←குறிஞ்சி வளம்

இலங்கைக் காட்சிகள்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்கண்டி விழாக்கள்

அருவி ஓசை→

 

 

 

 

 


437356இலங்கைக் காட்சிகள் — கண்டி விழாக்கள்கி. வா. ஜகந்நாதன்

 

6. கண்டி விழாக்கள் 
கிரிமெட்டியாவிலிருந்து கண்டிமா நகரை வந்து அடைந்தோம். கண்டியில் உள்ள நகர மண்டபத்தில் அன்று மூன்று விழாக்கள் நடக்க இருந்தன. முதலில் பாரதி விழா; அடுத்தபடி மத்திய மாகாணத் தமிழ்ச் சங்க ஆரம்ப விழா; பிறகு அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆரம்ப விழா. பாரதி விழாவுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பை எனக்கு அளித்திருந்தார்கள்.
கண்டிமா நகரத்தின் அழகிய காட்சி என் கண்ணைக் கவர்ந்தது. சுற்றிலும் மலைகள், ஊரின் நடுவே ஒரு பெரிய ஏரி. எங்கே பார்த்தாலும் பசுமைத் தோற்றம். அழகிய கட்டிடங்களும் கோயில்களும் சாலைகளும் அமைந்த, நாகரிக எழில் கெழுமிய நகரம் அது. இயற்கையின் எழில் சூழ இருந்து உள்ளத்தைக் கவர, செயற்கை எழில் இடையே நின்றது. இயற்கையின் ஏற்றத்தை ஒரு கணமும் மறக்க இயலாத நிலையில் கண்டி நகரம் வளர்கிறது.
"இங்கே முருகன் திருக்கோயில் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

"தமிழர்கள் வாழும் இடங்களில் கதிர்காம வேலனுடைய கோயில் இராத இடம் அரிது" என்றார்கள்.
 "கதிர்காமத்தில் அல்லவா கதிர்காம வேலன் இருப்பான்? இங்கே-"
"ஆம்; இலங்கை முழுவதும் கதிரேசன் தான் இருக்கிறான். எந்த ஊரானாலும் முருகன் மாத்திரம் கதிர்வேற் பெருமான்; கதிர்காமப் பெருமான்" என்றார் ஓர் அன்பர். 
தமிழ் நாட்டில் தண்டாயுதபாணியின் கோயில் எங்கே இருந்தாலும் அவரைப் பழனி யாண்டவரென்றே சொல்கிறோம். பழனி - ஓரிடத்தில் தான் இருக்கிறது. ஆனால் பழனியாண்டவரோ வேறு பல ஊர்களிலும் இருக்கிறார். இது அப்போது என் ஞாபகத்துக்கு வந்தது.
“இங்கே ஒரு முருகன் திருக் கோயில் சிறப்பாக இருக்க வேண்டும். அருணகிரி நாதர் அப் பெருமானைப் பாடியிருக்கிறார்" என்றேன் நான். 

 

"சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலம் துஞ்சித் திரியாதே 
கந்தன்என் றென் றுற் றுனை நாளும் 
கண்டுகொண் டன்புற் றிடுவேனோ? 
தந்தியின் கொம்பைப் புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்தில்அங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே!"

 

என்ற பாட்டையும் சொன்னேன்.
கண்டி நகர மண்டபத்தில் நகரமக்கள் பலர் கூடியிருந்தனர். கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். அரசாங்க மந்திரிகள் சிலரும் இலங்கைச் சட்ட சபை அங்கத்தினர்  சிலரும் விழாவுக்கு வந்திருந்தார்கள். மண்டபத்திற்கு வந்து அமர்ந்ததும் என் கண்ணை ஓட்டினேன். அநேகமாக எல்லோருடைய நெற்றியிலும் பளிச்சென்று திரு நீறு இலங்கியது. கொழும்பிலும் நான் சந்தித்த தமிழன்பர்கள் திருநீற்றைத் தரித்திருந்தார்கள். பலர் ருத்திராட்ச மாலையை அணிந்திருந்தார்கள். சைவத்தின் இருப்பிடமாகிய தமிழ் நாட்டில் அவ்வளவு பக்தியை இப்போது காண முடியவில்லை.
உயரமான மேடையில் தலைவருக்கு ஆசனம் அமைத்திருந்தார்கள். அந்த இடத்தைச் சுற்றிலும் பிரமுகர்கள் வீற்றிருந்தார்கள். அருகில் மாவிலை தேங்காயுடன் நிறைகுடம் வைத்துத் திருவிளக்கு ஏற்றினார்கள். நம்முடைய நாட்டுப் பண்பை எவ்வளவு - நன்றாக மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.
"இலங்கையில் வெள்ளைக்காரருடைய நாகரிகத்தைப் பின்பற்றி அவர்களைப் போலவே பழக்க வழக்கங்களை உடையவர்கள் பலர் என்று முன்பு நண்பர்கள் சொல்லிக் கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் இங்கே வந்து பார்த்தால் தமிழ் நாட்டைவிட அதிகமான பக்தியும் தமிழ்ப் - பண்பும் இருக்கின்றனவே!" என்று ஒரு நண்பரைக் கேட்டேன். 
"ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. இப்போதும் சில குடும்பங்கள் அப்படி இருக்கின்றன. சிங்களவர்களிடம் ஆங்கில நாகரிக மோகம் அதிகம். தமிழர்கள் முன்பு அப்படி இருந்தாலும், இந்தியாவில் தேசீய உணர்ச்சி மிகுதியாகிக் காந்தீயம் பரவி இந்தியப்  பண்பு மேலோங்கவே, இங்கும் அந்த  எளிமையும் பழக்க மாறுதலும் வந்துவிட்டன. இங்குள்ள தமிழர்களில் பழையவர்களாகிய யாழ்ப்பாணத்தவர்கள் எப்பொழுதுமே சிவபக்தியுடையவர்கள்" என்று அவர் எனக்கு விளக்கினார்.
முதலில் பாரதி விழா ஆரம்பமாயிற்று, கிரிமெட்டியாத் தோட்டத்தின் சொந்தக்காரராகிய திரு வைத்தியலிங்கம் எல்லோரையும் வரவேற்றார். அப்பால் உதவிக் கல்வி மந்திரியாக இருந்த திரு கனகரத்தினம் விழாவைத் தொடங்கி வைத்தார்.
திரு கனகரத்தினம் யாழ்ப்பாணத் தமிழர். தமிழில் அதிக ஊக்கமும் பற்றும் உள்ளவர். யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாகத் தமிழ் விழா நடந்ததல்லவா? அந்த விழாவை அங்கே நடத்த வேண்டுமென்று முயன்று தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரை அழைத்தவர் அவரே. "கண்டியைத் தலைநகராகக் கொண்ட மத்திய மாகாணத்தில் ஐந்து லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய சார்பில் இந்த விழா நடைபெறுகிறது. இப்படி அங்கங்கே தமிழுக்குப் புத்துயிர் உண்டாவதைக் காணக் காண எனக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டாகிறது” என்று அவர் பேசினார்.
நான் கொழும்பில் இறங்கியவுடன் வீரகேசரி ஆசிரியர் திரு ஹரன் தமிழ்நாட்டின் நிலைமையைக் கேட்டதையும், தமிழ் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருப்பதை நான் சொன்னதையும் முன்பே எழுதியிருக்கிறேன்.
வீரகேசரி - ஆசிரியர் தலையங்கம் எழுதுவதோடு 'ஊர்க்குருவி' என்று தலைப்பிட்டுப் பல விஷயங்களை ஒவ்வொரு நாளும் எழுதி வருகிறார். தலையங்கத்தைப் படிப்பவர்களை விட அந்த 'ஊர்க்குருவி'யைப் படிப்பவர்களே அதிகம். தலையங்கம் பொதுவாக நாட்டு நிலைமையையும் உலக நிலைமையையும் பற்றி ஆராய்வது. 'ஊர்க்குருவி'யோ நெருக்கமாக உள்ள விஷமங்களை உணர்ச்சியோடு கலந்து சொல்வது.
என்னைச் சந்தித்ததையும் என் தோற்றத்தையும் நான் கூறிய விஷயங்களையும் அதில் (15-9-51) எழுதியிருந்தார். உணவுப் பஞ்சத்தைப்பற்றி அவர் எழுதியிருந்த பகுதி இது : 
"....... தமிழ் நாட்டில் நிலைமை எப்படி உள்ளது என்று கேட்டேன். எங்கும் வறுமைதானாம். ரெயில்வே ஸ்டேஷனில் யாராவது சாப்பாட்டுப் பொட்டணம் வாங்கிச் சாப்பிட்டால், பாதி உண்ணும்போதே கையேந்திச் சாதத்தைப் பிடுங்கிக் கொண்டு போய் விடுகிறார்களாம். 'தமிழரின் விசேஷப் பண்பாடு காரணமாக இவ்வளவு கஷ்டங்களையும் பலாத்காரப் புரட்சியின்றிச் சகித்து வருகிறார்கள்' என்றார். பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ! பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ ! கடவுளே !!" 

இந்தப் பகுதி பலருடைய கண்ணில் நன்றாகப் பட்டிருக்கவேண்டும். அதுவும்  அரசியல்வாதிகள் நிச்சயமாக இதைப் பார்த்திருப்பார்கள். கண்டி பாரதி விழாவில் தமிழ் நாட்டு உணவுப் பஞ்சத்தைப் பற்றிய விவாதமே நடந்ததென்று சொல்லவேண்டும். அந்த விவாதத்தைக் காரசாரமாக ஆரம்பித்து வைத்தவர் திரு கனகலிங்கம் அவர்கள், ஆம்; அவர் பாரதி விழாவை ஆரம்பித்து வைத்துப் பேசிய பேச்சில்தான் இந்த விவாதத்தையும் நுழையவிட்டார்.
 "திரு ஜகந்நாதன் தமிழ் நாட்டில் நிலவும் உணவு நிலைமையைப் பற்றித் தெரிவித்த செய்திகளைப் பத்திரிகையில் பார்த்தேன். இந்தியா அடிமைத்தனத்திலிருந்து வெளியேறியும் பஞ்சத்தினின்று விடுதலை பெறவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். இந்திய அரசாங்கம் இந்தப் பஞ்சத்தை வளர விடாமல் தடுக்கத் தக்க முயற்சி செய்யவில்லை. அது கண்டிப்பதற்குரியது. பாரதியார், தனி ஒருவனுக்கு உணவிலை எனில் சகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடியிருக்கிறார். இவ்வளவு மக்கள் பட்டினியால் வாடும்படி செய்யும் அரசாங்கத்தை அழித்துவிடுவதுதான் நியாயம். பாரதியார் சொல்வதை நாம் உணர்ச்சியுடன் கவனிக்கவேண்டும்" என்று கனகரத்தினம் பேசினார்.
'அரசியல்காரர்கள் எந்த இடத்திலும் அரசியலைக் கலக்காமல் விடுவதில்லை என்ற நினைவுதான் எனக்குத் தோன்றியது. அவர் அவ்வளவு உணர்ச்சியோடு சொன்னதற்கு நான் விடையளித்திருக்கலாம். ஆனால் அரசியல் துறையில் நான் கலந்துகொள்வதில்லை. அயல் நாட்டில் பேசும் ஒவ்வொரு சொல்லும் நிதானத்துடன் வரவேண்டுமல்லவா? நல்ல வேளையாகத் தலைமையுரைக்குப் பிறகு பேசிய திரு தொண்டைமான் அவர்கள் கனகரத்தினத்திற்குச் சரியான விடையை அளித்தார். இருவரும் வெவ்வேறு கட்சிக்காரர்கள். ஆகவே அவர்கள் பேச்சுச் சொற் போராகவே இருந்தது. தொண்டைமான் பேசினர்: "தனி யொருவனுக்கு உணவிலையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியார் வாக்கை என் நண்பர் எடுத்துக் காட்டி, இந்திய அரசாங்கத்தைக்  குறைகூறினார். முதலில் பாரதியார் கருத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் நிறைய உணவுண்டு வாழும்போது ஒருவனுக்கு மாத்திரம் உணவு கிடைக்காவிட்டால் அந்த நிலையில் சுய நலச் சூழ்ச்சிக்காரர்களை ஒழித்துக் கட்டுவதைப் பற்றித் தான் பாரதியார் பாடுகிறார். இப்போது இந்தியாவில் எல்லோருமே உணவுத் தட்டுப்பாட்டுக்கு ஆளாகியிருக்கின்றார்கள். அந்தத் துன்பத்தை எல்லோரும் பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக வேறு நாட்டாரிடம் போய்ப் பல்லை இளித்துக் கொண்டு நிற்கவில்லை. செல்வம் படைத்த இலங்கை அரசாங்கம் என்ன செய்கிறது? உணவுக்காக ஊராரிடம் போய்க் கெஞ்சுகிறது" என்று அவர் சொன்னார். அப்போது அமெரிக்காக்காரர்கள் இந்தியாவுக்கு உணவுத் தானியம் அனுப்பலாமா வேண்டாமா என்று மீன மேஷம் பார்த்துக் கொண்டிருந்த காலம்; ஜவாஹர்லால் நேரு, நிபந்தனை போட்டுத் தருவதாக இருந்தால் யாரிடமும் ஓர் இம்மியும் ஏற்க மாட்டோம்" என்று வீர கர்ஜனை செய்த காலம்.
கனகரத்தினம் இந்திய அரசாங்கத்தைக் குறை கூறினார். தொண்டைமான் இலங்கை அரசாங்கத்தைக் குறை கூறினார். அந்த விழாவில் பேசிய வேறு சில அரசியல்வாதிகளாகிய தமிழர்களும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள்.
கனகரத்தினம் விழாவைத் தொடங்கி வைத்த பிறகு நான் என் தலைமைச் சொற்பொழிவை ஆற்றினேன். புதிய இடம், ஆர்வமுள்ள மக்கள், நல்ல கூட்டம். ஆகவே எனக்கு ஊக்கம் உண்டாவதில் ஆச்சரியம் என்ன? இலங்கைக்கு முதல் முறையாக வந்ததையும், பழந்தமிழ் நூல்களிலே கண்ட இயற்கை வளங்களை அங்கே நேரில் கண்டதையும் எடுத்துச் சொன்னேன். "இலக்கிய உலகில் உலா வரும்போது கண்ட காட்சிகளை இங்கே காண்கிறேன். பழந்தமிழர் வாழ்ந்த உலகத்தில் நிற்கிறோம் என்ற உணர்ச்சி உண்டாகிறது" என்று என் கருத்தை வெளியிட்டேன்.
பல காலமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இலக்கியத் தொடர்பு இருப்பதை விரித்துரைத்தேன். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவியங்களில் வரும் வரலாறுகளில் இலங்கை இடம் கொண்டிருப்பதை எடுத்துச் சொன்னேன்.
"இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் பாலம் போட வேண்டுமென்று பாரதியார் பாடுகிறார், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று அவர் சொல்கிறார். இலக்கியத்தின் உதவியால் முன்பே பாலம் இட்ட பெரியார்கள் பலர் உண்டு. சமீப காலத்தில் பாலமிட்ட பெரியார்களில் மிகச் சிறந்தவர் ஸ்ரீ ஆறுமுக நாவலர்" என்று சொல்லி நாவலரவர்களின் பெருமையை விரித்தேன்.

அப்பால் கவியின் இயல்பு, உணர்ச்சியை உருவாக்கிக் கவியாக வடிக்கும் திறமை, பாரதியார் கவிப்பண்பு முதலிய பல பொருள்களைப்பற்றிப் பேசினேன். ஒன்றே முக்கால் மணிநேரம் சொற்பொழிவு ஆற்றினேன். சபையில் இருந்தவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
 ரஸிகர்களுடைய கூட்டத்தில் பேசுவதென்றால் பேச்சாளர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். சமுத்திரம் ஆளைக் கண்டால் கொந்தளிக்கும் என்று சொல்வார்கள். 'ஆள்கண்ட சமுத்திரம்' என்று பழமொழிகூட வழங்குகிறது. அது எத்தனை தூரம் உண்மையோ நான் அறியேன். மேடையில் ஏறிப் பேசுகிறவர்கள் திறத்தில் இந்த உண்மை பொருந்தும். அவர்களே ஆட்கண்ட சமுத்திரம். உம்மென்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டிருக்கிறவர்களின் கூட்டத்தில் பேசவே தோன்றாது.
என்னுடைய ஆசிரியராகிய ஸ்ரீமத் ஐயரவர்கள் சொல்வதுண்டு: "சிலர் இருக்குமிடத்தில் ஒன்றுமே பேசத் தோன்றுவதில்லை. நாம் என்ன பேசினாலும் இதைக் காட்டிலும் நாம் நன்றாகப் பேசலாமே என்று சிலர் பொறாமையுடன் இருப்பார்கள். சிலர் நாம் பேசுவதில் சிறிதும் அக்கறையில்லாமல் எங்காவது சிந்தையை ஓட விட்டிருப்பார்கள். அவர்கள் முகத்திலே கொஞ்சங் கூடப் பொலிவு இராது. அவர்களுக்கு நடுவே நாம் அகப்பட்டுவிட்டால் நம்முடைய முகத்திலும் அசடு தட்டிவிடும். பேசுவதற்கும் விஷயம் வராது. மிகவும் எளிதில் கை வந்த பொருளெல்லாம், இங்கே எதற்காக வெளிப்பட வேண்டும் என்று ஒளிந்துகொள்ளும்" என்று சொல்வார்கள். சொற்பொழிவு விஷயத்தில் இது எவ்வளவு உண்மை என்பதை அநுபவித்தவர்கள் நன்கு உணர்வார்கள்.
இதற்கு நேர்மாறாக, உண்மை அன்பும் ஆர்வமும் உடையவர்கள் கூடிய அவையில் பேசினால் நமக்கு உண்டாகும் உணர்ச்சியே தனிவகை. புதிய புதிய உவமைகளும் மேற்கோள்களும் காரணங்களும் நம் பேச்சில் சரமாரியாக வரும். நாம் முன்பு நினைத்துக் கொண்டு போகாவிட்டாலும் அந்தச் சமயத்தில் அற்புதமாகப் பல கருத்துக்கள் நமக்குச் சொல்ல வரும். பின்னால் நினைத்துப் பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும்.
திருவள்ளுவரே இந்த அனுபவத்தைத் திருக்குறளில் சொல்கிறார். ‘இயற்கையாக நன்றாய் ஒரு பாத்தியில் பயிர் வளர்கிறது. அதற்கு நீர் பாய்ச்சினால் அது பின்னும் செழித்து வளரும் அல்லவா? நயம் தெரிந்த ரஸிகர்கள் கூடிய சபையில் ஒரு கருத்தை எடுத்துச் சொல்வதும். அத்தகையதே' என்று அவர் பாட்டால் சொல்கிறார்.

 

"உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று."

 

காலையில் பாரதி விழா முடிந்தவுடன் யாவரும் விருந்துண்டோம். அப்பால் பிற்பகலில் முதலில் மத்திய மாகாணத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. இலங்கைப் பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் திரு அருணந்தியின் தலைமையில் அது மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அகில இலங்கை எழுத்தாளர் சங்க ஆரம்பவிழா நிகழ்ந்தது. அதற்கு வீரகேசரி ஆசிரியர் தலைமை வகித்தார். பல அன்பர்கள் பேசினார்கள். இறுதியில் நானும் பேசினேன்; ஒரு மணி நேரம் பேசினேன். எழுத்தாளனுடைய பெருமை, நிலை, கடமை என்பவற்றைப் பற்றிப் பேசியதோடு,
"நம்முடைய பழந்தமிழ்ச் செல்வம் மிகப் பெரியது. அதை நாம்  புறக்கணிக்கக்கூடாது. நம்முடைய மரபு அழியக்கூடாது. பழமையிலே வேரூன்றிப் புதுமையிலே மலர்ச்சி பெற வேண்டும்" என்பதை வற்புறுத்தினேன்.
இலங்கைக்குப் புதியவனாகிய நான் முதல் முதலாகப் பேசிய அந்த இரண்டு பேச்சுக்களையும் அன்பர்கள் நன்றாகச் சுவைத்தார்கள் என்றே நம்புகிறேன். அந்தப் பேச்சுக்களுக்குப் பின் அன்பர்கள் என்னிடம் காட்டிய மதிப்பும், பேசிய வார்த்தைகளும், இன்றளவும் எனக்கு வரும் கடிதங்களும் இந்த நம்பிக்கைக்குச் சாட்சிகளாக இருக்கின்றன. 
என் பேச்சைப்பற்றி வீரகேசரியில் 'ஊர்க்குருவி' வெளியிட்ட மதிப்புரையைப் பாருங்கள்: 
‘........ வித்துவான் கி. வா. ஜ.வை முதல் முதலாக ஈழத்துக்கு அழைத்து வந்த பெருமை கண்டித் தமிழர்களையே சாரும். அவர் அன்று இரண்டு பிரசங்கங்கள் செய்தார். காலைப் பிரசங்கம் ஒன்றே முக்கால் மணி நேரம். மாலையில் சரியாக ஒரு மணி. 'பிரசங்கமென்றால், ஆகா! இதுதான் பிரசங்கம். உயிருள்ள பேச்சு இது. என்ன புலமை என்ன எளிமை எவ்வளவு ஆழம் ஒருவரையும் புண்படுத்தாத மிகப் பயனுள்ள பேச்சு!" இது காலைப் பிரசங்கத்தைப் பற்றி ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் என்னிடம் கூறிய விமர்சனம்.
'மாலையில் எழுத்தாளர் கூட்டத்திலே, அவர் உணர்ச்சி உச்ச ஸ்தானத்தை அடைந்துவிட்டது. "எழுதுபவரெல்லாம் எழுத்தாளரா? அல்ல. தெய்வத்துக்கு அடுத்தபடி எழுத்தாளன். அவன் கையில் இருப்பது செங்கோல்! அவன் நீதி நேர்மை தவற மாட்டான். பிறர்மீது வசைபாட மாட்டான். சுய நல எண்ணங்கள் இரா. மனிதர் துயர் தீர்க்கவே, புதுமை உலகத்தைச் சிருஷ்டிக்கவே, எழுத்தாளன் சதா முயலுவான்" என்று உணர்ச்சி வேகத்துடன் அவர் வெளுத்து வாங்கிவிட்டார். யாருக்கும் புரியும்படி நவரஸங்களும் ததும்பும் எளிய நடைப் பேச்சு அது...' 
வீரகேசரி ஆசிரியர் நன்றாகத்தானே எழுதுகிறார்? அவர் எழுதும் மாதிரியைச் சொல்கிறேன். என்னைப் பற்றி அவர் எழுதியதைச் சொல்லவில்லை!


 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel