←தமிழ் மொழியும்
தமிழ்நாடும் மொழியும் ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமிதமிழ் நெடுங்கணக்கும் பிறவும்
தமிழ் மொழி வளர்ச்சி→
437178தமிழ்நாடும் மொழியும் — தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்பேரா. அ. திருமலைமுத்துசாமி
6. தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்
த மிழ் நெடுங்கணக்கு என்ற சொற்றொடர் தமிழிலுள்ள உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் ஆகிய எழுத்துக்களைக் குறிப்பதாகும். தமிழ் எழுத்துக்களிலே சிலவற்றிற்கு உயிர் என்றும், இன்னும் சிலவற்றிற்கு மெய் என்றும், வேறு சிலவற்றிற்கு உயிர்மெய் என்றும், ஆய்தம் என்றும் பெயரிட்டனர். நந்தம் செந்தமிழ்ப் புலவர்கள். உயிர், மெய், முதலிய பெயர்களே அவற்றினாற் குறிக்கப்படும் எழுத்துக்களின் இயல்பைத் தெள்ளத் தெளியக் குறிக்கும் தகையவாம். உயிர் என்ற பெயரால் குறிக்கப்படுகின்ற எழுத்துக்கள், வேறு எவற்றின் துணையும் இன்றித் தனியுரிமையோடு இயங்கவல்லன. எனவே அவை உயிர் என்ற பெயரால் அழைக்கப்பட்டன. அ முதல் ஒளகார இறுதியாக உள்ள பன்னிரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாம். உந்தியிலிருந்து எழுகின்ற காற்றானது வாயின் வழியே யாதொரு தடையுமின்றி வெளிவருகின்ற பொழுது பிறப்பது உயிராகும். உயிர் எழுத்துக்களிலே பலவகை உண்டு.
அ, இ, உ, எ, ஒ என்பன குறில்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள என்பன நெடில்கள்.
அ, இ, உ என்பன சுட்டெழுத்துக்கள்.
உயிர் எழுத்துக்களின் அடிப்படை எழுத்துக்கள்
அ, இ, உ, என்னும் மூன்றாகும். அ வும் இ யும் சேரின் எ பிறக்கும். அகரமும் உகரமும் சேரின் ஒ பிறக்கும். நா கிடந்த நிலையில் வாயைத் திறக்க அகரமும், அந்நிலையில் நா முன்னீக்கி எழுகையில் இகரமும், பின்னோக்கி எழுகையில் உகரமும் பிறக்கும். உயிர் எழுத்துக்களிலே ஐ என்பதும் ஒள என்பதும் கூட்டொலிகளாகும்.
உயிர் எழுத்துக்கள் புகுதற்கு இடமாக உள்ள க் முதலிய பதினெட்டெழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் எனப்படும். மெய் எனின் உடம்பு என்று பொருள். வாயின் வழியே வருங்காற்று உதடு, பல், நா முதலியவற்றினால் தடைப்படுத்தப்பட்டு வெளியிடப்படின் மெய்யெழுத்துக்கள் பிறக்கும். மெய் எழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் உரிய முயற்சி மட்டும் ஒன்று; பிறக்கும் இடம் மட்டும் வெவ்வேறு. அஃதாவது மூக்கின் வழியாகக் காற்று வருகையில் மெல்லினம் பிறக்கும் என்பதாம். ககார முதல் னகார முடிய உள்ள பதினெட்டும் மெய் எழுத்துக்களாம். இவற்றிலே ய, வ, என்ற இரண்டும் அரையுயிர்கள் என்றும் உடம்படு மெய்கள் என்றும் கூறப்படும். க், ச், த், ந், ப், ம், வ், ய், ஞ் என்பனதாம் உண்மையிலேயே மொழிக்கு முதலில் வரும் மெய் எழுத்துக்கள். ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்பன இறுதியில் வரும் மெய் எழுத்துக்கள். மொழிக்கு இடையிலே வல்லினத்துக்குப் பின் மெல்லினம் வருதல் இல்லை.
ஆய்தம் என்பது புள்ளி, தனிநிலை, அஃகேனம் முதலிய பல பெயர்களால் குறிக்கப்படுகிறது. இது மொழிக்கு இடையிலேதான் வரும். மிகவும் அருகிய பயிற்சியுடையது ஆய்தம். இந்த ஒர் ஆய்த எழுத்தைக் கொண்டே எத்தகைய பிறமொழிச் சொற்களையும், பிறமொழி எழுத்துக்களைக் கடன் வாங்காமலேயே தமிழிலே எழுதிவிடலாம் என்று நிறுவினர் காலஞ்சென்ற அறிஞர் பா. வே. மாணிக்கனார்.
உயிர்மெய் மொத்தம் இருநூற்றுப் பதினாறு ஆகும். மெய்யெழுத்துப் பதினெட்டையும் உயிரெழுத்துப் பன்னிரண்டையும் பெருக்கினால் இருநூற்றுப் பதினாறு என்ற தொகை வரும். உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து உயிர்மெய் எனப் பெயர்பெற்றது.
அடுத்து, தமிழ் எழுத்துக்களின் பண்டைய வடிவங்களையும் பிற்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாறுதல்களையும் முறையாக ஆராய்வோம்.
'ஈ' என்பது, ஈ என்றும் " " என்றும் இருவிதமாக எழுதப்படுகிறது. மற்ற நெடில் எழுத்துக்களுக்குச் சுழி இருப்பதை நோக்கியே சிலர் இவ்வாறு எழுதுகின்றனர். ஆனால் இலக்கணத்தில் இதுபற்றி ஒன்றும் கூறப்படவில்லை. அதனால் ஈ என்ற வடிவே பண்டுதொட்டு வழங்கிவந்திருக்கலாம். எகரமும் ஒகரமும், அவற்றின் நெடில்களும் தொல்காப்பியர் காலத்தே பின்வருமாறு எழுதப்பட்டு வந்தன.
எ், ஒ் - குறில்கள்.
எ , ஒ - நெடில்கள்.
பண்டைக்காலத்தே ஒலையிலே புள்ளியிட்டு எழுதும் வழக்கமில்லை. எனவே இவை போன்ற குறில்களையும் நெடில்களையும் ஒரேமாதிரியே எழுதிவந்தனர். இதனால் படிப்பார்க்குக் குறில், நெடில் பற்றி மயக்கமும், படிப்பதில் தயக்கமும் ஏற்பட்டன. இந்தத் தயக்கத்தையும் மயக்கத்தையும் நீக்குவதற்காக வீரமாமுனிவர் இவ்வெழுத்துக்களைக் கீழ்வருமாறு எழுதினர் :
எ, ஒ = குறில்.
ஏ, ஓ = நெடில்.
மெய்யெழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள் யாவும் புள்ளி மேலிடப்பெற்று எழுதப்பட்டன. ஆனால் ஏட்டில் எழுதும்பொழுது புள்ளி நீக்கப்பட்டது. இன்றைய ஏட்டில் புள்ளியிடப்பட்டே மெய்யெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.
இங்கே ககரம் முதல் கெள வரை உள்ள எழுத்துக்களும் பதினெட்டு மெய்களுக்கும் இனமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
க (க்) புள்ளி நீக்கி எழுதப்பட்டது.
க + ஆ = க என்று முற்காலத்தே எழுதப்பட்ட வடிவம்.
கா-இஃது இன்றைய வடிவம்.
கி, கீ = மேல்விலங்கு இருந்தது.
கு, கூ = என்று முன்னர் எழுதப்பட்டது. கெ = அன்றும் இன்றும் இவ்வாறே
எழுதப்பட்டுவருகிறது.
கே. = இது, கெ் என்று எழுதப்பட்டது.
கெ் இதனைக் கே என்று வீரமாமுனிவர் ஆக்கினார்.
கொ என்பதன் பண்டைய வடிவம் கெ ஆகும். கோ என்பது கெ். என்று முன்பு எழுதப்பட்டது. கை என்பது ooக என்றெழுதப்பட்டது. கெள என்பது கெoo என்றெழுதப்பட்டது. ரகர மெய்யும், ரகர உயிர் மெய்யும் முற்காலத்தே:"ா” என்ற ஒரு வடிவாலேயே குறிக்கப்பட்டன. பின்னர் இக்குறியீட்டின் தெளிவின்மையை அறிந்த வீரமாமுனிவர்
ரகர மெய்யினை ர் என்றும், ரகர உயிர் மெய்யினை ர்
என்றும் எழுதினர்.
ஆய்தம்
.. என்பது தொல்காப்பியர் காலத்து ஆய்த வடிவம்.
ஃ என்பது உரையாசிரியர் காலத்து ஆய்த வடிவம். இன்று இரண்டும் வழக்கில் உள்ளன.
குற்றியலுகரமும் குற்றியலிகரமும்
இவையிரண்டையும் குறிக்க இவற்றின் மீது பண்டு
புள்ளியிடப்பட்டது.
கு ச் சு், குழலினிதி் யாழினிது
இன்று இவ்வழக்கம் கைவிடப்பட்டது.
எட்டு என்று இன்று எழுதினுல் பெரும்பாலும் எண்ணையும், அடியையும் குறிக்கும். பழங்காலத்தே,
எட்டு என்பது எண்ணையும், எட்டு என்பது எள்ளென்னும் பொருளையும் குறிக்கும்.
இன்னும் தமிழ் நெடுங்கணக்கில் எத்தனையோ மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுத்தான் வந்துள்ளன.
சீர்திருத்தம்
தமிழ் நெடுங்கணக்கு இத்தனை மாற்றங்களைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையான உருவைப் பெறவில்லை. அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் சில உள. இன்று தமிழ் நெடுங்கணக்கிலே சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறுவோரை இருவகைப்படுத்தலாம். தமிழையும், அதன் எழுத்தையும் சிதைக்கவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு சாரார் தமிழ் நெடுங்கணக்கிலே திருத்தம் வேண்டும் என்கின்றனர். தமிழ் நெடுங்கணக்கு மேலும் அழகும் எளிமையும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சிலர் சீர்திருத்தம் வேண்டும் என்கின்றனர்.
உயிர் எழுத்துக்கள்
உயிர் எழுத்துக்களிலே இகர நெடில் தவிர, ஏனைய வற்றின் நெடில் எல்லாம் குறிலின் வடிவத்தையே பெற்றுள்ளன.இகரத்தின் நெடில் மட்டும் வேறு வடிவம் {{hwe|வார்ப்புரு:Css
பெற்றுள்ளது. அதனால் நெடுங்கணக்குப் படிப்புக்குத் தடங்கல் ஏற்படும். எனவே ஏனைய நெடில்களைப் போலவே இகரநெடிலையும்" "என்று திருத்தி விடலாம்.
அடுத்து ஐ, ஒள என்ற இரண்டு கூட்டொலி எழுத்துக்கள் உள. இவற்றிலே ஒள என்பதைச் சிலர் இரண்டு எழுத்துக்களாக-உயிரும் உயிர்மெய்யுமாகக் கருதி ஒ, ள, என்று ஒலிக்கின்றனர். எனவே ஒள என்ற எழுத்தை அவ் என்று எழுதிவிடலாம் ஐ என்பதைச் சிலர் அய் என்றெழுதலாம் என்கின்றனர். அது அவ்வளவு பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. ஏன்? தையல் என்பதைத் தய்யல் என்று எழுதும்போதும், படையல் என்பதைப் படய்யல் என்றெழுதும்போதும் படிப்பார் அவ்ற்றை உரிய ஒலியோடு ஒலிப்பதில்லை.
அ என்ற எழுத்தின் நெடிலை,
ஆ என்றெழுத வேண்டியதில்லை;
என்றெழுதலாம்.
உ கரத்தின் நெடிலை ஊ' என்றெழுதாமல் என்றெழுதலாம். எ கரத்தின் நெடிலை என்றெழுதலாம். ஐ என்பதைனை என்றெழுதலாம்.
" அ, இ, உ, எ, ஏ, ஒ, ஓ, ஒ ஒ, ஓ, ஐ, அவ் ” என்றிவ்வாறு உயிரெழுத்துக்கள் சீர்திருத்தம் பெறலாம்.
