←கிழக்கும் மேற்கும்
முஸ்லீம்களும் தமிழகமும் ஆசிரியர் எஸ். எம். கமால்தமிழகத்தில் அரபிகள்
துலுக்கர்→
437576முஸ்லீம்களும் தமிழகமும் — தமிழகத்தில் அரபிகள்எஸ். எம். கமால்
2
தமிழகத்தில் அரபிகள்
ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம், மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலே ஒரு புதிய திருப்பத்தை தோற்றுவித்தது. தெளிந்த, உயர்ந்த, தெய்வீக சிந்தனைகளின் கருவூலமாக, இஸ்லாம் என்ற மாபெரும் மறைவழியை, மனித இனம், மணி விளக்காகக் கண்டது. அன்பையும் அறத்தையும் ஆதாரங்களாகக் கொண்ட திருமறையையும் அண்ணல் நபிகள் அவர்களது ஆன்மநேயக் கருத்துக்களையும், அவர்களது ஆரவாரமற்ற நடைமுறைகளையும், தங்களது வாழ்க்கை நெறிகளாகப் பற்றிப்பிடித்த அரபிகள், கீழ்நாடுகளுக்கு வளமையாகச் செல்லும் வணிகர்களாக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு இன்றியமையாத புதுவழியாகிய இஸ்லாத்தைப் பரப்பும் இறை நேசர்களாகவும் சென்றனர்.
இன்றைய இந்திய துணைக் கண்டத்தின் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும், இலங்கை, மலேஷியா, இந்தோனிசியா, சீனம், ஜப்பான், புரூணை, போர்னியா, பிஜி, பிலிப்பைன்ஸ் ஆகிய கீழ்நாடுகள் அனைத்திலும், இன்று மக்கள் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களாக இருப்பதற்கு, அங்கு சென்ற அரபிய நாட்டு வணிகர்களும் தொண்டர்களும் தான் காரணம் என்பதை வரலாற்றுச் செய்திகள் விளம்புகின்றன. இந்த நாடுகளின் காடுகளிலும், மலைகளிலும் கடலோரங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான அராபிய இறை நேசர்களின் அடக்கவிடங்கள் (மக்பராக்கள்) இந்த உண்மையை என்றும் நினைவூட்டுனவாக உள்ளன. குறிப்பாக, அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது நெருங்கிய தோழர்களான தமீம்-உல்-அன்சாரி, முகம்மது உக்காசா, ஆகியவர்களது இறுதி வாழ்க்கை, சமயத் தொண்டிற்காவே, நமது தமிழகத்தில், அர்ப்பணிக்கப்பட்டு இருப்பதும் அதற்குச் சான்றாக அவர்களது அடக்கவிடங்கள் முறையே மகமூது பந்தர் என்ற பரங்கிப் பேட்டையிலும், சஹீதுபந்தர் என்ற கோவளத்திலும் அமைந்திருப்பது அரபுநாட்டிற்கும் தமிழகத்திற்கும் நல்ல பிணைப்புகள் இருந்ததை நினைவூட்டுகின்றன. அவர்களைத் தொடர்ந்து பல்லாயிரம் அராபியத் தொண்டர்களும் சமயச் சான்றோர்களான வலிகள், சூபிகள், தர்வேஷ்கள், மஜ்தூபிகள், மஸ்தான்கள் சமயப் பணிக்கென தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் வந்து சேர்ந்தனர். தொண்டை மண்டலத்தில் இருந்து தென்பாண்டி நாடுவரை தொடராக அமைந்துள்ள கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து இங்குள்ள மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்களது பணியில் தங்கள் வாழ்க்கையை முடக்கிக் கொண்ட அவர்களது அடக்கவிடங்கள் கோவளத்தில் இருந்து குளச்சல் வரை காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தின் கோட்டாறு நகரில், ஈராக் நாட்டு கர்ஸிம் (வலி) அவர்களது அடக்கவிடம் உள்ளது. அதில் ஹிஜ்ரி 4 (கி.பி.624) என்று குறிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கோதரிஸா மலையில் உள்ள அப்துல் ரஹ்மான் (வலி) அவர்களது அடக்கவிடத்தில் ஹிஜ்ரி 8 (கி.பி. 628) என பொறிக்கப்பட்டுள்ளது.[1] அண்ணல் நபிகளார் அவர்கள் காலத்திலேயே திருமறையின் ஒளியை ஆர்வத்துடன் தமிழகத்திற்கு ஏந்தி வந்த இறைநேசர்களின் முதல் அணியைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதில் ஐயமில்லை. மற்றும் திருச்சிராப்பள்ளியில் நத்தர் பாபா, மதுரையில் அலியார் ஷா, ஏறுபதியில் சுல்தான் ஸையது இபுராகீம் ஸஹீது, அனுமந்தக் குடியில் ஸையது முகம்மது புகாரி: தேவிபட்டினம் வையது அஹமது, ஆகியோர்களது தர்காக்கள் அமைந்து இருப்பது பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை, சன்மார்க்க சேவைக்காக அரபு நாடுகளில் இருந்து தமிழகம் போன்று தங்களது தொண்டின் முடிவில் தமிழ் மண்ணில் தங்களை மறைத்துக் கொண்ட இறைநேசர்களில் குறிப்பிடத் தக்கவர்களாகும்.
இன்னும், ஸிரந்திப் என அன்று வழங்கப்பட்ட இலங்கையில் உள்ள ஆதம் (அலைஹிவஸல்லம்) அவர்களது திருவடி மண்ணை ஜியாரத்† [2] செய்வதற்காக புறப்பட்டு வந்த அரபிகளது ஆன்மீக தொடர்புகளாலும், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றியது. இத்தகைய அரபி பயணிகளில் ஒருவரான ஷேக் ஐக்கியத்தின் என்பவரது ஆழமான அன்பாலும், இஸ்லாமிய ஞானத்தாலும் ஈர்க்கப்பட்ட கொடுங்கோளுர் மன்னன் சேரமான் பெருமாள், இஸ்லாத்தை தழுவியதுடன் கி பி. 825ல் புனித ஹஜ்ஜை மேற்கொண்டு அரபி நாடு சென்றவிவரத்தை வரலாற்று நூல்கள் விளம்புகின்றன. நாளடைவில் அவர் இஸ்லாத்தை தழுவி, அப்துல் ரஹ்மான் ஸாமிரி என்ற பெயருடன் அரபு நாட்டில் தங்கினார். அந்தப் புனித மண்ணில் தமது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்து, ஸபர் என்னும் நகரில் கி.பி. 828-ல் அவர் இயற்கை எய்தினார்.[3] இந்த மன்னர் வழங்கிய அறிமுக மடலுடன் கேரளம் வந்த மாலிக் இபுனு தினாரும் அவரது மக்களும் மேற்கு கடற்கரைப் பட்டினங்களில் இஸ்லாமிய பிரச்சார பணியில் ஈடுபட்டதுடன் முதல் முறையாக ஒன்பது தொழுகைப் பள்ளிகளை அந்த மாநிலத்தில் நிர்மாணித்ததாகவும் கேரள மாநில வரலாற்றுக் குறிப்புகளில் காணப் படுகின்றன.[4]
ஆனால், இவர்களுக்கு ஒருநூற்றாண்டிற்கு முன்னரே தமிழகத்தில், சோழர்களது கோலநகராக விளங்கிய உறையூரில் ஹிஜ்ரி 116-ல் (கி.பி.734) ஹாஜி அப்துல்லா பின் முகம்மது அன்வர் என்பவரால் அமைக்கப்பட்ட தொழுகை பள்ளியே தென்னகத்தில் இஸ்லாமியர்களால் நிர்மானிக்கப்பட்ட முதல் தொழுகைப் பள்ளியெனத் தெரிகிறது.[5] நாயக திருமேனியவர்கள் இஸ்லாமியர்களுக்காக தங்களது திருக்கரங்களால் மதினாவில் முதல் தொழுகைப் பள்ளியை† [6] அமைத்த ஒரு நூற்றாண்டு கால இடைவெளியில் தமிழ்நாட்டில் இந்த தொழுகைப் பள்ளி அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி நகரின் கோட்டை ரயில்நிலையத்திற்கு அருகில் சிதைந்த நிலையில் உள்ள அந்தப் பள்ளி, இஸ்லாமியத் தமிழினத்தின் முன்னோடி முயற்சியாகும். கடந்து போன நூற்றாண்டுகளில் தமிழகம் வந்த அரபிகள் தமிழ்ச் சமுதாயத்தில் கலந்து விட்டாலும், அன்றைய தமிழகத்தின் மிகமிகச் சிறுபான்மையினராக இருந்த அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையின், உன்னதமான இறை வழிபாட்டினை நிறைவேற்றுவதற்கு எத்தகைய உறுதியான உள்ளத்துடன் இருந்தனர் என்பதை விளக்கும் வரலாற்று சாட்சியமாக விளங்கிக் கொண்டிருக்கிறது அந்தப் பள்ளிவாசல்.
இவ்விதம், தமிழகத்தில், அரபி வணிகர்களான இஸ்லாமியர்களும், அவர்களது போதகர்களான இறைவனது அனுபூதி பெற்ற வலிமார்களும், இறை நேசர்களும், கடற்கரைப் பகுதிகளிலும், பட்டணங்களிலும் ஆங்காங்கே சிறு குடியிருப்பு களையும் அமைத்து வாழ்ந்தனர். தமிழகம் போந்த இத்ததைய அராபிய வணிகர்களது குடியிருப்புகள் சங்க காலத்திலும் அதற்குப் பின்னரும் “யவனச் சேரி” என வழங்கப்பட்டது. பூம்புகார் நகரில்,
“மொழிபல பெருகிய பழிதீர் தேயத்து
புறம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்...........”
இத்தகைய குடியிருப்பு இருந்ததை பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. இன்னும் பெருங்காதை,
“விருப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய
ஐம்பதி னிரட்டி யவனக்சேரியும் ............
(மகதகாண்டம் : புறத்தொடங்கியது பாடல் 3: 8)
“அமரிய நண்பின் தமருளும் தமராம்
யவனப்பாடி ஆடவர் தலைமகன்”
பெருங்கதை - இலாவணகாண்டம் பாடல். 167-168.
என்று “யவனச்சேரி” “யவனப்பாடி” என தெளிவாகச் சொல்கிறது.
கிழக்கு கடற்கரையிலும் இத்தகைய குடியிருப்புகள் சில எழுந்தன. முகவை மாவட்டத்து கடற்கரைப் பகுதியை நத், வந்து குடியேறிய அரபு நாட்டாரின் நத்தம், பல இங்கு எழுந்தன. இன்றைய தேவிபட்டினத்தின் தென்பகுதி “அரப தான் காடு”[7] (“அரபு நத்தக்காடு”) என்ற பெயரில் இன்னு வழங்கப்பெறுகிறது. பெரியபட்டினம் கிராமத்தின் வடக்கு பகுதியில் இருந்த இத்தகையதொரு நத்தம், “நத்தக்காடு” என வழங்கப்படுகிறது. கீழக்கரைக்கு அண்மையில் உள்ள கிராமம் ஒன்று இன்றும் “நத்தம்” என்றே பெயர் பெற்றுள்ளது.[8]
இந்தக் குடியிருப்புகள், பிற்காலக் கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் “அஞ்சு வண்ணம்” என்றும் “அஞ்சு வன்னம்” எனவும் குறிப்பிட்டுள்ளன. கேரளத்தில் குடியிருந்த முஸ்லீம்களது குடியிருப்பும் "அஞ்சு வண்ணம்” என்ற குறிக்கபட்டுள்ளது. இந்தக்குடியிருப்புகளில் இருந்த முஸ்லிம்கள் அஞ்சுவண்ணத்தினர் என அழைக்கப்பட்டனர். நாளடைவி அவர்களது சபை அஞ்சுவண்ணம் சுன்னத் ஜமாத் என்றும், அவர்களது பள்ளிகள் அஞ்சுவண்ணப் பள்ளியென்றும். வழங்கப்பட்டன். நெல்லை மாவட்ட ஏர்வாடி நகரின் ஒரு பகுதி “புலியூர் அஞ்சவண்ணம்” என்று கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. குமரி மாவட்டத்தில் “அஞ்சுவண்ணம்” என்ற சிற்றுார் உள்ளது. அஞ்சுமன் என்ற பாரசீகச் சொல்லின் தமிழ் விகாரம் தான் இந்த தமிழ்ப் பெயர் எனக் கருதப்படுகிறது.[9] மன்றம், சபை, சாத்து என்ற பொருளியல் பாரசீக மொழியில் வழங்கப்பெறுவது அஞ்சுமன் ஆகும். ஒன்பது, பத்தாவது நூற்றாண்டின் மாறவர்மனது தீர்த்தாண்ட கல்வெட்டிலும்[10] பாஸ்கார ரவிவர்மன் என்ற கேரள மன்னனது கோட்டயம் கல்வெட்டிலும்[11] அஞ்சுவண்ணம் குறிக்கப்படுகின்றது. பழந்தமிழ்ப் பாடல் ஒன்றில், நாகபட்டினத்துக்கருகில் உள்ள ஒரு அஞ்சு வண்ணம் வர்ணிக்கபடுகிறது.
“குடக்கினிற் றுரங்கமும் வடக்கினிற் கலிங்கமும்
குணக்கினிற் பசும்பொனும் குளித்த தெற்கில்
அடிப்பரப் பிடைக்கலந் தனேக வண்ணமாக வந்
தஞ்சு வண்ணமுந் தழைத்தறத்தின் வண்ணமானவூர்..”
என்பதே அந்தப் பாடலின் அடிகளாகும். மேலும் பதினைந்தாவது நூற்றாண்டு சிற்றிலக்கியமான பல்சந்தமாலையில் “அயன்மிகு தானையர் அஞ்சு வண்ணத்தவர்” என்றும் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்றப்பட்ட மிகுராஜமாலையில் “அண்டர் தருவெனக் கொடுக்கு மஞ்சு வண்ண முசுலிமவர்கள்” என அஞ்சுவண்ணத்தினர் பேசப்படுகின்றனர்.[12] இதனைப் போன்றே நெல்லை மாவட்டத்தில் சோனகன் விளையும், முகவை மாவட்டத்தில் சோனகன் பேட்டையும், தமிழ் மண்ணில் தழைத்து எழுந்த இஸ்லாமிய அரபியரது குடியிருப்புகளையே சுட்டுவதாகும். இவை தமிழ் மண்ணில் தழைத்திருந்த பொழுதும் இந்தக்குடியிருப்பு பகுதிகளின் முழு நிர்வாகத்தையும் இஸ்லாமியரது சுயேட்சையான ஆட்சி அமைப்பு நிர்வகித்து வந்தது. இந்த அமைப்புகளின் இயக்கத்தில் இந்த நாட்டு மன்னர்கள் தலையிடவில்லை. இசுலாமியரது வாழ்க்கை, செயல்பாடு, குற்ற இயல் சம்பந்தமான அனைத்து நிலைகளிலும் அந்த தன்னாட்சி அமைப்பு நடுநாயகமான தலைவனது தீர்ப்பு கடைப் பிடிக்கப்பட்டது. காயல்பட்டினத்தில் இயங்கிய இசுலாமிய தன்னாட்சி அமைப்புபற்றி நூலாசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.[13] “அஞ்சு வண்ணமும் தழைத்து அறத்தின் வண்ணமான ஊர்” என மேலே தனிப்பாடல் குறிப்பிடுவது இந்த ஆட்சி அமைப்பையும் அங்கு நிலவிய “ஷரியத்” முறையையும் என்பதும் வெளிப்படை.
இத்தகைய அராபிய குடியேற்றம் ஒன்று. மதுரையம்பதியில் இருந்ததை மதுரை கோரிப்பாளையம் தர்காவில் உள்ள கல்வெட்டு ஒன்று உறுதி கூறுகிறது.[14] இதனைப் பற்றி மதுரைச் சீமை வரலாற்றின் ஆசிரியர் அலக்ஸாந்தர் நெல்சன் குறிப்பிட்டு இருப்பதின் சுருக்கமாவது, ... “... ... ... மதுரை மன்னனாகிய கூன்பாண்டியன் இன்றைய கோரிப்பாளையம் எனப்படும் சொரிகுடி, சொக்கிகுளம், பீபிகுளம், கண்ணாரேம்பல், சிறுதூர் திருப்பாலை ஆகிய ஆறு பகுதிகளை, அராபிய வணிகர்களுக்கு பதினாயிரம் பொன் பெற்றுக் கொண்டு கையளித்தான், தமிழ் நாட்டுக் கடற்கரையில் சிறப்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள், மதுரையில் நிலையாகத் தங்குவதற்காக கோரிப்பாளையம் என்ற இந்தப் பகுதிகளை பாண்டிய மன்னனிடம் இருந்து பெற்று இருக்கவேண்டும். இந்த நிகழ்ச்சி பத்தாவது நூற்றாண்டிற்கு முன்னதாக நடைபெற்று இருத்தல் வேண்டும். ஆனால், இந்த நிலங்களைப் பற்றிய உரிமைப் பிரச்சினையொன்று இஸ்லாமியர்களுக்கும் ஏனையோருக்கும் பின்னர் எழுந்த பொழுது, மதுரை மன்னனாக இருந்த வீரப்ப நாயக்கர் (கி.பி. 1572-1595) நியாய பூர்வமான விசாரணையொன்றை நடத்தினார். கோரிப்பாளையம் தர்காவிற்கு நேரில் சென்று ஆவணங்களை பார்வையிட்டு அந்த நிலங்களின் மீதான இஸ்லாமியர்களது உரிமை உண்மையானதென்று கட்டளையிட்டுள்ளார். அதனைக் கல்வெட்டிலும் சாலிவாகன சகாப்தம் 1495 பவ வருடம் தை மாதம் பதினோராம் நாள்(கி.பி. 1573) பொறித்துள்ளார். பிற்காலத்தில் இந்த நிலங்களை கோரிப்பாளையத்தில் எழுந்துள்ள தர்காவிற்கு உரிமை இழப்புக் காணியாக அராபிய வணிகர்கள் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.[15]
தமிழ்நாட்டின் தலைமை நகரான மதுரையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அராபிய இஸ்லாமியர் குடியேற்றம் ஏற்பட்டு இருந்தது என்பதை மேலே கண்ட வரலாற்றுச் செய்தி வெளிப்படுத்துகிறது. இதனைப் போன்றே சோழர் தலைநகராகிய தஞ்சையிலும் அராபிய இஸ்லாமியர்கள் இதே கால கட்டத்தில் இருந்து வந்ததை ராஜராஜ சோழனது தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுத் தொடர் ஒன்றிலிருந்து சூசகமாகத் தெரிகிறது. தஞ்சைப் புறம்பாடி ராஜ்ய வித்யாதரப் பெருந்தெருவில் இருக்கும் சோனகன் சாவூர்.....” என்பதே அந்தக் கல்வெட்டுத் தொடராகும்.[16] ராஜேந்திர சோழனது ஆட்சிக் காலத்திலும் செல்வாக்குடன் வாழ்ந்த இந்தச் சோனகரை “கங்கை கொண்ட சோழபுரத்து ராஜ்ய வித்யாதரப் பெருந்தெரு திருமந்திர ஓலை நாயகனான சோனகன் சாவூர்”[17] - என கோலார் - கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசரது வாய்மொழி ஆணையை ஒட்டி வரைந்து வெளிப்படுத்தும் அலுவலர் திருமந்திர ஓலை எனப்படும். மற்றும், சோழர் காலத்திய சிறந்த செப்பு பட்டயமான “லெயிடன் கிராண்ட்” (ஆனைமங்கலச் செப்பேடு)டில் கைச் சாத்திட்டவர்களில் இன்னொரு இஸ்லாமியரது பெயர் இடம் பெற்றிருப்பது தெரியவருகிறது. சத்திரிய சிகாமணி வளநாட்டு பட்டணம் கூற்றத்து சன்னமங்கலத்து கரணத்தான் அகமது துருக்கன் என அவர் குறிப்பிடப்பட்டார்.[18] இன்றைய நாக பட்டினமும் அதைச் சூழ்ந்த பகுதி தான் இந்த வள நாடும் கூற்றமும் ஆகும்.[19]
இந்த இஸ்லாமிய அரபிகளை, ஏனைய வெளிநாட்டினரைப் போன்றே தமிழ் இலக்கியங்கள் பாகுபாடு இல்லாமல் ஒரு கால கட்டம் வரை “யவனர்” எனக் குறிப்பிட்டு வந்தன. ஆனால், கி. பி.மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் கிரேக்கர் உரோமர் ஆகியவர்களது தமிழகத்துடன் வணிகத் தொடர்புகள் முற்றாக முறிந்த பிறகு, தமிழகத்துடன் தொடர்பு கொண்டிருந்த மேனாட்டார் இஸ்லாமிய அரபியர்கள் மட்டுந்தான் என்பது தெளிவு.
இதனை வலியுறுத்த பேரறிஞர் மு. ராகவ ஐயங்காரது ஆராய்ச்சிக் கருத்துக்கள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கனவாக உள்ளன மகா வித்வான் அவர்கள், “வெளிநாட்டு வியாபாரத தொடர்புகள்” பற்றிய தமது கட்டுரையில்[20]
“... ... ... இவ்வாறு தமிழ்நாட்டில் மலிந்திருந்த யவனர் என்போர், கிரேக்கம், அரேபியா, எகிப்து முதலிய நாடுகளில் இருந்து வந்தவர்களே. இவருள் கிரேக்க யவனர் இங்கு வந்து வியாபாரம் செய்தவராயினும், சங்க நாளிலும் அதன் பின்பும் தமிழகத்தில் மிகுதியாகத் தங்கியவர்கள் சோனகர் என்னும் யவனராவர். தமிழ் கூறும் பதினெண் தேயங்களில் ஒன்றான் “சோனகம்” பரத கண்டத்திற்கு மேற்பால் நாடுகளில் ஒன்று என்று சொல்லப்படுவதால் அது அரேபியா என்னும் தேசமாக கருதப்படுகிறது. அபிதான சிந்தாமணி, யவனர், அரபிய நாட்டு மிலேச்சர் என விளக்கம் தந்துள்ளது. இன்றும், காயல் பட்டினம், கீழக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளில் இச்சோனகர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்கள் முற்காலத்தே காவிரி பூம்பட்டினத்தில் வசித்து வந்த வியாபாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், பிற்காலத்தில் பாண்டிய நாடு அடைந்தவர் என்றும் தங்கள் ஆதி வரலாறு கூறுகின்றனர். இவர்களது பூர்வ பாஷை அரபியாயினும், பன்னூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் தங்கிவிட்டார்களாதலாலும், தமிழருடன் சம்பந்தம் செய்தும், தமிழர் வழக்கங்களைப் பழகி வந்தமையாலும் இவர் தமிழ் மொழியே பேசுபவராயினர், தமிழ் மக்கள் இச்சோனகரை யவனர் என்னும் பெயரால் அழைத்து வந்தனர் என்பது, “சோனகர் யவனர்” என்பது திவாகரத்தாலும், பத்துப்பாட்டில் “யவனர்” என்னும் சொல் வருமிடமெல்லாம் நச்சினார்க்கினியர், “சோனகர்” என உரை கூறிப் போந்ததாலும் விளங்கத்தக்கது.
“பிற்காலத்தில் இச்சோனகர் எல்லாம் தம் பழைய தேசத்தவர் போலவே, இஸ்லாத்தை தழுவலாயினர். இது பற்றிய “யவனத் துருக்கர்” என்றார் அடியார்க்கு நல்லார்,” யவனர் என்ற இலக்கியப் பிரயோகம் இஸ்லாமிய அரேபியர்களைத் தான் சுட்டுவதாக மகாவித்வான் அவர்கள் மேலே கண்டவாறு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
ஆசிரியர் பெயர் தெரிந்து கொள்ள இயலாத பல்சந்த மாலை பாடல் “... .... ... ஏழ் பெருந்தரங்கத்து யவனர், அல்லாவென வந்து ... .... ....” என, அல்லாவைத் தொழுகின்ற அரபியர், யவனர் என்பதை ஐயமற அறுதியிட்டுக் குறிப்பிடுகிறது.[21] இந்த யவனர் என்ற சொல்லின் பிரயோகம் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலக்கியங்களில் மட்டும் காணப்படுவதாலும், இந்த நூலும், அந்த நூற்றாண்டை அல்லது அதற்கு அடுத்த நூற்றாண்டுகளைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும். யவனர்கள் தங்கள் வீட்டுச் சாளரங்களுக்கு இட்ட மூடுதிரை போன்ற பட்டுத்திரை திருக்கோயில் கருவறைகளில பயன்படுத்தப்பட்டது. அதனைக் கல்வெட்டுக்கள் “யவனிகை” என குறிப்பிடுகின்றன.[22] இதேசொல், பின்னர் “நமனிகை” என்றுகூட வழக்கு பெற்றது. யமன் என்ற சொல் "நமன்" என்றால் போல, இவ்விதம், இஸ்லாமிய அரபிகள் அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் தங்களது இஸ்லாமிய வணிகச் சாத்துக்களைப் பெருக்கிக் கொண்டதுடன் ஆங்காங்கே நிலையான குடியேற்றங்களை அமைத்து தமிழ்ச்சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டனர், என்பதும் தெளிவாகிறது. தங்களது வளமையான வாணிபத்தில் தனித்து நின்றதுடன் தமிழ் மண்ணுக்குரிய தண்ணளியிலும் மிகுந்து நின்றதனை, அதே பல்சந்தமாலைபின் இன்னொரு பாட்டில்,
"வானது நானக் கொடையா லுலகை வளர்த்தருளும் சோனகர் வாழும் செழும் பொழில் சூழ்ந்து ...."†
[23] என்று ஈதலறத்திற்கு இலக்கணமாக சுட்டப்படும் மாரியே நானுமாறு இஸ்லாமியர்களது புகழ் வாழ்க்கை அமைந்து இருந்தது சித்தரிக்கப்பட்டுள்ளது.
இங்ஙனம், அராபிய இஸ்லாமியருக்கு அடுத்த தாயகமாக தமிழ் மண் விளங்கியது. எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராக் நாட்டு பஸ்ராலின் அதிபதியாக இருந்த ஹிஜாஜ் இபுனு யூசுப் (ஹிஜ்ரி 41 முதல் 95 வரை) பின் கொடுமைக்கு அஞ்சிய இஸ்லாமியர் பலர், கடல் வழியாக வந்து பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறையான கொற்கையில் கரை இறங்கினர். அங்கு ஆட்சி செய்த பாண்டியமன்னன், அவர்களை ஆதுரத்துடன் வரவேற்றுப் புகலிடம் வழங்கினான். இந்த அகதிகள் கொங்கணக் கரையில் குடியேறியதாக பாரசீக நூலாசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.[24]
இது நிகழ்ந்தது கி.பி. 714ல் அன்று முதல் இஸ்லாமியர் கொற்கையில் நிலைத்து வாழ்ந்து வந்தனர். தங்களது தாயகமான கெய்ரோவாகவே (பின்னர் காயலான) கொற்கையை “காயிறூன்” எனவும் “காயிறுன்” எனவும் வழங்கினர். அங்குள்ள செப்பு பட்டயமொன்றில் பொறித்துள்ளவாறு அப்பொழுது 226 சோனகர், காயலை வந்தடைந்ததாகத் தெரிகிறது. அவர்களின் விபரம் :–
1.
ஹாஷிம் வம்சத்தார்
23 பேர்
நாச்சியார் பெண்டுகள்
9 பேர்
அடிமைகள்
4 பேர்
2.
பாரூக் வம்சத்தார்
43 பேர்
நாச்சியார் பெண்டுகள்
16 பேர்
பெண்கள்
9 பேர்
அடிமைகள்
7 பேர்
3.
பாக்கீர் வம்சத்தார்
39 பேர்
நாச்சியார் பெண்டுகள்
24 பேர்
அடிமைகள்
12 பேர்
4.
உமையா வம்சத்தார்
14 பேர்
நாச்சியார் பெண்டுகள்
5 பேர்
அடிமைகள்
5 பேர்
இராணுவ வீரர்
16 பேர்
க்ஷவரகர்
3 பேர்
மொத்தம்
226 பேர்
இந்தச் செய்தியை வரலாற்று ஆசிரியர் கர்னல் வில்க்ஸும் தமது நூலில் உறுதிப்படுத்தியுள்ளார்.[25] எட்டாவது நாற்றாண்டின் துவக்கத்தில் ஈராக் ஆளுநராக பஸ்ராவில் இருந்த ஹிஜாஜ் பின் குஸாம், ஹாஸிம் குலத்தவரை, தாயகத்தை விட்டு ஓடி உயிர் தப்பும் அளவிற்கு கொடுமைப்படுத்தியதாக அந்த நூலில் வரைந்துள்ளார். இவர்களைப் பின்பற்றி பிறிதொரு அணியினர், அரேபியாவின் அதிபதியாக இருந்த அப்துல்லா மாலிக் பின் மர்வானது கொடுங்கோலுக்குத் தப்பி அரேபியாவின் தென்பகுதி வழியாக இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரையை அடைந்தனர். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியரது இன்னொரு ஆவணத்தின்படி, காயல்பட்டினத்தில் அரபி முஸ்லீம்கள் கி.பி. ஒன்பதாவது நூற்றாண்டில், அரபித் தாயகத்தில் இருந்து குடியேறி, அங்கு அறுபத்து நான்கு தொழுகைப் பள்ளிகளை அமைத்தனர் என்றும், தென்னை, பனைமரத் தோப்புகள் பலவற்றை ஏற்படுத்தினார் என்றும் தெரிகிறது. இவர்களும் இவர்களது வம்சா வளியினரும், சோழ மண்டலத்தின் எதிர்க் கரையான ஈழத்துடனும் வணிகத் தொடர்புகளைப் பெருக்கியதுடன், ஈழத்தின் வடக்கு, வடகிழக்கு, தெற்குப் பகுதிகளில் – திருக்கோணமலை, யாழ்ப்பாணம், மாதோட்டம், மன்னார், புத்தளம், கொழும்பு, வேருவிளை, காலி ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்களது முதலாவது குடியிருப்புகளை நிறுவினர். இவர்கள் ஈழத்தின் முத்துக்களையும் மணிகளையும் பெற்றுக் கொண்டு, தங்கள் நாட்டு தங்கம், செம்பு, பட்டு, மட்கலங்கள், குதிரைகள் ஆகியவைகளைப் பண்டமாற்றில் வழங்கியதாக வரலாற்று ஆசிரியர் நிக்கோலஸ் பரணவிதான குறிப்பிட்டுள்ளார்.[26] இன்னொரு நூலாசிரியரான ஜட்ஜ் காசி செட்டியும் இலங்கை முஸ்லீம்களைப்பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் முதலில் குமரிமுனைக்கு கிழக்கே உள்ள காயல்பட்டினத்தில், எட்டாவது நூற்றாண்டில் குடியேறிய பின்னர் இலங்கைக்கு வந்ததாக வரைந்துள்ளார். இந்த ஊர் முன்னால் சோனகர் பட்டினமாக வழங்கி வந்ததாக டாக்டர் கால்ட்வெல் குறிப்பிட்டுள்ளார்.[27]
↑ 1. அப்துல் ரஹீம் எம்.ஆல்.எம். – இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (1974) தொகுதி 1. பக்கம்.
↑ ஜியாரத் ; அரபிச்சொல் இசுலாமிய புனிதர்களது அடக்க இடங்களுக்கு சென்று வருதல் என்பது இஸ்லாமிய நெறியில் அனுமதிக்கப்பட்ட செயலாகும்.
↑ William Logan - Malabar Manual (1881)
↑ Gazetteer of Malabar and Amjemgo N.L. 8422
↑ கே. பி. எஸ். ஹமிது - இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி இரண்டாவது மாநாட்டு மலர் (1973) பக் : 51, 56.
↑ இந்தப் பள்ளிதான் இன்று மஸ்ஜிது நபவீ என வழங்கப்பட்டு வருடந்தோறும் இலட்சக்கணக்கான மக்களால் தரிசிக்கப்பட்டு வரும் ஸ்தலமாகும்.
↑ எஸ்.எம். கமால் – உலகமகா தேவிபட்டினம் (ஆய்வுரை)
↑ இன்றைய தமிழகத்தில் நத்தம் என்ற பெயர் விகுதிகளின் மூலம் சில ஊர்கள் இருந்து வருவது ஈண்டு ஒப்புநோக்கதக்கது.
புத்த(ர்) நத்தம் — திருச்சி மாவட்டம்.
ஈச நத்தம் — திருச்சி மாவட்டம்
பிள்ளை(மா)யார் நத்த்ம் — நெல்லை மாவட்டம்
வேடர் நத்தம் — நெல்லை மாவட்டம்
அரசர் நத்தம் — நெல்லை மாவட்டம்
முதுவார் நத்தம் — முகவை மாவட்டம்
அபிராம நத்தம் — முகவை மாவட்டம்
Pate S.R — Gazetteer of Tirunelvely
↑ சதாசிவ பண்டாரத்தார் – தி. வை. - கல்வெட்டு கூறும் உண்மைகள் (1961) பக் 21
↑ A. R. 598/1926 தீர்த்தாண்ட தானம் (இராமநாதபுரம்)
↑ களவியற்காரிகை (வையாபுரிப்பிள்ளை பதிப்பு) (1945) ஆலிப்புலவர். மிகுராஜ் மாலை (பதிப்பு 1962) பக்கம் 86
↑ Trivangore – Coachin Archallogical Series vol. II р. 21, 25, 34, 35, 67.
↑ Mooreland — W.H. — From Akbar to Aurangages (1923) London p. 222
↑ (a) A.R. 77/1905 கோரிபாளையம் (மதுரை)
↑ (b) Alexandar Nilson - Munural of madura country (1858) part II
↑ டாக்டர் இரா.நாகசாமி — தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுக்கள் — முதல் தொகுதி பக் 232, 257
↑ “சாமூன்” என்ற அரபிச் சொல்லின் திரிபு — சாவூர்
↑ நடன காசிநாதன் – கல்வெட்டு ஒரு அறிமுகம் (1978) பக் 83
↑ (a) T. Subbarajulu — Political geography of Chola country(1973) Map 11 List No : 91 (3)
↑ மகாவித்துவான் மு. ராகவ ஐயங்கார் – செந்தமிழ் – ஆராய்ச்சி தொகுதி (1938) பக் 154
↑ களவியற் காரிகை (பதிப்பு - வையாபுரிப்பிள்ளை) 1945. பக்கம் 139.
↑ HULTZCH. E. Dr — South Indian Inscription - Vol. II - Part. 1 (1891) p. 7. Ins. No. 6.
↑ களவியற்காரிகை(பேராசிரியர் வையாபுரிபிள்ளை பகுப்பு) பக்கம் 132
↑ Burhan - Ibl - Hassan : Tuhfat - al - Mujahideen (Persion) р. 5
↑ Col-wilks - Historical sketches of south India (1810)
↑ Nicholos and Paranamitana - Concise History of Ceylo (1961) p. 253
↑ Yule. col. 4. The Book of Ser Marcopolo-vol. II (1871)
р, 307. 309. Tamil nadu Archives - Tinnevely Dist. Records vol.3570. 1809 & 23–1–1810.