அறவோர் மு. வ

1986 ஆசிரியர் முனைவர் சி. பாலசுப்பிரமணியன் வேலம் என்னும் சிற்றூரிற் பிறந்து, திருப்பத்தூரில் தமிழாசிரியராக வாழ்வைத் தொடங்கி, சென்னையில் தமிழ்ப் பேராசிரியராக மலர்ந்து, மதுரையில் துணை வேந்தராகப் பணியாற்றி நிறைவெய்திய வாழ்வு, டாக்டர் மு. வ. அவர்களுடைய வாழ்வாகும். அவர்களுடைய மாணவனாகப் பச்சையப்பர் கல்லூரியில் 1954ஆம் ஆண்டிற் சேர்ந்தேன். 1958ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர்கள் பணியாற்றிய பச்சையப்பர் கல்லூரியிலேயே தமிழ்த் துறையில் அவர்கள் தலைமையில் பணியாற்றும் வாய்ப்பு அவர்களால் கிடைத்தது. அவர்கள் 1961இல் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுவதற்குச் சென்றார்கள். 1966ஆம் ஆண்டில் அவர்கள் தலைமையின் கீழ், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளனாகப் பணியாற்றும் பெரும்பேறு எனக்குக் கிட்டிற்று. இவ்வாறான பேற்றினைப் பெற்ற எனக்கு, அவர்கள் அருள் நிழலிலிருந்தும், அறிவு வீச்சிலிருந்தும், அன்பு நெகிழ்ச்சியிலிருந்தும் பாடங்கள் பலவற்றைக் கற்கும் வாய்ப்பு பலகாலும் வாய்த்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினர் என்னைப் பேராசான் மு. வ. குறித்து அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒன்று நிகழ்த்த அழைத்தபொழுது, அவர்களை அறவோராகவும், கலைஞராகவும் கண்டு மகிழ்ந்தேன். அதன் விளைவே இந்நூல். அவர்கள் குறித்த பிற கட்டுரைகள் நூலின் பிற்பகுதியில் இடம் பெற்றுள்ளன. டாக்டர் மு. வ. அருகில் இருந்து யான் பெற்ற எண்ணங்களும் உணர்வுகளும் கருத்துகளும் இம் மாற்கண் இடம்பெற்றுள்ளன எனலாம். என நூல்களை ஏற்று என்னைப் புரந்து வரும் தமிழுலகம், இந்நூலினையும் ஏற்று என்னை ஆதரிக்கும் என்னும் துணிபுடையேன். - சி. பா.

Tamil EditorTamil editor will bring best of tamil literature before you.
Please join our telegram group for more such stories and updates.telegram channel