தெனாலிராமன் கதை , மரியாதை ராமன் கதை போன்ற பற்பல நகைச்சுவை நறுக்குகள் நானிலத்திலும் உள்ளன . அவற்றைத் தேடி எடுத்துக் கொடுப்பதில் ஒரு சிலரே ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ’ என்று நாள்தோறும் உலக மொழிகளிலே விழிவைத்துப் பார்க்கின்றனர் . அவர்களுள் ஒருவரே நம் புலவர் த. கோவேந்தன் . அவர்கள் தொகுப்பு சீனா , ஜப்பான் நாட்டு நகைச் சுவை நறுக்குகள் , துணுக்குகள் இங்கே உங்கள் கையில் அமர்ந்து சிரிக்கின்றன ; சிந்திக்க வைக்கின்றன .
பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தாம் கற்பது மட்டுமின்றி தம் பிள்ளைகட்கும் தம் மாணவர்கட்கும் இந்நூலைத் தந்து சிரித்து மகிழ்ந்து வாழட்டும் .
மக்களாகிய நமக்கே சிரிக்கத் தெரியும் . நண்பர்கள் , உற்றார் உறவினர்கள் எல்லோருடனும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழ்வது போன்ற ஓர் இன்பம் வேறு இல்லவே இல்லை .
எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் தப்பேதும் இல்லாத மனம் உடையவர்கள் . மனம் இறுக்கம் இருந்தால் , மனக்கவலை தோன்றும் . மனக்கவலைக்கு மருந்து நகைச்சுவையாகும் . அந்த நகைச்சுவை அன்பில் மகிழ்விப்பது . அது நம்மைச் சூழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் உள்ளது . நம் நடிப்புகளே சொற்களே செயல்களே நம்மையும் நானிலத்தையும் சிரிக்க வைக்கும் பாங்குடையன . உள்ளம் உரை செயல்களில் ஓங்கிய நகைச்சுவை நறுக்குகளே இந்நூல் தொகுப்பு . படித்து நகையுங்கள் . எல்லாப் பகையையும் வெல்லுங்கள் . வாழ்க்கைத் திருவிழாவில் தொகை தொகையாய் இன்பம் பெருகும் . துன்பம் அருகும் .
உலக நாடக மேடையில் நாம் விலைவாணராகவும் கொலைவாணராகவும் நடிப்பதை விடக் கலைவாணராக வாழ்வோம் .
1 . தீர்மானம் :
ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகாத தந்தையும் மகனும் இருந்தனர் . ஒரு நாள் தந்தை விருந்துக்கு ஒருவரை அழைத்திருந்தார் . எனவே விருந்தினர்காகக் கறிவாங்கி வரும் படி மகனைப் பக்கத்துப் பட்டணத்திற்கு அனுப்பி வைத்தார் . கறியினை வாங்கி வரும் போது பட்டணத்து வாயிலில் தன்னை நோக்கி ஒருவர் நடந்து வருவதைக் கவனித்தான் மகன் . எதிரும் புதிருமாக வந்த அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வழிவிட்டு விலகாமல் அந்தக் குறுகிய வாசலில் நெடுநேரம் நின்றனர் .
பட்டணம் சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராத மகனைத் தேடித் தந்தை வந்தார் . மகனைப் பட்டணத்து வாயிலில் கண்டார் தந்தை . கண்டதும் சொன்னார் . “ கறியை எடுத்துக் கொண்டு நீ வீட்டிற்குபோய் விருந்தினரோடு இரு . உனக்குப் பதிலாக இந்த மனிதனை நான் இங்கு எதிர்த்து நிற்கிறேன் என்றார் ” .
2 . திடீர்ப் பணக்காரன் :
வறியவன் ஒருவன் பணம் படைத்தவன் ஆனான் . வந்த வாழ்வில் முந்தியதை மறந்தான் . ஒரு நாள் காலைத் தன் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு , வீட்டிற்குள் சலிப்போடு நுழைந்தான் . சலிப்புக்குக் காரணம் என்னவென்று கேட்டாள் மனைவி . “ தோட்டத்திலுள்ள மலர்களைப் பார்வையிடும்போது , செம்மலரிலிருந்து ஒரு பனித்துளிப்பட்டு நனைந்துவிட்டேன் . பனிக் காய்ச்சல் வந்து விட்க்கூடாது உடனே மருத்துவரைக் கூப்பிடு ” என்றான் அவன் . “ நாம் இருவரும் பிச்சைக்காரரர்களாய்ச் சந்தித்த அந்தக் கசப்பான நிகழ்ச்சியை நீங்கள் மறந்து வீட்டீர்களா ? அன்றிரவு முழுவதும் கொட்டிய மழையில் ஒதுங்க இடமின்றி ஒரு மூங்கில் புதரில் நனைந்த வண்ணம் நின்று கொண்டிருந்தோம் . அதைவிடவா இப்போது அதிகம் நனைந்துவிட்டீர்கள் ? என்று கேட்டாளே ஒரு கேள்வி , அவன் மனதில்படும்படி .
3 . ஒற்றை ஆடை அறிஞர் :
அறிஞர் ஒருவர் உடுத்திக் கொள்ள ஆடை ஒன்றே ஒன்றினையே வைத்திருந்தார் . அந்த ஆடையையும் துவைக்க நேர்ந்ததால் , அம்மணமாகவே படுக்கையில் அவர் படுத்துக் கொள்வார் . ஒருமுறை ஆடையை அவ்வாறே துவைத்து உலர வைத்துவிட்டுப் படுக்கைக்குச் சென்று அம்மணமாய் படுத்துக் கொண்டார் . அந்த நேரம் பார்த்து அறிஞரைக் காண ஒருவர் வந்தார் . அறிஞரைக்கான அவருடைய மகனிடம் “ அப்பா எங்கே ! என்றார் . “ படுக்கையில் ” என்றான் மகன் “ உடம்புக்கென்ன ? நலக்கேடா ? ” என்று வந்தவர் கேட்டார். “ உடுக்க ஒன்றுமில்லை என்று படுக்கையில் படுத்துக் கொண்டால் , நலக்கேடு என்றா பொருள் ? ” வந்தவரிடம் விளக்கம் கேட்டான் மகன் .
4 . வறிய விருந்தினன் :
வறியவன் ஒருவன் , பணம் படைத்த உறவினர்கள் வீட்டில் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டான் . விருந்திற்கு அணிந்து செல்ல அழகிய உயர்ந்த ஆடையில்லாததால் பஞ்சில் நெய்ந்த மெல்லிய ஆடையொன்றை அணிந்து சென்றான் . தன் ஆடையைக் கண்டு பிறர் எள்ளி நகைப்பர் என்றெண்ணிய விசிறியொன்றைக் கையிலெடுத்து விசிறிய வண்ணம் “ இயல்பாகவே கோடை வெப்பம் என்றால் எனக்கு மிகுந்த வெறுப்பு , எனவே வாட்டும் குளிர்காலத்தில் கூட விசிறியால் விசிறிக்கொள்வேன் ” என்றான் .
வறியவனின் இந்தப் போலி நாடகத்தை வெளிப்படுத்த திட்டமிட்டான் , விருந்து கொடுத்தவன் . விருந்தின் முடிவில் எல்லோரும் உறங்கப் படுக்கைகள் பாதுகாப்பான உள் அறைகளில் அணியமாயின . இந்த வறியவனுக்கு மட்டும் வீட்டின் முகப்பிலுள்ள குளத்தின் அருகில் திறந்தவெளித் திண்ணையொன்றில் மெல்லிய படுக்கை விரிக்கப்பட்டு அதில் புல்லினால் செய்த தலையணை வைக்கப்பட்டது .