மெய்யெழுத்துக்கள்
மெய்யெழுத்துக்களிலே விரைவிற் சீர்திருத்தம் பெற வேண்டிய எழுத்துக்கள் கை கெள, முதலிய உயிர்மெய் கவ் (க் - அவ்) என்றும் ஐ காரமும், ஒள காரமும் ஆம்.
இன்னும் சில சீர்திருத்தங்கள் தமிழின் நெடுங்கணக்கிலே கொள்ளல் ஏற்புடைத்தாம். சீர்திருத்தம் செய்வார் மிகவும் மெதுவாக நன்கு ஆராய்ந்து அறிந்து விரைவின்றிச் சீர்திருத்தம் மேற்கொள்ளல் வேண்டும். ஆத்திரமும், அவசரமும் கொண்டால் பெருங்குழப்பமும் வீண் துன்பமும் ஏற்படும்.
திணை, பால் பாகுபாட்டின் சிறப்பு
பிறமொழிகளுக்கு, குறிப்பாக வடமொழிக்கு இல்லாத சிறப்புக்கள் பல தமிழுக்குண்டு அவற்றுள் திணை, பால் பாகுபாடு ஒன்றாகும். இப்பாகுபாடுகள் பிறமொழிகளிலே அறவே இல்லை என்பதன்று பொருள். அவற்றிலும் இருக்கின்றன. ஆனால் சிறந்த முறையில் இல்லை; அவ்வளவே. தமிழிலே திணை, பால் பாகுபாடு சிறந்த முறையில் உள்ளது. திணை, பால் பாகுபாட்டிற்குத் தமிழைப் பொறுத்தவரையில் பொருளே அடிப்படை. வடமொழியிலோ சொல்லமைப்பே அடிப்படை, பொருளுக்காகச் சொல்லா? சொல்லுக்காகப் பொருளா? இதிலிருந்து விளங்கும் வடமொழித்திணை, பால் பாகுபாட்டின் பொருந்தாமையும், தமிழ்த் திணை, பால் பாகுபாட்டின் சிறப்பும். தமிழிலே திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலர்பால் என்பது பால் வேறுபாடு. இத் திணை, பால் பாகுபாடு எழுவாயில் மட்டுமல்ல, பயனிலையிலும் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. ஒரு பயனிலையை மட்டும் கொண்டு ஆங்கில மொழியிலே எழுவாய் எத்திணையைச் சேர்ந்தது என்றோ. எப்பாலினைச் சேர்ந்தது என்றோ காணல் முடியாது. ஆனால் தமிழிலோ வினைச் சொல் பயனிலையாக வருமாயின், செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செயப்படுபொருள் என்ற ஆறு கூறுகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம்.
எடுத்துக்காட்டு: வெட்டினான்.
இத்துணைச் சிறப்புக்கள் பிறமொழிகளில் பெரும்பாலும் கிடையா. இத்திணைப் பாகுபாடு பற்றிக் கால்டு வெல் கூறுவதாவது:-
“திராவிட மொழிகளின் திணைப் பாகுபாடு இந்திய ஐரோப்பிய மொழிகளிலும், செமிடிக் மொழிகளிலும் உள்ள பாகுபாடு போன்று கற்பனையால் ஆகியதன்று; சிறந்த தத்துவ உணர்வால் ஆகியது என்பது தெளிவு. பகுத்தறிவு உடையவை, பகுத்தறிவு இல்லாதவை என்ற பிரிவு சிறப்பும் இன்றியமையாமையும் உடையதன்றோ?”
உயர்திணையில் மட்டும் ஆண்பால், பெண்பால் என்று பிரிவினை செய்த தமிழர்கள், அஃறிணையில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று ஒருவர் வினவலாம். வினாச் சரியே. அஃறிணையிலே உயிருள்ளனவும் உயிர் இல்லனவும் சேர்க்கப்பட்டுள்ளன. உயிரற்றனவற்றிலே ஆண், பெண் வேற்றுமை அறவே கிடையாது. உயிருள்ளனவற்றிலே ஒருசிலவே ஆண், பெண் வேற்றுமையுடையன. இலக்கணம் பொதுவாகப் பெரும்பான்மை பற்றியதாகும். எனவே தான் பண்டைத் தமிழ்ப் புலவர்கள், உயர்திணைக்கு ஆண், பெண் வேறுபாடு கற்பித்து, அஃறிணைக்கு அவ்வேறுபாடு கற்பியாது விட்டுவிட்டனர். இதுகாறும் கூறியவற்றால் தமிழின் கண் விளங்கும் திணை, பால் பாகுபாடு பகுத்தறிவின் அடிப்படையில் எழுந்தது என்பதும், பிறவற்றில் அவ்வடிப்படையில்லை என்பதும் விளங்கும்.
திரிசொல்லும் திசைச் சொல்லும்
தமிழிலே காணப்படும் சொற்களை நான்கு வகையாகப் பிரித்தல் பண்டைய இலக்கணம் வல்லார் வழக்கமாகக் காணப்படுகிறது. அவற்றுள் ஒன்றே திரிசொல் எனப்படுவது. மக்கள் வழக்கிலும் நூல் வழக்கிலும் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களும், பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல் பலவும் பயின்று வருதல் கண்கூடு. ஆனால் உலகியல் வழக்கைவிடச் செய்யுள் வழக்கிலேயே இத்தகைய சொற்கள் மிகுதியும் பயின்று வருகின்றன. அவ்வாறு பயின்று வருவனவே திரிசொற்களாகும். ஒரு பொருள் குறிக்கும் பல சொற்கள் வருமாறு:- எழிலி, முகில், மஞ்சு, கொண்டல் என்பன கொண்டலுக்கு (Cloud) வழங்கி வரும் சொற்க ளாகும். இனிப் பல பொருள் குறித்த ஒரு சொல் வருமாறு:- கடி என்பது ஒரு சொல். அச்சொல் குறிக்கும் பொருள்களாவன:- காப்பு, கூர்மை அச்சம், காவல், கரிப்பு, விளக்கம், சிறப்பு, மணம்.
வெண்டிரீசர் போன்ற மேலை நாட்டுப் புலவர்கள் இவ்வாறு ஒரு பொருளைப் பல சொற்கள் குறித்தலும், ஒரு சொல்லே பல பொருள்களைக் குறித்தலும் இயற்கையில் இல்லை என்கின்றனர். இது உண்மையே. புகல், கழறு, கூறு, நவில், போன்ற சொற்கள் மேற்போக்காகச் "சொல்” என்ற பொருளிலே தோன்றினாலும், அத்தனை சொற்களுக்குமிடையே காணும் வேறுபாடு உண்மை புலவர்க்குடன்பாடே. புலவர்கள் கழறு, நவில் போன்ற சொற்களைக் குறிப்பிட்ட ஒரு சில இடங்களிலே தான் பயன்படுத்துகின்றனரே தவிர, எதற்கெடுத்தாலும் அவற்றைப் பயன்படுத்தல் இல்லை. கதையைக் கழறினான் என்றோ, விடை புகன்றான் என்றோ பயன்படுத்தல் நல்ல புலவர்தம் செயலன்று. கழறு என்ற சொல்லைப் பயன்படுத்த இடமும் பொருளும் வேறு; புகல் என்பதைப் பயன்படுத்த வேண்டிய இடம் வேறு. ஆனால் இந்த வேற்றுமையைச் சிலர் நெகிழவிட்டமையாலேயே திரிசொல் என்ற புதிய சொல் வகை வகுக்க வேண்டியதாயிற்று.
ஒரு நாட்டிலே வாழுகின்ற மக்களே, ஒரு பொருளுக்குப் பல பெயர்களை வழங்குதல் இயல்பு. ஓரிடத்தார் வழங்கும் பெயரை மற்றோரிடத்தார் வழங்கார். ஒரு பொருளுக்கு ஒரு நாட்டின் வடபால் வசிப்போர், ஒரு பெயரை வழங்குவர்; மேற்கே வாழ்வோர் வேறொரு பெயரை அப்பொருளுக்கு வழங்குவர். எடுத்துக்காட்டாக, உள்ளி என்ற ஒரு பொருளை எடுத்துக்கொள்ளுவோம். இதனைத் தென்பாண்டி நாட்டார் ஈறுள்ளி என்றும், உள்ளி என்றும் கூறுகின்றனர். ஆனால் மதுரை மக்கள் இப்பொருளையே வெங்காயம் என்ற பெயரால் குறிக்கின்றனர். இத்தகைய சொற்களையே திசைச் சொற்கள் என்று இலக்கணம் வல்லார் குறிக்கின்றனர்.
எழுத்துக்கள்
தமிழகத்திலே வழங்கும் எழுத்துக்கள் பல. அவை வடிவெழுத்து, பெயர் எழுத்து, தன்மையெழுத்து, முடிவெழுத்து, கண்ணெழுத்து, கோலெழுத்து, கரந்தெழுத்து, வட்டெழுத்து, கிரந்தெழுத்து முதலியனவாகும்.
கண்ணெழுத்து
கண்ணெழுத்துப் பற்றிய குறிப்புகள் சிலம்பிலே காணப்படுகின்றன. கண்ணெழுத்து என்ற ஒருவகை எழுத்து வணிகத்தின் பொருட்டுப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பூம்புகாரின் கடற்கரையிலே இறக்கப்பட்ட பண்டப் பொதிகளின் மீது கண்ணெழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது என்பதைக் கீழ்வரும் சிலப்பதிகார வரிகள் தெரிவிக்கின்றன.
"வம்ப மாக்கள் தம்பெயர் குறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி"
-சிலப். 26: 13-16. மேலும் அரசினர் அனுப்பும் திருமுகம் இந்தக் கண்ணெழுத்தினால் எழுதப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.
வட்டெழுத்து
வட்டெழுத்துக்கு வெட்டெழுத்து, நானாமோனம், தக்கண மலையாளம் ஆகிய வேறு பெயர்களும் உண்டு. வட்டெழுத்து உள்ள கல்வெட்டுக்கள் பாண்டிய நாட்டிலும் மலை நாட்டிலும் காணப்படுகின்றன. வட்டெழுத்தின் தோற்றம் பற்றிப் பலர் பலவாறு கூறுவர். டாக்டர் பர்னல் என்பவர், வட்டெழுத்தானது பிராமி எழுத்திலிருந்து வளர்ச்சியடையவில்லை என்றும், பிராமி எழுத்துக்கு மூலமான பினீய எழுத்திலிருந்து தோன்றியது என்றும் கூறுகிறார். டாக்டர் பீலர் என்பவர் இக்கொள்கையை மறுத்து வட்டெழுத்து பிராமியிலிருந்து வளர்ந்தது என்கிறார். இவை யெல்லாம் அவ்வளவு தூரம் பொருந்தவில்லை. வட்டெழுத்து என்பது தமிழுக்கே உரிய எழுத்தாகும்.
கோல் எழுத்து
வட்டெழுத்திலிருந்து கோல் எழுத்துத் தோன்றியது. பிற்காலச் சோழப் பேரரசர்கள் ஆதிக்கம் பெற்ற காலத்தில் அவர்களாட்சிக்குட்படாத மலை நாட்டில் வட்டெழுத்து வழங்கி வந்தது என்பர். வட்டெழுத்தின் பிற்கால வடிவங் களுள் ஒன்றே கோல் எழுத்தாகும்.
கிரந்த எழுத்து
தமிழ்நாட்டில் வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு வந்து குடியேறிய ஆரியர்கள், தங்களின் வழக்கொழிந்த வட மொழியைத் தமிழரிடையே பரப்ப முயன்றனர். அதற்குரிய முயற்சிகளுள் ஒன்றே கிரந்த எழுத்தைத் தோற்றுவித்தமையாம். கிரந்த எழுத்து என்பது அவர்களால் தமிழ் எழுத்துக்களைப் பார்த்து அவைபோல் அமைக்கப்பட்ட ஒருவகை எழுத்தாகும். உ, ஊ, க, ண, த, ன, ய, வ என்னும் தமிழ் எழுத்துக்களை, கிரந்த எழுத்து அமைத்தவர்கள், அப்படியே தம் கிரந்த எழுத்துக்களோடு சேர்த்துக் கொண்டனர்; அ, ஆ, ஈ, ஒ, ஒள, ட, ர, வ, ழ என்னும் எழுத்துக்களைச் சிறிது திருத்தித் தம் கிரந்த எழுத்துக்களாக அமைத்துக்கொண்டனர். மலையாள எழுத்துக்கும் கிரந்த எழுத்துக்கும் இடையேயுள்ள வேற்றுமை மிகச் சிறியதே.
கரோசிடி எழுத்தும் பிராமி எழுத்தும்
மிகப் பழங்காலத்தனவாக இந்தியாவிற் கிடைக்கும் கல்வெட்டுக்களில் இரண்டு வித எழுத்துக்கள் காணப்படு கின்றன. அவை பிராமி, கரோசிடி என்பனவாம். பிராமி என்பது இடப்புறத்திலிருந்து வலப்புறமாகவும், வலப்புறத் திலிருந்து இடப்புறமாகவும், மாறி மாறி எழுதப்படுகின் றது. கரோசிடியும், பிராமியும் வேறுவேருனவை.
இலக்கண வளர்ச்சி
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவில கால வகையி னுனே '
என்று பவணந்தியார் கூறுகிருர். இலக்கணம் செய்யப் புகு கின்ற ஆசிரியன் இறந்தன விலக்கி எதிரது போற்றித் தன்னு லைக் கொண்டு வரவேண்டும். நன்னூலார் இம்முறையினைக் கையாண்டுள்ளார். அவர் நூலில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.அவை யாவையும் எடுத்துக்காட்டி அவை இலக்கண வளர்ச்சிக்கு அறிகுறியா என்று ஆராயின் அது. ஒரு சிறந்த ஆராய்ச்சியே ஆகும். இங்கே ஒன்றிரண்டு வேறுபாடுகளை எடுத்துக்காட்டி அவை இ ல க் க ண வளர்ச்சிக்கு அறிகுறியா என்று பார்ப்போம்.
தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் மூன்றினையும் குறித்து இலக்கணம் செய்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் எழுதிய நன்னூலாரோ பொருள் அதிகாரம் எழுதவில்லை. சிலர் நன்னூலார் எழுதி அது அழிந்துவிட்டது என்பர். பொருளிலக்கண வளர்ச்சியினை நன்னூலார் தம் காலத்துக் கேற்ப எவ்வளவோ சிறப்பாய் எழுதியிருக்கலாம்; ஆனால் எழுதவில்லை.
தொல்காப்பியர் பதவியல் என்று ஒரு தனியியல் வகுக்கவில்லை. அதற்குத் தேவை அப்போதும் இல்லை; இப்போதும் இல்லை. வடமொழியாக்கத்தைத் தொல்காப்பியர் ஒரே நூற் பாவில் கூறிச் செல்லுகிறார். ஆனால் நன்னூலாரோ பல சூத்திரங்கள் சொல்லிக்கொண்டு போகிறார்.
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களைப்பற்றிக் கூறும் தொல்காப்பியர் சகரம் மொழிக்கு முதலில் வராது எனக் கூறுகிறார். ஆனால் நன்னூலார் காலத்தில் வரலாம். இது இலக்கண வளர்ச்சியையே காட்டுகிறது. இதே போன்று ‘நான்' என்ற சொல் பிற்கால வழக்கு. நன்னூல் அதைக் காட்டுகிறது. உயர்திணை மட்டுமே நான் என்று கூறலாம். அஃறிணைப் பெயர்கள் கூறக்கூடாது தொல்காப்பியனார் காலத்தில், ஆனால் நன்னூலார் காலத்தில் அஃறிணைப் பொருட்களும் 'நான்' என்று கூறலாம்.
எழுத்து முறையில் நேர்ந்த மாறுதல்களை நன்னூலார் குறிக்கவில்லை. ஒருவேளை நன்னூலார் காலத்திலும் தொல்காப்பியர் காலத்தில் எழுதப்பட்டவை போன்றே எழுத்துக்கள் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
இவை யாவற்றையும் நோக்கும்பொழுது நன்னூலுக்கும், தொல்காப்பியத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஓரளவுதான் இலக்கண வளர்ச்சியைக் காட்டுகின்றன என்பதும், பேரளவு காட்டவில்லை என்பதும் தெரிகின்றன.