சென்னை, கம்பன் கழகத்தார் ஏவி.எம். அறக் கட்டளையின் சார்பாக கம்பராமாயணச் சொற்பொழிவு நடத்தி வருகின்றனர். ஏவி.எம். மெய்யப்ப செட்டியார் காரைக்குடியில் பிறந்து வளர்ந்தவர். திரைப்பட உலகச் சக்கரவர்த்தியாக விளங்கியவர். தரமான படம் எடுப்பதில் புகழ் பெற்றவர். நல்ல அன்பர்; இலக்கியங்களை அனுபவிப்பவர். ஆதலால், சென்னை கம்பன் கழகத்தின் வழி ஆண்டுதோறும் கம்பராமாயணத்தைப் பற்றி ஓர் ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக அறக்கட்டளை நிறுவியுள்ளார்.
சென்னை கம்பன் கழகச் செயலாளர் கம்பன் அடிப் பொடியின் அடிப்பொடி என்று பெருமையுடன் அழைக்கப் பெறும் திரு. பழ. பழனியப்பன் அவர்கள் இந்த ஆண்டு, கம்பன் கழகத் தலைவர் - கம்பன் புகழ் பரப்பும் நீதியரசர் எம்.எம். இஸ்மாயீல் அவர்கள் இசைவுடன் நமக்கு வாய்ப்பளித்தார். எளிதென ஏற்றுக் கொண்டோம். ஆனால், எழுதும்போதுதான் காலமும் பழ.பழ. அவர்கள் மனமும் நெருக்கடி தந்ததை உணர முடிந்தது. கம்பன் கழகத்தின் உயர் மரபுகளில் ஒன்று காலம் போற்றுதல். குறித்த காலத்தில் எழுதித் தர இயலவில்லை. மிகுந்த இடர்ப்பாட்டுடன் சொற்பொழிவு நாளன்றுதான் எழுதி முடித்தோம். கம்பன் கழகத்தினரும் பதிப்புத்துறைக் கலைஞருமாகிய திரு. வானதி திருநாவுக்கரசு அவர்களும் பொறுத்தாற்றிக் கொள்ள வேண்டும்.
சொற்பொழிவு 28.07.1994 மாலை, கம்பன் கண்ட ஆட்சியில்–அரசியல், சமூகம், பொருளாதாரம் என்பது தலைப்பு. நமது நாடு மக்களாட்சி முறையில் குடியரசு நாடாக விளங்குகிறது. குடியரசு நாட்டில் வாழ்கிற மக்களுக்கு அரசியல்–ஆட்சியியல் பற்றிய அறிவு தேவை: விழிப்புணர்வு தேவை. இன்று நமது நாட்டு அரசியலை மக்கள் அரசியலைக் கட்சிகளிடம் ஒப்படைத்துவிட்டோம். இது தவறு. கட்சியினர் ஆளட்டும்! ஆனால், எப்படி ஆள வேண்டும் என்று சொல்கிற உரிமை நமக்கு– நமது நாட்டு மக்களுக்கு இருத்தல் வேண்டும். நாடு முழுதும் பரவலாக அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேச வேண்டும். ஒரு நாட்டு மக்கள் எதைப் பற்றிச் சிந்திக்கிறார்களோ, எதைப்பற்றிப் பேசுகிறார்களோ அந்தத் திசையில் நாடு நகரும். இது வரலாற்று உண்மை. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு’ என்று பாரதி பாடினான். நாடு சுதந்திரம் பெற்றது.
இவ்வாறு நமது நாடு சிறந்த ஜனநாயக நாடாக விளங்க வேண்டும். கம்பன் காட்டும் கோசல நாட்டு அரசு, முடியரசு, ஆயினும் குடியாட்சிப் பண்பு இருந்தது. கோசல நாட்டு மன்னன் உடல்; மக்கள் உயிர். இது ஒரு வளர்ந்த அரசுக்கு அடையாளம்! இன்று நமது நாட்டில் முற்றாக ஜனநாயக ஆட்சியில் எதிர்மறை நிலை! ஏன்? நாம், நம்முடைய அரசியல் கடமையைச் செய்வதில்லை. கம்பன் ஒரு இலட்சிய நாட்டைப் படைக்க ஆசைப்படுகிறான்; அந்த விருப்பத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிக்க, இராமாயணம் இயற்றுகிறான்.
கோசல நாடு பற்றி மிக உயர்வாகப் பாடுகிறான். ஆனால், கோசல நாடு உண்மையில் கம்பனின் இலட்சியத்திற்கு இசைந்திருந்ததா? என்று வினாத் தொடுத்தால் கிடைக்கும் விடை எதிர்மறையாகத்தான் அமையும். கூனியின் துன்பமும் ஆட்சிக் கட்டிலில் இருப்போர் பக்கம் சொத்துக்கள் எல்லாம் போய்விடும்; மற்றவர்கள் உறவினர் கூட (கைகேயியை) கேட்டுத்தான் வாங்க வேண்டும் என்ற உண்மையையும் அறியலாம். கம்பன் பாடிய நாட்டுப்படலம் கம்பனின் இலட்சிய நாடு பற்றியதேயாம், என்று உணர முடிகிறது.
சொற்பொழிவு முழுதும் கம்பனின் விருப்பத்தை, ஆர்வத்தை, இலட்சியத்தைக் காட்ட முயற்சி செய்து உள்ளோம். மன நிறைவா? சொல்லத் தெரியவில்லை! வாசகர்கள்தாம் சொல்ல வேண்டும்! வாய்ப்பளித்த சென்னை கம்பன் கழகத்திற்கும் அறக்கட்டளையின் இன்றைய புரவலர் திரு. ஏவி.எம். சரவணன் அவர்களுக்கும் நன்றி பாராட்டு! வாழ்த்துக்கள்!
கம்பன் புகழ் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க!
– அடிகளார்