பின்னர் போர்த்திக் கொள்ளப் போர்வையேதுமின்றி வறியவனைப் படுக்கச் செய்தான் . பக்கத்தில் நின்று நடக்கப் போகும் வேடிக்கையைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான் விருந்து கொடுத்தவன் .
குளிர்தாங்க மாட்டாமல் நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்தான் வறியவன் . படுக்கை விரிப்பையெடுத்துப் போர்த்திக் கொண்டு தப்பிச் செல்ல முனைந்தான் . பரபரப்பில் படுக்கை விரிப்புத் தட்டி அருகிலிருந்த குளத்தில் விழுந்து விட்டான் .
இந்த வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விருந்து கொடுத்தவன் “ என்ன நடந்தது ? ” என்று ஒன்றுமறியாதவன் போல் கேட்டான் . " வெப்பத்தின் மீது எனக்குள்ள வெறுப்புத்தான் ; வேறொன்றுமில்லை . திறந்தவெளித் திண்ணையில் தான் எனக்கு நீங்கள் படுக்கைப் போட்டீர்கள் என்றாலும் உங்கள் குளத்தில் குளித்துவிட்டுத்தான் தூங்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று பக்குவமாக விடையளித்தான் வறியவன் .
5 . விண்ணகப் படிக்கட்டுகள் :
மாமனாருடன் மருமகன்கள் உணவு உண்ணும்போதெல்லாம் அவனுக்கு ஒரு ஒதுக்குப்புறமான இருக்கையே கிடைத்தது . இதனால் அவமானமுற்ற அவன் மனைவி . ஒருநாள் மதிப்புமிக்க இருக்கையில் கெளரவமான ஆசனத்தில் எல்லோருக்கும் முன்னதாக ஓடிச் சென்று அமரும்படி தன் கணவனுக்கு ஆய்வுரை கூறினாள் . ஆனால் அந்த ஆய்வுரையை அவன் முற்றுமாகப் புரிந்து கொள்ளவில்லை .
பின்னர் ஒருமுறை அவன் தன் மனைவியுடன் தன் மாமனார் இல்லம் சென்ற போது , விருந்தினர்கள் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர் . உடனே அந்த இளைஞனின் மனைவி , அவனைத் தலைமை இருக்கைகுச் சென்று அமரும்படி சைகை செய்தாள் . அவள் கணவனோ இருக்கைகளின் உயரத்தில் வேறுபாடு இருப்பதைக் கண்டான் . அத்துடன் ஏணிப்படி ஒன்று உணவுக் கூடத்தில் இருப்பதைக் கவனித்தான் . ஒரே ஓட்டமாக ஓடி அந்த ஏணிப்படிகளில் விரைந்து ஏறி பாதிப் படிகளைக் கடந்தான் . இதனைக் கண்ட அவன் மனைவி அவனை முறைத்துப் சினத்துடன் பார்த்தாள் . ஆனால் அவள் பார்வையின் பொருள் புரியாதபடி , “ எவ்வளவு உயரம் ஏற வேண்டும் என்று நீ விரும்புகிறாய் ; விண்ணகத்தை எட்டிப் பிடிக்கும் மட்டுமா ? ” என்று அவன் உரத்த குரலில் கேட்டான் . செய்வதறியாது , திகைத்தாள் அவன் மனைவி .
6 . பிழைப்புக்கு ஒருவழி தேடு :
பிறர் தன்னை வாயாரப் புகழ்வதைக் கேட்க விரும்பினான் ஒரு மனிதன் . அவனின் இந்த இயல்பை அறிந்த ஒரு மனிதன் அவனைப்பற்றி அவன் முன்னிலையில் புகழ்ந்து பேசினான் அவன் சொன்னான் , “ வாழ்நாளெல்லாம் செல்வச் செழிப்புடன் நீ வாழ்வாய் என்பதை உன் கண்கள் சொல்கின்றன ” என்றான் . இதனைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன அந்த புகழ் விரும்பி அந்த மனிதனைப் பல நாள்கள் தன் வீட்டில் விருந்தினனாக வைத்து ஓம்பிப் , பின் விலையேறப் பெற்ற பொருள்களைப் பரிசாகக் கொடுத்தான் . பிரிந்து செல்லும் போது அந்த மனிதன் புகழ் விரும்பியிடம் “ நீங்கள் ஒரு தொழில் புரிய வேண்டும் . ஓரிணைக் கண்களைக் கொண்டு ஒரு மனிதனின் எதிர்காலம் முழுமையையும் கணித்து விடமுடியாது ” என்றான் அந்த மனிதன் .
7 . நாமெல்லாம் ஒன்று :
ஒருமுறை அறிஞர் ஒருவர் “ இயற்கைப் படைப்புகள் அனைத்தும் ஒன்றே ” என்ற மெய்மை விளக்கம் தந்து கொண்டிருந்தார் . இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு படித்த மேதை “ பகுத்தறிவு கொண்ட ஒரு மனிதன் கடற்பூதங்களையும் ; புலிகளையும் அடக்கியாள முடியுமா ?
நாமெல்லாம் ஒன்று என்பதால் ஒருவன் புலியின்மீது சவாரி செய்யுமுடியுமா ? ” என்று கேட்டான் .
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ‘ செந்தேள் ’ பலமாகச் சிரித்தார் . “ புலியின் முதுகில் மேலேறிச் செல்வது , இரண்டு உடல்களுக்கிடையே வேறுபாடு உண்டு என்பதைக் காட்டுகிறது . ஆனால் ஒரு மனிதன் புலியால் விழுங்கப்பட்டுவிட்டால் அவர்கள் இருவரும் ஒன்றே ” என்றார் . இதனைக் கேட்டு அனைவரும் கலைந்து சென்றனர் .
8 . குடியை மட்டுப்படுத்தல் :
‘ நான்மாடத்தைச் சார்ந்த ‘ சிற்றரசு ’ மதுவை நேசித்தான் . சாத்தூரில் அவன் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது , அவன் தனது மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தால் , கிடைத்த பதவியை இழந்துவிடுவான் என்று அவன் தந்தை உணர்ந்தார் . எனவே அத்தகைய மிதமிஞ்சிய குடியைத் தவிர்க்கும்படி மகனுக்கு அறிவுரை வழங்கி ஒரு மடல் எழுதினார் .
அறிவுரையின் விளைவாக மகன் சிற்றரசு , தன் முதல் மாத ஊதியத்தில் பெரிய அளவிலான தங்கக் கோப்பை ஒன்றினைச் செய்தான் . அக்கோப்பையில் “ தந்தையின் மொழிகளை மறவாதே . ஒரு முறைக்கு மூன்று கோப்பைக்குமேல் அருந்தாதே ” என்று பொறித்து வைத்தான் . இச்சொற்றொடர் பின்னர் அப்பகுதி மக்களிடையே பொதுமொழியாப் பழமொழியாய் மாறியது .
9 . உள்ளுணர்வினால் உண்டாகும் உவகை :
பாண்டியனார் ஓர் அறிஞ ர். மாலைநேரங்களில் ' மணி என்பவரின் இல்லம் சென்று அவர்களுக்குப் பாடங்கள் கற்பித்து வந்தார் ‘ . இவர் கவிதையெழுதுவதிலும் நாட்டம் மிக்கவர் . ஒருநாள் இரவு திருமணி அவர்களின் இல்லத்தில் இரவு உணவருந்திவிட்டுத் தன் வீடு திரும்பினார் அறிஞர் . முன்னிரவு நேரம் அது . முழுநிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்தது நிலவைக் கண்டார் . கவிபாடும் ஆவல் கொண்ட அறிஞர் உணர்ச்சி பொங்கப் பாடினார் .
“ கையில் தவழும் அமுதக் கலசத்திற்கு நிகர் ஏதுமில்லை ; ஏனெனில் ஆண்டொன்றிற்கு எத்தனை முறைகள் அழகு நிலவை நம் தலைக்குமேல காண முடியும் ? ” என்ற கவிதையை வடித்தார் . கட்டுக்கடங்கா மகிழ்ச்சி கண்டார் ; ஓடிச் சென்று தன் வீட்டுக் கதவைத் “ பட பட ” வென்று தட்டினார் . தனது வீட்டு முதலாளியை எழுந்து வரும்படி அபயக்குரல் எழுப்பினார் . அறிஞர் போட்டக் கூச்சலில் வீட்டிலுள்ள அனைவரும் திருடோ தீவிபத்தோ ஏற்பட்டிருக்கிறது என எண்ணி அலறியடித்து பரபரப்பாக எழுந்து வந்தனர் . அறிஞர் எதற்காக அலறினார் என்பதைப் புரிந்து கொண்ட வீட்டு முதலாளி , “ நன்று அப்படியானால் நாம் மது அருந்தலாம் ; வாருங்கள் ” என்று அறிஞரை உள்ளே உணவுக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றா .
10 . தள்ளுதல் முன்னொரு காலத்தில் :
சேர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் சிறந்த நீச்சல் வீரனாய்ப் புகழ் பெற்று விளங்கினான் . ஒருநாள் அவன் மனைவி ஒரு வயதே நிரம்பிய குழந்தையொன்றினை நீரில் மிதக்க விட்டுக் கொண்டிருப்பதை அவ்வழியாய்ச் சென்ற ஒருவன் கண்டு , ஏன் இப்படிச் செய்கிறீர்கள் ? ” என்று கேட்ட போது , அவள் பெருமையுடன் , “ நன்று ; அவன் தந்தையைப் போலவே இவனும் சிறந்த நீச்சல் வீரனாக வேண்டாமா ? ” என்று கேட்டாள் . வந்தவர் வாய்பொத்தி அமைதியாகச் சென்றார் .
11 . ஃ என்று அடையாளமிட்ட இடம் :
ஒருமுறை வீரன் ஒருவன் ஆற்றைக் கடக்கப் படகில் சென்றான் செல்லும் வழியில் அவன் உடைவாள் நழுவி நீரில் விழுந்தது . விரைந்து அந்த வீரன் வாள் விழுந்த இடத்தைப் படகில் ஃ என்று அடையாளமிட்டான் . படகு கரை சேர்ந்தது . வீரன் உடனே படகில் ஃ அடையாளிட்ட இடத்துக்கு நேராக நீரில் இறங்கி வாளினைத் தேடினான் .
12 . முரண்பட்ட இரண்டு தவறுகள் :
பயனற்ற மகன் ஒருவன் தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாகவே எப்போதும் செயல்பட்டு வந்தான் . இதனை உணர்ந்த அவனின் தந்தை சாக்காட்டுப் படுக்கையில் இருக்கும் போது , தன் விருப்பத்திற்கு மாறாகத்தான் , மகன் செயல்படுவான் என்று எண்ணி மகனிடம் , “ மகனே , நான் இறந்ததும் ஏதாவது ஓர் நீர் நிலையில் என் உடலை அடக்கம் ( புதைத்து ) செய்துவிடு ” என்று வேண்டிக் கொண்டான் .
தன்னைத் தரையில் தான் தன் மகன் புதைப்பான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டார் . ஆனால் அந்த உதவாக்கரை மகனோ , வாழும் போதுதான் நான் என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தவறிவிட்டேன் , அவர் இறந்த பிறகாவது நான் அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி , அவர் இறந்ததும் , தங்கள் சொந்த மண்ணில் ஒரு சிறிய குளத்தினை உருவாக்கி அதனுள் தன் தந்தையின் பிணத்தைப் போட்டுவிட்டான் .
13 . அருமகள் :
இளம் நங்கை ஒருத்தியை அவளின் அண்டை வீட்டு இளைஞர்கள் இருவர் மணந்துகொள்ள விரும்பினர் . கீழை வீட்டுக்காரனின் ( தன் கிழக்கேயுள்ள வீட்டுக்காரன் ) மகன் செல்வம் மிகுந்தவன் . ஆனால் அழகற்றவன் . மேலை வீட்டுக்காரனின் மகன் அழகன் ; ஆனால் ஏழை . இருவரில் யாரைக் தேர்ந்தெடுப்பது . பெண் வீட்டாருக்குக் குழப்பமாக இருந்தது . முடிவைப் பெண்ணின் விருப்பத்திற்கு விட்டு விட்டனர் . “ இரண்டு இளைஞர்களையும் மணந்து கொள்கிறேன் ” என்றாள் மணப்பெண் . “ கீழை ( கிழக்கே உள்ள ) வீட்டில் உண்ணுகிறேன் ; மேலை ( மேற்கேயுள்ள ) வீட்டில் உறங்குகிறேன் ” என்று தன் முடிவுக்கு விளக்கமும் தந்தாள் அந்த நங்கை அருமகள் .
14 . உயர் அதிகாரியின் கடமைகள் :
பிறர் பொருளை இச்சிக்கும் இயல்பும் கையூட்டுப் பெறும் பழக்கமும் கொண்ட உயர் அதிகாரி ஒருவர் இருந்தார் . ஒருநாள் அவருடைய வேலைக்காரன் அவரின் காலணிகள் நைந்திருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினான் . உடனே அந்த உயர் அதிகாரி , எப்போதும் புதிய காலணிகளை அணியும் வேறு ஒரு சார்புப் பணியாளரை அழைத்து வரும்படி தன் வேலைக்காரனுக்கு ஆணையிட்டார் . அவ்வாறே அவனும் அழைத்து வந்தான் . வந்த அந்த சார்புப் பணியாளரை மரத்தில் ஏறி பழங்களைப் பறிக்கக் கட்டளையிட்டார் . அவனும் தான் அணிந்திருந்த புதிய அழகிய காலணிகளை மரத்தின் அடியில் கழற்றி வைத்து விட்டு பழத்தைப் பறிக்க மேலே ஏறினான் . அவன் மேலே சென்றதும் உயர் அதிகாரியின் வேலைக்காரன் கழற்றி வைத்த காலணிகளைக் தன் அதிகாரியின் ஆணைப்படி திருடிக் கொண்டு சென்றான் . இதனைக் கண்ணுற்ற அந்தச் சார்புப் பணியாளர் மரத்தின் மேல் இருந்தவாறே தடுக்க முயன்றான் முடியவில்லை . கீழே இறங்கி வந்து உயர் அதிகாரியிடம் அது பற்றி புகார் செய்த போது , அந்த உயர் அதிகாரி “ மற்றவர்களின் காலணிகளைக் காவல் காப்பது ஒரு மாவட்ட உயர் அதிகாரியின் கடமையன்று ” என்றார் .
15 . பிந்திவந்த சுவை உணவு :
‘ மூலன் ’ என்பவர் ‘ சோழ ’ மரபினைச் சார்ந்த ஆளுநர் ஆவார் . அமைச்சரின் செயலராக இருந்த அவருடைய மகன் அவருக்கு உணவளிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தார் . ஆளுநருக்கு வெறுப்பு ஏற்படும்போதெல்லாம் அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்குச் சவுக்கடி தண்டனை வழங்குவது அவர் வழக்கம் . ஒருநாள் அவருடைய மகன் அவருக்கு வகை வகையான புதிய சுவையான உணவுகளைப் பரிமாறினார் . ஆளுநர் மூலன் அன்று வயிறு புடைக்கச் சாப்பிட்டார் . அவரைச் சுற்றியிருந்தவர்களெல்லாம் யாரோ ஒருவர் , அவரின் சவுக்கடி தண்டனைக்கு ஆளாகப்போகின்றனர் என்பதை ஊகித்து உணர்ந்தனர் . வயிறு நிரம்பியதும் அத்தகைய சுவையான உணவினை இதுவரை தனக்குப் பரிமாறிய குற்றத்திற்காகச் சவுக்கடி தண்டனை வழங்கினார் ஆளுநர் தன் மகனுக்கு .
16 . சாட்டையினை ஆய :
பல்லவர் ஆட்சி காலத்தில் ‘ மாமல்லன் ’ ஆளுநராக நியமிக்கப்பட்டார் . ஒருமுறை அவர் ஆய்வுக்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு புதர் அருகில் வந்தார் . அங்கு அழகிய சாட்டைகள் இருப்பதைக் கண்டு அவற்றில் ஒன்றையெடுத்துச் சென்றார் . அந்த சாட்டையை ஆய்ந்து பார்க்க ஒரு மனிதனை தேர்ந்தெடுத்தார் . தேர்ந்தெடுத்த அந்த மனிதன் , " நான் தவறு ஏதும் செய்ய வில்லையே ” என்று முறையிட்டான் . “ இனி நீ எதிர் காலத்தில் தவறுகள் ஏதும் செய்ய நேரிட்டால் , சாட்டை அடியிலிருந்து உனக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் ” என்று வாக்குறுதியளித்தார் ஆளுந ர். பின்னர் எதிர்பாராத வகையில் அவன் ஒருநாள் தவறு செய்ய நேர்ந்தது . அந்தத் தவறுக்காக அவன் சாட்டையடிக்கு ஆளானபோது ஆளுநரிடம் “ ஐயா , முன்பே இந்த தவறுக்கு நான் சாட்டையடித் தண்டனை பெற்றுவிட்டேன் ” என்று சொல்லி ஆளுநர் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினான் . ஆளுநரோ “ குற்றமற்றவனாயிருக்கும் போது நான் உனக்கு அந்த வாக்குறுதி தந்தேன் . இப்போதோ நீ குற்றம் புரிந்திருக்கிறாய் ” என்று சொல்லி அவனைச் சட்டையால் அடிக்கத் தொடங்கினார் .
17 . மணமகன் தேவை :
செல்வர் வீட்டு நங்கையருக்கு அரசுத் தேர்வில் வெற்றி பெற்ற சிறந்த இளைஞர்களை மணமகனாகத் தேர்வு செய்வதுண்டு . இப்படி தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களில் பலர் தங்கள் விருப்பத்திற்கு மாறாகவே இத்தகையத் திருமணங்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர் . ஒருமுறை அழகிய படித்த இளைஞனைப் பெருமான் வீட்டு ஏவலன் தன் முதலாளி வீட்டிற்கு அழைத்துச் சென்றான் . இளைஞனும் எவ்விதத் தயக்கமின்றி அவனுடன் சென்றான் . வீட்டிற்குள் நுழைந்ததும் விலையுயர்ந்த ஆடையணிந்த ஒரு மனிதன் வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்து , இளைஞனிடம் “ அழகும் அடக்கமும் நிறைந்த எங்கள் வீட்டுப்பெண் உம்மை மணமுடிக்க ஒப்புக்கொள்கிறாள் ” என்றான் .
இளைஞனோ தலை வணங்கி அவனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு “ எனக்கு இத்தகைய மேன்மையும் உயர்வும் தரப்பட்டமைக்கு மிக்க நன்றி . எனினும் நான் என் வீடு சென்று என் மனைவியிடம் ஒப்புதல் கேட்டு வருகிறேன் ” என்றான் . இதனைக் கேட்ட அங்குக் குழுமியிருந்த அனைவரும் சிரித்த வண்ணம் கலைந்து சென்றனர் .
18 . பாதிநாள் ஓய்வு :
உயர்ந்த நிலையிலுள்ள ஒரு மனிதர் ஒரு முறை தாமரை மடத்திற்கு வருகை தந்தார் . போதிய அளவு மது அருந்தியவுடன் கம்பர் காலத்துக் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினார் . “ மூங்கில் புதரின் வழியாய் செல்கையில் துறவியுடன் உரையாடினேன் ; மற்ற வேளையில் , பாதி நாள் ஓய்வில் இந்த நீந்தும் வாழ்வை மேற்கொண்டேன் ” என்று பாடினார் . பாடலைக் கேட்டு , விருந்து கொடுத்த துறவி சிரித்தார் . அவர் சிரிப்பின் காரணம் கேட்ட போது அவர் சொன்னார் . “ உங்களுக்கு உண்மையில் அரை நாள் ஓய்வுண்டு . இந்த விருந்திற்காக நானோ மூன்று நாள் தொடர்ந்து ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன் ” என்று கூறினார் .
19 . காணமற்போன களைபிடுங்கி :
உழவன் ஒருவன் கழனியில் தன் களையெடுப்பானை விட்டுவிட்டு வீடு திரும்பினான் . களையெடுப்பான் எங்கே என்று அவன் மனைவி கேட்டாள் . “ மறந்து கழனியில் விட்டுவிட்டு வந்துவிட்டேன் ” என்று உரக்கச் சொன்னான் உழவன் . “ உரக்கச் சொல்லாதீர்கள் யாரேனும் கேட்டால் அதனைத் திருடிச் சென்று விடுவர் ” என்றாள் . பின்னர் அடுத்தவர் சென்று திருடிச் செல்லுமுன் , முந்திச் சென்று எடுத்து வாருங்கள் ” என்றாள் மனைவி . அவனும் அவ்வாறே விரைந்து சென்று களைபிடுங்கியைத் தேடினான். களைபிடுங்கியோ காணாமல் போய்விட்டது . வருத்தத்தோடு வீடு திரும்பினான் . ஆவலோடு நின்றிருந்த மனைவியை அருகில் அழைத்தான் . அவள் காதருகில் குனிந்து “ அதனைக் காணவில்லை ” என்று அக்கம் பக்கத்தினர் காதில் விழுந்துவிடாத வண்ணம் சொன்னான் அந்தப் பைத்தியக்காரன் .
20 . அம்மணமாய் ஓர் அதிகாரி :
கொடிய வெயில் . பகலெல்லாம் உழைத்தப் பின் பொதுக்குளியல் அறைக்கு வந்தார் , ஒரு கீழ்மட்ட அரசு அதிகாரி ஒருவர் . குளித்து முடித்தபின் , தன் ஆடையையும் , உள்ளாடையையும் யாரோ திருடிச் சென்றிருப்பதைக் கண்டார் . குளியலரை மேலாளர் அந்த அதிகாரி வேண்டுமென்றே வேடிக்கை செய்வதாக ஐயப்பட்டார் . பின்னர் அந்த அதிகாரி தன் தலைகவிப்பினை எடுத்துத் தலையில் அணிந்தார் . பின்னர் காலணிகளையும் அணிந்தார் . குளியலரை மேலாளரிடம் சென்று “ இந்தக் கோலத்தில் நான் வெளியே நடந்து செல்ல வேண்டுமா ? ” என்று கேட்டார் .
21 . மந்திரத் தாயத்து :
கொசுக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மந்திரவாதி ஒருவனிடமிருந்து ‘ தாயத்து ’ ஒன்றை வாங்கிக் கட்டிக் கொண்டான் பொன்னடி . தாயத்துக் கட்டியும் கொசுக்கடியிலிருந்து அவனால் தப்பமுடியவில்லை . கோபத்துடன் மந்திரவாதியிடம் சென்று தாயத்துத் தக்க பலன் அளிக்கவில்லை என்று முறையீடு செய்தான் . மந்திரவாதியோ “ தாயத்தை நீங்கள் தக்க இடத்தில் கட்டவில்லை . அதனால் தான் தப்பமுடியவில்லைக் கொசுக்கடியிலிருந்து ,” என்றான் , “ அப்படியானால் எங்கே கட்ட வேண்டும் ? ” என்று கேட்டான் அந்த மனிதன் . “ கொசு வலைக்குக் கீழே ” என்றார் அந்த மந்திரவாதி .
22 . உப்பு அதிகம் :
இரண்டு உடன்பிறந்தவர்கள் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . இன்று சோற்றுடன் உண்ண என்ன குழம்பு என்று இருவருள் ஒருவன் கேட்டான் . “ இப்போது தான் அடுப்பில் கருவாடு சுடப்படுகிறது . சுடப்படும் கருவாட்டை ஒருமுறை பாருங்கள் , பின் ஒருவாய் சோற்றினை உண்ணுங்கள் ” என்றார் தந்தை . சில நொடிகளில் “ அப்பா , அப்பா , ஒருவாய் சோற்றுக்கு அண்ணன் இரண்டு முறை கருவாட்டைப் பார்த்துவிட்டான் என்று தம்பி தந்தையிடம் முறையிட்டான் . “ அதிக உப்பு அவனைக் கொன்றுவிடும் ” என்று எச்சரித்தார் பிள்ளைகள் மீது அக்கறை கொண்ட தந்தை .
23 . பரிசுப் பொருளாகப் பழைய ‘ நாள்காட்டி ’ :
புத்தாண்டு பிறப்பின் போது புத்தாண்டு பரிசினை ஒருவருக்கு மற்றொருவர் அனுப்பினார் . அஞ்சல்காரனிடமிருந்து அப்பரிசினைப் பெற்றுக் கொண்ட வீட்டுக்காரர் , அந்த அஞ்சல்காரனுக்குப் புத்தாண்டுப் பரிசாக தன் வீட்டில் இருந்த பழைய நாள்காட்டியைக் கழற்றிக் கொடுத்தார் . இதனைக் கண்ணுற்ற வீட்டு வேலைக்காரி அந்த பழைய நாள்காட்டியால் அந்த மனிதனுக்கு எந்தப் பயனும் இல்லை என்றாள் . “ எனக்கும் தான் அதனால் இனி எந்தப் பயனுமில்லை ” என்று சொல்லியவாறு நாள்காட்டியை அஞ்சல்காரனிடம் கொடுத்தான் அந்த வீட்டுக்காரன் .
24 . களவு :
திருட்டுக் குற்றத்திற்காக மரக்கட்டையொன்றில் ஒரு மனிதன் பிணைக்கப்பட்டிருந்தான் . அதனைக் கண்ட அவன் நண்பன் “ என்ன நடந்தது ? ” என்று கேட்டான் . அதற்கு அந்தத் திருடன் “ இது எனது போகூழ் ; அவ்வளவுதான் . தற்செயலாக வீதி வழியே செல்லும் போது ஒரு சிறிய கயிற்றினைக் கண்டு கையில் எடுத்தேன் ” என்றான் .
இந்த அற்பச் செயலுக்காக யாரும் தண்டிக்க மாட்டார்களே ” என்றான் நண்பன். திருடன் சொன்னான் “ நான் எடுத்தக் கயிற்றின் மறுமுனையில் கன்று ஒன்று கட்டப்பட்டிருந்தது ” என்று .
25 . தடித்த படுக்கை விரிப்புகள் :
கோடையில் கொசுவின் தொல்லை தாளாத ஒரு மனிதன் அதைப் பற்றி நண்பனிடம் முறையிட்டுத் தப்பிக்க வழி கேட்டான் . அப்போது நண்பன் சொன்னான் “ கனமான தடித்த படுக்கை விரிப்புக்கடியில் படுத்துக் கொள் ” என்று . “ ஏன் ” என்று விளக்கம் கேட்டான் அந்த மனிதன் . நண்பன் சொன்னான் , “ கொசுக்கள் உன்னைக் கடிக்க முனையும் போது படுக்கை விரிப்பு அசையும் . அப்போது அசையும் விரிப்பில் கொசுவின் கொடுக்குகள் சிக்கி வளைந்துவிடும் படுக்கை விரிப்பில் சிக்கி வளைந்த கொடுக்குகள் குணமடைய 120 நாள்கள் ஆகும் . அதற்குள் குளிர்காலமும் தொடங்கிவிடும் ” என்று .
26 . மாண்புமிகு அய்யா :
கொள்ளையடிக்க கொள்ளையர்கள் ஒரு வீட்டில் நுழைந்த போது , கொள்ளைக் கும்பலின் தலைவனின் மனத்தைக் குளிர்விக்க , “ மேன்மைக்கு உரியவரே , தளபதி அவர்களே , விடுதலை வீரரே “ என்றெல்லாம் போற்றித் துதித்தான் வீட்டுக்காரன் . ஆனால் கொள்ளையர் தலைவனோ அவற்றுக்குச் சற்றும் மசியவில்லை . சோர்ந்து போன வீட்டுக்காரர் , “ ஐயா தங்களை நாங்கள் எப்படி அழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ? ” என்றார் . அதற்கு அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன் “ என்னை நீங்கள் மாண்புமிகு ஐயா ” என்று அழையுங்கள் என்றான் . ‘ ஏன் ? ’ என்று கேட்ட போது அவன் சொன்னான் “ நம் நாட்டில் அரசுத் துறை பொறுப்பு அதிகாரிகள் அவ்வாறு தான் அழைக்கப்படுகிறார்கள் ” என்று .
27 . ஒரு நீர் முந்திரி மரம் :
மலைவாசி ஒருவன் ஏரிகள் நிறைந்த ஏரி வட்டாரத்திற்கு வந்தான் . நடந்து வந்த களைப்புத் தீர ஏரிக்கரையில் நின்ற ஒரு மரத்து நிழலின் ஓய்வுக்காக அமர்ந்தான் . பக்கத்தில் ஒரு நீர்முந்திரி கிடப்பதைக் கண்டு , அதனையெடுத்து உண்டான் . அது மிகவும் அரிய சுவைமிகுந்திருப்பதை உணர்ந்தான் . பின்னர் எழுந்து நின்று அந்த மரத்தின் தண்டினையும் கிளைகளையும் உலுக்கினான் . ஆனால் ஒன்றும் விழவில்லை . “ இத்தனைப் பெரிய மரத்தில் ஒரே ஒரு முந்திரிப் பருப்புதானா ? ” என்று தனக்குள்ளே வியந்து கேட்டுக் கொண்டான் .
★ குறிப்பு : நீர் முந்திரி என்பது நீருக்குள் படர்ந்து வளரும் ஒருவித முட்கொடி என்று அவன் அறியான் . அவன் கரையில் நின்ற மரத்தை முந்திரிமரம் என்று நினைத்துக் கொண்டான் .
28 . கடனைத் தவிர்க்க :
கடன் வாங்கிய ஒருவன் , ஏற்கனவே தனக்குக் கடன் கொடுத்தவனுக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் , மேலும் கடன் வாங்கி அவனை ஏமாற்ற நினைத்தான் . கடன் கொடுத்தவனிடம் அவன் “ ஐயா , தற்போது நான் பணக்கார விதவை ஒருத்தியை மணமுடிக்கப் போகிறேன் . அவளுக்குத் திருமணப் பரிசு கொடுக்க என்னிடம் தற்போது போதிய பணம் இல்லை . தாங்கள் அந்தப் பணத்தைத் தந்து உதவினால் , எங்கள் திருமணம் நடந்து முடிந்ததும் உங்கள் கடனைமட்டும் திருப்பித்தராமல் , மேற்கொண்டும் நான் தங்களுக்குக் கடன் தந்து உதவுவேன் ” என்று ஆசைமொழிகளைச் சொன்னான் . அவனது இந்த சொற்களை நம்பிய அவனும் கடன் கொடுத்தான் .
கடனைப் பெற்றுக் கொண்ட அந்த மனிதன் அதில் ஒரு பகுதியைக் கொண்டு தன் வீட்டைப் புதுபித்து , வண்ணம் தீட்டினான் . கடன் கொடுத்தவன் திருமணத்திற்காக ஏற்பாடுகள் நடக்கின்றன என்று நம்பும்படிச் செய்யவே இவ்வாறு செய்தான் .
சில நாள்களுக்குப்பின் அந்த வீட்டின் வழியாகக் கடன் கொடுத்தவன் சென்றான் . பின் அவ்வீட்டு வாசலில் நின்று கடன் வாங்கியவன் இருக்கிறானா ? என்று விசாரித்தான் . வீட்டின் உள்ளிருந்து “ எனது கணவர் வெளியில் சென்றிருக்கிறார் ” என்று பெண் குரல் கேட்டது . இவ்வாறே கடன் கொடுத்தவன் பல நாள் கடன் வாங்கியவனைத் தேடிச் சென்றான் . ஒவ்வொரு முறையும் அதே பெண்குரல் வழக்கமான பதிலையே தந்தது . சந்தேகமுன்ற கடன் கொடுத்தவன் அந்த வீட்டின் கண்ணாடிப் பலகணி வழியாக உள்ளே எட்டிப்பார்த்தான் . பெண்கள் யாரும் உள்ளேயில்லை . கடன் வாங்கியவனே தன் விரல்களால் மூக்கைப் பொத்திக் கொண்டு பெண் குரலில் அந்த விடையைச் சொல்வதைக் கண்டான் . சினம் கொண்ட அவன் பலகணியை உடைத்து உள்ளே சென்று கடன் வாங்கியவனை நையப் புடைத்தான் . அப்போதும் அவன் அடியை வாங்கிய வண்ணம் “ என் கணவர் கடன் வாங்கியதற்கு என்னை அடிக்கிறீர்களே ? ” என்று மூக்கைப் பொத்தியவாறு பெண் குரலில் மெல்லக் கேட்டான் .
29 . பரபரப்பாக :
சிற்றுண்டிச் சாலையை அடைந்ததுமே , “ எனக்கு நான் கேட்ட பத்து முட்டை வறுவலை ஏன் இதுவரையிலும் தரவில்லை ” என்று கேட்டான் ஒருவன் . கடைக்காரனோ அவை ஓர் ஏனத்தில் கொண்டு வந்து கொடுத்து “ விரைந்து சாப்பிடு . ஏனத்தை நான் கழுவிவைக்க வேண்டும் . விரைந்து ; விரைந்து என்று துரிதப்படுத்தினான் . இதனைக் கேட்டுச் சினத்தோடு அந்த மனிதன் வீடு திரும்பினான் . நடந்ததைத் தன் மனைவியிடம் “ நான் சினத்தில் தலைகீழாய்க் கவிழ்த்துவிட்டேன் ; மிகவும் வேதனைக்குரியது அவன் செயல் ” என்றான் . இதனைக் கேட்ட அவன் மனைவி தன் கைப்பையை எடுத்துக் கொண்டு , “ நன்று , நீங்கள் சாகப்போவது உண்மையானால் நான் மறுமணம் செய்து கொள்கிறேன் ” என்றாள் .
இரண்டாவது கணவனுடன் ஓர் இரவு கழித்தப்பின் , அவன் அவளை அனுப்பி விட்டான் . ஏன் என்னை அனுப்புகிறாய் என்று அவள் அவனை கேட்ட போது அவன் சொன்னான் “ நீ இப்போதே ஒரு மகனை ஈன்றெடுப்பாய் என்று எதிர்பார்த்தேன் ” என்று .
30 . என்னை ஆய்ந்து கொள்ளுங்கள் :
மாவட்ட பொறுப்பு அதிகாரியிடம் தன் மாடு திருடு போய்விட்டதாக முறையீடு செய்தான் ஒரு மனிதன் . அதிகாரி கேட்டார் “ எப்போது ? ” என்று. “ நாளை ” என்றான் அந்த மனிதன் . அதிகாரி அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார் . இதனைக் கவனித்த மாவட்ட அதிகாரி சட்ட அதிகாரியைப் பார்த்து “ நீ தான் திருடியுள்ளாய் . அப்படித்தானே ? அதை எங்கே மறைந்து வைத்திருக்கிறாய் ? ” என்று கேட்டார் .
அதற்கு அந்தச் சட்ட அதிகாரி தன் மேலாடையை உதறிக் காண்பித்து ‘ என்னை வேண்டுமானால் சோதித்துக் கொள்ளுங்கள் ’ என்றார் .
31 . சிவப்புக்கால் சட்டை :
ஆய்வுக்காகப் பயணம் மேற்கொண்டபோது அதிகாரி ஒருவர் வீதியில் ஓர் இளைஞன் மிகவும் பொறுமையாக நடந்து போய் கொண்டிருப்பதைக் கண்டார் . திடீரென்று காற்றுப் பலமாக வீசியதால் அந்த இளைஞனின் மேலாடை மேலெழுந்து கீழே அவன் அணிந்திருந்த சிவப்பு வண்ண பட்டுக் கால்சட்டை அதிகாரியின் கண்ணில் பட்டுவிட்டது . விலை உயர்ந்த பட்டினைக் கால்சட்டையாக அணிந்து ஊதாரித்தனமாகப் பணத்தைச் செலவிட்டதால் அதிகாரி அவனுக்குப் பத்துச் சவுக்கடித் தண்டனை வழங்கினார் . ஐந்து அடிகள் விழுந்ததுமே அந்த இளைஞன் தான் தன் இடுப்பிற்கு மேலே உள்ளாடையாக அணிந்திருப்பது எளிய மட்டமான துணியாதலால் ஐந்து அடிகள் போதுமானது என்று சொல்லி மேற்கொண்டு அடிப்பதை அந்த இளைஞன் எதிர்த்தான் .
32 . சாப்பாட்டு ஆசை :
‘ பசிக்கிறது ’ என்று அழுதுகொண்டே தன் தந்தையிடம் முறையிட்டது ஒரு குழந்தை . மகனின் முதுகை வருடியவாறு தந்தை “ மகனே , உண்பதற்கு உனக்கு என்ன வேண்டும் . கடல் அரசன் வருணனின் ஈரல் வேண்டுமாயினும் நீள்விலங்கும் பறவையின் விலாக்கறி வேண்டுமாயினும் , எது வேண்டுமாயினும் சொல் ; அதை உனக்கு நான் தருவேன் ” என்றான் . “ எனக்கு எளிய சாப்பாடு போதும் ” என்று கேட்டான் மகன் . “ மடையனே ” கத்தினான் தந்தை “ எப்போதும் நீ , எது நம்மிடம் இல்லையோ அதைத்தான் கேட்கிறாய் ” என்று சினந்து கொண்டான் தந்தை .
33 . கடினமானது எது :
உலகத்தில் கடினமான பொருள் எது என்பது பற்றி இரண்டு மனிதர்கள் தருக்கித்துக் கொண்டிருந்தன ர். இரும்புதான் கடினமானது என்றான் ஒருவன் . “ இல்லை , இரும்பு நெருப்பில் உருகிவிடும் . எனவே அது கடினமானது அன்று ” என்று மறுத்தான் மற்றவன் . “ அப்படியானால் கடினமானதுதான் எது ? ” என்றான் முதலாமானவன் . “ மனிதனின் தாடிதான் ” என்றான் இரண்டாவது பேர்வழி . அவன் தொடர்ந்தான் " ஏனெனில் எவ்வளவு தான் முகத்தின் தோல் கடினமாக இருந்தாலும் அதில் தாடி முளைத்து விடுகிறதே ” எனறான் .
குறிப்பு : சீன நாட்டில் தன்மான உணர்வற்றவனை முகம் தடித்தவன் என்று அழைப்பதுண்டு . நம் நாட்டில் கூட சூடுசொரணையற்றவனை தடித்த தோலன் என்பர் .
34 . வெறும் காக்காப் பொன் :
வைக்கோற் துரும்பினைக் காக்காப் பொன்னென்று விற்றுப் பணம் சேர்த்தான் முட்டாள் ஒரு காகிதப்பொன்வணிகன் . அவனுடைய முட்டாள் மகனோ அவனுடைய இந்தத் தொழில் கமுக்கத்தைச் சிலரிடம் சொல்லி வந்தான் . இதையறிந்த தந்தை மகனிடம் “ யாராவது , எப்பொழுதாவது இதுபற்றிக் கேட்டால் இது காக்காப்பொன் என்று மட்டும் சொல் ; வேறு எதுவும் சொல்லாதே ” என்று அறிவுரை வழங்கினான் .
ஒரு நாள் அதிகாலையில் தந்தை எழுந்து அவருடைய நண்பர் ஒருவருடன் வெளியில் சென்றார் . வைக்கோற் துரும்பொன்று தந்தையின் தாடியில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட மகன் “ அப்பா , அப்பா உமது தாடியில் ஒரு காக்காப் பொன் ” என்று வியப்பில் கூவினான் .
35 . பொய்யரசர் :
திருமணம் ஒன்றினால் இரண்டு குடும்பங்கள் இணைக்கப்பட்டன . மணமகனின் தந்தை பெரும் செல்வர் . அவர் ( தன் சம்பந்தி ) மணமகளின் தந்தையை வீட்டிற்கழைத்துத் தன் வீட்டிலுள்ள விலையுயர்ந்தப் பொருள்களையெல்லாம் காட்டிப் பெருமை பாராட்டிக் கொண்டார் . பின்னர் “ இதைப் போன்ற விலைமதிக்க முடியாத பொருள்கள் ஏதேனும் உங்களிடம் உண்டா ? ” என்று கேட்டார் . “ உங்களிடத்தில் உயிரற்றப் பொருள்கள் தான் இருக்கின்றன . இங்கு நான் வியப்படையும்படியாக ஒன்றுமில்லை . எங்கள் வீட்டில் விலையேறப் பெற்றதும் உயிருள்ளதுமான இரண்டு அற்புதமான கருவூலங்கள்
வைத்திருக்கிறோம் ” என்றார் மணமகளின் தந்தை . “ அவை யாவை ? ” என்று வினவினார் மணமகளின் தந்தை .
“ ஒரு தெய்வீக கொக்கும் , மிக வியக்கத்தக்க கடற் குதிரையும் ” என்று மறுமொழிப் பகர்ந்தார் மணப் பெண்ணின் தந்தை . “ எனக்கு அவற்றை ஒரு முறை காட்டுங்கள் ” என வேண்டினார் பிள்ளையின் தந்தை . பெண்ணின் தந்தை நாள் ஒன்றைக் குறித்துப் பின் விடைபெற்றுச் சென்றார் .
வீட்டையடைந்து பெண்ணின் தந்தை மிகவும் சோர்ந்து காணப்பட்டார் . வாடியத் தந்தையிடம் மகன் விளக்கம் கேட்டார் . தந்தை சொன்னார் “ நேற்று நான் நம் பெண்ணின் வீட்டாரிடம் ஒரு பொய் சொல்லிவிட்டேன் .
நம்மை அவர்கள் உயர்வாக எண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் . நம்மிடம் தெய்வீகக் கொக்கு ஒன்றும் , கடற் குதிரையொன்றும் இருப்பதாகச் சொல்லிவிட்டேன் . அவர்களும் அவற்றைக் காண வரவிருக்கிறார்கள் . என்ன செய்வதென்றே தோன்றவில்லை ” என்று “ கவலையை விடுங்கள் நான் சமாளித்துக் கொள்கிறேன் ” என்றான் மகன் .
குறிப்பிட்ட நாளும் வந்தது . பிள்ளையின் தந்தையும் வந்தார் . பெண்ணின் தந்தையை அரசர் உடையை அணியச் செய்து , தலையில் மணி மகுடத்துடனும் , கையில் வாளுடனும் , கூடத்தின் நடுவில் ஒரு மேடையமைத்து அதில் அமரச் செய்தான் அவரின் மகன் . “ உங்கள் புகழ்மிக்க தந்தை எங்கே ? ” என்றார் ஆவலுடன் பணக்கார மாமனார் . “ அப்பா அவசர அலுவல் காரணமாக எதிர்பாரத நிலையில் வெளியே சென்றுள்ளார் என்றான் மருமகன் . “ உங்கள் தந்தை தெய்வீகக் கொக்கினையும் , கடற்குதிரையையும் எனக்குக் காட்டுவதாகச் சொல்லி என்னை அழைத்தார் . அவற்றைப் பார்த்துவிட்டுச் செல்லத்தான் வந்தேன் ” என்றார் அவர் . மருமகன் சொன்னான் “ அடடா , போகூழ் நிலையில் இரண்டுமே இப்போது இங்கு இல்லையே . எங்கள் கடற்குதிரையை இப்போது தான் கடல் அரசன் பவனி வர இரவல் வாங்கிச் சென்றான் . விண்ணகத்தில் நடக்கும் விருந்தொன்றில் கலந்து கொள்ள கொக்கினை இரவலாக அழைத்துச் சென்றுள்ளது தேவதை ” என்று . இதனைக் கேட்டு வியப்பு இன்னும் அதிகமாகக் கூடத்தின் இடையில் அரச பாவனையில் வீற்றிருக்கும் பெண்ணின் தந்தையைச் சுட்டிக் காட்டி “ இதன் தெய்வீகத் தன்மையென்ன ? ” என்றார் பிள்ளையின் தந்தை . மருமகன் “ அதுவா , இவர் எங்கள் உறவினர் வணக்கத்திற்குரிய பொய்யரசர் ” என்றான் . வந்தவர் திகைத்து நின்றார் .
36 . மனிதனின் வலிமையின்மை :
தனக்குப் பொருத்தமில்லாத கணவனுக்கு தக்க பயிற்சியளித்து தாய்வீடு அழைத்து வந்தாள் பெண்ணொருத்தி . “ என் பெற்றோர்களிடம் இரண்டு சிறந்த ஓவியங்கள் உள்ளன . அவை எங்கள் குடும்பத்தின் பழங்காலச் சொத்து . அந்த ஓவியங்கள் ஒன்றில் காட்டோடை ஒன்றின் அருகில் ‘ சேரர் ’ காலத்துக் குதிரை ஒன்று நின்று கொண்டிருப்பதைப் போலவும் , மற்றொன்றில் அழகுணி மரங்கள் நிறைந்த வனாந்தரத்தில் ‘ சோழர் காலத்து ’ ஒன்று நின்று கொண்டிருப்பது போலவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளன . அவற்றை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் ” என்று அவள் தன் கணவனுக்குக் கற்பித்தாள் . வீட்டை அடைந்ததும் மாமனார் மருமகனிடம் அவ்விரு ஓவியங்களையும் காட்டி , அவை என்ன ? என்று கேட்டான் . மனைவி ஏற்கனவே கற்பித்த வண்ணம் விடை சொன்னான் . மருமகனின் விடையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார் மாமனார் . சற்று நேரத்துக்குப் பின் பதினெட்டு அறிஞர்களின் உருவங்கள் தீட்டப்பட்ட ஓவியத் திரையொன்றைக் காட்டி மருமகனிடம் அவ்வோவியம் பற்றிக் கேட்டா ர். மருமகனோ தன் மனைவி ஏற்கனவே கற்றுக் கொடுத்த முன்பு சொன்ன பதிலையே கிளிப்பிள்ளைபோல் சொன்னான் .
இதனைக் கேட்டு அங்குக் குழுமியிருந்தோர் நகைத்தனர் . மாமனாரோ மருகமணிடம் “ உனக்கு மாட்டினையும் , குதிரையினையும் தெரிகிறது . ஆனால் மனிதர்களைத்தான் அடையாளம் காணத் தெரியவில்லை ” என்றார் .
37 . காலமுள்ளபோதே நற்பணி :
வாள் கொண்டு இரு கூறாய் உடலை வெட்டி நெருப்பில் வீசப்படும் கொடிய நரகத் தண்டனையிலிருந்து ஒருவன் விடுபட , புத்தரைத் தெய்வமாகத் தொழுது , பெளத்த மடங்களுக்கு நன்கொடைகள் அளித்து , பெளத்த துறவிகளுக்குத் தருமம் தந்து அவர்களைப் போற்றி வருதல் வேண்டும் என்று போதித்து வந்தார் பெளத்த துறவி ஒருவர் .
விரைவிலேயே அந்த பெளத்த துறவியும் ; அவரையும் அவருடைய போதனைகளையும் போற்றிக் காப்பாற்றி வந்த அவருடைய தலையாயத் தொண்டனும் மடிந்தனர் . உலகில் தான் செய்த பாவங்களுக்காக உடலை இரு கூறாக்க நரகத்தின் பலிபீடத்துக்குக் கொண்டு வரப்பட்டார் துறவி . இதனைக் கண்டு அவரது தொண்டன் ஓடிச்சென்று துறவியிடம் விளக்கம் கேட்டார் . விளக்கம் தந்தார் துறவி . " உனக்குப் புரியாது மண்ணுலகில் பெளத்த மடங்களும் , துறவிகளும் நாளுக்கு நாள் குறைந்து வருவதை உணர்ந்த , நரக உலகின் அதிபதி , இறந்துபோன ஒவ்வொரு துறவியையும் இரண்டாக வெட்டி , துறவிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்க ஆசை கொண்டு என்னை இவ்வாறு இரண்டாகப் பிளக்கப் போகிறார் என்றார் . துறவி விளக்கம் கேட்டும் , அவர் வெட்டப்படுவது கண்டும் விழி பிதுங்க வியப்புடன் நின்றார் தொண்டர் .
38 . மனைவிக்குப் பயந்த மாவட்ட நீதிபதி :
மனைவிக்கு அஞ்சிய மாவட்ட நீதிபதி ஒருவர் இருந்தார் . ஒருநாள் தனது வீட்டின் மதிற்சுவருக்கு வெளியே யாரோ சிலர் சண்டையிடும் இறைச்சல் கேட்டது . உடனே தன் ஏவலனைக் காரணம் கண்டுவர அனுப்பினார் நீதிபதி . ஏவலன் திரும்பி வந்து , “ நமது காவலர் அறையின் முன் ஒரு கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் . மனைவி கணவனை அடித்துக் கொண்டிருக்கிறாள் ” என்றான் நீதிபதி . அதுகேட்டு பற்களை ‘ நறநற ’ வென்று சினத்தில் கடித்தார் . நான் மட்டும் அவனிடத்தில் இருந்தால் , நான் என்ன செய்வேன் தெரியுமா ?... என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய மனைவியின் தலை தெரிந்தது . மனைவியின் தலை தெரிந்ததும் அச்சத்தில் நீதிபதி “ உடனே நான் முழங்காற் படியிட்டுக் கொடுக்கின்ற அடி உதைகளை ஆடவன் போல் அடக்கத்தோடு பெற்றுக் கொள்வேன் ” என்றார் .
39 . விலைமதிக்க முடியாத சரக்கு :
தந்தையும் மகனும் மது நிறைந்த ஒரு பானையைத் தூக்கிக் கொண்டு வந்தனர் . வழியில் அடி பிறண்டதால் , ( கால் தடுமாறியதால் ) பானை கீழே விழுந்து நொறுங்கி , மதுவெல்லாம் சிந்தியது . உடனே மகன் தரையில் மண்டியிட்டு சிந்திய மதுவை எவ்வளவு விரைவாகக் குடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகக் குடித்தான் . சற்று நேரத்திற்குப் பின் தலைதூக்கித் தந்தையைப் பார்த்து “ நீங்கள் ஏன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் . யாராவது வந்து இந்திய மதுவை கிண்ணங்களில் வழித்தெடுத்துச் சென்றுவிடுவர் ” என்றான் .
40 . அடையாளம் காணமுடியாது :
அண்ணாமலையான் உண்பதில் ஆர்வமிக்கவன் . அவன் ஒவ்வொரு விருந்தின் போதும் இடைவெளியின்றி தொடர்ந்து உண்பது பழக்கம் . ஒருநாள் ஒரு விருந்தின் போது எதிரேயிருந்த விருந்தினர்களில் ஒருவரை நோக்கி , “ இப்படிப்பட்ட விருந்துவொன்றில் முன்னமே உங்களை நான் பார்த்தது போல் தோன்றுகிறதோ ” என்றான் . “ இல்லை ; இல்லை நீங்கள் வேறு யாரையோ பார்த்துவிட்டு நான் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ” என்றான் அந்த மற்ற விருந்தினன் .
அடுத்து வேறு வகை உணவுகள் பரிமாறப்பட்ட போது , மீண்டும் அந்த அண்ணாமலை உணவுண்ண பயன்படுத்தப்படும் கரண்டிகளை இங்குமங்கும் விரைவாக அசைத்து உண்ணத் தொடங்கினான் . கவிழ்ந்த தலை நிமிராமல் அவன் தொடர்ந்து உண்பதைக் கண்ட மற்றொரு
விருந்தினன் ஆமாம் , நாம் முன்பே ஒரு முறை சந்தித்திருக்கிறோம் . உண்மையென்னவெனில் அந்த விருந்தின்போது , “ நீங்கள் எதிரில் இருப்பவர்களை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் உணவு வகைகளில் வைத்த கண் வாங்காமல் குனிந்த வண்ணம் சாப்பிட்டதால் , உங்கள் திருமுகத்தை என்னால் காணமுடியாமல் போய்விட்டது . மன்னிக்க வேண்டும் ” என்று மறுமொழி பகர்ந்தான் . அந்த மற்றுமொரு விருந்தினன் .