←4. போர் நெறி

கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்  ஆசிரியர் குன்றக்குடி அடிகளார்5. கம்பனின் குறிக்கோள்

 

 

 

 

 

 


439012கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம் — 5. கம்பனின் குறிக்கோள்குன்றக்குடி அடிகளார்

 

 

 5. கம்பனின் குறிக்கோள் 

மானுடம் உயர்ந்தது
கம்பன் என்றொரு மானிடன் பிறந்த பெருமைக்குரியது தமிழ்நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றான் பாரதி. ஆம்! கம்பன் மானுடத்தைப் பாடிய கவிஞன்! ‘மானுடம் வென்றதம்மா!’ என்று பாடுகின்றான்! கடவுள்கள் வெற்றி பெறுவது அதிசயமன்று. அரசர்கள் வெற்றி பெறுவது அதிசயமல்ல. மனிதன் வெற்றி பெற வேண்டும். இது கம்பனின் குறிக்கோள்! கம்பன் தனது பாத்திரங்களைச் சராசரி மனித உணர்வுகளுடைய பாத்திரங்களாகப் படைத்துள்ளான். போர்க்களத்தில் மாயாஜாலங்கள் பேசப்பட்டாலும் மானுடமே உயர்ந்து விளங்குகின்றது.
மதப் பிணக்குக் கூடாது
கோசல நாட்டிலிருந்து இலங்கை வரையில் இராமன் நடக்கின்றான். எத்தனை எத்தனை வகையான இயற்கைக் காட்சிகள்! அவன் சந்தித்த மனிதர்கள். விலங்குகள், எண்ணற்றவை காவியத்தைப் படித்து முடித்த பிறகு நமக்கு ஏற்படும் உணர்வு கம்பன் ஒரு கவிச்சரவர்த்தி என்பதுதான்! கம்பன் தனது கொள்கை, கோட்பாடுகளைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூற, இராமகாதையைக் கருவியாகக் கொண்டான் என்பதே உண்மை. தமிழக வரலாறு கம்பனை மிகுதியும் பாதித்திருக்கிறது. தமிழ்நாடு சைவ, வைணவச் சண்டைகளில் ஈடுபட்டு வலிமை இழந்ததை உணர்ந்த கம்பன் சமய ஒருமை நலம் கருதி,

 


“உலகம் யாவையும் தாம் உள வாக்கலும்
நிலைபெறுத்தலும்; நீக்கலும், நீங்கலா 
அலகு இலா விளையாட்டு உடையார்–அவர் தலைவர்; 
அன்னவர்க்கே சரண் நாங்களே!”

 

 (பாயிரம்-1) 
என்று பொதுமையாகக் கடவுள் வாழ்த்துப் பாடுகின்றான்.

 


“அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன்"
என்று உரைக்கும் அறிவி லோர்க்குப் 
பரகதி சென்று அடைவரிய பரிசேபோல்”

 

