←← 5.  அமைதியைத் தேடி

ரமண மகரிஷி  ஆசிரியர் என். வி. கலைமணி6.  பிச்சை எடுத்த அன்னதானப் பிரபு

7.  நரகத்திலே சொர்க்கம் தேடினார்! →→

 

 

 

 

 


439967ரமண மகரிஷி — 6.  பிச்சை எடுத்த அன்னதானப் பிரபுஎன். வி. கலைமணி

 

 

 

6. பிச்சை எடுத்தஅன்னதானப் பிரபு


நாகசாமி வைத்திருந்த ஐந்து ரூபாயில், வெங்கட்ராமன் மூன்றே மூன்று ரூபாயை மட்டும்தான் எடுத்துக் கொண்டான். அவன் நினைத்திருந்தால் ஐந்து ரூபாயையும் கூட எடுத்துக் கொண்டு போயிருக்கலாம் ஆனால் எடுக்கவில்லை.
“அண்ணா, நான் அருணாசலத்தைத் தேடி, எனது கருணாமூர்த்தி வாழும் இடமான திருக்கோவிலுக்குப் போகிறேன். என்னைத் தேடி அலையவேண்டாம்; பணம் காசுகளை வீணாகச் செலவு செய்ய வேண்டாம். என்னைப் பற்றி உங்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை.” இத்துடன் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்திருந்தான் என்ன குறிப்பு அது?
வேறொன்றுமில்லை. தனது தமையன் நாகசாமி கல்லூரியில் சம்பளம் கட்டுவதற்காக வைத்திருந்தபணத்தில் தானே வெங்கட்ராமன் மூன்று ரூபாயை எடுத்தான். அதனால் தனது அண்ணனுக்கு சம்பளம் கட்டப்படவில்லை என்ற உண்மையை உள்ளது உள்ளபடி எழுதி வைத்துவிட்டுச் சென்ற தனது தம்பியின் நடத்தையை, நாணயத்தைக் கண்டு அண்ணன் மிகவும் பாராட்டினார். ஆனால், அவர்தான் கடிதம் எழுதினார் என்பதற்கான கையெழுத்தை அவர் போடவில்லை. அதற்குக் காரணம், அவர் எங்கோ புறப்படப் போகிறோம் என்ற பரபரப்பாகும். 
தமையன் பணத்தில் மூன்று ரூபாய் மட்டுமே தனது வழிச்செலவுக்காக எடுத்துக் கொண்டார். அருணாசலம் போக இந்தப் பணம் போதுமா? எப்படிப் போகவேண்டும்? எந்த வழியில் போக வேண்டும். எங்கே இருக்கிறது அந்தத் திருத்தலம்? என்ற விவரமெல்லாம் வெங்கட்ராமனுக்குத் தெரியாது! ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டிலே விடப்பட்டவனைப் போல அவர் நேராக, விர்ரென்று மதுரை இரயில்வே நிலையத்திற்குள் வந்தார்.
நேராகப் பயணச் சீட்டு வழங்கும் இடத்திற்குச் சென்று, தனது மூன்று ரூபாயில் மூன்றணாவை மட்டும் கையில் வைத்துக் கொண்டு, இரண்டு ரூபாய் பதின்மூன்றணாவுக்கு எவ்வளவு தூரம் ரயிலில் போக முடியுமோ, அவ்வளவு தொலைவிலே உள்ள திண்டிவனம் நகருக்குப் பயணச் சீட்டு பெற்றார்.
திண்டிவனம் எங்கே உள்ளது? அங்கிருந்து அருணாசலம் உள்ள திருவண்ணாமலை நகர் எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படிப் போக வேண்டும்? எங்கே போய் இறங்க வேண்டும் என்ற விவரமெலாம் அந்தப் பதினைந்து வயது சிறுவனுக்குத் தெரியாது. தெரியாவிட்டாலும் பரவாயில்லை. தெரிந்தவர்கள் யாரையாவது கேட்டுப் பார்க்கலாமே என்ற உணர்வுகூட அவருக்கு உண்டாகவில்லை. மதுரை ரயில்வே நடை மேடைக்குப் புகைவண்டி வந்து நின்றது. வந்த வேகத்தோடு வெங்கட்ராமனும் வேகமாக ஏறி உட்கார்ந்து கொண்டான். அப்போது அந்தச் சிறுவனுக்கு அந்த அளவில்தான் விவரமும், உணர்ச்சியும் இருந்தது.
இரயில் பெட்டியிலே ஏறி உட்கார்ந்தாரோ இல்லையோ வெங்கட்ராமன், உடனே தியானத்தில் மூழ்கிவிட்டான். இரயில் புறப்பட்டது; வண்டி அசைவதையும், ஆடுவதையும், குலுங்குவதையும் கண்டு இது முதல் பயணமாக இருந்ததால் ஏதோ ஓர் அச்சம் ஏற்பட்டது அவனுக்கு. 
திருச்சி சந்திப்பில் வந்து நின்றது வெங்கட்ராமன் ஏறி வந்த ரயில். அப்போது முஸ்லிம் மதத்தைச் சார்ந்த ஒரு மதகுரு அங்கு வந்து அமர்ந்தார். அவருடன் வந்த சில இஸ்லாமியர்களுடனும், இந்து மத நண்பர்களுடனும், மகான்களது வரலாற்றைப் பற்றி அந்த மதகுரு எனப்படும் மௌல்வி ஆழமாகப் பேசிவந்தார்.
முஸ்லிம் மௌல்வி பேசுவதை அந்தப் பெட்டியிலே உள்ள சிலர் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மதகுருவும் மிக சுவராஸ்யமாய் பேசிக் கொண்டே வந்தார். எல்லாரும் அவர் உரையாடலை ஆமோதிப்பதைப் போலத் தலையாட்டியபடியே இருந்தார்கள். ஆனால், அதே பெட்டியில், எதிர் வரிசைப் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவன் மட்டும் மௌல்விப் பேச்சைக் கேட்டும் கேளாததுமான நிலையிலிருப்பதை அவர் கண்டார்.
“தம்பி! எங்கேயப்பா போகிறாய்? என்றார் மௌல்வி!
நானா! திருவண்ணாமலை நகருக்குப் போகிறேன் என்றான் சிறுவன்.
திருவண்னாமலையா! நானும் அந்த ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ரயில் நிலையத்தில் தானே இறங்கப் போகிறேன். என்றார் முஸ்லிம் மதகுரு!
“என்ன ஊரிலய்யா நீங்கள் இறங்கப் போகிறீர்கள்?” என்றதற்கு, திருக்கோயிலூரில் என்றார் முஸ்லீம்!
‘திருக்கோயிலூரா!’ அப்படியானால் இந்த ரயில் திருவண்ணாமலை நகருக்குப் போகிறதாய்யா? என்று மௌல்வியைக் கேட்டார் அவர்! திருவண்ணாமலைக்கு ரயில் போகாது, எந்த ஊருக்கு நீ பெற்றாய் பயணச்சீட்டு?’ என்றார் மத 
வெங்கட்ராமன் உடனே ‘திண்டிவனம் வரை டிக்கெட் வாங்கி உள்ளதாகச் சொன்னான் அந்த மதகுருவிடம்!
‘என்ன திண்டிவனமா? என்னய்யா தம்பி, பட்டுக்கோட்டைக்கு வழிகேட்பவனிடம் கொட்டைப் பாக்கு பலம் பத்து ரூபாய் என்கிறாய்? திருவண்ணாமலை போகிறவன் திண்டிவனம் டிக்கெட் வாங்கினேன்' என்கிறாயே!’
‘சரி, சரி பரவாயில்லை. ஒரு காரியத்தை நீ கவனமாகச் செய்ய வேண்டும். விழுப்புரம் சந்திப்பிலே நீ இறங்கி வேறு வண்டிக்கு மாறி ஏறித் திருக்கோயிலூருக்கும், திருவண்ணாமலைக்கும் போகலாம்! என்ன தம்பி நான் சொல்வதைக் கவனமாகத்தானே கேட்டாய்?’ என்றார் மீண்டும் அதே முஸ்லீம் மத குரு.
‘ஆமய்யா’ என்ற அந்தச் சிறுவன், தனது டிக்கட்டை திண்டிவனத்துக்குப் பெற்று விட்டதை எண்ணி வருந்தினான். ஆனால், மௌல்வி கூறிய விவரத்தால் திருவண்ணாமலை போகும் வழியைப் புரிந்து கொண்டான்! இது கண் பழுதுற்ற ஒரு பயணிக்கு குத்துக்கோல் ஒன்று கிடைத்த மாதிரியாயிற்று அவனுக்கு! திருவண்ணாமலை என்ற பெயர் மௌல்வி வாயிலும், மற்றப் பயணிகள் வாயிலும் பெருமையாகப் பேசப்பட்டதை அவன் கேட்டு மனத் திருப்தியடைந்தான். இந்த வரம்பு மீறிய மகிழ்ச்சியைப் பெற்ற வெங்கட்ராமன் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து போனான்!
வந்தது விழுப்புரம் ரயில் நிலையம்! மதுரையிலே அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து விழுப்புரம் வரும்வரை ஒரே பட்டினி! பாவம், பசி அவன் வயிற்றிலே நெருப்பை மூட்டியது! ஒரே எரிச்சல்! அதனால் ரயில் நிலையத்தை விட்டு வெளிப் புறம் வந்த அவன் அங்குமிங்கும் சுற்றினான்! 
வெங்கட்ராமன் அச்சமும், கூச்சமும் உடையவன்! அவன் வீட்டார் பிறருக்குக் கொடுத்து வழங்கியவர்களே தவிர எவரிடமும் பசி என்று புசிக்க அன்னம் கேட்டவர்கள் அல்லர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன்தானே இவனும்! யாரிடமும் எதையும் கேட்டு அவனுக்குப் பழக்கமுமில்லை அதனால், திருவண்ணாமலைக்குப் போக வழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான், அவன்.
களைத்தது உடல்; எரிகிறது வயிறு. சோர்ந்தன கால்கள்; நடக்க முடியாமல், உட்கார்ந்து விட்டான் வெங்கட்ராமன்! சுற்றும் முற்றும் பார்த்த போது, எதிரே ஒரு உணவு விடுதி தெரிந்தது! உள்ளே சென்றான்; உணவு வேண்டும். பசிக்கிறது என்று கேட்டான் அவன்!
சிறு பையன் முகமெலாம் வியர்த்து விட்டதைக் கண்ட உணவு விடுதிக்காரர், தம்பி சோறு வேண்டுமானால் கொஞ்சம் நேரம் உட்காரு, இப்போதுதான் சோறு வேகின்றது. அதுவரை கொஞ்சம் நேரம் களைப்பாறு, அதற்குள் உணவு தயாராகி விடும் என்றார்.
உட்கார்ந்து விட்டான் வெங்கட்ராமன்; என்ன செய்வான் பாவம், பசியோ பசி! ஆனாலும் அவன் அப்போதும் பசியை மறந்து ஆழ்ந்து விட்டான் தியானத்தில்! ஆனால், ஓட்டல்காரர் பையனிருக்கிறானா? என்பதை அடிக்கடி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
தியானத்தில் இருப்பவனைப் போலக் கால்களை மடக்கி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை மூடிக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஓட்டல்காரர், ஓஹோ பசி தியானமோ என்று பையனைப் பரிகாசம் செய்து கொண்டே அவனைத் தட்டி எழுப்பி உணவுண்ண அழைத்தார்.
ஓட்டல்காரர் போட்ட சாட்பாட்டை வெங்கட்ராமன் உண்டான். தனது லீட்டுச் சாப்பாடு போல இருந்ததாலும், சில வேளைகள் கிடந்த பட்டினியாலும், சிறுவன் ஓட்டல்காரரைக் கேட்டுச் சற்று அதிகமாகவே உண்டு பசியாறினான். பிறகு. தனது கையிலிருந்த சில்லறைப் பணத்தை ஓட்டல் காரரிடம் அவன் கொடுத்தபோது,
ஓட்டல் காரர் பையனைப் பார்த்து ‘எவ்வளவு காசு வைத்திருக்கிறாய் தம்பி?’ என்று கேட்டார். ‘ஐயா, இரண்டரை யணாதான் இருக்கிறது என்றான் பையன்.
உடனே ஓட்டல்காரர் பையன் மீதுள்ள அன்பால், ‘தம்பி, உன் காசு எனக்கு வேண்டாம். நீயே வைத்துக் கொள்’ என்று கனிவுடன் கூறியதைக் கண்ட சிறுவன், ஓட்டல் காரர் உள்ளத்தின் அழகை அவரது முகக் கண்ணாடியால் கண்டு ஒரு வித மன நெகிழ்வடைந்தான். பிறகு அவருக்கு வணக்கம் கூறிய வெங்கட்ராமன் விர்ரென்று ரயில்வே நிலையத்திற்குள் வந்து சேர்ந்தான்.
ஓட்டல்காரர் வேண்டாம் என்று கூறிய அந்த இரண்டரை அணாவுக்கு மாம்பழப்பட்டு எனும் ரயில் நிலையம் வரை பயண அட்டையைப் பெற்றான். அந்த ரயிலடி வந்ததும் இறங்கி மிக வேகமாக திருவண்ணாமலை ஊரை நோக்கி நடந்து கொண்டே இருந்தான்.
அந்த வேகத்தோடும், ஓட்டலில் உண்ட சோற்றின் தெம்போடும் சுமார் பத்துமைல் தூரம் வரை அங்கிருந்து நடந்து அரகண்ட நல்லூர் என்ற ஊரையடைந்தான் வெங்கட்ராமன். அப்போது ஆளே அசந்து போய் ஒரு கோயில் ஓரம் உட்கார்ந்து விட்டான். அவனையுமறியாத களைப்போடு!
அந்தக் கிராமத்தில் உள்ள அந்தக் கோவில் ஒரு சிறு மலைக் குன்று மீது கட்டப்பட்டுள்ளதாகும். அக்கோயிலின் சுவாமி பெயர் ஒப்பிலிநாதர் எனப்படும். அந்தக் கோயிலுள்ள குன்றின்மீது ஏறிப் பார்த்தால் திருவண்ணாமலையிலுள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோயில் தெரியும். அந்தக் கோயிலின் ஒரு மூலையில், மண்டப ஓரமாக வெங்கட்ராமன் ஓய்ந்து உட்கார்ந்து விட்டான். சிறுவனல்லவா? பாவம்!
அந்த மண்டப மூலையில் உட்கார்ந்தான் என்று கூறினோம் அல்லவா? அவன் அங்கே அமர்ந்த பின்பு தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அந்தத் தியானத்தில் அவனுக்கு அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் திவ்விய ஜோதி தரிசனம் தெரிந்தது போன்ற ஓர் உணர்வைப் பெற்றான்.
வெங்கட்ராமன் கனவிலே தெரிந்த திவ்விய ஜோதி எப்படி வந்தது என்பது எல்லாம் ஆண்டவன் செயலே; அவனையன்றி ஒரு பொருளும் அசையாது என்பது ஆன்றோர் சொல்லாயிற்றே என்று நம்பினான். ஆனால், எந்த ஒரு தெளிவான விடையும், விளக்கமும் விளங்காமல் அந்தக் கனவிலேயே மிதந்தபடியே மீண்டும் சமாதியில் மூழ்கினான்! மின்சாரக் கனவு ஓடியபடியே இருந்தது!
கொஞ்ச நேரம் கழிந்தது; கோயில் குருக்கள் உள்ளே இருந்து வந்தார். ‘யாரப்பா நீ, என்ன இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? எழுந்திரு. எழுந்திரு கோயில் கதவை மூடவேண்டும்! வெளியே போ!’ என்று அவர் வேலை செய்த சோர்வால் களைத்து வெறுப்போடு பையனிடம் பேசினார்!
ஐயர் போட்ட ஓசையால், அரண்டு எழுந்துவிட்ட சிறுவன் தியானம் கலைந்தான். குருக்களை நோக்கி ‘பிரசாதம் கொஞ்சம் கொடுங்கள்’ என்று கேட்டான். கெஞ்சினான்! பசி, பாவம்!
‘பிரசாதமா! ஒன்றுமில்லையே தம்பி! என்று குருக்கள் கையை விரித்து விட்டு, போ தம்பி நேரமாகிறது’ என்றார்!
பாவம் பசியால் வருந்திக் கொண்டிருந்த வெங்கட்ராமன், குருக்கள் முகத்தைப் பார்த்து நான் இன்றிரவு இங்கே தங்க அனுமதிப்பீர்களா? என்று பணிவுடன் கேட்டான். 
‘கோயில் கதவை மூட வேண்டும் வெளியே போ என்று கூறினால், கேட்பதையே திரும்பவும் கேட்கிறாயே, போ’ என்று கோபமாகத் தடித்த குரலிலே குருக்கள் சொன்னார்.
வருத்தத்துடன் வெளியே வந்த சிறுவனைப் பார்த்த அங்கு வேலை செய்யும் மற்றொருவன், தம்பி இங்கே இருந்து கீழூர் என்ற ஊர் ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. அங்கே போ பிரசாதம் கிடைக்கும் என்று கனிவுடன் சொல்லி வழியையும் காட்டி அனுப்பி வைத்தான்.
உடனே அந்தச் சிறுவன் பசி வேகத்தோடு வேகமாக விரைந்து நடந்து அந்த மனிதன் கூறிய கீழூர் கோயிலுக்கு வந்தான். அந்தக் கோயில் அர்ச்சகர் அங்கே நின்று கொண்டிருந்தார் ஆலயச் சிலையருகே, அவரைக் கண்டு நமஸ்காரம் என்றான். பசிக்கிறது ஏதாவது பிரசாதம் கொடுப்பீர்களா? என்று அவன் கேட்டான்! அந்த அர்ச்சகர் அவன் என்ன கேட்கிறான் என்பதைச் சரியாகக் கேட்டுக் கொள்ளாமலே, வழக்கம்போல எல்லாருக்கும் சொல்லுவதைப் போலவே ‘இல்லை, இல்லை’ என்று கையால் சைகை காட்டிவிட்டு உள்ளே போய்விட்டார்.
என்ன செய்வது? பசியோ வாட்டுகிறது! ஒரு கணம் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தபோது, வேறு ஒரு அர்ச்சகர் பெரிய அர்ச்சகரைப் பார்த்து எனக்குரிய பங்குப் பிரசாதத்தை அந்தப் பையனுக்குக் கொடும் என்றார். சற்று கோபமாக! உடனே பெரிய அர்ச்சகர் ‘இங்கே என்னிடம் இல்லை தம்பி, அதோ அந்தப் பிராமணர் வீட்டுக்குப் போ கிடைக்கும். என்றார்.
வெங்கட்ராமன் தள்ளாடித் தள்ளாடி அர்ச்சகர் சொன்ன வீட்டு வாசற்படியருகே போய் நின்றான். பசி மயக்கம்! அவனுக்கு. வாய் திறந்தும் கேட்க முடியாத களைப்பு. அப்படியே அங்கேயே, மயக்கத்தோடு கீழே விழுந்தான் சிறுவன். பாவம்! 
அன்ன சத்திரம் கட்டி வாழ்ந்தவர்; போனவர்க்கெலாம் சோறு போட்டுப் புண்ணியம் தேடிக் கொண்ட அவனது தந்தை சுந்தரம் அய்யர் மகனுக்கு இங்கே பசிக்குப் புசி என்று ஒரு பிடி பிரசாதம் கொடுக்க யாருக்கும் இரக்க உணர்வு இல்லாமல் போய் விட்டது பார்த்தீர்களா? அந்த அன்னதாதாவின் மகன் கீழே விழுந்து விட்டதைக் கண்ட அங்கிருந்த சிலர்; அவனைத் தூக்கி மயக்கத்தைத் தெளிவித்து, அங்கும் பிரசாதம் தீர்ந்து விட்டதால், பாத்திரத்திலே இருந்த கடைசிப் பிடி சுண்டலை அவனுக்குக் கொடுத்தார்கள்.
அந்த ஒரு பிடி சுண்டலை அவன் மென்று தின்ற விட்டு, வயிறு முட்ட, தண்ணீரைக் குடித்தான்! வேறு என்ன செய்வான் பாவம்! அன்று இரவே வெங்கட்ராமன் அங்கே இருந்த திண்ணை ஒன்றிலே படுத்துக் கழித்தான்!
வயிற்றுக்குரிய ஆகாரம் இல்லாததால் தூக்கம் வரவில்லை அவனுக்கு! எழுந்தான் சிறுவன்! ஊரைப் பார்த்தான்! திருவண்ணாமலை இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கும் என்று அவ்வழியே போன ஒருவரைக் கேட்டான்.
இருபதுமைல் இருக்கும் என்ற அந்த வழிப்போக்கர் கூறியதைக் கேட்ட வெங்கட்ராமனுக்கு மீண்டும் கவலை அவன் மனதைப் புண்ணாக்கி விட்டது. எப்படி நடந்து போவது? உடல் முழுவதும் வலி எடுக்கிறதே. முட்டிக் கால்கள் நோகின்றனவே என்ற மன வருத்தத்துடன் யோசித்தான். ரயிலில் போனால் தான் போக முடியும். இனி ஓரடி கூட நடக்க முடியாதே நம்மால், என்றெல்லாம் எண்ணிய போது, அவன் காதிலே போட்டிருந்த கடுக்கன்களைப் பார்த்தான்!
கழற்றினான் வெங்கட்ராமன் கடுக்கன்களை! அவற்றை எடுத்துக் கொண்டு அருகே இருந்த ஒரு பிராமணர் வீட்டு வாயிற் படியிலே நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வீட்டுக்காரர் வெளியே 
வந்தார். அவரிடம், ‘ஐயா, பசிக்கிறது. சாப்பிட ஏதாவது ஆகாரம் கொடுப்பீர்களா?’ என்று அவன் கேட்டான்.
அதற்கு அவர், ‘உள்ளே போய் கேள் தம்பி, இன்று கண்ணபரமாத்மா பிறந்தநாள், ஏதாவது ஓர் ஆகாரம் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பார்கள் தம்பி, என்று கூறிவிட்டுப் போனார்.
வெங்கட்ராமன் கடுக்கன்களைக் கைக்குள் மூடிக் கொண்டு வீட்டுக் குள்ளே சென்று நின்றான். அந்த வீட்டுக்கார அம்மாள் யார் இந்தப் பையன்? பார்த்தால் பிராமணச் சிறுவனைப் போல இருக்கின்றானே என்று அவனைத் தோற்றத்தால் புரிந்து கொண்டு, ‘என்ன தம்பி வேணும்’ என்றார்.
