←செந்தமிழும் கொடுந்தமிழும்
தமிழ்நாடும் மொழியும் ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமிமுத்தமிழ்
தமிழ் இலக்கண வளர்ச்சி→
437175தமிழ்நாடும் மொழியும் — முத்தமிழ்பேரா. அ. திருமலைமுத்துசாமி
3. முத்தமிழ்.
"சங்கத் தமிழ் மூன்றுந் தா"
முத்தமிழும் நான்மறையும் ஆனாய் கண்டாய்”
என்பன ஆன்றோர் வாக்கு. தமிழ் மொழிக்குள்ள சிறப்புக்களுள் ஒன்று இம் முத்தமிழ்ப் பாகுபாடாகும். இதலை வேறு மொழிகளிலே இந்த மூவகைக் கூறுகள் இல்லை என்பதன்று பொருள். ஆனல் முதன் முதலில் தம் மொழியிலே இப்பிரிவு ஒன்று உள்ளது என்று உணர்ந்தவர் தமிழ் மக்களே. அந்த உணர்ச்சியிலேதான் தமிழ் மக்களின் சிறப்பும் சீரும் பொதிந்து கிடக்கின்றன. இனி இக்கூறுகளைப் பற்றிப் பார்ப்போம்.
முத்தமிழ் என்பவை இயல், இசை, நாடகம் அல்லது கூத்து என்பனவாம். இயலுக்குப் பின்னர் இசையும், அதன் பின் கூத்தும் தோன்றி வளர்ந்தது என்பர் பரிதிமாற் கலைஞர். கூத்து, இசை, இயல் என்ற முறையே மு. வ. போன்றார் கொள்கை. எதுவாயினும் ஆகுக. இம்மூன்று பிரிவும் இருவருக்கும் உடன்பாடே என்பது வெளிப்படை.
இயற்றமிழ்
"இயற்றமிழ் என்பது தமிழர் யாவர் மாட்டும் பொதுவாகச் செய்யுள் வழக்கு உலக வழக்கு என்கிற இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும் செய்யுளுமாகும் நூற் களின் தொகுதியாகும்” என்பது பரிதிமாற் கலைஞரின் இயற்றமிழ் பற்றிய விளக்கமாகும்.
பரிபாடல் நீங்கிய சங்கத் தொகை நூற்களும், அவற்றின் உரை நூற்களும், தற்காலத்தில் வெளிவந்துள்ள செய்யுள் நூற்களும், உரைநடை நூற்களும் இயற்றமிழ் நூற்களாகும். இயற்றமிழ் நாடகத் தமிழுக்கும் இசைத் தமிழுக்கும் உயிர் போன்றதாகும். இதனாலேயே இது முதலில் வைக்கப்பட்டது என்பர் பரிதிமாற் கலைஞர்.
இசைத்தமிழ்
பண்கூட்டித் தாளமறுத்துப் பாடப்படுவன இசைப்பாக்களாம். நாடகத் தமிழின் நலிவு கண்டு கலங்கிய நந்தம் நெஞ்சுக்கு இசைத் தமிழ் வளர்ச்சி சிறிது ஆறுதல் அளிப்பதாகத் தெரிகிறது. அயலவர் படையெடுப்பாலும் உள் நாட்டுக் குழப்பங்களாலும் தமிழகம் அல்லல் பல அடைந்த போதிலும் ஒரு பக்கத்தில் இசைத்தமிழும் வளர்ந்து கொண்டேதான் வந்திருக்கிறது.
சங்க காலத்திலே பெருக்கெடுத்த இசை வெள்ளம் களப்பிரர் ஆட்சி மணலிலே மறைந்து பின் பல்லவர் சோழர் காலங்களிலே தேவார திவ்யப் பிரபந்த இசை வெள்ளமாக மாறிப் பின் முகமதியர் படையெடுப்பிலே வற்றி விடுதலைப் போரின்போது பாரதி பாடல்களாகவும் பாரதிதாசனின் இசையமுதாகவும் மீண்டும். இத்தமிழகத் திலே இசைக் கடலாகக் காட்சி அளிக்கிறது.
தமிழர் வாழ்வே இசை மயமாகத்தான் உள்ளது. திருமணத்தில் மங்கலப் பாட்டு, பெற்ற மழலை உண்ணப் பாட்டு, விளையாடப் பாட்டு, உறங்கப் பாட்டு, வேலை செய்யும்போது தெம்மாங்குப் பாட்டு, ஊஞ்சல் பாட்டு, இறுதியிலே இழவு வீட்டிலே ஒப்பாரிப் பாட்டு - இவ்வாறு எங்கும் எப்பொழுதும் பாட்டு; பாட்டு, ஒரே பாட்டுமயம்.
இன்று நம்மிடையே உள்ளனவெல்லாம் இசை நூல்களே தவிர இசை இலக்கண நூல்கள் அல்ல. அடியார்க்கு நல்லார் வாயிலாகப் பெருங்குருகு, பெருநாரை, பஞ்ச பாரதீயம் ஆகிய பண்டை இசைத் தமிழ் நூல்கள் இருந்து இறந்தன என்பதை அறிகிறோம். சங்கத் தொகை நூல்களிலே இசைத் தமிழை நம்முன் காட்டிக் களிப்பூட்டுவது பரிபாடல் என்ற ஒரு நூலே. அந்நூலும் முற்றும் கிடைக்கவில்லை. ஒரு நூல்தானே கிடைத்துள்ளது என்று எண்ணி சங்க காலத்திலே இசைத் தமிழ் அவ்வளவு தூரம் வளர்க்கப் படவில்லையோ என ஐயுறல் அறிவுடமையன்று. சங்க காலத்திலே இசை நன்கு வளர்க்கப்பட்டது: சங்கச் சான்றோர்கள் நிலத்தைக் குறிஞ்சி முதலிய ஐந்து வகையாகப் பிரித்தனர். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய இசையும், அவ்விசையைப் பாட வல்ல இசைக் கருவிகளும் இன்ன இன்ன எனத் தம் அரும்பொருட் களஞ்சியமான நூல்களிலே குறித்துச் சென்றுள்ளனர்.
குறிஞ்சிக்குப் பண் குறிஞ்சிப் பண். அதனைப் பாடற்குக் கருவி யாம யாழ், தொண்டகப் பறை என்பன. முல்லைக்குப் பண் சாதாரி, கருவி ஏறுகோட் பறை. மருதத்துக்குப் பண் மருதப் பண்; கருவி மண முழவு. நெய்தல் நிலப் பண் செவ்வழிப் பண்; கருவி மீன் கோட் பறை. பாலைக்குப் பண் பாலைப் பண்; கருவி நிறைகோட் பறை. இவற்ருேடு ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியாக யாழ் என்ற இசைக் கருவியும் இருந்தது.
இன்று நாகரிகத்தின் உச்சியிலே நிற்பனவாக நம்மவரால் புகழ்ந்து போற்றப்படும் நாடுகள் எல்லாம், உடைக்கும் உணவுக்குமே காற்றோடும் கடுவிலங்கோடும் போராடிக் கொண்டிருந்த காலத்திலே, நிலத்தின் தன்மை அறிந்து, அதை ஐவகையாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பண்ணையும், அவ்வப் பண்களைப் பாடற்குரிய ஐவகை இசைக் கருவிகளையும் உருவாக்கி இசைத் தமிழை வளர்த்த தமிழ் மூதாதையர்களை என்னென்று புகழ்வது? என்னே சங்ககால இசைத் தமிழ்! சங்க மருவிய நூல்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்திலே இசைப் பாக்கள் காணப் படுகின்றன. கானல் வரி, ஆய்ச்சியர் குரவை, வள்ளைப் பாட்டு முதலியன இசைப் பாக்களே.
அருமையாக இசைத் தமிழ் வளர்ந்து வந்த சங்க காலத்திற்குப் பிறகு காட்டுமிராண்டி வாழ்க்கையுடைய களப்பிரர் நுழைந்தனர் . பயன்? அழிந்த பல தமிழ்க் கலையோடும் இசைத் தமிழ்க் கலையும் நசியலாயிற்று. குற்றுயிரும் குறையுயிருமாகத் தமிழிசை வாழலாயிற்று. கி. பி. 550-இல் காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் போன்ற இசைப் பாக்கள் பாடி இசைத் தமிழுக்கு உயிரும் உணர்வும் ஊட்டினர். அம்மையாருக்குப் பின்னர் தமிழ் நாட்டில் இசைத்தமிழ் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட லாயிற்று. தமிழன்னை இசை மாரியில் குளித்தாள்; இசை வெள்ளத்தில் முழுகினுள். களப்பிரர் ஆட்சியில் ஏற்பட்ட குறுமறுக்களும் வடுக்களும் அவள்தன் திருமுகத்தினின்றும் திருமேனியினின்றும் மறைந்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் இசைத் தமிழைப் பக்திச் சுவையோடு கலந்து நாட்டிலே பரப்பினர். சமணமும் பெளத்தமும் இசையை வெறுத்தமையால் அம்மதங்களும் மக்களால் வெறுக்கப்பட்டன. சைவமும் வைணவமும் இசைமூலம் வளரலாயிற்று. அப்பர் முதலிய சைவக் குரவர் நால்வராலும் பாடப்பட்ட பண்ணுேடு கூடிய இசைப் பாக்களே தேவாரம், திருவாசகம் என்னும் நூல்களாகும். நாத்திகன்கூட இப்பாடல்களைப் பண்ணுேடு பாடக் கேட்பின் உள்ளம் நெக்குருகி நெகிழ்ந்து கண்ணிர் சொரிவான்.
ஒவ்வொரு பாடலுக்கும் உள்ள பண்ணும் திறமும்
பாடலின் தலைப்பில் குறிக்கப்பட்டுள்ளன. ஆனல் குருடன் கையில் உள்ள ஒவியம் போலவும், ஊமையன் கனாப்போலும் அவை உள்ளன. இன்று அந்தப் பண்ணை அறிவாரும் இல்லை; அறிந்து பாடுவாரும் இல்லை. தேவார இசையின் சிறப்பை அறிந்த சாரங்க தேவன் என்பான் வட மொழியில் சங்கீத ரத்னகரம் என்று தான் எழுதிய நூலில் தேவார இசைகளையே வடமொழிப் பெயர்களால் பெரிதும் விரித்து எழுதியுள்ளான். இவன் காலம் கி. பி. 1300. இவன் தெளலதாபாத் தேவகிரி அரசன் சிம்மணர் அவையில் புலவகை இருந்தவன்.
தேவாரத் தமிழிசையே இன்று கர்னாடக இசைக்கு உயிராகவும் கருவாகவும் அமைந்துள்ளது என்று சி. ஆர். சீனிவாச அய்யங்கார், இசைச் செல்வர் இலக்குமணப்பிள்ளை, எம். எஸ். இராமசாமி ஐயர் ஆகிய இசைப் புலவர்கள் கூறியுள்ளனர். தேவார நாயன்மார்கள், திவ்யப் பிரபந்த ஆழ்வார்கள் ஆகியோர் காலத்திற்குப் பின்னர் திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது இசைத் தமிழ்ப் புலவர்கள் தோன்றி இசைத் தமிழை வளர்த்தனர். இவர்களுக்குப் பின்பு கி. பி. 13, 14, 15, 16-ஆம் நூற்ருண்டுகளிலே முசுலீம்களும், நாயக்கர்களும், மராட்டியரும் தமிழ் நாட்டை ஆண்டதால் தமிழிசையும் இசை நூல்களும் தாயற்ற சேய்களாயின; தவித்தன; பல உயிர் விட்டன. என்ருலும் இசைத்தமிழ்க் குழவிக்கு அவ்வப்போது செவிலித் தாயர் தோன்ருமல் இல்லை.
கி. பி. 1500-இல் அருணகிரி நாதர் தோன்றினர். திருப் புகழ் என்னும் இசைத்தமிழ் மழை தமிழகத்திலே பொழிந்தது: இடைவிடாது பொழிந்தது. இவருக்குப் பின்னர் வந்தவர்கள் தமிழிசையைத் தனிப்பட்ட முறையிலே வளர்க்கவில்லை. பிற மொழி இசையோடு கலந்தே வளர்த்தனர். தமிழிசையும் ஆரிய இசையும் கலந்து கர்டைக இசை பிறந்தது. ஆரிய மொழிக்கெனத் தனி இசை இல்லை. வட நாட்டுத் திராவிட மொழிகட்கு உள்ள இசையிலே ஆரிய மொழியின் செல்வாக் குச் சிறிது ஏற்பட்ட இசையே ஆரிய இசையாம். இன்றுள்ள கர்னாடக இசையின் கூறுகட்குள்ள-பண்கட்கு உள்ள பெயர்களையும் பண்களையும் தமிழ் முறைப்படி மாற்றியமைத்து விட்டால் அது தமிழிசையாகிவிடும். கர்னாடக இசையின் உயிரும் கருவும் இரத்தமும் சதையும் எலும்பும் தமிழ் - தமிசையே; அதன் தோலும் ஆடையுமே பிற மொழி இசை.
முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர், கவிக்குஞ்சர பாரதியார் முதலியோர் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய இசைப் புலவர்களாவர். இராமாயண நாடகம் அருணாசலக் கவிராயரால் எழுதப்பட்டது. இதிலே கீர்த்தனைகள் உள. இராமசாமிசிவன், ஆனை ஐயா கனம் கிருட்டின அய்யர், கோபாலகிருட்டின பாரதியார், இராமலிங்க அடிகள், அண்ணாமலை ரெட்டியார் முதலியோர் 19-ஆம் நூற்றாண்டு இசைப் புலவர்களாவார்கள். இக்கால இசை நூல்களில் தலைசிறந்தவை இராமலிங்கர் பாடிய அருட்பா, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து முதலியவையாம். இருபதாம் நூற்றாண்டு இசைப் புலவரில் தலைசிறந்தவர் பாரதிதாசனாவார், மற்றும் நாமக்கல் கவிஞர், கவிமணி, பாரதியார் முதலியோரும் இசைத் தமிழில் பாக்கள் எழுதியுள்ளனர். இவர்கள் தவிர, உடுமலை நாராயண கவி, பாபநாசம் சிவன், கண்ணதாசன், கா. மு. செரிப் போன்றவர்கள் திரைப்படக் கதைகளுக்கு இசைப் பாடல்கள் எழுதி வருகின்றனர்.
நாடகத் தமிழ்
படிக்காத பாமரர்க்கும் நேரமில்லாத படித்தவர்க்கும் நல்லறிவும் இன்பமும் பயத்தற்பொருட்டுப் பயன்படுவது நாடகத்தமிழாகும். இசையும் இயலும் செவிக்குத்தான் இன்பந் தருவனவாகும். நாடகமோ கண்ணுக்கும் இன்பத் தரும் வன்மை படைத்ததாகும். தமிழ் மொழியிலே நாடக நூற்கள் முதலில் மதவிடயமாகத் தோன்றியிருக்கவேண்டும் என்று கருதுவது அவ்வளவு சரியன்று. இக்கருத்து இடைக் கால நாடகவளர்ச்சிக்குப் பொருத்தமாகும். இடைக் காலத்திலே நாடகத் தமிழைச் சமயமே வளர்த்தது என்னலாம். அதிலும் சைவமும் வைணவமுமே ஆடல் பாடல்களையும் கூத்தையும் நன்கு வளர்த்தன என்னலாம். முதன்முதலில் ஆடல் பாடல்களே நாடகத் தமிழின்கண் விளங்கின. பின்னர் கதைகள் பல நுழைந்தன. கதை கூறும் உரையாடல்களும் காலப்போக்கில் நுழைந்தன. அதன் பிறகு நாடகம் வேத்தியல் பொதுவியல் என இரண்டாகப் பிரிந்தது. தொடக்க காலத்திலே சீரும் செழிப்புமாக விளங்கிய நாடகத் தமிழ் பிற்காலத்தில் ஆரியராலும் சமணராலும் வீழ்ச்சி அடைந்தது. நாடகம் பாமரர் கையகப்பட்டுச் சீரழிந்தது. பரத நாட்டியம் காமக் கணிகையர் வயப்பட்டுச் சீர்குலைந்தது. சுருங்க உரைப்பின் இவர்கள் தங்கள் வயிற்றை வளர்க்கக் கலையைப் பயன்படுத்தினர். கலை கொலையுண்டது.
வடமொழித் தொடர்பாலேயே தமிழில் நாடக நூல்கள் தோன்றின என்பர் ஒருசிலர். இக்கூற்றுக்கு இக்காலத்தில் யாரும் செவி கொடுப்பதில்லை. ஏன்? இக்கூற்றிலே உண்மை வரட்சி மிக்கு இருத்தலால் என்க. வட மொழித் தொடர்பின்றியே தமிழிலே நாடகம் தோன்றி வளர்ந்தது என்பதைத் தொல்காப்பியரும் சிலம்பிற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் விளக்கி நிற்கின்றனர். 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்' என்பது தொல்காப்பியச் சொற்றொடர். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை உரையிலே அடியார்க்கு நல்லார், நாடகத் தமிழின் இலக்கணம், நாடகத் தமிழின் இலக்கணத்தைச் செவ்வனே விரித்துக் கூறுகின்ற இலக்கண நூல்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல; அவர் காலத்து நாடகத் தமிழ் நூல்களிலிருந்து அந்தந்த இடங்களுக்கேற்ற சில நாடகத் தமிழ் நூற்பாக்களையும் இடையிடையே எடுத்துக்காட்டியுள்ளார். தொல்காப்பியர் காலத்திலே வள்ளிக் கூத்து வழக்கத்தில் இருந்ததாக அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையின் மூலம் அவர் காலத்தில் நாடகம் மிகச் சீரிய முறையில் விளங்கியது என்பதையும் நாடகத் தமிழ் நன்கு வளர்க்கப்பட்டது என்பதையும் நாம் உணரலாம்.
அகத்தியம், பரதம், மாபுராணம், பூத புராணம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் ஆகியன பண்டைக் காலத்தில் விளங்கிய நாடகத் தமிழ் நூல்களாம். அடியார்க்கு நல்லார் நாடகத் தமிழ் இலக்கண நூல்களைக் குறித்துள் ளாரே தவிர நாடகத் தமிழ் இலக்கிய நூல்களைக் குறிக்கவில்லை. இதனால் அவர் காலத்திலோ அன்றி சங்க காலத்திலோ நாடகத் தமிழ் இலக்கிய நூல்கள் இல்லை என்பது பொருளல்ல. இருந்து அவர் காலத்திலே இறந்திருக்கலாம். அவர் காலத்தில் கூட மேலே குறித்த அத்தனை இலக்கண நூல்களும் இருந்திருக்கவில்லை. அவரே அகத்தியம், பரதம், மாபுராணம், பூத புரணம் முதலிய நூல்கள் தன் காலத்தில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தில் நூல்வடிவிற் கிடைத்தவை மதிவாணர் நாடகத் தமிழ் நூல், பரத சேனாபதீயம் என்னும் இரண்டு நூல்களே. ஆனால் இவையும் இக்காலத்திற் கிடைக்கவில்லை. இந்நூல்களில் மிகப் பழமையானது என்று கருதப்படுவது முத்தமிழ் இலக்கணம் கூறும் அகத்தியமாகும். இது அகத்தியரால் இயற்றப்பட்டது என்பர். பரதமும் முறுவலும் அடியார்க்கு நல்லார் காலத்லே கேள்வி அளவாய் நின்ற பழைய நூல்களாகும். சயந்தமும் குணநூலும் இவரால் மேற்கோளாகக் காட்டப்படுகின்றன. குண நூல் நாடக உறுப்பாகிய அகச்சுவையைப் பற்றி விரிவாகக் கூறிய நூலென்று கருதப்படுகின்றது. செயிற்றியம் என்னும் நூல் சூத்திர யாப்பில் செயிற்றியனாரால் செய்யப்பட்டது. இந்த நூலிலிருந்து அடியார்க்கு நல்லாரும் இளம்பூரணரும் சில சூத்திரங்களை எடுத்துக் காட்டுகின்றனர். பரத சேனாபதீயம் என்னும் நூலைச் செய்தவர் ஆதிவாயிலார் என்னும் ஆசிரியர் ஆவார். இது வெண்பாவாற் செய்யப்பட்டது; அடியார்க்கு நல்லாரால் மேற்கோள் நூலாகக் கொள்ளப்பட்டது. மதிவாணர் நாடகத்தமிழ் நூல் செந்தமிழ்ப் புலவரும் நாடகாசிரியரும் கடைச்சங்கத்துப் பாண்டிய மன்னருமாகிய மதிவாணரால் செய்யப்பட்டது என்பர். இந்நூல் சூத்திரப் பாவாலும் வெண்பாவாலும் செய்யப்பட்டது. இந்நாடக நூலின் சில சூத்திரங்களை சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கையாண்டிராவிட்டால் இன்று தமிழர் நாடகக் கலையற்றவர் என்று கூற இடம் ஏற்பட்டிருக்கும். கருவூலங்கள் போன்ற இத்தகைய நூல்கள் காலவெள்ளத்தால் அழிந்துபோயின. எனினும் நாடகம் தமிழ் மொழியின் வீடகத்திற்குப் பழமையான ஏடகமாய் இலங்கியது என்பது தெற்றென விளங்கும்.
சங்க காலத்திலும் பிற்காலச் சோழர் காலத்திலும் செழிப்போடு வளர்ந்துவந்த நாடகத் தமிழ் இடைக்காலத்திலே நலிந்து ஒழிந்தது. இதற்குக் காரணம் சமணம் போன்ற பிற சமயங்களே. சமணர்கள் நாடகத்தையும் இசையையும் வெறுத்தனர். நச்சினார்க்கினியர்கூட இசை, நாடகம் காமத்தை விளைவிக்கும் என்றார். இக் கருத்துக்கள் மக்களிடையே பரவப் பரவ நாடகத் தமிழை வளர்ப்பவர்கள் கூத்தாடிகள் என்றும் இழிசினர் என்றும் ஒதுக்கப்பட்டனர். இதனால் இடைக்காலத்திலே நாடகத்தமிழ் வளர்ச்சி குன்றித் தேயலாயிற்று.
பிற்காலச் சோழர்களிலே வீரமும் ஈரமும் பெரும் புகழும் கொண்டு வாழ்ந்த இராசராச சோழன், அவன் மகன் இராசேந்திர சோழன் ஆகிய இரு மன்னர் காலத்திலும் திருவிழாக் காலங்களில் இராசராசேசுவரன், இராசராச விசயம் முதலிய நாடகங்கள் நல்ல முறையில் நடிக்கப்பெற்றன என்பதும், சிறந்த நடிகர்களுக்குப் பல பரிசில்களும் தானியங்களும் வழங்கப்பட்டன என்பதும் அக்காலக் கல்வெட்டுக்களினால் தெரிகின்றன, இவ்வாறு சீரும் சிறப்புமாக விளங்கிய நாடகம் பிற்காலத்தில் சமணர் கொள்கையாலும் பாமரர்களாலும் இழிந்த நிலை அடையலாயிற்று. இதனால் நாடகத் தமிழ் நூல்கள் பல கேட்பாரற்று வீழ்ந்தன. வீழ்ந்த சில நூல்களின் வேர்களினின்றும் சென்ற நூற்றாண்டிலே பல நாடகத் தமிழ் இலக்கிய நூல்கள் கிளைத்தன. இவ்வாறு கிளைத்த நூல்கள் பெரும்பாலும் செய்யுட்களால் ஆனவை. மேலும் சமய சம்பந்தமான நாடகங்களாகவும் அவை இருந்தன. அவைகளில் குறிப்பிடத்தக்கன அரிச்சந்திர புராணம், இராமாயணம் மாபாரதம், குற்றாலக் குறவஞ்சி, பள்ளு முதலியவைகளாம். பிறகு கி. பி. 1891-ஆம் ஆண்டிலே தமிழ் நாடக உலகில் ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டது. இதற்குக் காரணமாயிருந்த பெரியார் தூ. தா. சங்கரதாசு சுவாமிகள் ஆவார். இவர் நாற்பது நாடகங்கள் வரை எழுதினார். பழைய நாடகங்களைச் செப்பம் செய்தார். இவர் எழுதிய நாடகங்களில் பெரும் பான்மை புராண இதிகாச நாடகங்களே. ரோமியோ, சூலியத், சிம்பலைன், ஒதெல்லோ ஆகிய கவி சேக்ச்பியர் நாடகங்களும் இவரால் எழுதப்பட்டு நடிக்கப்பட்டன. இன்று தமிழ்த் திரைப்படங்களிலே நடித்துவரும் நடிகர் அனைவரும் இவரால் உருவாக்கப்பட்டவர்களே. எனவே இவரைப் பலரும் 'தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்' என்று இன்றும் பாராட்டுகின்றனர். தஞ்சாவூரைச் சார்ந்த நவாப் கோவிந்தசாமி என்பவர் முதன் முதலாக திரை, காட்சி முதலிய அமைப்புகளோடு கொட்டகைகளில் நாடகத்தை நடத்திக் காட்டினார். மேலும் சென்னையிலும், மதுரையிலும், தஞ்சையிலும், குடந்தையிலும் பல நாடகச் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கல்யாணராமையர் கம்பெனி, ராமுடு ஐயர் கம்பெனி, வேல் நாயர் சண்முகானந்த சபா, சி. கன்னயா கம்பெனி முதலிய கம்பெனிகள் நாடகக் கலையை இக்காலத்தில் நன்கு வளர்த்தன. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் தங்கள் நடிப்புத் திறமையால் மக்கள் நாட்டத்தை எல்லாம் கவர்ந்தனர். நாடகத் தந்தையாக விளங்கும் பேராசிரியர் ப. சம்பந்த முதலியாரால் தொடங்கப்பெற்ற சுகுண விலாச சபை கி. பி. 1891-இல் தொடங்கப்பெற்ற அமெச்சூர் சபைகளில் தலைசிறந்ததாகும். இச்சபையில் எஸ். சத்தியமூர்த்தி, சி. பி. இராமசாமி ஐயர், டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்ற தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்கள் நடித்திருக்கிறார்களெனில் இச்சபையின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ! நாடகத் தந்தை ப. சம்பந்த முதலியார் அவர்களின் சலியாத உழைப்பினாலும் ஆர்வத்தினாலும் இன்று நாடகக் கலை மிக உயர்ந்து விளங்குகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இவர் இதுவரை எண்பது நாடங்கள் எழுதி உள்ளார். இவர் சிறந்த நடிகரும்கூட. கவி சேக்ச்பியர், காளிதாசன் இவர்களது நாடகங்கள் பலவற்றைச் சிறந்த முறையில் தமிழ்ப்படுத்தி உள்ளார். இவரது கற்பனையில் எழுந்த மனோகரா என்னும் நாடகம் சிந்தனைக்கோர் விருந்தாகும். இவர் எழுதிய சபாபதி நாடகம் சிறந்த நகைச்சுவை நாடகமாகும்.
கி. பி 1922-க்குப் பின்னர் ஜே. ஆர். ரங்கராஜுவின் இராசாம்பாள், இராசேந்திரன், சந்திரகாந்தா, மோகன சுந்தரம், வடுவூர் துரைசாமி எழுதிய மேனகா முதலிய சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட நாவல்களை எம். கந்தசாமி முதலியார் நாடகங்களாக்கித் தரவே, இளைஞர்கள் ஆர்வத்தோடு இவைகளை நடித்து நாட்டில் மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். இதே போன்று இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில், தெ. பொ. கிருட்டினசாமிப் பாவலர் எழுதிய கதரின் வெற்றி, தேசியக் கொடி, வெ. சாமிநாத சர்மாவின் பானபுரத்து வீரன், எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு, ஐயாமுத்துவின் இன்பசாகரன் முதலிய தேசிய நாடகங்கள் நடிக்கப்பெற்ற காரணத்தால் மக்கள் உணர்வும் உரமும் பெற்றனர்.
அறிஞர் சி. என். அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, ரா. வெங்கடாசலம் எழுதிய பெண், மனைவி, எஸ். டி. சுந்தரம் எழுதிய மனிதனும் மிருகமும், கல்கியின் கள்வனின் காதலி, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் இழந்த காதல், ஐம்பதும் அறுபதும், விலங்கு மனிதன், கு. சா. கிருஷ்ணமூர்த்தியின் அந்தமான் கைதி, ப. நீலகண்டனின் முள்ளில் ரோசா, நாம் இருவர், எஸ். வி. சகஸ்ர நாமம் எழுதிய பைத்தியக்காரன், சின்னராஜுவின் இரத்தக் கண்ணீர், நாரண துரைக்கண்ணனது உயிரோவியம், நா. சோமசுந்தரம் எழுதிய இன்ஸ்பெக்டர் முதலியன தமிழர் தம் இதயத்தைக் கவர்ந்த முற்போக்கு நாடகங்களாகும்.
இன்று தமிழ் நாடகம் உலகோர் கண்டு வியக்கும் வண்ணம் வளர்ந்து வருகிறது. அதற்குக் காரணம் மேலே குறிப்பிட்ட தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களேதான். அவர்கள் தான் நல்ல தமிழிலே துடிதுடிப்பும் கருத்துச் செறிவும் கற்பனை வளமும் பொருந்திய பல நாடகங்களை எழுதி நடித்து வருகின்றனர். இன்று நாடகத் தமிழின் உயிராக விளங்கும் ஒரு நூல் உளது எனில் அது பேராசிரி யர் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயமே என்க. பரிதிமாற் கலைஞர் நாடகம் பல எழுதியுள்ளார் எனினும், அவை படிக்கப் பயன்படுவனவே தவிர நடிக்கப் பயன்படுவன அல்ல. ஆனால் இவர் கி. பி. 1891-ல் எழுதிய நாடகவியல் என்னும் நூல் நாடக இலக்கணத்தை நன்கு எடுத்தியம்புகிறது. இவ்வாண்டில் தான் மனோன்மணீயம் எழுதப்பட்டது.
இன்று நாடக உலகின் முடிசூடா மன்னர்களாய் விளங்குபவர்கள் நவாப் இராசமாணிக்கமும், அவ்வை டி. கே. சண்முகமும் ஆவர். நவாப் இராசமாணிக்கம் நடத்தும் இராமாயணம், ஏசு நாதர், சபரிமலை ஐயப்பன், தசாவதாரம் முதலிய நாடகங்களும், டி. கே. சண்முகம் நடத்தும் இராசராச சோழன், தமிழ்ச் செல்வம், மனிதன், இமயத்தில் நாம், ஒளவையார் முதலிய நாடகங்களும் இன்று மக்கள் உள்ளங்களை எல்லாம். கொள்ளை கொண்டனவாகும். மேலும் புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன், சகஸ்ரநாமம், எம். ஆர். இராதா, மனோகர், சிவாஜி கணேசன் போன்றவர்களும் திரைப்படங்களில் நடிப்பதோடமையாது அவ்வப்பொழுது சிறந்த நாடகங்களையும் நடத்திவருகின்றனர்.
சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற நாடகங்களுக்கும் இந்த நூற்றாண்டில் நடைபெறுகின்ற நாடகங்களுக்கும் வேறுபாடு மிகவுள. முற்காலத்து நாடகங்களிலே பாட்டுக்களே விஞ்சியிருந்தன. அக்கால நாடகங்களின் வெற்றி அவற்றிலுள்ள பாடல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இருந்தது. ஆனால் நாளாக ஆக மக்கள் நெஞ்சம் பாட்டை விட்டு வசனத்திலும் நடிப்பிலும் சென்றது. இதனால் வர வர நாடகங்களில் பாடல்கள் குறைந்தன. வசனமும் நடிப்பும் மிகுந்தன. ஆனால் சென்ற நான்கு ஆண்டுகளாக மக்களின் நெஞ்சம் வசனத்திலும் நடிப்பிலும் மட்டுமல்ல, கதையமைப்பிலும் செல்லத் தலைப்படலாயிற்று. வசனமும் நடிப்பும் நடிப்புக்கேற்ற கதையமைப்பும் இருந்தால் தான் இன்று நாடகங்கள் முழு வெற்றியைப் பெற முடியும்.
பாடல்கள் மிகுதியாகப் பெற்ற நாடகம் இடைக்காலத்திலே அயலவர் கூட்டுறவால் நலிந்து, பிற்காலத்திலே பல பெருமக்களால் உயிர்பெற்று, உரை நடையைப் பெற்று இக்காலத்தில் வசனமும் நடிப்பும் பெற்று கதையமைப்பை உயிராகக் கொண்டு நிலவுகிறது. சிற்பி கையிற் கிடைத்த கல் சிற்பமாகும்; சிறுவன் கையிற் கிடைத்த கல் பிறர் மீது வீச உதவும். அது கல்லின் குற்றமன்று; மனிதனின் குற்றமே. அது போல நாடகத்தால் தீமை விளையின் அது நாடகத்தின் குற்றமன்று; அதனைப் பயன்படுத்துவோரே குற்றவாளிகள். எனவே நாடகத்தை நாம் தான் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். நாடகத்தால் நாட்டு மக்கள் பெற்ற, பெறுகின்ற பயன்கள் எண்ணத் தொலையாதனவாகும்.