←தக்கானிகள் பட்டாணிகள்

முஸ்லீம்களும் தமிழகமும்  ஆசிரியர் எஸ். எம். கமால்வணிகம் வந்த வழியில்

அரசியல் முதன்மை→

 

 

 

 

 


437583முஸ்லீம்களும் தமிழகமும் — வணிகம் வந்த வழியில்எஸ். எம். கமால்

 

 


9
வணிகம் வந்த வழியில்

 

தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் வாணிப பண்டமாற்றிற்குப் பயன்பட்ட பாய்மரக்கலங்கள், அராபிய இஸ்லாமியர் தமிழகத்திற்கு வந்து செல்லும் போக்குவரத்துச் சாதனமாகவும் பயன்பட்டன. இன்றைய குமரி மாவட்ட குளச்சலிலிருந்து ஆந்திரக் கரையில் உள்ள முத்துப்பள்ளி வரையான வங்கக் கடலின் விரிந்த கடற்கரையில் பல இடங்களில் அவர்களது கலங்கள் நங்கூரமிடப்பட்டு நின்றன. இந்தப்பகுதி அரபு மொழியில் மாபார் என அழைக்கப்பட்டது.[1] கடந்து செல்லும் பகுதி என்ற பொருளுடைய இந்தப்பகுதி, நாளடைவில் அவர்கள் விரும்பி வாழும் நாடாக மாறியது வியப்பிற்குரியது அவர்களது கலங்களில் ரோம, எகிப்து, பாரசீக நாட்டுப் பண்டங்களுடன், குதிரைகளும், கரை இறக்கப்பட்டதுடன் நீண்ட அங்கியும் வண்ண முண்டாசுகளும் அணிந்த, இனிய தோற்றமுடைய இஸ்லாமியத் துறவிகளும், தொண்டர்களும், கரை இறங்கும் காட்சி, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழக கடற்கரைப் பட்டினங்களில் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்தது.
ஏற்கனவே, தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகமாகி, அஞ்சுவண்ணங்களில் வணிகச்சாத்துக்களுடள் நிலைத்துவிட்ட அராபிய இஸ்லாமியர்களது நேர்மையான வணிகத்திலும், வாழ்க்கை நெறிகளிலும் ஈர்க்கப்பட்டிருந்த தமிழ் மக்கள், இந்த இஸ்லாமிய துறவி - தொண்டர்களது பேச்சிற்கு தங்கள் செவிகளைத் தாழ்த்த தயங்கவில்லை. ஏக இறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அண்ணல் நபி நாயகம் (ஸல்) அரபி மக்களிடம் போதித்த போதனைகளையும், எய்திய சாதனைகளையும் அவர்கள் எடுத்துக்காட்டி, தமிழ் மக்கள் உலகம் தழுவிய அந்த ஒற்றுமை அணியில் சேர்ந்து, இம்மை மறுமைக்கான இனிய பணிகளில் ஈடுபட வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது இனிய பேச்சும் இறைக்கொள்கை விளக்கங்களும், ஏழை எளியவர்களிடம் ஈடுபாடு கொண்டு செய்த சேவையும், தமிழ் மக்களது சமய வாழ்வில் புதிய உணர்வையும் சிந்தனைத் தெளிவையும் தந்தன. அத்துடன், இடையோடிகள் இல்லாத அவர்களது எளிய இறைவழிபாடும் இனிய நடைமுறைகளும் யாவரையும் கவர்ந்தன. குறிப்பாக நடுத்தர அடித்தள மக்களிடையே விழிப்பை ஏற்படுத்தியது.
இத்தகைய மன மாற்றத்திற்குப் பல காரணங்கள் இருந்தன. அன்றைய தமிழ்ச் சமுதாயம், சமய மோதல்கள், சமயக் காழ்ப்பு, சமூகக் கொடுமைகள், பகுத்தறிவுக் கொவ்வாத பழக்க வழக்கங்கள், உயர்வு தாழ்வு, ஆண்டான் அடிமை நிலைகள் – ஆகியவை விஞ்சி நின்றதாகும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற பேருண்மை எங்கேயோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்ற உயரிய கொள்கை, உருமாறி பல நூற்றாண்டுகளாகி இருந்தன. இந்நிலையில், இந்து சமயத்தில் சீர்திருத்தம் கோரிய பௌத்தக் கொள்கையை பலவீனமடையச் செய்தது. சமணம் கொல்லாமையை கோடிட்ட அதனை சீர் குலைத்தது சைவம். பழமையையும் பல தெய்வ வணக்கத்தையும் கொண்ட சைவத்தையும் சமாளித்து நின்றது வைணவம். இவையனைத்தும் ஆரிய இனக் கொள்கை என்ற ஒரு தாயின் பிள்ளைகள். தமிழக சமய வாழ்விலும், சமுதாய முன்னேற்றத்திலும் சிறப்பாக எதனையும் சாதித்து விடவில்லை. எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சமுதாயத்தின் நிலை இதுவேயாகும். இந்தப் பின்னணியில், அராபிய நாட்டு இறைநேசர்களும் தொண்டர்களும் தூவிய புனித இஸ்லாம் என்ற வித்து, நமது தமிழ் மண்ணில் வேரூன்றி வளர்ந்து தழைத்துப் பூத்தது. அதனுடைய மோகனத் தோற்றத்தையும், மென்மையான சுகந்தத்தையும் கண்டு, உணர்ந்தவர்கள் அதனை வேற்று நாட்டு மலர் என வேறுபாடு கொள்ளவில்லை. 
இந்தப் புதிய சமயப் பணிக்கு, செயற்கரிய சாதனைக்கு, தமிழ் மண்ணில் தங்கள் உழைப்பையும் உயிரையும் வழங்கிய இசுலாமிய உத்தமர்கள் அனைவரையும் கடந்த காலம் இனங்காட்டத் தவறிவிட்டது. அவர்களில் ஒரு சிலரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அங்கும் இங்குமாக கிடைத்துள்ளன. (அவர்களது பெயர் பட்டியல் ஒன்றும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது) அவை வரலாற்று ஆய்விற்கு வழி துலக்குவதாக இல்லை. தமிழ்நாட்டின் காடுமேடுகளில், சாலை, சோலையில் பெயர் தெரியாத அடக்க விடங்களில் தங்களை முடக்கி அருந்துயில் கொள்ளும் அரபு, துருக்கி, சிரியா, பாரசீக நாட்டு மேதைகளே அவர்கள். அவுலியாக்கள், மஸ்தான்கள், மலுங்குகள், பீர்கள், பக்கீர்கள், சூபிகள், ஷைகுகள், தர்வேஸ்கள், ஆலிம்கள் என்று மட்டுமே அவர்களை இனம் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அனைவரும் அண்ணல் நபி (ஸல்) வழியில் வாழ்ந்தவர்கள். அவர்களது வழியில் வாழும்படி வழிகாட்டியவர்கள். அந்தப் பணியில் கண்ட இன்னலை, கனிந்த கன்னலாக ஏற்று மகிழ்ந்தவர்கள். இவைகளுக்கு மேலாக அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேறு வாய்ப்பு இல்லை.
குறிப்பாக, திருச்சிராப்பள்ளியில் மோனத்துயில் கொள்ளும் தப்லே ஆலம் நத்ஹர் (வலி) பாபா அவர்கள் பத்தாம் நூற்றாண்டில் விரியா நாட்டினின்றும் சமயப் பணிக்கென அப்பொழுது அரசியல் சிறப்புற்று இருந்த தமிழகத்திற்கு வந்தவர் உறையூரில் தங்கி தங்களது இஸ்லாமியப் பணியைத் தொடங்கினார்கள்.[2] இன்று திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள முஸ்லீம்களது முன்னோர்கள் பெரும்பாலும் பாபா அவர்களுடைய போதனைக்குப் பணிந்து இஸ்லாத்தில் இணைந்தவர்கள். இத்தகைய மகானுடைய மகத்துவங்களைத் தவிர்த்து அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இவர்களைப் போன்று மதுரை, நெல்லை, இராமநாதபுரம் மாவட்டங்களில் இஸ்லாத்தைப் பரப்பிய முன்னோடிகள் யார் எனத் தெரியவில்லை. ஆனால் கி.பி. 1050 இல் மாலிக்-உல்-முல்க் என்பவர் தலைமையில் தொண்டர் பலர் மதுரையில் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தக் குழுவில் சையத் அலியார் ஷா என்ற இறைநேசரும் இருந்தார் எனத் தெரிகிறது.[3] மாலிக்-உல்-முல்க் அப்பொழுது மதுரை ஆளுநராக இருந்தார் என மதுரைச் சீமை வரலாற்று ஆசிரியர் வரைந்துள்ளார்.[4] அந்தப் புனிதரைப்பற்றி வேறு தடயங்கள் எதுவும் இல்லை.
மற்றும், கி.பி. 1182இல் மதினத்திலிருந்து பாண்டியநாடு போந்த சுல்தான் ஸையது இபுராகிம் (வலி) அவர்கள் தங்களது பணியை நெல்லை மாவட்டத்தில் தொடங்கினார்கள். அப்பொழுது பாண்டிய நாடு மூன்று பகுதிகளாக மூன்று பாண்டிய மன்னர்களது ஆட்சியில் அமைந்து இருந்தது. காயலைக்கோ நகராகக் கொண்டு குலசேகர பாண்டியனும், மதுரையில் திருப் பாண்டியனும் கிழக்குச் சீமை பவுத்திர மாணக்கப்பட்டினத்தில் விக்ரம பாண்டியனுமாக மூவர் ஆட்சி பீடங்களில் இருந்தனர் பாண்டியர்களிடையே பட்டத்திற்குரியவர் மட்டு மல்லாது, இளவல்களும், பேரரசர்களுக்குச் சமமாக அரசியல் சம்பிரதாயங்களுடன் பல பகுதிகளில் ஆட்சிப் பொறுப்பைக் கவனித்து வரும் பழக்கம் அப்போது பாண்டிய நாட்டில் இருந்தது. இவ்விதம் ஐவர் பாண்டியநாட்டை ஆட்சி செய்ததையும் இதனால் பாண்டியர்களுக்கு பஞ்சவர் என்ற பெயர் இருந்ததையும் இலக்கியங்களில் காணப்படுகின்றன.[5] சமுதாய வளர்ச்சிக்கு உதவுவதற்காக, அரசியல் அதிகாரங்களைப் பரவலாக்கும் வகையில் இந்த முறை, கடைபிடிக்கப்பட்டு இருந்தாலும் பாண்டியர்களிடையே போட்டியும் பொறாமையும் வளர்ந்ததைத்தான் வரலாறு காட்டுகிறது.
சுல்தான் ஸையது இபுராகீம் (வலி) அவர்களும் அவர்களது திரளான தொண்டர்களும் தமிழகப் பயணத்தை மேற் கொண்டிருப்பது, ஏக தெய்வ வணக்கத்தையும் இறைவனது  சன்மார்க்கத்தையும் மக்களிடம் விளக்கும் பிரச்சார நோக்கம் கொண்டது என்பதை காயலில் இருந்த குலசேகர பாண்டியன் புரிந்துகொண்டவுடன் அவர்களது பணி தொடருவதற்கு தடங்கல் எதுவும் ஏற்படுத்தவில்லை. ஆனால் மதுரை, இராமநாதபுரம் பகுதியில் இருந்த பாண்டியர்கள் அவர்களது பணிக்கு இடையூறு செய்தமையும், அதனை எதிர்த்து முறியடித்த போரில் அவர்கள் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த விவரங்களையும் ஸ்ஹாதத் நாமா என்ற பாரசீக நூலை ஆதாரமாகக் கொண்டு வரைய பெற்ற ஹமீது சரிதை தெரிவிக்கிறது. [6]சுல்த்தான் சையது இபுராகீம் (வலி) அவர்கள் பாண்டிய நாட்டில் கிழக்கு கடற்கரையில் அமைந்து இருந்த பவுத்திர மாணிக்கப் பட்டினத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருந்ததால் அவர்களது ஜீவியத்தின் பொழுதே நெல்லை, மதுரை, இராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஒரு பகுதியினர் இஸ்லாம் மதத்தை ஏற்றனர், அவர்களது சந்ததிகளும் தொண்டர்களும் பாண்டிய நாட்டில் பல பகுதிகளில் சன்மார்க்க சேவையைத் தொடர்ந்தனர். இவர்களது புனிதப்பணியின் காரணமாக பாண்டிய 
நாட்டில் ஒரு சிறு பிரிவு மக்கட் தொகையினராக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்ததை மார்க்கோ போலோவின் பயணக்குறிப்புகளில் இருந்து ஊகித்து அறிய முடிகிறது. பாண்டிய மக்களது உணவுப் பழக் கங்களை விவரிக்கும் மார்க்கோபோலோ, அந்த மக்கள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை நேரடியாக கொன்று தின்பது கிடையாது என்றும் அவைகளின் ஊனைப் பெற்று உண்டனர் என்ற குறிப்பில் இருந்து, முஸ்லிம்கள் பயன்படுத்திய ஹலாலான ஊனை அந்த மக்களும் உண்டனர் என்பது பெறப்படுகிறது.
பன்னிரண்டாவது, பதிமூன்றாவது நூற்றாண்டுகளின் பிற்பகுதியில், பாண்டிய நாட்டு இஸ்லாமியர்களுக்கு அரசியலில் செல்வாக்குடன் அரசினது மத சகிப்பு இருந்ததால் சோழ நாட்டின் தென்பகுதி உட்பட்ட தமிழகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலை இருந்தது. அப்பொழுது ஹஸ்ரத் அலியுத்தீன் அவர்களும், ஹாஜி சையித் தாஜுதீன் என்பவரும் மதுரையில் இஸ்லாமிய சேவையில் ஈடுபட்டனர். இவர்கள் யாவர்? இவர்களது பணியின் விவரம் என்ன? என்பன போன்ற 
வினாக்ளுக்கு விடை இறுக்கும் வரலாற்று ஆவணங்கள் இல்லை. மதுரைச்சீமை வரலாற்று ஆசிரியருக்கு கிடைத்த ஆவணங்களின் படி ஹஜரத் அலியுத்தின் அவர்கள் கி பி. 1290ல் இறுதியில் மதுரை வந்தவர் என்பது மட்டும் புலனாகிறது.[7] இன்னொரு வரலாற்று குறிப்பிலிருந்து மதுரையின் தென் பகுதியில் உள்ள "காஜி மொகல்லா" என வழங்கப்படும் காஜியார் தெரு குடியிருப்பு ஏற்பட்டதும் அதனை ஏற்படுத்திய காஜி தாஜித்தீன் மதுரை வந்ததும் இந்த நூற்றாண்டில்தான் என்பது புலனாகிறது.[8] வைகையாற்றங் கரையின் தென்பகுதியில் ஏற்பட்ட இக்குடியிருப்பைப் போன்று வடகரையிலும் இஸ்லாமியரது குடியிருப்பு ஒன்று வளர்ச்சி பெற்றது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் டில்லியைக் கைப்பற்றி ஆட்சி செய்த முகம்மது கோரியின் பெயரால் கோரிப்பாளையம் என அந்த குடியிருப்பு இன்றளவும் வழங்கி வந்தாலும் அதனைத் தோற்றுவித்தவர் யார்? எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது? என்பதைத் தெரிந்து கொள்ள இயலவில்லை. அதே கால கட்டத்தில், தென்பாண்டிச் சீமையில் (இன்றைய நெல்லை, குமரி மாவட்டங்களில்) அரபு நாடுகளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய வணிகர்கள் தமது குடும்பங்களுடன் குடியேறினர். குறிப்பாக கிஸ்நாட்டு அதிபதி சையது ஜமாலுத்தின் தலைமையில் பல அரபுக்குடும்பங்கள் காயல் வந்து சேர்ந்தன[9]. இங்ஙனம் பன்னிரண்டாவது நூற்றாண்டின் முடிவிற்குள், அரபிய இஸ்லாமிய வணிகர்களும் தொண்டர்களும் தமிழகத்தை புதிய தாயமாகக் கருதி, குடியேறி, தங்கி, வாழ்ந்ததுடன் தமிழ் மக்களுடன் மண உறவுகள் கொண்டு தங்கள் சந்ததியினரைப் பெருக்கிக் கொண்டனர். இந்த தமிழ் மண்ணின் மைந்தர்களாகவே மாறி இருந்தனர். தமிழ்ச்சமுதாய அமைப்பில் கணிசமான எண்ணிக்கையுடன் அவர்கள் ஒரு புதிய அங்கமாக விளங்கினர். அதனால் அன்றைய ஆட்சியாளர் அவர்களை மதித்து சிறப்புடன் நடத்தினர்.
 

 

↑ Mohammed Hussain Nainar Dr. — Arab Geographers Knowledge on South India (1642) p. 19.

↑ அப்துல் ரஹீம் எம். ஆர். எம். இசுலாமிய கலைக்களஞ்சியம் (1962) தொகுதி III பக். 375

↑ Appadorai Dr. A. Economic Conditions of South Indian(194O) vol. II p. 22 

↑ Alexander Nelson - manual of Madura Country (1868) 

↑ ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி - பாடல் 382.  “ விட்ட தண்டினின் பினவர் ஐவரும் கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலும் நீ"

↑ முகமது இப்ராஹீம் லெப்பை - ஷஹீது சரிதை(1954)பக்கம் - 138

↑ Alexander Nelson – Manual of Madura Country Vol. II Part III Chap II p. p. 44—4

↑ Ibid p.p. 68, 69 9. Hussaini — Dr. S.A.O. - History of Pandiya Country (1962 р. 5)

↑ Hussain Nainar Dr - Arab Geographers knowledge abou South India (1942)

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel