←← 8.  பாலயோகி

ரமண மகரிஷி  ஆசிரியர் என். வி. கலைமணி9.  இரமணரின் தொண்டர்கள்

10.  நடப்பது நடக்கும் →→

 

 

 

 

 


439970ரமண மகரிஷி — 9.  இரமணரின் தொண்டர்கள்என். வி. கலைமணி

 
9. இரமணரின் தொண்டர்கள்


இரமண மகரிஷி குன்றக்குடி மடமான குருமூர்த்தத்திற்கு வருகை தந்த இரண்டே மாதங்களில் அண்ணாமலை தம்பிரான் தனது மடத்து வேலையாக வெளியூர் செல்ல நேர்ந்தது. ஒரு வாரத்தில் அவர் மீண்டும் திருவண்ணாமலைக்குத் திரும்பி விடுவதாக இரமணரிடம் வாக்களித்து விட்டுச் சென்றார்.
இரமணரை தான் எப்படிக் கவனித்துக் கொண்டாரோ தம்பிரான், அதுபோலப் பாதுகாத்துப் பணிவிடையாற்றும் பொறுப்பை, அவர் நாயனார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டுப் போனார்.
தம்பிரான் ஒப்படைத்த பொறுப்பைப் போற்றி வந்த நாயனாருக்கு அவரது மடத்திலே இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் போக வேண்டிய கட்டாயம் உருவானது. காரணம், நாயனாரும் ஒரு மடத்திற்குப் பொறுப்பாளராக இருந்ததுதான். அதனால் இப்போது, யார் ரமணருக்குத் தொண்டாற்றுவது?
திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம் தெருவில் ஒரு விநாயகர் கோவில்! அக் கோவிலின் பூசாரியாக இருந்தவர் பழனிச் சாமி என்ற சாமியார். அங்கே பூசைப் பணிகளைப் புரிந்து கொண்டு அவர் தனது வாணாளை நகர்த்தி வந்தார். ஒரே ஒரு வேளை உப்பில்லாத உணவை உண்பார்! அவ்வளவுதான்.
இவ்வாறாக இருந்த பழனிச்சாமி பூசாரியைக் கண்ட ஒரு விநாயக பக்தர், "கல்லுப் பிள்ளையார் மீது இவ்வளவு கவனம் செலுத்தும் நீர், உயிரோடு உள்ள ஒரு பிராமண சாமியாரைக் கவனிக்கவில்லையே!" என்று கூறினார் அவர் பெயர் சீனிவாச அய்யங்கார். 
இளம் துறவி ரமணரைப் பற்றி தெரிவித்த அய்யங்காருடைய எண்ணத்தை ஏற்று, பூசாரி குருமூர்த்தம் சென்றார்! ரமணரைப் பார்த்தார்; பணிந்தார்; பணிவிடை செய்யும் பொறுப்பை ஏற்றார்! இரண்டையும் செய்து கொண்டு வந்த அந்தப் பூசாரி பழனிசாமி, பிறகு விநாயகர் சேவையைத் துறந்து முழுக்க முழுக்க ரமணருக்கே தொண்டரானார்!
ரமணரைக் காண பக்த கோடிகள் கூட்டம் அதிகமாகி வந்ததால், அவரை விட்டுப் பிரிந்து வேறு எங்கும் போக முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. பூசாரிக்கும் ரமணருக்கும் பழநிசாமியைப் போன்ற ஒரு நம்பிக்கையான சாமியாரின் பணியும் தேவையானது. அதனாலே ரமணர் தான் சாகும் வரை பழனிசாமியைத் தன்னருகேயே வைத்துக் கொண்டார். அந்தப் பூசாரியும் ரமணர் சாகும்வரை அவர் உடனேயே இருந்து நம்பிக்கையாளரானார் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.
முதன் முதலாக மயங்கிக் கீழே விழுந்த ரமணரைத் தாங்கிப் பிடித்தவருள் ஒருவர் இந்தப் பழனிசாமி பூசாரிதான் அன்று முதல் அவரை எச்சரிக்கையுடன் கவனித்து வந்தவரும் இதே பழனிசாமிதான். ஒரு வேளை பழனிசாமிப் பூசாரி வெளியே செல்லும் அவசியம் நேரிட்டால், அப்போது ரமணரை ஓர் அறைக்குள்ளே போட்டுப் பூட்டிவிட்டுப் போவார்.
இரமணர் அடிக்கடி மயக்கமடைவார் என்பதற்கு ஒரு சுவையான எடுத்துக் காட்டை இங்கே தருகிறோம்:
குன்றக்குடி மடம் எனப்படும் குருமூர்த்தத்திற்கு முன்பு இரண்டு புளியமரங்கள், நன்றாகக் காய்த்து, பழுத்துக் கொத்துக் கொத்தாய் புளியம்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இதைத் திருடர்கள் பார்த்தார்கள். இன்று புளியம் பழத்தை அடித்து மரத்தை விட்டு இறக்கிக் கொண்டுபோய்விட வேண்டும் என்று அந்த இரண்டு திருடர்களும் கூட்டணியோடு இறங்கினார்கள்.
ஆனால், குரு மூர்த்தம் திண்ணையில் ரமணர் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்ததைக் கண்ட திருடரணி, இந்தச் சாமியார் நமக்கு எமனாக இருப்பானே, விழித்துக் கொண்டிருக்கும் இவனை மீறி எப்படி புளியம்பழத்தை அடித்துக் கொண்டு போவது என்று அஞ்சினார்கள்.
இந்த அணியில் ஒரு அதி புத்திசாலி திருடன், ஒரு குறுக்கு யோசனை செய்தான். ஆடாமல் அசையாமலிருக்கும் இந்த குட்டிசாமியார் விழித்திருக்கிறானா? தூங்குகிறானா? என்பதைச் சோதித்து விடலாம் என்று எண்ணினான். மெதுவாக குட்டித் துறவியிடம் வந்து பச்சிலைச் சாற்றைப் பிழிவோம். விழித்திருந்தால் லபோதியோ என்று கத்துவான். அப்போது நாம் ஓடிப்போவோம் என்ற தனது யோசனையை மற்றவனிடம் கூறினான்!
ஒரு திருடன் வெங்கட்ராமன் உட்கார்ந்திருக்கும் இடமருகே வத்து அவரது முகத்தைப் பார்த்து, பச்சிலைச் சாற்றைப் பால சந்நியாசி கண்களிலே பிழிந்தான். அந்த அணியினர் எதிர்பார்த்தபடி பிராமண சந்நியாசி சத்தம் ஏதும் போடவில்லை. திருடர்களுக்கு ஒரே கொண்டாட்டம் எகிறிக் குதித்துக் கொண்டு ஓடி தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்.
திருடர்கள் தங்களது காரியத்தைச் சுலபமாக முடித்துக் கொண்டதற்கு என்ன காரணம் தெரியுமா? அப்போது சின்னசாமி மயக்கம் வந்து ஆடாமல் அசையாமல் திண்ணைச் சுவற்றிலே சாய்ந்து கிடந்தார். பாவம்!
இரமணர் பெருமை, தெய்வத் தொண்டு அருளாண்மையோடு அவர் வழங்கும் ஆசியால் அவர் மகிமை சிறுகச் சிறுக ஊர் தாண்டி நகர் தாண்டி, வட்டம் தாண்டி, மாவட்டம் தாண்டி, மாநிலம் முழுவதும் பரவிக் கொண்டே இருந்தது.
அப்போது யார் இந்தப் பாலயோகி? இவ்வளவு சக்தியை மக்களிடம் பெற்று வருகிறானே! எந்த ஊர்க்காரன்? அவன் வரலாறு என்ன? என்பதை யாரும் அறிய முடியாமலிருந்தனர்! ரமணரும் தான் யார் என்பதை எவரிடமும் கூறாமலே இருந்து விட்டார்! அதெல்லாம் தேவையில்லை என்பது அவருடைய எண்ணம்.
வெங்கட்ராமய்யர் என்ற ஒரு தாசில்தார் அப்போது குருமூர்த்தம் வந்து பால சந்நியாசியைச் சந்தித்து தரிசனம் செய்து கொண்டார். பலதடவை முயன்று தோற்றுப்போன இந்த வட்டாட்சியர், இந்த தடவை யார் இந்த இளம் துறவி என்பதைத் தெரிந்து கொள்ளாமல் போகமாட்டேன் என்று அங்கே பிடிவாதமாக அமர்ந்து விட்டார்.
வெங்கட்ராமய்யர் தனது விருப்பத்தை வெங்கட்ராமன் எனப்படும் பிராமண சாமியிடமும் சொல்லிவிட்டு பிடிவாதமாக உட்கார்ந்து விட்டார். அப்போதுதான் அந்த வெங்கட்ராமன் சாமியார், ஒரு தாளில் ‘எனது ஊர் திருச்சுழி’ என்று எழுதிக் காட்டினார்.
இப்போது ரமணரிஷி என்ற பெயரை பெற்று விட்ட பாலயோகி, குரு மூர்த்தத்திற்கு வந்து ஏறக்குறைய இருபத்திரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் மக்கள் திரள ஆரம்பித்து விட்டார்கள். திருவண்ணாமலை ஓர் அருளாளர் தரிசனம் பெறுமிடம் என்ற பெயரைப் பெற்றுவிட்டது. ஆனால், அதிகரித்துக் கொண்டே போகும் பக்தர்கள் நெரிசலை எப்படிச் சமாளிப்பது என்பது சாமியார்கள் இடையே ஒரு பிரச்சினையாகி விட்டது.
குரு மூர்த்தத்திற்கு அருகே ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. அதற்குச் சொந்தக்காரராக இருந்தவர் பெயர் வெங்கட்ராம நாயக்கர். அவர் ஒரு நாள் ரமணரை சந்தித்து இங்கேயும் உங்களுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது. எனது மாந்தோப்புக்கே வந்து விடுங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டார். நாயக்கரது வேண்டுகோளை ரமணர் ஏற்றுச் சென்றார். 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel