←← 11.  இரமண மகரிஷி என்ற பெயரைச் சூட்டியது யார்?

ரமண மகரிஷி  ஆசிரியர் என். வி. கலைமணி12.  அன்னையுடன் ரமணர்

13.  இரமண மகரிஷியின் போதனைகள்! →→

 

 

 

 

 


439973ரமண மகரிஷி — 12.  அன்னையுடன் ரமணர்என். வி. கலைமணி

 

 


12. அன்னையுடன் ரமணர்


ஊருக்கே மகன் மன்னனானாலும் மாதாவுக்கு அவன் மகன்தானே! எனவே, மகன் ரமணர் ஊராருக்கு மகானாக இருக்கலாம்; ஆனால், எனக்கு அவன் பிள்ளைதானே! அந்த பிள்ளை நல்ல உணவு இல்லாமல், நல்ல உடை உடுக்காமல், (கோவணாண்டியாய் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கிறானே! தினந்தோறும் அவன் திருமுகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற கவலைதான் ரமணர் தாய்க்கு.
தாய் அழகம்மாள் அதனால்தான் கடந்த முறை மூத்த மகன் நாகசாமியோடு திருவண்ணாமலைக்கு வந்தார். இந்த முறை அந்தப் பாக்கியம் கூட அந்த அன்னைக்குக் கிட்டவில்லை. ஏன் தெரியுமா?
சென்றமுறை தனக்குத் துணையாக வந்த அந்த அம்மையின் மூத்த மகன், அதாவது ரமண ரிஷியின் அண்ணன், இந்த முறை தாயுடன் வரவில்லை காரணம் நாகசாமி இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார், அதனால் அழகம்மை தனியாகவே தனது மகனான ரமணரிஷியைக் காண வந்தார்! மூத்த மகனை இழந்த சோகத்தோடு இளைய மகனைக் காண வந்தார் அந்தத் தாய்!
வெங்கட்ராமன் வீட்டை விட்டு வந்து விட்டபோது, தேடாத இடமெலாம் தேடி இறுதியாக திருவண்ணாமலையின் அருணாசலத்திலே சாமியாராக இருப்பதைக் கேள்விப்பட்டதும் திருவண்ணாமலைக்கு ஓடோடி வந்தாரே நெல்லையப்பர் என்பவர் அதாவது அழகம்மையாரின் கொழுந்தனார்; அவரும் காலமாகி விட்டார். இத்தகைய இழப்புகளால் வேதனையுடன் தீர்த்த யாத்திரை செல்லும் வழியில் திருவேங்கடத்தான் சந்நிதியான திருப்பதி ஏழுமலையானின் திருக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு, அப்படியே திருவண்ணாமலைக்கு வந்து மகனான மகான் ரமண மகரிஷியைப் பார்த்து விட்டுப் போகலாமே என்ற எண்ணத்தில் அழகம்மையார் அருணாசலம் விரூபாட்சி குகைக்கு வந்தாள்.
மகனைப் பார்த்தாள்! மகானைப் பார்க்க மக்கள் வரிசை வரிசையாக நிற்பதையும் தாயார் அழகம்மை பார்த்து மனம் பூரித்துப் போனார்! நமது பிள்ளையைக் காணவா இவ்வளவு பெரிய கூட்டம்! அடேயப்பா! என்று அவரை ஈன்ற போது பெற்ற இன்பத்தைவிடபெரும் மகிழ்ச்சியை அங்கே அனுபவித்தாள் அந்த தாய்!
தீர்த்த யாத்திரையின் போது பல ஊர் தண்ணீர் அழகம்மை உடம்புக்கு ஒத்து வாராமையாலோ என்னவோ அந்த அம்மையார் திடீரென நோய் வாய்ப்பட்டாள்! பெற்ற தாய்க்கு அருமை மகன் ரமண மகரிஷி உடனிருந்து எல்லாப் பணிவிடைகளும் செய்தார். காய்ச்சல் கடுமையானது; அதன் அடையாளமாக ஜன்னியும் கண்டது. அப்போது ரமணமகரிஷி அருணாசலேசுவரர் மீது அம்மையே அப்பா, அன்னையின் நோயை குணப்படுத்து ஈஸ்வரா என்று பாடல் பாடித் துதித்து, தியானத்தில் ஆழ்ந்து போனார்! நீண்ட நேரமாக மகான் கண்களைத் திறக்காமல். கண் மூடியபடியே தேவாரம் ஓதினார்! பிறகு, கண் விழித்த மகரிஷி, காய்ச்சல் வேகம் தணிந்ததைக் கண்டு விபூதியை அன்னையின் நெற்றியிலே பூசினார்! நோயும் குணமானது!
உடல் சுகமானதும், தாய் வீட்டுக்குப் போக எல்லா ஏற்பாடுகளையும் செய்து வழியனுப்பி வைத்தார். வீடு போய் சேர்ந்த அன்னை மகனுக்குத் தகவல் அனுப்பினார். அதன் பின்னாலே, ரமணருடைய தம்பி நாகசுந்தரத்தின் மனைவி குழந்தையைப் பெற்ற பின்பு மரணமடைந்து விட்ட செய்தியும் வந்தது. 
இந்த துக்கத்தைத் தாங்க முடியாத அழகம்மை, ஓராண்டு சென்றபின், அதாவது 1916ஆம் ஆண்டு அமைதியைத் தேடி மீண்டும் அருணாசலம் வந்து மகரிஷியிடமே தங்கிவிட்டார். இளம் வயது மனைவியை இழந்த நாகசுந்தரத்தால், குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்த நேரத்தில் மீண்டும் அழகம்மையார் நோயாளியானார்! தான் உயிர் பிழைப்பது அரிது என்று எண்ணிய அந்தத் தாய், நாகசுந்தரத்துக்கு எழுதிய கடிதத்தில் “எனது இரண்டு மகன்களையும் ஒரே இடத்தில் பார்த்து விட்டுச் சாக ஆசை” என்று எழுதியிருந்தார். அக்கடிதத்தைப் படித்த நாகசுந்தரம் அருணாசலத்துக்கு வந்து தனது தாயாரையும்,  மகான் ரமண ரிஷியையும் கண்டு தரிசித்தார். பிறகு தம்பியும் துறவறம் பூண்டு அண்ணனுக்குத் தொண்டரானார்.
அன்னை அருணாசலத்தில்! ரமணரும் அருணாசலத்தில்; அழகம்மையின் கடைசி மகன் நாகசுந்தரமும் அருணாசலத்தில்! மூவரும் ஒரே இடத்தில் தங்கி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மனநிறைவான வாழ்க்கை பெற்றார்கள்.
இந்த நேரத்தில் 1922ஆம் ஆண்டில் மே மாதத்தின் போது அழகம்மை மீண்டும் நோய்வாய்ப்பட்டார். நாளாக வியாதி முற்றியது அவளுக்கு இறுதிக்காலம் நெருங்கி விட்டதை ரமண  மகரிஷி உணர்ந்து கொண்டார். தாயார் அருகிருந்து கடைசிவரை மகன் என்ற ததுை கடமைகளை, தாய் மனம் நிறைவு பெறும் அளவில் செய்தார்.
ஒரு நாள் தாயருகே வந்த ரமண மகரிஷி, தனது வலக்கையைத் தாய் நெஞ்சிலும், இடக்கையைத் தலையிலும் வைத்து ஆத்ம போதமளித்தார். மனக்கஷ்டங்கள் எல்லாவற்றையும் நீங்கி, அழகம்மை அமைதியானாள்! காலத்தோடு கலந்து விட்டாள்!
பசுவான் ரமண மகரிஷி பெற்ற மாதாவுக்கு ஒரு சமாதி கட்டினார். அதன் மேல் ஒரு சிவலிங்கத்தை நாட்டினார்! அந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதிக்கு ‘மாத்ரு பூதேசுவரர்’ என்று அவர் பெயர் குட்டினார்.
மகரிஷியின் பெருமை தமிழ்நாட்டிலே மட்டுமன்று. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகத்திலும் பரவியது. அதனால், பக்தர்கள் கூட்டம் தினந்தோறும் பெருகி வந்து அவரிடம் அருளாசி பெற்றது. நாள் போகப் போக அவரது பெருமை இந்தியா முழுவதும் பரவியது. அவரைத் தரிசிக்க அயல் நாடுகளிலே இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்தபடியே இருந்தார்கள்.
ரமண மகரிஷி அருணாசல மலையிலே இருந்து அடிவாரத்திற்கு வந்துவிட்டால், பக்த கோடிகள் அவரைத் தரிசிக்க வசதியாக இருக்கும் என்று பக்தர்கள் ரமண ரிஷியாரிடமே கேட்டுக் கொண்டார்கள். மகரிஷியும் கீழே வந்தார். பாலி தீர்த்தம் அருகே தங்கி, மக்களுக்கு அருளாசி அளித்தார். அங்கேதான் ரிஷி தங்கவேண்டும் என்று பக்தர்கள் விரும்பினார்கள். அவர்களது ஆசையை ரமணரிஷி ஏற்றார். அதற்கேற்ப அங்கே ரமணாசிரமத்தை மக்கள் நிறுவினார்கள்.
இரமண மகரிஷியாரின் தாயார் அழகம்மையின் சமாதிக்கு அருகில் ஒரு சிறு குடிசை கட்டினார்கள் மக்கள். மகரிஷி அங்கே தங்கினார்! ரமணரின் சீடர்களின் ஆசையாலும், ஆன்மிக அன்பர்களது அக்கறையாலும், பக்தர்களது ஆர்வ மேலீட்டினாலும் அங்கே ஓர் ஆலயம், விருந்தினர் தங்கும் விடுதி, வருபவர்கள் வசதிக்கான உணவு விடுதி ஆகியவை தோன்றின.
இரமணாசிரமம் பேரின்பத்தை அடைய தியானமோ, தவமோ செய்பவர்களுக்கு வழிகாட்டிடும் ஞானாலயமாக மாறியது. அவ்வாறான மாற்றங்களுக்குப் பிறகு, கட்டங்கள் தோன்றின; மக்கள் குடியேற்றங்கள் பெருகின; வாழ்க்கையில் மன அமைதி காணும் மலர்த் தோட்டமாக ரமணாசிரமம் காட்சி தந்தது. 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel