←அசோக வனம்
இலங்கைக் காட்சிகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்கதிர்காமம்
437375இலங்கைக் காட்சிகள் — கதிர்காமம்கி. வா. ஜகந்நாதன்
12
கதிர்காமம்
மாணிக்கவாசகர், "கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே!" என்று பாடினார். இலங்கைக்குப் போகிறவர்கள் அப்படிச் சொல்வதற்கு ஓர் இடம் இருக்கிறது. இலங்கையின் இயற்கை அழகைக் கண்டு களிக்கப் போகிறவர்கள் அங்குள்ள நானில வகைகளையும் கண்டு இன்புறலாம். மலையும் மலைச் சாரலும் அருவிகளும் காடுகளும் கடற்கரையும் பிற காட்சிகளும் அவர்களுடைய கண்ணுக்கும் கருத்துக்கும் இன்பத்தைத் தரும். இலங்கை வாழும் மக்களையும் தொழிலாளர்களையும் அவர்களுடைய உழைப்பினால் உயர்ந்து நிற்கும் ரப்பர்த் தோட்டங்களையும் பரந்து, கிடக்கும் தேயிலைத் தோட்டங்களையும் தொழிற்சாலைகளையும் கண்டு களிக்கலாம். அழகான ரோடுகள், அற்புதமான விகாரைகள் ஆகியவற்றைக் காணலாம் பழைய சிற்பங்களையும் ஓவியங்களையும் கண்டு கண்டு அவற்றின் அழகைக் கண்ணால் மொண்டு மொண்டு உண்ணலாம்.
சிவபக்தர்கள் கண்டு களிக்கவேண்டிய சிவாலயங்கள் இலங்கையில் உண்டு. திருக்கேதீசுவரம், திருக்கோணமலை, நகுலேசுவரம் முதலிய தலங்களுக்குச் செல்லலாம். கண்ணகிக்குக் கோயில் கட்டி வழிபடும் வழக்கத்தைக் கண்டு பெருமிதம் அடையலாம்.
ஆனால், இலங்கையின் அதிசயங்களில் ஒன்றாகிய கதிர்காமத்துக்குச் செல்கிறவர்கள் அங்குள்ள கோயிலைக் காணலாம்; தீர்த்தத்தைக் காணலாம்; மூர்த்தியைக் காணமுடியாது. "கதிர்காமத்தைக் கண்டேன்; ஆனால் காணவில்லை" என்றே சொல்லவேண்டி வரும், மர்மரகசியம், மூடுமந்திரம், விளங்காத புதிர், விடை காண முடியாத பிரச்னை என்று உள்ள வார்த்தைகளையெல்லாம் தொகுத்து அடுக்கிச் சொல்லுங்கள். அத்தனைக்கும் உறைவிடம் கதிர்காமம் !
நானும் கதிர்மாம் போனேன். பல சமயங்களில், தலயாத்திரை செய்கிறவர்களுக்குக் கோயில் முழுவதையும் பார்க்க முடிகிறதில்லை. சுவாமியையே தரிசிக்க முடியாமற் போகிறது. திருவிழாக் காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி முட்டி மோதிக் கொண்டு தங்கள் பக்தியைக் காட்டிக் கொள்ளும் இடங்களில் மனிதர்களையே நன்றாகப் பார்க்கலாம்; கடவுளைப் பார்ப்பது அருமை. எப்படியாவது கோயிலுக்குள் நுழைந்து விட்டாலோ சாம்பிராணிப் புகையின் இடையிலும் கற்பூரப் புகையின் இடையிலும் இறைவனுடைய திருவுருவத்தை எளிதிலே கண்டு விட முடியாது. எந்தத் தலத்தையாவது நன்றாகத் தரிசிக்கவேண்டுமானால் உற்சவகாலங்களில் போகவே கூடாது. அப்போது நின்று நிதானமாக எல்லாவற்றையும் பார்ப்பதற்கு இயலாது. உற்சவம் இல்லாத
காலங்களில் போனால் ஊரையும் பார்க்கலாம்; ஆலயத்தையும் பார்க்கலாம்; மூர்த்திகளின் தரிசனமும் நன்றாகக் கிடைக்கும். குருக்களையாவும் நம்மோடு ஆறுதலாகப் பேசி விஷயத்தை விளக்குவார். இதை அன்பர்கள் அநுபவத்தில் உணர்வார்கள்.
நான் கதிர்காமம் போன சமயத்தில் எந்த விதமான உற்சவமும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் நாங்கள் போன அப்போது கோயிலில் நாலைந்து பேர்களே இருந்தார்கள். மணிக் கணக்காக இருந்து பார்த்துக் கொண்டு வருவதற்கு ஏற்ற அமைதியும் தனிமையும் இருந்தன. நிதானமாகவே எல்லாவற்றையும் பார்த்தேன். ஆனால் "கண்டும் கண்டிலேன் என்னகண் மாயமே" என்றுதான் இப்போது சொல்கிறேன்.
அசோக வனப் பகுதிகளைப் பார்த்துக் கொண்டு இரவு முனராகந்த என்ற இடத்தில் நானும் கணேஷும் நண்பர் நாகலிங்கமும் தங்கினோம். முனராகந்த என்ற தொடருக்கு மயிற் குன்றம் என்பது பொருள். இதை நான் விசாரித்து அறிந்தபோது ஒருவகையான மகிழ்ச்சி உண்டாயிற்று. பெயர்ப் பொருத்தத்தை ஆராய்ந்தபோதுதான் அந்த மகிழ்ச்சி எழுந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை காலையிலே புறப்பட்டுக் கதிர்காமம் செல்வதாக இருந்தோம். மயில் வானகப் பெருமாளைத் தரிசிக்கப் போகுமுன் மயிற் குன்றத்தில் தங்கியதிலே ஒரு பொருத்தம் இருக்கிறதா, இல்லையா, சொல்லுங்கள். மயிலுக்கும் முருகனுக்கும் உள்ள பொருத்தத்தை மாத்திரம் நினைந்து நான் களிக்கவில்லை. அதற்கு மேலும் ஒரு செய்தி என் நினைவிலே எழுந்தது.
கதிர்காமத்துக்கு ஒருமுறை புகழேந்திப் புலவர் போயிருந்தார். அப்போது ஆலயத்தின் ஒரு பகுதியிலே ஒரு மயில் நின்றிருந்தது. அது பாம்பொன்றைத் தன் அலகிலே கவ்விக்கொண் டிருந்தது. அந்தப் பாம்பை அது குத்திக் கிழித்துக் குலைத்து விடும் என்பது உறுதி. புகழேந்திப் புலவர் இதைக் கண்டார். "ஐயோ பாவம்! இந்தப் பாம்புக்கு இன்றுடன் ஆயுள் முடிந்தது போலும்!" என்று எண்ணி இரங்கினர். இதை விடுவிக்க ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார். மந்திரம் செய்து மயிலை மயக்கிப் பாம்பை விட்டுவிடும்படி செய்யலாம். அப்படி மந்திரம் செய்யும் வகை புலவருக்குத் தெரியாது. ஆயினும் அவரிடம் மாயமந்திர சக்தியுடைய வேறு ஒரு வித்தை இருந்தது. ஆம்; கவிதை பாடும் ஆற்றல் அவரிடம் இருந்தது. 'மயிலைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக ஒரு பாட்டைப் பாடலாம். மயிலும் முருகனும் விட்ட வழி எதுவானுலும் சரி' என்ற எண்ணத்தோடு ஒரு வெண்பாவைச் சொல்லத் தொடங்கினர்.
பாட்டு, முருகனிடம் காதல் பூண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்தது. 'தீயர்களுடைய கூட்டத்தைச் சீறும் வடிவேற் பெருமாளும் தென் கதிர்காமப் பெருமாளுமாகிய முருகன் எழுந்தருளும் வாகனமாகிய மயிற் பெருமாளே!' என்று மயிலை விளிக்கிறாள் காதலி. 'நான் முருகனைப் பிரிந்து வாடுகிறேன். என்னைப் பெற்று வளர்த்துப் பேணும் தாய்மார்கள் என்னைப் படுத்தும் பாடு சொல்லி முடியாது. அவர்கள் என்னைக் கண்டு ஐயப்படும்படியாக அவர்கள் கண் முன்னே என் உடலம் நிலைகுலையும் வண்ணம் சந்திரன் செய்கிறது; என் விரகத்தை மிகுதிப்படுத்துகிறது. அதை யாராவது விழுங்கிவிட்டால் எனக்குப் பெரிய அல்லல் நீங்கிவிடும். மயிற் பெருமாளே! தயை செய்து உன் வாயிலே இருக்கும் பாம்பை விட்டு விடேன். அதுபோய் உதயமாகும் அந்தச் சந்திரனை அப்படியே விழுங்கி விடட்டும். இந்த உபகாரத்தைச் செய்யமாட்டாயா?' என்று மனம் கரைந்து வேண்டுகிறாள்.
"தாயர்அவை முன்வருத்தும் சந்த்ரோ தயந்தனக்குஉன்
வாய்அரவை விட்டுவிட மாட்டாயோ?-தீயர்அவை
சீறும்அயிற்பெருமாள் தென்கதிர்கா மப்பெருமாள்
ஏறும் மயிற்பெருமா ளே."
[தாயர் அவை - தாய்மார் கூட்டம், தீயர் அவை-தீயவர்களாகிய அசுரர்களின் கூட்டம். அயில் - வேல், மயிலையே மயிற் பெருமாளே என்று மரியாதையாக விளித்தாள்.]
புகழேந்தி பெண்ணாகிவிட்டார். பாட்டு எழுந்தது என்ன காரணமோ, மயிலும் சாந்தம் அடைந்தது. அரவை விட்டுவிட்டது.
இந்த வரலாறும் பாட்டும் முனராகந்தாவில் நினைவுக்கு வந்தன. முருகனுக்கும் மயிலுக்கும் உள்ள பொருத்தம் யாரும் அறிந்தது. கதிர்காமத்துக்கும் மயிலுக்கும் உள்ள தொடர்பு தமிழ்ப் பாட்டிலே பதிவாகியிருப்பதை இந்தக் கவியைப் படித்தவர்களே உணர்ந்திருப்பார்கள்.
★★★
வெள்ளிக்கிழமை விடியற்காலையில் முனராகந்தாவை விட்டுப் புறப்பட்டோம். மலைவழியே கார் கீழே இறங்கியது. பிறகு சமவெளியில் அடர்ந்த
காட்டினூடே செல்லத் தொடங்கியது. எங்கள் கார் 50, 60, 70, 80 என்று வேகமாகப் பறந்தது. ஆனாலும் கதிர்காம வேலனைத் தரிசிக்கவேண்டும் என்று எங்களுக்கு இருந்த மனோவேகத்தோடு அதனால் போட்டி போட முடியவில்லை.
கதிர்காமத்துக்குப் போகும் வழியில் திஸமாரா என்ற இடம் இருக்கிறது. அது பெரிய ஊர். கதிர்காமத்துக்கும் அதற்கும் பதினொரு மைல் தூரம். கதிர்காமத்துக்குப் பல திக்குகளிலிருந்தும் வரலாம். பெரும்பாலும் கொழும்பிலிருந்து புறப்பட்டு மாத்தளை என்ற ஊரின் வழியே வருபவர்களே மிகுதி. எப்படி வந்தாலும் திஸ்மாராவுக்கு வந்துதான் போக வேண்டும். கதிர்காமம் உள்ள அருள்மய நாட்டுக்குத் தோரண வாயில் திஸ்மாரா என்றே சொல்ல வேண்டும். திஸ்மாரா வரையில் நல்ல தார் ரோடு இருக்கிறது. அதன் பிறகு சாதாரணமான சாலைதான். முன் காலத்தில் காட்டுப் பாதைதான் இருந்ததாம். யாத்திரிகர்கள் இந்தப் பதினொரு மைலையும் நடந்தே கடந்தார்களாம். இப்போதுள்ள பாதையில் கார் நன்றாகச் செல்லும். உற்சவ காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தச் சாலையில் செல்வார்களாம். அதனால் எல்லாக் கார்களையும் திஸமாராவிலே நிறுத்தி விடுவார்களாம்.
திஸமாரா என்பது திஸ்ஸ மகாராமம் என்பதன் சிதைவு. திஸ்ஸன் என்ற அரசன் கட்டிய மகா ஆராமம் (பெரிய கோயில்) அந்த ஊரில் இருக்கிறது. ஊருக்கு நெடுந்தூத்திலேயே அந்தப் பௌத்தக் கோயிலின் ஸ்தூபி கண்ணுக்குத் தெரியும். அவ்வளவு உயரமானது அது. திஸ்மாரா வரையில் பலவகையா வரும் வழிகள், அங்கிருந்து ஒன்றுபடுகின்றன. வெவ்வேறு துறையில் புகுந்து வெவ்வேறு இன்ப துன்ப அநுபவங்களை உடையவர்கள் இறைவனுடைய பக்தியிலே ஈடுபட்டு அவனை அணுகும்போது எல்லோரும் ஒரே நெறியில் ஒரே அநுபவச்சாலையில் செல்கிறார்கள் அல்லவா ? அதனை இந்தச் சாலை நினைப்பூட்டியது.
திஸமாராவிலிருந்து புறப்படும் கதிர்காமச் சாலையே பக்தி மணக்கும். யார் போனாலும் இரு மருங்கும் உள்ள மக்கள் 'அரோகரா!' என்று கூவுகிறார்கள். எத்தனையோ நூற்றாண்டுகளாகப் பக்தர்கள் கதிர்காம வேலனைத் தரிசித்து வருகிறார்கள். இலங்கையில் வாழ்பவர்கள் மாத்திரம் அல்ல; இந்தியாவிலிருந்து தோணிகளிலும் மரக்கலங்களிலும் பக்தர்கள் ஆர்வத்தோடு வந்து பழங்காலத்தில் தரிசித்தார்கள். பிறகு கப்பலில் வந்தார்கள். எப்படி வந்தாலும் கடைசியில் பல மைல் தூரம் கால் நடையாகவே வந்தார்கள். ஒருவர் இருவராக வராமல் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். காட்டுப் பிரதேச மாகையால் வன விலங்குகளுக்கு அஞ்சியே கூட்டமாக வந்தார்கள்.
தமிழ் நாட்டில் கதிர்காமத்துக்குப் போய் வந்தவர்கள் சொல்லும் கதைகளைக் காட்டிலும் போகாதவர்கள் சொல்லும் கதைகள் அதிகம். 'இருநூறு மைல்களுக்கு மேல் ஒரே காட்டு வழி. பக்தியில்லாதவர்களுக்கு நடக்கவே முடியாது. வழியில் காட்டு மிருகங்கள் வரும். யானை கூட்டம் கூட்டமாக வரும். அரோகரா என்று பக்தியோடு சொன்னால் வழி விட்டுவிடும்’ என்று சொல்லிப் பயமுறுத்துவார்கள். இதைக் கேட்ட புலவர் ஒருவர்,
"காணிற் குமாரவே லாஎன்னும் அன்பரைக்
கரடிபுலி யானைசிங்கம்
காலிற் பணிந்தஞ்சி ஒடவும்"
என்று பாடியிருக்கிறார்,
இவ்வாறு அச்சமூட்டினாலும் அன்பர்கள் கதிர்காம வேலனைத் தரிசிக்க வருவதை நிறுத்தவில்லை. பல இடையூறுகளுக்கு நடுவில் ஒரு காரியத்தைச் சாதிப்பதில் அதிக மதிப்பும் பயனும் அநுபவமும் இருக்கின்றன. ஆயிரக்கணக்காக மக்கள் இங்கே வந்து கொண்டுதான் இருந்தார்கள். "அரோகரா! அரோகரா!" என்று முழக்கம் செய்துகொண்டே இந்தக் காட்டு வழியில் நடந்து சென்றார்கள். அந்த ஒலியைக் கேட்டுக் கேட்டு அங்கே வாழும் மக்களும் 'அரோகரா!" என்று எதிரொலித்தார்கள். கதிர்காமத்துக்கு யார் போனாலும் 'அரோகரா’ என்ற முழக்கத்தை எழுப்பினார்கள். இந்தப் பழக்கத்தால், போகிறவன் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அங்கே இருக்கிறவர்கள் சொல்வதை நிறுத்துவதில்லை. அங்குள்ள மரமும் மண்ணும் கல்லும் கரடுங்கூடத்தான் 'அரோகரா'ச் சத்தத்தை எதிரொலிக்கும். அதைக் கேட்க நமக்குக் காதில்லை; அதுதான் வேறுபாடு.
திஸமாராவிலுள்ள டகோபா கதிர்காம வேலன் திருக்கோயிலுக்கு வழிகாட்டும் அடையாளத் தம்பமாக நிற்கிறது; பல திசைகளிலிருந்தும் வரும் மக்களுக்குக் கதிர்காமம் அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஊட்டும் கலங்கரை விளக்கமாக நிலவுகிறது. திஸமாராவில் ஒரு பெரிய ஏரியும், அதன் கரையில் வருவார் தங்குவதற்கும் உணவு கொலள்வதற்கும் உரிய விடுதி ஒன்றும் உள்ளன. அங்கே கிடைக்கும் உணவு எப்படியிருந்தாலும், சட்டி நிறையத் தரும் தயிர் மிக மிகச் சுவையுள்ளது.
★★★
திஸமாராவை விட்டுப் புறப்பட்டோம். கதிர்காமக் கோயிலைப் பற்றி நான் சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அன்பர்கள் கற்பனையைக் கலந்து கூறும் செய்திகளையும் கேட்டிருக்கிறேன். எல்லாம் சேர்ந்து விளங்காத ஒரு மயக்கத்தை உண்டாக்கி இருந்தன. "பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கோயிற் கூரையை வேய்வார்கள். அப்போது அதைப் பிரிப்பவன் இறந்துவிடுவான்" என்பது ஒரு கதை. " உள்ளே இன்னது இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. உள்ளேயிருந்து ஒரு தட்டு வரும். அதில் தேங்காய் பழம் வைத்தால் மறுபடியும் உள்ளே போகும். சிறிது நேரம் கழித்து உடைத்த தேங்காய் மூடிகளும் பழமும் வரும். அவை அப்படி வருவதற்குக் காரணம் யாருக்கும் தெரியாது."-இது ஒரு கற்பனை. "சிங்களவர்களே இங்கே பூசை செய்கிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளே ஒருவன் பூசை செய்வான். அப்புறம் அவன் இறந்துவிடுவான். அவனுக்குப் பதிலாக மற்றொருவன் வருவான்."- இது ஒரு கட்டுக் கதை.
இத்தனையிலும் நான் பொதுவான உண்மை ஒன்றை உணர்ந்தேன். 'கதிர்காமக் கோயிலில் ஏதோ மூடுமந்திரம் ஒன்று இருக்கிறது. அது யாருக்கும் விளங்கவில்லை. விளங்காத இரகசியத்தைப் பற்றிப் பல பல வதந்திகளைப் பரப்புவது மனித இயல்பு. இந்த வதந்திகளுக்குக் காரணம் கதிர்காமக் கோயில் சம்பந்தமான இரகசியம் ஏதோ ஒன்று இருப்பதுதான்' என்று எண்ணினேன். அந்த இரகசியத்தை நான் நேரிலே போய் ஆராய்ந்தும், விசாரித்தும், ஊகித்தும், துப்பறிந்தும் சிறிதளவு கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. கதிர்காமத் தல தரிசனத்தில் இயற்கையாக இருந்த வேகம், இரகசியத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஆகிய இரண்டும் சேர்ந்துகொண்டன.
★★★
கதிர்காமத்துக்கு வந்துவிட்டோம். கோயில் தெரியவில்லை. ஊரும் தெரியவில்லை. மாணிக்க கங்கை என்ற ஆற்றின் கரையை வந்து அடைந்தோம். அங்கே பக்தர்களுக்குத் தேங்காய் பழம் விற்கும் கடை ஒன்று இருந்தது. மாணிக்க கங்கையின் அக்கரை தான் கதிர்காமம் என்றார்கள்.
இரு மருங்கும் மிக உயர்ந்த மருத மரங்கள் அடர்ந்து ஓங்கி நிற்கச் சலசலவென்று மாணிக்க கங்கை என்ற சிற்றாறு ஒடிக்கொண்டிருக்கிறது. இலங்கையின் எல்லா ஆறுகளையும் கங்கையென்றே சொல்கிறார்கள். ஆறு குறுகியதுதான்; ஐம்பது அடி அகலம் இருக்கும். ஆற்றங்கரையில் உள்ள கடைக்கு அருகில் காரை நிறுத்திவிட்டு மாணிக்க கங்கையில் நீராடப் புகுந்தோம். நாங்கள் அங்கே சென்றபோது பகல் பதினொரு மணி இருக்கலாம். வெயில் வேளையாகையால் ஆற்று நீரில் ஆடியது சுகமாக இருந்தது. நன்றாக நீராடிய பிறகு தேங்காய் பழம் முதலியவற்றை வாங்கிக் கொண்டோம். காரை ஆற்றிலே இறக்கி ஓட்டி அக்கரை ஏறிக் கோயில் வாசலிலேயே கொண்டு போய் நிறுத்தலாம் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. காரைக் கரைக்கருகிலே நிறுத்திவிட்டுப் புறப்பட்டோம். நூற்றுக்கணக்கான மைல் காலால் நடந்து பல துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு கதிர்காம தரிசனத்துக்கு வரும் அன்பர்கள் இருக்கும்போது, நாங்கள் சிறிது தூரமாவது நடக்கவேண்டாமா ?
மாணிக்க கங்கையில் சில சமயம் வெள்ளம் வருமாம்.[1] அப்போது ஆற்றில் இறங்கிச் செல்ல முடியாது. அதனால் ஆற்றைக் கடக்க ஆடும் பாலம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதன் வழியே சென்று அக்கரையை அடைந்தோம். இக்கரை கடந்து அக்கரைக்கு வந்தவுடன் நாங்கள் நிற்கும் இடம் சந்நிதி வீதி என்று அறிந்து கொண்டேன். வானை முட்டும் கோபுரமும் பெரிய பெரிய குளமும் உள்ள தமிழ் நாட்டுத் தலங்களைப் போன்ற இடங்கள் வேறு எங்கும் இல்லை. மாணிக்க கங்கையில் நீராடும்போது கதிர்காம ஆலயம் இன்னும் நெடுந்துாரத்தில் இருக்கும் என்று நினைத்தேன். ஆலயமென்று இருந்தால் அதன் கொடிமரமோ கோபுரமோ பூசையின் ஒலியோ நெடுந்துரத்துக்கு அப்பால் வருபவர்களுக்கு ஆலயம் இருப்பதைப் புலப்படுத்தும் அல்லவா? அத்தகைய அறிகுறி ஏதும் இங்கே இல்லை.
சந்நிதி வீதி தென் வடலாக இருக்கிறது. வடக்குக் கோடியில் கதிர்காம வேலன் திருக்கோயில்; தெற்குக் கோடியில் வள்ளியம்மையின் ஆலயம். கதிர்காமம் மக்கள் வாழும் ஊர் அன்று. முருகன் திருக்கோயிலுக்காகவே அமைந்த சிறிய ஊர். அங்கே நிரந்தரமாக வாழ்பவர்கள் யாரும் இல்லை. யாத்திரிகர்களுக்கு வேண்டிய பண்டங்களை விற்று வியாபாரம் செய்யும் சில கடைகள் இருக்கின்றன. உற்சவ காலங்களில் பக்தர்கள் தங்குவதற்குப் பல மடங்களும் சத்திரங்களும் இருக்கின்றன.[2]
சந்நிதி வீதிதான் பெரிய வீதி. வேறு ஒன்றிரண்டு சிறிய தெருக்கள் இருக்கின்றன. உற்சவ காலத்தில் தான் இங்கே மனித நடமாட்டம் இருக்கும். காட்டாற்றில் வெள்ளம் வருவது போல அக்காலத்தில் மனித வெள்ளம் கரை கடந்து வருமாம். ஆளுக்கொரு கற்பூரச் சட்டியைத் தலையில் வைத்துக் கொண்டு வருவார்களாம். கோயிலுக்கு உள்ளும் புறமும் இந்தக் கற்பூரத் தீபமே இரவில் இருளை ஓட்டிவிடுமாம்.
ஆலயத்தை நோக்கிச் சென்றோம். ஆலயத்தின் முகப்பில் ஒரு வளைவு இருக்கிறது. சில காலத்துக்கு முன் அமைத்ததாக இருக்கவேண்டும். உள்ளே புகுந்தோம். சிறிது தூரம் திறந்த வெளி இருக்கிறது. அப்பால் திருக்கோயில் இருக்கிறது.
கோயிலா அது? மனசிலே பக்தியில்லாதவர்களுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக் கோயில்களைத் தரிசித்தவர்களுக்கு, அது கோயிலாகவே தோன்றாது. ஓட்டுவில்லைக் கூரைவேய்ந்த சாவடி போலத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் கூரையின் மேல் மூன்று இடங்களில் மூன்று பொற்கலசங்கள் இருக்கின்றன. அவற்றைக் காணும்போதுதான் கோயில் என்ற நினைவு வருகிறது.
உருவமில்லாத சிவலிங்கத்தை இறைவனாக எண்ணித் தரிசித்துப் பக்தி பண்ண வழி இருக்கும்போது கோபுரமும் மண்டபமும் இல்லாத இந்தச் சாவடியைக் கோயிலாகக் காண வழி இல்லையா ? புராணமும் துதிகளும் நம்பிக்கையும் இந்தச் சாவடியையே கந்தலோகத்துக்குச் சமானமாக்கியிருக்கின்றன. கதிரேசன், கதிரை வேலன் என்று இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் வழங்கும் பெயர்களுக்கு மூலம் அந்தச் சிறிய ஓட்டு வில்லைக் கூரை வேய்ந்த சாவடி[3] என்பதை நினைத்துப் பார்த்தால்தான் அதன் மகிமை புலனாகும். அதற்குக் காரணம் என்ன ? மனிதனுடைய உணர்ச்சி தான். அன்பர்களின் உணர்ச்சிக் குவியலுக்கு அடையாளமாக, கடவுளைக் காணவேண்டும் என்று ஏங்கிய தாபத்தைத் தணிக்கும் அருவியாக, எத்தனை இடையூறுகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் தீவிர வைராக்கியத்தோடு நாடு கடந்து கடல் கடந்து காடு கடந்து வரும் பக்தி வேகத்துக்கு இலக்காக அந்தச் சிறு கட்டடம் நிலவுகிறது. அப்படி எல்லோருடைய மனத்தையும் இழுக்க அதில் என்ன இருக்கிறது ? அதுதான் தெளிவாக யாருக்கும் புரியவில்லை !
திருக்கோயிலின் முன் நின்றேன். கோயில் வாசலில் ஒரு பெரிய பழைய மரக்கதவு இருக்கிறது. நாங்கள் சென்றபோது கோயிலில் பூசை முடிந்து பூசகர் கதவை மூடிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் சொல்லி அனுப்ப, அவர் வந்து கதவைத் திறந்தார்.
கதவைத் திறந்தவுடன் உள்ளே பக்தர்கள் நின்று தரிசிக்கும் இடம் இருக்கிறது. பத்தடி அகலமும் இருபதடி நீளமும் இருக்கலாம். அங்கே பெரிய குத்துவிளக்குகளும் தீபச் சட்டிகளும் இருக்கின்றன. அதற்கப்பால் உயர்ந்த மேடைமேல் கர்ப்பக்கிருகம் இருக்கிறது. அதன் வாசலில் திரையிட்டு மறைத்திருக்கிறார்கள். அந்த வாசலுக்குப் படிகள் இருக்கின்றன. கர்ப்பக்கிருகத்தின் கதவுகூட நமக்குத் தெரியாது. திரையைத்தான் காணலாம். அந்தத் திரையில் முருகன் உபய நாச்சியாரோடும் மயிலின் மேல் வீற்றிருக்கும் ஓவியம் இருக்கிறது. அந்தத் திரையை இக்காலத்தில் யாரோ உதவியிருக்கிறார்கள். உபயஞ் செய்தார் இன்னர் என்ற குறிப்பும் திரையின் ஓரத்தில் ஆங்கிலத்தில் இருக்கிறது. அதற்குப் பின்னே சில திரைகள் இருக்கின்றன. அவை அவ்வக் காலத்தில் அன்பர்கள் உதவியவை போலும்!
பூசை செய்கிறவர்கள் அந்தத் திரையின் முன் நின்று தூபதீபம் காட்டுகிறார்கள்; அர்ச்சனை செய்கிறார்கள், வழிபடும் பக்தர்களும் அந்தத் திரையைக் கண்டு களிப்பதோடுதான் நிற்கிறார்கள். எந்தக் காலத்திலும் திரையை அகற்றுவதே இல்லை. திரையைக் கண்டவர்களையன்றி, திரைக்குப் பின் என்ன இருக்கிறது என்று அறிந்தவர் யாரும் இல்லை. கர்ப்பக் கிருகத்துள் என்ன இருக்கிறது என்ற புதிரை விடுவிப்பவரும் இல்லை. மூன்று கலசங்கள் கூரையின் மேல் இருப்பதனால் மூன்று பகுதிகள் இருப்பது தெரிகிறது. மூன்று மூர்த்திகளோ, மூன்று சக்கரங்களோ அங்கே இருக்கின்றன என்று ஊகிக்கலாம். மூன்று உலகம் என்று சொல்கிறோம்; அவற்றைக் கண்டவர்கள் யார்? மூன்று மூர்த்திகள் என்று புராணம் பேசுகிறது; அவர்களைத் தரிசித்தவர்கள் யார்? கதிர்காமத்திலும் மூன்று தங்கக் கலசங்களைக் காணலாமேயன்றி, அவற்றால் குறிப்பிக்கப் பெறும் மூன்று தெய்விகப் பொருள்கள் இன்ன என்று யாரும் அறிந்திலர்.
இங்கே பூசை செய்கிறவர்கள், சிங்களவர்கள். அவர்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள். கப்புராளைமார் என்று அவர்களைச் சொல்கிறார்கள். பூசை செய்கையில் வாயைக் கட்டிக்கொண்டே செய்கிறார்கள். விபூதிப் பிரசாதம் கொடுக்கிறார்கள். பௌத்தர்களுக்குக் கதிர் காம முருகன் ஒரு காவல் தெய்வம். இங்கே கதிர்காம நாதன் சந்நிதியை அடுத்து ஒரு சிறிய ஓட்டு வில்லைக் குடில் இருக்கிறது. அதைப் பிள்ளையார் கோயில் என்கிறார்கள். கதிர்காமக் கடவுளைக் கத்தரகம தெய்யோ என்று சிங்களவர் வழங்குகின்றனர். தெய்வம் என்பதே தெய்யோ ஆயிற்று. கிராமம் என்பதே கம என்று மாறியது. கத்தர என்பது ஒரு மரத்தின் பெயராம்; கருங்காலி மரம் என்றும் சொல்வர். அந்த மரம் அடர்ந்த இடம் ஆதலின் கத்தரகம என்ற பெயர் வந்ததாம். நம்முடைய நாட்டிலும் சிறந்த தலங்களுக்கு மரங்களால் பெயர்கள் அமைந்திருப்பதை நாம் அறிவோம். சிதம்பரத்துக்குத் தில்லை என்ற பெயர் மரத்தினால் வந்ததுதான். மதுரைக்குக் கடம்பவனம் என்ற பெயர் உண்டு. திருவாலங்காடு, திருநெல்லிக்கா என்று மரங்களால் அமைந்த தலப்பெயர்கள் பல. இப்படியே கதிர்காமமும் மரத்தால் பெற்ற பெயரை உடையது என்று தோன்றுகிறது. நம் நாட்டுக் கோயில்களில் தலவிருட்சம் இருக்கும். இக் கோயிலில் அரசமரங்கள் இருக்கின்றன.
ஆடி மாதத்தில் கதிர்காமத்தில் திருவிழா நடைபெறுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். திருநாளன்று கப்புராளைமார் எதையோ பரிவட்டத்துக்குள் வைத்து மூடிக் கொண்டு வருவார்கள். பழைய பெட்டி என்று சொல்கிறார்கள். அதைக் கொண்டுவந்து மூடிய பரிவட்டத்தோடே யானையின் மேல் ஏற்றுவார்கள். இப்படி ஏற்றும் போது யானை நிற்பதற்குரிய இடம் ஒன்று கோயிலில் இருக்கிறது. ஏற்றிய பிறகு யானை ஊர்வலமாக வரும். அதன்மேல் உள்ள பெட்டியையே யாரும் பார்க்க முடியாது. அப்படி இருக்கையில் அதற்குள் என்ன இருக்கிறதென்று தெரிந்து கொள்வது எப்படி?
பெட்டிக்குள்ளே மாணிக்கத்தால் ஆன விலை மதிக்க முடியாத முருகன் விக்கிரகம் இருக்கிறது என்று சிலர் சொல்லுகிறார்கள்.
"கனகமா ணிக்க வடிவ னேமிக்க
கதிரகா மத்தில் உறைவோனே"
என்று அருணகிரிநாதர் திருப்புகழில் பாடுகிறார். அவர் காலத்தில் முருகனுடைய திருவுருவம் எல்லாரும் கண்டு தரிசிக்கும்படி இருந்ததென்றும், பிற்காலத்தில் மாணிக்கங்களைக் கண்டு யாரேனும் கைப்பற்றி விட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால் அவ்விக்கிரகத்தை வெளிக் காட்டுவதில்லை யென்றும் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள்.
வேறு சிலர், மிகவும் சக்தியுள்ள யந்திரத்தகடு அந்தப் பெட்டிக்குள் இருக்கிறதென்றும், அதனால்தான் இத்தனை மக்கள் இங்கே வந்து வழிபடுகிறார்களென்றும் கருதுகின்றனர். கூட்டம் மிகுதியாக வரும் ஆலயங்களில் யந்திரங்கள் இருப்பது இந்த நாட்டில் பெருவழக்கு. இதற்கு ஆதாரமாக ஒரு கர்ணபரம்பரைச் செய்தி அங்கே வழங்குகிறது:
காஷ்மீரத்திலிருந்து ஓரன்பர் கதிர் காமத்துக்கு வந்து தவம் புரிந்தார். அவரை முத்துலிங்க சுவாமி என்று வழங்கினர். அவர் இத்தலத்தில் முருகன் பேரருள் உடையவகை இருத்தலை அறிந்து தம்முடைய ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று நினைத்தார். அவர் மந்திர சக்தி உடையவர். முருகனுடைய சக்தியை ஆகர்ஷணம் செய்து ஒரு யந்திரத்தில் அடைத்து எடுத்துச் செல்லச் சித்தமாக இருந்தார். புறப்படுவதற்கு முதல் நாள் இரவு, இங்கிருந்த சிங்களத் தலைவருடைய கனவில் வள்ளியம்மை எழுந்தருளி, "என் கணவனை முத்துலிங்க சுவாமி எடுத்துப் போகப் போகிறான். அதைத் தடுத்து எனக்கு மாங்கலியப் பிச்சை தரவேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். அவள் சிங்கள வேடர் குலத்திலே உதித்த பெண் ஆதலின் அப்படி வந்து முறையிட்டாள். உடனே சிங்களத் தலைவர் விழித்துக் கொண்டு முத்துலிங்க சுவாமியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டார். அவர் ஆகர்ஷணம் செய்து வைத்த யந்திரத்தைப் பெட்டிக்குள் இருந்தபடியே கோயிலிலே வைத்து வழிபடலானார்கள்.
இப்படி ஒரு கதை வழங்குகிறது. இதைக் கொண்டுதான் பெட்டிக்குள் யந்திரம் இருக்கிறதென்று சிலர் சொல்கிறார்கள். சந்நிதி வீதியின் தென் கோடியில் உள்ள வள்ளியம்மை கோயிலுக்கு அருகில் மாணிக்க கங்கைக் கரையில் முத்துலிங்க சுவாமியின் சமாதி இருக்கிறது.
கதிர்காம வேலன் திருக்கோயிலுக்குப் பின்புறம் பெரிய அரசமரம் ஒன்று இருக்கிறது. பௌத்தர்களுக்கு அரசமரம் கடவுளுக்குச் சமமானது. இந்தத் தலத்துக்குப் பௌத்தர்களும் முஸ்லிம்களும் கூட வந்து வழிபடுகிறார்கள். நான் போயிருந்தபோது எங்களுடனே ஒரு சிங்களவர் வந்திருந்தார்.கோயிலில் சில முஸ்லிம்கள் வந்து தொழுவதையும் கண்டேன்.
இந்தக் கோயிலைச் சுற்றிச் சிறிய சிறிய வளைவுள்ள புரைகளில் நாகத்தின் உருவங்கள் இருக்கின்றன. அருகில் தீபம் வைத்திருக்கிறார்கள்.
இந்தக் கோயிலின் எல்லைக்கு அப்பால் கீழ்த்திசையில் இதனோடு ஒட்டிய படியே தேவயானையின் கோயில் இருக்கிறது. அது கிழக்குப் பார்த்த சந்நிதியை உடையது. அதன் விமானம் தமிழ் நாட்டுக் கோயில் விமானத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் அங்கும் திரைக்குத்தான் பூசை நடக்கிறது. வள்ளியம்மை கோயிலிலும் திரைதான். ஊரிலுள்ள மடங்களில் சில சந்நிதிகள் உண்டு. அங்கும் திரை போட்டிருக்கிறார்கள். கதிர்காமமே திரை மயம் !
தெய்வயானை கோயிலில் கல்யாண மண்டபம் என்ற இடம் இருக்கிறது. அங்கே ஒரு துறவி இருக்கிறார். பரம்பரையாகத் தெய்வயானை கோயிலின் நிர்வாகம் இவரைப் போன்ற துறவிகளின் கையில் இருந்து வருகிறது.
எல்லாவற்றையும் தரிசித்துக்கொண்டு வள்ளியம்மை கோயிலுக்கு வந்தோம். அதன் அருகில் ஒரு முஸ்லிம் பக்தருடைய சமாதி இருக்கிறது. முத்துலிங்க சுவாமியின் தொண்டர் அவர் என்று சொல்கிறார்கள். சில மடங்களுக்குள்ளே போய்ப் பார்த்தோம். தமிழ் நாட்டிலிருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்றபடி அவை அமைந்திருக்கின்றன. அவற்றில் உள்ளவர்கள் பக்தர்களிடமிருந்து வாடகை பெற்று ஜீவனம் செய்கிறவர்கள்.
ஒருவாறு கதிர்காமத் தலத்தைத் தரிசித்தேன்; அமைதியாகத் தரிசித்தேன் ; கண்ணாலே கண்ட காட்சிகள் அதிகம் இல்லை; ஆனால் கருத்தால் உணர்ந்த காட்சிகள் பல ; உடம்பு புளகிப்ப நின்றதும் உண்டு.
எங்கோ காட்டுக்கு நடுவில் வேடர்கள் வாழும் இடத்தில் அவர்கள் செய்யும் பூசையை ஏற்றுக் கொண்டு முருகன் அருட்பெருங் கடலாக எழுந்தருளியிருக்கிறான்.
"வனமுறை வேட்ன் அருளிய பூசை
மகிழ்கதிர் காமம் உடையோனே"
என்று அருணகிரி நாதர் பாடுகிறார். கண்காணா மூலையிலே கதிர்காமம் இருக்கிறது. கருத்தும் காணா வகையிலே பரம ரகசியமர்கக் கதிர் காமப் பொருள் மறைந்திருக்கிறது. ஆனாலும் அந்தத் தலத்தின் பெருமை எவ்வளவு காலமாக, எவ்வளவு விரிவாகப் பரவியிருக்கிறது! எத்தனை உள்ளங்கள் அதனைக் காண வேண்டுமென்று துடிக்கின்றன! ஒரு முறை கண்ட பிறகும் மீட்டும் மீட்டும் செல்ல வேண்டும் என்று ஆர்வம் பூண்டவர்கள் எத்தனை பேர்!
இவ்வளவும் பக்தியினால் விளையும் விளைவுகள்: இறைவனுடைய திருவருட் கூத்தின் பிரபாவம். இவ்வளவு பேர் போய்க் கண்டார்கள் ; காண்கிறார்கள்: இனியும் காண்பார்கள். அவர்கள் அடையும் ஆனந்தத்துக்கும் குறைவில்லை. ஆனால், "கதிர் காமத்தின் இரகசியத்தைக் கண்டீர்களா?" என்று கேளுங்கள். "கண்டும் கண்டிலேன் என்ன கண்மாயமே !” என்றுதான் சொல்வார்கள்.
↑ இரண்டாவது முறை கதிர்காமம் போனபோது வெள்ளத்தைக் கண்டேன்.
↑ இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த கிளை ஒன்றை மிக வசதியாக இங்கே கட்டியிருக்கிறர்கள்.
↑ இப்போது இந்தக் கூரையின்மேல் தகடுகளே அடித்திருக்கிறார்கள்.