  (கம்பன் - 4470) 
என்று பேசுவான்.
நன்றியறிதல்
தமிழ் மக்கள் பல்வேறு பண்புகளில் சிறந்திருந்தாலும் நன்றி பாராட்டும் நற்பண்பில் மேலும் வளரவேண்டும் என்பது கம்பனின் விருப்பம். அந்த உணர்வின் தூண்டுதலிலேயே கும்பகருணப் பாத்திரத்தைப் படைக்கின்றான். இராமகாதையில் மிக உயர்ந்து விளங்கும் பாத்திரங்களில் கும்பகருணன் ஒருவன். அறநெறியின் பெயரால், உறவை, உடன்பிறப்பை, பரிவை, பாசத்தைத் துறத்தல் கம்பனுக்கு முழு உடன்பாடன்று. காவியம் முழுதும் மனிதம் மேம்பட்டு நிற்கின்றது. ஏன்? கம்பன் தன் புரவலராக விளங்கிய திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல் பெயரை இடம் தேர்ந்து அமைத்து நன்றி பாராட்டுகின்றான். இராமனுக்கு முடி சூட்டும்போது சடையப்ப வள்ளல் மரபினர் மணிமுடியை, எடுத்துக் கொடுக்க வசிட்டர் சூட்டினார் என்பது காவியம். பழங்காலத்தில் முடியெடுத்துக் கொடுக்கும் உரிமை வேளாண் குடியினரிடமே இருந்தது. பின்னர் வணிகர்கள் கைக்கு மாறியது. அடுத்து அடுத்துப் புரோகிதர்கள் கைக்கு மாறியது. கம்பன் காலத்தில் வேளாண்குடி மரபினர் சிறந்து விளங்கியமையை இராமகாதை முழுதும் உய்த்துணர முடிகின்றது.
சகோதர பாசம்
தமிழ்நாடு சிறிய நிலப்பகுதி உள்ள நாடு. ஆயினும் மூவேந்தர்கள், பல சிற்றரசர்கள் இவர்களுக்குள் ஓயாத போர்! தமிழரசர்களின் ஆட்சி மறைந்ததற்குக் காரணம் அந்நியப் படையெடுப்புக்கள் அல்ல. தமிழ்நாட்டு அரசர்கள் தம்முள் பொருதியே அழிந்து போயினர். அதனால் கோசல நாட்டரசிலும் சரி, இலங்கையிலும் சரி, ஆதிக்கப் போட்டிகள் இல்லை என்ற காட்டுகின்றான் கம்பன். கெட்ட போரிடும் கலகம் இரண்டு அரசுகளிலும் இல்லை. இராமகாதையில் பண்பாட்டின் சிகரமாக விளங்கும் பாத்திரம் பரதன். இராமனுடனேயே இருந்தவன் இலக்குமணன். ஆனால், பரதன் இராமனுடன் இருந்த காலம் குறைவே. அந்த நிலையிலும் பரதனின் அன்பு விஞ்சியது. பரதன் இராமன் பால் கொண்ட அன்பு ஆயிரம் இராமன் அன்பிற்கும் மேம்பட்டது. தாயின் ஆணை, தமையன் இராமன் ஆணைகளுக்குப் பின்னும் ஆட்சியை நஞ்சென நினைத்தான்; முடிசூட்டிக் கொள்ள மறுத்தான்; இராமனுக்கே முடி சூட்டுவேன் என்று சூளுரைக்கின்றான். பரதன் பாராட்டப்படும் முறையிலிருந்து பரதனின் தூய அன்பு, துறவுள்ளம், அர்ப்பணிப்பு உள்ளம் வெளிப்படுகின்றது. பரதனைக் கண்ட குகன்,

 


“ஆயிரம் இராமர் நின் கேழ் 
ஆவரோ தெரியின் அம்மா”

 

 என்று பாராட்டுகின்றான். பரதனின் தியாகம், புகழ் இராமனையும் விஞ்சியது! ஆம்! இராமனுக்கு முடிமறுக்கப் பெற்றது! அதனால் துறந்தான்! ஆனால் பரதனுக்கு முடி வழங்கப் பெற்றது. பரதன் ஏற்க மறுத்துத் துறந்தான். ஏன்? இராமனே பரதனைச் சிந்தை மகிழ, செவி குளிரப் பாராட்டுகின்றான். உடன் பிறந்து, உடன் பயின்று, உடன் விளையாடிக் காட்டுக்கும் உடன் வந்திருந்த இலக்குமணனிடம் இராமன் பரதனின் பெருமையைப் பாராட்டிக் கூறுகின்றான்.

 

‘எத்தாயர் வயிற்றிலும் பின் பிறந் தோர்கள் எல்லாம்
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ?’

 

 
என்று பாராட்டுகின்றான். ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள். அனைவரும் ஒத்து இருப்பதில்லை. பங்காளிச் சண்டை, பங்காளிக் காய்ச்சல் என்றெல்லாம் வழிவழியாக வழக்கில் வந்துள்ளன. உடன்பிறந்தாரைப் பேணார். தம்பிகளிடத்தில் அன்பு காட்டார்! ஆனால், கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் பூசைகள் செய்வர். 

 


“பொக்க மிக்கவர் பூவும் நீரும் கண்டு 
நக்கு நிற்பன் அவர் தம்மை நாணியே”

 


என்பது அப்பர் வாக்கு! பரதன் மூலம் கம்பன் நம்மனோர்க்கு உணர்த்துவது செல்வம் பெரிதன்று, உடன் பிறப்பு அன்பே பெரிது பெறுதலுக்குரியது; காட்டுதலுக்குரியது என்பதாகும். பரதனைப் போல் பல உத்தமர்கள் தோன்ற வேண்டும். அப்போதுதான் குடும்பங்கள் அமையும்! சுற்றம் அமையும்.
வறுமை நீங்க வேண்டும்
கம்பன் தன் நெடிய காவியத்தில் வாழ்க்கை நெறிகளை அமைவாக உணர்த்திச் செல்கின்றான். 
ஏழையாக இருப்பது பாவமன்று! ஏழ்மையைத் துன்பமாக, துயரமாக வளர்த்துக் கொள்வது தீது, ஏழ்மையின் காரணத்தை அறிந்து கொண்டு அறிவார்ந்த நிலையில் மாற்ற முயற்சி செய்தால் ஏழ்மை மாறும்! முயன்றால் ஏழைகளால் எதையும் செய்ய இயலும். ஏழைகளால் செய்ய இயலாதது என்ற ஒன்று இல்லை. பாரதி,

 


“கஞ்சி குடிப்பதற் கில்லார்–அதன் 
காரணங்கள் இவை யெனும் அறிவு மில்லார்”

 

 
என்று கூறியதுபோல், இன்றைய ஏழைகள் கஞ்சியில்லாமல் இருப்பதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொள்ளாதது மட்டுமன்று, தங்கள் ஏழ்மைக்குக் கடவுளும் விதியும் காரணம் என்று பிழை படக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. அண்ணல் இராமபிரான், இலக்குவன் அமைத்த பர்ணசாலையைக் கண்டு வியந்தபோது,

 


“தா இல் எம்பிகை சாலை சமைத்தன
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே.”

 

  (கம்பன்-2095)  
என்று கூறுவதை உணர்க!
நமது நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இந்தத் துணிவு வரவேண்டும். வரவழைக்கப் படவேண்டும். அன்றே நமது நாடு வளரும். இந்த நாட்டில் ஒவ்வொரு மனிதனும் தற்சார்புடைய பொருளாதார வசதி பெறுதல் வேண்டும். சார்ந்து வாழ்தல் தீது, சுரண்டும் பொருளாதாரச் சமுதாயம் அறவே கூடாது. நாடும் நாடா வளத்தனவாக வளர வேண்டும். அந்நிய மூலதனத்தின் சந்தை நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு இல்லை. அந்நிய மூலதனம் ஊளைச் சதை போலத்தான்! ஆதலால், கம்பனின் கருத்துப்படி ஏழ்மை அழிவுக்குரியதல்ல; ஆக்கந்தரும் உந்து சக்தி என்பதை ஓர்க!
தொண்டலால் ஊதியமில்லை!
மனிதகுல வரலாறு இடையறாது வளரத் துணையாய் அமைவது தொண்டு. பேசுதல் எழுதுதல் ஆகியவற்றைவிடத் தொண்டு செய்தலே உயர்ந்தது. இதனைக் 'கைத்திருத் தொண்டு' என்பார் சேக்கிழார். சிவமும், கைத்திருத்தொண்டு செய்த அப்பரடிகளுக்கு வாசியில்லாத காசு தந்தருளிய பான்மையை உணர்க! அப்பரடிகள், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றும் தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை என்றும் அருளிச் செய்ததையும் உணர்க.
கம்பன், இராமன் வாயிலாகத் தொண்டு பற்றிக் கூறும் கருத்து, பலகாலும் படித்துணரத் தக்கது. செல்வத்திற்கு வரம்பு உண்டு. எண்ணியபடி செல்வம் வருவதில்லை. வந்தாலும் நிற்பதில்லை. தொண்டுக்கு வரம்பில்லை. தொண்டு செய்யச் செய்ய மேலும் மேலும் விருப்பம் தூண்டப்பெறும். ஆர்வம் வளரும். இந்த உலகத்தில் உடலுக்குத் தரப்பெறும் உணவு, தற்காலிகமாகப் பசியைத் தணிக்கும். ஆனால், மீண்டும் பசிக்கும் உணவுக்குப் பயன்படுவது கூலி. ஊதியம்! உண்ட உணவு அன்றாடம் கழிப்பறைகளைத் தூர்க்கும் வாழ்க்கை, முடிவில் இடுகாட்டில் கிடக்கும். ஆனால், தொண்டும் தொண்டின் பயனும் உயிர்க்கு ஊதியமாவனவாம். ஊதியம் உயிர்க்கு ஊதியம். கம்பனின் பாடல் இதோ:

 


பின்னும் தம்பியை நோக்கி, பெரியவன்
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு; இதற்கு
என்ன கேடுண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு ‘மேல் வரும் ஊதியத் தோடு’ என்றான்.

 

  (கம்பன்-2100)  ஆம்! மானுட வரலாற்றில் இடம்பெற விரும்பினால் தொண்டு செய்ய வேண்டும். இது கம்பனின் வாழ்க்கை நெறி.
யாரொடும் பகை கொள்ளற்க
கம்பன் ‘யாரொடும் பகை கொள்ளக்கூடாது’ என்ற வாழ்க்கை நெறியை வலியுறுத்துகின்றான்.

 


‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங் காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?’

 

  (கம்பன்-1419) 
ஆம்! கருத்து வேற்றுமைகள் வரலாம். உடன்பாடு இல்லாமற் போகலாம்! இவை பகையாக வளர வேண்டும் என்ற அவசியமில்லை! பகைவளரின் கலகம், போர் முதலிய அழிவுச் செயல்கள் நிகழும். கம்பன் உயிர்க்குல ஒருமைப்பாட்டை, ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றான். இராமன் காட்டிற்கு வந்த இடத்தில் அவனுடன் உடன் பிறந்தவர்கள் எண்ணிக்கை ஏழு ஆயிற்று.

 


‘குகனொடு ஐவர் ஆனேம்
முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகழ் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை!


  (கம்பன்-6507) 
என்ற பாடலை ஓர்க. இன்று, பல நாள் பழகினாலும் உடன்பிறப்பாளரை, உறவினரைத் தேர்ந்தெடுக்க இயலாத நிலையில் அன்பு ஊற்று—சுயநலத்தால், ஆணவத்தால் தூர்ந்து கொண்டு வருகிறது. இந்த நிலை, நமது சமுதாயத்திற்கு நல்லதன்று. பகையைத் தவிர்க்கும்படி கம்பன் அறிவுறுத்துகின்றான். பகைமையைத் தவிர்த்தால் ‘போர் ஒடுங்கும்’ என்பது கம்பன் கருத்து. போர் ஒடுங்குவதால் பாருக்கும் புகழ் குறையாது என்றும் உறுதி கூறுகின்றான். மக்களுக்குள் அடிக்கடி சண்டை வீடுகளுக்குத் தீ வைப்பு! பேருந்துகளுக்கு நெருப்பு கொலை, கொள்ளை இவை ஏன்? ஏன்? வலிமையைக் காட்ட விரும்புகின்றார்கள்! வறுமையை, புன்மைச் சாதிகளை எதிர்த்துப் போராடுவதில் வலிமையைக் காட்டலாமே! ஆற்றலை, அடுத்தவனைக் கெடுப்பதற்குப் பதில், அடுத்தவனிடம் காட்டுவதற்குப் பதில், தரிசு நிலங்களைப் பசுமைப் புரட்சி செய்வதில் காட்டலாமே! நல்லதற்காகப் போர் என்று கூறுவது கூடச் சமாதானம்தான்! நல்லதை அமைதி வழியாகவும் சாதிக்கலாம். ஆனால் இஃது உண்மையன்று, எந்தப் போரும் சிக்கல்களைத் தவிர்த்ததாக வரலாறு இல்லை! போரின் மூலம் சிக்கல்கள் வளர்ந்துள்ளன. அது மட்டுமா? மனிதர்களிடையில் வஞ்சினமும் கடின சித்தமும் தோன்றி வளர்ந்து வருகின்றன. வரலாறு திரும்புகிறது. என்பது அறிவார்ந்த நிலையன்று. வரலாற்றி லிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு வரலாற்றைப் புதுப்பிப்பதே வாழும் மாந்தர் கடமை. வரலாறு திரும்பத் திரும்ப வருதல் சிந்தனையும் செயலுமற்ற மாந்தர் வாழும் உலகத்தில்தான் நிகழும். நமது நாட்டைப் பொருத்த வரையில் வரலாற்றில் மாற்றம் இல்லை! பல நூறு ஆண்டுகளாக மாற்றம் இல்லை! கம்பனை, காலத்தை வென்றெடுக்கும். கவிஞனாக்க வேண்டும். அதற்குள்ள ஒரே வழி கம்பன் கண்ட நாட்டை, ஆட்சியைக் காண்பதுதான்! 
போரற்ற உலகம்
இன்று போரற்ற உலகம் தேவை. படைக்கலன்கள் குறிப்பாக அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும்; தடை செய்யவேண்டும். உலக நாடுகளவை (ஐ.நா.சபை) உண்மையிலேயே உலக நாடுகளின் அவையாக விளங்க வேண்டும். உலக நாடுகளின் அவையில் உள்ள நாடுகள் சிறியதாயினும் பெரியதாயினும் தைரியத்துடனும் உறுதியுடனும் வல்லரசுகளுக்குப் பயப்படாமல் வாக்களிக்கும் நிலைமையை உருவாக்க வேண்டும். வரலாறு கொடிய போர்களைக் கண்டு, பல கோடி மக்களைப் பலி கொடுத்தாயிற்று. பல நூறு ஆண்டுகள் உழைப்பினால் உருவான உடைமைகளை, சொத்துக்களை இழந்தாயிற்று! இனி போர் வந்தால் மனிதப் பூண்டே இருக்காது. பழைய கற்காலத்திற்குச் செல்ல வேண்டியதுதான்! ஆதலால், போரினைத் தவிர்க்க வேண்டும். பேரரசுகள், சிறிய நாடுகளை பொருளாதார ஆதாயத்தைக் காட்டித் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்யக் கூடாது. எந்த ஒரு நாட்டிலும் எதற்காகவும் காந்திய நெறியில்— அறவழியில் போராட வேண்டுமே தவிரப் படை அடிப்படையிலும் வன்முறையிலும் போராடுவதை ஊக்குவிக்கக் கூடப் போரினை நினைவூட்டும் திருவிழாக்களை நிறுத்திவிடுவது நல்லது. பள்ளிகளில், கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி முதலியவற்றுடன் பண்பாட்டுப் போட்டி, சண்டை போடாமைப் போட்டி ஆகிய போட்டிகள் வைத்து மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கலாம்.
சங்க காலத்திலேயே— அதாவது போர் செய்வது அரசனின் ஒழுகலாறு என்று இருந்த காலத்திலேயே ஔவையார், அதியமான்—தொண்டைமானின் போரைத் தவிர்க்கத் தூது போனார். ‘சமாதானம் செய்து வைப்பவர்கள் பாக்கியவான்கள்’ என்று சமய நூல்கள் அனைத்தும் ஒரு முகமாகக் கூறும்.
கம்பன் இராமகாதை வாயிலாக இராவணனின் உறவுச்சுற்றம் மூலமாகப் போரைத்  தவிர்த்திருக்கும்படிக்கூறுகின்றான். இராமனுக்குப் போர் இலட்சியமன்று. சீதையை மீட்பதுதான் இலட்சியம்! சீதையை இராவணன் விடுதலை செய்திருந்தால் இராவணன், சீதையை நினைத்ததும், எடுத்ததுமாகிய குற்றத்தை இராமன் மன்னித்திருப்பான் என்று மாலியவான் கூறுகின்றான். ஆனால், இராவணன் மறுத்துவிட்டான்.
தமிழில் வழங்கும் ஒப்பற்ற காவியங்களாகிய இராமகாதை பெண்ணின் காரணமாகவும், பாரதம் நிலத்தின் காரணமாகவும், கந்தபுராணம் ஆதிக்கத்தின் காரணமாகவும் நடந்த போர்களைக் கூறுகின்றன. இராம—இராவணப் போரில் இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்! பாரதப் போரில் துரியோதனாதியர் அழிந்து போயினர். கந்த புராணத்தில் சூரபதுமன் திருத்தப்பட்டு வாழ்விக்கப் படுகின்றான்.
அழித்தல் அறமன்று, திருத்தப்படுதலும் வாழ்விக்கப்படுதலுமே அறம். தமிழ் மரபு, ‘ஆழ்க தீயதெல்லாம்’ என்பது தான். இந்தக் கந்தபுராண மரபு பின்பற்றப் பட்டால் போர் ஒடுங்கும்; புவி வளரும். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு போர் வராமைக்குக் காரணம் அச்சமேயாம்—அறிநெற சார்ந்த எண்ணத்தினால் அன்று. வீட்டையும் நாட்டையும் அமைதியில் நடத்துக!

 

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

 

என்பதும்,

 

“காக்கை குருவி எங்கள் சாதி–நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

 

என்பதும் நமது மந்திரங்களாகட்டும்; வாழ்க்கை நெறியாகட்டும்! வளர்க! வாழ்க!


✽⁠✽⁠✽

   
குன்றக்குடி என்றாலே யார்க்கும் நினைவுக்கு வரும் குன்றுதோறாடும் குமரப்பெருமான் நினைவோடு தம் பெயரையும் பிரிக்க முடியாமல் இணைத்துக் கொண்ட பெருந்தகை அடிகளார் அவர்கள்.
மர யானையில் மரத்தைப் பார்க்கிறவர்களுக்கு மரம் மட்டுமேயும் யானையைப் பார்க்கிறவர்களுக்கு யானையே தெரிவது போலவும், சமயவாதியாகப் பார்ப்பவர்களுக்கு, அவர் திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்; அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு, அவர் சட்டமேலவை உறுப்பினராய் அருந்தொண்டாற்றியவர்; இலக்கியக் கண்ணோடு பார்ப்பவர்களுக்கு, திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அளவுக்கு குறளுக்கு புத்தம்புது உரைகள் கண்ட இலக்கியச் செல்வர்; சமுதாயக் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு, அவர் தம் உற்ற நண்பர் பெரியாரின் சீர்திருத்தக்
கருத்துக்களைச் செயற்படுத்தும் சமயப் புரட்சி வீரர்; கிராமநலம் விரும்புவோர்க்கு ‘குன்றக்குடி திட்ட மாதிரி’ என்ற பெயரில் ஒரு புரட்சிகரமான வளமையான கிராம அமைப்பை உருவாக்கி, அதற்காக தேசிய விருது பெற்ற சமூகத் தொண்டர்; அறிவியல் கண்ணோடு பார்ப்பவர்களுக்கு, அவர் தேசிய மின் வேதியியல் கழகத்தோடு இணைந்து சுதேசி அறிவியல் இயக்கத்தை கிராமங்களில் பரப்பி, அதற்காக தேசிய விருது பெற்ற அறிவியல் நிபுணர். இப்படித் தொட்ட துறையில் எல்லாம் மேதாவிலாசம் உடையவராய்த் திகழும் ஓர் இலக்கிய அறிவியல் புரட்சியாளர். 
முப்பத்து ஐந்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களுக்கு ஆசிரியரும், ‘அறிக அறிவியல்’ என்ற மாத அறிவியல் இதழின் ஆசிரியருமான இவர், அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் சிறந்த தமிழ் அறிஞர், என்பதற்காக கெளரவ முனைவர் பட்டம் வழங்கப் பெற்று கெளரவிக்கப் பெற்றார்.
கேட்டார் பிணிக்கும் தகையவராய், கோளரும் வேட்ப மொழியும் சொல் நயம் மிக்க அடிகளார் சுவை பிலிற்றும் தேனும், சுகந்த மணமும் நிறைந்த ஒரு ஞானத்தமிழ்க் கவின்மலர் ஆவார். 

 

 


 

Comments
Please join our telegram group for more such stories and updates.telegram channel

Books related to கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்