37. வீமனும் விரதமும்

இராமாயணம், மகாபாரதம் இரண்டும் இதிகாசங்கள். இவை மக்களிடம் பரவி வழங்குவதைப் போல், வேறு எந்தக் காவியமும் வழங்கப்படவில்லை
வால்மீகியும், வியாசரும் கூறாத பல இதிகாசக்கதைகள், செவி வழிச் செய்திகளாக - நாடோடிக் கதைகளாக வழங்கி வருகின்றன.
அவற்றுள் ஓர் அறிய செய்தியை இங்க காண்போம்  
பஞ்சபாண்டவர் ஐவருள் ஒருவனாகிய, வீமன் ஆயிரம் யானைகளின் பலம் ஒருங்கே பெற்றவன். பிறக்கும் போதே பெரும்பலத்துடன் விளங்கினான். ஒரு நாள் தாயான குந்திதேவி, கைப்பிள்ளையான வீமனை ஒரு பாறையில் நழுவவிட்டுவிட்டாள்.  “ஐயோ! குழந்தையின் உடல் நொறுங்கிப் போயிருக்குமே!” என்று அஞ்சிக் குழந்தையை எடுத்தாள். என்ன விந்தை குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. சிறு சிராய்ப்புக் கூட உடம்பில் இல்லை.
ஆனால குழந்தை விழுந்த இடத்தில் பாறையில் குழியிருந்தது. வீமனின் உடல்வலிமையைக் காட்டுவதற்காக வழங்கப்பட்டுவரும் செவிவழிச் செய்தி இது.
வீமன் உண்பதற்கு உணவு வண்டி வண்டியாக் வேண்டும் பகாசுரனுக்காக அனுப்பிய ஒரு வண்டி உணவையும் வீமன் ஒருவனே உண்டு விட்டான்.
பகாசுரன் மிக வலிமை வாய்ந்த அரக்கன். தன் உணவை வீமன் உண்பதைக் கண்டான். சினம் கொண்டான். ஓடிவந்து வீமன் முதுகில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.
வீமன்  “அப்பாடா உண்ட சோறு விக்கியிருந்தது. இப்போது உள்ளே இறங்கிவிட்டது” என்றான். 
பல் தேய்க்கும் குச்சி முழுப் பனைமரந்தானாம். இவ்வாறு பல செய்திகளை மக்கள் வியந்து பேசுவதை இன்றும் காணலாம்.
பெருந்தீனியனாக இருந்தாலும் வீமன் ஒழுக்கம் தவறாதவன். பக்தி நிரம்பியவன்.
ஆனால் பிறர் காணும்படி பூசை, அர்ச்சனை, தியானம் ஏதும் செய்யமாட்டான்.
அவன் பூசனை அனைத்தும் மானசீக பூசனையே.
பஞ்சவரும் நாட்டினரும் ஏகாதசிவிரதம் கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால் வீமனுக்கு எந்த விரதமும் ஒத்து வராது. ஏனெனில், விரதம் என்றால் பசி பொறுக்க வேண்டுமே!
வீமன் விரதம் கடைப்பிடிக்காமை கண்டு அர்ச்சுனன் முதலியோர் அவனை ஏளனம் செய்வதுண்டு.
உணவுண்ணவே நேரம் போதாது. அதனால் தான் வீமன் விரதம் கடைப்பிடிப்பதில்லை என்பது அவர்களின் ஏளனத்துக்குக் காரணம்
இதை உணர்ந்த வீமன் தானும் ஏகாதசி விரதம் இருந்தே தீருவது என்று முடிவு செய்தான்.
தங்கள் மூதாதையாகிய வியாச பகவானிடம்  “நான் விரதம் இருக்க வேண்டும். அதன் விதிமுறைகள் யாவை?” என்று கேட்டு அறிந்து கொண்டான்.  “பசி பொறுக்க இயலாவிட்டால் என்ன செய்யலாம்?” என்பதனையும் மறக்காமல் கேட்டுக் கொண்டான்.
“பசி பொறுக்க இயலாவிடின், பால், பழம், கரும்பு முதலியவற்றை உண்ணலாம்” என்றார் வியாசர்.
ஏகாதசியன்று வீமன் விரதம் தொடங்கி விட்டான். இச்செய்தி கண்டு நாட்டுமக்களெல்லாம் வியப்பெய்தினர்.  “இவனாவது விரதம் இருப்பதாவது இடையிலே விரதத்தைக் கைவிட்டு விடுவான்” என்றும் சிலர் ஆருடம் கூறினர். 
ஆனால், வீமன் பிறர் ஏளனத்தைப் பொருட்படுத்தவில்லை. விரதம் காலையில் தொடங்கியது. காலைமணி 10 ஆனது. வீமனுக்குப் பசி பொறுக்க இயலவில்லை. கால் கைகள் அனைத்தும் சோர்ந்து போயின; கண் பஞ்சடைந்தது; காது அடைத்தது: பெருங்குடல் சிறுகுடலைக் கவ்வத் தொடங்கியது. இந்நிலையில் வியாசர் சொன்னபடி பால், பழம் முதலியன உண்ணத் தொடங்கினான்.
அந்த ஒரு வேளை அவன் உண்ட அளவு எவ்வளவு தெரியுமா?
ஏகாதசிப் புராணம் அந்த அளவைக் குறிப்பிடுகின்றது.

 

இனிய கதலிப் பழக்குலைகள்
     ஈரைஞ் நூறும் எழிற்பனசக் 
கணிஆ யிரமும் முந்நூறு
     கட்டுக் கரும்பும் குலைஇளநீர் 
தனி ஆயிரமும் முன்அருந்திச்
     மற்றும் பசிகள் தணியனாய்ப்
புனிதப் பசுப்பால் நீர் அருந்திப்
    போகாது உயிரைப் புறம்காத்தான்.


 
இப்பாடலே ஏகாதசிப் புராணம் காட்டும் உணவின் அளவு. இவற்றைப் பட்டியலிட்டுக்காண்போம்.

 

வாழைப்பழக் குலைகள்   1000

பலாப் பழங்கள்                   1000

கரும்புக் கட்டுக்கள்               300

பெரிய இளநீர்க் குலைகள் 1000

 

இவை முதலில் காலை 10 மணிக்கு அருந்தியது மட்டும். இவ்வளவு உண்டும் வீமன் பசி அடங்கியதா? பசியை 
அதிகப்படுத்தியது. உடனே குடம்குடமாகப் பசுவின் பால் பருகினான். அதன் பின் தண்ணீர் பல குடங்கள் காலியாயின.
இந்த உணவு அவன் உயிர் உடலை விட்டுப் புறம் சென்றுவிடாமல் ஓரளவு பாதுகாத்தது.
இதைப்போல் பலமுறை பால், பழம் அருந்தி அந்த விரதத்தை முடித்தான்.
வீமன் விரதம் இருந்தநாள் மாசி மாதம் வளர்பிறையில் வரும்ஏ காதசி, ஆதலால் அந்த நாள் விம ஏகாதசி என்றே வழங்கப் படலாயிற்று. 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel