தெனாலிராமன் கதை , மரியாதை ராமன் கதை போன்ற பற்பல நகைச்சுவை நறுக்குகள் நானிலத்திலும் உள்ளன . அவற்றைத் தேடி எடுத்துக் கொடுப்பதில் ஒரு சிலரே ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ’ என்று நாள்தோறும் உலக மொழிகளிலே விழிவைத்துப் பார்க்கின்றனர் . அவர்களுள் ஒருவரே நம் புலவர் த. கோவேந்தன் அவர்கள் தொகுப்பு சீனா , ஜப்பான் நாட்டு நகைச் சுவை நறுக்குகள் , துணுக்குகள் இங்கே உங்கள் கையில் அமர்ந்து சிரிக்கின்றன ; சிந்திக்க வைக்கின்றன .
பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தாம் கற்பது மட்டுமின்றி தம் பிள்ளைகட்கும் தம் மாணவர்கட்கும் இந்நூலைத் தந்து சிரித்து மகிழ்ந்து வாழட்டும் .
மக்களாகிய நமக்கே சிரிக்கத் தெரியும் . நண்பர்கள் , உற்றார் உறவினர்கள் எல்லோருடனும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழ்வது போன்ற ஓர் இன்பம் வேறு இல்லவே இல்லை .
எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் தப்பேதும் இல்லாத மனம் உடையவர்கள் . மனம் இறுக்கம் இருந்தால் , மனக்கவலை தோன்றும் . மனக்கவலைக்கு மருந்து நகைச்சுவையாகும் . அந்த நகைச்சுவை அன்பில் முகிழ்விப்பது . அது நம்மைச் சூழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் உள்ளது . நம் நடிப்புகளே சொற்களே செயல்களே நம்மையும் நானிலத்தையும் சிரிக்க வைக்கும் பாங்குடையன . உள்ளம் உரை செயல்களில் ஓங்கிய நகைச்சுவை நறுக்குகளே இந் நூல் தொகுப்பு . படித்து நகையுங்கள் . எல்லாப் பகையையும் வெல்லுங்கள் . வாழ்க்கைத் திருவிழாவில் தொகை தொகையாய் இன்பம் பெருகும் . துன்பம் அருகும் . 
உலக நாடக மேடையில் நாம் விலைவாணராகவும் கொலைவாணராகவும் நடிப்பதை விடக் கலைவாணராக வாழ்வோம் .
41 . மறைவாக உண்ணும் விருந்தளிப்பவன் :
விருந்தினர்கள் முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது வீட்டுக்காரன் உள்ளே சென்று முதன் முதலில் விருந்துணவை மறைவாகச் சுவைப்பதும் வழக்கம் . ஒருமுறை விருந்தினர்களில் ஒருவன் வீட்டுக்காரன் உள்ளே சென்று மறைவாக விருந்துணவை உண்பதைக் கவனித்துவிட்டு , எல்லோரும் அறியும் வண்ணம் “ இந்த விருந்துண்ணும் கூடம் மகத்தானது , ஆனால் எல்லாத் தூண்களும் குறுக்குச் சட்டங்களும் கட்டைகளும் கரையானால் தின்னப்படுகின்றன ! ” என்று உரக்கக் கூவினான் . “ என்ன ? என்ன ” உணவை மறைவாக உள்ளே உண்டு கொண்டிருந்த வீட்டுக்காரன் வெளியே , ஓடிவந்தான் . வந்தவன் “ எங்கே கரையான் ? ” என்றான் . “ நல்லது அவற்றை நீங்கள் காணமுடியாது ” என்றான் விருந்தினன் . அவன் மேலும் “ உண்பதெல்லாம் இங்கே உள்ளேதான் நடைபெறுகின்றன ” எனத் தொடர்ந்தான் . அந்த மனிதனின் மனத்தில் தைக்கும்படி விருந்தினன் .
42 . திருடனிடமிருந்து தப்பிக்க :
அறியாமைமிக்க மனிதன் ஒருவன் தன் வீட்டினுள் திருடன் ஒருவன் நுழைவதைக் கண்டான் . விரைந்து சென்று “ அனுமதி இல்லை ” என்னும் வாசகம் எழுதிய பலகையை அறையின் முகப்பில் ஒட்டினான் . ஆனால் , பின்புறமுள்ள அறைக் கதவை உடைத்து உள்ளே நுழைய முற்படுவதைக் கண்டதும் “ வெளியே செல்ல அனுமதி இல்லை ” என்ற வாசகத்தை ஒட்டினான் . பின்னர் உட்புற முள்ள அறையினுள் சென்று நடப்பதை மறைந்திருந்து கவனித்தான் . அந்த அறிவிப்பு வாசகங்களை மீறித் திருடன் உள்ளே நுழைந்ததைக் கண்டதும் , பயந்து கழிப்பறையினுள் சென்று மறைந்து கொண்டான் . திருடனோ எதிர்பாராத வகையில் கழிவறை நோக்கிச் சொன்று கொண்டிருந்தான் . இதனைக் கண்டு மேலும் கலக்கமுற்ற அந்த மனிதன் கழிவறைக் கதவினைக் கையினால் பலமாக அழுத்தி பிடித்துக் கொண்டு “ கழிவறை உள்ளே ஏற்கனவே ஆள் இருக்கிறது ” என்று கத்தினான் .
43 . தவிர்க்க முடியாத எட்டாவது :
மது அருந்த ஆசைகொண்டாள் ஒரு இல்லத்தரசி . ஆனால் அவள் கணவனோ அவள் ஆசையை நிறைவேற்ற மறுத்தான் . அவன் சொன்னான் “ குடும்பம் நடத்த ஏழு பொருள்கள்தான் இன்றியமையாதவை , அவை ; விறகு , அரிசி , சமையல் எண்ணெய் , உப்பு , பருப்பு , புளி , தேயிலை என்று தான் சொல்லப்படுகிறது . மது அந்தக் குறிப்பில் காணப்படவில்லையே ” என்று தன் மறுப்புக்கு விளக்கம் தந்தான் கணவன் .
சினமுற்ற மனைவி “ குடும்பம் நடத்தத் தொடங்கும் முன்பே , மதுவை முந்திய இரவே கொண்டுவரப்பட வேண்டும் , அப்படியானால் மதுவை எட்டாவது தவிர்க்க முடியாத பொருளாக இணைத்துக் கொண்டால் என்ன ? என்று எரிந்து விழுந்தாள் கணவனிடம் .
44 . தீயினால் சுட்டப் புண் :
மதிமிஞ்சிக் குடித்தபின் , மயங்கி விழுந்து தூங்கினான் கிழவன் ஒருவன் . குளிர் காலமாதலால் குளிர்காய அடுப்பொன்றைத் தன் படுக்கையின் கீழே வைத்திருந்தான் . போதையில் தன் கால்கள் இரண்டினையும் அனலுக்கருகில் வைத்தவாறு துங்கினான் . அன்றிரவு அனல்பட்டுக் கால் ஒன்று கருகியது . காலையில் கருகிய காலைத் தன் குடும்பத்தவரிடம் காட்டி “ நான் தான் போதையில் தூங்கினேன் ; எனவே கால் கருகுவதைக் என்னால் உணர முடியவில்லை . ஆனால் உங்களுக்கெல்லாம் என்ன நடந்தது , இளைஞர்களாகிய நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை . கால் கருகி வீசுவதை நீங்களும் உணரவில்லையா ? என்று கேட்டார்
முதியவர் .
