←← 14. மனமே! துன்பத்தின் கர்த்தா
ரமண மகரிஷி ஆசிரியர் என். வி. கலைமணி15. அமெரிக்க ஐரோப்பியருடன் மகரிஷி
16. ரமணர் காலமானார்! →→
439976ரமண மகரிஷி — 15. அமெரிக்க ஐரோப்பியருடன் மகரிஷிஎன். வி. கலைமணி
15. அமெரிக்க ஐரோப்பியருடன்மகரிஷி
மகரிஷி ரமணர் ஆசிரமத்தில் அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், கிறித்துவத்தைப் பரப்பிட வந்த பாதிரியார்கள் போன்ற அறிவுடையார் எல்லாம் சில நாட்களாக தங்கியிருந்தார்கள். அவர்கள் ஏன் அங்கே தங்கியுள்ளார்கள் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.
மகரிஷி எல்லா அயல் நாட்டாரிடமும் பாசத்தோடும் நேசத்தோடும் பழகி, அவர்களுக்குரிய விருந்துபசாரங்களை எல்லாம் செய்து கொடுத்தார். ரமணர் அவர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, அவர்களுள் ஒருவர் எழுந்து, “கடவுள் உருவத்தில் எப்படி இருப்பார்? மனிதனைப்போல இருப்பாரா?” என்று கேட்டார்.
இரமணர். ‘ஆமாம்’ என்றார்! உடனே அந்த அமெரிக்கர் மீண்டும் மகரிஷியை நோக்கி, “அப்படியா! கண், காது, மூக்கு ஆகிய உறுப்புக்களுடனா?” என்றார்.
‘ஆமாம்’, உனக்கு அந்த உறுப்புக்கள் இருந்தால், கடவுளுக்கு ஏன் இருக்கக் கூடாது? என்று ரிஷி அவரை மறு கேள்வி கேட்டார்.
“இந்து மத நூல்களில் கடவுளுக்கு இந்த அவயங்கள் எல்லாம் உண்டு என்று நான் படித்த போது, எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.” என்று அந்த அமெரிக்கர் கிண்டலடித்தார் ரமண மகரிஷியிடம்!
உடனே மகரிஷி அவரை நோக்கி, “உனக்குக் கண், காது, மூக்கு ஆகியவை இருப்பது பற்றி நீயே ஏன் சிரித்துக் கொள்ளவில்லை? என்றார்.
அமெரிக்காவிலே இருந்து வந்தவர்கள் பலவித எண்ணங்களை உடையவர்களாக இருந்தார்கள். ஒருவர் கடவுள் எந்த உருவில் இருப்பார் என்ற சந்தேகம் தீர வந்தவர்; மற்றவர் சித்தர் என்றால் யார்? அவரைப் பார்க்க வேண்டும் என்று வந்தவர், அடுத்தவர் இப்படிப்பட்ட சந்தேகங்களைப் புரிந்து கொண்டு, அதை அமெரிக்க நண்பர்களிடம் சொல்லி தற்பெருமை பெற வேண்டும் என்ற நோக்குடையவர்; இன்னொருவர், இவ்வாறு - திரட்டிய கருத்துக்களைப் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற சிந்தையுடன் வந்தவர்.
இப்படிப்பட்டவர்களுள் ஒருவரான சித்தர்களைப் பார்க்க வந்தவர், சித்தர்கள் எல்லாம் மலைமேலேதான் வாழ்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு, அமெரிக்கா செல்வதற்கு முன்பு அருணாசலம் மலை முழுவதும் சுற்றி அலைந்தார். சித்தர் ஒருவரைப் பார்க்காமல் அமெரிக்கா திரும்பக் கூடாது என்ற வைராக்கியத்தோடு இரவு நேரத்தின் இருட்டிலும் சுற்றிக் கொன்டே அலைந்தார்.
ஆசிரமத்துக்கு அயல்நாடுகளிலே இருந்து வருபவரை தக்க முகவரியுடனும், தகுதி நிலையோடும் தங்க வைப்பது ஆசிரம அன்பர்கள் பொறுப்பு. அதற்கேற்ப, சித்தர்களை பார்க்க வந்தவரைக் காணவில்லை என்ற சந்தேகம் ஆசிரமத்தில் அலை மோதியது. ஆளுக்கொரு திசையாக அந்த அமெரிக்கரை ஆசிரமவாசிகளும் பொதுமக்களும் தேடிக் கொண்டிருந்தார்கள்.
ரமணர் பழனிசாமியிடம் ஒரு பெரும் விளக்கைக் கொடுத்து ஆளுக்கொரு மூலையாக விளக்கை ஏந்திக் கொண்டே தேடுங்கள் என்றார். அதற்கேற்ப கடைசியில் பெரும் பாடுபட்டு அலைந்து அந்த அமெரிக்கரை தேடித் அழைத்து வந்து விட்டார்கள்.
சித்தர்களைத் தேடியலைந்தவர், தனது தேடலையும் அதன் தொடர்பாக அவர் கண்ட காட்சிகளையும் கூறியபடியே, மகரிஷியை நோக்கி, “மகரிஷி அவர்களே! ஆத்ம ஞானத்தை எனக்குக் கொடுங்கள்; நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவனாக இருப்பேன்” என்று பணிவோடு வேண்டினார்.
மகரிஷி அதற்கு ஏதும் பதில் பேசாமல் ம்...ம்.... என்றார்.
மறுபடியும் அவர் “ஆத்ம ஞானத்தை எனக்குக் கொடுங்கள். நாளை நான் இந்த ஊரை விட்டே போய் விடுகிறேன்; எப்போதும் நான் ரிஷியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார்.
அதற்கு மகரிஷி, ஒரு போதும் நீ இந்த இடத்தை விட்டுப் போக மாட்டாய் என்றார்.
அதற்கு அந்த அமெரிக்கர் அச்சப்பட்டார். எங்கே தனது சித்துக்களைப் பயன்படுத்தி, நம்மைப் போகவிடாமல் ரிஷி செய்து விடுவாரோ என்ற பயத்தில் எனக்கு எனது ஊரில் மிக முக்கியமான வேலை உள்ளது. நான் போகும் பாஸ்போர்ட்டும் தயாராக உள்ளது. திரும்பிப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்ட என்னை, மகரிஷி எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறார்? என்று மகரிஷியையே அவர் கேட்டார்.
மகரிஷி நீ ஒரு போதும் போக மாட்டாய். ஏன் தெரியுமா? நீ இங்கே வரவில்லை. கப்பல், ரயில், கார். இவைதானே உம்மை இங்கே கொண்டு வந்து சேர்த்தன: இங்கு வந்து நீ சேருகின்ற வரையிலும் ஒன்றும் செய்யவில்லையே, சும்மாதானே நீ உட்கார்ந்திருந்தாய்? என்றார்.
மகரிஷி தனக்குரிய சித்துக்களால் எங்கே தன்னைத் தடுத்து நிறுத்தி விடுவாரோ என்று பயந்துபோன அந்த அமெரிக்கர், ஒன்றும் அவ்வாறு நடவாது என்ற நம்பிக்கை பெற்றார்.
அமெரிக்காவின் அமோக வியாபாரத்திலும், மற்றவற்றிலும் பெரும் புள்ளியாக உள்ள அவர் எப்படி மீண்டும் அமெரிக்கா திரும்பாமல் இருப்பார்.
அத்தகைய பணப்பற்றுடைய ஒரு வியாபாரி, எவ்வாறு ஆத்ம ஞானத்தை அடைய முடியும்?
பிராமண அன்பர் ஒருவர் வந்தார் மகரிஷியிடம் அருளாசி பெற. அவர் மகரிஷியைப் பார்த்து, ‘சுவாமி, அறியாமை மிக்க நாம் நிறைய படிக்கின்றோம். உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், நாம் அதிக அளவு படித்ததும் உண்மையானது விலகிக் கொண்டே போகிறது..’
‘மேல் நாட்டு வேதங்களையும் படித்தேன். அவை எதற்கும் உதவவில்லை. நம்முடைய மகான்கள் தங்களுக்குள்ளேயே மாறுபட்டு வேறுவேறு வழிகளைச் சொல்கின்றார்கள்.’
‘நான் பிரம்மம் நான் பிரம்மம்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இரு. நீ பிரம்மம் ஆகிவிடுவாய் என்று சங்கரர் கூறுகிறார். ஆன்மா ஒரு போதும் பிரம்மத்திடமிருந்து பிரிவதில்லை’ என்று மத்வாச்சாரியார் கூறுகிறார்.”
“நான் யார்? என்று கேட்டுக்கொள் என்று நீங்கள் சொல்கிறீர்கள், வேறு சில தீர்க்கதரிசிகள் வேறு விதமான வியாக்கியானங்களையும், வழிகளையும் கூறுகிறார்கள். என்னைப் போன்றோர் யார் கூறுவதை நம்பி நடப்பது சுவாமி” என்று கேட்டார்.
மகரிஷி ரமணர், இவன் பதில் கூறுவதற்குரியன் அல்லன் என்று எண்ணியோ - என்னவோ அவர் இதற்குரிய பதிலைக் கூறவே இல்லை.
அந்த நேரத்தில் ஒருவர் கூட்டத்திடையே எழுந்து கம்பீரமான குரலில், ‘சுவாமி, நான் எந்த வழியில் போவது? என்றார்.
மகரிஷி அவ்வாறு கேட்டவரை, கையசைத்துக் காட்டி, ‘நீ வந்த வழியே போ’ என்றார்.
அப்போது இயேசு மதத்தைத் தமிழ் நாட்டில் பரப்பிட வந்த கிறித்துவப் பாதிரியார் ஒருவர் ரமணாசிரமத்துக்கு வந்திருந்தார். அவருடன் ஐரோப்பியர்கள் சிலரும் இருந்தார்கள். வந்த அந்த இயேசு மத பேச்சாளர் பைபிள் போதிப்பதில் சிறந்து விளங்கியவர்.
‘இந்தப் பாதிரி இத்தகையாளர் என்ற அடையாளம் ரமண மகரிஷிக்குத் தெரியாது. அவர் மகரிஷி முன்பு வந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். அப்படி அவர் பேசத் துவங்கியதும், அவரது நேர்முக உதவியாளர் என்று கூறிக் கொண்ட ஒரு பெண்மணி, உடனே நோட்டும் பேனாவும் ஏந்திக் கொண்டு, என்ன பேசுகிறார் பாதிரி, என்பதை எழுதிக் கொள்ளத் தயாரானார்.
பாதிரியார் எல்லா இடங்களிலும் பேசியே பழக்கப்பட்டவராதலால், சுமார் இரண்டு மணி நேரமாக ஆசிரமத்தை பிரசார மேடையாக்கிக் கொண்டார். இதை ரமண மகரிஷியைப் பின்பற்றிடும் ஆங்கிலேயே சீடர் ஒருவர் கண்டு, வெகுண்டு எழுந்து, பாதிரியாருடன் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார். ரமணாசிரமம் களைகட்டிவிட்டது. கூட்டமோ கூட்டம் அப்படிப்பட்ட கூட்டம் திரண்டது. அதுவரை யாரும் அந்தப் பாதிரியாரை இடை மறித்தே பேசவில்லை. திடீரென ஒருவர், அதுவும் வெள்ளைக்காரரே எழுந்து பேசுவதைக் கண்டு பாதிரி வியப்படைந்தார்.
அந்தப் பாதிரி தனக்கு பக்க பலமாக ஒரு குரல் எழாதா? தன்னைப் பின்பற்றிச் சரமாரியான கேள்விக் கணைகளை ரமணரை நோக்கி எய்திட மாட்டார்களா? தனது பேச்சுக்கும் ஏதாவது ஆதரவு முழக்கங்கள் எழாதா என்று சில நிமிடங்கள் எதிர் பார்த்துவிட்டு, பிறகு அந்தப் பாதிரியே, ‘நல்லவன் சொல்லாமல் போவான்’ என்ற அறிவு மொழிக்கு ஆளானார்! சென்றுவிட்டார்!
வந்த பாதிரி, மத நல்லிணக்க வாதியாக இல்லாமல், தமது பேச்சுத் திறமையால் ரமணாஸ்ரமத்தைக் கலக்கடிக்கலாம் என்று பேசுவதற்காக வந்தவர் என்பதைக் கூடியிருந்தோர் புரிந்து கொண்டனர். இதையெல்லாம் மகரிஷி ரமணர் ஏதோ ஒரு திருவிழா நடந்து கொண்டிருக்கிறது என்றெண்ணி வேடிக்கை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.
கடவுளைக் காண பையன் துடிப்பு!
இருபது வயதுடைய ஒரு வாலிபன் அக்கூட்டத்திலே எழுந்து ரமண மகரிஷியார் திருமுகத்தை நோக்கி, மெதுவாக, நான் இந்த வாழ்க்கையில் கடவுளைக் காண முடியுமா சுவாமி? என்று கேட்டான்.
அவனைப் பார்த்து ரமணர் சிரித்துக் கொண்டே, தம்பி! நீ கேட்ட கேள்வியில் உள்ள ‘நான்’ என்பது யார்? என்றார்.
நான் கேட்டதை முதலில் சொல்! அந்த நான் யார்? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? வாழ்க்கை என்ற சொல்லில் அடங்கியுள்ள பொருள் என்ன? என்றார்.
கேட்டவன் இளைஞன்! எனவே பதில் தெரியாமல் அந்த வாலிபன் திரு திரு என்று விழித்தான். அதற்குள் அந்த வாலிபனுக்குப் பின்னாலே இருந்த ஒருவர் ஒரு தாளில், ஒரு வினாவை எழுதி மகரிஷியிடம் நீட்டினார். வேறொன்றுமில்லை. காலம், தூரம் பற்றியதே அக் கேள்வி.
மகரிஷி சிங்கம் போலச் சிலிர்த்து எழுந்தார். ‘இடம், காலம் இவற்றுடன் ஆத்மாவைப் பற்றியும் கேள்வி எழுப்பியவர் யார்? என்றார் ரமண மகரிஷி.
அப்போது! ‘நான்தான்’ என்றது ஒரு குரல்!
நான் என்றால் உனக்கு என்னவென்று தெரியுமா?
சிறிது நேரம் தயக்கம் மயக்கமானது. அதற்குப் பிறகு, போகட்டும். ‘நான்’ என்பது பற்றிய வினாவை வேதாந்த மகரிஷிகளுக்கு விட்டு விடுங்கள். என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் போதும்’ என்றது. அந்தக் குரல்!
என்ன? நேரமும் தூரமும், ஆத்மாவை விட உனக்கு முக்கியமாகி விட்டதா? இந்தக் கேள்விகள் எல்லாம் தேவையில்லை. என்றார் ரமணமகரிஷி!
ஆத்மாவைப் பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லாமல் எந்த கேள்விக்கும் பதில் தெரிந்து கொள்ள முடியாது. “ஆத்மாவை முதலில் அறிந்து கொண்டுவா! பின்பு எல்லாம் தெளிவாகத் தெரிந்து விடும்! புரிந்து கொள்ளவும் முடியும்” என்றார்.