←கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
முஸ்லீம்களும் தமிழகமும் ஆசிரியர் எஸ். எம். கமால்இலக்கிய அரங்கில்
வரலாறு தொடர்கிறது→
437598முஸ்லீம்களும் தமிழகமும் — இலக்கிய அரங்கில்எஸ். எம். கமால்
24
இலக்கிய அரங்கில்
வாழையடி வாழையாக வளர்ந்து வந்துள்ள தமிழக இஸ்லாமியர்களின் வரலாறு என்பது கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளை அடக்கியுள்ள ஏடாகும். எத்துணையோ துறைகளை எடுத்து இயம்புகின்ற அந்த ஏட்டிலே அவர்களது தமிழ்த் தொண்டு என்பதும் ஒரு சிறப்பான பகுதியாகும். அதனை வரலாற்றுப் பார்வையில் பகுத்து நோக்குதல் அவசியமாகும். பொதுவாகப் பிற்காலப் பாண்டியரது பெருமை மிக்க ஆட்சியில், தமிழ்க் குடிகளாக விளங்கிய சிறுபான்மைத் தமிழக இசுலாமியர், அரசியல் ஊக்குவிப்புகளால் உயர்ந்து வாணிபச் சிறப்புடன் சமுதாயச் சிறப்பையும் எய்தினர். அதுகாறும் ஆங்காங்கு அஞ்சு வண்ணங்களில் தனித்து, ஒதுங்கி வாழ்க்க அவர்கள், நாளடைவில் பெருநகர்களிலும் குடியேறி பிற பகுதியினருடன் கலந்து வாழும் வாய்ப்பைப் பெற்றனர். வாணிபச் சாத்துக்களினாலும், அரசியல் பணிகளினாலும் தமிழ் மொழியுடன் அவர்கள் கொண்டிருந்த தொடர்பு, அதனைக் கற்றுத் தேர்ந்து தெளியும்படி செய்தது. ஏற்கனவே அவர்களது தாய்மொழியான அரபும், பார்சியும், காலப்போக்கில் தொடர்மொழியாகிவிட்டதுடன், அவர்களது வழிமொழியான தமிழ்மொழி அவர்களது வாய்மொழியாகி தாய்மொழியாக வாய்த்துவிட்டது.
ஆதலால், இஸ்லாமிய சமய சிந்தனைகளை இறைமறையில் கருத்துக்களை, தமிழக மக்களிடம், குறிப்பாக தமிழகத்தின் இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றுக் கொண்டவர்கள், தமிழ் மூலம் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க முயற்சிகளில் ஈடுபட்டனர். அதற்கென அவர்கள் தேர்வு செய்த ஒரே முறை, தமிழை அரபு வரிவடிவில் அமைத்து வழங்கியது ஆகும். அதனையே பிற்காலத்தில் அரபுத் தமிழ் என அருமையுடன் சொல்லி வந்தனர். தங்களுக்குள்ள ஒரளவு தமிழ்ப் பயிற்சியைக் கொண்டு தமிழ் ஒலிவடிவிற்கிணைய அரபு மொழியில் வரி வடிவம் அமைக்கப்பட்டதுதான் இந்த புதுத்தமிழ். தமிழ்மொழியின் உயிர் மெய்களான 'ள, ங , ன, ட' ஆகிய எழுத்துக்களுக்கேற்ற ஒலிக்கூறு கொண்ட எழுத்துக்கள் அரபு மொழியில் இல்லாததால் இந்த தமிழ் எழுத்துக்களுக்கு பொருத்தமாக ஒலிக்கின்ற அரபு எழுத்துக்களுக்கு முன்னும் பின்னும் மேலும் கீழும் சிறு குறியீடுகளைச் சேர்த்து தக்க ஒலியை உண்டாக்க பயன்படுத்தினர். இதன் காரணமாக அரபு நெடுங்கணக்கு எழுத்துக்கள், இருபத்து எட்டில் இருந்து முப்பத்து ஆறு ஆக உயர்ந்தது. தமிழ் மொழியின் அனைத்து உயிர்மெய் எழுத்துகளையும் இணைத்து ஒலிக்கும் முறை
இதனால் உருவாக்கக்கப்பட்டது.
இந்த முறையில், அரபுச் சொற்களின் இன்றியமையாத சொற்கள் அவைகளின் அரபு மூல உச்சரிப்பு குன்றாமல் அவைகளின் இயல்பான வளமையும், வன்மையும், மென்மையும். இனிமையும், இணைந்து அப்படியே தமிழில் ஒலித்தன. குறிப்பாக அல்லாஹூ- (இறைவன்) ரஸூல் (இறைத் துாதர்) ஆலிம் (மார்க்க மேதை) கலிபா (மார்க்க தலைவர்) தரிக்கா (ஞான வழி) போன்றவை அந்தச் சொற்களில் சில. இத்தகைய தொருமுறை தமிழுக்கு புதுமையான தொன்றாக இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் இந்திய துணைக் கண்டத்தில் மேற்குக்கரையிலும், வங்கத்திலும் அரபிகள் இத்தகைய தொரு முறையை மேற்கொண்டிருந்தது தெரியவருகிறது. இதனைப் போன்று, அரபியர்கள் இந்தியாவில் நிலைகொள்வதற்கு முன்னர் கிழக்கு ஆப்ரிக்க தன்ஜானிய நாட்டில் வாணிபத் தொடபுர் கொண்டு இருந்தனர். அதனால் அங்கு வழங்கப்பட்ட சுவாஹிலி மொழியையும், பின்னர் மலேசியா இந்தோனிஷிய நாடுகளின் ஜாவி மொழியையும் அரபு மொழி வடிவில் வழங்கி வந்ததை அந்தந்த நாட்டு வரலாறுகள் தெரிவிக்கின்றன.
திருமறைக்கான விரிவுரையும் நபிகள் நாயகம் அவர்களது நல்லுரைகளை ஆதாரமாகக் கொண்ட நடைமுறை விளக்கங்களும் இந்தப் புதிய வரி வடிவில் தமிழகத்தில் இடம்பெற்றன இத்தகையதொரு முறையை, பதினான்காவது பதினைந்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த வைணவ பாஷ்யக்காரர்களும் தமிழகத்தில் மேற்கொண்டு இருந்தனர். அவர்களது சமய நூலான நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு விரிவான உரைகளை மிகுதியும் வடமொழிச் சொற்களின்
துணைகொண்டு புதிய உரை நடையொன்றில் அவர்கள் வரைந்துள்ளார். அவை தமிழ் உரையாக இருந்தாலும், அவைகளின் வரி வடிவம் கிரந்தத்தில் உள்ளது. சில உரையாசிரியர்கள் இந்த கிரந்த எழுத்துக்களுக்கிடையில் வடமொழிச் சொற்களையும் அப்படியே வழங்கி உள்ளனர். இதனை "மணிப்பிரவாள நடையென" இணைத்து
பெயரிட்டனர். நாட்டு விடுதலைக்குப் பின்னர், மொழி உணர்வுப் பற்று காரணமாக அண்மைக் காலத்தில் இந்த தமிழ் நடை கைவிடப்பட்டு மறைத்துவிட்டது.
எனினும், இதனையொத்த அரபுத் தமிழ், தமிழக இஸ்லாமியரிடையே இன்னும் வாழ்ந்து வருகிறது. வழக்கில் இருந்தும் வருகிறது. அரபு மொழியில் உள்ள கலைஞானங்களை அறிந்து கொள்வதற்கான எளிய சாதனமாக தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. இந்தவகைத் தமிழில் படைக்கப்பட்ட தொன்மையான ஆக்கங்கள் எதுவும் நம்மிடையே இன்று இல்லை. ஆனால் இருநூற்று ஐம்பது ஆண்டு கால வரையறைக்குட்பட்ட அரபுத் தமிழ் நூல்கள் மட்டும், தமிழகத்திலும் ஈழத்திலும் மார்க்க கல்வி பெறும் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருந்து
வருகின்றன. இவைகளுள் வள்ளல் சீதக்காதியின் ஆசானாக விளங்கிய ஞானி சதக்கத்துல்லா (வலி) வின் இளையரும் அரபு வித்த கருமான ஞானி ஷாம் ஷிகாபுதீனது அரபுத்தமிழ் நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இங்ஙனம் தமிழக இசுலாமியரின் தமிழ்-அரபுத் தமிழாக வளர்ந்து அடுத்த சில நூற்றாண்டுகளில் தனித்தமிழாசி காப்பியத் தமிழாக மணங்கமழ வழி துலக்கியது.
இவ்விதம் தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர், அதே காலத்தில் பிற சமயத்தினர், பல துறைகளைச் சேர்ந்த பலநூறு இலக்கியங்களைத் தமிழில் படைத்து இருப்பதை படித்து அறிந்தனர். பிற்காலத்தில் பெளத்த, சமண, வைணவச் சார்புடைய சமய இலக்கியங்களாக அவை பகுக்கப்பட்டுள்ளன. சமயப் பற்றும், சமுதாயப் பிடிப்பும் தாய் மொழித் தேர்ச்சியும் விஞ்சி ஒளிர்கின்ற அந்த நூல்களை காதாறக் கேட்டு, கண்குத்திப் படித்துச் சுவைத்தும் அவைகளின் இனிமையில் ஈடுபட்ட அவர்களது இதயம், தங்களது சான்றோர்களையும் சான்றோர் வாழ்வினையும் சொல்லக்கூடிய நூல்கள் தங்களது தமிழ்மொழியில் இல்லையே என ஏங்கியது. அவர்களது நினைவிலே இனித்து, நெஞ்சத்திலே நிலைத்து அதனால் எழுந்த ஊக்கமும், நாளடைவில் உருப்பெற்று உயர்ந்தது தான் இன்று நம்மிடையே எஞ்சி உள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செல்வங்களாகும்.
காலத்தின் அழிவுக் கரங்களில் இருந்து தப்பிப் பிழைத்த தொன்மையான பேரிலக்கியங்கள் எதுவும் தமிழக இஸ்லாமியருக்கு கிட்டவில்லை. என்றாலும், பல்சந்தமாலை என்ற பழம் நூலின் எட்டுப்பாடல்களை மேற்கோளாகக் கொண்ட "களவியற் காரிகையை" பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு, குறிப்பாக இஸ்லாமிய தமிழ் இலக்கியப்பட்டியலுக்கு அணி சேர்க்கும் இந்தப் பாடல்களை இலக்கிய உலகிற்கு வெளிக் கொணர்ந்த அன்னாருக்கு இஸ்லாமியர் என்றென்றும் கடமைப்பட்டுள்ளனர். இந்தப் பாடல்களில் இருந்து பல்சந்த மாலை ஆசிரியரது பெயரும். காலமும் அறிந்து கொள்வதற்கு இல்லை. ஆனால், இதுவரை அச்சில் கொணரப்பட்ட
இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பாடல்களில் தொன்மையானவை இவை என்பதை அறுதியிட்டுச் சொல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் தமிழக இஸ்லாமியரது தமிழ்ப்பணிக்கும் இந்த நூல் முன்னோடியாக அமைந்துள்ளது.
பொதுவாக, தமிழ் மொழியின் தொன்னுாற்று ஆறு வகையான சிற்றிலக்கியங்களின் பட்டியலில் பல்சந்தமாலை என்ற பகுப்பும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் நூற்றாண்டு இலக்கண நூலான பன்னிருபாட்டியலில் "பல்சந்த மாலை” என்ற பகுப்பு பேசப்பட்டுள்ளது. பதினைந்தாவது நூற்றாண்டு இலக்கியமான பிரபந்த திரட்டும்,
"பத்துக்கொரு சந்தம் பாடி பா நூறாக வைத்தல்........" என பல்சந்தமாலை அணி இலக்கணப்படி வாடல், ஊடல், கூடல் என்ற அகத்துறைகளை அங்கமாகக்கொண்டு தொகுக்கப்படுவது இந்தப் பாமாலை. தமிழ் இலக்கியத்தில் இத்தகைய பல்சந்த மாலை வேறு எதுவும் புனையப்பட்டு இருப்பதாக இதுகாறும் செய்தி இல்லை. மேலும் கிடைத்துள்ள இந்த பல்சுத்தமாலைப் பாடல்களில்
"வில்லார் நுதலிய நீதிமன்றே சென்றுமேவுதின் சூது
எல்லாம் உணர்ந்த ஏழ்பெரும் தரங்கத்து இயவனர்கள
"இய்வன ராசள் கலுபதி தாமுதல் எண்ண வந்தோர் . . . . .
"இறையாகிய கலுபா முதலானோர் யானைகளின் . . . . .
"கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த . . . . .
என்று பாடல் தொடர்களில் இயவனராசன், கலுபா-கலுல்பா, கலுபதி, என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக யவனர் என்ற சொல் சங்க இலக்கியங்களிலும், பின்னர் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பெருங்கதை ஆகிய படைப்புகளிலும் தமிழகம் புகுந்த பிற நாட்டாரைக் குறிக்க கையாளப்பட்டுள்ளது. இந்தச் சொல்லின் பிரயோகம் இறுதியாக, பதின்மூன்றாம் நூற்றாண்டைக் சேர்ந்த நச்சினார்க்கினியது உரையிலும் காணப்படுகிறது. பிற்கால இலக்கியங்கள் எதிலும் காணப்படாத
இந்தச்சொல் பல்சந்தமாலையில் தான் இடம் பெற்றுள்ளது. இந்தக் காரணத்தினால் இந்தநூல் பிற்கால இலக்கியம் அல்ல வென்பதை உறுதிப்படுத்த முடிகிறது. அடுத்து, கலுபா என்ற சொல்லின் ஆதாரத்தைக் கொண்டு. அல்லாவைத் தொழுகின்ற இயவனர்களது அரசன் கலுபா என்பதும், வச்சிரநாட்டில் வகுதாபுரிக்கு இறைவன் என்பதும் பெறப்படும், காலிப் (Caliph) என்ற அரபுச் சொல்லின் தமிழாக்கம் தான் இந்த கலுபா என்ற சொல் என்பது சிலரது முடிவு. இந்தச் சொல்லின் அரபு வழக்கை ஆய்வு செய்யும் பொழுது அந்த முடிவு பொருத்த மற்றது என்பதும் பெறப்படுகிறது.
ஸிரியா நாட்டிலும், ஸ்பெயின் நாட்டிலும் எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் ஆட்சி புரிந்த அப்பாஸிய மன்னர்களும், பத்து, பன்னிரண்டு நூற்றாண்டுகளில் மிஸ்ரு (இன்றைய எகிப்து) நாட்டை ஆட்சி செலுத்திய பாத்திமத் கிளை அரசர்களும் தங்களது பெயர்களுடன் இணைத்துக் கொண்ட அரசியல் விருதுப்பெயர் "இறைவனது பிரதிநிதி" என்பதே இந்தச் சொல்லின் பொருளாகும். அண்ணல் நபிகள் நாயக (ஸல்)த்தைக் குறிக்க திருமறையில் கலிபத்துல் ரசூல் என்றும், கலிபா-யெ-ரசூல், என்றும் பிரயோகம் வந்துள்ளது.[1] ஆனால் இந்தப் பாடல்களில் எளிதாக கலிபா எனக் குறிப்பிடாமல் கழுபா என குறிககப்படடுளளது. கலிமில்லா (இறையருள் பெற்ற வெற்றியாளன்) என்ற அரபுச் சொல்லின் திரிபாக இந்தச்சொல் அமைதல் வேண்டும் என எண்ணுதற்கும் இடமுள்ளது. கி.பி. 1223 முதல் ஸ்பெயின் நாட்டை ஆட்சி செய்த முகம்மது அபு-அல் அகமது என்ற பேரரசன் இதே விருதைப் புனைந்து கொண்டு இருந்ததும் ஈண்டு சிந்திக்கத் தக்கதாக இருக்கிறது. ஆதலால் இந்தச் சொல்லைப்
பலசந்தமாலை ஆசிரியர் பயன் படுத்தியதிலிருந்து இந்த நூல் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என முடிவிற்கு வருதல் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் பல சந்த மாலை பாடலின் இலக்கண அமைதியை ஆய்வு செய்து இந்த இலக்கியம் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என கருத்து தெரிவித்துள்ளார்.[2]
மேலும் இந்த பல்சந்த மாலையின் பாட்டுடைத் தலைவனாகிய கழுபா, வச்சிர நன்னாட்டு வகுதாபுரிக்கு இறைவன் என்பது அந்த மாலையில்
“நகுதாமரை மலர் வாவி சூழ் வச்சிர நாடர் தங்கள்
வகுதாபுரியன்ன ........"
என்ற பாடலிலிருந்து பெறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வச்சிரநாடும், வகுதாபுரியும் எந்தப் பகுதியில் எந்தக்கால எல்லையில் அமைந்து இருந்தன என்பதைப் புலப்படுத்த போது ஆதாரம் இல்லை. இசுலாமியரது கோநகரானமான பகுதாதைப் போன்று சிறப்புற்றிருந்த பெருநகர் என்ற பொருளில் வகுதாபுரி என இலக்கிய வழக்கு பெற்று இருப்பதாக சில நூல் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எகிப்து நாட்டுப் பட்டணமான காஹிரா (கெய்ரோ)வில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்ற பொருள் கொள்ளும்படி காயல்பட்டின முஸ்லிம்கள் இலக்கிய வழக்காக, காயல் பட்டினத்தை காயினூர் என வழங்கி இருப்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கதாக
உள்ளது.
நூறு நாமா பாடிய வகுதை அகமது மரைக்காயர், காயலின் வளமையைக் கூற "காகிறு நாட்டு வளம்" என்ற பகுதியை அந்த நூலில் சேர்த்து இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.அந்தப் புலவர் காகினுாராகிய காயலை, வகுதை நன்னாட்டில் இருப்பதாகப் பாடியுள்ளார். களவியல் காரிகையைப் பதிப்பித்த பேராசிரியர் திரு. வையாபுரிப்பிள்ளை, "வகுதாபுரியை இக்காலத்தில் காயல்பட்டினம் என வழங்குவர்" என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் முற்காலத்தில், வகுதாபுரி" எந்நாடுங்கொண்ட இறைவன் வச்சிரநாடான்” (கண்ணி-66)
"மானாபரன் செய்ய வகுதாபதிக் கிறைவன்’" (கண்ணி-15)
என பெரும் புலவர் உமறுகத்தாப் அவர்கள் வள்ளல் சீதக்காதி மரைக்காயரது திருமணக் கோலத்தைக் கண்ணாரக் கண்டு, களிகூர்ந்து, திருமண வாழ்த்து பாடும் பொழுது, வச்சிர நாட்டையும் வகுதையையும் குறிப்பிடுகிறார். இன்னும் சீதக்காதி "நொண்டி நாடக ஆசிரியரும்", 'வகுதையில் வாழ் மண்டலிகன்’
"திருவுலாவிய வகுதை நகர் வருகருணை வாருதி
"வகுதை நகர் சீதக்காதி... ... ...
என வள்ளல் சீதக்காதி மரைக்காயர் கீழக்கரை மாளிகையில் கொலுவீற்று சிறப்புற்று இருந்ததைப் பாடியுள்ளார்.
இவைகளுக்கு எல்லாம் மேலாக, காயல்பட்டினத்து புலவர் நாயகமான ஷெய்கு அப்துல் காதிரு நயினார் லப்பை ஆலிம் புலவர் அவர்கள் கீழக்கரை தான்” அந்த "காயல்" "வகுதை" என்பதை ,
"பவத்தடையறுத்து பலன்தருநெறியின்
"தவத்துறை பயிலுரு சான்றவர் வாழும்
வகுதை யம்பதியான் . . . . என்றும்,
"வையமெல்லாம் தனிக்கீர்த்தி வழங்கவருங்
கருணைமுகில் வகுதை வேந்தன்..."
என கீழக்கரை வள்ளல்கள் முகம்மது காசீம் மரைக்காயரையும், ஷெய்கு சதக்கத்துல்லா மரைக்காயரையும், புகழ்ந்துரைப்பதில் இருந்து கீழக்கரை தான் புலவர் நாவில் பொருந்திய வகுதை என்பது விளக்கமும் துலக்கமும் பெறுகிறது.
[3] மேலும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஆங்காங்கு பரவலாக அரபிகள், தமிழக இசுலாமியராக நிலை பெற்றுக் கொண்டிருந்தனர். அப்பொழுது பாண்டியப் பேரரசரான மாற வர்மன் குலசேகர பாண்டியனது ஆட்சியில் தமிழகத்திற்கும் அரபுத்தாயகத்திற்கு இடையில் விறுவிறுப்பான குதிரை வாணிபம் நடைபெற்று வந்ததும் இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். தமிழில் தேர்ச்சி பெற்று, காப்பியம் படைக்கின்ற தகுதியையோ அல்லது தமிழ்ப்புலவர் ஒருவரது இலக்கியப் படைப்பினை காணிக்கையாகப் பெறக் கூடிய தகுதியையோ இசுலாமியப் பெருமகன் ஒருவர் அப்பொழுது பெற்று இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மேலும் அந்த நூற்றாண்டிலே இந்த நூலும் இயற்றப் பட்டிருந்தால் அதனைத் தொடர்ந்து இசுலாமிய இலக்கியங்கள் வேறு எதுவும் பதினாறாவது நூற்றாண்டு முற்பகுதி வரை ஏன் இயற்றப் படவில்லை என்ற வினாவும் எழுகிறது.
அத்துடன் பதின்மூன்று, பதினான்காவது நூற்றாண்டுகளில்தான் அரபிக்குடா, பாரசீகப்பெருங்குடா நாடுகளில் இருந்து அரபிகள் பெருமளவில் மாபாரிலும் (தமிழக கடற்கரைப் பகுதி) ஈழத்திலும், மலேசியா தீபகற்ப நாடுகளிலும் குடி பெயர்ந்து வந்துள்ளனர் என்பதை வரலாற்றில் அறியும் பொழுது அரபிகள், தமிழ்ச் சமுதாயத்தில் இணைந்து கலந்து, தமிழக இசுலாமியர்களாக தமிழ் மக்களாக மாறியது பதினைந்து, பதினாறாவது நூற்றாண்டு என முடிவிற்கு வருவதே ஏற்புடைய தொன்றாகும். ஆதலால், அவர்கள் பேசுந்தமிழைப் பிறப்புத் தமிழாகக் கொண்டு பெருமையுடன் வாழத்தொடங்கியதும் அந்த நாற்றாண்டுகளில்தான்.
பதினான்காம் நூற்றாண்டின் இடையில் தமிழகம் போந்த அரபு நாட்டுப் பயணியான திமிஸ்கி கிழக்கு கடற்கரைப் பட்டினமான பத்தினி என்ற பட்டினத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த ஊருக்கு அடுத்துள்ள வஜ்ரம் - அல் - தவாப் "என்ற கோயில் இருப்பதாகவும் அந்தக் கோயிலுக்கு இந்து சமய மக்கள் பக்தி பரவசத்துடன் வந்து பூமியில் உருண்டு புரண்டு சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதாக தமது குறிப்புகளில்
[4] பதித்துள்ளார் வஜ்ரம் என்பது தருப்பை புல்லைத் குறிப்பதால் இந்த ஊர் திருப்புல்லாணியாக அமைதல் வேண்டும். மேலும் இராம காதை "பொருள் நயந்து நன்நூல் நெறியடுக்கிய புல்லில் கருணையங்கடல் கிடந்தது” என இராமன்
அங்குபுல்லைப் பரப்பி படுத்து இருந்ததாக குறிப்பிடுவதும் மற்றும் இன்னொரு பிற்கால இலக்கியமான புல்லையந்தாதி "விருப்புறப்புற்பரப்பி ஆங்கண விரும்பித்துாங்கும் தருப்பையான் . . . " எனக் குறிப்பிட்டு இருப்பதும் இங்கு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.
அண்மையில் மேற்கொண்டுள்ள ஆய்வில் இருந்து பத்ணி என்பது இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள பவித்திர மாணிக்க பட்டினம் என்ற பெரியபட்டினம் என்பது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆதலால் "வஜ்ரம்-அல்-தவாப்" உள்ள நாடு புல்லாரணியநாடு, புல்லங்காடுநாடு, வச்சிரநாடு, பாண்டிய நாட்டு கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர் வாழ்ந்த-இசுலாமிய குறுநில மன்னர் ஆளுகைக்குள் அமைந்த பகுதி என்பது பெறப்படுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் அரபிகள் பாண்டிய நாட்டில், வைப்பாறு, வைகை ஆகிய இரு நதிகளுக்கு இடையில் மன்னர் வளைகுடாவை அடுத்த தென்கிழக்குப் பகுதியின் பல இடங்களில் குடியேறி இருந்தால் என பேராசியர் ஹூசைன் குறிப்பிடுவதும் இந்தப் பகுதியாக இருக்கலாம்.[5]
மேலும், தமிழகம், வடுகரது ஆட்சியின் கீழ் வந்த பிறகு, பதினைந்து பதினாறாவது நூற்றாண்டில் ஆங்காங்கு பாண்டிய இளவல்கள் விஜயநகர மேலாதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக பல ஊர்களில் குறுநில மன்னர்களாக இருந்து வந்துள்ளனர். அவர்களைப் போன்று பிற்காலப் பாண்டியரது ஆட்சியிலும், அடுத்து மதுரை சுல்தான்களது ஆட்சியிலும் வாணிப, அரசிய செல்வாக்கு பெற்ற பல அரபிகளும் கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் குறுநில மன்னர்களைப் போன்று அதிகாரம் செலுத்தி வந்துள்ளனர். கி.பி. 1498ல் போர்த்து கேசிய தளபதி ரொட்டிரிகோ, காயல்பட்டினத்திற்கு வந்த பொழுது, அந்தப் பகுதி அரபு மன்னரது ஆட்சிக்குட்பட்ட கோநகராக விளங்கியதைக் குறிப்பிட்டுள்ளார்.[6] கி.பி. 1515ல் காயல் கடற்கரையைப் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் பர்போஸா, பழைய காயலையும் கீழக்கரை முஸ்லீம்களையும் குறிப்பிடும் பொழுது, அங்கு அரசரை போன்று செல்வ வளமும், அரசியல் செல்வாக்கு மிக்க முஸ்லிம் ஒடுவர் இருந்தார் என்றும், அங்குள்ள முத்துச்சிப்பி பாறைகளுக்கு அவர் தீர்வை வசூலித்து வந்தார் என்றும், அவரது ஆணைக்கும் தீர்ப்பினுக்கும் அனைத்து முஸ்லீம்களும் கட்டுப்பட்டு நடந்தனர். “என வரைந்துள்ளார். கி.பி. 1523ல் அங்கு போந்த இன்னொரு போர்த்துக் கீசிய நாட்டைச் சேர்ந்த கிறித்துவ பாதிரியார்கள் குழு ஒன்று. அங்குள்ள இசுலாமியர் பெரும் எண்ணிக்கையினரான பரவர்களை அடக்கி ஆண்ட சூழ்நிலையையும், அதன் காரணமாக கி.பி. 1532ல், அந்தப் பரவர்களில் பலர் இந்து சமயத்திலிருந்து, ஏசு மதத்திற்கு மதம் மாற்றம் அடைந்த விவரத்தையும் குறிப்பிட்டுள்ளது.[7] மற்றும் கி.பி. 1678ல் இராமநாதபுரம் மன்னர், உடையான் திருமலை சேதுபதி வழங்கிய செப்பு பட்டயமொன்றில் பொறிக்கப்பட்டுள்ள விருதாவளியில், அவர் வல்லமை மிக்க யவன அரசர்களை வென்றதாக தெரிகிறது.[8] இந்த நிகழ்ச்சிகளில் இருந்து பதினாறாம் நூற்றாண்டு வரை இசுலாமியர்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் அரசியல் பிடிப்பு இருந்து வந்த விவரமும், இத்தகைய தொரு குறுநிலக்கிழார் தான் பல்சந்தமாலையின் பாட்டுடைத் தலைவனாகிய கலுபா என்பதும், ஊகிக்க முடிகிறது. அத்துடன் இஸ்லாமிய முதல் தமிழ் இலக்கியமான "ஆயிரம் மசாலா" கி.பி.1572ல் அரங்கேற்றம் பெற்றதில் இருந்து தொடர்ந்து அடுத்து அடுத்து பல இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்துள்ளன.
மேலும், தமிழ் இலக்கியத்தில் "மாலை” என்ற பகுப்பைச் சேர்ந்த சிற்றிலக்கியம் எப்பொழுது படைக்கப்பட்டது என்ற ஆய்வையும் இங்கு மேற்கொள்ளுதல் பயனுடையதாக அமையும் என்பது உறுதி. முதல் முறையாகத் தமிழில் மாலை என்ற சிற்றிலக்கியம், பதினென் கீழ்க்கணக்கு நூலான “திணைமாலை ஐம்பது”க்குப் பிறகு ஆறாவது நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரது “திருவிரட்டை மன்னி மாலையும்” எட்டாவது நூற்றாண்டில் என்ற புலவரது “மூத்த நாயனார் இரட்டை மணிமாலை” “சிவபெருமாள் திருவிரட்டை மணி மாலையும்என்பது உறுதி. முதல் முறையாகத் தமிழில் மாலை என்ற சிற்றிலக்கியம், பதினென் கீழ்க்கணக்கு நூலான “திணைமாலை ஐம்பது”க்குப் பிறகு ஆறாவது நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரது “திருவிரட்டை மன்னி மாலையும்” எட்டாவது நூற்றாண்டில் என்ற புலவரது “மூத்த நாயனார் இரட்டை மணிமாலை” “சிவபெருமாள் திருவிரட்டை மணி மாலையும்” பதினோராவது நூற்றாண்டில் நம்பி ஆண்டார் நம்பியின் “திரு உலா மாலையும்” வெளிவந்துள்ளன. இரண்டாவது குலோத்துங்கன்னைப் பற்றி பன்னிரண்டாவது நூற்றாண்டில் பெரும்புலவர் கூத்தர்பிரானால் “பிள்ளைத்தமிழ் மாலையொன்று இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. (இந்த நூல் கிடைக்கவில்லை) அடுத்து, “மாலைகள்” இலக்கியங்கள் பதினைந்தாவது நாற்றாண்டில் தான் மிகுதியாகப் படைக்கப்பட்டுள்ளன. திருப் பனந்தான் திருமடத்தைச் சேர்ந்த அம்பலவாண தேசிகர் “அதிசய மாலை”யையும், “நமச்சிவாய மாலை”யையும் யாத்துள்ளனர். அடுத்து, வேதாந்த தேசிகரது, “நவரத்தின மாலை”, “திருச் சின்னமாலை”, என்பன அவை. மணவாள மாமுனிவரது “உபதேச ரத்தினமாலை“ குகை நமச்சிவாயரது “பரமரகசிய மாலை” ஆகியவை பதினைந்தாம் நூற்றாண்டில் குமரகுரு பரரது “இரட்டை மணிமாலை”, “சகல கலா வல்லிமாலை”, அழகிய சிற்றம்பலக் கவிராயரது “தனசிங்கமாலை” சிவப் பிரகாச சுவாமிகளது “நால்வர் நான் மணிமாலை”, “கைத்தல மாலை” “சோணசலமாலை” முதலியன பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இன்னும் பிற்காலத்தில் படைக்கப்பட்ட மாலைகள் பட்டியலை இங்கு குறிப்பிடுவது இயலாத காரியமாகும். காரணம், இஸ்லாமியப் புலவர்கள் மட்டும் இயற்றியுள்ள மாலைகளின் எண்ணிக்கையே இருநூறுக்கு மேற்பட்டவை ஆகும். இதனை இணைப்பு பட்டியலில் காண்க.
பதினாறாவது நூற்றாண்டில் இறுதியில் வாழ்ந்த இசுலாமியப் பெரும்கனான வண்ணப் பரிமள புலவர் அதிசய புராணம் என்ற “ஆயிரம் மசாலா” வைப்படைத்து அளித்தார். அவரை அடுத்து ஆலிப்புலவரது “மி.ராஜ் மாலை”, கனக கவிராயரது கனகாபிஷே, மாலை, உமறுப்புலவரது “சீறாப்புராணம்”, பனீ அகமது மரைக்காயரது “சின்னச்சீறா”, போன்றவை தோன்றின. இவைகளுக்கு எல்லாம் முன்னோடியாக பதினைந்து பதினாறாவது நூற்றாண்டில் பல்சந்த மாலை புனையப்பட்டு இருக்க வேண்டும் என்பதும் இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒருமித்த கருத்தாகும். ஏற்கனவே பெளத்த, சமண, சைவ, வைணவ நெறிகளை தமிழ் இலக்கிய வார்ப்புகளாக அழகுத்தமிழில் வடித்து தமிழுக்கு அணி சேர்த்து இருந்த அரிய பணியை, தமிழக இசுலாமியரும் இந்த நூற்றாண்டுகளில் இருந்து தொடர்ந்து வந்துள்ளனர். இதனால், இஸ்லாமிய நெறிகளைக் கூறும், நூற்றுக்கணக்கான சிற்றிலக்கியங்கள், பேரிலக்கியங்களை படைத்து இஸ்லாமியத் தமிழ் என்ற தனியொரு பகுப்பினையும் தமிழுக்குத் தந்துள்ளனர்.
இசுலாமியத் தமிழர் என்று தொகுத்து அழைக்கும் வகையில், மக்கட் பிரிவினராக அவர்கள் மாறியதும் அவர்களது வாய்மொழியான தமிழ்மொழி, தாய் மொழியாகியது. அதனைப் பயின்று பேசி, ஆய்ந்து அகம் மகிழ்ந்து கன்னித்தமிழில் கனிவுறும் காவியங்கள், புனைய வேண்டும் என்று வேட்கையும் அவர்கட்கு எழுந்தது. காரணம் அப்பொழுது காப்பியங்களும் சிற்றிலக்கியங்களும், தமிழில் படைக்கப்பட்டு அவை தமிழ் மக்களால் பெரிதும் உவந்து ஒதப்பட்டு வந்தன. இறை மணங்கமழும்
தேவாரமும் திருப்பாசுரங்களும் இனிய இசையோடு முழங்கின. அவைகளைக் கேட்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நபிமார்களது வாழ்வும், நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்கள் அருளிய உபதேசங்களும் (ஹதீஸ்களும்) அவர்களது நெஞ்சத்தை நெருடின. திருக்குர் ஆனும். தப்ஸீரும், ஹதிஸீம் தாய்மொழியான தமிழில் இருந்தால் இதயத்திற்கு இன்னும் நெருக்கமாகவும் இதமாகவும் இருக்கும் என்ற எண்ணங்கள் அவர்களிடம் இழையோடின.
அதுவரை, அன்றாட வாழ்க்கையில் தொழுகை, பாராயணம், பிரார்த்தனை ஆகியவைகளுக்காக அரபு மொழியையும் திருக்குர்ஆனையும், ஆழமாகப் பயின்று வந்த இசுலாமியப் பெருமக்கள், தமிழ்மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய பகுப்புக்களுக்கான ஏடுகளையும் ஆர்வமுடன் படித்தனர். அதன் முடிவு, இசுலாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என பெருமை கொள்ளும் வகையில் இலக்கியங்களைப் படைத்து தாய் மொழிக்கு அணிவித்து அழகு
பார்த்தனர். சுவைத்துச் சுவைத்து இன்ப சுகம் கண்டனர். இசுலாத்தின் இலக்கான ஏகத்துவத்தை முழக்கப்பிடும் படைப்புகளாக, இறைத்துாதர்கள் தாவூது நபி, சுலைமான் நபி, இபுராகிம் நபி, மூஸாநபி, யூசுப்நபி, முகம்மதுநபி, ஆகியோர் பற்றிய புராணங்கள், அண்ணல் முகம்மது (அல்) அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றிய காவியங்கள், முகையதீன் அப்துல் காதர் ஜீலானி, ஏர் வாடி சுல்தான் சையது இபுராகீம் (அலி), ஆஜ்மீர் குவாஜாசாகிப் (வலி), நாகூர் சாகுல் ஹமீது ஆண்டகை - ஆகிய இறைநேசர் பற்றிய இலக்கியங்கள்; இன்னும் ஏராளமான சிற்றிலக்கியங்கள் — இவை போல்வன.
அந்தாதி, அம்மானை, அலங்காரம், ஏசல், கலம்பகம், கிஸ்ஸா, கும்மி, குறவஞ்சி, கீர்த்தனை, கோவை, ஞானம், பதம், பள்ளு, படைப்போர், பிள்ளைத்தமிழ், சதகம், சிந்து, மஞ்சரி, மசாலா, மாலைகள், முனாஜாத், நாமா, லாவணி, வண்ணம், வாழ்த்து என்ற பல்வேறு சுவையும் துறையும் கொண்ட இலக்கிய வடிவங்கள் இசுலாமியத் தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்டன. இவைகளில் கிஸ்ஸா, முனாஜாத் மசாலா, நாமா, படைப் போர் என்பன முழுவதும் தமிழுக்குப் புதுமையான கலைவடிவங்கள் இலக்கியப்படைப்புகள். கன்னித்தமிழுக்கு இசுலாமியர் வழங்கிய காணிக்கைகளாக காலமெல்லாம் கட்டியங் கூறி நிற்கின்றன அவை. இத்தகைய எழில்மிகு இலக்கியங்களை இசுலாமியப் புலவர்கள் படைப்பதற்கு அவர்களது தமிழுணர்வு காரணமாக இருந்தாலும் அவைகளை அன்று ஆவலுடன் ஏற்றுக்
கொள்வதற்கு, அனைத்து இசுலாமியர் மட்டுமல்லாமல், அன்றைய தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதுமே முனைந்து நின்றது. இல்லையெனில் இத்துணை இலக்கியங்கள் தமிழக இலக்கிய வரலாற்றின் அடுத்தடுத்து தலையெடுத்து இருக்கமுடியாது. அதிலும் குறிப்பாக வடுகர்களது ஆட்சியில் வடமொழியும், தெலுங்கும், அரசியல் ஆதரவு பெற்ற அரசு மொழியான பேறு பெற்ற நிலையில், தமிழுக்கு இவ்வளவு சிறப்பா? அதிலும் தமிழ் இலக்கிய உலகிற்கு புதியவர்களான தமிழக இஸ்லாமியப்புலவர்களால் இதற்குச் சான்றாக இரண்டு வரலாற்று நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். நமக்கு கிடைத்துள்ள இஸ்லாமிய இலக்கியங்களில் தொன்மையாகக் கருதப்படும் “ஆயிரம் மஸாலா” என்ற அரிய நூல் மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்தினர் முன் கி.பி. 1572ல் அரங்கேற்றம் பெற்றுள்ளது. இதனை அந்நூலாசிரியரது பாயிரம்,
“அந்தமுறு மதுரைதனில் செந்தமிழோ"
சங்கத்தில் அரங்கம் ஏற்றி — — —”
என அறிவிக்கின்றது. மற்றொரு நிகழ்ச்சி இந்நூலை அடுத்து இஸ்லாமிய தமிழ் உலகிற்கு கிடிைத்த இணையற்ற இலக்கியக் கொடை ஆலிப்புலவரது மிஹராஜ் மாலையாகும். இதனைப் புனைந்த செவ்வல் மாநகரின் செந்தமிழ்ப் புலவர் இஸ்லாமியர்கள் மிகுதியாக வதியும் கோட்டாறு நகரில் அரங்கேற்றுவதற்கு ஆசைப்பட்டார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். என்றாலும் அன்றைய நிலையில் இஸ்லாமியருக்கு இலக்கியப் படைப்பு ஒன்றின் அரங்கேற்றம் என்பது அவர்களுக்கு முற்றும் புதுமையான செயலாக இருந்தது. அதனால் அம்முயற்சியில் ஈடுபாடும் இணக்கமும் இல்லாது இஸ்லாமியர் காணப்பட்டனர். என்றாலும் அதே நகரில் வாழ்ந்த இந்து கைக்கோளர் தலைவரான பாவாடைச் செட்டியார் என்ற பைந்தமிழ் ஆர்வலரது முயற்சியினால் கி.பி. 1590ல் கோட்டாறு கைக்கோளர் கூடிய சபையில் சிறப்பாக அரங்கேற்றம் பெற்றது. இந்நிகழ்ச்சிகளை இன்றும் நினைக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் தமிழ் போல இனிக்கின்றது. தாய்மொழியான தமிழ், சாதி, இனம், மதம் ஆகிய குறுக்கு கோடுகளைக் கடந்து நாயக மொழியாக விளங்கி வந்துள்ளதை இந்த நிகழ்ச்சிகள் நினைவூட்டுகின்றன. திறமான புலமையெனில் தமிழோர் பாராட்டி பெருமை செய்தல் இயல்புதானே.
இதனை மதுரைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவா தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அரபு மொழியில் பயிற்சி பெற்றார் அல்லர், அறபு எழுத்துக்களை வாசிக்கவே அறிந்து இருந்தனர். இவர்களிடையே சமயப் பற்றை உண்டாக்கும் பொருட்டு இவர்களுக்கு இலகுவில் விளங்கக்கூடிய தமிழ்மொழியில் நூல்கள் எழுத வேண்டி நேர்ந்தது. எனவே இசுலாமியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட தமிழ், நூல்கள், தமிழ் நாட்டு முஸ்லீம்களுக்கு பயன்படக்கூடிய முறையில் இயற்றப்பட்டன. இந்நூல்கள் பெரும்பாலும் அரபு மொழியில், உள்ள இசுலாமிய முதல் நூல்களையே பின்பற்றி இயற்றப்பட்டன” என பிறிதொரு காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
[9]
ஆனால் இது தொடக்கநிலை. பின்னர் அரேபியர்களுக்கும் தமிழ்மக்களுக்கும் ஏற்பட்டு இருந்த கலாச்சார வணிகக் கலப்பால், மொழிநிலையிலும், இலக்கிய நிலையிலும் தமிழ்ச்சமுதாயம், பல புதிய கலாச்சாரக் கூறுகளைத் தன்னுள் ஐக்கியப்படுத் திக்கொண்டது.அரபியர்கள் பரப்பிய இசுலாமிய சமயம் பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல், மெல்ல மெல்ல தமிழ்ச் சமுதாயத்தில் தங்கள் சுவடுகளைப் பதித்து வந்தது. — — — இசுலாமிய கலாச்சாரப் பாதிப்பால், தமிழ் இசுலாமியப் பண்பாட்டின் ஒருசில இணைப்பாலும், பல இசுலாமியத் தமிழ் இலக்கியங்கள் தமிழ் மண்ணில் பிறப்பெடுக்கத் தொடங்கின....” என வரைந்துள்ளார். காரணங்கள் எதுவானாலும் கன்னித் தமிழுக்கு புனையப்பட்டுள்ள இஸ்லாமியரது இலக்கிய்த் தொண்டு என்ற அழகுத் தோரண்ங்கள் எண்ணிறந்தன என்பது வரலாறு.
இவைதவிர, தங்களது மூதாதையரது இலக்கியக்கருவூலங்களை மறுத்து, ஊமையராய், குருடர்களாய், செவிடர்களாய் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த அன்னியச் - சூழ்நிலையில், இசுலாமியத் தமிழ்ப்புலவர்கள், தங்களது தேர்ந்த மொழியாற்றலை, தெளிந்த சமய உணர்வுகளை வெளியிடுவதற்கு மட்டுமல்லாமல் தமிழ்மக்கள் அனைவரது தளர்ந்த உள்ளங்களில் தமிழ்ப்பற்றை ஊட்டி, உயிர்ப்பிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கிலும் உந்துதலிலும் இந்த இலக்கியீங்களை அவர்கள் படைத்துள்ளனர். தொட்டாலே கைமணக்கும் தூய தமிழ்ப் பாக்களால் தொடுக்கப்பட்ட அவைகளில் பல, காலத்திற்கு எட்டாம்லே மறைந்து விட்டன.
இசுலாமியத் தமிழ்ப்புலவர்கள் தங்களது இலக்கியங்களில், தாங்கள் உணர்த்தப்போகும் செய்திகளுக்கு அரபிய, பாரசீக. துருக்கி, உருது சொற்களைக் கொணர்ந்து, தமிழ்மொழியின் யாப்பிற்கு இயைந்தவாறு முழுக்க முழுக்க அதே சொற்களை உரிய பொருள் சிதைவிருமல் இருப்பதற்கு அப்படியே
[10] கையாண்டு இருக்கின்றனர். சில சமயங்களில் சிறு மாறுதல்களுடனும், அவைகளைப் புகுத்தி இருப்பதை பல இலக்கியங்களில் காணக்கிடக்கின்றன.
அசர், பஜர், லுஹற் :- பாரசீக சொற்கள்
‘,பொருளில் அசர் லுகர் பஜறுளவும் பரிபூரணமாய் -
– ஞானமணிமாலை
அத்தஹிய்யாத் - பாரசீக சொல்
"அத்தகி யாத்தி ஆர்ந்திரு பொருள்கான்
– மி.றாசுமாலை பாடல் 593
அமான் - பாரசீக சொல்தமிழில் அம்சாரியை பெற்று "அமானம்" ஆகியுள்ளது.
"கன்திரு. மகனாக கவிதை உள்ளிடத்து அமானம்
- முகையதீன் புராணம் - பாடல் 10:23
ஹாலிம் - அரபி சொல் தமிழில் "ஆசிம்" என திரிபு பெற்றுள்ளது.
"நிலமிகை ஆசிம் குலம்பெயர் ஒங்கு..."
– சீறாப்புராணம் - பாடல் 687
இஜ்ஜத் - அரபி சொல்
"அரத்தொடும் இஜ்ஜத்தாம் எனப்பகர்ந்தனர்
- முகியத்தின் புராணம் - பாடல் 44:32
வலிமா - அரபி சொல் தமிழில் ஒலிமா என திரிபு பெற்றுள்ளது.
"வந்தவர் விருப்பிறண்ணும் வகை ஒலிமாவும் ஈந்தார்
– நாகூர் புராணம் - பாடல் 8:122
ஹதிஸ் - அரபி சொல் தமிழில் "கதிது" என திரிபு பெற்றுள்ளது.
"சொல்லரும் புகழ் தூதர் கதீதுகள்
சின்னச் சீறா - பாடல்: 34:155
குறைஷ் – அரபி சொல்
"குறைசியப் குலத் தொரு மதனை
- சீறாப்புராணம் - பாடல் 4:63
லக்காத் - பார்சி சொல்
"பரிகடனென்றும் சக்காத்துப் பொருளலால்
- குதுபுநாயம் - பாடல்:243
குத்துபா - பார்சி சொல்
“சொல்லிய வணக்கத்திற்குரிய கொத்துபா பள்ளி....
-புதுகுஷ்ஷாம். பாடல். 47:49
தஸ்பீ - அரபி சொல்
“நிறத்தகு மனியின் செய்த நெடுந் தசு பீகு தன்னை
முகியுத்தீன் புராணம் - பாடல். 11:41
இவை போன்ற பிறமொழிச் சொற்கள் ஏற்கெனவே தமிழ் வழக்கில் இருந்த காரணத்தாலும், அவைகளை அவர்கள் நன்கு புரிந்து கொள்ள இயலும் என்ற காரணத்தினாலும், இசுலாமியத்தமிழ்ப் புலவர்கள் இத்தகு அரபி, பாரசீக சொற்களை சரளமாக பயன்படுத்தி உள்ளனர்.
“அள்ளல உஹதாக நின்றமரம்
ஆதி ரகுமத்தாய்ப் பூத்துப் பூத்து
வல்லற் கொடியாகப் படர்ந்து காப்த்து
பகுதி அஹதாகக் காலியாமே
சொல்லத் தகுமல்லல இப்பொருளை
சுருட்டி மறைக்கின்றேன் ஷரகுக்காக
எல்லை யறிந் துன்னை வணங்க வல்லவர்க்கு
இரங்கி இருப்போனே துணை செய்வாயே”
- தக்கலை பீர் முகமது (வலி)
“நல்ல ஷரி அத்து லித்தாச்சுது
நலமாம் தரீக்கத்து மரமாச்சுது
எல்லை ஹகீக்கத்து பூவாச்சுது
இலங்கும் கனியாச்சு மஃரிபத்து”
- நூகுலெப்பை ஆலிம்
இன்னும் ஆர்வம் மிகுதியாக அரபிக் கசீத்தாக்களை அப்படியே தமிழ்ப்பாடலைப் போன்றே பாடிப்படைத்து மகிழ்ந்த புலவர்களும் உண்டு.
மேலும் அரபி கஸீதாக்களை அப்படியே அழகும் பொருளும் வடிவும் வழக்கும் மாறாமல், தமிழில் வடித்த செய்திகளும் உண்டு. பூஸரி (ரஹ்) அவர்களது புர்தாஷரிபு அரபி பகுதி,
“கஸ்ஸஹ்ரி/ ஃபீதர ஃபின்/வல் பத்ரி/ஃபீ ஷரஃ பின்
வல்பஹ்ரி/ ஃபீகரயின் / வத்தஹ்ரி/ ஃபீ ஹிமரி.”
நமது அருமைத் தமிழில்-அதே கண்ணி,
“மலர் போல்வார் மென்மையிலே மதிபோல்வார் மேன்மையிலே
அலை போல்வார் ஈகையிலே ஆண்மையின்ரிற் காலமொப்பார்”
மதுரை-கர்திறு முகைய்தீன் மரைக்காயர்
என தூய தமிழ்ச் சர்மாகத் தொடுக்கப்பட்டுள்ளது.
இதனைப் போன்றே உருதுமொழி கவிஞர்களது. “கஜல்களும்” தமிழ்மொழிக் கவிகளாக இசுலாமியப் புலவர்களால் ஏற்றம்பெற்றுள்ளன. இத்தகைய மொழிக்கலப்பால் இசுலாம்வளர்த்தது. இனிய தமிழ் இல்க்கியங்கள் பெருகின. மேலும், இலக்கியத்தமிழ் பயன்பெற்றதுடன் இயல் தமிழும் சொல் வளம் பெற்றது.
இசுலாமியப் புலவர்வழி நின்று, தமிழக இசுலாமியர், தங்களது அன்றாட வாழ்க்கையில், ஏராளமான அரபி, பார்சி, துருக்கி, உருதுச் சொற்களைப் பயன்படுத்தினர். இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். அவைகளில் பட்டியல்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களது மொழி வழக்கில் இனிய தூய தமிழ்ச் சொற்களும் இருந்து வருவது பெருமைப் படத்தக்கதாக உள்ளது. தமிழக இசுலாமிய மக்கள் இந்த நற்பணியை, பெருமையுடன் பாடுகிறார் ஒரு புலவர்.
பாத்திரத்தை ஏனம் என்போம்
பழையதுவை நீர்ச்சோறு என்போம்
ஆத்திரமாய், மொழி குழம்பை
அழகாக ஆணம் என்போம்
சொத்தை யுரை பிறர், சொல்லும்
சாதத்தை சோறு என்போம்
எத்தனையோ தமிழ் முஸ்லிம்
எங்களுயிர்த் தமிழ் வழக்கே!
-நாகூர் புலவர் ஆபீதீன்
இன்னும் இவைபோல, தொழுகை, நாச்சியார், பசியாறுதல், வெள்ளாட்டி, குடிப்பு, பெண்டுகள், நடையன், நோவு போன்ற தனித்தமிழ்ச் சொற்களும் தமிழக இசுலாமியரது வழக்கில் இன்றும் இருந்து வருவது தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதாகும்.
↑ Philips H. Kitti – History of the Arabs (1977)
↑ மதுரை பல்கலைக் கழகம் - இஸ்லாமியத் தமிழ் இலக்கிய தொகுதி I (1986) பக்கம். 87.
↑ புலவர் நாயகம் நிருபச் செய்யுட்கள் (ஹஸன் பதிப்பு) 1980 பக்கம். 65-66
↑ Md. Hussain Nainar - Arab geographers Knowledge of S. India (1942) p. p. 44.116
↑ Hussiani Dr. S. A. O. History of Pandya Country (1972) p.47
↑ Arunachalam- History of Pearl Fishery in Tamil Coast p. 92, 94
↑ M.L. James – The Book of Duarte Barbosa, (London)vol Il p. p. 115 - 23
↑ A. S. S. vol. 4 No : 8 p : 59
↑ 1. ஜான் சாமுவேல் - பண்பாட்டுக் கலப்பும் இலக்கிய ஒருமை யும் (1986) பக்: 104
↑ சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனம் - இஸ்லாமுய இன்பத்தமிழும் (1976) பக் 19.