45 . தீய எண்ணங்கள் :
படகொன்றில் பயணம் செய்தார் துறவி ஒருவர் . அருகில் உடன் அமர்ந்து பயணம் செய்த பாவையை இச்சையோடு பார்த்தார் துறவி . தன்னைக் காமவெறியோடு வைத்தகண் வாங்காமல் காண்பதைக் கண்ட அந்த பாவை சினம் அடைந்தாள் . தவற்றைத் தொடர்ந்தால் அடிப்பேன் என்று அச்சுறுத்தினாள் .
அஞ்சிய அடியார் அடக்கத்தோடு கண்களை மூடிய வண்ணம் அமர்ந்திருந்தார் . படகு கரைசேர்ந்ததும் அந்த பாவை அடியாரை அடித்தாள் . தண்டனையின் காரணம் அறியாது திருதிருவென்று விழித்தத் துறவி “ இப்போது நான் தவறேதும் செய்யவில்லையே ; பின் ஏன் என்னை அடிக்கிறீர்கள் ? ” என்று வினவினார் . “ மூடிய விழிகளுக்குள்ளே நீங்கள் என்னைக் கண்டீர்கள் அது திறந்த கண்களால் காண்பதினும் கொடிய பாவம் ” என்றாள் அப்பாவை .
46 . நலமான இறப்பு :
மருத்துவம் பயின்ற மாணவன் ஒருவன் மருந்துகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அதன் இதர விளைவுகள் பற்றியும் கற்பதில் அதிக அக்கறை செலுத்துவதில்லை . நோயாளியின் நாடித் துடிப்பினைக் கணிந்தவுடனேயே மருந்தினைக் குறித்துக் கொடுத்து அருந்தும்படித் தன் நோயாளிகளிடம் சொல்லி வந்தான் . அதன் விளைவாக பற்பல நோயாளிகள் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர் . இறந்தவர்களில் ஒருவரின் உறவினர் சாக்காட்டிற்கு மருத்துவரே பொறுப்பு என்று குற்றம் சாட்டினார் . அப்போது மருத்துவர் “ நோயில் வாடி மடிவதைக் காட்டிலும் , நலமாய் சாவதே சிறந்தது என்று எண்ணி , அவர்கள் மீது கொண்ட இரக்கத்தால் அவர்களை நலமாய் இறக்கச் செய்தேன் ” என்றார் .
47 . இருக்க ஓர் இருக்கை வேண்டும் :
இரண்டு உடன்பிறந்தவர்கள் . மூத்தவர் செல்வ ர். இளையவர் எளியவர் . “ நீ எப்படி செல்வன் ஆனாய் ” இளையவன் கேட்டான் . “ பன்றிகளையும் ஆடுகளையும் கடவுளுக்குப் படைத்தேன் . பணக்காரன் ஆனேன் ” என்றான் மூத்தவன் .
இளையவன் மனைவியிடம் வந்து , பணக்காரனாகும் முறையினைச் சொன்னான் . அவளும் “ அதனாலென்ன நம்மிடமும் நான்கு கால்கள் உள்ள நாற்காலிகள் இரண்டுள்ளன . பன்றிக்கும் ஆட்டிற்கும் பதிலாக இவ்விரண்டையும் இறைவனுக்குப் படைக்கலாம் . இவற்றுக்கும் எட்டுக்
கால்கள் உள்ளன ” என்று சொல்லிப் பலிப் பொருளைக் காட்டினாள் .
மனைவி சொல்லே மந்திரம் என நினைத்த கணவனும் அவ்வாறே செய்தான் . ஆனால் , தெய்வமோ பலியைக் கண்டு கோபம் கொண்டது . சில நாள்களுக்குப் பின் மனைவி கணவனிடம் “ உண்பதற்குக் கொடுக்க ஒன்றும் இல்லையென்றாலும் , வந்த விருந்தினர்கள் அமர இரண்டு இருக்கைகளாவது இருந்தன . இப்போது அவையும் இல்லை ” என்று சலித்துக் கொண்டாள் .
48 . நலிந்த நல்வரவு :
தங்கள் மதுக் கலயங்கள் காலியான பின்னும் நீண்ட நேரம் மதுக்கடையிலேயே அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள் இருவரை நோக்கிக் கடைக்காரர் “ கொண்டல் கருத்துவிட்டது ; கனமழை வரப்போகிறது ; வீட்டிற்கு விரைந்து செல்லுங்கள் ” என்றார் . அந்த இருவரில் ஒருவன் சொன்னான் “ இதோ பார் , மழை வருகிறது நாம் எங்கும் போகவேண்டாம் ; மழை பெய்து முடியும் வரை நாம் இங்கேயே இருப்போம் ! ” என்று . மழை வருவதாகவும் இல்லை . அவர்கள் அங்கிருந்து நகருவதாகவும் தெரியவில்லை . வெறுப்புற்றக் கடைக்காரர் மீண்டும் அவர்கள் அருகில் வந்து “ முகில் கலைந்து விட்டது . இனி மழை வராது . நீங்கள் செல்லலாம் ” என்றார் . இதனைக் கேட்டதும் அந்த இருவரில் ஒருவன் மற்றவனிடம் , “ இப்போதே போக வேண்டும் என்று ஏன் கவலைப்படுகிறாய் ? கவலைப்படும்படி புயல் ஒன்றும் வீசவில்லை . அமைதியாக இரு ” என்றான் . கடைக்காரர் செய்வதறியாது விழித்தார் .
49.  ஒரு கோடிக்கதிபதியின் கவலைகள் :
கோடிக்கதிபதி ஒருவன் தன் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினான் . ஏராளமான நண்பர்களும் , உறவினர்களும் வாழ்த்துத் தெரிவிக்க அவன் இல்லம் வந்திருந்தனர் . அளவற்ற அன்பளிப்புகள் வந்து குவிந்தன . எங்கும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது . எனினும் அந்த அதிபதியின் முகத்தில் வாட்டம் தோன்றியது . ‘ ஏன் ? ’ என்று கவலைப்பட கேட்டார் வந்திருந்தவர்களில் ஒருவர் . “ கவலைப்பட ஒன்றுமில்லை . ஒருவேளை நான் என் இரு நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் போது வாழ்த்துத் தெரிவிக்க வந்தவர்களின் எண்ணும் பல நூறு மடங்கு இதனினும் அதிகமாக இருக்குமே . அவர்களையெல்லாம் நான் எப்படி வரவேற்றுச் சமாளிப்பேன் என்பது பற்றித்தான் கவலை கொள்கிறேன் ” என்றான் அந்த கோடிக்கதிபதி .
50 . அக்கறையற்ற தையல்காரன் :
ஆடை ஒன்றிற்கு துணியினைக் கத்தரிக்க , தையல்காரன் அழைக்கப்பட்டான் . வந்தவன் வேலையில் கவனம் செலுத்தாது , அக்கறையற்றுக் காணப்பட்டான் . வாடிக்கையாளர் கேட்ட போது , “ உங்களுக்குப் பொருந்தும் வண்ணம் துணியைக் கத்தரித்தால் எனக்கு எதுவும் மிஞ்சாது ; ஒரு முழம் துணியை நான் எடுத்துக் கொண்டால் , ஆடை அளவு உங்களுக்கு மிகவும் சிறியதாக இருக்கும் . இந்தச் சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் ” என்றான் தையற்காரன் .
51 . மதுவிலக்கு :
தனியார் விருந்தொன்றில் கலந்து கொண்டார் துறவி ஒருவர் . துறவி புனிதமானவர் என எண்ணிய விருந்தளிப்பவன் , “ தங்களுக்கு மது பரிமாறப்பட வேண்டுமா ? ” என்று துறவியிடம் கேட்டான் . “ நான் கொஞ்சம் குடிப்பவன்தான் . ஆனால் சைவ உணவை முற்றிலும் ஒதுக்குபவன் ” என்றார் துறவி .
52 . மகன் தந்தைக்காற்றும் கடன் :
நோயாளி ஒருவருக்கு மருத்துவம் செய்ய மருத்துவர் ஒருவர் அழைக்கப்பட்டார் . ஆய்வுக்குப் பின் , நிலமை மிகவும் இழிநிலையில் இருப்பதைக் கண்டார் மருத்துவர் . நோயாளியின் மகனின் தொடையிலிருந்து ஒரு துண்டு தசையினை வெட்டியெடுத்து நோயாளிக்கு உண்பதற்குக் கொடுத்தால் தான் குணமாகும் என்றார் மருத்துவர் .
நோயாளியின் மகன் இதோ தசையினை விரைவில் கொண்டு வருகிறேன் என்றான் .
மருத்துவர் சென்ற பின் , கத்தியை எடுத்துக் கொண்டு நோயாளியின் மகன் வெளியில் சென்றான் . கோடைக்காலமானதால் வாசலின் வெளியே ஒரு மனிதன் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான் . அந்த மனிதனின் தொடையிலிருந்து ஒரு துண்டு தசையினை வெட்டியெடுத்தான் .
பயந்து எழுந்த அந்த மனிதன் வேதனையில் கதறினான் . கதறிய அந்த மனிதனைப் பார்த்து , அழாதே என்று தன் கைகளை அசைத்துச் செய்கை செய்து காண்பித்தான் . பின்னர் அவன் சொன்னான் , “ உனது தசை சாகப்போகிற ஒரு தந்தையின் உயிரைக் காக்கப்போகிறது . ஒரு தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய கடமையின் இன்றியமையாமையை நீ அறிய மாட்டாயா ? ” என்று .
53 . வேதனையிலிருந்து விடுபெற வழி :
சீழ்க் கட்டி வளர்ந்து கால் ஒன்று புற்றுக்கழலை நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார் ஒருவர் . ஒரு நாள் அவர் தன் வீட்டுச் சுவரில் துளை ஒன்றினை ஏற்படுத்தி அதன் வழியாகப் பாதிக்கப்பட்ட காலை வீட்டை விட்டு வெளியே தெருவில் நீட்டிக் கொண்டிருந்தார் . “ ஏன் ? ” இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்ட போது தன் புருவத்தை உயர்த்தி அவர் சொன்னார் , “ என்னால் இந்த நோயின் படும் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை . இந்த நோய் என்னை விட்டு விலகிப் போகவே இவ்வாறு காலை வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறேன் ” என்று .
54 . தவறான செயல்களால் ஏற்பட்ட விளைவு :
போலி மருத்துவர் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகள் . ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர் . ஆனால் தன் மருத்துவத்தினால் மரித்துப்போன ஒரு குழந்தைக்கு ஈடாகத் தன் மகனை அவர் கொடுக்க வேண்டியது நேரிட்டது . தன் கவனக் குறைவினால் இறந்து போன மற்றொரு குழந்தைக்காகவும் தன் மகளையும் ஈடாகக் கொடுக்க வேண்டியது நேர்ந்தது . இதனால் வேதனையுற்ற அந்த மருத்துவர் தம் மனைவியுடன் பிள்ளைகள் இருவரையும் பிரிந்து மனக் கவலையுடன் வாழ்ந்து வந்தார் .
ஒருநாள் மருத்துவ ஆய்வினைப் பெறுவதற்காக ஒரு மனிதன் அவர் வீட்டுக் கதவினைத் தட்டினான் . ‘ நோயாளி யார் ? ’ என்று மருத்துவர் கேட்டார் . ‘ என் மனைவி ’ என்றார் வந்தவன் .
இதனைக் கேட்ட மருத்துவர் விழிகளில் நீர் ததும்ப “ ஆ ! என்ன வேதனையிது . உன் மீது யாரோ ஒருவர் மையல் கொண்டுவிட்டார் ” என்று மருத்துவர் தம் மனைவியைப் பார்த்துப் பதறிச் சொன்னார் .
55 . பழக்கத்தின் விளைவு :   
எவ்வளவு குறைவான அளவு குடித்தாலும் , மிதமிஞ்சிய குடியில் இருப்பது போல் பாவனை செய்து கீழ்த் தரமான செயல்களைச் செய்து வந்தான் குடிகாரன் ஒருவன் . ஒருநாள் அவன் தன் மனைவியிடம் மது கேட்டான் . அவன் செயலைக் கண்டு ஏற்கனவே வெறுப்புற்றிருந்த அவன் மனைவி சாராயத்துக்குப் பதிலாக சாயத் தண்ணீரை ஊற்றிக் கொடுத்தாள் . அவனும் அதைக் குடித்து முடித்தான் . சற்று நேரத்துக்குப் பின் போதை தலைகேறியவன் போல் நடிக்கத் தொடங்கினான் . வியப்புற்ற மனைவி வேதனையிலும் வெறுப்பிலும் அவனை நன்றாகத் திட்டித் தீர்த்தாள் . பின்னர் அவனிடம் “ நான் உனக்குத் தந்தது சாயத் தண்ணீர் தான் ; சாரயம் அன்று . பின் எப்படி உனக்குப் போதை ஏறும் ; தாறு மாறாய் நடக்க முடியும் ? ” என்று கேட்டாள் . அவனோ பொறுமையாக “ நான் அப்போதே நினைத்தேன் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று ஆகவே தான் இன்னும் எனக்குப் போதை குறையவில்லை ” என்றான் .
56 . அதை அகற்ற ஆய்வுரை :
செல்வன் ஒருவனுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டது . கடினமான முயற்சிக்கும் ( உழைப்பிற்கு ) பின் அது வெளியேற்றப்பட்டது . அவர்படும் வேதனையைக் கவனித்து வந்த ஒருவர் சொன்னார் , “ அன்றாடம் அவற்றை அகற்ற நீங்கள் அல்லல் படுகின்றீர்கள் ஏன் ? உங்களிடம் தான் செல்வம் இருக்கிறதே ஒரு வேலைக்காரனை நியமித்து அந்த வேலையைச் செய்யச் சொல்லக்கூடாதா ? ” என்று ஆய்வுரை வழங்கினார் .
57 . கழுத்துக்குமேல் துண்டிக்க வேண்டுதல் :
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவன் தண்டனையை நிறைவேற்ற வந்த கொலையாளியிடம் “ நான் சாகப்போகிறேன் . அதை நீங்கள் செய்யுங்கள் ; ஆனால் உங்கள் கொலை வாள் என் கழுத்தில் மேல் பகுதியில் விழும்படி துண்டியுங்கள் ” என்று வேண்டிக்கொண்டான் . ‘ ஏன் ? ’ என்று கேட்டபோது அவன் சொன்னான் , “ என் கழுத்தின் கீழ்பகுதியில் கொப்பளம் ( புண் ) ஒன்று உள்ளது . அதன் மீது வாள்முனைப் பட்டால் வேதனை அதிகமாகும் அல்லவா ” என்று . 
58 . தலைநகரத்தில் மட்டுமே வட்ட நிலவு :
தலைநகரைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய இளைஞன் ஒருவன் தன் தந்தையிடம் எப்போதும் தலைநகரின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே வந்தான் . ஒருநாள் மாலையில் தந்தையும் மகனும் நிலவொளியில் பொறுமையாய் நடந்து வந்து கொண்டிருந்தார்கள் . அப்போது அவ்வழியாய் சென்ற வழிப்போக்கன் “ ஆ ! என்ன அழகான நிலவு இது ! ” என்று விண்ணை நோக்கிய வண்ணம் நிலவை வியந்து சொன்னான் . இதனைக் கேட்ட மகன் சொன்னான் “ இது என்ன அழகு தலைநகரத்தில் உள்ள நிலவு இதனினும் அழகிற் சிறந்தது ” என்று .
தலைநகர் பெருமையைக் கேட்டுக் கேட்டுக் கிறுகிறுத்தத் தந்தை “ முட்டாளே , வானில் உலவிவரும் நிலவு எங்கும் ஒன்றுதான் . அது எப்படி தலைநகரத்து நிலவு இதனினும் அழகிற் சிறந்ததாயிருக்க முடியும் ? ” என்று கேட்டு ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார் . அறைபட்டு அதிர்ந்த மகன் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் தன் தந்தையிடம் “ தலைநகரில் நீங்கள் கொடுத்த அடி இதனினும் மிகக் கடினமாக இருந்ததே ”என்றான் .
59 . மகனின் பெருமை :
தந்தையும் மகனும் ஒருநாள் நகரத்து வீதி வழியே உலா வந்தனர் . பாதையில் சென்ற ஒருவர் தந்தையை அணுகி “ சிறுவன் யார் ? ” என்று கேட்டார் . தந்தை சொன்னார் “ அரசுக்கு மிகவும் வேண்டப்பட்ட உள்துறை அமைச்சர் ஒருவரின் குடும்பத்தின் நேரிடை வழி வந்த ஒன்பதாவது தலைமுறைப் பேரனின் மருமகனாக வாய்த்த இவன் என் மகன் ஆவான் ” என்றார் .
60 . பட்ட கடன் அத்தனையும் மறுபிறவியில் :
செல்வர் ஒருவரிடம் மிகப்பலர் கடன்பட்டிருந்தனர் . தம்மிடம் கடன்பட்ட அனைவரையும் அழைத்து , மறுபிறவியில் தற்போது வாங்கிய கடனை தருவதாக வாக்களித்தால் இப்பிறவியில் அனைவரின் கடனையும் தள்ளுபடி செய்வதாகச் சொன்னார் அந்தச்செல்வர் . இதனைக் கேட்டு அவரிடம் கடன் பெற்றோர் அனைவரும் அகமகிழ்ந்தனர் .
முதலாம் ஆள் “ அடுத்தப் பிறவியில் நான் குதிரையாகத் தோன்றி , உங்களைச் சுமந்து சென்று , நான்பட்ட கடனைத் தீர்க்கிறேன் ” என்று வாக்களித்தான் . உடனே செல்வர் அவன் கடன் ஆவணத்தை எதிரில் நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கினார் .
இரண்டாம் ஆள் சொன்னான் “ இப்பிறவியில் நான் உங்களுக்குப்பட்ட பெரும் கடனுக்காக , மறுபிறவியில் காளையாய்ப் பிறந்து , உங்களுக்கு உழைத்து உழைத்து மடிவேன் ” என்று . அவனது கடன் ஆவணத்தையும் நெருப்பிலிட்டார் செல்வர் .
இவ்வாறு ஒவ்வொருவராக வாக்களித்தனர் . இறுதியில் ஒருவன் “ பட்ட கடனைத் தீர்க்க அடுத்தப் பிறவியில் நான் உங்கள் தந்தையாகப் பிறக்க விரும்புகிறேன் ” என்றான் . இதனைக் கேட்டுத் திடுக்கிட்ட செல்வர் . உனக்கு எவ்வளவு ஆணவம் இருந்தால் இப்படிக் கூறுவாய் நீ , வாங்கிய கடனோ அளவுக்கதிகமானது . என்னை அவமானப்படுத்தவே நீ முயல்கிறாய் என்று கூறி அவனை ஓங்கி அறையச் சென்றார் . உடனே அந்த ஆள் , “ ஐயா , சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள் . நான் உங்களுக்கு அதிகமாகக் கடன்பட்டிருப்பது உண்மை தான் . மற்றவர்களைப் போல் குதிரையாகவோ காளையாகவோ பிறந்து உங்களுக்கு உழைத்து என் கடனைத் தீர்க்க முடியாது . எனவே தான் உங்கள் தந்தையாகத் தோன்றி , சிக்கனமாக வாழ்ந்து , செல்வத்தைச் சேமித்து ஒன்றையும் நுகராமல் , வீடு , வாசல் , நிலபுலம் , காடு , கரை என்று ஏராளமாகத் தேடி வைத்து விட்டு நான் சாவேன் . இப்படிச் செய்வதால் மட்டுமே நான் பட்ட முழுக்கடனையும் உங்களுக்கு நான் திரும்பவும் மறு பிறவியில் அடைக்க முடியும் ” என்று விளக்கம் தந்தான் . விளக்கம் கேட்டுச் சிந்தை குளிர்ந்தார் செல்வர் .
61 . நினைவுக்கல் :
வாணி என்னும் பெயர் கொண்ட செல்வச் சீமாட்டி ஒருத்தியிருந்தாள் . அவளுக்கு ஓர் ஆசை . தான் மரித்ததும் , தன் கல்லறையில் பொய்யாய்ச் சில புகழுறைகள் பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்பினாள் . அப்படிப்பட்ட புனைந்துரையைப் புனைந்துவர புலமையில் சிறந்த வித்தகன் ஒருவனிடம் வேண்டினாள் . அவனும் எத்தனையோ தொடர்களை எழுதியெழுதிப் பார்த்து எவையும் பொருந்தாததால் இறுதியில் இவ்வாறு எழுதினான் . “ அரசுக் கல்லூரியில் புகழ்மிக்க முன்னாள் பேராசிரியரின் பக்கத்து வீட்டவளும் , முன்னாள் நகர மேயரின் அடுத்த வீட்டவளுமாகிய திருமதி வாணி இங்கே ஓய்வு கொள்கிறார் ” என்று .
62 . எலிக்கும் ஈக்கும் இணக்கம் தெரிவித்தல் :
எலியும் , தேனீயும் இணைபிரியா உடன்பிறப்புகள் ஆயினர் . அந்த இணைப்பில் இணைந்து கொள்ளும்படி பல்கலைக் கழகப் பட்டதாரி ஒருவர் அழைக்கப்பட்டார் . அழைப்பிற்கு இணங்கி அந்தக் கூட்டில் அவரும் ஓர் அங்கமானார் . கூட்டில் முதலிடம் எலிக்கும் , இரண்டாவது இடம் தேனீக்கும் மூன்றாவது இடம் பல்கலைக் கழகப் பட்டதாரிக்கும் வழங்கப்பட்டன . பட்டதாரி , எலிக்கும் தேனிக்கும் கீழாக மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டதைக் குறித்து கேட்ட போது , அந்த பட்டதாரி இளைஞன் சொன்னான் “ அந்த இருவரில் ஒருவராகிய எலி சிறிய துளை ( பொந்து ) வழியாக நழுவிச் செல்லும் திறன் கொண்டது . தேனீயோ தன் கொடுக்கினால் ( தும்பியினால் ) பிறர் அரத்தத்தை உறிஞ்சி வாழ்வதில் சிறந்தது . எனவே தான் அந்த இருவருக்கும் பின்னால் மூன்றாவது இடம் வகிக்க இணங்கினேன் ” என்று .
63 . ஊமையன் பேசுகிறான் :
ஊமையன் போல் நடித்து ஊரெல்லாம் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தான் ஒருவன் . ஒருநாள் மது அருந்துவதற்காக இரண்டு நாணயங்களோடு மதுக்கடைக்குள் புகுந்தான் . மதுக்கடைக்காரன் அந்த இரண்டு காசுகளுக்குப் பிச்சைக்காரனின் திருவோட்டில் மது ஊற்றி நிரப்பினான் . பிச்சைக்காரன் “ இன்னும் கொஞ்சம் ஊற்றுங்கள் ” என்று கேட்டான் . ‘ இதற்கு முன் நீ பேசியதில்லையே ; இப்போது மட்டும் எப்படி பேசுகிறாய் ? ” என்று வியந்து கேட்டான் மதுக்கடைக்காரன் . பிச்சைக்காரனோ , இதற்கு முன் என்னிடம் பணம் கிடையாது . என்னால் எப்படிப் பேசமுடியும் ? இப்போதோ என்னிடம் இரண்டு காசுகள் உள்ளன . எனவே எல்லாம் மாறிப்போயின ” என்றான் .
64 . இங்குப் பலமாக நாறுகிறது :
முதிர்வயதான செல்வன் ஒருவன் விருந்தொன்று நடத்திக் கொண்டிருந்தான் . திடீரென்று விருந்தினர்கள் இடையில் காற்றை வெளியே விட்டுவிட்டான் “ ஆ ! ” விருந்தினர்களில் ஒருவன் வியந்து கூவினான் . “ காற்று , போல் ஒலி எழுப்பினாலும் கடுநாற்றம் அடிக்கவில்லை ” என்றான் அவன் .
“ கடுநாற்றம் வீசாதது மட்டுமல்ல ; அது நறுமணத்தைலம் போல் மணம் கமழ்கிறது ” என்றான் வேறொருவன் . புருவத்தை உயர்த்திய வண்ணம் “ என்ன ? ” என்று வாடிய முகத்துடன் கேட்டான் செல்வன் . மணமற்ற காற்றை ஒருவன் வெளிவிட்டால் , அவன் உயிர் விரைவில் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் . அது உண்மைதானா ? நான் நீண்ட நாள் உலகில் உயிர் வாழ்வேனா ? ” என்றெல்லாம் மேலும் கேட்டான் அந்தச் செல்வன் . 
உடனே அந்த முதல் விருந்தினன் தன் கைகளால் முகத்திற்கெதிரே பலமாக வீசிக் கொண்டே ‘ இப்போது தான் கடுநாற்றம் காற்றில் பரவி இந்த வழியாக வருகிறது ” என்றான் .
இரண்டாம் ஆள் தன் மூக்கை விரல்களால் பலமாக ( பொத்திக் கொண்டு ) அழுத்தி மூடிக்கொண்டு , முகத்தைச் சுளித்த வண்ணம் “ இப்போது தான் இங்குப் பலமாக நாற்றமெடுக்கிறது ! ” என்றான் .
65 . சொல்லும் குறி தப்பிவிடும் :
பத்தன் ஒருவன் ஆலயம் சென்று குருக்களிடம் தன் எதிர்காலம் பற்றி உரைக்கக் கேட்டான் . குருக்களோ குறி கேட்க வந்தவனிடம் “ முதலில் நறுமணப் பொருளுக்குரிய காணிக்கையை வை . இல்லையெனில் சொல்லும் குறி , குறி தப்பிவிடும் " என்றார் . “ அப்படிப்பட்ட நன்கொடை இல்லாமல் சொல்லும் குறி அனைத்தும் நடக்காது ” என்றார் மேலும் .
66 . அழுகிய தட்டு :
அரசு அதிகாரி ஒருவர் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட போது கடவுள் முன்னிலையில் பதவி உறுதிமோழி எடுத்துக் கொண்டார் . “ எனது இடது கையால் நான் கையூட்டு ( இலஞ்சம் ) பெற்றால் என் கண்களுக்கு முன்னாலேயே அந்தக் கை அழுகட்டும் . அவ்வாறே வலது கையால் பெற்றால் அதுவும் , அழுகி அழிந்து போகட்டும் ” என்று உறுதி செய்தார் .
சில நாள்களுக்குள்ளாகவே ஏராளமான தங்கக்கட்டிகளைக் கையூட்டாக ஒருவர் அவருக்கு வழங்கினார் . வாக்குறுதி மொழிக்கு அஞ்சி அந்த அதிகாரி “ நான் இந்தத் தட்டை உங்கள் முன் நீட்டுகிறேன் . அதில் தங்கக் கட்டிகளை வைத்துவிடுங்கள் . அதுமட்டுமில்லை பதவி ஏற்ற போது பணத்தை இலஞ்சமாகப் பெறுவதைக் குறித்துத் தான் வாக்களித்தேனேயன்றி தங்கக் கட்டிகளைப் பெறுவதைப் பற்றியன்று . அப்படியே ஏதேனும் ஒன்று அழுக வேண்டுமானால் தட்டு அழுகிப்போகட்டுமே . ஏனெனில் தட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பு கிடையாதே ” என்றார் .
67 . நான் உங்கள் வீட்டுப் பிள்ளை :
பணக்கார முதியவர் ஒருவர் வலுவற்ற மெலிந்த உடலோடும் முதுமைத் தோற்றத்துடனும் காணப்பட்டார் . யாரேனும் அவர் உடலின் வலுவின்மை பற்றியும் முதுமைத் தோற்றம் பற்றியும் குறிப்பிட்டால் அவர் மீது வெறுப்புக் கொள்வார் . மாறாக அவர் காளை போன்ற கட்டுடல் கொண்டவர் என்றும் , கட்டழகு மிக்கவர் என்றும் யாரேனும் அவர் உடல் நலம் குறித்தும் தோற்றம் குறித்தும் மிகைப்படுத்திப் புகழ்ந்துரைத்தால் புளகாங்கிதம் அடைவார் அந்தப் பணக்கார முதியவர் .
இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒருவர் அவரிடம் சில நன்மைகள் பெறும் நோக்கத்துடன் “ உங்கள் முடி நரைத்திருந்தாலும் , உங்கள் மேனியழகோ கொள்ளையழகு குழந்தையழகு ; அத்தனை மென்மை அத்தனைக் கவர்ச்சி இப்போது தான் பிறந்த குழந்தையின் மேனி உங்கள் திருமேனி ” என்று புகழ்ந்தார் . “ என் மேனி உண்மையில் குழந்தை போல் மென்மையாக இருக்குமாயின் உங்கள் குழந்தையாகவே நான் இருக்க விரும்புகிறேன் ” என்று கிறுக்கில் உளறினார் அந்த முதியவர் .
68 . பிறந்தநாள் வாழ்த்துகள் :
முதியவர் ஒருவர் தமது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினார் . வாழ்த்துகளும் , பாராட்டுரைகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன . பலர் பலவாறு வாழ்த்தினர் . வந்திருந்தோரில் ஒருவர் “ நீங்கள் 120 ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும் ” என்று வாழ்த்தினார் . இந்த வாழ்த்துரைக் கேட்டதும் , வாழ்த்தியவர் மீது சீறிப் பாய்ந்தார் முதியவர் . “ என்ன இது ? உங்கள் வீட்டுப் பணத்திலா நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் ? பின் ஏன் என் வாழ்வை 120 ஆண்டுகள் என்று குறைத்து வாழ்த்தினீர் . 150 அதற்கு மேலும் அதிகமான ஆண்டுகள் வாழவேண்டும் என்று ஏன் நீங்கள் வாழ்த்தவில்லை ? ” என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளை அடக்க முடியாமல் அடுக்கித் தள்ளினார் அந்த முதியவர் . 
69 . மிகைப்படுத்துதல் :
இரண்டு மனிதர்கள் சந்தித்த போது வெறுப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் . “ ஏன் உன் முகம் கடுகடுத்துக் காணப்படுகிறது ” என்றான் ஒருவன் . மற்றவன் சொன்னான் , “ நான் நாட்டின் இடையில் வாழ்கிறேன் எந்த ஒலியும் என் காதில் விழாதிருப்பதில்லை . நாட்டின் எந்தச் செய்தியும் எனக்கு எட்டாமல் போவதில்லை . பின்னிரவில் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் வேளை , மேலை வானகத்தில் எழுப்பிய பெளத்த துறவியின் வேத ஒலிகள் என் உயிர் அமைதியை அழித்து விடுகின்றன . எத்தனைதான் வேண்டினாலும் , என் வேண்டுதலை அவர் புறக்கணித்து விடுகிறார் . சினத்தில் மாமேரு மலையை எடுத்துச் சிறிய கல்லென நினைத்து எறிந்தேன் . முற்றிலும் எதிர்பாராத வகையில் , கல் தன்னை நோக்கி வருவதைக் கண்ட துறவி தன் கண்களைத் துடைத்தவாறு சொன்னார் , “ என் பார்வையைக் கெடுக்க எங்கிருந்து வருகிறது இந்த தூசி ? ” என்று கேட்டார் . பின் மந்திரம் ஒலிப்பதைத் தொடர்ந்தார் , எந்த விதச் சலனமுமின்றி , எனது முயற்சி சிறிது கூட அவரைத் தாக்கவில்லை . ”
பின்னர் இந்த மனிதன் , அந்த மனிதனிடம் “ ஆமாம் உங்கள் முகமும் கடுத்திருக்கிறதே காரணம் என்னவோ ? ” நேற்று என் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்திருந்தார் . அவருக்கு உண்ணக் கொடுக்க அந்த நேரத்தில் வீட்டில் ஒன்றுமில்லை . எனவே கொசு ஒன்றினை நேரம் பார்த்துப் பிடித்து அதன் நெஞ்சத்தையும் ஈரலையும் பதமாய் வெட்டியெடுத்து தூய்மை செய்து வறுத்து உண்ணக் கொடுத்தேன் . யார் எதிர்பார்க்க முடியும் ? ஈரல் துண்டுகளில் ஒன்று அவர் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் என்று . துண்டுகள் பெரிதாயிருந்ததால் சிக்கிக் கொண்டன என்றான் விருந்தினர் . ஓயாது என்னைக் காணும்போதெல்லாம் அதையே குறையாக முறையிடுகிறார் . ” என்று .
“ எப்படி அந்த மனிதனுக்கு அத்துணைச் சிறிய தொண்டையிருந்தது ? ” என்றான் முன்னவன் . பின்னவன் சொன்னான் “ பல நூறு கற்களுப்பால் துறவி எழுப்பிய மந்திர ஒலி உங்கள் காதில் எப்படி விழுந்ததோ , அத்தனை பெரிய மாமேருமலை இத்தனைச் சிறிய தூசியா துறவியின் கண்ணில் எப்படிப் பட்டதோ அப்படியே தான் . இந்த விருந்தினருக்கும் இத்தனைச் சிறிய தொண்டை அமைந்தது ” என்றான் . அதிர்ந்தான் முன்னவன் . அகன்றான் அந்த இடத்தை விட்டு .
70 . சீருடைகள் வழங்கப்பட்டன :
விருந்தினர் ஒருவர் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார் . வீட்டு வேலைக்காரன் முன்னும் பின்னுமாக இரண்டு ஓடுகளை தன் இரண்டு மறைவிடங்களில் கட்டிக் கொண்டு , தேநீர் எடுத்து வந்தான் . “ விருந்தினர் முன்னிலையில் இப்படி கடினமான ஆடையை உடுத்தி வரலாமா ? சென்று மெல்லிய ஆடை அணிந்து வா , ” என்று சீற்றம் கொண்டார் முதலாளி உள்ளே சென்ற வேலைக்காரன் ஓடுகளுக்கு . மாற்றாகத் தாமரை இலைகள் இரண்டினை அவ்விடங்களில் உடுத்திச் சற்று நேரத்தில் மீண்டும் வரவேற்பறைக்கு வந்ததை கவனித்துக் கொண்டிருந்தார் விருந்தினர் . “ வாழ்க்கை உங்கள் இல்லத்தில் மிகவும் கண்ணியக் குறைவாக உள்ளது “ என்றார் முதலாளி . மேலும் செலவைக் குறைக்க இந்த நடவடிக்கையோ என்று முதலாளி வினவினான் , “ இல்லை இல்லை இது கண்ணியக் குறைவானது அல்ல ” என்று மறுப்புத் தெரிவித்தார் . “ சான்றுக்கு உங்கள் வேலைக்காரனை எடுத்துக் கொள்ளலாமே ” என்று சுட்டிக்காட்டினார் விருந்தினர் . அவர் மேலும் சொன்னார் , அவனிடம் ஒரு தடித்த ஆடையும் , மெல்லிய ஆடை ஒன்று மட்டுமே உள்ளன என்று . இதைத் தவிர வேறு எந்த ஏற்பாடுகளும் நீங்கள் செய்யவில்லை என்றே தோன்றுகிறது . இவையெல்லாம் செலவை நினைத்தா ? என்று அவர் கேட்டார் . “ முதல் முறையாக அவனை நான் தேர்வு செய்யும் போது , உணவுக்கு தன் ( சாப்பாட்டிற்கு ) வீட்டிற்குச் சென்றுவிடுவதாகவும் , குறைந்தது இரண்டு வகை சீருடை மட்டும் நான் கொடுத்தால் போதும் என்றும் ஒப்பந்தம் செய்துள்ளான் . சீருடை வழங்கவில்லையெனில் , ஒப்பந்தத்தின் கட்டளை நிறைவேற்றுவது கடினமாக இருக்குமல்லவா ? ” என்றான் வீட்டின் முதலாளி பெருமிதத்துடன் .
71 . பிச்சைக்காரர்களும் நாய்களும் :
“ உன்னைக் கண்டதுமே நாய்கள் உன்னைக் கடிக்க வருகின்றதே ஏன் ? ” என்று ஒருவன் பிச்சைக்காரனிடம் கேட்டான் . “ ஏனெனில் ஆடையைப் பார்த்தே நாய்கள் மனிதனை மதிக்கச் செய்கின்றன ” என்று விடை அளித்தான் அந்தப் பிச்சைக்காரன் .
72 . கழிவாய் புகையே :
வயது முதிர்ந்த செல்வன் ஒருவர் வீட்டு வேலைகளைக் கவனிக்க எந்த வேலைக்காரர்களையும் அமர்த்தாமல் அனைத்து வேலைகளையும் அவரே மிகவும் தொல்லையுடன் தனித்துச் செய்து வந்தார் . நண்பர்கள் எல்லாம் அப்பணிகளைச் செய்ய வேலைக்காரன் ஒருவனை அமர்த்தும்படி வற்புறுத்தி வந்தார்கள் . ஆனால் அந்தச் சீமானோ எப்போதும் “ வேலைக்காரர்களால் ஏற்படும் நன்மைகளை நான் நன்கறிவேன் . ஆனால் அவர்களுக்குக் கூலியும் , உண்ண உணவும் கொடுக்க வேண்டுமே . ஆகவே தான் என் பணிகளை நானே செய்துவருகிறேன் . வேலைக்காரர்கள் யாரையும் நியமிக்கவில்லை “ என்று விடையளித்து வந்தார் .
எப்படியேனும் செல்வருக்கு ஒரு வேலைக்காரனை அமர்த்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர் ஒருவர் , “ என்னுடைய வீட்டில் நான் ஒரு வேலைக்காரன் வைத்திருக்கிறேன் . அவனுக்கு உணவோ கூலியோ கொடுக்கத் தேவையில்லை . எனினும் அவன் திறமையாக பணிகளைச் செய்வான் . உங்களுக்குப் பணிபுரிய நான் அவனை இலவசமாகத் தருகிறேன் . நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ? ” என்றார் . சற்று நேரச் சிந்தனைக்குப் பின் செல்வர் கேட்டார் . “ உணவு உண்ணவில்லை என்றால் அவன் இறந்துவிட மாட்டானா ? " என்று . “ இந்த வேலைக்காரன் சிறுவனாய் இருக்கும் போது தேவதை ஒன்றைச் சந்தித்தானாம் . அந்தத் தேவதை இவனுக்குக் காற்றை உண்டு , புகையை வெளியிட்டிடு , என்று வேறு எதையும் புசியாது வாழும் வரம் நல்கினாளாம் . எனவே அவனுக்குப் பசியெடுப்பதே இல்லை ” என்று விடையளித்தார் நண்பர் .
அதனைக் கேட்டதும் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார் அந்தச் செல்வர் . பின் மெதுவாய்ச் சொன்னார் “ வேண்டாம் மிக்க நன்றி எனக்கு அப்படிப்பட்ட வேலைக்காரன் வேண்டாம் ” என்று . “ ஏன் ? ” என்றார் நண்பர் . “ எனது கழனிகளுக்கு வேண்டிய உரத்தில் ஒரு பகுதியையாவது அந்த வேலைக்காரனின் கழிவில் இருந்து( மலம் ) பெறலாம் என்று எண்ணினேன் . ஆனால் நீங்கள் சொல்கின்ற வேலைக்காரனோ புகையை மட்டுமே வெளியேற்றுகின்றார் . அவனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்றே அஞ்சுகிறேன் ” என்றார் செல்வர் . செய்வதறியாது திகைத்தார் நண்பர் .
73 . விடை சொல்லும் பாங்கு :
விடை சொல்லும் பாங்கினைப் பற்றிப் பக்குவமாய்த் தம் மகனுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் ஒருவர் . புரியாது விழித்துக் கொண்டிருந்த மகன் புரியும்படி சொல்லுங்கள் என்று விளக்கம் கேட்டான் . அந்த நேரம் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒன்றை இரவலாகப் பெற்றுச் செல்ல அங்கு வந்தார் . அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு , தந்தை சொன்னார் “ யாராவது உன்னிடம் வந்து ஏதாவது ஒரு பொருள் வேண்டும் என்று கேட்டால் முற்றிலும் ‘ உண்டு ’ என்றோ ‘ இல்லை ’ என்றோ விடை சொல்லக்கூடாது . கொஞ்சம் உண்டு ; கொஞ்சம் இல்லை என்று பதில் தரவேண்டும் ” என்றார் . தந்தை சொன்னதை மனத்திலிருத்திக் கொண்டான் மகன் .
சில நாள்களுக்குப்பின் யாரோ ஒருவர் வந்து “ உன் தந்தை இருக்கிறாரா ? ” என்று கேட்ட போது “ கொஞ்சம் இருக்கிறார் ; கொஞ்சம் இல்லை ” என்றான் தந்தை சொல் தட்டாத தனயன் . என்னே அவனின் பதில் சொல்லும் பாங்கு .
74 . இறப்பை வெல்லும் மூலிகை :
“ என்னைக் குணமாக்கும் திறமையான மருத்துவர் எவரேனும் இருப்பின் அவருக்கு இறப்பினையே வெல்லும் மூலிகை ஒன்றினை நன்றிக் கடனாகக் கொடுப்பேன் . எனது மூலிகை ஒருவனைப் பலநூறு ஆண்டுகள் வாழ வைக்கும் என்று சொல்லி மருத்துவர் ஒருவரை அழைத்து வாருங்கள் ” என்று கேட்டுக் கொண்டார் சாவுப் படுக்கையிலிருந்த மருத்துவர் ஒருவர் .
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் “ ஏன் ? அப்படிபட்ட அற்புத மூலிகையிருப்பின் இவரே அதனைப் பயன்படுத்தித் தம்மைக் காத்துக் கொள்ளலாமே ? ” என்று கேட்டார் .
இறக்கப்போகும் சாவுப்படுக்கையில் இருந்த மருத்துவர் சொன்னார் , “ ஒரு நல்ல மருத்துவன் தனக்குத் தானே மருந்து கொடுத்துக் கொள்ளமாட்டான் ” என்று . 
75 . அறிஞனின் தீர்ப்பு :
செல்வன் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தினான் ஒரு சிற்றூரான் . நூறு காணி நஞ்சை நிலம் வாங்கினால்தான் நான் நிறைவடைவேன் என்று உறுதி எடுத்துக் கொண்டான் அவன் . இதனைக் கேள்வியுற்ற அவனது அண்டை வீட்டான் “ நீ நூறு காணி நஞ்சை நிலம் வாங்கி விடுவாயானால் , அதில் விளையும் நெல் அனைத்தையும் வாங்கப் பல இலக்கம் பணம் சேர்த்து விடுவேன் ” என்று எதிர் அறைகூவலும் உறுதியும் செய்தான் . இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது . நான் நூறு காணி வாங்கிவிடுவேன் என்று ஒருவனும் , அவற்றின் விளைச்சலை பல இலக்கம் சேர்த்து நான் வாங்கிவிடுவேன் என்று மாறிமாறிப் பேசினர் . இருவரும் தங்கள் வழக்கை நீதிமன்றம் எடுத்துச் செல்ல முடிவு செய்து பட்டணம் சென்றனர் . இருவருமே அதுவரை பட்டணம் சென்று நீதிமன்றத்தைப் பார்த்து அறியாதவர்கள் . எனவே செல்லும் வழியில் ஒரு சிவப்பு நிறக் கட்டிடத்தைக் கண்டு அது தான் நீதிமன்றம் என நினைத்து உள்ளே நுழைந்தனர் . அந்தக் கட்டிடமோ அறிஞர் பூங்குன்றனின் மெய்மை ஆய்வுக் கூடமாயிருந்தது . பல மாணவர்களும் அறிஞர்களும் அங்குத் தங்கி ஆய்வு செய்து வந்தனர் . இவர்கள் செல்லும் வேளையில் அந்த மண்டபத்தின் முகப்பில் அறிஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார் . அவர்தான் நீதிபதி என நினைத்து , சிற்றூர்க்காரர் இருவரும் தங்கள் வழக்கையுரைத்தனர் . வழக்கைக் கேட்டபின் அறிஞர் சொன்னா ர், “ முதலில் நீங்கள் இருவரும் அவரவர் சம்பாதிக்க நினைப்பதைச் சம்பாதியுங்கள் . நானும் நீதிபதியானவுடன் என் தீர்ப்பைச் சொல்லுகிறேன் ” என்று . 
76 . தோலைக் கெடுத்துவிடாதே :
புலிவாயில் விழுந்த ஒரு மனிதனைக் காக்க அவன் மகன் கத்தி ஒன்றினை எடுத்துப் புலியினைக் குத்திக் கொல்லப் பாய்ந்து வந்தான் . பாய்ந்து வரும் மகனைப் பார்த்துப் புலி வாயில் அகப்பட்ட மனிதன் “ மகனே , ஆத்திரப்பட்டுப் புலியின் மீது கண்டவிடத்தில் குத்தி அதன் தோலினைச் சேதப்படுத்தி விடாதே . அதன் காலடியிலிருந்து வெட்டத் தொடங்கிப் பின்னர் , அதன் உடலினைப் பிளந்துவிடு ” என்று ஆய்வுரை கூறினான் . 
77 . அரசனும் அரச உடையும் :
தலை நகரிலிருந்து திரும்பிய பிச்சைக்காரன் மாமன்னனைத் தான் பார்த்த பெருமையினைப் பறைசாற்றிக் கொண்டிருந்தான் . அரசன் அணிந்திருந்த உடையினைப் பற்றி அவனிடம் கேட்ட போது , அவன் சொன்னான் , “ பச்சை மரகதக் கற்கள் பதிக்கப்பட்ட மகுடமும் தங்கத் தகடுகளால் ஆன உடையினையும் அணிந்திருந்தார் ” என்று . “ தங்கத் தகடுகளால் ஆன உடையை அணிந்திருந்தால் அவரால் எப்படி குனிந்து தொழுதிட முடியும் ? ” என்றான் . பிச்சைக்காரன் இதனைக் கேட்டு நகைத்தான் , பின்னர் சொன்னான் “ உனக்கு இந்த உலகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை . மன்னர் குனிந்து தொழ வேண்டிய மனிதர் யாரும் இல்லை ” என்று .
78 . வேதத் தலைவனுக்குத் தகுந்த இடம் :
கோயிலின் சிறப்பு மண்டபத்தில் இடது புறத்தில் சிவபொருமானின் சிலையும் வலப்புறத்தே புத்த பெருமானின் திருஉருவச் சிலையும் அமைக்கப்பட்டிருந்தன . அந்த இரு சிலைகளும் அமைக்கப்பட்டுள்ள இடங்களை உற்றுக் கவனித்த பெளத்த துறவி ஒருவர் “ எம்பெருமான் தொண்டர்கள் உலகெலாம் பரவியுள்ளனர் . அப்படிப்பட்ட புகழ்மிக்க புத்தனை சிவனின் வலப்புறத்தே அமைத்தேன் ? ” என்று வினவினார். 
பின்னர் புத்தனை இடப்புறத்தும் சிவனை வலப்புறத்தும் மாற்றி அமைத்துவிட்டுச் சென்றார் . சற்று நேரத்திற்குப் பின் சைவ மதகுரு ஒருவர் அங்கே வந்தார் .
சிலைகள் அமைந்திருக்கும் வண்ணம் கண்டார். சினம் கொண்டார் . அவர் சொன்னார் ” நமது நாட்டில் சைவத் தொண்டர்கள் மிகவும் புனிதமானவர்கள்.  அப்படிருக்க சிவனின் சிலையை புத்தனின் வலப்புறம் அமைத்தது ஏன் ? “ என்று வினவினார் . மீண்டும் அச்சிலைகளை இடம் மாற்றி அமைத்துவிட்டு அவர் அவ்விடம் விட்டு அகன்றார் . இவ்வாறு இரு சிலைகளையும் மாற்றிக் கொண்டே இருந்தனர் . அவை இரண்டுமே மண்சிலைகள் என்பதால் கீழே விழுந்து நொறுங்கின . “ முன்பு நாம்  இருந்த வண்ணமே அவர் அவர் இடத்தில் இருந்து பணிகளைச் செய்தோம் , இப்போது நமது அடியார்கள் நமது அழிவுக்கு அவர்கள் தான் காரணம் “ என்பதை மெய்ப்பித்து விட்டனர் என்று துயரத்தோடு சொன்னார் .
79 . அழகற்ற நிலவு :
மற்றவர்களோடு உரையாடும் போது , அடக்கமாகப் பேசும் பழக்கமுள்ள ஒரு மனிதர் இருந்தார் . ஒருமுறை அவர் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தார் . அந்திக் கருக்கலில் அழகு நிலவினைக் கண்ட அந்த விருந்தினர் “ ஆ என்ன அழகான நிலவு ” என்று வியந்துரைத்தார் . உடனே அடக்கமாகவே பேசும் அந்த வீட்டுக்காரர் கைகட்டி , வாய்பொத்தி மிகவும் அடக்கத்தோடு “ என்னை நீங்கள் மிகவும் புகழ்கிறீர்கள் . என் எளிய குடிலில் நிலவுக்குக் கூடப் பெருமை கிடையாது ” என்றார் .
80 . மூடன் :
இரண்டு உடன்பிறந்தவர்கள் நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றனர் . நண்பர் வீட்டின் ஒரு பலகையின் அருகில் கிடந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்தனர் . பலகையின் மீது உலர்ந்த அத்திப் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன . அதுவரை அந்தப் பழங்களைப் பார்த்தறியாத இளையவன் அண்ணனிடம் அவை என்னவோ என்று கேட்டான் . அண்ணன் “ முட்டாள் ! ” என்று சொன்னான் . பின்னர் கொடி முந்திரிப் பழங்கள் பரிமாறப்பட்டன . மீண்டும் இளையவன் அண்ணனிடம் “ அது என்ன ? ” என்று வினவினான் . அண்ணன் மீண்டும் அதே விடையைச் சொன்னான் .
பின்னர் அவர்கள் இருவரும் நண்பரிடம் விடை பெற்று வெளியே வாயலில் வந்த போது , தம்பி அண்ணனிடம் சொன்னான் “ முதலில் கொடுத்த முட்டாள்கள் மெல்லக் கடினமாயிருந்தன . ஆனால் அவைதாம் சுவையாயிருந்தன . இரண்டாவது கொடுத்த முட்டாள்களே நாவில் சுவைக்கவேயில்லை ” என்று .

Please join our telegram group for more such stories and updates.telegram channel