←பத்தினித் தெய்வம்

இலங்கைக் காட்சிகள்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்குறிஞ்சி வளம்

கண்டி விழாக்கள்→

 

 

 

 

 


437343இலங்கைக் காட்சிகள் — குறிஞ்சி வளம்கி. வா. ஜகந்நாதன்

 

5 குறிஞ்சி வளம்
கொழும்பு நூதன சாலையில் கண்டியரசன் சிங்காதனமும், புத்தர் திருவுருவங்களும், பல ஓவியங்களின் மாதிரிகளும் இருந்தன. இன்னும் பல அரிய பொருள்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கண்டு களித்தேன். ஆயினும் என் உள்ளத்தில் ஊன்றி நின்றது பத்தினித் தெய்வத்தின் திருவுருவந்தான்.
மியூசியத்தைப் பார்த்துவிட்டு ஓரன்பர் வீட்டில் விருந்து உண்டேன். மறு நாள் ஞாயிற்றுக்கிழமை தான் கண்டியில் பாரதி விழா முதலிய நிகழ்ச்சிகள் நடக்க இருந்தன. ஆகவே, அன்று மாலையே புறப்பட ஏற்பாடுகள் செய்தார்கள். நண்பர் கணேஷ் தம் காரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். எங்களுடன் வீரகேசரி ஆசிரியர் திரு ஹரனும், வீரகேசரி வார இதழாசிரியர் திரு லோகநாதனும் புறப்பட்டார்கள். மாலை ஏழு மணிக்குப் புறப்பட்டது கார்.
இலங்கை ஒன்பது மாகாணங்கள் அடங்கியது. கொழும்பு மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தது. கண்டி மத்திய மாகாணத்தைச் சார்ந்தது. மத்திய மாகாணம் முழுவதும் மலைப் பிரதேசம். கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகளை அங்கே காணலாம் என்று அன்பர்கள் சொன்னார்கள். ரப்பர்த் தோட்டங்கள். கோகோத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் ஆகிய பல தோட்டங்கள் அங்கே இருக்கின்றன என்றார்கள்.
காரில் போகும்போது அவற்றையெல்லாம் பார்க்கலாம் என்று எண்ணினேன். இயற்கை வளம் சூழ்ந்த குறிஞ்சி நிலத்தினூடே கார் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. கார் போன வேகத்தினால் சாலைகளின் சிறப்பு எனக்கு நன்றாக விளங்கியது. வர வரக் குளிர்ச்சி மிகுதியாகத் தெரிந்தது. ஆனால் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க முடியவில்லை. அப்போது இருட்டிவிட்டது.
"அதோ ஒரு ரப்பர்த் தோட்டம்" என்று நண்பர் கணேஷ் காட்டினார்.
அந்த இருட்டில் ரப்பர்த் தோட்டம் எனக்கு எங்கே தெரியப்போகிறது? நெட்டை நெட்டையாக மரங்கள் நின்றது மாத்திரம் தெரிந்தது. அடர்த்தியான காடுகள். அவற்றின் அழகைக் காணக் கதிரவனுடைய கருணை இல்லாமல் முடியுமா? வண்டி பல காடுகளையும் தோட்டங்களையும் மலைப்பகுதிகளையும் ஆற்றையும் கடந்து சென்றது. நான் ரப்பர் மரத்தையும் காண முடியவில்லை; கோகோ மரத்தையும் காணவில்லை. ஆனாலும் அவற்றைத் தாண்டிச் சென்று கொண்டே யிருந்தேன். 'விடிந்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி விடுகிறது' என்ற நம்பிக்கை இருந்ததனால், அந்த இருட்டில் அவற்றைப் பார்க்கக் கூடவில்லையே என்ற வருத்தம் உண்டாகவில்லை.
கண்டிக்கு வந்து சேரும்போது இரவு 11-30 மணி. அன்று இரவு கிரிமெட்டியா என்ற இடத்தில்  தங்குவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆயினும் போகிற வழியில் கண்டியில் பார்லிமெண்டு அங்கத்தினராகிய ஸ்ரீ இராமாநுஜத்தின் வீட்டில் இறங்கிச் சில நிமிஷங்கள் இருந்தோம். கண்டித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அவர். அவர் மனைவி ஒரு டாக்டர். அவ்விருவரும் பல அரிய தொண்டுகளைச் செய்து வருகிறார்கள். சிறிது நேரம் அங்கே இருந்துவிட்டுக் கிரிமெட்டியாவுக்குப் போனோம்.
கிரிமெட்டியா ஒரு பெரிய தோட்டம். அதன் தலைவர் ஸ்ரீ வைத்தியலிங்கம் நல்ல பண்பாடு பெற்றவர். முன்பு இலங்கை மேல்சபையில் அங்கத்தினராக இருந்தவர். நல்ல செல்வாக்கு உள்ளவர். தமிழில் ஆராத காதல் உடையவர். எங்களை மிக்க அன்போடு வரவேற்று உபசரித்தார். அவருடைய பங்களாவும் தோட்டமும் முன்பு வெள்ளைக்காரருக்குச் சொந்தமாக இருந்தன. லார்டு மௌண்ட்பேட்டன் துரை அங்கே வந்து சில காலம் தங்கியிருந்தாராம். அப்படியானால் அந்தப் பங்களாவில் எத்தனை சிறப்பான வசதிகள் இருக்குமென்று ஊகித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.
தேயிலைத் தோட்டத்தின் மத்தியில் ஒரு மலையின் மேல் அந்தப் பங்களா அமைந்திருந்தது. நான் தேயிலைச் செடியையே பார்த்ததில்லை. மலைமேல் எவ்வளவு உயரத்தில் அந்த மாளிகை இருக்கிறதென்று பார்க்க ஆசைப்பட்டேன். அங்கே தேயிலையைப் பக்குவம் செய்யும் தொழிற்சாலையும் இருக்கிறதென்று சொன்னார்கள். அதையும் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அப்போது இரவு ஒரு மணி. நெடுந்தூரம் பிரயாணம் செய்து வந்திருக்கிறோம். ஆகவே, உணவு கொண்டு படுத்தோம். 'நம்முடைய ஆசைகளெல்லாம் இப்போதைக்குத் தூங்கட்டும். காலையில் எழுந்து எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்' என்று என் மனசுக்குச் சொல்லி அதைத் தூங்கவைத்து நானும் சுகமாகத் தூங்கினேன். 
கண் விழித்தேன். சுற்றிலும் உள்ள கண்ணாடிக் கதவுகளின் வழியே வெளிச்சம் பரவியது. விடிந்து விட்டதென்று தெரிந்தது. செங்கதிரவன் - எழுந்திருந்து நெடு நேரமாகிவிட்டதென்பதை உணர்ந்தேன். மெல்ல எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். அந்தப் பங்களாவின் வாசலில் வந்து நின்றேன்.
ஆ! அந்த அழகை என்னவென்று சொல்வது! அருகில் நிற்பவர்கள் என்னைச் சந்தேகிக்கும்படி, 'ஹாஹா!' என்று வாய் விட்டுக் கூறினேன். எதிரே அடுக்கடுக்காக மலைகள். மலைச்சாரலில் மேகப்படலம் படர்ந்திருந்தது. சூரியன் தன் கிரணங்களை வீசினான். அதனால் அந்தப் படலம் மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது. மலையென்னும் கன்னி உறக்கம் நீங்கித் தன்மேல் போர்த்திருந்த போர்வையை மெல்ல மெல்ல விலக்குவதுபோலத் தோற்றியது. கிரிமெட்டியா ஒரு மலைப் பகுதி. அதைச் சுற்றிலும் பள்ளங்கள். அவற்றையடுத்து மலைச்சாரல்கள். அந்த மலைச் சாரல்களில் படிக்கட்டைப்போல நெல் வயல்களை அமைத்துப் பயிர் செய்திருந்தார்கள். தண்ணீர் அருவியிலிருந்து வற்றாமல் வந்துகொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற காட்சி. வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நின்றேன். 
"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று ஹரன் கேட்டார். இன்ப மதுவை உண்டவனைப் போல அவருக்கு நான் காட்சியளித்திருக்க வேண்டும்.
எதிரே சூரியன் தன் எழிற்சோதியினால் உலக முழுவதற்கும் மெருகு ஏற்றிக்கொண்டிருந்தான். கிடு கிடு பாதாளமும், மிகமிக உயர்ந்த மலைக் காடுகளும் கண்ணுக்கு விளக்கமாகத் தெரிந்தன. மலையின்மேலே தோட்டங்கள் அடர்த்தியாகத் தெரிந்தன. மலையைச் சுற்றிச் சுற்றி ஏறவும் இறங்கவும் அமைந்த சாலையைப் பார்த்தேன்.
"இராத்திரி இந்தச் சாலை வழியாகவா வந்தோம்?" என்று கேட்டேன்.
"ஆம்; இங்கே சாலைகள் முதல்தரமானவை. நம்முடைய சாரதியும் மிகவும் கெட்டிக்காரன்" என்றார் நண்பர் கணேஷ்.
எதிரே சூரியனையும் மலைத்தொடரையும் பார்த்தேன். “அதோ பாருங்கள். அழகுத் தெய்வம் கோயில் கொண்டிருக்கிற கோலத்தைப் பாருங்கள். முருகன் திருவுருவம் இதுதான். நக்கீரர் இப்படிப்பட்ட காட்சிகளை யெல்லாம் பார்த்து மனம் நெகிழ்ந்து தான் திருமுருகாற்றுப்படையைப் பாடியிருக்கிறார். சங்க நூல்களிலே குறிஞ்சி நிலத்தைப்பற்றிப் புலவர்கள் எவ்வளவு அழகாக வருணித்திருக்கிறார்கள்! அவற்றின் பொருள் எனக்கு இப்போதுதான்  விளங்குகிறது. இப்போது தமிழ் நாட்டில் அந்த அழகைக் காண இயலாது. இதோ இருக்கிறது சங்க நூலில் கண்ட குறிஞ்சி நிலம். இதோ இருக்கிறது குறிஞ்சிக் கிழவனாகிய முருகனுடைய அழகுக் கோலம்!"
நான் சொற்பொழிவு ஆற்றவில்லை. உணர்ச்சி மிகுதியால் பேசினேன். 
பங்களாவைச் சிறிது சுற்றிப் பார்த்தேன். தேயிலைச் செடியைப் பார்த்தேன். சிறிய நந்தியாவட்டைச் செடியைப்போலக் குத்துக் குத்தாகத் தேயிலைச் செடிகள் இருந்தன. அந்தச் செடியை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கவாத்துச் செய்வார்களாம். அப்போதுதான் நல்ல கொழுந்தாக விடுமாம். கடல் மட்டத்துக்கு 3000 அடி உயரத்தில் தேயிலை வளர்கிறது. ஒரு செடி நாற்பது ஆண்டு வரையில் பலன் தரும். முன்பு இலங்கையில் அதிகமாகக் காபித் தோட்டங்களே இருந்தனவாம். இடையிலே ஒரு பூச்சி வந்து எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அதன் பிறகே தேயிலையை எங்கும் பயிரிட்டார்கள். இப்போது இலங்கைக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் பண்டங்களில் முக்கியமானது தேயிலை.
முன்பு இலங்கைத் தோட்டங்கள் யாவுமே வெள்ளைக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இப்போது சிங்களவர்களும் தமிழர்களும் பல தோட்டங்களை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். 
இயற்கை வளம் மிக்க மலைகளில் தேயிலைத் தோட்டங்கள் கொழுந்திலே பொன்னை வைத்திருக்கின்றன. நான் தங்கியிருந்த கிரிமெட்டியாத் தோட்டம் 450 ஏகராப் பரப்புடையது. "கிரிமெட்டியா" என்றால் என்ன பொருள்?" என்று விசாரித்தேன். ஊருக்கு எப்படிப் பெயர் வந்தது என்பதை விசாரிப்பதில் எனக்குத் தனி விருப்பம் உண்டு. 
கிரிமெட்டியா என்றால் வெள்ளை மண் என்று அர்த்தம்" என்றார்கள்.
அதைக் கேட்டுவிட்டுச் சும்மா இருக்கத் தோன்றுகிறதா? "கிரிமெட்டியாவுக்கும் வெள்ளை மண்ணுக்கும் என்ன சம்பந்தம்?" என்று அடுத்த கேள்வி பிறந்தது. 
"கிரி என்றால் சிங்களத்தில் பால் என்று அர்த்தம்."
"ஓ. இப்போது விளங்கிவிட்டது. வெள்ளைக் காகிதத்தைப் பால் காகிதம் என்று தமிழ் நாட்டில் சொல்வதுண்டு. அதுபோல வெள்ளை மண்ணைக் கிரிமெட்டியா அல்லது பால் மண் என்று சொல்கிறார்கள் போலும்! கீரம் என்பது வடமொழியில் பாலைக் குறிக்கும் சொல். அதுவே கிரி என்று வந்திருக்கலாம். மெட்டியா என்பது மிருத்திகா என்ற வட சொல்லின் திரிபாக இருக்கவேண்டும்" என்று சொல்லாராய்ச்சியில் சிறிது நேரம் இறங்கிவிட்டேன். கண்முன்னே அழகுக் காட்சிகள் பல இருந்தன. அவற்றைக் கண்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் போதே இந்தச் சொல்லாராய்ச்சி இடைப் புகுந்தது. எல்லாம் வாசனைப் பழக்கம். தேயிலையைப் பாடம்பண்ணும் தொழிற்சாலையை ஆறுதலாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆகவே, காலை உணவு உட்கொண்டு கண்டியை நோக்கிப் புறப்பட்டேன்.


 முதல் நாள் இரவு கிரிமெட்டியாவுக்குப் போகும் போது அந்தச் சாலையையும் அதன் இருமருங்கிலும் உள்ள காட்சிகளையும் பார்க்க இயலவில்லை. இயற்கைத் தேவி திரைக்குப் பின்னே நின்ற தேவமங்கையைப் போல இருந்தாள். உடம்பெல்லாம் போர்த்து மறைந்து நின்ற கோஷா மகள்போல இருந்தாள். இப்போது இருள் போய் ஒளி வந்துவிட்டது. கண்ணை அகல விழித்துப் பார்த்தேன்.
சாலை வளைந்து வளைந்து சென்றது. மலையைச் சுற்றிச் சுற்றிக் கார் இறங்கியது. சற்றுத் தவறிவிட்டால் கிடுகிடு பாதாளத்தில் விழ வேண்டியதுதான். ஆனால் அந்தச் சாலை மிக நன்றாக அமைந்திருந்தது. காரில் பிரயாணம் செய்கிறவர்களுக்கு இலங்கையிலுள்ள சாலைகள் மிகவும் ஏற்றவை.
தேயிலைத் தோட்டங்கள் 3000 அடி உயரத்தில் இருந்தன. கீழே வரவரத் தேயிலை மறைந்தது; ரப்பர்த் தோட்டங்கள் வந்தன. மிக உயரமாக வளர்ந்திருந்தன. ரப்பர் மரங்கள். அவற்றின் பட்டையை மிக மெல்லியதாகச் செதுக்கியிருக்கிறார்கள். அப்படிச் செதுக்கின இடத்தின் வழியே ரப்பர்ப் பால் சுரக்கிறது. பட்டையைச் செதுக்கின வழியின் முடிவில் ஒரு கொட்டங்கச்சியைப் பொருத்தியிருக்கிறார்கள். செதுக்கின சுவட்டின் வழியே சென்று கடைசியில் அந்தக் கொட்டங்கச்சியிலே போய் ரப்பர்ப் பால் வடிகிறது. ஒவ்வொரு நாளும் அந்தப் பாலை எடுத்துச் சேகரிக்கிறார்கள். 
கோக்கோத் தோட்டங்கள் இரண்டாயிரம் அடி உயரத்தில் இருந்தன. அதன் இலைகள் சற்று  அகலமான மாவிலைபோல இருக்கின்றன. அடர்ந்து செறிந்த தழையுடையவை, காய்கள் பல நிறங்களையுடையனவாய்த் தொங்குகின்றன. அவை பார்வைக்குப் பங்களூர்க் கத்தரிக்காய் போலத் தோன்றுகின்றன. காய்கள் பல நிறமாக இருந்தாலும் பழுத்தால் எல்லாம் மஞ்சள் நிறம் ஆகிவிடும். கோக்கோக் காய்க்குள் வாதாங்கொட்டை மாதிரி கோக்கோப் பருப்புகள் இருக்கின்றன. அவற்றைப் பக்குவமாகப் பொடி செய்து கோக்கோ தயாரிக்கிறார்கள். இலங்கையில் சாகொலேட் - தான் செய்கிறார்களாம். ஸ்விட்ஜர்லாந்தில்தான் கோக்கோ செய்கிறார்களாம். அங்கேதான் அதற்கு வேண்டிய சீதோஷ்ண நிலை இருக்கிறதாம். கோக்கோ செப்டம்பர் அக்டோபர் மாதத்தில் ஒரு தரமும் கோடைக்காலத்தில் ஒரு தரமும் காய்க்கும். செப்டம்பர் மாதத்தைக் காலம் என்று சொல்கிறார்கள். அப்போது மிகுதியாகக் காய்க்கும். 
கோக்கோத் தோட்டங்களிலே அங்கங்கே மிளகுக்கொடி ஓடிக் கடந்தது. தென்னை, பலா, கமுகு மரங்கள் எங்கே பார்த்தாலும் இருந்தன. மலையின் மேல் அடர்த்தியாகத் தென்ன மரங்களைப் பார்த்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். எல்லா மரங்களும் மிகமிக உயரமாக வளர்ந்திருந்தன. அந்தத் தென்ன மரங்களையும் கமுக மரங்களையும் பலா மரங்களையும் கண்ட போது சீவகசிந்தாமணிப் பாட்டு ஒன்று என் நினைவுக்கு வந்தது.
ஏமாங்கதம் என்ற நாட்டைத் திருத்தக்கதேவர் வருணிக்கிறார். அங்கே இயற்கை வளம் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தென்ன மரத்தோப்புகளும் கமுகந் தோட்டமும் பலாமரச் சோலையும் ஒன்றோடு ஒன்று நெருங்கிச் செழித்திருந்தன. தென்ன மரங்கள் மிக உயரமாக வளர்ந்திருந்தன. அவற்றைவிடச் சற்றுத் தாழ்வாகக் கமுக மரங்கள் நின்றன. அவற்றையடுத்துப் பின்னும் தாழப் பலா மரங்கள் இருந்தன. படிப்படியாக அமைத்தாற்போல அவை விளங்கின. தென்ன மரத்திலிருந்து பழுத்து முதிர்ந்த ஒரு தேங்காய் விழுந்தது; அதற்கு அடுத்தபடி உயர்ந்து நின்ற கமுக மரத்தின்மேல் அது விழுந்தது. அந்த மரத்தில் வண்டுகள் பெரிய தேனடையை வைத்திருந்தன. தேங்காய் அந்தத் தேனடையின் மேல் வேகமாக விழுந்து அதைக் கிழித்துக்கொண்டு வந்தது. கமுக மரத்தின் கீழே பலா மரங்கள் இருந்தன. தேனடையைக் கிழித்து வந்த தேங்காய் பலா மரத்தின்மேல் விழுந்தது. அதில் பழங்கள் பழுத்துக் கனிந்திருந்தன. வேகமாக விழுந்த தேங்காய் அந்தப் பலாப் பழத்தைக் கீறியது; அதன் கீழ் நின்ற மாமரத் திலிருந்து கனிகளைச் சிதறியது; பின்ப அதன் கீழ் நின்ற வாழை மரத்தில் பழுத்திருந்த பழங்களை உதிர்த்துவிட்டது. தேங்காய் மேலிருந்து விழுந்து நடத்திய இந்தப் பயணத்தில் அந்த நாட்டின் தேனையும் பழத்தையும் சுவைத்தது. நில வளத்தை நாம் தெரிந்துகொள்ளும் அளவுகோலாக அந்தத் தேங்காய் உதவியது.

 

காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப் 
பூமாண்ட தீத்தேன் தொடைகீறீ வருக்கை போழ்ந்து 
தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும் 
ஏமாங் கதம்என்று இசையால் திசை போய துண்டே!

 

[காய்கள் சிறப்பாகக் காய்த்து நிற்கின்ற தென்ன மரத்தின் பழுத்த கெற்று உதிர, பின் அது  கமுகமரத்தின் உச்சியிலே இருந்த பூவிலிருந்து உண்டாகிச் சிறந்த இனிய தேனடையைக் கிழித்துக்கொண்டு, பலாப் பழத்தைப் பிளந்து, இனிய மாம்பழத்தைச் சிதறச் செய்து, வாழைப் பழங்களேச் சிந்தும் ஏமாங்கதம் என்று புகழினால் திசை முழுதும் பரவிய காடு இன்று உண்டு.]
இந்தப் பாட்டை நான் நினைத்துக்கொண்டே, இதில் உள்ள காட்சிகளில் மாமரத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அங்கே பார்த்தேன். அவை மட்டுமா? எத்தனை விதமான வண்ண வண்ண மலர்கள்! கார், மலையை வட்டமிட்டு இறங்கி அந்தது. அப்படி வருகையில் ஒவ்வொரு முறையும் கார் போகும் திசை மாறுமல்லவா? புதிய புதிய இயற்கை எழிற் படலத்தை எடுத்து எடுத்துக் காட்டுவதுபோல அவ்வப்போது காட்சிகள் மாறி வந்தன.
'ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இயற்கை வளம் இப்படிதான் இருந்திருக்கவேண்டும் போலிருக்கிறது' என்று எண்ணினேன். நம்முடைய வாழ் நாளில் பல இடங்கள் வளங்கள் குன்றிப் போவதை காண்கிறோம். பல மலைகளில் அருவிகள் ஓடிப் பின்பு வறண்டு போனதைப் பார்க்கிறோம். திருவண்ணாமலையில் அருவி ஓடியதைக் கண்டவர்கள் உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பரங்குன்றத்தில் அடர்ந்த காடுகளும், நீர் நிறைந்த அருவிகளும் இருந்திருக்கவேண்டும். பரிபாடல் என்ற சங்க நூலில் அந்த மலையின் வருணனை விரிவாக இருக்கிறது. அதைப் பார்த்தால் இப்போதுள்ள நிலைக்கும் அதற்கும் தொடர்பே இல்லையென்று தோன்றும்.


 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel