்ணிச் சில நிமிஷ நேரங்களில் சொல்லிவிடுவார். நூல்களுக்கு இடையிடையே அமைந்த எதுகைக் கட்டுள்ள பாடல்களை இளைப்பாற்றுப் பாடல்கள் என்பார்.’
மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போது, நாமும் அவருடனே இருந்து எல்லாவற்றையும் கவனிப்பதான பிரமை தோற்றும்.
ஐயர் எழுதிய கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதே அழகாக இருக்கும். ஒருமுறை திருநெல்வேலிப் பக்கம் ஏடு தேடச் சென்றிருந்தார். இரவு நேரம். நிலவு காய்ந்துகொண்டிருந்தது. ஒருவர் ஒர் ஏட்டுச் சுவடியைக் கொண்டுவந்து ஐயரிடம் தந்தார். அந்த நிலவொளியில் அதைப் பிரித்துப் பார்த்தார். அது பத்துப்பாட்டு என்னும் சங்க நூல் தொகுதி எழுதியிருந்த சுவடி. அந்தப் பத்துப்பாடல்களில் முல்லைப்பாட்டு என்பது ஒன்று. நிலவில் சுவடியைப் பிரித்துப் பார்த்தபோது ‘முல்லைப் பாட்டு’க் கண்ணில் பட்டது. அதைப்பற்றி எழுதும்போது ‘நிலவில் மலர்ந்த முல்லை’ என்று தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினர். எவ்வளவு பொருத்தமான தலைப்பு!
பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் இரண்டு மகளிர் பல மலர்களைப் பறித்துப் பாறைமேல் குவித்தனர் என்ற செய்தி வருகிறது. அந்த மலர்களின் பெயர்களைக் குறிஞ்சிப்பாட்டுச் சொல்கிறது. மொத்தம் 99 மலர்கள் வருகின்றன. ஐயர் தம்மிடம் கிடைத்த ஒரு சுவடியைப் பார்த்தபோது அந்த மலர் வரிசையில் சில குறைந்திருப்பதைக் கண்டார், பிறகு தருமபுர ஆதீனத்தில் கிடைத்த ஒரு பிரதியில் அந்த மலர்களின் பெயர்கள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். அதைப்பற்றி எழுதிய கட்டுரைக்கு, ‘உதிர்ந்த மலர்கள்’ என்று பெயரிட்டார். இப்படிப் பல எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம்.
தெளிவான நடையில் எல்லோருக்கும் விளங்கும் சொற்களைப் பெய்து, உயிரோவியத்தைப்போலத் தாம் கூறுவதை எழுதும் ஆற்றல் ஐயருக்கு இருந்தது. சிறிய வகுப்பில் படிக்கும் பிள்ளை முதல் பெரும் புலவர் வரையில் அவருடைய கட்டுரைகளைப் படித்து மகிழலாம். அவரவர்கள் தகுதிக்கு ஏற்றபடி அவற்றின் சுவையை உணரலாம.
இவர் தம்முடைய சரித்திரத்தை ‘ஆனந்த விகட’னில் எழுதி வந்தார். துரதிர்ஷ்டவசமாக அதை முற்றும் எழுதி முடிப்பதற்குள் இவர் மறைந்தார். அது முற்றுப் பெராமல் இருந்தாலும் அது பெரிய செய்திக் களஞ்சியமாக விளங்குகிறது. பல வகையான புலவர்களை அதில் பார்க்கிறோம். நல்லவர்களும் பொல்லாதவர்களுமாகிய செல்வர்கள் வருகிறார்கள். சிறந்த உபகாரிகளைச் சந்திக்கிறோம். ஒருவகையில் ஒரு சிறிய உலகத்தையே சந்திப்பது போன்ற தோற்றத்தை அந்த நூல் உண்டாக்குகிறது. 122 அத்தியாயங்களைக் கொண்டது அது. ஹிந்துவில் அதைப்பற்றி மதிப்புரை எழுதிய ஒரு பேரறிஞர், 'அது ஒர் அற்புதமான காவியம்' என்று எழுதியிருக்கிறார். நூல் முழுவதும் எழுதுவதற்குள் இறைவன் இவரை அழைத்துக் கொண்டுவிட்டானே என்ற துயரம் அதைப் படிப்பவர்களுக்கு உண்டாகாமல் போகாது.
இந்தக் காலத்தவர் சிலர் கொள்கைப்படி சற்று அதிகமான வடசொற்களே இவர் ஆண்டிருக்கிறார். ஆனால் அவை இவருடைய தமிழோடு இணைந்து கலந்து இன்புறுத்துகின்றன.
தமிழுலகம் ஒர் அழகிய வாழ்க்கை வரலாற்றைப் பெறச் செய்த ஐயரவர்கள் புகழ் என்றும் மங்காமல் இருக்கும். சங்க நூல்களைக் கண்டுபிடித்துத் தமிழ்நாட்டுக்கு அளித்த பேருதவிக்கு அடுத்தபடி இவருடைய உரைநடை நூல்களாக உள்ளவை; உரை ஒவியங்களாக, செய்திக் களஞ்சியங்களாக விளங்குகின்றன.