‘அம்மா, பசி, ஏதாவது ஆகாரம் தருவீர்களா? என்று கேட்டான் வெங்கட்ராமன், அன்று கண்ணபெருமான் பிறந்த நாளல்லவா? அவளுக்கு ஒரே மகிழ்ச்சி! காரணம், கண்ண பரமாத்மாதான் இப்படி பிராமணச் சிறுவன் உருவத்திலே வந்து அன்னம் கேட்கிறார்’ என்று எண்ணிக் கொண்டு, சிறுவனை உட்காரச் சொல்லி, உணவில்லாததால் வயிறு நிரம்பச் சிற்றுண்டி கொடுத்தாள். வெங்கட்ராமன் அந்த அம்மையார் கொடுத்த அன்பான அமுதை வயிறார உண்டான்.
வெங்கட்ராமன் கிடைத்த சிற்றுண்டியைப் பசி வேகத்தால் உண்டு கொண்டிருந்தபோது, அந்த வீட்டுக்குரியவரான முத்துசாமி என்பவர், சிறுவனைப் பார்த்து இரக்கப்பட்டு, ‘மெதுவாகச் சாப்பிடு. ஏன் அவசரம் அவசரமாகத் தின்கின்றாய்’ என்று அம்மையாரை விட அன்போடு ஆறுதல் கூறினார்.
அப்போது வெங்கட்ராமன் உண்டு முடித்து எழுந்து கை அலம்பிக் கொண்டு அவரருகே வந்து நின்று, 'நான் திருவண்ணாமலை போக வேண்டும். என்னிடம் பணமில்லை ரயிலுக்கு டிக்கட் வாங்கிட. அதனால், இந்த எனது கடுக்கன்களை விற்றுப் பணம் கொடுத்தால் உங்களுக்குப் புண்ணியம்! என்று பணிவாகக் கேட்டுக் கொண்டதைக் கண்டு இரக்கப்பட்டார் அவர்.
உடனே. சிறுவனிடமிருந்து கடுக்கன்களை வாங்கியவர் விற்றுப் பணம் வாங்கி வரும் வரை ‘இங்கேயே இரு தம்பி. அதற்குள் உணவும் தயாராகிவிடும். சாப்பிட்டு விட்டுப் போகலாம்’ என்று சொல்லி விட்டுக் கடுக்கன்களோடு போனார் அவர்.
முத்துசாமி திரும்பி வருவதற்குள், அந்த அம்மையார் உணவைத் தயார் செய்து விட்டார். வெங்கட்ராமனைத் தன்னருகே உட்கார வைத்துக் கொண்டு அவன் வயிறார உணவை உண்ண வைத்து, வடை பாயாசத்துடன் அவர் உபசரித்தார். வெங்கட்ராமன் அன்றுதான் தனது வீட்டில் உணவு உண்டதைப் போல முழு மன நிறைவுடன் உண்டு அன்னக் களைப்பை அகற்றினார்!. கடுக்கன்களை விற்றுக் கொண்டு வந்த பணத்தை முத்துச்சாமி வெங்கட்ராமனிடம் கொடுத்து, ‘ஜாக்கிரதை தம்பி பணம்’ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவர் மனைவி கட்டுச் சோறு பொட்டலத்தோடு சிறுவனிடம் வந்து, தம்பி இந்தப் பொட்டலத்தில் உணவு உள்ளது. மறுபடியும் பசியெடுக்கும் போது சாப்பிடப்பா’ என்று அந்த உணவுப் பொட்டலத்தை வெங்கட்ராமனிடம் அன்போடு கொடுத்தார்.
இரண்டையும் கடவுள் கொடுத்தார் என்று வெங்கட்ராமன் பக்தியோடு அவற்றைப் பெற்றுக் கொண்டு, பசிக்குச் சோறு போட்ட அந்த இரண்டு உயிர்களது கொடைக் குணத்துக்கு நன்றி கூறி, விடை பெற்றுக் கொண்டு ரயில் நிலையம் தேடி வந்து சேர்ந்தான்! அப்போது ரயிலும் வந்ததால், திருவண்ணாமலைக்கு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ரயிலேறி அமர்ந்தான் வெங்கட்ராமன்! 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel