←கண்டி மாநகர்
இலங்கைக் காட்சிகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்சிகிரிக் குன்றம்
பொலன்னறுவை→
437370இலங்கைக் காட்சிகள் — சிகிரிக் குன்றம்கி. வா. ஜகந்நாதன்
9 சிகிரிக் குன்றம்
"இன்று எந்த எந்த இடத்துக்குப் போகலாம்?" என்று அன்பர் கணேஷைக் கேட்டேன்.
" இன்றைக்குச் சிற்பச் செல்வங்களையும் ஓவியச் செல்வங்களையும் உங்களுக்குக் காட்டலாம் என்று எண்ணுகிறேன்" என்றார் அவர்.
"எந்த இடங்களில் அவை இருக்கின்றன? இங்கிருந்து எவ்வளவு தூரம் போகவேண்டும்?" என்று கேட்டேன்.
" நூற்றைம்பது மைல் போகவேண்டும். சிகிரியாவைப் பார்த்துக் கொண்டு பொலன்னறுவாவையும் போய்ப் பார்க்கலாம். நேரம் இருந்தால் அநுராதபுரம் போகலாம்.”
ஓவிய யாத்திரையைத் தொடங்கினோம். (19.9-51, புதன்கிழமை.) எங்களுடன் மற்றொரு நண்பரும் சேர்ந்து கொண்டார். தமிழ்ப் பத்திரிகைகளை நன்றாகப் படித்து எழுத்தாளர்களைத் தரம் பிரித்துப் பார்க்கும் ரசிகர் அவர். நாகலிங்கம் என்ற அந்த அன்பர் கண்டிக்கு அருகில் குருதெனியா என்ற இடத்தில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.
நாகலிங்கம் தமிழ் நாட்டிலிருந்து சென்றவர். இராமநாதபுரம் ஜில்லாவைச் சேர்ந்த பரத்தை வயல் என்ற ஊரில் முன்பு முத்துக் குட்டிப் புலவர் என்ற கவிஞர் இருந்தார். அவருடைய வழி வந்தவர் அந்த அன்பர். இந்தச் செய்தியை அவர் மூலமாகத் தெரிந்து கொண்ட பிறகு நான் அவரைச் சும்மா விடுவேனா? "அவர் என்ன என்ன நூல்கள் செய்திருக்கிறார் ? சேதுபதியினிடம் சம்மானம் பெற்ற துண்டா? அந்த வம்சத்தில் இன்னும் யாராவது புலவர்கள் இருந்திருக்கிறார்களா? உங்கள் ஊரில் ஏட்டுச்சுவடிகள் இருக்கின்றனவா?" என்று சரமாரியாகக் கேள்விகளை அடுக்கினேன். தம்முடைய முன்னேர்களைப் பற்றிச் சொல்லிக் கொள்வதில் எல்லோருக்கும் ஆசை இருப்பது இயல்பு. நண்பர் நாகலிங்கமும் முத்துக்குட்டிப் புலவரைப் பற்றிச் சில செய்திகள் சொன்னதோடு அவர் பாடிய பாடல்கள் சிலவற்றையும் சொன்னர்.[1]
அவர் ஒரு சமயம் சம்ஸ்தானத்துக்குக் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுக்க முடியாமற் போயிற்றாம். அப்போது சம்ஸ்தானத்தைச் சார்ந்த அதிகாரி அவரைத் துன்புறுத்தினராம். முத்துக்குட்டிப் புலவருக்கு ஒன்றும் தோன்றவில்லை. தம்முடைய குலதெய்வமாகிய மருதூர்ச் சிவபெருமானிடம் முறையிட்டுக் கொள்வதையன்றி அப்போதைக்கு ஏதும் செய்யமுடியவில்லை.
கையிலோ அரைக்காசுக் கிடமே இல்லை;
கடனென்ருல் இருநூறு பொன்மேல் ஆச்சு;
தெய்யிலே கைபோட்டுக் கொடுத்திட்டாலும்
நிர்வாகம் அரண்மனையார் அறிய மாட்டார்:
பையிலே பணமிருக்க நீயும் சும்மா
பார்த்திருக்க நியாயமுண்டோ பரனே ஐயா,
மையிலே தோய்ந்தவிழி உமையாள் பாகா,
மருதுனரா, என்வரிக்கு வகைசெய் வாயே
என்று பாடினர். நாகத்தின் படத்துக்குப் பையென்றும் பணமென்றும் பெயர் உண்டு. நாகம் அணிந்த மருதூர் நாகநாதரைப் பார்த்து, "உம்முடைய பையிலே பணம் இருக்க என் துயரைச் சும்மா பார்த்திருக்கலாமா?” என்று இரண்டு பொருள் அமையும்படி புலவர் பாடினார். நாகநாதர் இதைக் கேட்டாரோ, இல்லையோ, யாரோ அன்பர் இந்தப் பாட்டைக் கேட்டு மனம் நைந்து உடனே புலவருக்கு வேண்டிய பொருளை உதவினார்.
இவ்வாறு முத்துக்குட்டிப் புலவரின் வாழ்க்கைச் செய்திகளைக் கேட்டுக்கொண்டே சிகிரியாவுக்குப் பிரயாணமானேன். தர்மசேனன் மிக்க விரைவாகக் காரை ஓட்டினான். இப்போது நாங்கள் போன சாலை காடுகள் அடர்ந்த இடம்; மலைப்பகுதி அல்ல. இரு புறமும் பல மைல் தூரத்துக்குச் செறிந்த காடுகள் இருந்தன. அந்தக் காடுகளில் யானைகள் வாழ்கின்றன. இரவு நேரத்தில் இந்தச் சாலையில் யாரும் அநேகமாகப் போவதில்லை. ஒருகால் காரில் யாரேனும் போனால் யானைகளைக் காணலாம். அவை காட்டில் உலவிக் கொண்டிருக்கையில் இரவில் சாலையைக் கடப்பதுண்டாம். அவ்வாறு கடந்து செல்வதைக் காரில் செல்பவர்கள் கண்டால் விளக்கை அவித்துவிட்டு மேலே காரை ஓட்டாமல் நின்று விடுவார்களாம். யானை கூட்டம் கூட்டமாகத்தான் செல்லும், அந்தக் கூட்டம் முழுவதும் சாலையைக் கடந்து போன பிறகே காரை ஓட்டுவார்கள். வெளிச்சம் தெரிந்தாலும் கார் வருவது தெரிந்தாலும் யானைகளிடமிருந்து தப்புவது அருமை.
நாங்கள் பகல் நேரத்தில் அந்தக் காட்டினூடே சென்றோம். பல மைல்களுக்கு இடையில் சில ஊர்கள்
இருந்தன. அந்தக் காடுகளில் மனிதன் புகாத இடங்கள் பல உண்டு. இரண்டோரிடங்களில் இலங்கை அரசாங்கத்தார் காட்டை அழித்து நெல் விளைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். காலையில் எட்டு மணிக்குக் கண்டியிலிருந்து புறப்பட்ட நாங்கள் பதினொரு மணிக்குச் சிகிரியாவை அடைந்தோம்.
★ ★★
சிகிரி என்னும் மலையை நடுவிலே கொண்ட பகுதியையே சிகிரியா என்று சொல்லுகிறார்கள். சிங்ககிரி என்ற தொடர் திரிந்து சிகிரி ஆகிவிட்டது. இங்கே ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த கஸ்ஸபன் என்ற மன்னன் (கி.பி.478-496) அரண்களையும் நகரையும் அமைத்துக் கொண்டு பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் கட்டிய அரண்மனையின் சின்னங்களும் அக்காலத்தில் இந்த மலைக்குகையில் எழுதப் பெற்ற வண்ண ஓவியங்களும் மக்கள் உள்ளத்தைக் கவர்கின்றன. இவற்றைப் பார்ப்பதற்காக அயல் நாட்டார் அடிக்கடி வருகிறார்கள்.
இலங்கை சிறிய தீவாக இருந்தாலும் அதற்கும் சுவையுள்ள சரித்திரம் இருக்கிறது. நெடுங்காலமாக மக்கள் வாழ்ந்து வரும் தீவு அது. தமிழ்நாட்டுக்கும் அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே தொடர்பு உண்டு. அங்கும் மன்னர் வம்சங்கள் இருந்தன. மன்னர் பலர் தம்முள்ளே போரிட்டார்கள், வீரச் செயல் புரிந்தார்கள். குடிகளுக்கு நன்மை செய்தார்கள்; புலவர்களையும் கலைஞர்களையும் பாதுகாத்தார்கள். கோயில்களைக் கட்டினார்கள். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களைத் தலைநகராக்கிக் கொண்டு அரசாண்டார்கள். அப்படி ஆண்டவர்களில் தாதுசேனன் என்பவன் கி. பி. 460 முதல் 478 வரையில் அநுராத புரத்தில் ஆண்டான். அவனுக்கு அரசியினிடமாக மொக்கல்லானன் என்பவன் பிறந்தான்; வேறு ஒரு மனைவி மூலமாகக் கஸ்ஸபன் பிறந்தான். தாதுசேன மன்னனுக்கு ஒரு மகளும் பிறந்தாள். மன்னன் அவளைத் தன் தங்கையின் மகனுக்கு மணம் புரிவித்து அவனைத் தன் படைத் தலைவனாக வைத்துக் கொண்டான்.
படைத்தலைவனுடைய இல் வாழ்வில் சிறிது கலாம் மூண்டது. அரசனுடைய மகள் அவனை அவமதித்தாள். அவன் அவளை அடித்தான். இந்தக் கொடுமையை அவள் தன் தந்தையிடம் முறையிட்டுக் கொண்டாள். தாதுசேனனுக்குக் கோபம் மூண்டது. இதற்குக் காரணம் மாமியாரின் கொடுமையாக இருக்கலாம் என்று எண்ணினானே என்னவோ, தன் மகளின் மாமியாராகிய தன் தங்கையை உயிரோடு எரித்துவிட்டான். தாதுசேன மன்னன் செய்த இந்தக் கொடும்பாவத்தைத் தாங்க முடியாத படைத்தலைவன் எப்படியாவது இந்தப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று உறுதி பூண்டான். தானே ஒன்றும் செய்ய இயலாதாகையால், மன்னனுடைய மக்களில் ஒருவனாகிய கஸ்ஸபனைத் தூண்டிவிட்டான். "நீ மன்னனுக்கு மகன் என்று பெயரளவிலே இருக்க வேண்டியவனே. உன் தாய் குலத்திலே பிறந்தவள் அல்ல என்று மன்னனும் பிறரும் இழிவாக எண்ணுகிறார்கள். அரசியின் பிள்ளையாகிய மொக்கல்லானன் தான் அரசனானவன். நீ பிறந்தும் பயனில்லாமல் வாழப் போகிறாய்” என்றான்.
"நான் என்ன செய்தால் அரசனாகலாம்?” என்று கேட்டான் கஸ்ஸபன்.
"சரித்திரத்தைக் கேட்டுப் பார்; அதுசொல்லும்."
"என்ன சொல்லும்?"
"அரச குலத்தில் பிறந்தவருக்குத் தகப்பனென்றும் மகனென்றும் ஒட்டு உறவு கிடையாது. அரசனுக்கு நூற்றுக்கணக்கான மனைவிமார் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் பிள்ளைகள் இருக்கும். எல்லாப் பிள்ளைகளிடத்திலும் அரசனுக்கு அன்பு இருக்குமா? ஆகவே, பலமுள்ளவன் இந்த உறவு முறையையெல்லாம் பார்க்காமல் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வான். சாமானிய மக்களின் தர்மம் வேறு; அரசனுக்குரிய தர்மம் வேறு. தனி மனிதன் செய்யும் கொலை, கொள்ளை என்பவை சமுதாய விரோதச் செயல்கள். அரசன் அவற்றைச் செய்தால் அவை, அவன் பராக்கிரமத்துக்கு அறிகுறியாகும். அரசன் தெய்வத்துக்குச் சமானம். ஆதலால் மக்கள் அவன் செய்யும் செய்கை எதுவானாலும் ஏற்றுக்கொள்வார்கள். சமய சந்தர்ப்பங்களை ஒட்டி அவன் நடந்து கொள்ளவேண்டும்."
"இத்தனையும் எதற்காகச் சொல்லுகிறாய்? நான் என்ன செய்யவேண்டும்?"
"நீ செய்வதைச் சரியானபடி செய்தால் நாளைக்கே. அரசனாகிவிடலாம். படை வீரர்கள் யாவரும் நான் சொன்னபடி கேட்பார்கள். அவர்களுடைய மன இயல்பும் போக்கும் எனக்கு நன்றாகத் தெரியும்."
மெல்ல மெல்லக் கஸ்ஸபனுடைய மனம் இந்தச் சூழ்ச்சியின் வசப்பட்டது. படைத் தலைவனும் அவனும் கூடிக் கூடிப் பேசினார்கள். திடீரென்று ஒரு நாள் தாதுசேனனை ஓர் அறையிலே அடைத்துச் சாத்தினார்கள். கஸ்ஸபன் தானே அரசன் என்று சொல்லிச் சிங்காதனம் ஏறினான். கஸ்ஸ்பனுடைய சகோதரனாகிய மொக்கல்லானன் தனக்குத் துணை யாரும் இல்லை என்று அறிந்து கொண்டான். அங்கே இருந்தால் தன் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் என்று பயந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு ஓடிப்போனான். அறையிலே அடைபட்ட தாதுசேனன் உணவின்றி இறந்தான்.
நியாயமான முறையில் அரசு கிடைத்திருந்தால் நாட்டை அமைதியாக ஆளலாம். அதற்கு மாறாக அரசைக் கைப்பற்றிய கஸ்ஸபன் அநுராதபுரத்தில் இருந்து அரசாள விரும்பவில்லை. தக்க பாதுகாப்புள்ள இடத்தில் அரண்களை அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று முடிவு செய்தான். அவனுக்கு இந்தச் சிங்ககிரிப் பகுதி தன் கருத்துக்கு இசைந்த இடம் என்று தோன்றியது.
சிங்ககிரியின் உச்சியிலே அரண்மனையைக் கட்டினான். கோட்டை கட்டினான். மலையைச் சுற்றிலும் கொத்தளங்களும் அகழியும் அமைத்தான். அங்கே பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான். சிங்ககிரியின் தாழ் வரையில் உட்குழிவான சில இடங்கள் இருக்கின்றன. அவ்விடங்களில் மிக அற்புதமான ஓவியங்களை எழுதச் செய்தான், கலைப்பண்பு நிறைந்த கட்டிடங்களைக் கட்டினான்.
தமிழ்நாட்டுக்குச் சென்ற மொக்கல்லானன். பதினெட்டு ஆண்டுகள் கழித்துத் தமிழ் மன்னர் உதவி பெற்று இலங்கைக்கு வந்தான். சிங்ககிரியை முற்றுகையிட்டான். கஸ்லபன் கோட்டையை விட்டு வெளியே வந்து சண்டையிட்டான். கடைசியில் தனியே போய்த் தற்கொலை செய்துகொண்டான். மொக்கல்லானன் அரசைக் கைப்பற்றி மீட்டும் அநுராதபுரத்தையே இராசதானியாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான்.
சிகிரியிலுள்ள ஓவியங்களையும் பிறவற்றையும் இலங்கை அரசாங்கத்தார் நன்றாகப் பாதுகாத்து வருகிறார்கள். சிகிரி மலையின் தோற்றம் சிங்கத்தின் தலைபோல இருக்கிறது. நேர் ரஸ்தாவிலிருந்து சிறிது தூரம் உள்ளே போய் இந்த மலையை அடையவேண்டும். மலையென்றால் மிகப் பெரிய மலையென்று சொல்ல முடியாது. குன்றம் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். தரையிலிருந்து 600 அடி உயரம் உள்ளது இந்தக் குன்றம்.
இந்தக் குன்றின் அடிவாரத்திலிருந்து முப்பது படிகள் ஏறினால் சற்று விரிந்த மேடான வெளி இருக்கிறது. அந்த வெளியின் ஒரு பக்கத்தில் ஒரு துறுகல் - குண்டுப் பாறை - இருக்கிறது. அதைத் தொட்டிப் பாறை (Cistern Roek) என்று சொல்கிறார்கள். அதன்மேல் படிக்கட்டுகளுடன் தொட்டி போன்ற சிறிய குளம் ஒன்று அமைந்திருக்கிறது. அதன் அருகில் மற்ருெரு பாறையை முற்றத்தைப்போலச் சமமாகச் செதுக்கியிருக்கிறார்கள். அதன் ஒரு பக்கத்தில் உயரமான மேடைபோலக் கல்லில் அமைந்த ஆசனங்கள் இருக்கின்றன. அரசன் தன்னைப் பார்க்க வருவோரைக் காண அமைத்த இடம் அது என்று சொல்கிறார்கள்.
இந்த மேடைவெளியிலிருந்து மலையின் பக்கத்தே ஏறுவதற்குரிய படிக்கட்டு அமைந்திருக்கின்றது. அந்தப் படிகளில் ஏறிப்போனால் 50 அடி உயரத்தில் குன்றின் பக்கவாட்டில் உட்குழிந்த பகுதி ஒன்று இருக்கிறது. அதன் கீழ்ப் பகுதியில் நன்றாகத் தளம் அமைத்திருக்கிறார்கள். மேல் பகுதி குடைபோலக் கவிந்திருக்கிறது. இந்தக் குழிவுக்குகை நீண்டிருக்கிறது. இதன் ஓரத்தில் சுவரெழுப்பி இந்தப் பகுதியைத் தாழ்வாரம்போல அமைத்திருக்கிறார்கள். இந்தத் தாழ்வாரத்தின் நீளம் 500 அடி இருக்கும். இந்தக் குழிவிலேயிருந்து 40 அடி உயரத்தில் மற்ரு குழிந்த இடத்தைக் காணலாம். இதற்குப் போக இரும்புப் படிகளை இப்போது அமைத்திருக்கிறார்கள். இந்த இரண்டாவது குகையில்தான் உலகம் போற்றும் வண்ண ஓவியங்கள் உள்ளன. இருபத்திரண்டு ஓவியங்களை இப்போது காணலாம்.
படிக்கட்டுகளில் ஏறி நண்பர்களுடன் இந்த ஓவியக் குகையை அடைந்தேன். உட்குழிந்த அவ்விடத்தில் மலையையே சுவராக வைத்து எழுதியிருந்த வண்ண ஓவியங்களைக் கண்டேன். கண் கொள்ளாத அழகு! திடீரென்று நான் காலத்தைப் பின் நோக்கிக் கடந்து சென்றேன். இரண்டாயிரம் ஆண்டுகளை ஒரு கணத்திலே கடந்தேன். திருப்பரங்குன்றத்தில் நான் நின்றேன்.
அங்கே முருகன் கோயில் இருந்தது. அடர்ந்த, மரங்களும் செடிகளும் கொடிகளும் நிரம்பி, எங்கே பார்த்தாலும் ஒரே பச்சைப் பசுங்காட்சி, சலசல வென்று அருவியின் ஓசை காதில் கேட்கிறது. மெல்ல மெல்லக் கோயிலைப் பார்த்தேன். மலையைக் குடைந்து சிற்பங்களைச் செதுக்கியிருந்தார்கள். மண்டபம் போலக் கவிந்து குழிந்த ஓரிடத்தில் வந்து நின்றேன். அந்த இடம் முழுவதும் ஓவியமயம். எழுத்து நிலை மண்டபம் என்றும், எழுதெழில் அம்பலம் என்றும் அதைச் சொன்னார்கள். ஒரு பக்கம் ரதியின் உருவமும் அவளருகில் நிற்கும் காமனின் உருவமும் கண்ணைப் பறித்தன. அகலிகையின் கதையைச் சித்திரமாகத் தீட்டியிருந்தார்கள். மலைக் குகையையே சித்திரசாலையாகக் கொண்டு அந்தப் பாறைகளையே சுவர்களாக வைத்துச் சுண்ணத்தால் நிலைக்களத்தைச் செம்மைப் படுத்தி, வண்ணத்தால் ஓவியங்களை எழுதிய வித்தகர்களைப் பாராட்டினேன்.
இந்தப் பகற்கனவு எனக்கு உண்டாகியதற்குக் காரணம் பரிபாடல் என்ற சங்க நூல். திருப்பரங்குன்றத்தில் அந்தப் பழங் காலத்தில் வண்ண ஒவியங்கள் அமைந்த சித்திரசாலை ஒன்று இருந்தது என்பதை அந்த நூல் தெரிவிக்கிறது. சிகிரியாவில் ஓவியக் குகையிலே நான் நின்று ஒவியங்களைப் பார்த்தபோது பரிபாடலுக்குப் பொருள் பின்னும் நன்றாக விளங்கியது.
சிகிரிமலைக் குகை ஓவியங்கள் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் வண்ணம் மங்காமல் திகழ்கின்றன. எல்லா ஓவியங்களும் மின்னிடை மெல்லியலாரின் எழிலுருவங்கள். மலரொடு மங்கையர் வண்ணத்திலே பளபளக்கிறார்கள். மஞ்சளும் பச்சையும் சிவப்பும் மிகுதியாக ஒளி விடுகின்றன. தளிரிடையும் விம்மிய மார்பும் நீண்ட மூக்கும் அகன்ற விழிகளும்
வண்ண ஓவியங்களில் ஒன்று
வண்ண ஓவியங்களில் மற்றொன்று
காவியத்தை ஓவியத்திலே காட்டுகின்றன. இடுப்புக்குக் கீழே தெரியாமல் ஓவியங்களைத் தீட்டியிருக்கிறார்கள். கால் நிலம் படாக் ககனத்து அரம்பையர் என்ற குறிப்பாக இருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். வண்ணமலர்த் தட்டேந்திப் பணிப்பெண் செல்ல, கோலத் திருமேனியும் அதன் நிறையெழிலும் இவள் தான் தலைவி என்று பறைசாற்ற, பின்செல்லும் எழிலரசியின் உருவத்திலே ஓவியன் கருத்தையும் கவர்ச்சியையும் குழைத்து அமைத்திருக்கிறான் அமைந்த கோலமும் பணிந்த நடையும் மென்மையின் இலக்கணத்தையும் பெண்மையின் மடப்பத்தையும் காட்டுகின்றன. நிமிர்ந்த நோக்கு அங்கே இல்லை; ஆனால் அந்தப் பணிவிலே மாட்சிமை கெடவில்லை; தலைமை பறிபோகவில்லை.
கையிலே அப்பொழுது அலரும் போதை ஒருத்தி வலிய அலர்த்துகிறாள். அதை எப்படி வருணிப்பது! அவள் விரல்களே இதழ்களாகத் தோன்றுகின்றன. அந்த விரிந்த இதழ்கள் விரியாத இதழ்களை விரிக்கின்றன. மென்மலரை மென்மையாக மலரவைக்கும் மெல் விரல்களின் அழகிலே சொக்கிப் போகாதவர்கள் யார்? முடியணியின் அமைப்பும், கழுத்தணிகளின் சிறப்பும், கைவளைகளின் எழிலும் மெல்லியலாரின் அழகை மறைக்கவில்லை; அதிகமாக்குகின்றன. வலிய பாறையில் வெயிலோடு நட்பாடிக் காற்றோடு கலகலத்துப் பணியும் மழையும் குலாவிவரும் இடத்தில் மெல்லியலாரின் திருவுருவத்தையும் மென்மலர்களின் ஓவியத்தையும் அமைத்தான் ஓவியன். அவன் படைத்த ஓவியம் மென்மையை உருவாக்கிக் காட்டுகிறது; ஆனால் காலத்தை வன்மையாக எதிர்த்து வலிய பாறையிலே வாழ்கிறது.
ஒரு நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் அதற்கு நேரம் ஏது? ஒருவாறு எங்கள் மனத்தைத் தரைக்கு இழுத்து வந்தோம். நாங்களும் கீழே இறங்கினோம். முதலிலே சொன்ன தாழ்வாரக் குகை வழியே சென்றோம். அது மலையைச் சுற்றி வளைவாகச் செல்கிறது. அதன் முடிவிலே சில படிகள் இருக்கின்றன. அவற்றின் மேல் ஏறிச் சென்றால் மலையினிடையே முன்வாசல் போல உள்ள சிறிய வெளியை அடையலாம். அங்கிருந்து மலைமேலே செங்குத்தாக ஏறவேண்டும்.
அந்த முன் வாசலிலே வலைகளால் ஒரு சிறிய அறை கட்டியிருக்கிறார்கள். அதில் ஒரு பலகையில் ஏதோ எழுதித் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ள அதைப் படித்துப் பார்த்தேன். "பேசாமல் போங்கள். இல்லையானால் வண்டு வந்து கொட்டும்" என்ற எச்சரிக்கையை அதிலே கண்டேன். அந்த இடத்திலிருந்து பார்த்தால் மலையின் மறுபுறம், ஓவியக் குகையின் மறுபுறம், நன்றாகத் தெரிந்தது. அங்கே பாறைகளில் மேலிருந்து பெரிய பெரிய தேன் கூடுகள் தொங்கின. அவற்றிலுள்ள கதண்டுகள் கொட்டினல் அப்புறம் மனிதன் தப்ப முடியுமா? எதிர்பாராத வகையில் கதண்டுகள் கலைந்து வந்தால் ஜனங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றே அந்த இரும்பு வலை அறையை அங்கே கட்டியிருக்கிறார்கள். மலையின் ஒரு பக்கம் ஓவியக் குகை, கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையைத் தரும் அற்புதமான சித்திரங்கள். மற்றொரு பக்கத்தில் தேன் கூடுகள்; நமக்குப் பயன்படாத தேன் கூடுகள். தப்பித் தவறி வண்டுகளின் கோபத்துக்கு ஆளானால் அவை கொட்டி விஷத்தை உடம்பிலே பாய்ச்சிவிடும்!
இந்த முன் வாசலிலிருந்து செல்லும் படிகள் சில இருக்கின்றன. இந்தப் படிக்கட்டின் இருபுறமும் சிங்கத்தின் பாதத்தைப் போலச் சுண்ணத்தாலே அமைத்திருக்கிறார்கள். நன்றாகக் கால் நகங்கள் தெரிகின்றன. நாலு அடி உயரமுள்ள நகங்கள். அந்த மலையே சிங்கமாக இருந்தால் அதற்கு நகம் நாலு அடி இருப்பது ஆச்சரியம் அல்லவே!
படிக்கட்டில் ஏறினால் இரும்புப் படிக்கட்டுகள் இருக்கின்றன. அவற்றில் ஏறினல் சாய்வான மேற் பகுதிக்கு வரலாம். அங்கே சிறிய சிறிய படிகளை வெட்டியிருக்கிறார்கள். ஓரத்தில் இரும்புக் கிராதிகள் உள்ளன. அவற்றைப் பிடித்துக்கொண்டே வெட்டிய படிகளில் மிகவும் நிதானமாக ஏறினோம். எப்படியோ மலையின் மேற்பரப்புக்குப் போய்ச் சேர்ந்தோம். இரும்புக் கிராதிகளைப் பற்றிக்கொண்டு ஏறுவதற்குக் கொஞ்சம் தைரியம் வேண்டும்.
மேலே கஸ்ஸபனது அரண்மனையின் சிதிலங்களைக் கண்டேன். முன்பு அங்கே எத்தனையோ மண்டபங்கள் இருந்திருக்கவேண்டும். நடுவிலே ஒரு வாவி உண்டு. அதில் இப்போதும் நீர் இருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேலே நீர் வந்தால் தானே வடிந்து விடும்படி மதகு அமைத்திருக்கிருர்கள். பழைய காலத்துக் கட்டிடம் எவ்வளவு உறுதியாக இருக்கிறதென்பதை அங்கே கண்டேன். ஒவ்வொரு செங்கலும் ஓரடி நீளம், அரையடி அகலம்.
கஸ்ஸபன் தன்னைக் குபேரனாக எண்ணிக் கொண்டு அந்த இடத்தை அளகாபுரியைப் போல ஆக்கினான் என்று சிலர் சொல்லுகிறார்கள். மலையின் உச்சியிலே அரண்மனையை அமைத்துக் கலைத்திறமை நிரம்பிய பகுதிகளை நிறுவிய அரசன் தன் தந்தையைக் கொன்றவனாக இருந்தாலும் கலைச்சுவை படைத்தவனாக இருந்தான். அந்த ஓவியங்களை அங்கே வரைந்த ஓவியன் யாரோ! அவனை நாம் அறியோம். கஸ்ஸபன் செய்த போரையும் ஆற்றிய கொடுஞ் செயல்களையும் மகாவம்சம் சொல்கிறது. ஆனால் இன்று சிகிரிக் குன்றம் கலைச்சுவை தேர்ந்து வாழும் வாழ்க்கையையும், இக்காலத்தில் செயற்கரிய வகையில் ஒன்றை எண்ணி, எண்ணியபடி வெறுமையாகக்கிடந்த மலையை அளகையாக்கிய பெருந்திறலையுமே காட்டுகிறது. இந்த இரண்டையும் நினைக்கையில் முன்னே சொன்ன கொடுமை மறந்து போகிறது. அது போன காலச் சரித்திரம். இது இப்போதும் நம் கண்ணை மகிழ்விக்கும் விருந்து.
↑ நாட்டரசன் கோட்டைக் கண்ணுடையம்மன் பள்ளுப் பாடினவர் இவர்.